Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயகலைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை

“கொல்லைக்குப் போயிட்டு வரேன்!”

“போய்ச் சேர்ந்ததும் தந்தி அடிங்க!!”

என் தாத்தாவும் பாட்டியும் பேசிக்கொள்ளும் தமாஷாரம். கொல்லைக்கு என்பது நாம் தற்போது உபயோகப்படுத்தும் “ரெஸ்ட் ரூம்” சமாசாரம்.

வீடு தாண்டி வெளியே வந்தால் காதல், கனவு, கள்ள உறவு, கோபம், குரோதம், குஷி, பழிவாங்கல், யார் எழுதினார் என்று தெரியாத மர்மம் என்று நவரசங்களையும் பொறித்துச் சொல்லும் இடங்களாக இன்றளவும் பள்ளி கல்லூரி, அலுவலக டாய்லட்கள் திகழ்ந்துவருகின்றன.

பஸ் பயணத்தின் போது, வழியில் ‘நிறுத்துவார்கள்’. பாம்பு இல்லாத புதர்ப்பக்கமாக ஒதுங்கவேண்டியது உங்கள் சாமர்த்தியம். பஸ் பயணத்தின் போது, உங்கள் நண்பர் இதோ டீ சாப்பிட்டு வரேன் என்று எங்காவது ஒதுங்கினால், டிரைவர் ஹார்ன் அடித்து, இன்ச் இன்சாக பஸ்ஸை நகர்த்தி பூச்சாண்டி காமிப்பார். “ஆனது ஆச்சு, இதோ வந்திடுவார்,” என்று பதறும் உங்களுக்கு வயிற்றை கலக்க ஆரம்பிக்கும்.

பதினைந்து வருடங்கள் முன் அமெரிக்கா சென்றபோது டாய்லட் பேப்பர் அறிமுகம் கிடைத்தது. காலில் நியூஸ் பேப்பர் பட்டாலே சரஸ்வதி என்று கண்ணில் ஒற்றிக்கொள்ளும் நமக்கு, பேப்பரில் துடைத்துப் போட உடனே மனம் இடம்கொடுக்காது. ஆனாலும், சில நாள்களில் பிட்சாவுடன் கோக் போல இதுவும் பழகிவிடும்.

ரயிலில் போகும்போது ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு போனால் நிச்சயம் சொம்புடன் குந்திக்கொண்டு இருப்பவர்களையும் பார்த்திருப்பீர்கள். சொம்பு இல்லை என்றால் பக்கத்தில் ஏதாவது சின்ன வாய்க்கால் இருக்கும். இலவச இணைப்பாக வயல்கள் பசுமையாக இருக்கும்; இயற்கை உரம்!

ரயிலுக்கு வெளியே பரவாயில்லை ஆனால் ரயிலுக்கு உள்ளே இருக்கும் டாய்லெட் பற்றி சொன்னால் அடுத்தவேளை சாப்பாடு பிடிக்காது. அப்படியே அர்ஜண்டாக ஒரு கை பாத்துவிடலாம் என்று உள்ளே சென்றால் ஒரு கையில் டிரஸை வைத்துக்கொண்டு இன்னொரு கையில் ஏதையாவது சப்போர்ட்டுக்கு பிடித்துக்கொண்டு, ஆடிக்கொண்டே ஓடும் ரயிலில், வெளியிலிருந்து கதவு தட்டப்படும் அடுத்தவரின் அவசரத்தில், தூக்கிப் பிடித்தால் மட்டுமே (சிலசமயம் மட்டுமே) தண்ணீர் வரும் குழாயில், சங்கிலியில் கட்டப்பட்ட டம்பளர் என்ற கழிவறைகளில்… ஆக்டோபஸுக்கே சவால்விடும் சாகசத்தை பொதுஜனம் சமாளித்து வந்திருக்கிறது; வருகிறது.

“இந்தியா ஒரு திறந்தவெளிக் கழிவறை” என்று பெயர்வாங்கிவிட்டதால் மற்ற நாடுகளைப் ஒரு சுற்று பார்த்துவிட்டு வரலாம் வாங்க.

டாய்லெட் சிலருக்குப் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. ஐந்தாம் சார்லஸ் என்ற ரோம் அரசர் பிறந்தது ஒரு டாய்லெட்டில். ஒரு சிலருக்கு இறப்பிடமாகவும் இருந்திருக்கிறது. எல்விஸ் என்றவர் டாய்லெட்டில் இறந்து போனார்.

கி.முவில் தொடங்கி நேற்று வரை டாய்லெட் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. கழிவை அகற்றுவதும் மறைப்பதும் மனிதனுக்கு இந்த விண்வெளி யுகத்திலும் பெரிய சவாலாக இருந்துக்கொண்டு இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கழிவுகளைப் பானையில் சேகரித்து அதை ஜன்னல் வழியே வெளியே போடும் பழக்கம் இருந்துள்ளது. இந்தப் பழக்கம் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை சகஜமாக இருந்திருக்கிறது. இந்தியாவில் என்று நினைக்க வேண்டாம் – ஐரோப்பாவில்! இந்த பழக்கத்தால் காலரா போன்ற தொற்றுநோய் பரவ டாய்லெட் உருவானது.

இயற்கை அழைத்தால் அரசனோ ஆண்டியோ உடையை ஏற்ற வேண்டும், அல்லது தாழ்த்த வேண்டும். வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது சமூக ஏற்றத்தாழ்வுகள் டாய்லெட்டிலும் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.

நாகரீகம் தோன்றிய காலத்தில் முதலில் எழுத்துகள் தோன்றியது என்பார்கள். எழுத்துக்கு முன்பே டாய்லெட் தோன்றிவிட்டது. பாதாளச் சாக்கடை என்று நாம் இன்றும் உபயோகப்படுத்திக்கொண்டு போன பட்ஜெட்டில் கணக்கு காண்பித்துகொண்டு இருக்கும் ஒன்று ஏதோ சில நூற்றாண்டுகள் முன் வந்தது கிடையாது. மெசபடோமியா, சிந்து நாகரிகம் காலத்திலேயே இருந்திருக்கிறது. ஹபுபா கேபிர் (habuba kabir) என்ற இடத்தில் (தற்போது சிரியா) கழிவு நீரைக் கொண்டுசெல்ல பாதாளக் குழாயை உபயோகப்படுத்தியுள்ளார்கள். இந்தியர்கள் உபயோகித்த தண்ணீரைக் கொண்டு கழிவுகளைச் சுத்தம் செய்துள்ளார்கள். இது எல்லாம் கிமு 3300ல்!

சுமேரியர்கள் மெசபடோமியா ஆண்ட காலத்தில் சார்கான் (Sargon) என்ற அரசன் ஆறு கழிவறைகளைக் கட்டி தான் ஒரு “சுத்தமான” வீரன் என்று நிரூபித்தான். இதற்கு முன் இவர்கள் பானையின் மீது குந்திக்கொண்டு அதை செய்துக்கொண்டு இருந்தார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இவர்கள் என்னதான் வீரனாக இருந்தாலும் பானையின் மீது சில சமயம் குறி தவறிவிடுவதும் உண்டு. அதனால் குதிரைலாடம் போல இருக்கை செய்து அதற்குக் கீழே பானையை வைத்தார்கள். எழுத்தும், கழிவறையும் நம் முன்னோர்கள் கண்டு பிடித்தாலும், நியூஸ் பேப்பர் கண்டு பிடித்த பிறகு இவை இரண்டும் பாத்ரூமில் ஒன்று சேர்ந்தன!

சிந்துவெளி நாகரீகத்தில் மெசபடோமியாவைப் போலவே இருந்திருக்கிறது. ஹரப்பா மக்களின் வீடுகளிலிருந்து கழிவு நீர் செங்கலால் கட்டப்பட்ட செப்டிக் டேங்க் போன்ற ஒன்றில் கலந்தது. துர்நாற்றம் வராமல் இருக்க மூடினார்கள். பல நாடுகளிலும் இது போன்ற அமைப்பு தான் இன்னும் இருக்கிறது என்பது பெரிய ஆச்சர்யம்!

தற்போது நாம் உபயோகப்படுத்தும் ஃபிளஷ் டாய்லெட் கிமு கண்டுபிடிப்பு!. மினோவன் (Minoans) நாகரிகத்தில், 1,400 அறைகள், ஓவியங்கள், படிக்கட்டுகள் என்று அமர்களமாக நோசொஸ் அரண்மனையைக் கட்டிய மினோவன் ராஜா கூடவே ஃபிளஷ் டாய்லெட்டையும் கட்டினான்! மழைத் தண்ணீரை அரண்மனைக் கூரை மீது ஒரு தட்டில் சேகரித்து அதைக் கூம்பு போல இருக்கும் டெராகோட்டா பானையில் செலுத்தி இந்த ஃபிளஷுக்கு தண்ணீர் சப்ளை செய்தான். கூம்பு போல இருப்பதால் தண்ணீர் மெதுவாக வரும். வீணாகாது! அந்தக் காலத்திலேயே மழை நீர் சேகரிப்பு, சிக்கனம்!

சிந்துசமவெளி நாகரீகம் முதல் தற்போது ஜப்பானின் ஹைடெக் டாய்லெட் வரை எல்லாமே மனிதனின் கற்பனைத் திறனுக்கு எடுத்துக்காட்டுகள்.

பத்து ஆண்டுகளுக்கு முன் திருவல்லிக்கேணியில் சில தெருக்களில் சென்றால் சாலையில் இரண்டு பக்கமும் பாண்டி விளையாடிக்கொண்டு போக வேண்டும். ஐந்து மணிக்கு பால் வாங்க போனால் பெரியம்மா “ரோடு சைடுல பார்த்து போ ——— இருக்கும்” . (…. என்பது கடவுளின் பெயர் ).

பழைய காலத்திலும் கழிவுகளை கடவுளாக கொண்ட அதிசயங்களும் இருந்திருக்கிறது. யூதர்கள் கழிவுகளைக் குவித்து அதை தெய்வம் என்று வணங்கினார்கள். கார்பரேஷன் வண்டி இல்லாத அந்தக் காலத்தில் இந்தக் குவியல் மேடாகி மலையானது. தெய்வ சிந்தனை போய் தெய்வ நிந்தனை ஆகியது. கிறுத்துவர்கள் யூதர்கள் சாத்தானைத் தொழுகிறார்கள் என்று நினைத்தார்கள். குவியலிலிருந்த துர்நாற்றத்தை சுவாசித்தால் மூக்கு வழியாக சாத்தான் உடலுக்குள் போவதாக பயந்தார்கள்.

ஹீப்ரூ நாட்டில் கழிவுகளின் கடவுளாக பெல்பெகார் (Belphegor) திகழ்ந்தார். பக்தர்கள் தங்களுடைய பேண்டைக் கழட்டிவிட்டுச் சாமி முன் காலைக்கடனை நேர்த்திக்கடனாகக் கழித்தார்கள்.

ரோமில் சாமிகளுக்குப் பஞ்சம் இல்லை. எல்லாவற்றிருக்கும் கடவுள் இருந்தார்கள். பூமிக்கு கடவுள்; பாதாள கடவுள்; வீரத்துக்கு, காதலுக்கு… என்று அந்த பெரிய லிஸ்டில் மலத்தையும் விட்டுவைக்கவில்லை. ‘கொலசினா’ சாக்கடைக் கடவுள். சாக்கடை அடைப்பு, அல்லது அது நிரம்பி வழிந்தது என்றால் இந்தக் கடவுளிடம் வேண்டிக்கொண்டார்களாம். கடவுளை பிளம்பர் என்று நினைத்துவிட்டார்கள். நாம் இன்று ஆயுத பூஜை அன்று கடப்பாறை, கத்தி, சுத்தி, ஸ்பேனர், ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏன் கம்ப்யூட்டரையும் கடவுள் ஆக்கிவிட்டோம்.

சில நூற்றாண்டுகளுக்கு கிரேக்க மக்கள் நாம் இன்று உபயோகப்படுத்தும் பெட் பேன் மாதிரி ‘சேம்பர் பாட்’ என்ற ஒன்றை உபயோகித்தார்கள். அடிக்கடி ரூமுக்குப் போய்வருவது அவர்களுக்கு போர் அடித்ததோ என்னவோ, அந்த ‘சேம்பர் பாட்’டைத் தங்கள் உடைக்குள் வைத்துக்கொண்டார்கள்; பார்ட்டிக்கும், பயணத்துக்கும் பலவித டிசைன்களில்!

roman-toilets.jpg

கிரேக்கத் தாக்கம் ரோம் நகரைச் சென்று அடைந்தது விரிவடைந்தது. அங்கேயும் ‘சேம்பர் பாட்’ கலாச்சாரம் விரிவடைந்தது. கொஞ்சம் நாளில் ரோம் நகரில் கழிவு நீர் குழாய் வந்தது – கொலாகா மேக்ஸிமா (Cloaca Maxima). கூவம் போல நதியில் கலந்தது. கழிவு நீர் குழாய் பக்கம் வீடுகள் வரத் தொடங்கியது. ஆனால் வீட்டுச் சாக்கடையை இதில் சேர்க்க எல்லோருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. சில முக்கியஸ்தவர்களுக்கு மட்டும் தான் பர்மிட் கிடைத்தது. பர்மிட் கிடைக்காதவர்கள் பொதுக் கழிப்பிடங்களுக்குச் சென்றார்கள். சென்றவர்கள் சும்மா ‘இருக்க’ முடியவில்லை. கிசுகிசு, அரசியல் ஏன் சில சமயம் பிஸினஸ் கூட பேசிமுடித்தார்கள். ஜாலியான மூடில் பார்ட்டிகள் நடத்தினார்களாம்!

இந்தப் பொதுக் கழிப்படச் சுவற்றில் மக்கள் கிறுக்காமல் இருக்க சாமி படங்கள் வரையப்பட்டது. இன்றும் சென்னையில் சர்ச், மசூதி, கோயில் என்று தேசிய ஒருமைப்பாட்டை வலியுத்தும் படங்களைப் பார்க்கலாம். கிபி 315ல் ரோமில் செய்ததை இன்று நம் ஊரில் செய்துக்கொண்டு இருக்கிறோம்! ஜெயநகர் ஷாப்பிங் காம்பிளக்ஸில் “யூரின் – 100ரூபாய்” என்று சுவரில் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் தருவார்களா அல்லது நாம் அவர்களுக்கு தரவேண்டுமா என்று தெரியவில்லை.

குப்பைத் தொட்டி இருந்தாலும் குப்பையை பால்கனியிலிருந்து வீசும் பழக்கம் போல, சாக்கடை இருந்தாலும் சேம்பர் பானைகளில் சிறுநீர் கழித்து அதை ஜன்னல் வழியே போடுவதை யாரும் நிறுத்தவில்லை. ஜன்னலுக்கு வெளியே பாதிக்கபட்டவர்கள் மருத்துவ உதவி கேட்டு கோர்ட் கேஸ் என்று கூடப் போனார்கள். சிறுநீர் சலவைக்கு உபயோகிக்கலாம் என்று தெரிந்த பின் ஜன்னல் வழியே கொட்டும் பழக்கம் நின்றது.

சிறுநீரில் 85% தண்ணீர், 2% யூரியா, கால்சியம், அமோனியம் போன்றவை இருப்பதால் எண்ணெய்க் கறைகளைச் சிறுநீர் அகற்றியது. சலவைத் தொழில் செய்தவர்கள் எல்லோர் வீட்டு முன்பும் சிறுநீர் நிரப்பிக் கொடுக்கத் தங்கள் சொந்த செலவில் பானைகளை வைத்தார்கள்! அட, இது எப்படி இலவசம் என்று அரசர் அதற்கு வரி விதித்தார் என்பது வேறு கதை.

ரோம் போல இங்கிலாந்திலும் ஜன்னல் வழியே தூக்கி போடும் பழக்கம் இருந்த்துள்ளது. லண்டன் பாலத்தை ஒட்டிய வீடுகளில் டாய்லெட் கட்டபட்டதால் பாலத்துக்கு அடியில், தேம்ஸ் நதியில் தேமே என்று சென்றவர்களுக்கு இலவச மாலாபிஷேகம் நடந்தது. புத்திசாலிகள் பாலத்துக்கு மேலே சென்றார்கள், முட்டாள்கள் அடியில் சென்றார்கள். ஆண்டரு ஜோன்ஸ் என்பவர் தொல்பொருள் ஆராய்ச்சி செய்த போது 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த வைகிங் இனத்தவரின் மலத்தைக் கண்டு பிடித்துள்ளார். அதை $34,000க்கு இன்ஷ்யூர் வேறு செய்திருக்கிறார்! அந்த காலத்தில் நிறைய நார் சத்து சாப்பிட்டிருப்பார்கள் போல.

ஜெர்மனியின் கோட்டைகளில் கார்டிரோப்ஸ் (Garderobes)garderobe_peveril_castle_derbyshire.jpg

இருந்தது. மூன்று அடிக்கு மூன்று அடியில் சின்ன ரூம்; சின்ன கல் சீட், சின்ன ஓட்டை! ரயிலில் அடியில் போகும் இங்கே கோட்டைச் சுவருக்கு வெளியே விழும். அவ்வளவு தான் வித்தியாசம். இந்த மூன்றுக்கு மூன்று அறை கிச்சன் பக்கம் இருந்ததாம். உட்காரும் போது குளிர் காலத்தில் இதமாக இருக்க வேண்டாமா? ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு நாற்றம் கோட்டை ஜன்னல் வழியே வரத்தொடங்கியது. மூன்றாம் ஹென்றி கோட்டைச் சுவற்றில் பழுப்பு நிறக் கறை படிந்ததால் வருத்தப்பட்டு, குழாய் போல ஒன்றைக் கட்டினான்.

சுவற்றில் இருந்த ஓட்டையினால் இந்த மாதிரி நன்மைகள் இருந்தாலும், போர்க் காலங்களில் சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்தது. இந்த ஓட்டையின் வழியே சிப்பாய்கள் மூக்கை மூடிக்கொண்டு உள்ளே நுழைந்து தாக்கினார்கள். முடியாதவர்கள் ஓட்டையில் குறி பார்த்து அம்பு விட்டார்கள். மேலே சென்ற அம்பு எதையாவது அடித்ததா என்ற மேலதிகக் குறிப்பு இல்லை.

16-ஆம் நூற்றாண்டில் பீங்கான் கண்டுபிடிப்புக்குப் பிறகு நிலைமை மாறியது. பீங்கான் பல டிசைன்களில் வந்தது. ஜெட்டிக்குள் வைப்பதற்கு பதில் மக்கள் அதை மூடிய மர ஸ்டூல் உள்ளே வைத்தார்கள். ஸ்டுல் டெஸ்ட் என்று இன்று நாம் சொல்லுவதற்கு இது காரணமாகக் கூட இருக்கலாம்.

17-ஆம் நூற்றாண்டில் இந்த மூடிய ஸ்டூல் பிரபலமாகியது. வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் குப்பையை ஏதாவது கலர் துணி போட்டு மூடுவது போல, பலர் மூடிய ஸ்டூல் முன்பகுதியில் புத்தகம் அடுக்கியமாதிரியும், ஓவியங்களைப் போட்டும் உள்ளே இருக்கும் சமாசாரங்களை மறைத்தார்கள். பணக்கார ராஜாக்களும் பிரபுக்களும் தங்கம், வெள்ளியில் பறவை, மிருக படங்களைப் பொறித்தார்கள். ரொம்ப நேரம் உட்கார விரும்புகிறவர்கள் சீட்டுக்கு லெதர் குஷன் செய்தார்கள். பதினான்காம் லூயி பல வெளிநாட்டுப் பிரமுகர்களை இந்த மூடிய ஸ்டூல் மீது உட்கார்ந்துகொண்டு வரவேற்றார். வந்தவர்களுக்குச் சிறப்பு சலுகையாக இது இருந்திருக்கலாம். லூயி அந்த அரியணையில் உட்கார்ந்துக்கொண்டு பிஸினஸ் வேறு பேசினாராம்.

பதினெட்டாம் நூற்றாண்டில் பீங்கான் கழிவறைகள் வர தொடங்கியது. புது டைரியில் எழுத மனசு வராதமாதிரி அதை உபயோகிக்க மக்களுக்கு மனசு வரவில்லை. இந்த நூற்றாண்டில் மேலும் பல சுவாரசியமான கதைகள் இருக்கின்றன. அவை வேறு ஒரு சமயம். இப்போது இருபத்தோராம் நூற்றண்டுக்குத் தாவலாம்.

japan-toilet.jpg

டிவி ரிமோட், காபி மிஷின், ஸ்டிரியோ என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். எல்லாவற்றையும் எலக்டரானிக் விஷயமாக ஆக்கும் ஜப்பானியர்கள் டாய்லெட்டையும் விட்டு வைக்கவில்லை. 38 பட்டன் கொண்ட வயர்லெஸ் டாய்லெட் எல்லாம் வந்துவிட்டது. ஒரு பட்டனைத் தட்டினால் டாய்லெட் சீட் முதலில் கொஞ்சம் சூடாகி நமக்கு இதமாக்கும். சின்ன சத்தம் போட்டு முதலில் சுத்தம் செய்யும். கடைசியில் இன்னொரு முறை சுத்தம் செய்யும். பிறகு வெந்நீர் கொண்டு அலம்பிவிடும். சூடான காற்று பின்புறத்தைக் காய வைக்கும். டாய்லெட் பேப்பர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

விண்வெளி ஆராய்ச்சிக்கு மேலே செல்பவர்கள் ‘அது’ வந்தால் என்ன செவார்கள்? என்பதைப் பற்றியும் சில ஆச்சரியமான தகவல் இருக்கிறது.

1961ஆம் ஆண்டு அமெரிக்கா விண்வெளிக்கு மனிதனை வைத்து முதல் ராக்கெட்டை அனுப்பியது. அதில் பயணம் செய்தவர் ஆலன் ஷெப்பர்ட்; வெறும் 15 நிமிடப் பயணம். இந்தப் பயணத்துக்காக ஆலன் தொடர்ந்து நான்கு மாதம் அழுத்தம் கொண்ட உடையை அணிந்து தன்னை பழக்கிக்கொண்டார். எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தது. இவர் பயணம் செய்த அன்று இயற்கை கொஞ்சம் விளையாடியது. மேக மூட்டம் காரணமாகவும், பிளைட்டில் ஏதோ சின்ன கோளாறு காரணமாகவும் புறப்பட நான்கு மணி நேரம் தாமதம் ஆனது. கிளம்பும் சமயம் இயற்கை அவரை அழைத்தது! கண்டரோல் ரூமுக்குச் “அவசரமா… ” என்று செய்தி அனுப்பினார். அவர் அணிந்துள்ள சூட்டில் பல கருவிகளைப் பொருத்தியுள்ளார்கள். திரும்பவும் எல்லாவற்றையும் எடுத்து மாட்டினால் தாமதம் ஆகும் என்ற காரணத்தால் என்ன செய்ய என்று குழம்பினார்கள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள் – சூட் உள்ளேயே சிறுநீர் போய்விடுங்கள் என்று ஆணை வந்தது! அவர் சூட்டில் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூட்டினுள் வெப்பம் அதிகமானால் உடனே உள்ளே பொருத்தியிருக்கும் சென்ஸார் அதைக் கண்டுபிடுத்து ஃபிரியான் (freon) என்னும் குளிர்விப்பான் ரிலீஸ் ஆகி வெப்பத்தைத் தணிக்கும். இவர் சூட்டினுள் சிறுநீர் கழித்தால் வெப்பம் அதிகமாகும் பிறகு ஃபிரியான் ரிலீஸ் ஆகும் என்ற நம்பிக்கை. அதே போல் ஆனது. ஆனால் ஒரு சின்னப் பிரச்சினை கூடவே வந்தது. சூட்டினுள் இருந்த சிறுநீர் வெந்நீராக மெதுவாக அவர் தலையை நோக்கி வர ஆரம்பித்தது!. அலனுக்கு பீதி. எங்கே மேலே வந்து இணைப்புக் கம்பிகளைத் தொட்டு மின்கசிவு ஏற்பட்டு ஷாக் அடித்து விடுமோ என்று. நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. மேல் நோக்கி வந்த சிறுநீர் அவர் முதுகுப்பக்கம் தங்கிவிட்டது!.

1984ல் விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட்டில் சிறுநீர் வெளியேற்றும் கருவி பழுதடைந்து பின் ஐஸ் கட்டியாகிவிட்டது. ராக்கெட் திரும்ப வரும்போது இந்த மூத்திர ஐஸ் மீது மோதி ராக்கெட்டுக்கு வெளிப்புறம் இருக்கும் சென்சார்களுக்கு ஏதாவது ஆகிவிட கூடாது என்று ராக்கெட்டில் இருந்த ரோபட்டை கொண்டு அதை மூத்திர ஐஸை உடைத்த கதைகளும் இருக்கிறது.

எதுக்கு இந்த பிரச்சனை எல்லாம் என்று ஜப்பான் விண்வெளி ஏஜன்சி நம் குழந்தைகள் உபயோகப்படுத்தும் டயப்பர் போல ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். கொஞ்சம் ஹைடெக். டாய்லெட் போக வேண்டும் போல இருந்தால் இந்த டயப்பரில் இருக்கும் சென்சார்கள் (உணர்கருவி) அதை அறிந்துக்கொண்டு உறிஞ்சிவிடுமாம். இன்னும் ஆச்சரியம் இருக்கு, முடித்தபிறகு அதுவே கழுவி, காயவைத்தும் விடுமாம். அது மட்டும் இல்லை கொஞ்சம் வாசனை வந்தால் அதையும் எடுத்துவிடுவதால், “ராவணா படம் என்னிக்கி ரிலீஸ்?” என்று பேசிக்கொண்டே நீங்களும் சத்தம் போடாமல் “ரிலீஸ் செய்யலாம்” யாருக்கும் தெரியாது.

நாசா விண்வெளி ஆராய்ச்சியில் இது மாதிரி ஹைடெக் எல்லாம் இல்லை. ஆணுறை போல ஒன்றை டாய்லெட் வரும்போது பொருத்திக்கொள்ள வேண்டும். அதிலிருந்து ஒரு ரப்பர்க் குழாய் ராக்கெட் வெளியே விடப்பட்டிருக்கும். மாட்டிக்கொண்டவர் வால்வை ஜாக்கிரதையாகத் திறக்க வேண்டும். ரொம்பத் திறந்தால் பிரஷர் காரணமாக சிறுநீரையும், அந்தச் சிறு உறுப்பையும் வெளியே இழுத்துவிடும் அபாயம் இருக்கிறது. புவிஈர்ப்பு அற்றநிலை (Zero Gravity) காரணமாக பொருத்திய கருவி ‘படக்’ என்று கழன்றுவிழுந்து சின்னச் சின்னதாக மிதக்க. கூட இருப்பவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்!.

space-bathrooms4.jpg

இது இப்படி இன்றால் ‘நம்பர் 2′ இன்னும் மோசம். குப்பைத்தொட்டிக்குப் போடும் பை போன்ற ஒன்றை நிறைய டேப் வைத்துப் பின்புறம் ஒட்ட வைத்து பிறகு ரிலீஸ் செய்ய வேண்டும். இதிலும் புவிஈர்ப்பு அற்றநிலையில் நிலையில்.. உங்களுக்கே புரிந்திருக்கும். அப்போலோ 7ல் பயணம் செய்தவர்கள், “Get naked, allow an hour, have plenty of tissues ready” என்று தங்கள் அனுபவத்தை எழுதியுள்ளார்கள்.

நாசாவும் சில ஹைடெக் சமாசாரங்களை செய்துள்ளது. 2008ல் அமெரிக்கா நாசா திட்டத்தில் $250 மில்லியன் டாய்லெட் ஆராய்ச்சிக்கு ஒதுக்கியது. சிறுநீரைச் சுத்தம் செய்து தண்ணீர் ஆக்கியது! அது மட்டும் இல்லை வேர்வை, ஈர டவலில் இருக்கும் தண்ணிரைக் கூட குடிதண்ணீர் ஆக்கியது. இந்தத் தண்ணீர் கிளப் சோடா (club soda) மாதிரி இருக்குமாம். கப்பு சோடா இல்லை! இந்தக் குடிதண்ணீர், நம் குழாயில் வரும் தண்ணீரை விட சுத்தமாக இருக்குமாம். $250 மில்லியன் காஸ்ட்லி தண்ணீர் ஆச்சே!

space-bathrooms6.jpg

கடைசியாக நீங்கள் வானில் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் உள்ளவரா? என்றாவது ராத்திரி மேலே பார்க்கும் போது அதிசயமாக ஏதாவது பார்த்தால் கடவுள் வருகிறார் என்று நினைக்க வேண்டாம். அது கழிவாக கூட இருக்கலாம். 2009-ல் வானில் ஒளித்தோற்ற அதிசயம் ஒன்றைப் பார்த்தார்கள். பார்த்தவர்களுக்குத் தெரியாது அது மேலே சென்ற விஞ்ஞானிகளின் சிறு(நீர்த்)துளிகள் என்று! வின்வெளிக் கப்பல்களில் இடப்பற்றாகுறை எப்போதும் இருக்கும். அதனால் தேவையில்லாத வஸ்துக்களை வெளியே போட்டுவிடுவார்கள். சிறுநீரை வெளியே கொட்டியவுடன் சின்னச் சின்ன ஐஸ் கட்டிகளாகிவிடும். சூரியன் மேலேபடும்போதெல்லாம் ஜொலிக்க ஆரம்பிக்கும். பிறகு நீராவியாகும். அவசியம் பார்க்க வேண்டிய காட்சி என்று மேலே ‘போனவர்கள்’ சொல்லுகிறார்கள்.

இந்த விஷயங்கள் இணையத்தில் இருக்கிறது. பல வரலாற்றுத் தகவல்கள் “The Porcelain God” என்ற புத்தகத்தில் இருக்கிறது. நான் அந்தப் புத்தகத்தை பாதிதான் படித்தேன். முழுவதும் படித்து முடிக்க ஆசை தான் ஆனால் ”பாத்ரூம் போனவர் ஏன் இன்னும் வெளியே வரவில்லை?” என்று தேடுவார்கள்.

இந்தக் கட்டுரையை எழுதியபின் பூமித்தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அவளுக்கு நன்றி

http://desikan.com/blog/?p=101

Edited by nunavilan

ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை

...

பழைய காலத்திலும் கழிவுகளை கடவுளாக கொண்ட அதிசயங்களும் இருந்திருக்கிறது. யூதர்கள் கழிவுகளைக் குவித்து அதை தெய்வம் என்று வணங்கினார்கள். கார்பரேஷன் வண்டி இல்லாத அந்தக் காலத்தில் இந்தக் குவியல் மேடாகி மலையானது. தெய்வ சிந்தனை போய் தெய்வ நிந்தனை ஆகியது. கிறுத்துவர்கள் யூதர்கள் சாத்தானைத் தொழுகிறார்கள் என்று நினைத்தார்கள். குவியலிலிருந்த துர்நாற்றத்தை சுவாசித்தால் மூக்கு வழியாக சாத்தான் உடலுக்குள் போவதாக பயந்தார்கள். :D

...

roman-toilets.jpg

....

கூவம் போல நதியில் கலந்தது. கழிவு நீர் குழாய் பக்கம் வீடுகள் வரத் தொடங்கியது. ஆனால் வீட்டுச் சாக்கடையை இதில் சேர்க்க எல்லோருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. சில முக்கியஸ்தவர்களுக்கு மட்டும் தான் பர்மிட் கிடைத்தது. பர்மிட் கிடைக்காதவர்கள் பொதுக் கழிப்பிடங்களுக்குச் சென்றார்கள். சென்றவர்கள் சும்மா ‘இருக்க’ முடியவில்லை. கிசுகிசு, அரசியல் ஏன் சில சமயம் பிஸினஸ் கூட பேசிமுடித்தார்கள். ஜாலியான மூடில் பார்ட்டிகள் நடத்தினார்களாம்! :lol::lol:

...

http://desikan.com/blog/?p=101

:lol::D இப்ப தான் பல மாடி கட்டிடங்களைக் கட்டி, கம்ப்யூட்டர் அது இது என்று பிஸினஸ் செய்யுறாங்கள்.... ^_^

மூக்கைப் பொத்திக் கொண்டு ஒரு வழியாக முழுதும் வாசித்து விட்டேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியமான தகவல்கள் கொண்ட நல்ல கட்டுரை. எங்கு குந்தியிருந்து தகவல்களைச் சேகரித்தாரோ!

  • கருத்துக்கள உறவுகள்

அட இதுக்குள்ள இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கா! :D

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முன் இவர்கள் பானையின் மீது குந்திக்கொண்டு அதை செய்துக்கொண்டு இருந்தார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இவர்கள் என்னதான் வீரனாக இருந்தாலும் பானையின் மீது சில சமயம் குறி தவறிவிடுவதும் உண்டு. அதனால் குதிரைலாடம் போல இருக்கை செய்து அதற்குக் கீழே பானையை வைத்தார்கள்.

பானையின் மீது குந்திக் கொண்டிருக்கும் போது..... பானை உடைந்தாலோ, வழுக்கி விட்டாலோ..... என்ன நடந்திருக்கும்?

நினைக்கவே.... பயங்கரமாயிருக்கப்பா......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.