துரோகத்தின் நாட்காட்டி : 15, மாசி 2012
மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்த பிக்குவும், கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட கருணாவும்
மட்டக்களப்பு விகாரையின் பெளத்த குருவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் 2010 ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பில் தமிழர்களுக்கெதிரான கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது உண்ணாவிரத நிகழ்வுகளில் ஈடுபட்டுவருவது தெரிந்ததே. அதன் தொடர்ச்சியாக இந்த பிக்கு தற்பொழுது மீண்டும் உண்ணாவிரதச் சம்பவமொன்றினை ஆரம்பித்துவைத்துள்ளார்.
மட்டக்களப்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்றத் திட்டம் மூலம் மட்டக்களப்பில் அவர்களுக்கு உரிய காணிகளுக்கான உரிமைப் பத்திரங்களை அரச அதிகாரிகள் வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். இது தமிழர்களுக்கு சிங்களவர்களின் காணிகளை பலவந்தமாகக் கொடுக்கும் செயல் என்றும், தமிழ் அதிகாரிகளால் சிங்களவரின் காணிகள் பறிபோகின்றது என்றும், இதனால் மட்டக்களப்பில் அரச திணைக்களங்கள் அனைத்திற்கும் சிங்கள அதிகாரிகளை மட்டுமே நியமிக்கவேண்டும் என்று கோரி இந்தப் பிக்கு புதிய உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் குதித்திருக்கிறார்.
பிக்குவைச் சமாதானப்படுத்தும் முகமாக துணைராணுவக் குழுத்தலைவரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான கருணாவை பிக்குவிடம் தூதராக அனுப்பினார் மகிந்த ராஜபக்ஷ. பிக்குவோடு சமரசத்தில் ஈடுபட்ட கருணா அவரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இதுபற்றி மகிந்தவிடம் பேசி அவற்றினை நிறைவேற்றுவதாகவும் கூறியபின்னர் பிக்குவும் தனது உண்ணாவிரத மிரட்டலை முடித்துக்கொண்டதாகத் தெரிகிறது.
2010ஆம் ஆண்டில் மங்கள ரஜ மகாவிகாரையின் விகாராதிபதியான இப்பிக்கு நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான அரச உயர் பதவிகளுக்கு சிங்களவர்களை அரசு நியமித்திருந்தது.
நீதிமன்ற அலுவல்கள், மாவட்டச் செயலகம், பிரதேசச் செயலகங்கள் ஆகிய முக்கிய மக்கள் சேவைகளுக்கு சிங்கள அதிகாரிகளை மட்டுமே இம்மாவட்டத்தில் பணியில் அமர்த்தவேண்டும் என்று இந்த இனவாதப் பிக்கு 2010 ஆம் ஆண்டு மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தினையடுத்து, அவற்றை ஏற்றுக்கொள்வதாக அரசு சம்மதித்த கணமே அவரது போராட்டம் வாபஸ் பெறப்பட்டதென்பது கவனிக்கப்படவேண்டியதொன்று.
கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான அதியுயர் பதவி மற்றும் இதர அரச நிர்வாகச் சேவைகளுக்கான உயர் பதவிகளை சிங்கள அதிகாரிகள் அலங்கரித்ததையடுத்து, நடுத்தர மற்றும் கீழ்மட்ட பதவிகளுக்கும் தற்போது சிங்களவர்களை இம்மாவட்டத்தில் அரசு நியமித்து வருகிறது.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இந்த பிக்கு இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலினை இந்தப் பிக்குவைக் கொண்டே அரசு நடத்திவருவதாகவும் மட்டக்களப்பு வாழ் தமிழர்கள் தெரிவித்துவருகின்றனர்.
மகிந்த சிந்தனய எனும் சிங்கள இனவாதச் சிந்தனையின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், கொழும்பின் சிங்கள பெளத்த இனவாத அரசின் ஒரு முகம் என்றும் பரவலாகக் கருதப்படும் இப்பிக்கு, தமிழ் மக்களுக்கெதிரான அநீதியான கோரிக்களைகளை முன்வைத்துவருவதுடன், அரச ராணுவத் துணைப்படையினரின் உதவியோடும், அரச பின்புலத்தோடும் தனது கோரிக்கைகளைத் தடையின்றி நிறைவேற்றிவருவதாக பாதிக்கப்பட்டுவரும் தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.