Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெக் கெவார்க்கியனும் மரணபயமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெக் கெவார்க்கியன்! இந்தப் பெயரைக் செய்திகளில் கேள்விப் படும் போதெல்லாம் என் மனதில் பலவாறான எண்ணங்கள் இழையோடும்.இந்த எண்ணங்களில் வியப்பும், விரக்தியும் சில சமயம் மனித வாழ்க்கையின் நொய்மையான தன்மை பற்றிய சலிப்பும் கலந்திருக்கும். இன்று காலை முதல் "டாக்டர் டெத்" என்று அழைக்கப்படும் ஜெக் கேவார்க்கியனின் பெயர் மறுபடியும் ஊடகங்களில் மிதந்து வருகிறது-அதுவே இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

டாக்டர் ஜெக் கேவார்க்கியன் 83 வயதில் இன்று இயற்கையான காரணங்களால் காலமானார் என்பது தான் செய்தி. ஆனால், அமெரிக்காவின் மிச்சிகன் மானிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இயற்கை தீர்ப்பளிக்க முதலே தன் மருத்துவ அறிவைப் பயன்படுத்தி மரணத்தை அளித்த ஒருவர் தான் ஜெக் கேவார்க்கியன். ஆர்மேனியப் பெற்றோருக்குப் பிறந்து புத்திசாலிப் பிள்ளையாக வளர்ந்த கேவார்க்கியன், 1952 முதல் தனது 25 வருட மருத்துவத் தொழிலை நோயாளிகளைக் குணமாக்கவே பெரும்பாலும் பயன் படுத்தி வந்தார்.ஆனாலும் "கருணைக் கொலை" (euthanasia) எனும் மருத்துவத் துறையின் இருண்ட அத்தியாயம் பற்றி கெவார்க்கியன் எப்போதுமே ஒரு தனிப்பட்ட பார்வை வைத்திருந்தார் என்று இவர் எழுதிய சில கட்டுரைகள் புலப்படுத்துகின்றன.

கருணைக் கொலை பற்றி ஒவ்வொருவரிடமும் நிச்சயமாக ஒரு அபிப்பிராயம் இருக்கும். என்னுடைய தனிப்பட்ட உரையாடல்களில் நான் எதிர்பார்த்த அளவிலும் பார்க்க பல பேர் கருணைக் கொலை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விஷயம் என நம்புவதைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். ஆனால்,தீர்க்க இயலாத நோய் வந்தால், தாங்கள் யாருக்கும் பாரமாக இருந்து விடக் கூடாது என்கிற பிறரன்பே பலர் கருணைக் கொலை பற்றி சாதகமான மன நிலையை வைத்திருப்பதன் முக்கிய காரணம் என நினைக்கிறேன். மனிதர்களைப் பொறுத்தவரை சஞ்சலம் தரும் சொல்லான கருணைக் கொலை விலங்கு மருத்துவத் துறையில் சாதாரணமாகப் புழங்கும், செயல்பாட்டிலிருக்கும் ஒரு விடயம்."விலங்குகள் வேதனை அனுபவிப்பதையும் துன்புறுவதையும் தடுப்பேன்" என்று விலங்கு மருத்துவர்கள் பட்டம் பெறும் போதே சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.இந்த "துன்பத்திலிருந்து பாதுகாத்தல்" சில சமயங்களில் ஒரு விலங்கின் உயிரை வேதனை இல்லா வழிகளில் வழியனுப்பி வைப்பதால் மாத்திரமே சாத்தியப் படுகிறது. முதன் முதலாக நான் "கருணைக் கொலை" செய்த பாரிய கறவை மாட்டின் நினைவுச் சுவடு இன்னும் என்னுடன் இருக்கிறது. தொடை எலும்பு துண்டாக முறிந்து நடக்கமாட்டாமல் விழுந்து விட்ட பசு மாட்டை பாரவூர்தியை விட்டு இறக்காமலே ஒரு சக்தி வாய்ந்த மயக்க ஊசி போட்டுத் தூங்க வைத்த பின்னர் நச்சு ஊசியை நாளத்தில் ஏற்றிக் கொண்டு, இதயத் துடிப்பை ஸ்ரெதஸ்கோப்பினால் செவிமடுக்கின்றேன். இதயத் துடிப்பு முதலில் வேகமாகி, படபடத்துப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. அடுத்த ஐந்து நிமிடங்களில் இதயத் துடிப்பு இருந்த இடத்தில் மௌனம் குடியேறுகிறது. அந்த நிசப்தம் அடுத்த மூன்று நாட்களுக்கு என் இரவுத் தூக்கத்தை இல்லாமல் செய்து விடுகிறது.

டாக்டர் கெவார்க்கியனுக்குத் தூக்கப் பிரச்சினையெல்லாம் இருக்கவில்லை. 1980 இல், தான் "தற்கொலை பற்றி ஆலோசனை தரும் மருத்துவ நிபுணர்" என மிச்சிகன் மானிலப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார். பத்து ஆண்டுகள் கழித்து, உண்மையாகவே தனது கருணைக் கொலைச் சேவையை ஆரம்பிக்கிறார். 1990- 1998 காலப்பகுதியில், 130 பேரை-மரணிக்க விரும்பிய கடும் நோயாளிகளை- டாக்டர் கெவார்க்கியன் தனது கைப்பட உருவாக்கிய இயந்திரங்கள் மூலம் கருணைக் கொலை செய்துள்ளதாக அவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.இந்த இடத்தில் தான் கெவார்க்கியன் தன் பாதுகாப்புப் பற்றி எவ்வளவு கரிசனையோடு இருந்தார் என்பது தெளிவாகிறது. இவர் உருவாக்கிய மரண இயந்திரங்கள் டாக்டரினால் சாக விரும்பும் நோயாளிக்கு இணைக்கப் படும். நோயாளி தானே ஒரு ஆளியை இயக்கி கொல்லும் மருந்துகளை தனக்குத் தானே செலுத்திக் கொள்வார். இதனால், கெவார்க்கியன் மீது கொலை வழக்குகள் போடப்பட்டாலும் அவரை எந்தச் சட்டத்தின் கீழும் தண்டிக்க இயலவில்லை. ஆனாலும் கெவார்க்கியனின் மருத்துவத் தொழில் அனுமதியை அமெரிக்க அரசு ரத்துச் செய்து அவர் மேலும் நோயாளிளை அணுக முடியாதவாறு செய்தது.

சட்டத்தின் கையிலிருந்து நழுவி வந்த கெவார்க்கியனுக்கு ஆப்பு தோமஸ் யூக் என்ற ஒரு மரணிக்க விரும்பிய நோயாளியின் வடிவில் வந்தது.1998 இல், கெவார்க்கியனின் மரண இயந்திரத்தைக் கூட இயக்க முடியாத நிலையில் இருந்த தோமஸ் யூக்கிற்கு கெவார்க்கியன் தன் கையாலேயே மரண ஊசியை ஏற்றுகிறார். இன்னொரு படி மேலே சென்று இந்தக் கருணைக் கொலையை ஒளிப்பதிவாக்கி அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பவும் அனுமதிக்கிறார். லைசென்ஸ் ரத்து செய்யப் பட்ட ஒரு மருத்துவர் ஆட்களைக் கொல்லக் கூடிய மயக்க மருந்துகளை வைத்திருப்பது குற்றம். மேலும், இங்கே கெவார்க்கியனே ஊசியை ஏற்றியதால் "மனிதக் கொலை" குற்றச் சாட்டு சுமத்தப் பட்டு சிறையில் இடப்படுகிறார்.

எட்டு வருடங்கள் கழித்து 2007 இல் கெவார்க்கியன் விடுப்பில் வெளியே வந்த போது, அவர் மேற்கொண்டு கருணைக் கொலை பற்றிப் பேசக் கூடாது என்பது உட்பட பல நிபந்தனைகளுடன் தான் வெளியே விடப் படுகிறார். ஆனால், இடையிடையே கிடைக்கும் பேட்டிச் சந்தர்ப்பங்களில் கருணைக் கொலையை சட்ட பூர்வமாக்க உழைக்கப் போவதாகச் சொல்லி வந்தார். 2010 ஏப்பிரலில், "You Don't Know Jack" என்ற பெயரில் கெவார்க்கியன் விசிறிகளால் தயாரிக்கப் பட்ட படம் பிரபல ஹொலிவுட் நடிகர் அல் பசினோ வின் நடிப்பில் வெளிவந்தது. இந்தப் படத்தில் கெவார்க்கியன் வேடமேற்று நடித்த அல் பசினோவுக்கு எம்மி விருது கூடக் கிடைத்தது. திரைப் படத்தில் கெவார்க்கியனை தன்னலம் பார்க்காமல் தன் நோயாளிகளின் வலி போக்கத் துடிக்கும் "மகாத்மா" வாகக் காட்டியிருந்தார்கள்.

ஆனால், நிஜத்தில் மனித வாழ்க்கை பற்றிய கெவார்க்கியனின் கருத்துக்கள் மிகவும் இருண்ட ஒரு ஆன்மாவுடைய மனிதராக இருந்திருப்பார் என்று எண்ண வைக்கிறது. சி.என்.என் மருத்துவ நிருபர் டாக்டர் சஞ்ஜெய் குப்தா ஒரு கெவார்க்கியனுடனான பேட்டியில் கேட்கிறார்: "ஒரு மனிதன் வெறுமனே உயிருடன் இருக்கக் கூடாதா? அந்த உயிருக்கு ஒரு அர்த்தமும் இல்லையா?" கெவார்க்கியன் "இல்லை" என்கிறார். எங்கள் பிறப்பை நாங்கள் தேர்ந்து கொள்ளாத போது, இந்த உயிருக்கு ஆன்மீகப் பெறுமதி எதுவும் கிடையாது என்கிறார். கெவார்க்கியன் விவகாரத்தில் ஒரு விஷயம் எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது. பல ஆண்டுகளாக ஈரல் அழற்சி மற்றும் ஈரல் புற்று நோயால் கெவார்க்கியன் அவதிப்பட்டதாக இப்போது தெரிய வந்திருக்கிறது. எல்லோரையும் வேதனையிலிருந்து விடுவித்த கெவார்க்கியனுக்கு தன் உயிரை நோக்கி தன் மரண இயந்திரங்களைத் திருப்ப இயலாமல் தடுத்தது எது? சொந்த வாழ்வின் மேலான பற்றுதலா அல்லது மரணபயமா?

-ஜஸ்டின்

தகவல்கள்: பல்வேறு இணைய/ஊடகத் செய்திகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கடினமான ஒரு தலைப்பை ஆழ்ந்து ஆராய்ந்து, அழகிய தமிழில் தந்திருக்கின்றீர்கள் ஜஸ்டின்!

அவுஸ்திரேலியாவிலும் இது சம்பந்தமான விவாதங்கள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில், இரண்டு விடயங்களை முக்கியமானதாக நான் கருதுகின்றேன்.

ஒரு மனிதனுக்குள் வாழும் உயிர் என்று நாங்கள் கூறுவது, வெறும் சடப் பொருளல்ல! அதைப் பற்றிய போதிய அறிவும் எமக்கு இல்லை.எல்லா மதங்களிலும் 'கொல்லாமை' மிகவும் அடிப்படையானது. ஒரு உயிரை அழிக்கும் உரிமை ஒருவருக்கும் கிடையாது.

இரண்டாவது 'கருணைச் சாவு' தேவை என்பதைத் தீர்மானிப்பது யார் என்ற கேள்வி. மருத்துவர்களோ அல்லது நீதிபதிகளோ இதற்குத் தகுதியானவர்கள் அல்ல.மருத்துவர்களால், பிழைக்க முடியாது எனச் சான்றிதழ் கொடுக்கப் பட்ட பலர் நீண்ட காலம் உயிரோடும், ஆரோக்கியத்தோடும் வாழ்ந்திருக்கின்றார்கள்! ஏற்கனவே பண மயமாக்கப் பட்ட இந்த உலகில், உற்பத்தி திறன் இல்லாத முதியவர்கள், நோயாளிகள் போன்றவர்கள் தேவையற்றவர்கள் ஆகவே பார்க்கப் படுவார்கள்! முட்டையிட்டுக் களைத்துவிட்ட கோழிகளை இறைச்சிக்கு வந்த விலைக்கு விற்பது போலவே, இவர்களும் 'கருணைச் சாவு' முறையில் கொல்லப் பட நியாயப் படுத்தப் படுவார்கள்! இதே காரணங்களுக்காகவே 'மிருக வைத்தியர்கள் அதனைச் செய்கின்றார்கள்!

கடைசியாக என்னைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது தான்!

மிருக நிலையில் இருந்து மனிதன் உண்மையில் நாகரீகமடைந்து விட்டானா? அல்லது 'மிருகம்' அவனுக்குள்ளே இன்னும் மறைந்து இருந்து கொண்டு, சில தடவைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றதா? என்பதே!

Edited by Punkayooran

மிகச் சரி புங்கையூரான்!

  • கருத்துக்கள உறவுகள்

இவரை மாதிரி லண்டனில் ஒரு மருத்துவர் வயோதிபர்களை கருணைக் கொலை செய்தார்[பெயர் மறந்து விட்டது]...கதைக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக என்னைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது தான்!

மிருக நிலையில் இருந்து மனிதன் உண்மையில் நாகரீகமடைந்து விட்டானா? அல்லது 'மிருகம்' அவனுக்குள்ளே இன்னும் மறைந்து இருந்து கொண்டு, சில தடவைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றதா? என்பதே!

நல்ல கேள்வி தான் புங்கையூரான். இரண்டு விதமான பதில்கள் இருக்கின்றன இக்கேள்விக்கு:

1. மனிதன் அடிப்படையில் "தப்பி வாழ்தலுக்கு" இசைவாக்கம் பெறும் ஒரு மிருகம் என்கின்றனர் சிலர். இதனால், சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி மனிதனின் மிருக குணம்/வன்முறை போன்றன வெவ்வேறு அளவுகளில் வெளிப்படும் என்கிறார்கள். பிலிப் சிம்பார்டோ (Philip Zimbardo) என்ற ஆராய்ச்சியாளர் "ஸ்ரான்போர்ட் சிறை ஆராய்ச்சி" (Stanford Prison Experiment) என்ற ஒரு பாரிய ஆய்வை பகுதியளவில் செய்து "Lucifer Effect" என்ற ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார். நேரம் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள். இவர் போன்றவர்கள் மனிதனின் இருண்ட பக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தரப்பினர்.

2. மனிதனின் நரம்பியல் (மனித மூளையின் மூளையம், அமிக்டலா போன்ற பகுதிகள்) மற்றும் உளவியல் கூர்ப்புக் காரணமாக மனிதன் சூழலின் கைதியாக இருக்கும் நிலை இயற்கையாக இப்போது இல்லை என்கின்றனர் இன்னொரு சாரார். நான் இந்தக் கட்சியின் ஆதரவாளன். இது தொடர்பான பதிவொன்றை நேரம் கிடைக்கும் போது எழுத முயற்சிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சில பதிவுகள் வாசித்தவுடன் முளைக்கு அளர்ச்சியைக் கொடுக்கும் சில புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இப்பதிவு ஒரு நல்ல ஆக்கத்தைப் படித்ததான திருப்தியைக் கொடுத்தது. நன்றி ஜஸ்டின்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.