Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன்

Featured Replies

Sunday, November 20, 2011

என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன்!

“டேய் கீர்த்தி .. அந்த பொண்ணு தாண்டா .. உடன திரும்பாதடா .. பொறு”

“யாரடா? அந்த தேர் முட்டி மூலையில நிக்குதே அதா?”

“அவளே தாண்டா, கொல்றாடா!”

“டேய் அது கஜன்ட ஆளுடா”

“அண்ணியை பற்றி பிழையா சொல்லாத, அவ இல்லடா, பக்கத்தில, பச்சை சாரி”

“யாரு, கனகாம்பர பூ ஜடை போட்டதா”<a href="http://lh4.ggpht.com/-YmxaeNF98eo/TshHrnc5YHI/AAAAAAAAAik/NFeGz35pehQ/s1600-h/Picture%252520022%25255B6%25255D.jpg">

Picture%252520022_thumb%25255B3%25255D.jpg?imgmax=800

“அவளே தாண்டா, என்னா பொண்ணுடா!”

“கண்ணாடி போட்டிருக்காளே மச்சான்”

“அது தான் இன்னும் கொல்லுதடா!”

“என்கிட்ட சொல்லீட்ட இல்ல? இப்ப பாரு”

முருகன் கிழக்கு வாசலால் வெளியே வருகிறார்

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதல் மன்னனான கூழங்கை சக்க்ரவர்த்தியின் அமைச்சன் புவனேகபாகுவால் கட்டப்பட்டு(மூலம்: யாழ்ப்பாண வைபவமாலை"), காலத்துக்கு காலம் இடிக்கப்பட்டு, இடம்மாறி, புதுப்பிக்கப்பட்டு, யாழ்ப்பாணத்தின் எழுச்சி, புரட்சி, நெகிழ்ச்சி, வீழ்ச்சி என எல்லா சம்பவங்களையும் பார்த்து சில நேரங்களில் பார்க்காமல் வாளாமலும் இருக்கும் நல்லூர் கந்தசுவாமி கோயில் தான் இந்த வாரத்து என் கொல்லைப்புறத்து காதலி. சந்தேகம் இல்லை அவள் உங்களுக்கும் காதலியே. சேர்ந்து காதலிப்போம் இன்று!

patmanathan2_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

நல்லூர் நினைவுகள் எப்போது இருந்து ஆரம்பிக்கிறது என்று சரியாக தெரியவில்லை. மிக பால்ய வயதில், அப்பாவின் சைக்கிளில், முன் பாரில் உட்கார்ந்து சென்றதாக ஞாபகம். என்னை எப்போதுமே தோளில் தூக்கி வைத்திருக்க சொல்லி அடம்பிடிப்பேன். அப்பாவுக்கு சலிக்குமா என்ன? திருவிழா முழுதும் தோளில் தூக்கிக்கொண்டே நாதஸ்வர தவில் அணியோடு கூட வருவார். அளவெட்டி என்.கே.பத்மநாதன் திருவிழா முழு நாட்களும் ஆஸ்த்தான வித்துவானாக வாசித்துக்கொண்டு வலம் வருவார். இடையியையே கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதர்கள் இணைவார்கள். பத்மநாதன் வாசிக்கும் போது எங்கே அவரின் கழுத்து ஊதிப்பெருத்து வெடித்துவிடுமோ என்று நான் அஞ்சுவதுண்டு. அப்புறம் அவர் நாதஸ்வரத்தில் தொங்கும் தங்க மெடல்கள். பத்துக்கு மேலே இருக்கும். ஒருமுறை எண்ணினேன். மறந்துவிட்டது!

SriLaSri_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

நல்லூர் எங்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த கலாச்சார கூறு இந்த கோயில். நல்லூர் இல்லாமல் எங்கள் வாழ்க்கையை சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. யாழ்ப்பாணத்தின் அடையாளம், ஒரு கட்டத்தில் மதம் என்பதை எல்லாம் தாண்டி கலாச்சார அம்சமாக மாறியது என்பதற்கு, கிறிஸ்தவர்களும் அதோடு பின்னிபிணைந்த விதம் கட்டியம் கூறியது. கிறிஸ்தவ பாடசாலைகளும் நல்லூர் தேர் திருவிழாவுக்கு விடுமுறை விடுவதை இங்கே நான் குறிப்பிடவேண்டும். கோவிலின் கட்டடக்கலையும் சிறப்பு. அதிலும் ஓவியர் மணியின் உள்வீதி ஓவியங்கள் கொள்ளை கொள்ளும். இந்த ஆலயம் ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டது. ஒரு செட்டியார் பரம்பரையால் காலம் காலமாக நிர்வகிக்கப்படுகிறது. மிக நேர்த்தியும் நேரம் தவறாமையும் அவர்களின் சிறப்பு. இன்றைக்கும் அர்ச்சனை ரசீது ஒரு ருபாய் தான். செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள் என்ற சித்தர் பரம்பரை உருவாக்கியதும், நாவலர் சைவம் வளர்த்ததும் இந்த கோவிலை தளமாக கொண்டே. இந்த கோயில் இன்றி, யாழ்ப்பாணம் இல்லை. நாமும் இல்லை.

thileepan286rv_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

இந்திய இராணுவம் இலங்கையில் ஊடுருவி, கொஞ்சம் கொஞ்சமாக கிளை பரப்பும் தருணம். 1987ம் ஆண்டு. புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையேயான தேனிலவு முடிந்து ஊடல் உருப்பெருத்துக்குகொண்டு இருந்த நேரம். திலீபன் அண்ணா( எழுதும்போது தடுமாறுகிறது, என்ன ஒரு ஓர்ம சிந்தனையும் அர்ப்பணிப்பும்) ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கிறார். தெரிவு செய்த இடம், நல்லூர் வடக்கு வீதி. கூட்டம் அமைதியாக சாரை சாரையாக வந்து ஆதரவு தெரிவித்துக்கொண்டு இருந்தது. இந்தியா, காந்தி தேசம் என்று சொல்வார்கள், செவி சாய்க்கவில்லை. நான் கூட அப்பாவுடன் ஒருமுறை சென்று தரிசித்தேன். நான் நல்லூரில் தரிசித்தது அவரை மட்டும் தான். முருகனை இல்லை. யாழ் மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தவர். தண்ணீர் கூட அருந்தாமல் பத்தாவது நாள் உயிர்விடும் போது இந்தியா கைகட்டி வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தது. காந்தி உண்மையில் அதிஷ்டசாலி. அவர் போராடியது ஆங்கிலேயருக்கு எதிராக. ஆங்கிலேயருக்கு அகிம்சையின் மேன்மை தெரியும். காந்தி பிறந்த தேசத்துக்கு அது தெரியாது. சிலர் திலீபன் அண்ணாவை ஈழத்து காந்தி என்பர். நான் மறுப்பேன். காந்தி தான் இந்தியாவின் திலீபன்!

அப்புறமாக யுத்தம் சீக்கிரமே வெடித்துவிட்டது. அடித்து நொறுக்கியபடி இந்திய இராணுவம் முன்னேறி வருகிறது. வரும் வழியில் பாலியல் வல்லுறவுகள், கொலைகள் சகஜம். எங்கள் வீட்டில் பயம் பற்றிக்கொண்டது. நாம் எல்லாம் ஓடியது நல்லூர் கோவிலுக்கு. சைக்கிளில் கொஞ்ச பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடினோம். எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ஓடும் வழியில், ஷெல் ஒன்று அருகில் விழுந்து வெடிக்க, நாமெல்லாம் தடுமாறி கீழே விழுந்தோம். அப்பா குஞ்சை கோழி அணைப்பது போல என்னை அணைந்துக்கொண்டே விழுந்து படுத்தார். பின்னர் நல்லூருக்கு சென்று, உள்ளேயே போய் ஒரு கோவில் தூண் அருகில் இருந்தோம். கோவில் முழுதும் அகதிகள் நிறைந்து வழிந்தது. அப்போதும் முருகன் சிறிய புன்னகையுடன் வேலை கையில் வைத்துக்கொண்டு இருந்தார். வேளை வரவில்லை போல!

50514_215406660187_9280_n_thumb.jpg?imgmax=800நல்லூர் திருவிழா என்பது எங்களுக்கு பொங்கல் தீபாவளி போல ஒரு பெரிய பண்டிகை. ஒருநாள் இருநாள் இல்லை, இருப்பத்தாறு நாட்கள். கோவிலில் கூட்டம் களை கட்டும். கூட்டம் என்றால் வெறும் பக்தர் கூட்டம் இல்லை. அது ஒருவித பண்டிகைக்கால கூட்டம். நாமெல்லாம் வேஷ்டி சால்வையில். பெண்கள், சேலை, தாவணி, half saree யில். இந்த சுடிதார் எல்லாம் இப்போது தான் வந்தது. குடை வெட்டு பாவாடை சட்டையும் அப்போது பிரபலம். நான் சிறு வயது முதலே வேஷ்டி தான். எட்டு முழ வேட்டியை அப்படி இப்படி சுற்றி கட்டிவிட்டு பின்னர் சனல் கயிறால் ஒரு இறுக்கு இறுக்குவேன். அது தான் பிடிமானம். இலாகவமாக, வேஷ்டி நுனியை எடுத்து சைக்கிள் இருக்கையில் வைத்து ஏறி சைக்கிள் மிதிக்கும் பாங்கு இருக்கிறதே. மாலை திருவிழா என்றால், கீர்த்தி, ரங்கன் என் வீட்டுக்கு வர, நாம் சிலவேளை குகன் வீட்டுக்கு போக, அங்கே பிரஷாந்தும் இணைய, அப்புறம் சுட்டா, மக்கர் என, கோவிலடியில் மயூரதன், விஜயேந்திரா, நிஷாந்தன் இணைய கச்சேரி களை கட்டும். காலப்போக்கில், போராலும் இடம்பெயர்வாலும் நண்பர்கள் பெயர்கள் மாறின! ரமணன், ஆதீசன், செந்தூரன் என புது நண்பர்கள், ஆனால் அந்த சைக்கிளும் வேஷ்டியும் மாறவில்லை. முருகனிடமும் இன்னும் அதே சிரிப்பும் மாறவில்லை. வேலுக்கும் வேளை வரவில்லை!

“எடியே, அந்த தூணோட நிக்கிறானே, அவன் என்னையே பாக்கிறாண்டி”

“யாரு, அந்த கஜனா? அவன் ஆனந்திண்ட ஆள், அவளிட்ட அடி வாங்க போறாய்”

“ச்சே அந்த கறுவலை எல்லாம் ஆனந்தி மாதிரி பெட்டை தான் பாப்பாள்! பக்கத்தில லுக்கா, ரோஜா அரவிந்தசாமி மாதிரி நிக்கிறான், அவன் தாண்டி”

“அவனா, ஒ குமரன், சென்ஜோன்ஸ்ல படிக்கிறாண்டி, கொஞ்சம் திமிர் பிடிச்சவன்”

“இருக்கட்டுமே, அவனிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு, வாடி கொஞ்சம் அவங்கட பக்கமா நகருவம்”

மேகலா அந்த நெரிசலிலும் சேலையை சரிசெய்தாள். ஹைர்பின்னில் குத்தி செருகி இருந்த சேலை இடுப்பில் இருந்து நழுவியது போன்ற ஒரு பிரமை. குமரன் பெயர் அழகாய் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள். முருகன் தெற்கு வாசல் தாண்டுகிறார்.

images_thumb.jpg?imgmax=800

காலையில் ஆண்கள் அங்கபிரதிஷ்டை செய்வதும் பெண்கள் அடி அழிப்பதும் நல்லூரில் பிரசித்தம். என் நண்பன் பிரியா இருபத்தைந்து நாட்களும் நாளுக்கு மூன்று முறை செய்வான். அந்த பெரிய வெளி வீதியை மூன்று முறை நடப்பதே சிரமம். அவன் உருவத்துக்கு மூன்று முறை பிரதிஷ்டை செய்து விட்டு மாலையில் கம்மென்று வேட்டியில் வந்து நிற்பான். Hats Off! பெண்கள் அதிகம் கோயில் உள்வீதியில் அடி அழிப்பர். அடிக்கு அடி குனிந்து எழும்ப வேண்டும். நெற்றி நிலத்தில் முட்ட வேண்டும். எக்ஸ்ட்ராவாக இரண்டு அடி குனியாமல் தாண்டினால் முருகன் கோபிப்பான். அக்கா நெற்றி தேய்ந்து சற்றே இரத்தக்கறையுடன் வீட்டுக்கு வரும்போது பாவமாக இருக்கும். முருகனிடமும் இன்னும் அதே சிரிப்பு. வேலுக்கும் வேளை வரவில்லை!

நல்லூர் திருவிழா காலத்தில் கோயில் சுற்றுப்புறத்தில் இடம்பெறும் கலாச்சார நிகழ்வுகள் பிரசித்தம். கந்த புராண தொடர் பிரசங்கம், மேற்கு வீதியில், ஒரு பக்கம் பட்டிமண்டபங்கள். துர்க்கா மணிமண்டபத்தில் கர்நாடக இசை என்று தமிழும் இசையும் கமகமக்கும். அதிலும் ஈழத்தில் நம்பிக்கைகளான இசை மேதைகள் அகிலனும்(வாய்ப்பாட்டு), மெட்ராஸ்கஜனும்(மிருதங்கம்) சேர்ந்து கலக்கும் நாள் எப்போது வரும் என்று காத்து இருப்பேன். அகிலனின் தில்லான கேட்டிருக்கிறீர்களா? “தீம தீம தித் தில்லானா, சிற்சபையில் ஆடும்” என்ற பாடல், அன்று முழுதும் பாடிக்கொண்டே இருப்பேன். கொடுத்து வைத்த பிறவிகள். ரஜனி கமலுக்கு சொன்னது போல சரஸ்வதி நெஞ்சோடு இவர்களை அணைத்து வைத்திருக்கிறாள்! இவர்களுக்கு என்னை தெரியும் என்பதும், இவர்கள் என் நண்பர்கள் என்பதும் என் அடுத்த தலைமுறை கூட பெருமைப்படப்போகும் விஷயங்கள்!

say046_thumb.jpg?imgmax=800

புலிகள் காலத்தில் அவர்களின் நிகழ்வுகள், ஒளிப்பேழைகள் ஒரு விசேஷம். பொருண்மிய கண்காட்சி இன்னும் சிறப்பு. ஈழத்தின் முக்கிய பொருளாதார, விஞ்ஞான கண்டு பிடிப்புகளை காட்சிக்கு வைப்பார்கள். கள் இறக்கும் கருவி ஒன்றை கண்டு பிடிப்பவருக்கு பரிசெல்லாம் அறிவித்தார்கள். அப்புறம் அந்த கிட்டு பூங்கா. நான் எல்லாம் மலையையே ஒரு போதும் பார்த்ததில்லை. கிட்டு பூங்காவில்
“சிங்கப்பூர் பறவைகள் பூங்கா”
வில் இருப்பது போல மலை, நீர்வீழ்ச்சி, குகை எல்லாம் செய்து இருப்பார்கள், மாணவருக்கு ஐந்து ரூபாய் கட்டணம் என்று நினைக்கிறேன். என் நண்பி, ஒரே நண்பியான குட்டியுடன் அவள் குடும்பம், எங்கள் குடும்பம் எல்லாமே ஒன்றாக சேர்ந்து கிட்டு பூங்காவுக்கு சென்று விளையாடி இருக்கிறோம். அவள் இன்றைக்கு எம்மோடு இல்லை. இந்த 27ம் தேதி நினைவு கூறப்படுபவர்களில் ஒருவர். ஆனால் ஒருவருக்கு கூட அவள் பெயர் ஞாபகம் இல்லை. அவள் வீட்டில் மட்டும் அழுகை இருக்கும். அவமானமாய் இருக்கிறது!

4_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

கடைகள். மறக்க முடியுமா? லிங்கம் கூல் பார் ஸ்பெஷல் ஐஸ் கிரீம், கச்சான் கடலை, முட்டாஸ், மூலைக்கடை மரக்கறி கொத்து. ஒருநாள் திருவிழாவுக்கு அம்மா தரும் கோட்டா ஐந்து ரூபாய். இரண்டு நாள் சேர்த்தால் மூன்றாம் நாள் பதினைந்து ரூபாய்க்கு ஏதாவது ஒரு விளையாட்டு பொருள் வாங்கலாம். ஒவ்வொரு முறையும் நல்லூர் திருவிழாவில் என்ன வாங்குவது என்று அப்பாவிடம் கண்டிப்பாக சொல்லிவிடுவேன். தண்ணித்துப்பாக்கி, பறக்கும் தட்டு, விளையாட்டு துப்பாக்கி, ஆர்மிசெட், விதம் விதமான பலூன் என ஒவ்வொரு வருடமும் ஒவ்வொன்று. சில பொருட்களை ஆரம்பத்தில் பார்த்து வைத்து விட்டு திருவிழா இறுதி நாளன்று தான் அப்பா வாங்கித் தருவார். அன்று தான் விலை மலியுமாம். சண்டை பிடித்து ஒவ்வொரு ரூபாயாய் குறைத்து, கடைசியில் வேண்டாம் என்று வெளியேற, கடைக்காரன் திரும்பி அழைக்க, அப்பாவின் செயல்களை பார்க்கும் போது எனக்கு பயம் பிடிக்கும்;இறுதியில் அவர் நினைத்த விலைக்கே வாங்கி விடுவார். இன்றைக்கு வெளிநாட்டு பணத்தில் பத்து வயது இளைஞன் கூட சாவகாசமாக, விலை எதுவும் விசாரிக்காமல் எல்லாவற்றையும் வாங்குகிறான். ச்சே பொறுப்பு அற்ற பெரியவர்களாக நாங்கள் மாறுகிறோம். பணத்தின் அருமையை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க தவறுகிறோம். விவஸ்தை கேட்டவர்கள் நாங்கள்.

“இங்க ஐசே, இந்த குமரன் தொல்லை தாங்க முடியேல்ல, உங்களோட கதைக்கோனுமாம்”

“கீர்த்தி முதல்ல நீர் உம்மட ஆளோட கதைக்க பாரும்” – அவள் நண்பி

“மச்சான் அவள் ஓம் எண்டாலும், இந்த அல்லக்கைகள் விடாது போல”

“விடுடா, நானே பாத்து கொள்ளுறன்”

“நீங்க எங்க படிக்கிறீங்க? உங்கள நான் லேடீஸ் கொலிஜ் பக்கத்தில பாத்திருக்கிறேன்”

“குமரன், வாளி வைக்க வேண்டாம், அவள் படிக்கிறது வேம்படி” -- மீண்டும் அவள் நண்பி

“மச்சான் இவள் இருக்கும் மட்டும் ஒரு கச்சான் கூட சாப்பிட ஏலாது”

முருகன் மேற்கு வீதியில். மேகலா சிரித்துக்கொண்டே வேகமாக நடந்தாள். கனகாம்பர பூ நழுவியது. இல்லை நழுவவிட்டாளா?

MAYA350_thumb.jpg?imgmax=800
ஒரு சம்பவம் ஞாபகம் இருக்கிறது. எனக்கு பதினாலு வயசு. ஒருமுறை அக்காவின் நண்பிகள் கூட்டத்தோடு இணைந்து திருவிழாவுக்கு போகிறேன். அக்காவின் தம்பி என்று எனக்கு தனி மரியாதை. அவர்களே ஐஸ்கிரீம் கச்சான் வாங்கித்தருவார்கள். அவர்கள் பின்னால் பசங்க கூட்டம் அலை மோதும். என்னை கொஞ்சம் பொறாமையாக பார்ப்பார்கள். எனக்கு புரியாது. எனக்கு என் கவலை, என் வேஷ்டி எப்போது விழுமோ என்று. இந்த சமயம் பார்த்து என் நண்பர்கள் பார்த்தால் என்னடா பெண்களுடன் சேர்ந்து போகிறேன் என்று ஒரு நக்கல் விடுவார்கள். ஆனாலும் அவர்களுடன் போவதில் ஒரு அழகு, நான் தானே அங்கே ஹீரோ! ஒருமுறை அக்காவின் நண்பியிடம் கேட்டேன். அன்றைக்கு பூங்காவனம். “அக்கா முருகன் இருப்பத்தஞ்சு நாளும் வள்ளி தெய்வானையுடன் சுற்றிவிட்டு இருப்பத்தாறாவது நாள் கலியாணம் முடிக்கிறாரே, இது தமிழ் கலாச்சாராமா?” அவர் சிரித்து விட்டு அக்காவிடம் போட்டுக்கொடுக்க, அக்கா அம்மாவிடம் சொல்ல எனக்கு அன்று முழுதும் திட்டு விழுந்தது. யாழ்ப்பாணத்தில் dating செய்து பின் engage பண்ணி திருமணம் முடித்தது முருகன் மட்டுமே. அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு காதலிகள், ஒருத்தி நாட்டுக்கட்டை, மற்றயவள் அரசனின் மகள், திருமணமும் ஒரேநாளில். மச்சம்டா அவனுக்கு!

நீண்டு விட்டது, நல்லூரை ஒரே நாளில் முடிக்க முடியாது. நாம் இருக்கும் மட்டும் நல்லூர் வந்து கொண்டே இருக்கும். கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் நல்லூருக்கு செல்லும் போது முன்னர் இருந்த பரவசம் இப்பொது இல்லை. வயசாகிவிட்டதோ? இல்லை இல்லை, நல்லூர் தன் இயல்பை இழந்து நிறுவனமயபடுத்தப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். வெளிநாட்டு தமிழர் வருகை, அவர்களோடு சேர்ந்து வரும் டாலர்கள், பவுண்கள் யூரோக்கள்…எல்லாமே சேர்ந்து நம் அடையாளத்தை அழித்துக்கொண்டு நாமே அழித்துக்கொண்டு இருக்கிறோம். அவனும் சந்தோஷமாய் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறான்! தம் ஆட்களை வேறு அனுப்புகிறான். ஐயோ நீங்கள் எல்லோரும் நன்றாக பணம் வைத்திருக்கிறீர்கள். உங்கள் எல்லோரிடமும் கம்கோடேர் இருக்கிறது. நிக்கொன் கேமரா இருக்கிறது. G-Star உம் Armani யும் இருக்கிறது. ஆனால் அது வேண்டாமே. நல்லூரில் அது வேண்டாமே. இயல்பாக இருப்போம். எம் இனிய நினைவுகளை மீட்டவும், முருகனை இன்னும் நம்புவர்கள் தரிசிப்பதற்கும் வரும் இடம் அது, அந்த இயல்பை, எமக்கு சாத்வீகம் தரும் தலத்தை, எங்கள் கேமரா பிளாஷ்களால் இருட்டடிக்கவேண்டாமே. இப்போதும் முருகன் சிறிய புன்னகையுடன் வேலை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறார். எப்போது தான் வேளை வருமோ தெரியாது!

“நீங்க பாக்கவே மாட்டீங்களா? நான் அவ்வளவு கெட்டவன் இல்ல, கொஞ்சம் நல்லவன் தான்”

“குமரன், நாங்களும் ரோஜா பார்த்திட்டம், சொந்தமா ஒண்டும் சொல்ல மாட்டீங்களா?”

“உங்கட பிரெண்ட பார்த்தா பிறகு அவ மட்டும் தான் சொந்தமா தெரியுது!”

“ஐயோ, கவிதையா? புதுவை இரத்தினதுரை தோத்தார் போங்க”

“சும்மா இருடி, ம்ம .. குமரன் .. எண்ட பேர் மேகலா … சும்மா சுத்தி பிரயோசனம் இல்லை, லிங்கத்தில ஐஸ் கிரீம்?” -- மேகலா புன்முறுவலுடன்

“மச்சான், ஐஸ்கிரீமாம்டா, காசில்லையடா.. உன்னட்ட எவ்வளவு இருக்கு?

“அஞ்சு ரூவா மச்சான்”

“பறுவாயில்ல, எங்களிட்ட இருக்கு, நீங்க கச்சான் மட்டும் வாங்கி குடுங்க!”

என்ன இந்த காதலி பிடிக்காவிட்டால் எந்த காதலி தான் உங்களுக்கு பிடிப்பாள். நிச்சயம் பிடிக்கும். உங்கள் அனுபவங்களை கமெண்ட்ஸ் இல் பகிருங்கள். காதலிப்போம்!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வாக்கை கீழே உள்ள வாக்களிக்கும் சுட்டிகளை அழுத்துவதன் மூலம் மேலும் பலர் இதை வாசிப்பதற்கு உதவலாம். நன்றி.

http://orupadalayink...og-post_20.html

Edited by நிழலி

அப்பா...

நல்லூரை எப்படி மறக்கிறது..? எத்தனை நினைவுகள். நல்லூருக்கிள்ள நாங்களா ? எங்களுக்கிள்ள நல்லூரா..

உயிரோட்டமான இணைப்பு நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் அவர்களின் நிகழ்வுகள், ஒளிப்பேழைகள் ஒரு விசேஷம். பொருண்மிய கண்காட்சி இன்னும் சிறப்பு. ஈழத்தின் முக்கிய பொருளாதார, விஞ்ஞான கண்டு பிடிப்புகளை காட்சிக்கு வைப்பார்கள். கள் இறக்கும் கருவி ஒன்றை கண்டு பிடிப்பவருக்கு பரிசெல்லாம் அறிவித்தார்கள். அப்புறம் அந்த கிட்டு பூங்கா. நான் எல்லாம் மலையையே ஒரு போதும் பார்த்ததில்லை. கிட்டு பூங்காவில் “சிங்கப்பூர் பறவைகள் பூங்கா”வில் இருப்பது போல மலை, நீர்வீழ்ச்சி, குகை எல்லாம் செய்து இருப்பார்கள், மாணவருக்கு ஐந்து ரூபாய் கட்டணம் என்று நினைக்கிறேன். என் நண்பி, ஒரே நண்பியான குட்டியுடன் அவள் குடும்பம், எங்கள் குடும்பம் எல்லாமே ஒன்றாக சேர்ந்து கிட்டு பூங்காவுக்கு சென்று விளையாடி இருக்கிறோம். அவள் இன்றைக்கு எம்மோடு இல்லை. இந்த 27ம் தேதி நினைவு கூறப்படுபவர்களில் ஒருவர். ஆனால் ஒருவருக்கு கூட அவள் பெயர் ஞாபகம் இல்லை. அவள் வீட்டில் மட்டும் அழுகை இருக்கும். அவமானமாய் இருக்கிறது!

இது எங்களின் காலம்.. யாழ் தேவி இராணுவ நடவடிக்கையில் கைப்பற்றிய டாங்கி ஒன்றையும் அங்கு நிறுத்தி இருந்தார்கள். அங்கு தான் கண்டோம்.. ஒரு டாங்கிக் குண்டு.. எங்களளவுக்கு இருந்தது. அதன் வெற்றுக்கோதே ஒரு இரண்டடி அல்லது இரண்டரை அடி இருக்கும். கிட்டு மாமாவின் வெண்கலச் சிலையும் இருந்தது. மிகவும் உயிரோட்டமாக அது இருந்தது. இன்றைக்கு சங்கிலியனுக்கு வைச்சிருக்கிற சிலையோ.. சிலை என்று சொல்லத்தக்கதாக இருக்கே தவிர.... அதன் உயிரோட்டம்.. பாரம்பரியம் போயிட்டுது. இதை எல்லாம் உணரத்தக்க அரசியல் தலைமைகளும் இல்லை.. நிர்வாகத் தலைமைகளும் இன்று நல்லூரில் இல்லை.. என்பது கவலை.

அத்தோடு.. கந்தர்மடம் பகுதியில் அமைந்திருந்த பொன்னம்மான் நினைவு விலங்கியல் பூங்கா.. அதையும் நினைவு படுத்தனும்...! அதையும் சிங்கள அரசு விட்டு வைக்கவில்லை. இரண்டு தடவை விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்கினர். இருந்தாலும்.. நாங்கள் எல்லாம்.. மான்.. மரை.. யானை.. பாம்பு.. முதலை.. இவற்றை நேரில் கண்டது.. seesaw பற்றி அறிஞ்சதெல்லாம் அங்க தான். இப்பவும் பெளதீகவியலில்.. moments கேள்விகள் செய்யும் போது.. பொன்னம்மானும்.. அந்தப் பூங்காவுமோ நினைவுக்கு வந்து நிஜ உதாரணங்களை தந்து செல்லும்..!

குறைகள் விடாத ஒரு பதிவு. பலர் தங்கள் பதிவுகளில்.. விடுதலைப்புலிகளின் கால அனுபவங்களை பகிர்வதில்லை. அதை இந்தப் பதிவு செய்யாதது.. பாராட்டத்தக்கது.

நன்றி ஆக்கப் பகிர்விற்கு.. நிழலி.. அண்ணார். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள நிழலி,

என் பதிவை இங்கு பகிர்ந்து பலரை வாசிக்க செய்தமைக்கு மிக்க நன்றி.

அன்புடன்,

ஜேகே

http://orupadalayinkathai.blogspot.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.