Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டுமழைக்குள்ளிருந்து... (நினைவேட்டின் அழிக்கமுடியாத பக்கங்கள்)

Featured Replies

குண்டுமழைக்குள்ளிருந்து... (நினைவேட்டின் அழிக்கமுடியாத பக்கங்கள்)

வழங்கியவர் - எஸ்.பி.ஜெ.கேதரன்

சொந்தங்களே...

இறுதி யுத்தகாலப்பகுதியில் என்னைச்சூழ நடந்தவற்றை அப்படியே மற்றவர்களும் அறியும்படி எழுதவேண்டுமென்று எனக்கிருந்த நோக்கத்தின் பயனாக நான் கொஞ்சம் எழுதியிருக்கிறேன் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேனல்லவா.அப்படி எழுதியதுவும்,எழுதப்போவதுவும் உங்களால் பொறுமையாகப் படிக்க முடிகிறதா? அல்லது உங்களது நிதானத்தை சோதிக்கிறதா? தொடர்ந்து எழுதலாமா? எழுதியதை அப்படியே நிறுத்திவிடவா? என்ற கேள்விகள் மனதில் எழுந்ததன் விளைவாக...

நான் எழுதியவற்றிலிருந்து ஒரு பகுதியை மட்டும் இந்தப்பதிவினூடாக உங்களுடன் பகிர்ந்து,உங்கள் கருத்தையறியலாமென்று நினைத்தேன்.இந்தப் பகுதி அடுத்த பதிவில் நிறைவுறும்.ஆனால்,உங்களின் கருத்தைப் பொறுத்துதான் நான் எழுதியவை அனைத்தையும் பகிர்ந்துகொள்ளவா வேண்டாமா என்ற முடிவுக்கு நான் வரமுடியும்.

ஆகவே இதற்கான விடையை உங்களிடமிருந்தே எதிர்பார்க்கிறேன்.

இந்தப்பகுதிக்கு இந்த முன்னுரை போதும்.தொடர்ச்சியாக வெளியிடுவதாக இருந்தால் மேலதிக விளக்கங்களுடன் முழுமையான யுத்த அழிவுகளின் அனுபவங்களோடு மீண்டும் சந்திப்பேன்.

-உங்கள் "நான்"

***********************************************************************

2009/04/21

செவ்வாய்க்கிழமை.

வ்வொரு நாட்களையும்போலவே பொழுது விடியத்தொடங்கியது-பயந்து பயந்து.ஆனாலும்,அன்றையநாள் வழமையைவிட இன்னும் கொஞ்சம் துக்கமும் ரத்தமும் தோய்ந்தநாள்.20ஆம் திகதி அதிகாலையில் இரணைப்பாலையிலிருந்து கடல்நீரேரி வழியாக ஊடறுத்து நுழைந்த ராணுவத்துக்கும் கடல்நீரேரியின் கரையிலிருந்த பாதுகாப்பு அணைப்பகுதியில் அல்லும்பகலும் காவல்நின்ற விடுதலைப்புலிகளுக்குமிடையில் இடம்பெற ஆரம்பித்த மோதல்களின் நடுவிலும்,ராணுவத்தின் கோழைத்தனமான எறிகணைவீச்சுக்களின் நடுவிலும் சிக்குண்ட ஆயிரக்கணக்கான உறவுகள் வயது வேறுபாடின்றி வீதி வீதியாக பிணங்களாய்க் கிடந்த அந்த 21 ஆம்திகதி விடியும்போது அமைதியாகத்தான் விடிந்தது.

Sri+Lanka+war.jpg

இரண்டுநாட்களாக இடம்பெற்ற உக்கிரமான எறிகணை,கொத்துக்குண்டு, கிபிர்விமானக்குண்டுவீச்சு,துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்களின் காரணமாக ஒரு விநாடிகூட வெளியே தலைநீட்டமுடியாதவர்களாக பசித்த வயிறுடன் வங்கருக்குள்ளேயே கிடந்த நாங்கள் 21ஆம் திகதி காலையில்தான் மெதுவாக வெளியே வந்து கொஞ்சநேரம் கால் கை நீட்டி அமர்ந்தோம்.அதுவும் வங்கருக்கு அருகிலேயேதான்.வங்கரைவிட்டு விலகினால்,திடீரென்று வரக்கூடிய குண்டுகளுக்குப் பலியாக நேரிடும்.

வங்கருக்குள்ளேயே கிடந்தாலும் வெளியே சுற்றிலும் நடைபெற்றுக்கொண்டிருந்த பயங்கரங்களையும் துயரங்களையும் காதிலே கேட்ட குண்டுச்சத்தங்களிலிருந்தும் புலிகளின் குரல் வானொலியினூடாகவும் நாம் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டுதானிருந்தோம்.

20ஆம்திகதி எதிர்பாராவிதமாக அதிகாலையிலேயே ஊடறுத்து உள்நுழைந்த ராணுவம் புதுமாத்தளன் பாடசாலைக்கட்டடத்தில் இயங்கிக்கொண்டிருந்த வைத்தியசாலையையும் சுற்றியிருந்த சில பகுதிகளையும் கைப்பற்றியிருந்தது.எதிர்பாராத இந்த உள்நுழைவால் சுற்றிவளைக்கப்பட்ட அந்தப்பகுதிப் பொதுமக்களும்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான காயம்பட்ட பொதுமக்களும்,மருத்துவமனையை சேர்ந்தவர்களும் மற்றும் காயப்பட்ட போராளிகளும் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

காயப்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின்-பிறபகுதிகளிலிருந்த உறவினர்கள் இச்செய்தியைக் கேள்வியுற்று மருத்துவமனைக்கு ஓடினர்.சில காயம்பட்டவர்கள் மருத்துவமனைப்பகுதியிலிருந்து வெளியேறி பிறபகுதிகளுக்கு ஓடினர்.இதனிடையே வேறு பகுதிகளிலிருந்து போராளிகளும் கடற்கரைவழியாக எதிர்த்தாக்குதலுக்கு வந்தார்கள்.புதிதாக போராளிகள் வருவதற்குள் பிரதேசத்தைக்கைப்பற்றிவிடவேண்டுமென்ற வெறியில் ராணுவம் பலபகுதிகளிலிருந்தும் மாத்தளன்,பொக்கணை,வலைஞர்மடம்.. போன்ற பிரதேசங்களை இலக்குவைத்து தனது உச்சக்கட்டமான தாக்குதல்களை முடுக்கிவிட்டது.ஆட்லறிகள்,கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள்,நச்சுக்குண்டுகள்,பல்குழல் எறிகணைகள் என்பன மட்டுமன்றி,கடல்வழியாகவும் வான்வழியாகவும் ஒரேநேரத்தில் கொலைவெறியாட்டம் ஆரம்பமானது.மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்குள்ளேயே நேரடிமோதல்களும் தவிர்க்கமுடியாதவையாக ஆரம்பித்துவிட்டபடியால் துப்பாக்கிக்குண்டுகளும் பொதுமக்களின் உயிர்களைப்பலியெடுக்கத்தொடங்கின.

இந்த நிலைமையிற்றான் முதற்பந்தியில் கூறியதுபோல பொதுமக்களும் அங்குமிங்குமாக தவறவிட்ட உறவுகளைத்தேடியென்று ஓட ஆரம்பித்தார்கள்.குண்டுமழை நடுவில் பரவி ஓட ஆரம்பித்தால் என்னாகும்? வீதியெங்கும் பிணக்காடாகியது.எரிகுண்டுகளிலகப்பட்டவர்கள் உயிரோடு எரிந்தார்கள்.துப்பாக்கிக்குண்டுகளிலகப்பட்டவர்கள் தலையோ நெஞ்சோ குண்டுக்கு இலக்காகி வீதி வீதியாகவும்,பெய்த மழையினால் சில இடங்களிலோடிய வெள்ளங்களிலும் செத்துவிழுந்தார்கள்.குழந்தையென்றோ பெரியவரென்றோ பேதமெல்லாம் இன்றி வன்னித்தமிழனின் இறைச்சி தெருத்தெருவாக சிதறிக்கிடந்தது.செத்துக்கிடந்த தாயின் மார்பில் சில பச்சைக்குழந்தைகள் பசியாறின.ரத்தத்துக்கும் பாலுக்கும் வித்தியாசமிருக்குமென்று அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாதல்லவா.அடுத்த குண்டுக்கு குழந்தையும் பலியாகியது.

செத்தவர்கள் போக,காயம்பட்டு காப்பாற்ற யாருமின்றி குற்றுயிரும் குலையுயிருமாக துடிதுடித்துக்கொண்டிருந்தனர் எத்தனையோ ஆயிரம்பேர்.

கையின்றி,காலின்றி,கண்ணின்றி,காதின்றி,மூக்கின்றி,கழுத்தறுபட்டு,தலையில் குண்டு துளைத்து,........ இப்படி வீதி வீதியாக விழுந்துகிடந்தவர்களின் அவலக்குரல் கடற்கரை அலைகளின் ஓசைக்கும் மேலாக எதிரொலித்துக்கொண்டிருந்தது.தமிழனின் ரத்தம் காட்டாறாக ஓடிக்கொண்டிருந்தது.

வங்கருக்குள் இருந்தவர்களென்றால் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனரா என்றால் அதுவும் இல்லை.கடற்கரைசார்ந்த பிரதேசமென்பதால் மணற்பாங்கான தரை.அந்தத்தரையில் வங்கர் வெட்டுவதென்றால் ஆழமாக வெட்டமுடியுமா?ஏதோ.. மனத்திருப்திக்கு முழங்காலளவில் குழிதோண்டி, அதைச்சுற்றி மண்மூட்டைகள் அடுக்கிவைத்துவிட்டு,குழிக்குள் இறங்கி இருந்தார்கள்.மண்மூட்டை கட்டுவதற்கு ஏற்ற பை கிடைக்காததால் கடைசி நேரத்தில் மக்கள் தமது புடவைகளை வெட்டி,பெரிய பை போன்று தைத்து,அதனுள் மண்ணைநிரப்பி,அதையே சுற்றியடுக்கி பாதுகாப்பைத் தேடிக்கொண்டனர்.ஆசைப்பட்டுத் தேடிய விலைமதிக்கமுடியாத புடவைகளெல்லாம் மண்மூட்டைகளாயின.வீடு முதற்கொண்டு சகலதையும் இழந்துவிட்ட அம்மக்களுக்கு புடவை மீதா ஆசைவரும்?

இப்படி அமைத்த வங்கருக்குள் பதுங்கியிருக்க,குண்டுவந்து சுற்றிசுற்றி விழ,ஆளாளுக்கு ஒவ்வொரு தெய்வத்தின் பெயரைக்கூறிப் புலம்பிக்கொண்டிருக்க,திடீரென்று ஒரு குண்டு வந்து அவர்களின் வங்கருக்குள்ளேயே விழ,அதிலிருந்த அனைத்து உயிர்களும் உடல் சிதறிப்பலியாயின.

சில இடங்களில் எரிகுண்டுகளோ நச்சுக்குண்டுகளோ வந்து வீழ்ந்து பச்சைக்குழந்தைகள் தொடக்கம் அனைவருமே உயிரோடு கருகியதும்,மூச்சுத்திணறிப்பலியானதுவும் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தன.போதாக்குறைக்கு வானவெளித்தாக்குதல்.

கிபிர்,மிக் விமானங்களிலிருந்து போடப்படும் குண்டுகள் பலவகை.அதிலொன்று "எயார்சொட்(AIR SHOT)" என்பார்கள்.அப்படியென்றால் காற்றிலே வெடிக்கும் குண்டு.அதாவது,தரையில் விழுந்தோ அல்லது ஏதாவது ஒன்றில் மோதியோ வெடிப்பதில்லை.தரையிலிருந்து ஒரு பத்து மீற்றர் உயரத்தில் வெடிக்கும்.வெடித்த குண்டுத்துகள்களெல்லாம் கீழ்நோக்கி சிதறும்.தப்பவே முடியாது.

அப்படியான தாக்குதல்களிலும் சிக்கி எத்தனையோபேர் பலியானார்கள்.

20ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2009 ஆம் ஆண்டு அந்தப்பிரதேசத்தில் நடைபெற்றதை மட்டும் கூறுவதாக இருந்தாலே அது பெரிய நாவலாகிவிடும்.

அந்த அளவுக்கு எங்கும் அவலக்குரல்களும் மாமிச சிதறல்களும்,ரத்த வெள்ளங்களுமே நிறைந்த ஒரு நாள் அது.

srilanka+war.jpg

ஒருவாறாக மாத்தளன் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்த ராணுவம் அங்கு அடைக்கலமாகியிருந்த மக்களனைவரையும் ஆடுமாடுகளைப்போல துரத்தி,தமது கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் அனுப்பினர்.கழுத்தளவு நீருக்குள் இறங்கியே செல்லவேண்டிய பாதையில் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரட்டப்பட்டனர்.அவ்வாறு ஒருபுறம் விரட்டப்பட்டுக்கொண்டிருக்க, மற்றொருபுறம் மோதல் உச்சக்கட்டமாக நடந்துகொண்டிருக்க,இலக்குத்தவறி வந்த தோட்டாக்களில் விரட்டப்பட்ட மக்கள் செத்துவிழுந்தார்கள்,காயமும் பட்டார்கள்.அவ்வாறு செத்தவர்களின் உடல்களை எட்டிக்கடந்துகொண்டு செத்தவரின் உறவுகள் ராணுவக்கட்டுப்பாட்டுக்குள் ஓடவைக்கப்பட்டார்கள்.இறந்த உறவின் உடலைக்கூட அடக்கம் செய்யமுடியாதவர்களாக ஓவென்று அழுதுகொண்டு அடிமைகளாக நடந்தார்கள் எம் ரத்தங்கள்.

அவசர அவசரமாக அடித்துவிரட்டப்பட்டதால் அந்த சன நெரிசலில் உயிரோடிருந்த உறவுகளையே எத்தனையோபேர் தவறவிட்டுவிட்டார்கள். தாயை,தந்தையை,சகோதரத்தை,மனைவியை,கணவனை,பெற்றபிள்ளையை... என தவறவிட்டவர்கள்கூட தவறிய சொந்தத்தைத் தேடிப்பார்ப்பதற்கு அவகாசம் மறுக்கப்பட்டது.அன்றே அந்தப் பிரதேசமக்களனைவரையும் சுற்றிவளைத்து,அந்தப்பகுதியையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டுமென்ற வெறி உச்சக்கட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தது. சொந்தங்கள் உயிரோடு தம் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்களா அல்லது குண்டுக்கு இலக்காகி வீதியிலேயே அநாதைப்பிணங்களாக விழுந்துவிட்டார்களா என்றே தெரியாதவர்களாக எத்தனையோபேர் நடைப்பிணங்கள்போல் ஓடிக்கொண்டிருந்தார்கள்-ஓடவைக்கப்பட்டார்கள்.

அன்றுதான் மகிந்தர் தனது படையினரின் ஆளில்லா விமானத்தின்மூலம் எடுத்த படங்களைப்பார்த்துவிட்டு-"மக்கள் எம்மை நாடி வந்துகொண்டிருக்கிறார்கள்,தொண்ணூறாயிரம்பேர் வந்துவிட்டார்கள்" என்று வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அறிக்கைவிட்டார்.நாம் வங்கருக்குள் இருந்து வானொலியில் இவற்றையெல்லாம் கேட்டபடி அடுத்தகணமும் உயிர்போகலாமென்ற நிலையில் ஆளையாள்ப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அம்மா ஏற்கெனவே இரணைப்பாலையில் இருந்தபொழுது காலிலும் கையிலும் காயப்பட்டு,நடக்கமுடியாத நிலையில்.எனக்கும் உடல்நிலை சரியில்லை.அப்பா என்ன செய்வார்.இரண்டுநாள்ப்பட்டினி.வெளியிலும் போகமுடியாது.அடுத்தகட்டம் என்ன நடக்குமோ... என்ற அச்சத்திலும், ஏற்கெனவே வங்கருக்குள் நின்ற மழைநீரின் குளிரிலும் உறைந்துபோய் அன்றுமுழுவதும் இருந்தோம்.பொழுதும் சூழ்ந்தது.மோதல்கள் நின்றபாடில்லை.ஒரு ஏழரை மணியிருக்கும்.சத்தங்கள் கொஞ்சம்கொஞ்சமாக குறையத்தொடங்கின.ஆனால் ஓரேயடியாக அமைதியாகிவிடவில்லை.திடீர்த்திடீரென்று குண்டுச்சத்தங்கள் கேட்டன.ஆனால் பகலில் நடந்த அளவுக்கு இல்லை.இருந்தாலும்,அன்றுநடந்த கொடுமைகளின்பிறகு எப்படி உறங்கமுடியும்.இரவுமுழுவதும் கண்விழித்தே இருந்தோம்-வங்கருக்குள்.

மீண்டும் செவ்வாய் அதிகாலையில் கொஞ்சநேரம் சத்தங்கள் பயங்கரநிலையை அடைந்தன.கொஞ்ச நேரத்தில் அடங்கிப்போனது.ஒரே நிசப்தம்.மயான அமைதி.

செவ்வாய்க்கிழமை வழக்கத்துக்குமாறான அமைதியுடன் விடிந்தது.ஒரு சத்தம்கூட இல்லை.மெதுவாக வெளியே ஏறி நின்று சுற்றுமுற்றும் பார்த்தோம்.நாம் இருந்த காணிக்குள் இருந்த நூற்றுக்கணக்கான குடும்பங்களில் நான்கைந்துகுடும்பத்தினர்தான் எம்மைப்போல வங்கரைவிட்டு வெளியே வந்து நின்று சுற்றிச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.காற்றிலே லேசாக ஏதோ ஒரு வாடை அடித்துக் கொண்டிருந்தது.

நூற்றுக்கணக்கான குடும்பங்களில் நான்கைந்து குடும்பத்தினர்தான் இருக்கிறார்கள்!மிகுதிப்பேர் எங்கே என ஆராய முற்பட்டபோதுதான் நான் அதைக்கண்டேன்.எங்கள் கொட்டிலுக்கும் பக்கத்துக்கொட்டிலுக்குமிடையில் ஒரு சிகரட் துண்டு.!அதோடு ஒரு பூட்ஸ் அடையாளம் ஈர மண்ணில் தெளிவாகப் பதிந்திருந்தது...!!!???

(அடுத்த பதிவில் தொடரும்.)

http://shuvadugal.blogspot.com/2011/12/blog-post_16.html

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு

தொடருங்கள்

பதிவாகவேண்டும். பதிந்தாகவேண்டும்.

"குழந்தையென்றோ பெரியவரென்றோ பேதமெல்லாம் இன்றி வன்னித்தமிழனின் இறைச்சி தெருத்தெருவாக சிதறிக்கிடந்தது.செத்துக்கிடந்த தாயின் மார்பில் சில பச்சைக்குழந்தைகள் பசியாறின.ரத்தத்துக்கும் பாலுக்கும் வித்தியாசமிருக்குமென்று அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாதல்லவா.அடுத்த குண்டுக்கு குழந்தையும் பலியாகியது."

இந்தக் குழந்தைகள் என்ன பாவம் செத்தார்கள்? ...... மனம் மிகவும் வலிக்கிறது.

உங்கள் தொடரைத் தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் இப்படியான உண்மைகள் தொடர்ந்து வெளியால் வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்க்கு..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இலக்கிய விற்பன்னர்களை இந்த பக்கம் காணவில்லை..............

சிங்கள சிறப்பு படையினரை பற்றி எதாவது தப்பாய் எழுதி இருப்பார்களோ?

(இவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பது குழந்தைக்கும் தெரியும் இதில இலக்கியம் படிக்கினம். முயல் பிடிக்கிற நாயை ............... அதே தெரியவில்லை அடுத்தவனின் புரிதலா தெயயபோகுது?)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.