Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011: மகாநாடு அமைப்பாளர் முருகபூபதியின் உள்ளக்குமுறல்

Featured Replies

யாதும் ஊரே யாவரும் கேளீர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

முருகபூபதி (அமைப்பாளர், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு)

இலங்கையில் அடுத்த ஆண்டு (2011) நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக ஏற்கனவே பல இதழ்களிலும் (அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில்) இணையத் தளங்களிலும் மலர்களிலும் எழுதியிருப்பதுடன் தமிழ்நாடு Zee Tamil தொலைக்காட்சியிலும் தொலைபேசி ஊடாக விரிவாக பேசியிருக்கின்றேன். தமிழக ஜூனியர் விகடனும் எனது கருத்தை கேட்டு பதிவுசெய்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து வந்த காலம் முதல் மூலையிலே சோம்பிக்கிடக்காமல் தொடர்ந்தும் கலை, இலக்கியப்பணிகளிலும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் அகதிகளுக்கும் உதவும் மனிதாபிமானப்பணிகளிலும் அயராமல் ஈடுபட்டு வருகின்றேன்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரையாக நான் வாழ்ந்தவன் இல்லை. 1972 ஆம் ஆண்டு முதலே கலை, இலக்கிய, ஊடகத் துறையில் எனது பணிதொடர்கிறது. உலகின் எந்தப் பகுதிக்குச்சென்றாலும் எனது பணிதொடரும்.

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் (Ceylon Students Educational Fund-Inc) பணிகளில் அர்பணிப்போடு இயங்கி அதனை இன்றளவும் காப்பாற்றிவருகின்றேன்.

இலங்கை மாணவர் கல்வி நிதியம் தொடர்ச்சியாக கடந்த 22 வருடகாலமாக இயங்கிக்கொணடிருப்பதுடன், கடந்த ஆண்டு மே மாதம் வன்னியில் முள்ளிவாய்காலில் முற்றுப்பெற்ற ஈழ யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிச்சிறார்கள் (ஆண்கள்- பெண்கள்) இந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதரப்பரீட்சைக்குத்தோற்றுவதற்கு ஆசைப்பட்டபோது அவர்களது கல்வி சார்ந்த நலன்களை கவனிக்க மாணவர் கல்வி நிதியம் ஊடாக பணியாற்றினேன்.

இத்தனை வேலைப்பளுவுக்கும் மத்தியில்தான் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் எழுத்தாளர் விழா என்ற இலக்கிய இயக்கத்தையும் தோற்றுவித்து தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாவை முன்னெடுத்தேன்.

இதற்கும் அரசியல் சாயம் பூசி பகிஷ்கரித்தவர்களின் போலி முகங்களையும் அப்போது என்னால் பார்க்கமுடிந்தது. 2001 ஆம் ஆண்டுமுதல் அவுஸ்திரேலியாவில் மெல்பன், கன்பரா, சிட்னி ஆகிய மாநிலங்களில் கடந்த பத்து ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக வருடம்தோறும் தமிழ் எழுத்தாளர் விழாக்களை ஒழுங்காகவும் கனதியாகவும் தரமாகவும் நடத்துவதற்கு நான் கடுமையாக உழைத்திருக்கின்றேன்.

மூத்த படைப்பாளிகளான எஸ்.பொன்னுத்துரை, காவலூர் ராஜதுரை, கவிஞர் அம்பி, ஓவியர் ஞானசேகரம், நாட்டுக்கூத்துக்கலைஞர் அண்ணாவியார் இளையபத்மநாதன், கலைவளன் சிசு.நகேந்திரன், பேராசிரியர் பொன்.பூலோகசிங்கம், கட்டிடக்கலைஞரும் குத்துவிளக்கு திரைப்பட தயாரிப்பாளருமான வி.எஸ.துரைராஜா, தையற்கலை நிபுணர் திருமதி ஞானசக்தி நவரட்ணம், இலங்கையின் மூத்த மலையக படைப்பாளி தெளிவத்தை ஜோசப் ஆகியோரை இந்த எழுத்தாளர் விழாக்களில் பாராட்டி கௌரவித்து விருதுகளும் வழங்கியிருக்கின்றேன். இந்தப்பணிகளை முன்னெடுப்பதற்காக எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் (Australian Tamil Literary & Arts Society Inc- ATLAS) உறுப்பினர்கள் எனக்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த அமைப்பு அவுஸ்திரேலியா அரசில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த அனுபவங்களின் தொடரச்சிதான் நான் முன்னெடுத்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு.

இப்பொழுது நான் இலங்கையில் ஒழுங்குசெய்துள்ள எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டுக்கும் அரசியல் சாயம் பூசுவதற்கு ஒருகூட்டம் முற்பட்டிருக்கிறது.

இலங்கையில் சர்வதேச எழுத்தாளர் மகாநாட்டை நடத்துவதற்கு நாம் தீர்மானித்ததற்கு பல காரணங்கள் இருந்தன.

உலகம் பூராவும் சிதறுண்டு வாழும் ஈழ எழுத்தாளர்கள் தமது இலக்கிய உறவுகளை மீண்டும் காலம் கடந்துவந்து சந்திப்பதற்கும் குறிப்பிட்ட சந்திப்பானது கூடிக்களைந்து உண்டுகளித்துவிடும் ஒன்றுகூடலாக அமையாமல் பல ஆக்கபூர்வமான கலை, இலக்கியம், மற்றும் கல்வி சார்ந்த பணிகளை முன்னெடுப்பதற் காகவுமே திட்டமிடப்பட்டது.

அனுபவம் இல்லாத கல்வியை விட கல்வி இல்லாத அனுபவம் மேலானது என்பார்கள். அதுபோன்று அவுஸ்திரேலியாவில் பத்து ஆண்டுகளாக தங்கு தடையின்றி தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் போரினால் பாதிப்புற்ற ஏழைத்தமிழ் மாணவர்களுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து தங்கு தடையின்றி இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை நடத்திவரும் அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களினாலும் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைக் கூட்டுவதற்கு பலரதும் ஆலோசனைகளையும் ஆதரவையும் பெற்றேன்.

சுமார் ஐந்துவருடங்களுக்கு முன்பே இந்த யோசனை இலங்கையில் நடந்த மல்லிகைப்பந்தல் இலக்கியச்சந்திப்பில் இலங்கை படைப்பாளிகளினால் முன்வைக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலிருந்துகொண்டு இலங்கை, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் வதியும்; நூற்றுக்கணக்கான கலைஞர்கள், படைப்பாளிகளுடன் தொடர்ச்சியான உறவும் தொடர்பும் கொண்டிருப்பவன் என்ற முறையில் இந்த மகாநாட்டுப்பணிகளை ஒருங்கிணைக்க மிகவும் பொறுத்தமானவன் முருகபூபதிதான் என்ற கருத்து குறிப்பிட்ட கொழும்பு சந்திப்பில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம்பெற்றதுடன், என்னிடம் சில பணிகளும் ஒப்படைக்கப்பட்டன.

2009 ஜனவரியில் வெளியான மல்லிகை 44 ஆவது ஆண்டு மலரில் ‘தொலைபேசி மான்மியம்’ என்ற கட்டுரையின் இறுதிப்பகுதியில் குறிப்பிட்ட சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு பற்றி பதிவுசெய்திருக்கின்றேன். அதனைப்படித்த மேலும் பல படைப்பாளிகள் என்னுடன் தொடர்புகொண்டு இந்த யோசனைக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர் .

தமிழகத்திலும் அவுஸ்திரேலியாவிலும் அகலக்கால் பதித்துள்ள எமது மூத்த படைப்பாளியான எஸ்.பொ. அவர்களுக்கு, எனக்கிருக்கும் சர்வதேச இலக்கிய தொடர்புகள் தெரிந்தமையால்தான் பல வருடங்களுக்கு முன்னர் அவரால் வெளியிடப்பட்ட ‘பனியும் பனையும்’ என்ற புலம்பெயரந்த படைப்பாளிகளின் கதைத்தொகுப்புக்காக எனது ஆதரவை நாடியிருந்தார். நானும் என்னால் முடிந்த அளவு கதைகளை அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரித்துக்கொடுத்தேன்.

குறிப்பிட்ட ‘பனியும் பனையும்’ வெளியானது. ஆனால் தொகுப்பாசிரியர்கள் என்ற பெயரில் இந்தப்பணியில் சிறுதுரும்பும் எடுத்துப்போடாத எனது இனிய தமிழக நண்பர் இந்திரா பார்த்தசாரதியின் பெயரை எஸ்.பொ. அவர்கள் சேர்த்துக்கொண்டார். எனது பெயர் இருட்டடிப்புச்செய்யப்பட்டது.

ஏன் இப்படிச்செய்தீர்கள்? - என்று அவருக்கு மிகநெருக்கமாக இருந்தவர்கள் கேட்டபோது அவரிடமிருந்து ஆழ்ந்த மௌனம்தான் வெளிப்பட்டது.

தாம் இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் இழந்துபோன இலக்கிய அந்தஸ்தை தமிழகத்தில் தக்கவைத்துக்கொள்வதற்காக அவர் மேற்கொண்ட முதல் முயற்சிதான் குறிப்பிட்ட நூலின் தொகுப்பில் அதற்குச்சம்பந்த மில்லாதவரின் பெயரைச் சேர்த்துக்கொண்டது.

இதற்கெல்லாம் முன்னோடியாக இலங்கையில் ஏற்கனவே வெளியான தமது நூல்களை தமிழகத்தில் மீள்பிரசுரம் செய்யும்போது தமிழக நூலக அபிவிருத்திச்சபையின் அங்கீகாரத்தைப்பெற்று விற்பனை செய்துகொள்வதற்காக குறிப்பிட்ட ஏற்கனவே வெளியான தமது நூல்களை (தீ, சடங்கு உட்பட பல நூல்கள்) தமிழகத்தில் இரண்டாம் பதிப்பு எனச்சுட்டிக்காட்டாமல் புத்தம்புதிய முதல் பதிப்பு என்று காண்பித்துக்கொண்டதுடன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ராமனுஜம்,சாலை. இளந்திரையன் போன்ற நன்கு தமிழகத்தில் அறியப்பட்டவர்களின் அணிந்துரைகளுடன் தமிழக அங்கீகாரத்துக்கு அவாப்பட்டுக்கொண்டார்.

இலங்கையில் சாதி எதிர்ப்புப்போராட்டத்தில் டானியல், ஜீவா, ரகுநாதன், சுபத்திரன் போன்ற இடதுசாரி படைப்பாளிகளுடன் இணைந்து இயங்காமல் ஆலயப்பிரவேசம் மற்றும் தேநீர்க்கடை பிரவேசம் முதலான போராட்டங்களில் சேர்ந்துகொள்ளாமல் தாம் தோற்றுவித்த நற்போக்கு இலக்கிய முகாமை செலுமையுடன் வளர்த்துக் கொள்ளத்தெரியாமல் தனக்குத்தானே பகைவனாகிக்கொண்ட எஸ். பொ. அவர்கள் ஒரு சந்தரப்பத்தில் தமிழ் நாட்டில் மேலே குறிப்பிட்ட படைப்பாளிகளுடன் தம்மை தக்கவைத்து தமது நூல்களை தமிழகத்தில் மறுபிரசுரம் செய்துவிட்டு, இப்போது தம்மை ஒரு தலித் இலக்கியப்போராளி என்று காண்பிப்பதற்காக மற்றுமொரு வேடம் புனைவதற்காக முயன்றுள்ளார்.

இலங்கைக்குச்சென்று தமது முன்னாள் நண்பர்களை சந்திப்பதற்காகவும் இழந்துபோன மரியாதையை மீட்டுக்கொள்வதற்காகவும் முருகபூபதியின் தயவை இவர் எப்படி நாடியிருந்தார் என்பதை எனது ராஜஸ்ரீகாந்தன் நினைவுகள் நூலில் இடம்பெற்றுள்ள ராஜஸ்ரீகாந்தனின் கடிதங்கள் விளக்கும்.

அவுஸ்திரேலியாவில் சிட்னியில் இலக்கியப்பவர் என்ற அமைப்பின் தோற்றத்துக்கு காரணமாக இருந்து, பின்னர் அதனால் புறக்கணிக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவில் இழந்துபோன செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டிக்கொள்ள இவர் முயன்றபோது, எவருமே மித்ரா பதிப்பகத்தின் வெளியீட்டுவிழாவுக்கு இவருக்காக தலைமைதாங்க முன்வராதபோது மெல்பனிலிருந்து முருகபூபதியை வரைவழைத்து (முருகபூபதி தமது சொந்தச்செலவில்தான் விமானம் ஏறினார்) குறிப்பிட்ட விழாவை நடத்தினார்.

இச்சம்பவங்கள் எழுத்தில் அழுத்தமாக பல பத்திகளில் பதிவாகியிருக்கின்றன.

2009 இலே சர்வதேச மகாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் யோசனைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக பலதடவை எஸ்.பொ. அவர்களை நான் தொடர்புகொள்ள முனைந்தும் முடியாமல்போனது.

பின்னர் யுகமாயினி ஆசிரியர் சித்தன் அவர்கள் மூலம் தகவல் அனுப்பினேன். தகவல் கிடைத்ததும் எஸ்.பொ. சொன்ன வார்த்தைகள் “I am always with Murugapoopathy. He is doing a Good Job. I am Going to support”

‘பனியும் பனையும்’ தொகுதியை மீள் பிரசுரம் செய்வதற்காக மீண்டும் எனது தயவை அவர் நாடினார். அவரது இயல்புகளை நன்கு தெரிந்திருந்தமையால்; நான் அதற்கு மறுத்துவிட்டேன்.

அவுஸ்திரேலியாவிலிருக்கும் அவரது நண்பர்கள் மூலமாகவும் என்னை இந்த தொகுப்பு வேலைக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளப்பார்த்தார். எதையெதை யாரால் செய்துமுடிக்க முடியும் என்பது அவருக்கு நன்கு தெரியும். நான் இதுவிடயத்தில் மீண்டும் ஏமாறத்தயாரில்லை என்று அவருக்கே தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கின்றேன். அந்த இரண்டாவது பதிப்பு முயற்சி பல மாதங்களாகியும் இன்றுவரையில் எனது தயவும் உதவியும் இல்லாமல் கிடப்பிலிருக்கிறது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் நடந்த சர்வதேச மகாநாட்டுக்கான முதலாவது விரிவான ஆலோசனைக்கூட்டம் தொடர்பான செய்தியும் படங்களும் தமிழ்நாடு யுகமாயினி 2009 மார்ச் இதழில் பிரசுரமாகியிருக்கிறது.

ஆசிரியர் சித்தன் இம்மாகாநாட்டுக்கான தமிழக பிரதிநிதியாக இயங்குவார் என்ற தகவலும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சித்தனும் தமது ஆசிரியத்தலையங்கத்தில் மகாநாட்டை வரவேற்று தமது கருத்தை பதிவு செய்திருந்தார்.

மற்றுமொரு இலக்கிய சிற்றிதழான இனிய நந்தவனம் ஏப்ரல் இதழிலும் மகாநாடு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

எமது மகாநாட்டின் நிகழ்ச்சிகளின் இணைப்பாளர்களில் ஒருவரான நண்பர் அந்தனிஜீவா தமிழகம் சென்று பாண்டிச்சேரி வரையில் பயணித்து இம்மகாநாடு குறித்த எமது 12 அம்ச யோசனைகளை பிரதியெடுத்த விநியோகித்துள்ளார்.

அதனைப்பார்த்த பா.செயப்பிரகாசம் மற்றும் பல தமிழக எழுத்தாளர்கள் என்னுடன் தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தொடர்புகொண்டனர். தாமரை இதழ் ஆசிரியரும் தமிழ் மாநில கம்யூனிஸ்ட் கட்சி துணைச்செயலாளருமான மகேந்திரன் எனது குடும்ப நண்பர். அவரும் இந்த மகாநாடு தொடர்பாக தமது ஆதரவை நண்பர் அந்தனிஜீவாவிடம் தெரிவித்திருக்கிறார்.

இப்படியெல்லாம் பல முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்க... திடீரென்று அந்தர் பல்டி அடிப்பது போல எனக்கும் எனது இலக்கிய நேர்மைக்கும் என்னுடன் இணைந்து மகாநாட்டு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் எதிராக அவதூறும் அபாண்டமும் பழிச்சொற்களையும் பரப்புவதற்கு எஸ்.பொ. வரிந்துகட்டி எழுந்திருப்பதன் மர்மம் என்ன?

2009 டிசம்பர் முதல் 2010 ஜூன் வரையில் எதுவுமே பேசாமல் ஆழ்ந்த மௌனம் காத்துவிட்டு இப்போது வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பதற்கு அவர் புறப்பட்டுள்ளதற்கான ரிஷி மூலம் - நதி மூலம் என்ன?

போர் நடந்த காலப்பகுதியின் பின்னர் 2009 டிசம்பர் ஞானம் இதழ் (115 ஆவது இதழ்) எஸ்.பொ.வுக்காக இலங்கையில்; பவளவிழா சிறப்பு மலர் வெளியிட்டபோது அதனை மானசீகமாக ஆதரித்து ஏற்றுக்கொண்டவருக்கு, அந்த மலர் வெளியான மண்ணில் போர்க்குற்றம் நடந்தது தெரியாமலா இருந்தது. “இத்தருணம் எனக்கென்ன பவளவிழா மலர்” என்று கேட்காமலிருந்துவிட்டு இப்போது குறிப்பிட்ட ஞானம் இதழ் ஆசிரியரும் இணைந்துள்ள மகாநாட்டுப்பணிகளை கொச்சைப்படுத்த முனைந்துள்ள மர்மம் என்ன?

இலங்கையில் போர் முடிந்தபின்னர் நான் அங்கே சென்று சுமார் ஒருமாத காலம் தங்கியிருந்து கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களுக்கும் சென்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் மாணவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் வன்னி அகதி முகாமிலிருந்து ஊக்கமுடன் கல்வி கற்று வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற பல ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் பெற்றுக்கொடுத்ததுடன் அவர்களையும் எமது புலமைப்பரிசில் திட்டத்தில் இணைத்துக் கொண்டேன். இதற்கெல்லாம் அவுஸ்திரேலியாவிலிருக்கும் இரக்கமுள்ள தமிழ் அன்பர்கள் உறுதுணையாக விளங்குகிறார்கள்.

இந்தப்பணிகள் பற்றி ஏற்கனவே பல உண்மையான அறிக்கைகள் எமது இணையத்தளத்திலும் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றன.

இலங்கைப்பயணத்தின்போது போர் நடந்த இடத்தில் பாதிப்புற்ற எழுத்தாளர்களையும் சந்தித்து அவர்களுக்கும் அத்துடன் மனநலம் குன்றிய படைப்பாளி ஒருவருக்கும் உதவி வழங்கியதுடன் திருகோணமலையில் தற்போது தங்கியிருக்கும் கவிஞர் புதுவை ரத்தினதுரை அவர்களின் மனைவி, பிள்ளைகளையும் அவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் என்னால் இயன்ற உதவிகளும் செய்தேன்.

வலதுகை கொடுப்பது இடதுகைக்குத்தெரியக்கூடாது.

எனது இந்தப்பயணம் குறித்தும் புதுவை ரத்தினதுரையும் மற்றும் சில போராளிகளும் சரணடைந்தது தொடர்பான பல தகவல்களையும் நான் விரிவாக எழுதவேண்டும் என்று ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா வாழ் தமிழ்ப்படைப்பாளிகள் என்னிடம் கேட்டுக்கொண்டபோதும் அப்படி எழுதி எனக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ள நான் விரும்பவில்லை. பல இடங்களுக்கும் சென்று கெமராவில் படங்களை எடுத்த நானும் எனது இலக்கிய நண்பர்களும் புதுவை ரத்தினதுரையின் குடும்பத்தை சந்திக்கச்சென்றபோது கெமராவை எடுத்துச்செல்ல விரும்பவில்லை.

நாம் அவர்களை எமக்கு விளம்பரம் தேடிக்கொள்வதற்காக சந்திக்கச்செல்லவில்லை என்பது மாத்திரமே உண்மை. அவரும் மற்றும் சிலரும் எங்கோ உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் திருமதி ரஞ்சி ரத்தினதுரையும் மற்றும் பிள்ளைகள் உறவினர்களைப்போலவே நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

எமக்கு ஆக்கபூர்வமான பணிகளும் கடமைகளும்தான் முக்கியமே தவிர மலினமான பரபரப்போ, மலினமான நேர்காணல்களோ சுயதம்பட்டம் அடிக்கும் அறிக்கைகளோ அல்ல.

இலங்கையில் போர் நடந்தது. போர்க்குற்றங்கள் இரண்டு தரப்பினாலும் நடந்துள்ளன. இதனை யாராலும் மறைக்கமுடியாது. இது தொடர்பான நடவடிக்கையில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஈடுபடும்.

அதற்காக இலங்கை மக்களின் அன்றாட வாழ்வு தொடராமலா இருக்கிறது?

யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவம் நடக்காமலா இருக்கிறது?

கொழும்பில் பிரபலமான ஆடிவேல் விழா நடக்காமல் இருக்கிறதா?

இதற்கு தமிழகத்திலிருந்து நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வருகை தராமலா இருக்கிறார்கள்?

கம்பன் கழகத்தின் கம்பன் விழாவும் இசைவேள்வியும் நடக்காமலா இருக்கிறது?

மாத்தளை என்ற மலையக ஊரில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த உற்சவமும் ஐந்துரத பவனியும் பல்லாயிரக் கணக்கான தமிழ் பக்தர்கள் மத்தியில் நடக்காமலா இருக்கிறது.?

கொழும்பு புறக்கோட்டையில் தமிழ்ப் பெண்கள் பாற்குடம் சுமந்து திருவிழா நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளவத்தையில் ஆண்கள் வேல்குத்தி பறவைக்காவடி எடுக்கிறார்கள்.

இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, மெகா ஸ்டார், புரட்சிக்கலைஞர் ஆகியோரின் மசாலாப்படங்கள் காண்பிக்கப்படாமலா இருக்கிறது?

இலங்கை தமிழ்ப்பிரதேசங்களுக்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாம் சிரமப்பட்டு சேகரித்த மருந்து மற்றும் உணவுப்பொருட்களை கப்பலில் அனுப்பமுடியாமல் போனபோது ஐக்கியநாடுகள் சபைக்கும் செஞ்சிலுவைச்சங்கத்திற்கும் இந்திய மத்திய அரசுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்து சாகும்வரையில் பழ.நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் இலங்கையிலும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஒரேநேரத்தில் வெளியாகி அவருக்கும் அதனைத்தயாரித்த நிறுவனத்திற்கும் கோடி கோடியாக எமது தமிழ் மக்கள் கொடுத்தார்களே? அப்போது எங்கே போனது தமிழ் இன மான உணர்வு?

சுனாமியினால் கடற்கோள் வந்து எஸ்.பொ. பெண்ணெடுத்த கிழக்கு மாகாணம் பாதிப்புற்றபோதும் தாம் பிறந்து தவழ்ந்து விளையாடிய யாழ்ப்பாண மண்ணில் அகதிகளின் எண்ணிக்கை பெருகியபோதும் அந்தப்பக்கமே எட்டியும் பார்க்காத அம்மக்களின் தேவைகளுக்காக ஒரு சதமேனும் செலவிடாதவர்தான் இப்போது திடுக்கிட்டு எழுந்து போர்க்குற்றம் நடந்த மண்ணில் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று கூடுவதற்கு தமது கண்டனத்தை தெரிவிக்கிறார்.

யார் ஐயா உங்களிடம் கருத்துக் கேட்டது?

கருத்துக்காக பல தடவைகள் தொலைபேசியிலும் தொடர்புகொண்டபோது சாமர்த்தியமாக நழுவிக்கொண்டு இப்போது அதுவும் 2010 ஜூன் மாதத்திற்குப்பின்னர் அறிக்கையும் அவுஸ்திரேலியாவை குறிபார்த்து வனொலி பேட்டிகளும கொடுப்பதன் மர்மம் என்ன? இவற்றின் ரிஷிமூலம் என்ன?

மகாநாட்டுக்கான நிதிவளம்:

பச்சைத்தண்ணீரில் பலகாரம் பொறிக்க முடியாது. 2009 ஜனவரி 3 ஆம் திகதி கொழும்பில் நடந்த ஆலோசனைக்கூட்டத்திலும் அதற்கு முன்னர் 27-12-2009 ஆம் திகதி கொழும்பு தினக்குரல் ஞாயிறு இதழிலும் இந்த மகாநாட்டிற்கான செலவுகளுக்கு எப்படி நிதி சேகரிக்கப்போகின்றோம் என்பது பற்றி தெளிவாகவே சொல்லியிருக்கின்றோம்.

இலங்கையில் வாழ்க்கைச்செலவு உயர்வினாலும் போருக்குப்பின்னரான பொருளாதார நெருக்கடியினாலும் பெரிதும் கஷ்டமுறும் படைப்பாளிகளிடமிருந்து நிதியுதவி பெறாமல், உலகெங்கும் வாழும் ஈழத்து படைப்பாளிகள் சுமார் 500 பேரிடமிருந்து தலா ஒருவர் கூ100 வெள்ளிகளை நன்கொடையாக தருவதன் மூலம் இந்த மகாநாட்டை சிறப்பாகவும் கலை, இலக்கிய கனதியுடனும் நடத்த முடியும் என்று கூறியிருக்கின்றேன். அத்துடன் பாதிப்புற்ற தமிழ்ப்படைப்பாளிகளின் குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை உருவாக்கும் எண்ணத்தையும் வெளியிட்டிருக்கின்றேன்.

இதற்கெல்லாம் உதவப்போகிறவர்கள் புகலிடத்தில் வாழும் மனிதநேயப் படைப்பாளிகளே தவிர போலி முகங்கள் அல்ல.

கிடைக்கப்பெறும் நிதி நன்கொடைகளுக்கு பற்றுச்சீட்டுகள் தரப்படுவதுடன் மகாநாடு முடிந்து ஒரு மாத காலத்துள் வரவு-செலவு அறிக்கை அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளரிடம் (Auditor) காண்பிக்கப்பட்டு உதவியவர்களுக்கும் படைப்பாளிகள் சமூகத்துக்கும் சமர்ப்பிக்கப்படும்.

இந்த ஒன்று கூடல் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்ளும் முயற்சியாகவே நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்படும் என்றும் பேசியிருக்கின்றேன். பல பத்திகளில் எழுதியுமிருக்கின்றேன்.

இலங்கையில் நடந்த திரைப்பட விழா ஒரு கேளிக்கை களியாட்ட நிகழ்ச்சி. அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்டது. அதனை எதிர்தார்கள் பகிஷ்கரித்தார்கள். அதற்கு ஒரு நோக்கம் இருந்தது.

ஆனால் எமது எழுத்தாளர் ஒன்று கூடலானது மிகவும் சாதாரண எளிமையான சிறுகச்சிறுக சேமித்து ஒரு ஏழைக்குடும்பம் நடத்தும் எளிமையான வைபவத்துக்கு நிகரானது.

இதனை அரசியலாக்கி அதற்குப்பின்னால் சிங்கள, தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றெல்லாம் கற்பனையில் பிதற்றி சிறியதொரு நிகழ்வை பூதாகரமாக்கி தமது பொறமைப் பொச்சங்களை அம்பலப்படுத்தி அதற்கு நெருப்பூட்டி அதில் குளிர் காய்ந்து கொண்டிருப்பவர்களை நாம் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?

எந்த ஆதாரத்தில் நாம் இலங்கை அதிபரிடம் லஞ்சம் வாங்கித்தான் இதனை நடத்துகின்றோம் என்று நாக்கூசாமல் சொல்கிறார்கள்?

தமது இருப்பை வெளிப்படுத்திக்கொள்வதற்கும் சவாரி செய்வதற்கும் இச்சந்தர்ப்பத்தில் தோதான வாகனமாக இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை கருதுகிறார்கள்.

இலங்கையில் நடத்தாமல் மலேசியாவில் நடத்தலாம் என்று மகத்தான யோசனைகளை அவுஸ்திரேலியாவிலிருந்து சொல்லுபவர்கள் அவுஸ்திரேலியாவில் 2001 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் மிகச்சாதாரண தமிழ் எழுத்தாளர் விழா நடந்த மண்டபத்தின் பக்கமே எட்டியும் பார்த்ததில்லை. அதனை நடத்திய சங்கத்தின் சிறுசேமிப்புக்கோ கோரிய நிதியுதவிக்கோ ஒரு சதமேனும் கொடுத்ததும் இல்லை.

எழுத்தாளர் விழாக்களினதும் நடத்தவிருக்கும் மகாநாட்டினதும் பூர்வீகம் தெரியாமல் ஏதோ தாமும் இருக்கிறோம் பேர்வழிகள் எனச்சொல்லிக்கொண்டு தமக்கேயுரித்தான காழ்ப்புணர்வுகளுக்கு சொல் அலங்காரம் அணிவித்து போலி அரிதாரம் பூசி பவனி வருகிறார்கள்.

இதனை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது ஐரோப்பாவிலிருந்து (பிரான்ஸ்) ஒரு இலக்கிய நண்பர், நீண்ட காலத்திற்குப்பின்னர் தமது மனைவி பிள்ளைகளுடன் இலங்கை சென்று வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களிலும் கொழும்பிலும் சுமார் 46 நாட்களை மகிழ்ச்சியோடும் பிரிந்தவர்களை மீண்டும் பார்த்த குதூகலத்துடனும் விரிவான கடிதம் ஒன்றை எனக்கு மின்னஞ்சல் செய்துள்ளதுடன். மகாநாட்டுப்பணிகளிலும் ஒத்துழைக்கின்றார்.

இதுவரையில் நாம் பல புலம்பெயர் படைப்பாளிகளிடமிருந்து மகாநாட்டு மலர்கள், நூல்கள் ஆகியனவற்றுக்கு பல படைப்புகளை பெற்றிருப்பதுடன் நிதிப்பங்களிப்பையும் பெற்றுள்ளோம்.

மகாநாட்டிற்காக இலங்கையில் பிரத்தியேகமாக ஒரு வங்கிக்கணக்கும் திறக்கப்பட்டு உதவ விரும்பும் படைப்பாளிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இப்படியொரு சர்வதேச நிகழ்வு நடக்கப்போகும் விடயமே அங்குள்ள எந்தவொரு அரசியல் வாதிகளுக்கும் சொல்லப்படவில்லை. நாம் அரசியல்வாதிகளோ, வியாபாரிகளோ, பரபரப்பான விளம்பரம் தேடும் போலிகளோ இல்லை.

காலம் கடந்து குடும்பங்கள் எங்காவது ஓரிடத்தில் ஒன்றுகூடுவதுபோன்று கலை இலக்கிய குடும்பத்தினர் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சந்தித்துக்கொள்ள விரும்பியிருக்கிறார்கள்.

இதனைவைத்துத்தான் இலங்கை அரசாங்கம் தனக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெறப்போகிறது என்று சொன்னால்...

ஆடிவேல் விழாவையும் நல்லூர்க்கந்தன் உற்சவத்தையும் மாத்தளை முத்துமாரியம்மன் ரதோற்சவத்தையும் அங்கே நாடுபூராவும் தமிழ்ப்பாடசாலைகளில் நடைபெற்றுவரும் தமிழ்த்தின விழாக்களையும் வாராந்தம் நடக்கும் நூல் வெளியீட்டுவிழாக்களையும் தொடர்புபடுத்தியும் தனக்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டிருக்கலாமே?

வெளியிலிருந்து வரப்போகிறவர்கள் தமது விடுமுறை மற்றும் வசதிகருதித்தான் வருவார்கள். வரவசதியில்லாதவர்கள் தமது கட்டுரைகளை படைப்புக்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு அரங்கு, படைப்புகளில் செவ்விதாக்கம், சிறுவர் இலக்கியம், நாடகம், கூத்து, குறும்படம் வலைப்பதிவு உட்பட பல நுண்கலைகள் தொடர்பான கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற விருக்கின்றன.

தமிழகம் மலேசியா சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலுமிருந்து வருகைதரும் சிற்றிதழ் ஆசிரியர்களின் கருத்தரங்கு அமர்வும் நடைபெறவிருக்கிறது.

ஏற்கனவே திருக்குறள், பாரதி கவிதைகள் சிங்களத்தில் மொழிபெயரக்கப்பட்டுவிட்டன. தமிழக படைப்பாளிகள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு.சின்னப்பபாரதி ஆகியோரின் படைப்புகளும் இலங்கையில் டொமினிக்ஜீவா, திக்குவல்லை கமால், மேமன் கவி, செங்கைஆழியான், சாந்தன், மலரன்பன். தி.ஞானசேகரன் உட்பட பல படைப்பாளிகளின் நாவல்கள் சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. அத்துடன் மார்டின் விக்கிரமசிங்கா, கருணாசேன ஜயலத், குணசேனவிதான, ஜி.பி.சேனநாயக்கா உட்பட பலரது சிங்களப்படைப்புகள் தமிழுக்கு மொழிபெயரக்கப்பட்டுவிட்டன.

(இத்தருணம் ஒரு சிறுதகவல்: ஜெயகாந்தன் ஆசிரியராகவிருந்து முன்னர் வெளியான கல்பனா இதழில் குணசேனவிதானவின் சிங்களச்சிறுகதை தமிழில் மொழிபெயரக்கப்பட்டு வெளியானது.)

தமிழர் புகலிட நாடுகளில் எம்மவரின் தமிழ்ப்படைப்புகள் (நாவல், சிறுகதை, கவிதை, வாழ்க்கை வரலாறு) ஆங்கிலத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் பெயர்க்கப்பட்டுள்ளன.

எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 6 ஆவது எழுத்தாளர்விழாவில் (07-01-206) நான் தொகுத்து வெளியிட்ட ‘உயிர்ப்பு’ சிறுகதைத்தொகுப்பில் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்கள் 20 பேரின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டேன்.

தற்போது இக்கதைத்தொகுதியை கனடாவிலுள்ள மொழி பெயர்ப்பாளரும் இலக்கிய ஆர்வலருமான ஒரு சகோதரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பியுள்ளார்.

இத்தொகுப்பில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் - முன்பு வசித்த 20 எழுத்தாளர்களின் சிறுகதைகள் இருக்கின்றன.

பின்னர் இங்கு வதியும் 45 கவிஞர்களின் கவிதைகளை தொகுத்து வானவில் என்ற தொகுப்பை 7 ஆவது எழுத்தாளர் விழாவில் (27-01-2007) வெளியிட்டேன். எனினும் இந்த தொகுப்பு நூல்களிலும் எனது எந்தவொரு படைப்பும் இல்லை என்பது அவற்றை பார்த்தவர்களுக்கும் படித்தவர்களுக்கும் நன்கு தெரியும்.

மொழிபெயர்ப்புத்துறையில் எதிர்நோக்கப்படும் சவால்கள் சங்கடங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்வதற்காகத்தான் சர்வதேச மகாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கு நடைபெறவிருக்கிறது.

சிங்கள படைப்பாளிகளுடன் நாம் புரிந்துணர்வுடன் இயங்குவதையும் சிலர் கொச்சைப்படுத்தி அரசியலாக்கப் பார்க்கிறார்கள்.

கர்நாடக மாநிலத்துடன் பல வருடகாலமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர்ப்pரச்சினை இருந்தாலும் தமிழ்வாசகர்கள் கன்னடப்படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பை படிக்காமலா இருக்கிறார்கள்.

பிறப்பால் கன்னடராகப்பிறந்த நடிகர், நடிகையர்கள் தமிழ்த்திரையுலகில் கொடிகட்டிப்பறந்துகொண்டுதானே இருக்கிறார்கள்!

நாடு,மொழி, இனம், மதம், சாதி கடந்து சிந்திப்பவனே ஆரோக்கியமான கலைஞன், படைப்பாளி. எதனையுமே அரசியலாக்கி அதில் ஆதாயம் தேட முனைபவர்களுக்கு காலம் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளீர்.

தீதும் நன்றும் பிறர்தர வரா.

மகாநாடு திட்டமிட்டபடி நடக்கும். வருகைதர விரும்புபவர்கள் இலங்கையராகவிருந்தால் தாயகத்தின் யதார்த்த நிலையையும் அங்குள்ள படைப்பாளிகளின் ஆதங்கங்களையும் நேரில் பார்ப்பார்கள். தமிழகம் உட்பட ஏனைய நாடுகளைச்சேர்ந்தவர்கள் வந்தால் அவர்களுக்கு இந்தப்பயணம் சிறந்ததொரு வாழ்வனுபவமாக மனதிலும் எதிர்காலப்படைப்புகளிலும் பதிவாகும்.

International.twfes@yahoo.com.au

21-08-2010 ஆம் திகதி எழுதப்பட்டது.

தகவல் மூலம்: முருகபூபதி, மின்னஞ்சல், நன்றி.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு - கீற்றிற்கு முருகபூபதி மிரட்டல்

கீற்று நந்தன் சனி, 14 ஆகஸ்ட் 2010 12:19 சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து எஸ்.பொ. அவர்கள் எழுதிய கட்டுரை தொடர்பாக அம்மாநாட்டின் அமைப்பாளர் முருகபூபதி, கீற்று ஆசிரியர் குழுவிற்கு அனுப்பிய மின்னஞ்சல்:

13-08-2010

ஆசிரியர்

கீற்று இணைய இதழ்

தமிழ்நாடு

அன்புடையீர் வணக்கம்.

தங்களின் கீற்று இணையத்தளத்தில் (07-ஆகஸ்ட்2010) நாம் இலங்கையில் அடுத்த ஆண்டு (2011 ஜனவரி 6,7,8,9 ஆம் திகதிகளில்) நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு தொடர்பாக அவதூறான செய்தி பரப்பப்பட்டிருக்கிறது.

இந்த மகாநாடு சிலவருடங்களுக்கு முன்னரே ஆலோசிக்கப்பட்ட கலை, இலக்கிய செயற்திட்டமாகும். அவுஸ்திரேலியாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் முருகபூபதியாகிய நான், இந்த நிகழ்வை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபகர்.

இலங்கையிலும் பல வெளிநாடுகளிலும் வதியும் தமிழ் எழுத்தாளர்களினது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த சர்வதேச ஒன்றுகூடல் மகாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு பலரதும் ஆலோசனைகளைப் பெற்று கடந்த 03-01-2010 ஆம் திகதி இலங்கையில் கொழும்பில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் சுமார் 120 பேரளவில் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டத்தை நடத்தினேன். இக்கூட்டத்தில் படைப்பாளிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொழும்பில் வெளியாகும் வீரகேசரி, தினக்குரல், தினகரன் ஆகிய தமிழ்த்தேசிய நாளிதழ்களின் ஆசிரியர்கள் மற்றும் மல்லிகை, ஞானம், கொழுந்து, செங்கதிர் முதலான சிற்றிதழ்களின் ஆசிரியர்கள் பயிற்சிப் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். இதுபற்றிய விரிவான செய்திகள் பல ஊடகங்களில் கடந்த ஜனவரி மாதமும் அதன் பின்னரும் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் இனிய நந்தவனம் மற்றும் யுகமாயினி இதழ்களிலும் விரிவான செய்திகள் பிரசுரமாகியுள்ளன.

இம்மகாநாடு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா ஆகிய நகரங்களிலும் விரிவான ஆலோசனைக் கூட்டங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் நான் கலந்துகொண்டது சம்பந்தமான செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்தன. சமீபத்திலும் மகாநாட்டு இணைப்பாளர் தலைமையில் இப்பகுதிகளில் கூட்டங்கள் நடந்துள்ளன. விரைவில் மலையகத்தில் ஹட்டன் நகரத்தில் மற்றுமொரு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்திய வம்சாவளி மலையக எழுத்தாளர்கள், கலைஞர்களும் இம்மகாநாட்டில் பங்கேற்று கருத்தரங்குகளில் தமது கட்டுரைகளை சமரப்பிக்கவிருக்கின்றனர்.

இம்மகாநாடு முடிந்த பின்னர் இலங்கை மலையகத்தில் பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழக வளாகம், கிழக்கு பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் கலை, இலக்கிய கருத்தரங்குகள் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டு குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வளாக முதல்வர், கலைப்பீட பேராசிரியர்கள் ஆகியோரது சம்மதமும் பெறப்பட்டுள்ளது. இந்த மகாநாட்டினால் தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களும் பயனடையத்தக்க விதமாகத்தான் நிகழ்ச்சி நிரல்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்த மகாநாடு அரசியல் சார்ந்தோ இலங்கை அரசாங்கம் சார்ந்தோ நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்படவில்லை என்பது இக்கூட்டங்களில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்கு தெரியும். ஊடகங்களுக்கும் தெரியும்.

12 அம்ச கலை, இலக்கியம் , கல்வி சார்ந்த யோசனைகளை முன்வைத்தே நாம் இந்த மகாநாட்டை கூட்டுகின்றோம்.

இந்த மகாநாட்டிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. எழுத்தாளர்களினதும் இலக்கிய ஆர்வலர்களினதும் சமூகநலன் விரும்பிகளினதும் நிதிப்பங்களிப்புடன்தான் இம்மகாநாடு நடைபெறவிருக்கிறது.

அப்படியிருக்க தங்களது கீற்று இணைய இதழில் மகாநாட்டு அமைப்பாளரான என்னையும் என்னோடு இணைந்து பணியாற்றவுள்ள கலை, இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் கேவலப்படுத்தும் விதமாகவும் எமக்கு எதிராக அவதூறு பரப்பும் விதமாகவும் எஸ்.பொ. என்று அழைக்கப்படும் திரு. எஸ்.பொன்னுத்துரை அவர்கள் கருத்துக் கூறியிருக்கிறார்.

அமைப்பாளராகிய நான் இலங்கை அதிபர் திரு. ராஜபக்ஷ அவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மகாநாடு நடத்துவதாக தங்களது கீற்று இதழில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

நான் ஒரு இருதய நோயாளி. சில வருடங்களுக்கு முன்னர் பைபாஸ் சத்திர சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றேன். கடந்த சில வருடங்களாக மருந்து மாத்திரைகளுடன்தான் எனது வாழ்க்கை நடக்கிறது.

1972 ஆம் ஆண்டு முதல் நான் எழுத்தாளனாக இலங்கையில் நன்கு அறியப்பட்டவன். வீரகேசரி நாளிதளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கின்றேன். அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னரும் எனது இலக்கியப்பணி இதழியல் பணி தொடர்கிறது. நான் ஒரு படைப்பாளி அத்துடன் பத்திரிகையாளன். இதுவரையில் 18 நூல்கள் எழுதியிருக்கின்றேன். இரண்டு நூல்களுக்கு சாகித்திய விருதுகளும் பெற்றுள்ளேன். பல நாடுகளுக்கும் பயணித்து பயண இலக்கியங்கள் எழுதியிருக்கின்றேன். நான் அவுஸ்திரேலியாவிலிருந்துகொண்டு மேற்கோள்ளும் பல சமூகப்பணிகளுக்காக 2002 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தினத்தின்போது சிறந்த பிரஜைக்கான (Australian Citizen Award 2002) விருதும் பெற்றுள்ளேன். அத்துடன் அவுஸ்திரேலியாவில் சில தமிழ் சமூக அமைப்புகளினதும் விருதுகளையும் பெற்றுள்ளேன். தமிழ்ச்சமூகத்தில் மிகுந்த கவனிப்புக்குள்ளாகியிருக்கும் எனக்கு, கீற்று இணைய இதழ் ஆசிரியரான தாங்களும் திரு. எஸ்.பொன்னுத்துரையும் அபகீர்த்தி ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

தங்களது கீற்று இதழில் என்னைப்பற்றியும் நான் ஒழுங்குசெய்துள்ள சர்வதேச எழுத்தாளர் மகாநாடு பற்றியும் அவதூறாக எழுதப்பட்டிருப்பதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றேன்.

தங்களது கீற்று இதழில் என்னைப்பற்றியும் எனது மகாநாட்டுப்பணி பற்றியும் மிகவும் அவதூறாக எழுதியுள்ள திரு. எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரைக்கும் தங்களது கீற்று இணைய இதழுக்கும் எதிராக நான் மானநட்ட வழக்கு தொடருவதற்கு தீர்மானித்துள்ளேன். இதுசம்பந்தமாக நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

தங்களது குறிப்பிட்ட கீற்று இதழ் அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் 24 மணிநேர ஒலிபரப்புச்சேவையான இன்பத்தமிழ் ஒலி வானொலியில் கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை இரவு கருத்துக்களம் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, மேலும் பல நேயர்களினால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றேன். இதற்கெல்லாம் காரணம் தாங்களும் தங்கள் இதழும் திரு.எஸ்.பொன்னுத்துரையும்தான் என்பதை மிகுந்த வேதனையுடன் அறியத்தருகின்றேன்.

எனவே மானநட்ட வழக்கு தொடருவதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இந்திய நாணயத்தில் பத்துக்கோடி ரூபா நட்ட ஈடுகோரி தங்களுக்கும் திரு. எஸ்.பொன்னுத்துரைக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருக்கின்றேன்.

இக்கடிதத்தை சுயசிந்தனையுடனும் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு தங்கள் இருவராலும் நேர்ந்த அபகீர்த்தியினாலும் எழுதுகின்றேன்.

முருகபூபதி

அமைப்பாளர்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு 2011

முகவரி: 170, Hothlyn Drive, Craigieburn, Victoria 3064, Australia

letchumananm@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

********

மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை: கீற்று நந்தன்

மதிப்பிற்குரிய முருகபூபதி அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் கீற்று ஆசிரியர் குழுவுக்கு அனுப்பியுள்ள மேற்கண்ட மின்னஞ்சலைக் கண்டோம். அதில் தாங்கள் கீற்று மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். கீற்று இணையதளம் அனைத்துவிதமான சிந்தனைகளுக்குமான ஒரு வெளியாகத் திகழ்கிறது. கீற்றில் வெளிவரும் கட்டுரைகள் படைப்பாளிகளின் சிந்தனையைச் சார்ந்தே வெளிவரும் கருத்துக்களாகும். இதில் கீற்றிற்கு எவ்வித தனிப்பட்ட நலனும் ஆர்வமும் இல்லை. இதுபோன்ற மின்னஞ்சல்களை எமது கருத்துச் சுதந்திரத்திற்கான மிரட்டலாக நாங்கள் உணர்கிறோம்.

உலக நாடுகளினால் ‘போர்க்குற்றம் நடந்தது’ என அறிவிக்கப்பட்ட நாட்டில் நிகழும் ஒவ்வொரு பொதுநிகழ்வும் அரசியல் தன்மை கொண்டதாகவே கவனிக்கப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. அத்தகைய நிகழ்வுகளின் மீதான விமர்சனத்தை முன்வைப்பதற்கு மனித உரிமைகளில் ஆர்வம் கொண்ட எழுத்தாளர்களுக்கும் அதை வெளியிடுவதற்கு கீற்று மாதிரியான ஊடகங்களுக்கும் உரிமை இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினருக்கும், மனித உரிமையாளர்களுக்கும் இன்னமும் இலங்கையில் நுழைய அனுமதி மறுக்கிற சிங்கள அரசின் ஆதரவில்லாமல் இலங்கையின் தலைநகரில் எவ்விதக் கூட்டமும் நடத்திட முடியாது என்பது அனைவராலும் புரிந்துகொள்ள முடிந்ததே. இந்நிலையில் தங்களது அமைப்பின் அறிவிப்பும் மாநாடும் விமர்சனத்திற்கு உள்ளாகும் என்பதைத் தாங்கள் ஏற்கனவே அறிந்தே இருப்பீர்கள். அப்படியிருக்கும்போது மதிப்பிற்குரிய எஸ்.பொ. அவர்களின் விமர்சனத்தால் மனவுளைச்சலுக்கு ஆளானேன் என்று கூறுவது பொருத்தமற்றது.

மேலும் அக்கட்டுரையில் எஸ்.பொ. அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிரான எதிர்வினை ஆற்ற வேண்டுமாயின், கீற்று இணையதளத்திற்கு நீங்கள் தாராளமாக அனுப்பலாம். அவற்றையும் நாங்கள் வெளியிடத் தயாராக இருக்கிறோம். மற்றபடி, தங்களையோ, தங்கள் அமைப்பையோ தனிப்பட்ட முறைமையில் தாக்க வேண்டிய அவசியம் கீற்று இணையதளத்திற்கு இல்லை. பத்து கோடி ரூபாய் மானநட்ட வழக்கு தொடர்வேன் என்பதுபோன்ற மிரட்டல்களால் கீற்று போன்ற பொதுவான சிந்தனைவெளியின் செயல்பாடுகளை முடக்க முடியாது. அப்படி வழக்குத் தொடரப்படுமாயின் அதனை சட்டரீதியில் எதிர்கொள்ள கீற்று தயாராகவே இருக்கிறது. எந்த மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை.

- கீற்று நந்தன் ( editor@keetru.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

(படம் நன்றி: தினகரன் வாரமஞ்சரி)

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10388:2010-08-14-06-54-14&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

பத்து கோடி ரூபாய் மானநட்ட வழக்கு தொடர்வேன் என்பதுபோன்ற மிரட்டல்களால் கீற்று போன்ற பொதுவான சிந்தனைவெளியின் செயல்பாடுகளை முடக்க முடியாது.

கோத்தபாயா தார பணம் பத்தாமல் கிடக்குதோ.

[

இலங்கையில் போர் நடந்தது. போர்க்குற்றங்கள் இரண்டு தரப்பினாலும் நடந்துள்ளன. இதனை யாராலும் மறைக்கமுடியாது. இது தொடர்பான நடவடிக்கையில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஈடுபடும்.

ஆனால் நீங்களும், மகாநாட்டுக்குச் செல்போரும் மகிந்தா செய்வது சரி. புலிகளால் தான் பிரச்சனை என்றல்லோ அறிக்கை விடுகிறீர்கள்.

[இலங்கையில் போர் நடந்தது. போர்க்குற்றங்கள் இரண்டு தரப்பினாலும் நடந்துள்ளன. இதனை யாராலும் மறைக்கமுடியாது. இது தொடர்பான நடவடிக்கையில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஈடுபடும்.

அதற்காக இலங்கை மக்களின் அன்றாட வாழ்வு தொடராமலா இருக்கிறது?

யாழ்ப்பாணத்தில் நல்லூரில் கந்தசுவாமி கோயில் வருடாந்த உற்சவம் நடக்காமலா இருக்கிறது?

கொழும்பில் பிரபலமான ஆடிவேல் விழா நடக்காமல் இருக்கிறதா?

இதற்கு தமிழகத்திலிருந்து நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வருகை தராமலா இருக்கிறார்கள்?

கம்பன் கழகத்தின் கம்பன் விழாவும் இசைவேள்வியும் நடக்காமலா இருக்கிறது?

மாத்தளை என்ற மலையக ஊரில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த உற்சவமும் ஐந்துரத பவனியும் பல்லாயிரக் கணக்கான தமிழ் பக்தர்கள் மத்தியில் நடக்காமலா இருக்கிறது.?

கொழும்பு புறக்கோட்டையில் தமிழ்ப் பெண்கள் பாற்குடம் சுமந்து திருவிழா நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளவத்தையில் ஆண்கள் வேல்குத்தி பறவைக்காவடி எடுக்கிறார்கள்.

இலங்கையின் தமிழ்ப்பிரதேசங்களில் உலகநாயகன், சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, மெகா ஸ்டார், புரட்சிக்கலைஞர் ஆகியோரின் மசாலாப்படங்கள் காண்பிக்கப்படாமலா இருக்கிறது?

இலங்கை தமிழ்ப்பிரதேசங்களுக்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாம் சிரமப்பட்டு சேகரித்த மருந்து மற்றும் உணவுப்பொருட்களை கப்பலில் அனுப்பமுடியாமல் போனபோது ஐக்கியநாடுகள் சபைக்கும் செஞ்சிலுவைச்சங்கத்திற்கும் இந்திய மத்திய அரசுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்து சாகும்வரையில் பழ.நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில் சூப்பர் ஸ்டாரின் படங்கள் இலங்கையிலும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஒரேநேரத்தில் வெளியாகி அவருக்கும் அதனைத்தயாரித்த நிறுவனத்திற்கும் கோடி கோடியாக எமது தமிழ் மக்கள் கொடுத்தார்களே? அப்போது எங்கே போனது தமிழ் இன மான உணர்வு?

முருகபூபதி கேட்கத்தவறியவை

இந்தியத் திரைப்பட விழாவும் நடக்கமாலா இருக்கிறது?.

அசினும் சல்மான்கானும் இலங்கையில் திரைப்படத்தில் நடிக்கமாலா விட்டிட்டார்கள்?

மகிந்தாவின் மனைவியுடன் அசின் பிளேனில் பறக்காமல் விட்டுவிட்டார்களா?

மகிந்தா வெற்றி விழா கொண்டாடமல் விட்டுவிட்டாரா?

சிறிலங்காவில் சர்வதேச துடுப்பாட்டம் நடக்காமலா இருக்கிறது?

கலைஞர் செம்மொழி மகாநாடு நடத்தாமலா விட்டுவிட்டார்?.

சனம் இலங்கையில் குழந்தை குட்டி பெறமாலா இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்க உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள்

கொழும்பில் ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்ப் படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், கவிஞர்கள் அறிவுமதி, தாமரை, பத்திரிகையாளர்கள் சோலை, சுதாங்கன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு இன்று வெளியிட்ட கூட்டு அறிக்கை வருமாறு:

எதிர்வரும் 2011-ம் ஆண்டு ஜனவரி 5,6,7,8 தேதிகளில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்த இருப்பதாக சில எழுத்தாளர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 3-ல் கொழும்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அங்குள்ள சிலரும், புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் கூடி, இந்த மாநாட்டை நடத்த முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் கூட்டுச் சதியோடு இலங்கை அரசு கடந்த ஆண்டு மாபெரும் தமிழன அழிப்புப் போரை நடத்தி எண்ணற்ற போராளிகளையும் அப்பாவிப் பொது மக்களையும் கொன்று குவித்தது உலகெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்திய திரைப்பட விழாவை நடத்தியது, இலங்கை அரசு. ஆனால், அதில் தமிழ் திரையுலகினர் கலந்துகொள்ளாததால் அந்த விழாவே படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், தற்போது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்தி தன் கைகளில் உறைந்துள்ள ஒரு லட்சம் தமிழரின் இரத்தக்கறையை மறைக்க முயற்சிக்கிறது, இலங்கை அரசு. தன் கோர முகத்தை நேரடியாக வெளிக்காட்டாமல், எழுத்தாளர்கள் என்கிற முகமூடியுடன் இந்த மோசடியில் அது இறங்குகிறது.

எனவே எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்பட இருக்கிறது என்பதைத் தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை அரசின் இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு எந்த நிலையிலும் துணை போகமாட்டோம் என்று அழுத்தந் திருத்தமாகக் குறிப்பிட விரும்புகிறோம்.

இலங்கை வளர்ச்சி, மொழி வளர்ச்சி, திரைக்கலை வளர்ச்சி என்று போக்குக் காட்டி படைப்பாளர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள், மற்றும் கலைஞர்களை ஈர்க்க முயலும் சிங்கள அரசின் நயவஞ்சக எண்ணத்தைப் புரிந்துகொண்டு, உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்தப் போலிப் பகட்டு மாநாட்டை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilulakam.com/news/view.php?id=16138

தமிழர்களைப் பிரிக்கும் அடுத்த சூழ்ச்சியாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்துகிறது ராஜபக்சே அரசு.

இலங்கையில் நடந்த போர்க்குற்றம் உலக வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து ராஜபக்சே அரசின் மதிப்பு குறைந்துவிட்டது. உலக நாடுகள் பல நெருக்கடிகளைத் தந்து கொண்டிருக்கின்றன.

போர்க்குற்றத்தை விசாரிக்க ஐ.நா ஒரு குழுவை நியமித்தது. ஆனால் அவர்களை நாட்டுக்குளேயே வர இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. இது தவிர்த்து ஐரோப்பிய நாடுகள் தாங்கள் அளித்து வந்த சலுகைகளை நிறுத்திக் கொண்டன.

உலகின் பார்வை தன் மீது இருந்தாலும் சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை மறைக்க இலங்கை அரசு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்தியா, சீனா ஆகிய நாடுகளை உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

முதலில் இலங்கை அரசு இந்திய திரைப்பட விழாவை நடத்தியது. ஈழத் தமிழர்கள் உணர்வுகளை மதிப்பதாகக் கூறி திரையுலக ஜாம்பவான்கள் யாரும் செல்லாததால் அது தோல்வி அடைந்தது.

பின்னர் ஆசினை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடிப் பார்த்தார் ராஜபக்சே. இதில் சினிமாக்காரர்கள் மத்தியில் லேசான தடுமாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது அவரால்.

தற்போது தலைநகர் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. வரும் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5,6,7,8 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை நடத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்த மாநாட்டை நடத்தி தமிழர்களின் மீது தங்களுக்குள்ள மதிப்பையும், மரியாதையையும் உலகிற்கு பரைசாற்றி குற்றத்தை மறைக்க நினைக்கிறது.

இத்திட்டத்தை சொல்லவில்லை என்றாலும் புரிந்து கொண்ட உலகத் தமிழ் எழுத்தாளர்கள் இம்மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த மாநாட்டுக்காக கடும் முயற்சி எடுத்து வரும் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilulakam.com/news/view.php?id=16171

  • கருத்துக்கள உறவுகள்

"தீதும் நன்றும் பிறர் தர வரா"

ஆனால் எல்லாம் புலி புலி என்று ஊதினால் மகிந்தவிடம் இருந்து பணம் வரா????

எதோ தமிழ் போல் இருக்கின்றது என்றுதான் ஒரு குத்துமதிப்பில் இதை போட்டுள்ளார்கள். இதன் அhத்தம் கூட புரியாத கூட்டம் தமிழ் மாநாடு நடத்தி தமிழ் வளரபோகின்றது??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.