Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜா,கனிமொழி,தயாநிதி... திமுக இழந்தது ஆட்சி மட்டுமல்ல, அசைக்கமுடியாத இமேஜையும்தான்.

Featured Replies

குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் சந்திக்கிறது'' - 'மனோகரா’ படத்துக்காக கருணாநிதியின் பேனா தீட்டிய அதே வசனத்தை, இப்போது கோபாலபுரம், பாட்டியாலா கோர்ட், சி.ஐ.டி. காலனி வீடு, திஹார் ஜெயில் காட்சிகள் நினைவூட்டுகின்றன!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுப் புகார் படிப்படி யாக முன்னேறி, கனிமொழி வரையில் சிறைக் கதவுகள் திறந்துகொண்டபோது, தி.மு.க. தொண்டன் துடித்தான். அடுத்தபடியாக, தயாநிதி மாறனை மையம்கொண்டு 'தெகல்ஹா' இதழ் கிளப்பிய புயல் வேகம் பெறும் நேரம் இது!

படிப்படியாக திசை மாறி மையம் கொள்ளும் இந்தப் புயலை, ஒரே கட்சியின் வெவ்வேறு முகாம்களில் இருப்பவர்கள் பரஸ்பரம் ரசிக்கும் விதத்தை சாதாரண கோஷ்டி அரசியலாகவோ, குடும்ப அரசியலாகவோ மட்டுமே சொல்லிவிட முடியாது. சரித்திரத் தேர்ச்சிகொண்டவர்கள் இதை 'யதுகுல’ மோதல் போன்றது என்றே வர்ணிக்கிறார்கள்.

பாண்டுவும் திருதராஷ்டிரனும் பெற்ற பிள்ளைகளுக்கு இடையே அரங்கேறிய சகோதரச் சண்டையே... மகாபாரதம். இறுதியில் காந்தாரியின் கோபம் எல்லாம் கிருஷ்ணனின் பக்கம் திரும்பியதாகவும்... 'சூழ்ச்சியால் நீ என் குலத்தை அழித்தாய்... கிருஷ்ணா, உன் குலமும் தமக்குள் அடித்துக்கொண்டு அழியும்’ எனச் சாபம் கொடுத்ததாகவும்... இதனால், மதுராவை ஆண்ட கடைசி மன்னனாக கிருஷ்ணனே ஆனதாகவும் கிளைக் கதைகள் உண்டு!

அப்படி ஒரு நெடுங்கதையின் கிளைக் கதையாகவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் சொல்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.

அசைக்க முடியாத ஆளும் கட்சியாய் கோலோச்சி வந்த தி.மு.க, இன்று இழந்திருப்பது அரியாசனத்தை மட்டும் அல்ல... தன் கட்சி யின் ஒட்டுமொத்த இமேஜையும்!

2007 மே 9... தி.மு.க-வில் கருணாநிதிக்கு அடுத்ததாக யாருக்குச் செல்வாக்கு? என்ற கருத்துக் கணிப்பை, 'தினகரன்’ நாளிதழ் கணித்துச் சொன்னது. 74 சதவிகித செல்வாக்கு ஸ்டாலினுக்கும் அழகிரிக்கு 2 சதவிகிதமும் கனிமொழிக்கு 1 சதவிகிதமும் என்றது அந்த சர்வே முடிவு. இதுபோக... மீதி உள்ள சதவிகித எண்ணிக்கை 'மற்றவர்கள்' என்றும் சொன்னது. ''அண்ணன் - தம்பி சண்டையை மூட்டுவது மட்டும் அல்ல இதன் நோக்கம்... அந்த 'மற்றவர்கள்' என்பது தயாநிதி மாறனை மனதில்கொண்டுதான்'' என்று அறிவாலயத்திலும் மதுரையிலும் கொதிப்பு கிளம்பியது.

அந்தக் கணிப்பை ஸ்டாலின் ரசித்தார். அழகிரி வெறுத்தார். கனிமொழியின் நலம் விரும்பிகளும் எரிச்சலானார்கள். இதன் தொடர்ச்சியாக, மதுரை யில் நாளிதழின் அலுவலகம் அடித்து நொறுக்கப் பட்டு கொளுத்தப்பட்டது. மூன்று உயிர்கள் பலியாகின. அன்றைக்கு தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அன்றைய உள்துறைச் செயலாளர் மாலதிக்கு போன் செய்து மிரட்டியதாக மின்சாரத் துறை அமைச் சர் ஆற்காடு வீராசாமியே பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ''மதுரையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடக்கிறது. நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டதாக ஆற்காடு வீராசாமி சொன்னார். மகனுக்கும் பேரனுக்குமான மோதலில், மகன் பக்கம் கருணாநிதி நின்றார். மே 13-ம் தேதி தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய... கோபாலபுர மெகா பாரதம் வேகம் கண்டது!

முரசொலிமாறன் மறைவுக்குப் பிறகு டெல்லி விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள அவரது குடும்பத்துக்குள் இருந்தே வாரிசை அழைத்து வந்தவர் கருணாநிதிதான். ''தயாநிதி மாறன் தேர்தலில் நிற்கப்போகிறாரா?'' என்று அதற்கு முன் ஆனந்த விகடனுக்கான தனிப் பேட்டியில் கருணாநிதியிடம் கேட்டபோது, ''இல்லை! அண்ணன் கலாநிதியை விட்டுவிட்டு தம்பியை ஏன் கேட்கிறீர்கள்?'' என்று திருப்பிக் கேட்டார் கருணாநிதி. அவரே, பிறகு தயாநிதியை மத்திய சென்னை எம்.பி. ஆக்கினார். அமைச்சரும் ஆக்கினார். அதுவும் கேபினெட் அந்தஸ்து வாங்கிக் கொடுத்தார். அதற்கு விமர்சனங்கள் வந்தபோது வக்காலத்தும் வாங்கினார். ''தயாநிதி அரசியலுக்கு வருவார். இப்படி வளர்வார் என்று நான் எதிர்பார்க்கலே. அவர் ஜூனியர்தான். ஆனால், பார்ப்பனக் குஞ்சாக இருந்தால், திருஞான சம்பந்தன் என்று பாராட்டி இருப்பார்கள். இவன் சூத்திரனுக்குப் பேரன்தானே'' என்பது கருணாநிதி தந்த வாசகங்கள். ஆனால், அது மதுரைச் சம்பவத்துக்குப் பிறகு மொத்தமாகத் திசை மாறிப் போனது.

தயாநிதி கவனித்து வந்த டெல்லி காரியங்களை இனி யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்வி எழுந்தபோது, ''நம்பிக்கையாக இருக்கணும். இங்கிலீஷ் நல்லாத் தெரியணும். தங்கச்சி கனி இருக்குதே...'’ என்று மு.க.அழகிரிதான் அப்போது எடுத்துக் கொடுத்தார் என்பார்கள். அந்தச் சமயத்தில், ''கனிமொழிக்கு ஏதாவது பதவி கொடுப்பீர்களா?'' என்று கேட்கப்பட்டது. ''காய், கனி ஆகும்போது பார்க்கலாம்'' என்றது மு.க-வின் வாய்ஜாலம். அடுத்த சில வாரங்களில் கனிமொழி மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனார். தயாநிதி வகித்து வந்த அதே தொலைத்தொடர்புத் துறை, ஆ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ராசாவுக்கும் தயாநிதிக்கும் இடையே ஓர் அறிக்கைப் போர் நடந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத் துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக தயாநிதி மீது ஆ.ராசா பகிரங்கமாகக் குற்றம் சாட்டி திகிலைக் கிளப்பினார். இன்று '2ஜி’ பற்றிப் பேசுபவர்கள்கூட இதை ஏனோ மறந்துவிட்டார்கள்!

இன்று விஸ்வரூபம் எடுத்து தி.மு.க. குடும்பத்தின் ஒவ்வொரு தலையாகக் கபளீகரம் செய்துவரும் ஸ்பெக்ட்ரம் தொடர்பான அசிங்கங்கள் மெள்ள மெள்ள மீடியாவின் வாசலுக்கு வரத் துவங்கியதும், அந்தக் குடும்ப மோதலுக்குப் பிறகுதான்!

'மீடியாவை வைத்துக்கொண்டுதானே அதிகாரம் செலுத்துகிறார் தயாநிதி. அதையே நாமும் செய்தால் என்ன?’ என்று அழகிரி தரப்பு யோசித்தது. அதன் பிறகுதான் 'கலைஞர் டி.வி.’ உதயம் ஆனது. சுமங்கலி கேபிளுக்குப் பதிலாக இவர்கள் ராயல் கேபிளைத் தொடங்கினார்கள். அதாவது, தயாநிதி மாறனின் இரண்டு பலங் களைப் பலவீனப்படுத்தத் தொடங்கினார்கள்!

டெல்லி குருஷேத்திரத்தைக் களமாக்கி, தி.மு.க. குடும்பம் இரண்டு அணிகளாக நடத்திக்கொண்ட அந்த 'நவீன பாரத' யுத்தத்தில் சூழ்ச்சிகளுக்கு எந்தத் தரப்பிலுமே பஞ்சம் இல்லை. நஷ்டங்களும் அப்படியே!

2008 செப்டம்பர், அக்டோபரில் ஸ்பெக்ட்ரம் டெண்டர்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. அடுத்த மாதமே, இது மீடியாக்களில் வெளியானது. நவம்பர் 3-ம் தேதி யுனிடெக் நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திராவிடம் டெலிபோனில் பேசிய நீரா ராடியா, ''மீடியாக்கள் இந்த விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டன. இது சன் டி.வி, ஜெயா டி.வி-யில் வருகிறது. ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துகொடுத்து, ஆ.ராசா பயன் அடைந்ததாக அவை சொல்கின்றன. ஜெயா டி.வி-யாவது அ.தி.மு.க-வைச் சேர்ந்தது. ஆனால், சன் டி.வி. மாறன் குரூப்பைச் சேர்ந்தது'' என்று குழப்பம் அடைந்தவராகப் பேசுகிறார். அதாவது, 'தனது பதவியைப் பறித்த தி.மு.க-வைப் பழிவாங்கவே, இந்தச் செய்திகளை தயாநிதி மாறன் லீக் செய்தாரோ’ என்ற அர்த்தத்தில் நீரா ராடியாவின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது.

மோதலை முடித்துக்கொள்ள இரு தரப்பிலும் மாறி மாறிப் பேச்சுவார்த்தைகள் நடந்து, வெளியி லும் உள்ளேயுமாகப் பல உடன்பாடுகள் ஏற்பட்டு, எல்லோரும் கூடிச் சிரித்து, 'கண்கள் பனிக்க... இதயம் இனிக்க' புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாலும், மோதல் நெருப்பின் கங்குகள் அணையாமல் உள்ளே கனன்றுகொண்டேதான் இருந்தன.

அது மட்டுமா... நெஞ்சம் இனித்த அந்த தினத் தன்று இரு தரப்பினரும் உள்ளே நுழைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் ஒரு விஷயம் நடந்ததாகச் செய்திகள் உண்டு. சமாதான அறிவிப்பு ஸ்தலமான கோபாலபுரத்தில் இருந்து ராஜாத்தி அம்மாளுக்கு போன் செய்த கருணாநிதி, ''அவங்க எல்லாரும் தனியாப் பேசி ஒண்ணு சேர்ந்துட்டாங்க. இது எதுவுமே எனக்குத் தெரியாது!'' என்றாராம். அதாவது, மாறன் சகோதரர்கள் மறுபடி கோபால புரத்துடன் உடன்பாடு கண்டதை சி.ஐ.டி. காலனி ரசிக்கவில்லை!

''தயாநிதி மாறன் மட்டும் அல்ல... அவரை ஆதரிப்பவர்களும் எனக்கு எதிரிகள்தான்'' என்று சொன்ன அழகிரியும், ''நான் என்ன தவறு செய்தேன்? அவரைப்போல் போட்டி வேட்பாளரை நிறுத்தி முன்னாள் சபாநாயகரைத் தோற்கடித்தேனா?'' என்று கேட்ட தயாநிதியும்... கை குலுக்கிக்கொண்டார்கள். ''நீதான் இங்கிலீஷ் நல்லாப் பேசுவியே!'' என்று அழகிரியால் ஆசீர்வாதம் செய்து அழைத்து வரப் பட்ட கனிமொழி, மீண்டும் தனித்துவிடப்பட்டார்.

ஸ்பெக்ட்ரம் புகாரோ, எதிர்க் கட்சிகள் மற்றும் ஊடகங்களால் பலமான அலைவரிசையில் போட்டுத் தாக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் டெல்லி சென்ற கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் பற்றிக் கேட்கப்பட்டது. ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிக்கப்பட்டுவிட்டது'' என்றார் அவர். கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் ஒன்றிணை வதால், ஸ்பெக்ட்ரம் விவகாரம் எப்படி முடிக்கப்பட்டுவிடும்?

தொடர்ந்து நடந்ததை நாடு அறியும்!

ஆ.ராசா, கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்தது... தயாளு அம்மாள் கை விலங்கில் இருந்து தப்பினார். ''அந்தக் குடும்பத்துல எல்லாரும் தப்பிட்டாங்க. கனிமொழி மட்டும் என்ன பாவம் செய்தார்? தயாநிதிதான் இது எல்லாத்துக்கும் காரணம்'' என்று சி.ஐ.டி. காலனியில் சோகமும் சீறலுமாகக் கேள்வி ஒலித்தது. இப்போது 'தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் வாக்குமூலம்' என்று புதிய புயல் வீசும் நிலையில், தி.மு.க. தரப்பு கவனமாக அமைதி காத்துக்கொண்டு இருக்கிறது - அடுத்து நடப்பதை எதிர் நோக்கி!

அலைக்கற்றை விவகாரம் ஆ.ராசா காலத்தில் இருந்து ஆரம்பமான விஷயம் அல்ல. தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த நேரத்திலும் சில முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று 'தெகல்ஹா’ சொல்ல... அவருடைய பதவி, சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையை எதிர்நோக்கித் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. 'குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படுவதாலேயே ராசா குற்றவாளி ஆகிவிட மாட்டார்’ என்று வக்காலத்து வாங்கிய கருணாநிதி, ''தயாநிதி தனது பிரச்னைகளைத் தானே பார்த்துக் கொள்வார்'' என்று சொன்னதன் உள் அர்த்தம் அந்தக் கனல் ஆறவில்லை என்பதையே காட்டுகிறது.

''ஆ.ராசா, கனிமொழி கைதுக்குக் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று சொல்லும் ஒரு தரப்பு தி.மு.க-வினர், ''நாளைக்கு தயாநிதி மாறனுக்குச் சிக்கல் வலுத்தால் அதற்கு ஆ.ராசாவும் கனிமொழி யும்தான் காரணமாக இருப்பார்கள்'’ என்றும் சொல்லத் தவறவில்லை!

கருணாநிதியை, அவர் குடும்பத்து உட்பகையே உறக்கம் இல்லாமல் செய்துவிட்டது. இதில் இருந்து தப்பிக்க மந்திரக்கோல் எதுவும் இப்போதைக்கு அவர் கை வசம் இல்லை. அப்படி ஒன்று இருந்தாலும்... அது இரண்டாக உடைந்துபோனதாகவே சொல்லலாம்...

தயாவிடம் பாதியும்... கனியிடம் மீதியும்!

நன்றி விகடன்.காம்

இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க......

http://www.thedipaar.com/news/news.php?id=29683

  • கருத்துக்கள உறவுகள்

மொள்ள மாரி,முடிச்சுஅமுக்கி,நாதாரி , நாரைபயலுக,

இதெல்லாம் கிட்டதட்ட ஒரே மாதிரித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
homeattai1IOI.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இருட்டிலும் வெளிச்சத்தைக் காண இந்திய அரசியல் வாதிகளால் தான் முடியும்!

இணைப்புக்கு நன்றிகள் நுணா!

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி ஒரு கலியாணம் கட்டியிருந்தால்.... இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

கூழுக்கும் ஆசைப்பட்டு, மீசைக்கும் ஆசைப் பட்டால்.... இது தான் நடக்கும்.

அனுபவி ராஜா... அனுபவி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.