Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கொல்லைபுறத்து காதலிகள்: முதல் கொழும்பு! முதல் ரயில்! முதல் பெண்!

Featured Replies

என் கொல்லைபுறத்து காதலிகள்: முதல் கொழும்பு! முதல் ரயில்! முதல் பெண்!

riots_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

தேதி : ஆகஸ்ட் 15, 1977

நேரம் : இரவு 9.00 மணி

இடம் : நுகேகொட

பக்கத்துவீட்டு செனவிரத்ன உள்ளே நுழைகிறார். வந்த வேகத்தில் அவசரமும் படபடப்பும். கால்கள் நடுங்குகின்றன. சிங்களத்தில் சொல்லும்போதே வாய் குழறுகிறது

சந்திரா … மோடயங்கள் ஒவ்வொரு தமிழர் வீடாய் வந்துகொண்டு இருக்கிறாங்கள். எல்லா இடமும் அடியும், கொள்ளையும். நீங்க உடனடியாக இந்த இடத்தை விட்டு போய் விடுங்கள்

எங்க போவம் செனவி? இங்க தானே பத்து வருஷமா இருக்கிறோம், இப்ப போகச்சொன்னா? போலீசில் போய் ஒரு என்ட்ரி போடுவோமே? ஓஐசியை எனக்கு தெரியும்

நோ யூஸ், நினைத்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. செய்வது எல்லாமே அரசாங்கத்து ஆட்கள் தான். நுகேகொட எம்பியின் மகன் தான் இந்த ஏரியா தமிழர்களை கொள்ளையடித்துக்கொண்டு வருகிறான். ஒன்று செய்யுங்கள். முக்கிய சாமான்களை கட்டுங்கள். எங்கள் வீட்டில் வைக்கலாம்.

பிள்ளைகள்?

சொறி சந்திரா, அது எங்களுக்கு ரிஸ்க், என் அண்ணன் ஒரு தமிழ் குடும்பத்தை டாய்லட்டில் ஒளித்து வைத்ததை கண்டுபிடித்து விட்டார்கள். அவன் வீட்டையும் சூறையாடி விட்டார்கள். ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சொறி சந்திரா

ஐ அண்டர்ஸ்டாண்ட் செனவி, சாமான்களை முதலில் மூவ் பண்ணலாம்

அவர்கள் அவசர அவசரமாக பெறுமதியான பொருட்களை பொதிப்படுத்தினர். சந்திராவின் மனைவி தாலிக்கொடியை தன் பாவாடை நாடாவோடு சேர்த்து செருகுகிறார். ஏனைய நகைகள் எல்லாவற்றையும் ஒரு கைப்பையில் போட்டுக்கொண்டு வீட்டு வாசலால் வெளியே வரும்போது தான்,

நுகேகொட எம்பி யின் மகனும் அவனின் தடியாட்கள் ஐம்பது பேரும் கையில் தடி பொல்லுகளுடன் திடுப் திடுப் என்று வீட்டு கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறார்கள்!

தேதி : ஜனவரி 7, 2012

நேரம் : மாலை 6.00 மணி

இடம் : மெல்பேர்ன்

77 கலவரத்தை அப்பாவும் அம்மாவும் லைவ் கவரேஜ் போல, அக்கு வேறு ஆணி வேறாக அந்த நூறு தடவைகளுக்கு மேல் சொல்லியிருப்பார்கள். அம்மாவிடம் இன்றைக்கும் கேட்டேன். சொல்லும்போது அதே கோபம். அறையில் ஒளிந்திருந்த அவரிடம் தான் நகை இருக்கும் என்று நினைத்த ஒரு சிங்கள காடையன், அவரை தர தர வென இழுக்க, இழுத்த இழுப்பில் ஒரு வயது கைக்குழந்தையான அக்கா மூலையில் போய் தொபுக்கடீர் என்று விழுந்து மண்டை உடைய, சோகம் என்னவென்றால் எங்கள் குடும்பத்தோடு சேர்ந்து செனவிரத்னவும் அன்று அடி வாங்கியது தான்.

என்ன, இண்டைக்கு இத தான் எழுதப்போறாய் போல, நல்லா எழுது, கொஞ்சம் கூட குறைக்காமல் அப்படியே எழுது. நாய்களுக்கு எப்பிடியும் உறைக்கவேணும்

அம்மா நான் தமிழில் தான் எழுதுறன், அவங்களுக்கு போய் சேராது

சேர்ந்தாலும் ஒன்றும் அவன் வெட்டி விழுத்தப்போறது இல்லை தான், பழையபடி இங்கிலீஷ்ல எழுது, எங்கட பிரச்சனையை மற்றவனுக்கு தான் எழுதோணும். எனக்கெழுதி என்ன பிரயோசனம்?

நான் ஜர்னலிஸ்ட் இல்லை. வெறும் எழுத்தாளன் தான் என்று சொல்ல வாயெடுத்தேன். சொல்லாமல், மீண்டும் என் கணணி அறைக்குள் நுழைந்து எழுத ஆரம்பிக்கிறேன். அவர்கள் மனதில் இருந்து இதை அழிக்கமுடியாது என்று புரிந்தது. ஆழமான ரணங்கள். அப்பா தான் இந்த சம்பவத்தை முதன் முதலில் சொன்னவர். ஞாபகம் வருகிறது.

Palai_thumb.jpg?imgmax=800

தேதி : ஏப்ரல் 4, 1990

நேரம் : இரவு 7.00 மணி

இடம் : ஆனையிறவு

கொக்குவில் ஸ்டேஷனில் ஏறியவுடனேயே “அப்பா பசிக்குது” என்று நான் சொல்ல, “ஆனையிறவு கடக்கட்டும், சாப்பிடலாம்” என்றார் அப்பா. அம்மா கட்டித்தந்த புட்டும் கோழி இறைச்சிக்கறியும் ரயிலின் பெட்டி முழுதும் மணம் வீசியது. வாழையிலையில் பார்சல் கட்டி சின்ன கரித்துண்டு ஒன்றையும் அம்மா சேர்த்து வைத்திருப்பார். கெட்ட ஆவிகள் அண்டாதாம். அது தான் என்னுடைய முதல் ரயில் பயணம். யாழ்தேவி பயணம். பத்து வயது. அடுத்த பத்து வருடங்களுக்கு மீண்டும் யாழ்தேவி ஏறும் சந்தர்ப்பம் கிடைக்காது என்று அப்போதே தெரிந்திருந்தால், பெட்டியின் படுக்கையில் அன்று ஏறித் தூங்கியே இருக்கமாட்டேன். கொழும்பு! என் கனவு தேசம். வீரகேசரியிலும் உதயனிலும் மட்டுமே பார்த்த உயர்ந்த கட்டிடங்களை எல்லாம் இதோ காலையில் பார்க்கப்போகிறேன். காலிமுகத்திடல் பார்க்கவேண்டும். புகழ்பெற்ற மியூசியத்தில் நயினாதீவு அம்பாள் கோயிலில் இருந்த சோழர் காலத்து கல்வெட்டை நானாவது வாசிக்கவேண்டும். பலர் வாசிக்க முயன்றும் முடியவில்லையாம். எனக்கு தெரியாத சோழர் தமிழா என்ன? எப்படியும் வாசித்துவிடுவேன்!

எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும் இல்லையா? அது இந்த வாரம் தான் வந்தது. இந்திய இராணுவத்திற்கு டாட்டா கொடுத்தாயிற்று. புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையே இப்போது இதயம் கனிந்த, கண்கள் பனித்த தேனிலவு காலம். ரயில் மீண்டும் ஓட ஆரம்பித்துவிட்டது. கட கட கட கிரீச் கிரீச் கிரீச்.

images_thumb.jpg?imgmax=800அப்பா ஓய்வுபெற்ற அரசாங்க சேவையாளர். ரயிலில் அரசாங்க சேவையாளர் குடும்பங்கள் போவதற்கும் வாரண்ட் இருந்தது. வருடத்துக்கு இரண்டு முறை இலவச பெர்த் பயணம். படுக்கையறை கொண்ட பெர்த் கம்பார்ட்மென்ட். ரயிலில் கூட படுக்கையா? என்னால் பார்க்கும் வரை நம்பவே முடியவில்லை. எங்கள் வீட்டில் இருந்து கோண்டாவில் ஸ்டேஷனுக்கு டாக்ஸி பிடித்து போனோம். ரயில் பெட்டியில் நான்கு படுக்கைகள். ஒரு பக்கம் இரண்டு படுக்கைகள். மற்ற பக்கம் இரண்டு. கழிப்பறை ஒன்று. அதற்கு இரண்டு கதவுகள். இரண்டு பெட்டிகளுக்கு பொதுவாக ஒரே கழிப்பறை தான். யன்னல் ஓரம் ஏறி உட்கார்ந்தேன். இருண்டு விட்டதால், கோயில் வெளிச்சங்களும், யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் வந்திருந்த லக்சபான மின்சாரமும் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தன. யன்னலை மெதுவாக திறந்து வைத்து யாழ்ப்பாணத்து ஊதல் காற்றை முகத்தில் அடிக்கவிட்டவாறே யாழ்தேவி பயணம். அதிர்ஷ்டக்காரன் நான். நாவற்குழி பாலம் கடக்கும் போது, தூரத்தில் சைக்கிள்கள் மெதுவாக டைனமோ வெளிச்சத்தில் ஊர்ந்துகொண்டு இருந்தன. பாவம்! ரயிலில் எல்லாம் படுக்கை வசதி இருக்கும் என்றெல்லாம் கூட தெரியுமோ என்னவோ? சைக்கிள் மிதித்துகொண்டு போகிறார்கள். கொழும்பை பேப்பரில் மட்டுமே கேள்விப்பட்டு இருப்பார்கள். நான் நாளைக்கே நேரில் பார்க்கப்போகிறேன். பெருமையாக இருந்தது. அப்பாவிடம் திரும்பினேன்.

“ஏன் அப்பா நாங்க திடீரென்று கொழும்பு போறம்?

“ஓ இப்ப தான் கேட்கிறியா?”

“ஜூவுக்கு கூட்டிக்கொண்டு போவீங்களா?”

“போவம்டா, எங்கட கொழும்பு வீட்டுக்கு பக்கத்தில தான் இருக்கு”

“கொழும்பில எங்களுக்கு வீடு இருக்கா?”

“இருந்துது…”

“இருந்துதா? அப்ப இப்ப இல்லையா?”

“துரத்தீட்டாங்கள், 77ல தடி பொல்லுகளோட வந்து, அம்மாவை அடிச்சு, அக்காவை தூக்கி எறிஞ்சு, மோட்டர் சைக்கிள எரிச்சி. சேர்த்து வச்ச நகை எல்லாம் போச்சுடா, பத்து வருஷ வாழ்க்கை, ஒரு உரைப்பையோட தான் யாழ்ப்பாணம் வந்தம்

“சாரிப்பா, நான் எல்லாத்தையும் மறந்திட்டன்”

“நீ அப்ப பிறக்கவே இல்லையடா!”

அப்பா சிரித்துக்கொண்டே அந்த சம்பவத்தை விலாவாரியாக சொல்லத்தொடங்கினார். நான் புட்டை குழைத்து சாப்பிட தொடங்கினேன். கதை நீண்டது. யாழ்ப்பாணம் ஓடி வந்தது. விசாரணை கமிஷன் நடந்தது. யாழ்தேவி மாங்குளத்தில் நின்ற போது அப்பா கொழும்பில் விசாரணை கமிஷன் முன் சாட்சி சொல்கிறார். அறுபத்துமூவாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கசொல்லி தீர்ப்பாம்

“ஜே ஆர், கள்ளன் ஒரு சதம் கூட தராமல் ஏமாற்றிவிட்டான்”

என்று அப்பா சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அயர்ச்சியாய் இருந்தது. தூங்கிவிட்டேன்.

தேதி : ஏப்ரல் 5, 1990

நேரம் : காலை 6.00 மணி

இடம் : புறக்கோட்டை ரயில் நிலையம், கொழும்பு

கொழும்பு ஆச்சரியப்படுத்தியது. வான் பார்க்கும் கட்டிடங்கள். சாரை சாரையாய் பஸ்கள். எல்லோரிடமும் ஒருவித பதட்டம். ஒரு கலவர அவசரம் எப்போதுமே இருக்குமோ? காலிவீதி பஸ்சில் ஏறினோம். “கொடேஹெனா, கொல்லுப்பிட்டிய, வெள்ளவத்த, பம்பலப்பிட்டிய, தெகிவள, கால, கால கால” என்று ஏதோ ஒரு வரிசையில் பஸ் கண்டக்டர்கள் கூவியதை, அடுத்த பத்து ஆண்டுகளாக தப்பு தப்பாய் சொல்லிக்கொண்டு திரிந்தேன். நாங்கள் போகவேண்டிய இடம் பம்பலப்பிட்டியவில் இருக்கும், GSA என்று அழைக்கப்படும் Government Surveyors Association விடுதி தான். அங்கே இறங்கும் போது, அப்பா பசிக்கிறது என்றேன். பக்கத்தில் இருந்த சாம் சாம் என்ற முஸ்லிம் ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றார். அரைக்கோழியை ரோஸ்ட் செய்து கண்ணாடிப்பெட்டியில் வைத்திருந்தார்கள். அடம்பிடித்து வாங்கி, எடுத்து ஒரு வாய் கடித்தேன். அவியவே இல்லை! திட்டிக்கொண்டே அப்பா தான் மிச்சத்தை சாப்பிட்டு முடித்தார்.

4446944103_7bbf007f7a_z_thumb%25255B6%25255D.jpg?imgmax=800
கொழும்பில் பார்த்த இடங்களை இன்று முழுக்க பட்டியல் இடலாம். சில தருணங்கள் மறக்கமுடியாதவை. மியூசியத்தில் ஆவலுடன் எதிர்பார்த்த கல்வெட்டு தமிழில் இல்லாமல் ஏதோ புராண மொழியில் கிறுக்கி இருந்தது. புரியவேயில்லை. சோழர்கள் உண்மையில் தமிழர்கள் தானா என்ற சந்தேகம் வந்தது! காலி முகத்திடலில், இறால் வடை, ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி சாப்பிட்டதால் அன்று முழுதும் வயிற்றால் பேதி போனது! கிரீன்லாண்ட் உணவகம் தான் கொழும்பிலேயே சிறந்த சாப்பாட்டுக்கடை என்று அப்பா சொல்லி அங்கே போக, அது சைவக்கடை என்று தெரிந்து அப்பாவிடம் சண்டை போட்டு வேறு கடை போனது இப்போது யோசிக்க சிரிப்பாய் இருக்கிறது.

தெகிவளை மிருககாட்சி சாலையில், கிடங்கில் கிடந்த சிங்கங்கள் எல்லாம் பூனைகள் கணக்காய் நொந்து போயிருக்க அப்போதெல்லாம் புலிகள் உறுமிக்கொண்டு திரிந்ததை வெளியில் பாதுகாப்பாக நின்றுகொண்டு ரசித்தேன்! என்னோடு சேர்ந்து பல வெளிநாட்டவர் கூட ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தது ஞாபகம் இருக்கிறது. சில இந்தியர்கள் சிங்கத்துக்கு மாமிசம் கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்!

இன்னொன்று மறந்துவிட்டேன். விகாரமாதேவி பூங்காவில் ஒரு புது ஐந்து ரூபாய் நாணயக்குற்றியை தொலைத்துவிட்டேன். அப்பாவிடம் திட்டு வாங்கிக்கொண்டே அரை மணிநேரமாய் தேடியும் அது கிடைக்கவில்லை. அன்றைக்கு தொலைக்க தொடங்கினேன். தொலைத்துக்கொண்டே இருக்கிறேன். எங்கு தேடியும் கிடைப்பதேயில்லை. கருமம் பிடித்தவன்!

தேதி : ஏப்ரல் 7, 1990

நேரம் : மாலை 6.00 மணி

இடம் : ஜா எல, கொழும்பு

நண்பர் ஒருவர் வீட்டில் விருந்து என்று அப்பா சொன்னார். அவரோடு ஒன்றாக வேலை செய்தவராம். அன்றிரவு அவர் இருக்கும் யாஎல என்ற இடத்துக்கு சென்றோம். மழையிருட்டு. ஏழு மணியிருக்கும். ஆட்டோவில் போய் இறங்கும்போது தான் தெரிந்தது அப்பாவின் அந்த நண்பர் சிங்களவர் என்று. அப்பா ரயிலில் சொன்ன கதை ஞாபகம் வர அடி வயிற்றில் ஒரு பயம் உருளத்தொடங்கியது. ஆட்டோ டிரைவர் வேறு சிங்களவரா? பார்க்கும் போதே அடியாள் போல இருந்தான். என் விரலில் போட்டிருந்த மோதிரத்தை கழட்டி அவசரம் அவசரமாக சட்டை பாக்கெட்டில் போட்டேன்.

அவர்கள் வீட்டில் சிரித்துக்கொண்டே எங்களை வரவேற்றார்கள். அந்த வீட்டில் அப்பாவின் நண்பர், மனைவி, அவர்களின் மூத்தமகன், என் வயது பெண் ஒருத்தி. அவர் மனைவி சிங்களவர் போலவே சேலை தலைப்பை வலப்பக்கம் செருகி உடுத்தியிருக்க, பார்க்கும் போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போலவே எனக்கு தெரிய பீதி இன்னும் அதிகமானது. அவர்களின் மகனை ரக்பி பிளேயர் என்று அறிமுகப்படுத்தினார்கள். கட்டுமஸ்தான உடல். இவனுக்கெல்லாம் தடியும் பொல்லும் தேவையில்லை என்று தோன்றியது. இன்றைக்கு எப்படியும் எம்மை அடிக்கப்போகிறார்கள். காப்பற்ற வர செனவிரத்னவும் கிடையாது. அப்பா பாவம், நான் தான் காப்பாற்றவேண்டும். அப்பா வேறு சிங்களத்தில் உரையாட தொடங்கினார். “நீயுமா அப்பா” என்ற பாணியில் அப்பாவை பார்த்தேன். அவர் கவனிக்கவில்லை. எனக்கு பயத்தில் புரைக்கேறியது.

“What’s your name puththaaa?”

அவர் கேட்க, என்னை ஏன் புத்தா என்கிறார்? என்னையும் சிங்களவராய் மாற்றபோகிறார்களா? அலெர்ட் ஆனேன். பதில் ஒன்றும் சொல்லவில்லை. அபூர்வசகோதரர்கள் அப்பு போல புத்தியாக தான் இவர்களை கையாளவேண்டும்!

“Where do you study?”

….

“Have you met Menikaa? duwa! go and play with him.

மேனிக்கா ஷார்ட்ஸ் போட்டிருந்தாள். சோடாபுட்டி கண்ணாடி. கொழு கொழு உடம்பு. தின்று தீர்த்திருக்கிறாள் என்று புரிந்தது. என்னை பார்க்கும்போது ஏதோ ஒரு பட்டிக்காட்டில் இருந்து வந்தவனை பார்ப்பது போல் ஏறெடுத்து பார்த்தாள். இரண்டு அடி எட்டவே நின்றாள், தாயுடன். ரக்பி ப்ளேயரை சமாளித்தாலும் இவளை சமாளிக்கமுடியாது என்று புரிந்தது.

“Show him your new video games Duwa, play the car race with him

வீடியோ கேம்மா? அப்படியென்றால்? எங்களை அடிப்பதை காமெராவில் படம் பிடிக்கப்போகிறார்களா? எங்கள் வதை சிங்களவனுக்கு விளையாட்டா? அவள் முகத்தில் அதே ஏளனப்பார்வை. அண்ணன்காரனும் உள்ளே வர, அப்பா என்னை தனியே விட்டுவிட்டு, நண்பருடன் ஏதோ ஒரு வரைபடத்தை எடுத்து டிஸ்கஸ் பண்ண ஆபீஸ் அறைக்குள் நுழைந்து விட்டார். அபாயக்கட்டம். பிரித்தாளும் சூழ்ச்சி. இன்னும் அலெர்ட் ஆக இருக்கவேண்டும். மேனிக்கா மெதுவாக என்னிடம் வந்தாள்.

“You like video games?”

….

“Can’t you speak English?”

…..

“தாத்தே இங்கிலீஷ் தன்னாலு”

….

“No no, he can speak, he is just shy

அப்பா அறைக்குள் இருந்து சொல்ல, மேனிக்கா இன்னும் என்னை நெருங்கி வந்தாள். கைகள் கால்கள் எல்லாமே ஸ்ட்ராங்காக இருக்குமாப்போல இருந்தது. அடித்தால் திருப்பி அடிக்கமுடியாது. திருப்பி அடித்தாலும் நின்று பிடிக்க திராணி இல்லை. புத்தியை பாவிக்கவேண்டும்!

“Come I will show the game”

என்று அவள் என் கையைப்பிடிக்க,
வீல்ல்ல்……
என்று காட்டுகத்து கத்த ஆரம்பித்தேன்!

அப்பாவும் நண்பரும் அறையில் இருந்து ஓடி வந்தார்கள். அப்பா எவ்வளவு சொல்லிப்பார்த்தார். நான் நிறுத்தவில்லை. கத்தல் என்றால் அப்படி ஒரு கத்தல். செவிடு கிழியும் கத்தல். அப்பா அழுதால் அடி போடுவேன் என்று மிரட்தினார். அப்பாவின் காலில் தொபுக்கடீர் என்று விழுந்தேன்

“அப்பா கும்பிட்டு கேக்கிறன், வாங்க ஓடிடுவம். அம்மான, இவங்கள் எங்கள அடிக்கப்போறாங்கள்”

TheNamesake-Still5CR_thumb.jpg?imgmax=800

தேதி : ஜனவரி 8, 2012

நேரம் : இரவு 9.00 மணி

இடம் : மெல்போர்ன்

பதிவை வாசித்து முடித்த அப்பா சிரித்தபடியே என்னைப் பார்த்தார்

“அண்டைக்கு என்ன ஒப்பாரி வச்சாய் தெரியுமா? ஜா எல தாண்டும் மட்டும் நிறுத்த இல்ல”

“ரொம்ப எம்பராசிங்கா இருந்திச்சா அப்பா? அந்த அங்கிள் அப்புறம் ஒன்றுமே சொல்ல இல்லையா?”

“எனக்கு வர இருந்த நல்ல வேலை போச்சுடா!”

“What?”

“நான் கொழும்பு வந்ததே அவரை மீட் பண்ண தாண்டா. அடுத்த நாள் எங்களுக்கு ட்ரெயின் இருந்துதா! அன்றைக்கு தான் அவரோட புது ப்ராஜெக்ட் ஒன்றுக்கு சேர்ந்து வேலை செய்யிறத பற்றி பேச இருந்தன்! நீ அழுது எல்லாத்தையும் குழப்பி விட்டாய்”

“நீங்க அடுத்த ட்ரெயின் பிடிச்சு போய் மீட் பண்ண இல்லையா?”

“எங்க போறது, அதுதான் சண்டை தொடங்கி பாதையே மூடியாச்சே! ட்ரெயினும் இல்ல, டெலிபோனும் இல்ல!”

“சொறி அப்பா, மறந்திட்டன்!”

“சரி அத விடு, இன்னொண்டும் மறந்து போனாய்?”

என்னவென்று ஆச்சரியாமாய் அப்பாவை பார்க்க

“அண்டைக்கு உண்ட மோதிரத்தையும் தொலைத்துவிட்டாய்!”

-

சிங்கள சொல் பயன்பாடு:

Puththaa : மகன்

Duwa : மகள்

தாத்தே : அப்பா

தன்னாலு : தெரியாதாம்

http://orupadalayink...i.blogspot.com/

Edited by நிழலி

good choice! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள நிழலி,

என் பதிவை இங்கு பகிர்ந்து பலரை வாசிக்க செய்தமைக்கு மிக்க நன்றி.

அன்புடன்,

ஜேகே

http://orupadalayinkathai.blogspot.com

  • கருத்துக்கள உறவுகள்

இவை மனதின் அழியாத கோலங்கள். பகிர்வுக்கு நன்றி .

மேலும் உங்கள் பதிப்புக்கள் வரவேண்டும் .அழகான எழுத்து நடை .

அரிச்சுவடியில் இணைத்து விட்டீர்கள் தயவு செய்து கதை பகுதியில் இணைத்து விடுங்கள்

Edited by நிலாமதி, Today, 12:06 PM.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் உங்கள் படைப்புக்கள் யாழில் தொடரட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.