துரோகத்தின் நாட்காட்டி : நாள் 20, சித்திரை 2006
கிழக்கில் துணைராணுவக்குழுவின் பிரச்சன்னத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த அவுஸ்த்திரேலிய எஸ் பி எஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி
அவுஸ்த்திரேலிய விசேட ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் டேட்லயின் எனப்படும் பிரபல அரசியல் நிகழ்ச்சியில் மட்டக்களப்பில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கிவரும் கருணா துணை ராணுவக்குழு தொடர்பான விரிவான பதிவொன்றினை வெளியிட்டது. அதே காணொளியில், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதி மகிந்தவின் சகோதரருமான கோத்தாபய ராஜபக்ஷவின் துணைராணுவக்குழுவின் பிரசன்னம் தொடர்பான முற்றான மறுதலிப்பினையும் அத்தொலைக்காட்சி வெளியிட்டது. இதே காலப்பகுதியில் கருணாவுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை அழிப்போம் என்று இதே பாதுகாப்புச் செயலாளர் வெளிப்படையாகப் பேசியதையும் இப்பதிவு நினைவுகூர்ந்தது.
எஸ் பி எஸ் இன் செய்தியாளர் ஆரன் லெவிங் மட்டக்களப்பில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியினுள் வெளிப்படையாக இயங்கிவரும் கருணா துணைராணுவக்குழுவின் முகாமிற்குச் சென்றிருந்தார். அங்கு சுமார் 30 ஆயுதம் தரித்த கருணா துணைராணுவக்குழுவினர் பயிற்சிகளில் ஈடுபடுவதை அவர் தனது ஒளிப்படத்தில் பதிவுசெய்தார்.
"அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளரோ அங்கே துணை ராணுவக்குழுவொன்று இயங்குவதையே நம்ப மறுக்கிறார். ஆனால், அவரது ராணுவ முகாமிற்கு மிக அருகிலேயே பாரிய பயிற்சிமுகாம் ஒன்றினை கருணா குழு எனப்படும் ராணுவப் புலநாய்வுத்துறையால் வழிநடத்தப்படும் ஆயுதக்குழு நடத்திவருவதுடன், வெளிப்படையாகவே பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது".
நான் அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "இங்கே துணைராணுவக் குழுக்கள் செயற்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறினால், அக்குழுக்கள் எங்கே, எந்தப்பகுதியில், எவ்வாறு செயற்படுகின்றன என்பதையும், அதுபற்றி உங்களுக்கு அறியத் தந்தவர்கள் யாரென்பதையும் என்னிடம் கூறுங்கள், நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். ஏனென்றால், நாங்கள் இவ்வாறான எந்தக் குழுவும் எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குவதை முற்றாகத் தடுத்து விட்டோம்" என்று என்னிடம் கூறினார்.
உங்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் துணைராணுவக்குழுக்கள் இயகுகின்றன என்பதை நம்புகிறீர்களா என்று நான் கேட்டபோது சினங்கொண்ட அவர், "இல்லை, நிச்சயமாக இல்லை, நிச்சயமாக " இல்லை என்று அடித்துக் கூறினார்.
நான் கருணா துணைராணுவக் குழுவினர்களை நான் நேரில்க் கண்டேனே என்று கேட்டபோது நகைத்தவாறே அவர் பின்வருமாறு பதிலளித்தார்," புலிகள் கூட அப்படிச் செய்யலாம், உங்களை தங்களின் முகாமிற்கு அழைத்துச் சென்று கருணாவின் முகாம் என்றுகூட அவர்கள் காட்டலாம்" .
"இவர்கள் ராணுவப் புலநாய்வுத்துறையின் கீழ் இயங்குபவர்களா அல்லது கூலிப்படையா என்று தெரியவில்லை, ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரியவிடயமாக எனக்குப் படவில்லை. சில பிரபலங்களின் உதவியின்மூலம் அவர்களின் முகாமிற்கே என்னால் வெளிப்படையாகப் போகமுடிந்தது" என்று ஆரன் கூறினார்.
இந்த ஒளிப்படத்தில் துணைராணுவக்குழுவின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் என்று தன்னை அடையாலப்படுத்திக்கொண்ட பிரதீப் எனும் ஆயுததாரி, தமது குழு அரசியல், நிதி, ராணுவம் மற்றும் புலநாய்வுத்துறைகளைக் கொண்டிருப்பதாகவும், ஆனால் பெருமளவான உறுப்பினர்கள் ராணுவப்பிரிவிலேயே அங்கம் வகிப்பதாகவும் கூறினார். அவருடன் அக்காணொளியில் சுமார் 30 உறுப்பினர்கள் ஆர் பி ஜீ க்கள், ஏ கே 47 ரகத் துப்பாக்கிகள் சகிதம் அணிவகுத்து நிற்பது கட்டப்பட்டுகிறது.
வாகரை மற்றும் வெலிகந்தைப் பகுதிகளில் புலிகள் மீதான தாக்குதல்களை தாமே மேற்கொண்டுவருவதாக கூறிய பிரதீப், புலிகளுக்கெதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் கூறினார்.
"என்னைப்பொறுத்தவரை இன்றுள்ள சமாதான நிலமைக்கு இந்த துணைராணுவக்குழு அல்லது கூலிப்படையின் பிரசன்னம் மிகவும் ஆபத்தானது, இப்பேச்சுவார்த்தைகளை குழப்பக்கூடிய மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. இவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நாசகார செயற்பாடுகள் ஏற்கனவே நலிவடைந்துபோயிருக்கும் சமாதானப் பேச்சுக்களை முற்றாக தடம்புரளவைக்கப் போகின்றன. அரசாங்கமும் ராணுவம் என்னதான் சொன்னாலும், நாட்டில் வந்திறங்கிய சில மணிநேரங்களிலேயே கருணா துணை ராணுவக்குழுவின் பிரச்சன்னத்தையும், அரசுடனான அதன் நெருக்கத்தையும் என்னால் உடனடியாகவே புரிந்துகொள்ள முடிந்தது" என்றும் அவர் கூறினார்.