Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாய்ந்த கோபுரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த யாழ்கள உறவுகளே!

ஒரு பேப்பரில் தொடராக வெளிவரத் தொடங்கியிருக்கின்ற எனது இந்த பதிவை (ஒரு வகையில் இதுவும் ஒரு வித அனுபவப் பதிவுதான்) யாழ்கள நண்பர்களுக்கு தருவதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வாசித்து குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுமாறும் வேண்டிக்கொள்கிறேன்.

சாய்ந்த கோபுரங்கள்

சிறு வயதில் நம்மில் பலருக்கு பல விதமான கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் மனிதில் உருப் பெறுகின்றன. நாளடைவில் அந்தக் கருத்துக்களும் எண்ண ஓட்டங்களும் எங்களின் மனங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி பலமான கோட்டைகளாகவும் கோபுரங்களாகவும் வலுப்பெற்று விடுகின்றன. அதே வாழ்க்கைப் பாதையில் நாங்கள் தொடர்ந்து பயணிக்கும் போது நம்மில் சிலரின் தேடலும் அந்த தேடலின் விளைவாக நாம் அறிந்து கொள்ளும் உண்மைகளும் நாங்கள் கட்டிய மனக்கோட்டைகளை தகர்த்து கோபுரங்களையும் சாய்த்து விடுகின்றன.

ஜேர்மன் நாட்டு தத்துவமேதை ஆர்தர் ஸ்கோபென்கார் உண்மை தொடர்பாக கூறிய வாரிகள் நினைவுக்கு வருகின்றன. உண்மை முன்று நிலைகளைக் கடக்கிறது. முதலில் அது நகைப்புக்கிடமாகவும் அடுத்து அது மிகத் தீவிரமான எதிர்ப்புக்குள்ளாகும் விதமாகவும் இறுதியில் தெளிந்த மனதுடன் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் அமைகிறது. நம்மில் பலருக்கோ உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருப்பதில்லை. காரணம் உண்மை என்றும் கசப்பானது. இருப்பினும் உண்மை உண்மைதான். சிறு வயதில் என் மனதில் ஆழமாகப் பதிந்து கோபுரமாக உயர்ந்து நின்றவைகள், பின்னர் உண்மைகளை அறிந்து தெளிந்தவுடன் மண்ணோடு சாய்ந்து விட்டன. அவற்றைத் தொடராக பதிவு செய்கிறேன்.

1. இந்தியா

பாரத நாடு பழம் பெரும் நாடு - சிறு வயதில் இந்தியாவை இப்படித்தான் என் மனதில் வரித்துக் கொண்டேன். சிறு வயதில் நான் மிகவும் விரும்பிப் படித்த புராணக் கதைகளும் இதிகாசக் கதைகளும் அப்படி ஒரு எண்ணத்தை என் மனதில் வரித்து விட்டிருந்தன. தருமன் பிறந்த மண், கண்ணன் அவதரித்த இடம், அறுபத்து மூன்று நாயன்மார்களும் வாழ்ந்த புண்ணிய பூமி என்றெல்லாம் இந்தியாவைப் பற்றி ஒரு மாபெரும் கோபுரத்தை என் மனதில் எழுப்பியிருந்தேன். அந்தப் புண்ணிய பூமியில் நான் கால் வைக்கவேண்டும் என்ற ஆசை அந்தச் சின்னஞ் சிறு வயதில் எனக்குள் ஏற்பட்டதில் வியப்பேதுமில்லை. வெகு விரைவில் எனது ஆசை நிறைவேறியது அதுவும் எப்படி?

1990 ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட ஈழப்போர் வெடித்தது. நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட தோணி ஒன்றில் எனது குடும்பத்தாருடன் ஓர் அகதிச் சிறுவனாக அந்த நாட்டில் காலடி வைத்தேன். தற்போது இருக்கும் தமிழீழப் பற்றும் தமிழ்த் தேசிய உணர்வும் அந்தச் சின்னஞ் சிறு வயதில் எனக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பாரத தேசத்துப் புண்ணியக் கதைகள் இந்திய மயக்கத்தை மிக அதிகமாக என்னுள் ஏற்படுத்தியிருந்தன. அதே மண்ணில் நான் என் கல்வியைத் தொடரத் தொடங்கியபோது அந்த மயக்கம் இன்னும் அதிகமாகியது. வரலாற்றுப் பட நூல்களிலும் இதிகாசக் கதைகள் இடம்பெற்றிருந்தன. தனியார் பாடசாலைகளிலோ சத்துணவுக்குப் பதிலாக ஊட்டப் பட்டது இந்த இந்திய உணர்வுதான். 1993 இல் இந்தியாவை விட்டு பிரான்ஸ் வரும்போது எனது தாய் நாடான தமிழீழத்தை விட்டு பிரியும் போது ஏற்படாத வலியும் வேதனையும் ஏற்பட்டன. பிரான்சிலும் எனது மயக்கம் தொடர்ந்தது. அந்த வயதில் பலருக்கு ஏற்படும் திரைப்பட மயக்கமும் சேர்ந்து கொண்டது. அப்போது வெளிவந்த ஐ லவ் இந்தியா, ஜெய்ஹிந்த் போன்ற திரைப் படங்கள் எனது இந்திய மயக்கத்தை மேலும் அதிகரிக்க வைத்தன.

ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் எனது இந்தியக் கோபுரம் சரியத் தொடங்கியது. எப்படி?

இந்திய வரலாற்றின்பால் ஏற்பட்ட ஆர்வமிகுதியினால் அது தொடர்பான நூல்களை வாசிக்கத் தொடங்கினேன். ஒரு மிகப் பெரிய வரலாற்று உண்மையை என்னால் உணர முடிந்தது. பண்டைய காலத்தில் கலிங்க நாடு, அங்க நாடு, மகத நாடு, என்று தனித் தனி நாடுகள் இருந்ததே தவிர இந்தியா என்ற பெயரில் இருக்கவில்லை. சந்திரகுப்தன் காலத்தில் மௌரியப் பேரரசு உருவானபோதும் சரி பாபர் காலத்தில் மொகாலயப் பேரரசு உருவானபோதும் சரி இந்தியா என்றொரு நாடு ஒரு கொடியின் கீழ் என்றைக்குமே இருந்ததில்லை. ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய செயற்கையான பூகோளக் கட்டமைப்புத்தான் இந்தியா. அதற்குமுன் இந்தியா என்றொரு நாடு வரலாற்றில் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. என்ற வரலாற்று உண்மையை அறிந்து கொண்டேன். பாரத நாடு பழம் பெரும் நாடு என்ற கருத்து சுக்கு நூறாக நொருங்கி விட்டது.

1999 ஆம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்திய உணர்வுக்கு தீனி போடும் விதாமாக தமிழக இதழ்களும் செய்தித்தாழ்களும் செய்திகளை விதைத்துக் கொண்டிருந்தன. அப்போது நந்தன் இதழில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் கார்கில் போரும் கச்ச தீவும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். கார்கிலை விட்டுக் கொடுக்காத இந்திய அரசு கச்ச தீவை சிங்கள அரசுக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது தமிழன் சொத்து அவ்வளவு இளக்காரமா என அவர் எழுப்பிய கேள்வி என்னை வேறு கோணத்தில் சிந்திக் வைத்தது. அந்தக் கட்டுரையில் இந்தியத் தேசியத்தின் போலித்தனத்தை பேரசிரியர் தோலுரித்திருந்தார். கூடவே என்னுள் ஏற்பட்ட தமிழ்த் தேசிய உணர்வு ஈழப் போராட்டம் தொடர்பான வரலாற்று நூல்களின்பால் எனது பார்வையைத் திருப்பியது. சிங்களப் படைகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் வேறுபாடு காணமுடியாத அளவுக்கு தமிழீழ மண்ணில் இந்தியப் படைகள் நடத்திய வேட்டைகளை அறிந்தபோது இரத்தம் கொதித்தது.

அனிதா பிரதாப், ராஜினி திரணகம போன்றவர்களின் அனுபவப் பதிவுகளை படித்தபோது இந்தியா மீது நான் வைத்திருந்த கருத்து தலைகீழாக மாற்றம் பெற்றது. அது மட்டுமல்ல ஈழத்தில் நடத்தியது போன்று தங்கள் சொந்த மாநிலங்களாக இந்தியா கருதிக் கொள்ளும் அஸ்ஸாம் நாகலாந்து கஷ்மீர் போன்ற இடங்களில் இந்தியப் படைகள் நடந்து கொண்ட விதத்தையும் அந்த மக்கள் மீது திணிக்கப் படும் அடக்கு முறைகளையும் அறிய நேர்ந்த போது இந்தியா என்பதே தேசிய இனங்களின் சிறைக் கூடம் என்பதுடன் தேசிய இன விடுதலைக்கு எதிரான வல்லாதிக்க அரசே என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.

சிறு வயதில் நான் எழுப்பிய அந்தக் கோபுரம் சாய்ந்து விழுந்து மண்ணோடு மண்ணாக மாறியது.

Edited by இளங்கோ

  • Replies 77
  • Views 21.5k
  • Created
  • Last Reply

உங்கள் அனுபவப் பகிர்வை யாழிலும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். அடுத்த பகிர்வை எதிர்பார்த்தபடி.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2. காந்தித் தாத்தா வாங்கித் தந்த சுதந்திரம்

gandhifb0.jpg

யாழ்ப்பாணம் டவுனுக்கு செல்லும் போதெல்லாம் யாழ் போதனா மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள அந்த முதியவரின் சிலையை நான் அடிக்கடி கண் வெட்டாமல் பார்த்துக் கொள்வது வழக்கம். வளைந்த முதுகுடன் கோலை ஊன்றி அவர் நிற்கும் அழகு அந்தச் சின்னஞ் சிறு வயதிலேயே ஒரு வித ஈர்ப்பை எனக்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு நாள் எனது தாத்தாவுடன் அவரது கையைப் பிடித்துக்கொண்டு டவுனுக்குச் செல்லும்போது அவரைப் பற்றிக் கேட்டேன். அவர்தான் காந்தித் தாத்தா இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் என்றார் தாத்தா. அன்றிலிருந்து யாழ்ப்பாணம் டவுன் என்றதும் எனக்கு காந்தித் தாத்தாவும் நினைவுக்கு வந்து விடுவார். அதன் பின்னர் எனது மாமா ஒருவர் காந்தியடிகளின் கதையைச் சொன்னதாக ஞாபகம்.

ஒரு முறை எனது தந்தையார் இந்தியாவுக்குச் சென்றபோது காந்தி மகான் கதை என்ற நூலை எனக்கு வாங்கி அனுப்பியிருந்தார். அஹிம்சை என்ற சொல்லை முதன் முதலாக காந்தியடிகளின் வரலாற்றைப் படிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன். இந்தியாவின் விடுதலைக்கு காந்தியடிகளின் அஹிம்சைதான் காரணம் என நான் படித்த பாடசாலைகளிலும் கற்பிக்கப் பட்டது. கத்தியின்றி இரத்தமின்றி போராடிய காந்தியடிகளின் போராட்டமும் இந்திய விடுதலைக்கு அவர் ஆற்றிய பங்கும் எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தின..

காந்தியடிகளின் அஹிம்சைக் கோட்பாட்டைப் காட்டி இந்தியத் தேசிய வாதிகள் ஈழப் போராட்டத்தை சிறுமைப் படுத்திப் பேசி வருகிறார்கள். மகாத்மா காந்தி அஹிம்சை வழியில் போரடி வெற்றி பெற்றது போன்று ஈழத்தமிழர்களும் போராட முடியாத என அவர்கிளின் மேல் மட்டங்களிலிருந்து குரல்கள் இன்றளவும் ஒலிக்கின்றன.

அஹிம்சை உண்மையிலேயே ஒரு நாட்டுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்து விடுமா?

உண்மையில் அஹிம்சை என்பது மக்களுக்கு ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமே தவிர விடுதலைக்கு ஒரு போதும் வழி சமைத்துக் கொடுக்காது. இலெனின், ஹோசமின், ஃபிடல் கஸ்ட்றோ போன்று உலகப் போராட்ட வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்தவர்கள் அனைவரும் நடத்தியது வீரம் செறிந்த ஆயுதப் போராட்டங்களே. ஆஹிம்சைப் போரட்டத்தை எதிரிகள் நசுக்கக்கூடத் தேவையில்லை கண்டு கொள்ளாமல் விட்டாலே போதும் அது பல ஆண்டுகள் நீடித்து வெற்றி பெறாமலே போய்விடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

அப்படி என்றால் இந்தியா எப்படி வெற்றி பெற்றது?

இந்தியாவின் முதல் விடுதலைப்போர் 1857 ஆம் ஆண்டு நடைபெற்றதாக இந்திய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே 1755 ஆம் ஆண்டு திருநெல்வேலி சிவகிரி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டான் செவ்வாலைத் தலைநகராமாகக் கொண்டு ஆட்சிசெய்த புலித்தேவன் என்ற தமிழ் மன்னன் வெள்ளையனே வெளியேறு என்ற வீர முழக்கத்தை எழுப்பினான். விடுதலையின் முதல் குரல் புலித்தேவனிடமிருந்துதான் ஒலித்தது. அவனைத் தொடர்ந்து வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் போன்றவர்கள் விடுதலைப் போரில் ஈடுபட்டார்கள். இவர்கள் நடத்திய போராட்டங்கள்; அனைத்தும் இரத்தம் சிந்திய ஆயுதப் போராட்டங்களே. இவர்களின் போராட்டங்கள் 1806 ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியுடன் முடிவுற்றது. அது மட்டுமல்ல இவர்கள் யாரும் இந்திய உணர்வுடன் போராடவில்லை. ஏங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த வீரபாண்ய கட்டப்பொம்மனை எடுத்துக் கொள்வோம். கட்டப்பொம்மன் யார்? திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி என்ற சிறு பகுதியை ஆண்டு வந்த குறுநில அரசன். அவனுக்கு இருந்த கவலை தன்னுடைய ஆளுமைக்கு உட்பட்டிருந்த பாஞ்சாலங்குறிச்சி வெள்ளையர்கள் கைக்கு போய்விடக்கூடாது என்பது மட்டுமே.

அதேபோன்று வடபுலங்களை எடுத்துக் கொண்டால் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதப் போராட்டங்களை மேற்கொண்ட ஜான்சி ராணி லட்சிமிபாய், ராணா பிராதாப்சிங் போன்றவர்களும் தங்கள் நாட்டு உணர்வுடன் போரிட்டார்களேயன்றி இந்திய உணர்வுடன் அல்ல. 1755 ஆம் ஆண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் 1945 இல் நேதாஜி மறையும்போதும் கனன்று கொண்டுதான் இருந்தது. இவ்வாறு தனித்தனியே நடந்த போராட்டங்களையே பிற்காலத்தில் காந்தியடிகள் ஒன்றாக இணைத்து இந்தியத் தேசியப் போராட்டமாக மாற்றினார். 1920 ஆம் ஆண்டிலிருந்து இந்திய விடுதலைப் போராட்டம் காந்தியடிகளின் தலைமையின் கீழ் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. இருந்தாலும். இந்திய விடுதலைக்கு அவரது அஹிம்சை காரணமில்லை என்பதே வரலாறு காட்டும் உண்மை.

அஹிம்சை இந்தியவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது உண்மை என்றால் பிரிட்டனின் கொலனி ஆதிக்கத்தில் இருந்த இலங்கை, பர்மா (தற்போது மியான்மார்), மலேசியா போன்றவற்றின் விடுதலைக்கும் அஹிம்சையா காரணம்?

உண்மையில் காந்தியடிகள் ஒரு மிதவாதத் தேசியவாதியாகவே தன்னை வெளிக்காட்டி நின்றார். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அவரிடம் காணப்படவில்லை. அவரது போராட்டம் பிரித்தானியாவுக்கு அழுத்தத்தையோ தலையிடியையோ கொடுக்கவில்லை. தேசியத்தை தெய்வீகத்துடன் இணைத்து ஆன்மீக அரசியல் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இரபிந்திரநாத் தாகூர் காந்தியடிகளிடம் ஆன்மீகம் வேறு அரசியல் வேறு, தேசியம் வேறு தெய்வீகம் வேறு எனவே இரண்டையும் ஒன்றாக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டார். ஆனால் காந்தியடிகளோ அதைக் கேட்காமல் ராமராச்சியம் காண வெளிக்கிட்டார்.. எனவே அவரது ஆன்மீக அரசியல் மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டது என்று சொல்வது நகைப்புக்குரியது

இந்திய விடுதலைக்கு எது உண்மையான காரணம் என்பதை John Kenneth Galbraith என்ற கனடிய-அமரிக்க பொருளாதார அறிஞர் தனது A Journey Through Economic Time என்ற நூலில் விரிவாக அலசுகிறார். கொலனியாதிக்கத்தில் உள்ள நாடுகளில் நடந்த போராட்டத்தை மறுத்து பொருளாதாரமே இந்திய விடுதலைக்கு அடிப்படைப் காரணம் என்று கூறுகிறார்.

அவரது கருத்து வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும்போது மிகச் சரியாகவே தென்படுகிறது. தனிப்பட்ட மனித வாழ்வில் தொடங்கி அரசுகள் வரை அனைத்திற்கும் முதுகெலும்பாக விளங்குவது பொருளாதாரக் காரணிகளே. இந்தியா, இலங்கை, பார்மா போன்ற நாடுகளை அடிமை கொண்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கொம்பனி என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலையாய நோக்கம் ஆசிய நாடுகளைச் சுரண்டி தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான். வணிக நோக்கில் வந்தவர்கள் அடுத்து நாடுகளை அடக்கியாளத் தொடங்கினார்கள்.

1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் தென்பட்டன. அமரிக்காவும் சோவியத் யூனியனும் மிகப் பெரிய வல்லரசாக மாறத் தொடங்கின. இரு வல்லரசுகளுக்குமிடையில் பனிப்போர் தொடங்கியது. அதுவரைக்கும் சூரியன் மறையாத பேரரசு என்ற இறுமாப்புடன் இருந்த பிரிட்டன், இரண்டாம் உலகப்போரில் நேரடியாக பங்கெடுத்ததன் விளைவால் பாரிய பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது. எனவே தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுத் தேவை பிரிட்டனுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தனது நாட்டிலிருந்து வெகு தூரத்தில் உள்ள இந்தியா என்ற மிகப் பெரிய நிலப்பரப்பை நிர்வாகம் செய்ய முடியவில்லை. இந்தியாவுக்கு விடுதலையைக் கொடுக்க அவர்கள் முடிவுசெய்கிறார்கள். இதுதான் இந்திய விடுதலையில் ஒளிந்திருக்கும் உண்மைக் காரணம்.

எனவே காந்தித் தாத்தாவால் சுதந்திரம் கிடைத்தது என்ற கருத்து மிகைப் படுத்தப் பட்டது என்பது மட்டுமல்ல வரலாற்றுக்கு முரணானதும் கூட..

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள். 80ஆம் ஆண்டுகளில் சில விடுதலை இயக்கங்கள் காந்தியிலும் பார்க்க சுபாஷ் சந்திரபோஸ் க்குதான் இந்திய சுதந்திரத்தில் அதிக பங்கு உண்டு என்ற கருத்தை கொண்டிருந்தவர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3. ஆதியும் அந்தமும் இல்லா இந்து மதம்

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இந்து மதப் பற்று என்னுள் ஒட்டிக் கொண்டு வந்ததாகவே உணர்ந்திருக்கிறேன். புராணங்களும் இதிகாசங்களும் எனக்கு மனப்படமாகி விட்டன. கவியரசர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதத்தை சிறுவயதிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். வாரியார் சுவாமிகள் எழுதிய கட்டுரைகளையும் சொற்பொழிவுத் தொகுப்புக்களையும் மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன்.

பழம் பெரும் சமயம் எல்லா மதங்களுக்கும் முதற்தோன்றிய மதம் என்றும் அது எங்களின் மதமாக இருக்கிறது என்பதை நினைத்து பெருமைப் படத் தொடங்கினேன். இன்றோ அந்தக் கோபுரமும் சாய்ந்து நொருங்கிவிட்டது. எவ்வாறு இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப் பட்ட நிர்வாகக் கட்டமைப்போ அதுபோல்தான் இந்து மதமும் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப் பட்ட மதக் கட்டமைப்பு.

இந்து மதத்தின் தோற்றுவாய் எது?

கி.மு. 15 ஆம் நூற்றாண்டளவில் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஹைபர் கணவாய் வழியா நுழைந்தனர் பண்பாட்டு படை எடுப்பாளர்களான ஆரியர்கள். இவர்களின் வருகையால் ஏற்கனவே சிந்து சமவெளி நாகரிகத்தை அமைத்து மேம்பாட்டுடன் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடும் நாகரிகமும் சிதைவுற்றது. ஆரியர்களின் வரவுக்குப் பின் அவர்களின் வேதமதமாகிய ஆரிய மதம் பரவத் தொடங்கியது. நான்கு வேதங்களான ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதால் அதற்கு வேதமதம் என்ற பெயர் வழங்கப் படலாயிற்று. பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் வருணாசிரம தர்மம்தான் அதன் அடிப்படைத் தத்துவம். அதுவே பிற்காலத்தில் இந்துமதம் எனப் பெயர் பெற்றது.

இந்து மதம் என்றோரு மதம் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. முதன் முதலாக அரேபியர்கள் 13 ஆம் நூற்றாண்டளவில் வடமேற்கிலிருந்து வந்த ஆரியர்களின் வேதமதத்தைக் குறிப்பதற்காக இந்து என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதற்கு முன் வேதங்களிலோ, உபநிடதங்களிலா, புராண இதிகாசங்களிலோ இந்து என்ற சொல் பயன் படுத்தப் படவில்லை.

வராலாற்றை ஆராயும் பொழுது சிந்து நதிக்ககரையை ஒட்டி இருந்த இடங்கள் ஹிந்துஷ் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அதற்குச் சான்றாக கிரேக்க கல்வெட்டுக்கள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அனால் அது ஒரு மதத்தையோ அல்லது பண்பாட்டையே குறிப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை. புவியியல் தன்மையுள்ள இந்தச் சொல் இந்தியர்களின் சமையச் சொல்லாக ஆங்கிலேயர்கள் தங்களது நிர்வாக வசதிக்காகவும் பிரித்தாளும் தந்திரத்திற்காகவும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கொம்பனியின் நிர்வாகம் ஏற்பட்டவுடன், அவர்களது ஆளுமைக்கு உட்பட்டிருந்த நிலப் பகுதியல் வாழ்ந்த மக்களை முஸ்லீம்கள் என்றும் முஸ்லீம் அல்லாதவர்கள் என்றும் பிரித்தனர். முஸ்லீம் அல்லாதவர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழ்ந்ததால் அவர்கள் எல்லோருக்கும் பொதுவான சட்ட நெறிகளை உருவாக்கி அதற்கு இந்துச் சட்டம் (Hindu Code). எனப் பெயரிட்டனர். அவர்கள் அவ்வாறு சட்டத்தை உருவாக்க முனைந்தபோது பார்ப்பனர்கள் அவர்களுக்கு மனு தர்ம சாஸ்திரத்தைக் கொடுத்து அதன் அடிப்படையில் சட்டத்தை உருவாக்க வைத்தனர். அது வரைக்கும் அப்படி ஒரு சட்டம் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. பார்ப்பனரும் பிரிட்டிஷாரும் சேர்ந்து பல்வேறு வகையான மதக் கருத்துக்களை, சமய மரபுகளை, வழிபாடுகளை ஒன்றிணைத்து அந்தக் கலவைக்கு இந்து மதம் எனப் பெயரிட்டனர்.

மனுதர்மத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதால் இந்து மதம் என்பது முழுக்க முழுக்க பார்பனர்களின் வேத மதத்தின் நீட்சியாக அமைந்து விட்டது.

சைவமும் மாலியம் என்று அழைக்கப்பட்ட வைணவமும் தமிழ் மண்ணில் தோன்றிய சமயங்களாக தோற்றம் பெற்றாலும் பௌத்தம் மற்றும் சமணத்தைப்போல் பார்ப்பனியத்தை எதிர்த்துக் கொண்டு எழவில்லை. மாறாக அதை நன்றாக உள்வாங்கிக் கொண்டதோடல்லாமல் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற பௌத்தத்தையும் சமணத்தையும் கடுமையாகச் சாடி நின்றன. சைவமும் வைணவமும் பார்ப்பனியத்தை உள்வாங்கிக் கொண்டதால் அந்தச் சமயங்களை இந்து மதம் தன்னுள் சேர்த்துக் கொண்டது. பௌத்தமும் சமணமும் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்றதால் இஸ்லாம் அல்லாதவை என்ற அடிப்படைக்குள் அவை இந்து மதத்தோடு சேரவில்லை.

வெள்ளைக்காரகளால் உருவாக்கப் பட்ட மதம்தான் இந்து மதம் என்பதை இந்துக்களால் போற்றி வணங்கப் பட்ட காலஞ் சென்ற காஞ்சி சங்கராச்சாரி சந்திரசோரேந்திர சரஸ்வதி தனது தெய்வத்தின் குரல் என்ற நூலில்

"வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது"

என்று வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறார்

எனவே எல்லா மதங்களைக் காட்டிலும் மிகவும் பிற்காலத்தில் தோன்றிய மதம்தான் இந்துமதம். அதற்கும் ஆதி, அந்தம் போன்றவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றிகள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4. இந்து மதத்தின் கொல்லாமை

ஈழத்தில் நான் வாழ்ந்த சின்னஞ்சிறு வயதில் கிழமைக்கு ஒரு தடவைதான் அசைவம் உண்பதற்கு வழி கிடைக்கும். எனது குடும்பமும் பக்தியில் ஊறிய வைதீகக் குடும்பம் என்பதால் விரதங்களுக்கும் குறைவில்லை. நவராத்திரி, அல்லது எங்கள் ஊர்க் கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கிவிட்டால் தொடர்ந்து 10 அல்லது 15 நாட்கள் அசைவ உணவு முற்றிலுமாக தவிர்க்கப்படும். அந்தச் சிறிய வயதில் நானும் பக்தியில் திளைத்திருந்ததால் அவற்றை முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டிருந்தேன்.

அதே நேரம் இந்த சைவக் கட்டுப்பாடு பிற சமயங்களைப் பின்பற்றுபவர்களிடம் இல்லை என்பதையும் உணர்ந்திருந்தேன். இதற்கான காரணத்தை எனது வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டபோது, இந்து மதம் கொல்லாமையை வலியுறுத்தும் அளவிற்கு மற்ற மதங்கள் வலியுறுத்துவதில்லை, இந்து மதம் மட்டுமே மச்சம் மாமிசம் உண்பதைக் கண்டிக்கிறது என்று அவர்களிடமிருந்து பதில் வந்தது. இதை எண்ணிப் பார்க்கும் போது எனது மனம் இனித்தது. என்ன இந்து மதத்தின் தன்மை என எண்ணினேன். அதுவும் என் மனதில் கோபுரமாக உயர்ந்தது. ஆனால் இன்றோ இந்து மதத்திற்கும் கொல்லாமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இந்து மதத்தின் எந்த நூல்களுமே கொல்லாமையை வலியுறுத்தவில்லை. மாறாக உயிர்க் கொலை செய்வதை அவை நியாயப் படுத்துகின்றன. உயிர்களைக் கொன்று யாகத் தீயில் பலியிடும் வழக்கம் பண்டைய ஆரியர்களின் மரபில் மிகச் சாதாரணமாகக் காணப்படுகின்றது. இவ்வளவு ஏன் இந்து மதத்தின் புனிதச் சின்னமான பசுவைக் கொலை செய்வதையே இந்து மதத்தின் புனித நூல்கள் நியாயப் படுத்துகின்றன.

இந்து மதத்தின் மிக முக்கிய நூலான மனுதர்மம் புலால் உண்பதை அனுமதிக்கிறது. பசுக்களை யாகத்தில் வெட்டிப் பலியிடவேண்டும் என்றும் யாகத்தில் படைக்கப் பட்ட பசு இறைச்சியை உண்பது தெய்வீகச் செயல் என்றும் உரைக்கிறது. அத்துடன் வேள்வி சிரார்த்தம் போன்றவற்றில் தரப் படும் இறைச்சியை உண்ண மறுக்கும் பிராமணன் இருபத்தியொரு முறை விலங்ககாப் பிறப்பான் என்றும் கூறுகிறது. (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 5 சூத்திரம் 27 30 35 39).

இந்து மதத்தின் முக்கிய முனிவர்களான தேவகுரு பிரகஸ்பதி, யாக்ஞவல்கியர், பிரஜாபதி போன்றவர்கள் பசு இறைச்சி உண்பது பாவமல்ல என்று கூறியிருக்கின்றார்கள். கந்த புராணம், தேவி புராணம், விஷ்ணு புராணம், கருட புராணம் போன்ற புராணங்களும் பசு இறைச்சி உண்பதை நியயப் படுத்துகின்றன.

இந்து மதத்தில் கடவுள்களகக் கருதப்படும் சிவன், விஷ்னு, போன்றவர்கள் மது மாமிசம் போன்றவைகளை விரும்பி உண்டதாக புராணங்கள் கூறுகின்றன. மற்றும் இந்திரன், அக்னி, யட்சன், சோமா, அஸ்வினிகுமாரர்கள் போன்றவர்கள் மாட்டிறச்சியை விரும்பி உண்டாதாக பார்ப்பனரின் புனித சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதிகாசக் கதாபாத்திரங்களான இராமன், சீதை, பாண்டவர்கள், திரௌபதி போன்றவர்கள் பசு இறைச்சியை விருந்தாகப் படைத்துத் தாங்களும் உண்டாதாக இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் நஞ்சு தடவப் படாத அம்புகளால் மான்களை வேட்டையாடி அவற்றை பிராமணர்களுக்குக் கொடுத்த பின் தாங்களும் உண்டதாகவும் ஜெயத்திரதனுக்கும் அவனது படைவீரர்களுக்கும் பாஞ்சாலி ஐம்பது மான்களைக் கொன்று விருந்து படைத்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது.. மகாபாரதத்தின் பதினெட்டு பர்வங்களில் ஒன்றான அனுசான பர்வத்தில் நாரதர் பிராமணர்களுக்கு இறைச்சி, அரிசி, நெய், பால் போன்றவற்றை வழங்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார். வால்மீகியின் இராமாயணத்தில் இளம் கன்றின் இறைச்சியை அரச குரு வசிஷ்டர் சுவைத்து உண்டதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதே இராமாயணத்தில் தசரதன் தனக்கு வாரிசு வேண்டி 'புத்திர காமேஷ்டி' யாகம் செய்த போது பல நூற்றுக் கணக்கான விலங்குகளை வெட்டி யாகத்தில் பலியிட்டதாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

இந்து மதத்தின் அணிவேராக விளங்கும் பகவத்கீதை உயிர்களைக் கொன்று உண்பது பாவம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. இந்து மதம் விலங்குகளை மட்டுமல்ல, நரபலி இடுவதையும் நியயாயப் படுத்துகிறது. மகாபாரதத்தில் குருட்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அருச்சுனனின் புதல்வர்களில் ஒருவனான அரவானை கண்ணன் நரபலியிட்டதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.

மனைவியானவள் தனது கணவனுக்கு செய்யும் பணிவிடைகளிலிருந்து தவறினால் அவளை வேட்டை நாய்களால் கடிக்கவிட்டு கொல்ல வேண்டும் என்று மனுதர்மம் கூறுகிறது. (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8 சூத்திரம் 371 - 372 ).

வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதம் கணவன் இறந்தால் மனைவி தீக்குள் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது (ரிக். 10, 18.7)

வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்த புகழ் பெற்ற இந்திய ஆய்வாளர்களான ராகுல் சங்கிருத்தியாயன், ராஜேந்திர லால் மித்ரா, லட்சுமண சாஸ்திரி, மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளரான ஹெச்.டி.சங்காலியா போன்றவர்கள் உயிர்களை யாகத்தில் பலியிடுவதும் அவற்றை இறைச்சியாக உண்பதும் வேதகால இந்தோ-ஆரியர்கள் மத்தியில் நிலவி வந்திருக்கிறது என்பதையும் பிராமணர்களின் தர்ம சாஸ்திர நூல்கள் அவற்றை நியாயப் படுத்துகின்றன என்பதையும் மறுக்க முடியாத சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது கொல்லாமைக்கும் இந்து மதத்திற்கும் எந்த வித தெடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. உண்மையில் உயிர்க் கொலைகளைக் மிகக் கடுமையாக கண்டித்தவர்கள் பௌத்தத்தைத் தோற்றுவித்த புத்தரும் சமணத்தைத் தோற்றுவித் மகாவிரரும்தான். வேள்வித் தீயில் உயிர்களைப் பலியிடுவதை தீவிரமாக எதிர்த்தார்கள். மனிதர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகக் கடுமையான அறக் கோட்பாடுகளை வலியுறுத்தினார்கள். எடுத்துக்காட்டாக, நடக்கும் பொழுது பூச்சி, புழு, எறும்பு போன்ற உயரினங்கள் காலில் மிதிபடக் கூடது என்பதற்காக நிலத்தைப் பெருக்கிக் கொண்டோ அல்லது பாதங்களில் மெதுவான பஞ்சு போன்றவைகளை கட்டிக்கொண்டுதான் நடக்க வேண்டும் என்றார்கள். அதிலும் மகாவீரர் பல படிகள் மேலே போய் பச்சைத் தாவரங்களைத் தவிர்த்து காய்ந்து போன சருகுகளை உண்ணுமாறு வேண்டினார். பௌத்தமும் சமணமும் வலியுறுத்திய கொல்லாமை என்ற அறக் கோட்பாட்டிற்கும் இந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

Edited by இளங்கோ

உங்கள் கோபுரம் சாந்ததுபோல்,

எங்கள் கோபுரமும் சாயும் உண்மையை உணர மறுக்கும் நினைப்புகள். கடவுளின் படைப்புகள் பரிணாமம் அற்றவை. மனிதர்களின் படைப்புகள் பரிணாமமுடையவை. மொழி, கலாச்சாரம், பண்பாடு, சிந்தனை போன்ற அனைத்தும் இவாரானவையே.

வாழ்வென்பது நிஜம் இழல்லல. life is real.

மீறி இலக்கணமாகும் மனிதர்கள் மதியில், மீற இலக்கணம் படிப்பது சுலமபல்ல!

post-3580-1176117935_thumb.jpg

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் உள்ள விளம்பரக் கழிவுகளை தாங்கி ஓசியில் வரும் ஒரு பேப்பரில... உந்தக் கட்டுரைகள் வாறது பெரியவிடயமல்ல..! இந்தக் கட்டுரைகளில் எடுத்தாளப்பட்டுள்ள இந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் புனையப்பட்ட திரிபுகளுக்கு உசாத்துணையாக்கப்பட்டுள்ளன..! ஓசிப் பேப்பர் நடத்துபவர்கள் தயவு செய்து பத்திரிகை பூரா எழுத்துப்பிழையைக் கவனிக்காமல் இருப்பது போல ஆக்கங்களுக்குள் தனிநபர்கள் தங்கள் இஸ்டத்துக்கு செருகுபனவற்றையும் கவனிக்காது ஆதார உறுதிப்படுத்தல்கள் சரியானவையா என்று நோக்காமலே பிரிசுரிப்பீர்கள் என்றால் உங்கள் பத்திரிகை வாசிக்க முதலே குப்பைக்குள்ளதான் போட வேண்டி வரும்..! அப்புறம் விளம்பரமும் இல்ல வருமானமும் இருக்காது..! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் வரும் பத்திரிகைகளில் அநேகமாக ,சினிமாவிளம்பரங்கள்,மனிதசாமி

சரித்திரம் சான்றலிக்கும் சாட்சியை ஒதுக்காதீர்கள். உங்கள் சாட்சியையும் கொடுங்கலேன். இதில் வருவது தவறென்றால். யாழ் கருத்துகளம், ஒரு கருத்துக்களமாக மாறட்டும். தூற்றூவதை நிறுத்தி, சாட்சிகளை முன்வையுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் உள்ள விளம்பரக் கழிவுகளை தாங்கி ஓசியில் வரும் ஒரு பேப்பரில... உந்தக் கட்டுரைகள் வாறது பெரியவிடயமல்ல..! இந்தக் கட்டுரைகளில் எடுத்தாளப்பட்டுள்ள இந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் புனையப்பட்ட திரிபுகளுக்கு உசாத்துணையாக்கப்பட்டுள்ளன..! ஓசிப் பேப்பர் நடத்துபவர்கள் தயவு செய்து பத்திரிகை பூரா எழுத்துப்பிழையைக் கவனிக்காமல் இருப்பது போல ஆக்கங்களுக்குள் தனிநபர்கள் தங்கள் இஸ்டத்துக்கு செருகுபனவற்றையும் கவனிக்காது ஆதார உறுதிப்படுத்தல்கள் சரியானவையா என்று நோக்காமலே பிரிசுரிப்பீர்கள் என்றால் உங்கள் பத்திரிகை வாசிக்க முதலே குப்பைக்குள்ளதான் போட வேண்டி வரும்..! அப்புறம் விளம்பரமும் இல்ல வருமானமும் இருக்காது..! :lol::rolleyes:

வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டவைகளைத்தான் தந்திருக்கிறேன். இந்து மதத்திற்கு அடிப்படையே அவைகள்தான். புராணங்கள் இல்லை என்றால் இந்து மதமும் இல்லை கடவுள்களும் இல்லை.

பார்வதி தேவியார் தனது அழுக்கை உருண்டையாக்கி பிள்ளையாராக்கினார் என்பதும் அவரது கண்ணாளர் சிவனார் தாருகா வனத்தில் முனி பத்தினிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்பதெல்லாம் பக்த கோடிகள் பாராயணம் செய்யும் புண்ணிய ஏடுகளில்தான் கூறப்பட்டுள்ளன.

இவைகள் எல்லாம் ஈரோட்டுச் சரக்குகள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டவைகளைத்தான் தந்திருக்கிறேன். இந்து மதத்திற்கு அடிப்படையே அவைகள்தான். புராணங்கள் இல்லை என்றால் இந்து மதமும் இல்லை கடவுள்களும் இல்லை.

கடவுளே இல்லை என்றவனுக்கு எதுக்கு புராணம் கடவுள் பற்றிய ஆராய்ச்சி..! உலகத்தை ஏமாற்றவா..??!

பார்வதி தேவியார் தனது அழுக்கை உருண்டையாக்கி பிள்ளையாராக்கினார் என்பதும் அவரது கண்ணாளர் சிவனார் தாருகா வனத்தில் முனி பத்தினிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்பதெல்லாம் பக்த கோடிகள் பாராயணம் செய்யும் புண்ணிய ஏடுகளில்தான் கூறப்பட்டுள்ளன.

சிவபெருமான் முன் பத்தினிகளோடு வல்லுறவு கொண்டுட்டார் என்று நீங்க பிரகடனப்படுத்தி அவரை என்ன கையாலத்தில ஈரோட்டுக் கிழவனைக் கொண்டு தூக்கில போடப் போறியளா..??!

இவைகள் எல்லாம் ஈரோட்டுச் சரக்குகள் அல்ல.

ஈரோட்டு சரக்கில என்ன படிக்க இருக்கு.. தூசணம் தானே..!

ரிக். 10, 18.7 இப்படின்னு போட்டிருக்கீங்களே இதன் அர்த்தம் என்ன.. விளக்குவீங்களா சார்..??! :lol::rolleyes:

ரிக் பல இடைச்செருகல்களுக்கு ஆளாகியுள்ளது என்பதையும் அதன் தற்போதுள்ள வடிவமே இந்து மதக் கொள்கைகளின் பிரதிபலிப்பு என்பது தவறான பார்வைகள். அந்தத் தவறை நீங்கள் செய்ய ஒரு பேப்பர் அதைத் தொடர்கிறது..!

கீழுள்ள இணைப்பைப் படிக்கவும்..

"

ரிக் வேதம் ஒரு மத நூலோ, தத்துவ சாஸ்திரமோ இல்லை. கவிதைகளின் தொகுப்பு. ஆனால் அவை ஆதி ஆரியர்களின் சமுதாய அமைப்புகளையும், சமூக உறவுகளையும், நாகரிக நிலவரத்தையும் பிரதிபலிக்கின்றன.

அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பது மட்டுமல்லாது அவர்களது மத நம்பிக்கைகளும், சிந்தனைகளும், ஆசா பாசங்களும் எப்படிப்பட்ட தரத்தில் இருந்தன என்பது போன்றவற்றை ரிக் வேதத்தில் இருந்து ஓரளவிற்குத் தெரிந்து கொள்ள முடியும்.

நாம் வேதங்கள் என்று அழைக்கின்றவை இப்படி தலைமுறை தலை முறையாக வாக்கால் உச்சரித்து பரப்பப்பட்ட ஸூக்தங்களும் மந்திரங்களின் தொகுப்புகள்தான் அந்த மந்திரங்களும் ஸூக்தங்களும் ஒரே கவிஞராலோ ஒரே காலத்திலோ உண்டாக்கப்பட்டதல்ல.

பலராலும் பல்வேறு கால கட்டங்களில் சொல்லப்பட்டு பின்னால் ஒன்று சேர்க்கப்பட்டவைகளாகும். ``விண்டர்றிஸ்’’ அபிப்பிராயப்படுவது போல ரிக்வேத ஸூக்தங்கள் ரசிக்கப்பட்ட காலத்திலும் பின்னால் ரிக்வேத சம்கிதை என்ற பேரில் ஒழுங்குபடுத்தப்பட்ட காலத்திற்கும் இடையில் பல நூற்றாண்டுகள் கடந்து இருக்கும்.

வேதங்கள் இரண்டு கால கட்டங்களில் தழைத்து வளர்ந்தன. ரிஷிகளோ, புரோகிதங்களோ என்று கருதப்பட்ட பல தரப்பட்ட கவிகள் ஸ்தோத்திரங்களை ரசித்து பாடினர்"

இப்படி ஒப்புதல் வாக்குமூலம் அளிச்சிருக்கிறது யார் தெரியுமா.. ஈரோட்டின் வாலுகள்..!

http://vanjoor-vanjoor.blogspot.com/2007/0...og-post_01.html

இது விடயத்தில் அரத்தை மாவை அரப்போமா துவைச்ச துணியை துவைப்போமா என்ற நிலையில் இருக்க விரும்பல்ல..! :D:o

Edited by nedukkalapoovan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

5. கிறிக்கெற்

gangulyqt1.gif

உலகக் கோப்பை கிறிக்கெற் போட்டிகள் தொடங்கி இறுதியாட்டம் நெருங்கி விட்டது. நம் தமிழ் உறவுகளும் வெகு உற்சாகத்துடன் தொலைக் காட்சிப் பெட்டிகளுக்கு முன் சரண் அடைந்து விட்டார்கள். நமது தமிழ் இரசிகப் பெருமக்களின் அபிமான அணியான இந்தியா இதில் படு தோல்வி அடைந்து தொடக்கத்தில் வெளியேறி விட்டது.

தொடர்ந்து முன்னேறி வரும் இலங்கை அணியின் ஆட்டத்தை ஈழத் தமிழர்களில் சிலர் வெகுவாக இரசிப்பதுடன் உலக கோப்பைக் கனவுகளிலும் மிதக்கத் தொடங்கி விட்டனர். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தாயகத்தில் நடக்கும் அரசியல் போராட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்து கவலையுடனும் ஈடுபாட்டுடனும் என்னுடன் விவாதிப்பார். இந்த உலகக் கோப்பை தொடங்கியதுடன் அவரது விவாதத்தின் கருப் பொருளாக கிறிக்கெற் வந்து விட்டது.

விளையாட்டையும் அதனால் ஏற்படும் நன்மையையம் புரிந்து கொள்பவர்கள் கிறிக்கெற்றை ஒரு விளையாட்டாகவே கருத மாட்டார்கள். கிறிக்கெற் உலக அளவில் செல்வாக்குப் பெற்ற ஒரு விளையாட்டு அல்ல. கிறிக்கெற் இங்கிலாந்தில்தான் தொடங்கப்பட்டது, ஆனால் இங்கிலாந்து நாட்டவர்களே அதில் ஈடுபாடு காட்டுவதில்லை. இத்தகைய விளையாட்டைத்தான் நம்மவர்கள் விழுந்தடித்துக் கொண்டு பார்க்கிறார்கள். 8 மணி நேரம் என்பது ஒரு நாள் முழு வேலை நேரத்தின் கணக்கு. அதை கிறிக்கெற்றில் செலவழித்து விடுவதால் பார்ப்பவர்களுக்கு சோம்பேறித்தனம்தான் அதிகரிக்கிறது.

கிறிக்கெற் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகளால் நமது தமிழ் சிறார்களும் இளைஞர்களும் நமது தமிழ் மண்ணின் மரபுசார் விளையாட்டுக்களான சிலம்பம், சடுகுடு, கிளித்தட்டு, இளவட்டக் கல், உரி மரம் ஏறுதல், ஆடு புலி ஆட்டம், வண்டி ஓட்டம் போன்றவற்றை எல்லாம் மறந்து கிறிக்கெற் மட்டையை தூக்கிக்கொண்டு அலைகின்றனர்.

இந்த அலைச்சலுக்கு நானும் விதிவிலக்காக இருந்ததில்லை. சிறுவயதிலிருந்தே ஒரு கிறிக்கெற் பற்றாளனாகவே வாழ்ந்திருக்கிறேன். 1992 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடர்தான் நான் முதன் முதலாக பார்க்கத் தொடங்கிய கிறிக்கெற் போட்டிகள். அன்றிலிருந்து கிறிக்கெற்றின் இரசிகனாக, அதிலும் இந்திய அணியின் தீவிர ஆதரவாளனாக மாறினேன். 1999 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறிலங்கா அணிக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் சௌரவ் கங்குலியின் விளாசலைத் தொடர்ந்து கங்குலியின் போஸ்டரை எனது அறைச் சுவரில் ஒட்டும் அளவுக்கு எனது கிரிக்கற் மோகம் எல்லை மீறிப் போனது. நாளடைவில் எனது கிரிக்கெற் கோபுரமும் சாய்ந்து விட்டது.

ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தின் எச்சங்களில் ஒன்றுதான் இந்தக் கிறிக்கெற். இன்றும் அதன் கொலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் மட்டும்தான் கிறிக்கெற் உள்ளது வேறு எந்த நாட்டிலும் இது இல்லை. ஆசியாவை எடுத்துக் கொண்டால் கொலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த இந்தியா இலங்கை போன்ற நாடுகளில்தான் உள்ளதேயன்றி ரஷ்யா, சீனா, ஜப்பான், வியட்னாம் போன்ற பிற ஆசிய நாடுகளில் விளையாடப் படுவதில்லை. ஆபிரிக்காவை எடுத்துக் கொண்டால் தென்னாபிரிக்கா கென்யா போன்ற ஓரிரு நாடுகளில்தான் விளையாடப் படுகிறது.

நான் பிரான்சில் இருந்த போது எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். எல்ல விளையாட்டுகளும் உள்ள பிரான்சில் இதற்கு சிறு இடம் கூட இல்லை. இதை எனது விளையாட்டு ஆசிரியரிடம் (பிரஞ்சு நாட்டவர்) கேட்டபோது அவர் கூறிய பதில் என்னை திகைக்க வைத்தது. "அதை விளையாடுபவர்களும் முட்டாள்கள் அதைப் பார்ப்பவர்களும் முட்டாள்கள்" என்றார். அவர் விளையாட்டுத்துறையில் ஈடுபட்டிருப்பதால் விளையாட்டுக்கள் பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருபவர். கிறிக்கெற்றை இவ்வளவு மட்டமாக திறனாய்வு செய்தவர் இந்தியாவில் விளையாடப் படும் ‘கபடி’ எனும் ஆட்டத்தை மனம் திறந்து பாராட்டனார். இந்தக் கபடி வேறொன்றுமில்லை தமிழர்களின் மரபுசார் விளையாட்டுக்களில் ஒன்றான சடுகுடுதான். ஆனால் நம்மவர்களோ தமிழர்களின் விளையாட்டுக்களை அறியாமலே காலத்தை ஓட்டுகிறார்கள். இவர்கள் இவ்வவு தூரம் உயர்த்திக் பிடிக்கும் கிறிக்கெற் எப்படிப் பட்டது?

ஒருவர் பந்தை ஏறிவார் இன்னொருவர் அதை அடிப்பார் மற்றவர்கள் அதைப் பிடிக்க ஓடுவார்கள். இதன் தன்மையை அறிந்துதான் ஐரிஷ் நாட்டு நாடக மேதை ஜோர்ச் பேர்னாட்ஷா அவர்கள் "22 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 22 ஆயிரம் முட்டாள்கள் பார்த்துக் கொண்டிருக்கும் விளையாட்டு" ("Cricket is a game played by 22 fools and watched by 22,000 fools") என்றார்.

ஆங்கிலேயர்களின் பூர்விக நாடான இங்கிலாந்திலேயே செல்வாக்கு இழந்து விட்ட இந்த விளையாட்டிற்கு அதன் கொலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காட்டப் படும் முக்கியத்துவம் மலைக்க வைக்கிறது. புராணக் கதாபாத்திரங்களைக் கடவுளாக வணங்குவதுபோல் இவர்களையும் கடவுளாகவும் அவதார புருஷர்களாகவும் நினைக்கத் தொடங்கி விட்டனர். இவர்கள் காட்டும் பேராதரவால் கிறிக்கெற்றின் செல்வாக்கு ஏனைய விளையாட்டுக்களை பின் தள்ளி விட்டதுடன் அரசியல் கழிவுகளும் இதில் கலந்து விட்டன.

இன்று தங்களின் நாடு தமிழீழம் என்பதை மறந்து சிறிலங்கா அணிக்கு ஆதரவு காட்டும் ஈழத் தமிழர்கள் அந்த அணிக்குள்ளும் சிங்கள இனவாதம் இருக்கிறது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள். இந்தியாவை எடுத்துக் கொண்டால் அதன் அணியில் விளையாடுபவர்கள் யார்? அனைவரும் சாதி அடிப்படையிலும் வர்க்க அடிப்படையிலும் உயர்ந்தப் பட்ட மேல் தட்டுப் பிரிவினரே!

கிறிக்கெற் வருமானத்தைக் காட்டிலும் மிக அதிகமாக விளம்பரப் படங்களில் நாடித்து கோடிக் கணக்கில் பணத்தைக் குவிக்கின்றனர் கிறிக்கெற் அணியினர். ஆனால் அந்த கிறிக்கெற்றைப் பார்த்து விட்டு தென்னம் மட்டையை எடுத்துக்கொண்டு வயல் வெளிகளில் அலையும் ஏழைச் சிறுவர்களும் இளைஞர்களும் இன்று வரை அன்றாடங் காய்ச்சிகளாகவே இருக்கின்றனர்.

உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியையும் வலிமையையும் தருவதுதான் விளையாட்டு. ஆனால் நம் தமிழ் உறவுகளோ கிறிக்கெற் மோகத்திற்கு பலியாகி தொலைக் காட்சி பெட்டிகளின் முன் தங்களது முழு நேரத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது தமிழ்ப் பாரம்பரிய விளையாட்டுக்களான சிலம்பம், சடுகுடு, கிளித்தட்டு, இளவட்டக் கல், உரி மரம் ஏறுதல், ஆடு புலி ஆட்டம், வண்டி ஓட்டம் போன்றவை உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் விளையாட்டுக்கள். நமது மண்ணும் அது சார்ந்த மரபுகளும் மதிக்கப் படவேண்டும்.

மரபுகளில் பிற்போக்குத் தன்மைகள் இருந்தால் நாம் அதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக தமிழகத்தில் அலங்க நல்லுரில் நடைபெறும் ஜல்லிக் கட்டு எனப் படும் ஏறுதழுவுதல் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று ஆனால் அதனால் தேவையற்று உயிரிழப்புக்களும் இரத்தக் களரிகளும் ஏற்படுகிறது. தமிழீழத்தில் அது இல்லை என்றாலும் இது போன்ற உயிராபத்து நிறைந்த விளையாட்டுக்களை தமிழர்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் ஆனால் ஏனைய நமது மரபு சார் விளையாட்டுக்களை காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பித்து அவற்றை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதுதான் நமக்கு அழகு, அதை விடுத்து கிறிக்கெற் மோகத்திற்கு இரையாகி மட்டையோடு அலைவது அல்ல.

Edited by இளங்கோ

நல்ல பதிவுக்ள்...எப்பொழுது இந்த துடுப்பாட்ட போட்டி முடியும் என்று இருக்கின்றது....இதனால் எங்கும் தொல்லை

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவ வரிகளிற்கு பாராட்டுக்கள் இளங்கோ தொடருங்கள் ஆனால்ஈழத்தில் இந்திய படையின் அட்டகாசங்களின் பின்னரும் 90 வரை உங்கள் கற்பனை கோபுரம் சாயாமல் இருந்தது ஆச்சரியமாகதான் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் உள்ள எம்ம்வர்களுக்கு கிரிக்கட் ஒரு அத்தியாவசியமான விளையாட்டாக போய் உள்ளது. அப்பர் சிங்க கொடி டீசர்யுடன் சிறிலங்கா வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பார் ஆனால் மகன் அவுஸ்ரேலிய டீமுக்கு விளையாட வேண்டும் என்று பிர்த்தியோக பயிற்சிகள் கொடுத்து கொண்டு இருப்பார்கள்,மகனும் சிறீலங்கா டீசர்ட் போட்டு கொண்டு தான் இருப்பார்,இவர்களை எந்த ரகத்தில் சேர்பது என்று புறியவில்லை.ஏன் தான் இவர்களுக்கு போலி வேசம் என்று புரியவில்லை,அவுஸ்ரேலியாவில் வளரும் தனது மகனுக்காவது எமது பிரச்சினைகளை கூறலாம் தானே,ஏதோ சிறிலங்காவில் பிரச்சினைகள் இன்றி வாழ்ந்ததாகவும் இங்கு வந்த பின் இங்கு தாங்கள் பலதரபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக அவர்களின் கதை இருக்கும்.

அற்புதமான் கவிதை,

வரவேற்கிறேன்

www.tamil.2.ag

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களை பதித்துக் கொண்டிருக்கும் அன்புறவுகளுக்கு நன்றிகள்

Edited by இளங்கோ

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

6. அனைத்துலக மொழியா ஆங்கிலம்?

தமிழர்களில் பலருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் மோகம் ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட ஒரு ஆங்கிலேயனுக்குக் கூட இருக்குமோ தெரியாது என்று சில ஆண்டுகளுக்கு முன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கூறினார். அவர் தமிழ் நாட்டுத் தமிழர்களைக் குறிப்பாக சொல்லியிருந்தாலும் ஈழத் தமிழர்கள் பலருக்கும் அவர் கூறிய வரி பொருந்தாமல் இல்லை.

ஆங்கிலம் சிறு பருவத்திலேயே தமிழ் சிறார்கள் மீது திணிக்கப் படுகிறது. அதற்கு நம்மில் பெரும்பாலானோர், ஆங்கிலம் அனைத்துலக மொழி (International Language), அதைக் கற்பதால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு காரணத்தை முன்வைப்பார்கள்.

காலம் காலமாக முன்னிறுத்தப் படும் இந்தக் கருத்தால் ஒருவரது கல்வித் தகமையை ஆங்கிலம் நிர்ணயிக்கும் அளவிற்கு மாறியிருக்கிறது. தமிழில் அதியுர் கல்வி கற்ற ஒரு பேராசியருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்காவிட்டால் அவர் படிக்காதவர் என்றும் அதே நேரம் பத்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த ஒருவர் நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிந்தால் அவர் படித்தவர் என்ற நினைப்பும் தமிழ் சமூகத்தில் இருந்து வருகிறது. தமிழ் நாட்டுத் திரைப் படங்களும் ஆங்கிலம் பேசும் திறனை வைத்தே படித்தவனையும் படிக்காதவனையும் வேறு படுத்திக் காட்டும் வழக்கத்தை தொடர்ந்து செய்கின்றன.

சிறு வயதிலிருந்தே ஆங்கிலக் கல்வி எனக்கு திணிக்கப் பட்டதை உணர்ந்திருக்கிறேன். அந்தத் திணிப்பிற்கு கூறப்பட்ட காரணங்களால் ஆங்கிலம் மீது ஒரு வித மோகம் ஏற்பட்டது. அந்தச் சிறு வயதில் ஆங்கிலப் புத்தகங்கங்களைப் படிப்பதை ஒரு பெருமையாகவும் நினைத்திருந்தேன். இன்றோ ஆங்கிலம் அனைத்துலக மொழி என்பது ஒரு அனைத்துலகப் பொய் என்பதையும் நன்றாக தெரிந்து கொண்டேன்.

உலக மக்கள் தொகை கணக்கின்படி, அதிக அளவு மக்களால் பேசப் படும் மொழி சீன மொழிதானே தவிர ஆங்கிலம் அல்ல. ஆங்கிலேயர்கள் குடியேறின நாடுகளான அமரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, மற்றும் அதன் கொலனியாதிக்கத்தில் இருந்த இந்தியா, இலங்கை மற்றும் கென்யா, டன்சானியா, சிங்கப்பூர் இன்னும் ஒரு சில நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் ஆங்கிலம் பேசப் படுவதில்லை. இன்றைய உலகமாயமாக்கள் சூழலில் அமரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களால் வணிக அளவில் அதன் வளர்ச்சி அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டாலும் ஆங்கிலம் இல்லாத பல நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப் படும் சுவிற்சலாந்தில் ஜேர்மன், பிரஞ்ச், இத்தாலியன், ரோமன் ஆகிய நான்கு மொழிகளும்தான் அலுவல் மொழியாக இருக்கின்றன. ஆங்கிலத்திற்கு அங்கு இடம் இல்லை. இத்தனைக்கும் ஐ.நா. மன்றத்தின் இரண்டாவது தலைமைச் செயலகம் அங்குதான் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘The Hindu’ என்ற ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தியைப் படித்தேன். அதிகார பூர்வமான இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை பரிந்துரை செய்வதற்கு ஜப்பான் நாட்டு அரசாங்கம் விரும்புகிறது என்று அதில் செய்தி வெளியாகி இருந்தது. அப்படி என்றால் இது வரை காலமும் அதிகார பூர்வமான இரண்டாவது மொழியாகக் கூட ஆங்கிலம் அங்கு இருந்ததில்லை என்பது புலனாகிறது. ஜப்பான் நாடு இரண்டாவது உலகப் போரின் போது அமரிக்காவால் சின்னா பின்னமாக்கப் பட்ட நாடு, ஆனால் இந்த அரை நூற்றாண்டு காலத்தில் அவர்கள் தங்கள் தாய் மொழி வழியாகவே அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இன்று பொருளாதாரத்தில் அமரிக்காவையே விஞ்சி நிற்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கும் சீனாவில் யாருக்குமே ஆங்கிலம் தெரியாது.

பிரான்ஸ், ஜேர்மன் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் தங்கள் தாய் மொழிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. பிரான்ஸ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கே ஆங்கிலம் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருடைய ஆங்கில அறிவு பிரான்ஸ் போன்ற நாடுகளில் எந்த அளவிற்கு பயன்படும் என்பதை எனக்கு ஏற்பட்ட சிறு அனுபவத்தின் வழியாக பதிவு செய்யலாம் என்று நினைக்கின்றேன். பாரிசில் உள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் கணக்காளர் வேலைக்கான நேர்முகத் தெரிவுக்குச் சென்றிருந்தேன். அது ஒரு வெளிநாட்டு நிறுவனம். எனக்கு ஆங்கிலமும் பிரஞ்சும் தெரிந்திருக்கும் காரணத்தால் வேலை எளிதில் கிடைக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் அவர்களோ எனக்கு ஸ்பானிஷ் தெரியாத காரணத்தால் நிராகரித்து விட்டார்கள். காரணம் அது ஒரு ஸ்பெயின் நாட்டு நிறுவனம். இதுவே அது ஒரு இங்கிலாந்து நிறுவனமாக இருந்திருந்தால் என்னை ஒரு வேளை எடுத்திருப்பார்கள். ஆங்கிலமும் ஸ்பானிசும் ஒரே அளவில்தான் அங்கு மதிப்பிடப் படுகின்றன. அதற்கு மேல் ஆங்கிலத்திற்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. இரு மொழிகள் தெரிந்தவர்கள் இந்த அளவில்தான் அங்கு பலனடைகிறார்கள்.

மொழியியல் தன்மையுடன் பார்த்தால் ஆங்கிலம் ஒரு வளமான மொழி அல்ல. பல மொழிகளிலிருந்து கடன் வாங்கித்தான் தன்னுடைய சொற் பஞ்சத்தையே அது தீர்த்துக் கொண்டது. பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள் இலத்தின் மொழியிலிருந்து வந்ததாக மொழியியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஆங்கிலம் இலத்தினிலிருந்து நேரடியாக வந்த மொழி அல்ல. இலத்தினிலிருந்து ஜேர்மன் உருவாகி அதிலிருந்து ஆங்கிலோ சக்சன் என்ற ஒரு மொழி உருவாகி அதிலிருந்து வந்த மொழிதான் இங்கிலிஷ் என்று அழைக்கப் படும் ஆங்கிலம். இன்றளவும் ஆங்கிலேயர்களால் கொண்டாடப்படும் ஒரே ஒரு இலக்கியவாதி என்றால் அது வில்லியம் ஷேக்ஸ்பியர்தான். ஆங்கில மொழியை குறைத்து மதிப்பிடுவது எனது நோக்கமல்ல. தாய் மொழியை நேசிக்கும் அதேநேரம் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும் என்பதுதான் முற்றிலும் நியாயமனது.

எங்களின் தேவைக்கும் திறமைக்கும் ஏற்ப எத்தனை மொழிகளையும் நாம் கற்கலாம் அதற்கு ஆங்கிலமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இங்கிலாந்து போன்ற நாட்டில் வாழும் தமிழர்கள் ஆங்கிலத்தைக் கற்பது ஒரு அடிப்படைத் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மற்ற மொழிகளுக்கு இல்லாத ஒரு முக்கியத்துவத்தை ஆங்கிலத்திற்குக் கொடுப்பதும் எல்லாவற்றுக்கும் மேலாக தாய் மொழியைக் காட்டிலும் அதற்கு முன்னுரிமை கொடுப்பதும் ஏன்???

Edited by இளங்கோ

சீனாவில் ஒருவருக்குமே ஆங்கிலம் தெரியாதா????

உங்கள் கருத்துக்கு வலுச் சேர்ப்பதற்காக தவறான தரவுகளை முன்வைக்காதீர்கள்

நான் அண்மையில் சீனாவிற்குச் சென்றிருந்த போது அந்த மக்களின் ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்து போனேன்.

அவர்களது முன்னேற்றத்திற்கு அதுவும் ஒரு காரணம்.

அவர்களது தங்கள் தாய் மொழியில் அலாதி பிரியம் கொண்டவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்க ஆங்கிலம் தெரியாது என்பதை களத்திலே யாரும் நம்புவார்கள் என்று நினைக்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவில் ஒருவருக்குமே ஆங்கிலம் தெரியாதா????

உங்கள் கருத்துக்கு வலுச் சேர்ப்பதற்காக தவறான தரவுகளை முன்வைக்காதீர்கள்

நான் அண்மையில் சீனாவிற்குச் சென்றிருந்த போது அந்த மக்களின் ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்து போனேன்.

அவர்களது முன்னேற்றத்திற்கு அதுவும் ஒரு காரணம்.

அவர்களது தங்கள் தாய் மொழியில் அலாதி பிரியம் கொண்டவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்க ஆங்கிலம் தெரியாது என்பதை களத்திலே யாரும் நம்புவார்கள் என்று நினைக்கவில்லை

விதி விலக்குகள் எடுத்துக்காட்டுகள் ஆக மாட்டாது.

இன்றைய உலக மயமாக்கல் சூழலில் வணிக அளவில் ஆங்கிலம் வளர்ந்து வருகிறது என்பதை எனது பதிவில் குறிப்பிட்டுள்ளேன். ஆங்கில அமரிக்க பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் சீனாவின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் ஒரு போதும் காரணமில்லை. அது மிக விரிவாக அலசப் படவேண்டியது.

எனக்குத் தெரிந்த ஒரு சீனக் கணினி விற்பன்னருக்கு SOFTWARE என்ற சொல்லைத் தவிர வேறு எந்த ஆங்கிலச் சொல்லும் தெரியாது.

இருப்பினும் நான் யாருக்குமே தெரியாது என்று எழுதியது மிகைப் படுத்தப்பட்டாதகவே தோன்றுகிறது. ஏனெனில் பிரஞ்சு மொழி தெரிந்தவர்கள் இலங்கையிலும் இருப்பார்கள். சுட்டிக் காட்டிய ஓவியனுக்கு நன்றி.

தாய் மொழியை ஏற்று வீழ்ந்த நாடுமில்லை

தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

Edited by இளங்கோ

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7. மதம் மாறுவது பாவம்

200pxbrambedkaraj7.jpg

நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன் ஆனால் இறக்கும்போது நிச்சயம் ஓர் இந்துவாக இறக்கமாட்டேன் - அண்ணல் அம்பேத்கர்

பேரறிஞர் அண்ணா எழுதிய சந்திரமோகன் நாடகத்தில் ஒரு காட்சி :

ஒரு தாழ்த்தப்பட்ட இந்து வீதியோரமாக நடந்து போய்க்கொண்டிருக்கிறான். எதிரிலே பிராமணர் ஒருவர் வந்து கொண்டிருக்கிறார். அவன் வருவதைக் கண்ட பிராமணர் ஐயோ! அம்மாவாசை வருகிறான் தீட்டாகிவிடும் எனக் கூறி வீதியின் அடுத்த பக்கத்திற்கு மாறி திரும்பிப் பார்க்காமல் நடந்து போகிறார். பிராமணரின் இந்தச் செயலைக் கண்ட அந்த தாழ்த்தப்பட்ட இந்து கூனிக்குறுகி தலை கவிழ்ந்து செல்கிறான். அடுத்த சில நாள்களுக்குள் அந்த தாழ்த்தப்பட்ட இந்து ஒரு முஸ்லீமாக மதம் மாறி தொப்பி தாடியுடன் அதே வீதியோரமாக நடந்து வருகிறான் எதிரில் அதே பிராமணர் வருகிறார். என்ன பாய் சௌக்கியமா? என வினவுகிறார் பிராமணர். உடனே அவன் "என்ன ஐயர்வாள் நம்மள உமக்கு அடையாளம் தெரியலையா நான்தான் உங்கள் அம்மாவாசை" எனப் பதிலளித்து விட்டு, அவன் திரும்பிப் பார்க்காமல் கம்பீரமாக நடந்து செல்கிறான்.

மதம் மாறுவதில் உள்ள நியாயத்தை மேற் கண்ட அண்ணாவின் நாடகக் காட்சி கட்டியம் காட்டி நிற்கிறது. இதை எழுதுவதால் இஸ்லாத்தை ஆதரிக்கிறேன் என்று பொருள் அல்ல. இந்துத்துவம் பிழை என்றால் இஸ்லாமிய அடிப்படைவாதமோ கிறிஸ்தவ அடிப்படைவாதமோ சரியானது என்று பொருளல்ல. மதங்கள் அனைத்துமே பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழமைக் கழிவுகளே. ஆனால் கிறிஸ்தவமோ இஸ்லாமோ கடவுளின் தலையிலிருந்து பிறந்தவன் உயர்ந்தவன் என்றும் காலில் இருந்து பிறந்தவன் தாழ்ந்தவன் என்றும் கற்பித்து சக மனிதனை இழிவு படுத்தவில்லை.

இந்து மதத்தின் புண்ணிய நூல்கள் அனைத்தும் பிரம்மாவின் காலிலிருந்து பிறந்த சூத்திரனின் உயிரானது பிரம்மாவின் தலையிலிருந்து பிறந்த பிராமணனின்; மயிருக்குச் சமம் என்றே வருணிக்கின்றன. இந்துக்களால் போற்றி வணங்கப் படும் பகவத்கீதையானது சூத்திரன் என்பவன் இறைவனின் பாவயோனியிலிருந்து பிறந்தவன் என்றும் அவனும் விலங்குகளும் ஒன்று என்றும் உரைத்து பச்சை வருணாசிரம தர்மத்தைக் கக்குகிறது. (பகவத் கீதை, அத்தியாயம் 9 சுலோகம் 32,33). இராமயணத்தில் சம்புகன் என்ற சூத்திரனின் தலை இராமனால் வெட்டப் படுகிறது. அதற்கு இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள நியாயம் சம்புகன் பிராமணர்கள் செய்ய வேண்டிய தவத்தை தானே செய்ததான் என்பதுதான்.

இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள முன் மதம் மாறுவது மாபெரும் பாவங்களில் ஒன்றென்று எண்ணியிருந்தேன். சைவ சமயப் பாடப் புத்தகத்தில், சமணத்திற்கு மாறியதால் திருநாவுக்கரச நாயனாருக்கு சூளை நோய் ஏற்பட்ட கதையைப் படித்ததால் அப்படி ஒரு எண்ணம் சிறு வயதில் எனக்குள் ஏற்பட்டிருக்காலம். இன்று மதம் மாறுவது சில மக்களின் அடிப்படைத் தேவையாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். இந்துமதம் கற்பித்த சாதியாலும் தீண்டாமையாலும் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், உயர்த்தப்பட்ட சமூகத்தினரின் மேலாதிக்கக் கொடுமையிலிருந்து விலகிக் கொள்வதற்கு மதம் மாறுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. மதத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தால் அவற்றை நீக்கி விட முயற்சிக்கலாம், ஆனால் பிறவி ஏற்றத் தாழ்வுகளையே கோட்பாடாகக் கொண்டு ஒரு மதம் இயங்குகிறது என்றால் அதிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

சாதியம் எவ்வளவு கொடுமையானது என்பதை அம்பேத்கரின் வாழ்க்கை வராலாற்றைப் படிக்கும் போதுதான் உணர்ந்து கொண்டேன். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட இந்துவாகப் பிறந்த ஒரே ஒரு காரணத்தால் மிகக் கடுமையான ஒடுக்குமுறைகளையும் அவமானங்களையும் சந்தித்தவர் "நான் பிறக்கும்போது இந்துவாகப் பிறந்தேன் ஆனால் இறக்கும்போது நிச்சயம் ஓர் இந்துவாக இறக்கமாட்டேன்" என மனம் நொந்து கூறினார். அதன்படி தான் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் 54 ஆயிரம் தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் இந்து மதத்தை விட்டு விலகி பௌத்தத்தைத் தழுவிக்கொண்டார்.

இந்து மதத்தின் சாதியக் கொடுமை தாங்காமல் இந்தியத் துணைக் கண்டத்தில் ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறுகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 இலட்சம் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து விலகி பௌத்தத்திற்கு மாறியுள்ளனர்.

இந்தியாவில் நடை பெறும் இதுபோன்ற நியாயமான மதமாற்றங்களை அப்படியே ஈழத்தோடு தொடர்பு படுத்தி பார்த்து விட முடியாது. அதே நேரம் இது போன்ற மதமாற்றங்கள் பண்டைய காலங்களில் ஈழத்தில் நடைபெறவில்லை என்று கூறிவிட முடியாது. ஈழத்தில் ஆதிக்க சாதியினராக இருப்பவர்கள் பெரும்பாலும் சைவ சமயத்தினராகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெரும்பாலும் கிறிஸ்தவ சமயத்தினராகவும் இருப்பதில் இருந்து இந்த உண்மையை ஓரளவிற்கு புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் அடக்குமுறையும் அதனால் பெரு வீச்சுடன் எழுந்த தமிழ்த் தேசிய உணர்வும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை களைந்து அனைத்து தமிழர்களையும் ஒன்று படுத்தி வைத்திருக்கிறது. இன்று ஈழத்தமிழர்களிடம் சாதிய உணர்வு இல்லை என்பது மிகைப்படுத்தப் பட்ட ஒன்றாக இருந்தாலும் போராளிகள் மத்தியில் அது அறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மலரப் போகும் தமிழீழத்தில் சாதிக்கு இடமிருக்காது என்பது உறுதி. எனவே இது போன்ற மதமாற்றங்கள் ஈழத்தைப் பொறுத்தவரை தேவையில்லை.

அதே வேளை ஒருவர் தனது தனிப்பட்ட விருப்பம் காரணமாக தான் சார்ந்திருந்த மதத்தை விட்டு இன்னாரு மதத்தைத் தழுவுவது எந்த வகையிலும் பிழையில்லை. அது அவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. அந்த வகையில் சைவ சமயத்தைச் சார்ந்த ஒருவர் கிறிஸ்தவத்திற்கு மாறலாம் பின் கிறிஸ்தவம் பிடிக்கவில்லை என்றால் மறுபடியும் சைவத்திற்கு திரும்பலாம் அல்லது வேறு எதையாவது தழுவிக் கொள்ளலாம் அதில் எந்தத் தவறும் இல்லை. அல்லது மதமே தேவையில்லை என அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு எங்களைப் போன்று நாத்திகர்களாகவும் வாழலாம், அதுவும் தவறில்லை. அப்படியானால் எது தவறு?

தனிப்பட்ட நம்பிக்கை என்ற அளவைத் தாண்டி அரசியலிலும் சமூகத்திலும் தங்களின் மதங்களைப் பரப்புவது, அடுத்தவர் மீது தங்களின் மத நம்பிக்கைளை திணிக்க முயற்சிப்பது. நாகரிக வளர்ச்சியையும் சமூக மாற்றத்தையும் அறிவியல் உண்மைகளையும் வரவேற்காமல் அடிப்படைவாத வெறியுடன் திரிவது போன்ற முடை நாற்றம் வீசும் மூடக் கொள்கைகள்தான் தவறு.

எல்லாவற்றுக்கும் மேலாக மதத்தின் பேரால் மனிதத்தைப் படு குழியில் தள்ளுவதுதான் மாபெரும் தவறு. ஏனெனில் அவரவர் நம்பிக்கைகள் அவரவர்க்கு மட்டும்தான் உரியன ஆனால் அன்பும் அறமும் அனைவருக்கும் உரியன.

Edited by இளங்கோ

இளங்கோ, நல்ல ஆக்கம், தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்பர் இளங்கோவுக்கு!

பல நல்ல விடயங்களை நீங்கள் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனைலும் சில விடயங்களை நீங்கள் வாதத்துக்காக திரிபு படுத்துகிறீர்கள் போல் இருக்கிறது.

02-- நீங்கள் மகாத்மா காந்திபற்றி பற்றி கூறுவது ஏற்புடையதாயில்லை. அன்றைய காலகட்டத்தில் சுபாஸை ஆதரித்த சில நூற்றுக்கணக்கானவர்களைவிட காந்தியைப் பின்பற்றி அணிதிரன்டவர்களே ஏராளமாக இருந்தனர். ஏன் கிராமம், கிராமமாக முழு இந்தியாவே அவரின் பின்னால் இருந்தது என்றாலும் மிகையில்லை. பிரிட்டிஸ் பொலிசாரிடம் தாமாகவே வந்து அடிவாங்கிய கூட்டமும் உண்ணாவிரதமாக பட்டினி கிடந்து சாகத்தயாரான கூட்டமும் பிரிட்டிஸ்சாருக்கு ஒரு பிரச்சனையாகவே இருந்தது. காந்திஜி ஏற்கனவே இதுபோன்ற ஒரு போராட்டத்தை தென்னாபிரிக்காவில் செய்து வெற்றி கண்டிருந்தார். ஆங்கிலேயரை எதிர்த்து நின்றிருந்தால் அடித்தே கொன்றிருப்பார்கள். எ.கா: இலாலாபார்க் படுகொலைகள். ஹேராம் படத்தில் அப்படியான காட்சியை அமைத்திருந்தனர். அது மிகைப்படுத்தப் பட்டதாக இருக்காது. காரணம் இதே காந்தி தேச இரானுவம் யாழ்ப்பாணத்துள் புகுந்தவுடன் ஸ்ரான்லி மைதானத்துள் மக்கள் எல்லோரையும் விரட்டி நூற்றுக்குமதிகமான பராஇரானுவம் துப்பாக்கியை நீட்டியபோது அந்த அனுபவம் அடியேனுக்கும் கிடைத்தது.

அப்போது சுபாஸ்சந்திரபோஸ் அவர்கள் தலைமறைவு வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருந்தார். அவரது மரணமும்கூட அவ்வாறே அமைந்ததுவென நினைக்கிறேன். சுபாஸ் மகா சிறந்த வீரர். அதற்காக இன்னொருத்தரை தாழ்த்தி மற்றவரை உயர்த்தி விமர்சிப்பது அழகல்ல.

சிங்கம் பலசாலியாக இருந்தபோதும் மனிதன்தான் அதை கூன்டிலடைக்கிறான். ஆனால் கொசுவின் கரைச்சலுக்காக அவனே வலைக்குள்ளே பதுங்கிக் கொள்கிறான். சுபாஸ் ஒரு சிங்கமாக இருந்தார்.

03--- இதில் நீங்கள் காஞ்சிப்பெரியவர் கூறியதை முழுசாகத் தராமல் திரிபு படுத்தித் தந்துள்ளீர்கள். அவர் கூறுகிறார் வெள்லைக்காரன் இந்தியாவுக்கு வரமுன்பு இங்கு "சனாதனதர்மம்" என்றுதான ;நம்ம மதம் இருந்தது. அப்போது அதற்கு பெயர் என்று ஒன்று தேவையாயிருக்கவில்லை. இரண்டாவதாக ஒன்று வந்த போதுதான் முதலாவதை சுட்டிக்காட்ட ஒரு பெயர் அவசியமாகிறது என்று சொல்கிறார். இது அவர் ஆதங்கத்தில் கூறியதே தவிர வெள்ளையர்களைப் பாராட்டுகிற எண்ணத்தில் சொல்லவில்லை. "தெய்வத்தின்குரல்" படித்த உங்களுக்கு இது கண்டிப்பாக புரிந்திருக்கும். ஆனால் உங்கள் வாதத்துக்காக முழுச்செய்தியையும் தராமல் நழுவிவிட்டீர்கள்.

வெள்ளையர் ஹிந்துக்குஸ் மலையை கடந்து வந்திருந்தாலும் சரி, ஆல்லது சிந்து நதியைக் கடந்து வந்திருந்தாலும் சரி அப் பெயராலேயே அந்த நாட்டையும் அங்கிருந்த மதத்தையும் அழைத்தனர். அப்போது சைவத்திலிருந்து வைணவம் பிரிந்திருந்தது. பின் அதிலிருந்து இன்னொன்று(விசிட்டாத்வைதம்) பிரிந்தது. இவர்களெல்லாரும் சைவத்திலிருந்தே தமக்கு வேண்டிய ஆட்களைத் திரட்டிக் கொண்டிருந்தனர். பின் வந்த முகமதியர்களும்சரி, கிறிஸ்தவர்களும்சரி சைவத்திலிருந்தவர்களையே மதமாற்றுவதில் முனைப்புக் காட்டினர். இதெல்லாம்தான் பெரியவர் அப்படிக்கூறக் காரணம்.

(கொலம்பஸ் கண்டுபிடிக்க முன்பும் அமெரிக்கா அங்கேதான் இருந்தது. அத்தீவில் மனிதர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தனர் என்பதைக் கவனிக்க வேண்டும்).

இக் கருத்துக்கள் உங்களுக்கு உடன்பாடாக இருந்தால் கூறுங்கள். மீண்டும் சந்திப்போம்.

அன்புடன் சுவி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.