செய்திக்குறிப்பு 1 : மார்கழி 2011
சிறார்களை தனது துணைராணுவக் குழுவில் இணைத்த கருணா
ஆங்கிலத்தில் : உவிந்து குருகுலசுரிய
2005 ஆம் ஆண்டு, இலங்கையினுள்ளும், வெளியேயும் மனிதவுரிமைகளுக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டதற்காக ராதிகா குமாரசுவாமிக்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா தேஷமான்ய எனும் உயர்ந்த கெளரவத்தினை வழங்கியிருந்தார். ராதிகா அப்பொழுது ஐ நா வின் சிறுவர்களுக்கும் ஆயுதப் பிணக்குகளுக்குமான நடவடிக்கைக் குழுவில் விசேட பிரதிநிதியாகச் செயலாற்றிவந்தார். ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுவரும் சிறுவர் சிறுமியரின் உரிமைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அவரது பிரதான கடமையாக இருந்து வந்தது.
கார்த்திகை 2011 இல், இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் எனும் நபருக்கு இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதே உயர் கெளரவமான தேஷமான்ய எனும் பட்டத்தினை வழங்கி கெளரவித்திருக்கிறார். கடந்த 18 ஆம் திகதி திருக்கோயில் பகுதியில் இடம்பெற்ற ஆடம்பர நிகழ்வொன்றில் இனியபாரதிக்கு இந்த நாட்டின் மகத்தான கெளரவம் வழங்கப்பட்டதை அம்பாறையிலிருந்த அவரது அலுவலகம் சண்டே லீடர் பத்திரிக்கை இதுதொடர்பாக அவர்களைத் தொடர்புகொண்டபொழுது உறுதிப்படுத்தியிருந்தது.
யார் இந்த இனியபாரதி ?
சிறுவர் சிறுமியரை கடத்திச் சென்று கட்டாய ராணுவப் பயிற்சியின் பின்னர் துணைராணுவக் குழுவில் இணைத்துவருபவர் என்று ஐ நா வால் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் இவர். கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோயில், வினாயகபுரம் ஆகிய பகுதிகளில் பலநூற்றுக்கணக்கான கடத்தல்களுக்கும் காணாமற்போதல்களுக்கும் காரணமானவர் என்று மக்களால் அடையாளம் காணப்பட்டவர் இவர். ராஜபக்ஷவின் அரசில் துணையமைச்சராகவிருக்கும் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் துணைராணுவக் குழுவில் மிக முக்கிய ஆயுததாரியாகச் செயற்பட்டு வருபவர் இவர். அதுமட்டுமல்லாமல், அம்பாறை மாவட்டத்தின் மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டுவருபவர் இவர்.
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான விசாரணைக் குழுவின் அமர்வுகளில் சாட்சியமளித்த மக்களில் 90 வீதமானவர்கள் தமது பிள்ளைகள், கணவன்மார்கள், மனைவிமார்களைக் கடத்திச் சென்று காணமாலக்கியது இனியபாரதியே என்று வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
திருக்கோயிலில் அமைந்திருக்கும் கருணா துணை ராணுவக் குழுவின் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இலக்கத்தகடு பத்திரிக்கையால் மறைக்கப்பட்ட வெள்ளை நிற வானும் அருகே இனியபாரதியுடன் அவரது சகா ஜீவேந்திரனும்
கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் அனைத்திலும் வாக்காளர்களுக்கு கொலைப் பயமுருத்தல் விடுத்தது, மகிந்தவின் கட்சிக்கு வாக்களிக்குமாறு அச்சுருத்தியது, தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டது போன்ற பல வன்முறைகளில் இனியபாரதியே தலைமை தாங்கிச் செயற்பட்டதாக தேர்தல்க் கண்காணிப்பாளர்கள் அறிக்கைகளை விடுத்திருக்கின்றனர். இந்த வன்முறைகளின்பொழுது குற்றவாளியென்று கண்டறியப்பட்ட இனியபாரதிக்கு 10 வருட சிறைத்தண்டனையினை கல்முனை நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இனியபாரதியும் அவரது வெள்ளை வான் கடத்தல்களும்
நான் இந்த மனிதரை ஆனி 19, 2007 அன்று திருக்கோயிலில் அமைந்திருக்கும் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். சுதந்திர ஊடகம் சார்பாகவும், இலங்கை ஊடக நிலையம் சார்பாகவும் நானும், சர்வதேச ஊடக நிலையத்தின் இயக்குனர் டேவிட் டாட்ஜ், சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் சுகுமார் முரளிதரன், இலங்கை ஊடகத் தொழிலாளர்கள் சார்பாக அதுல லியனகே மற்றும் இலங்கை முஸ்லீம் ஊடகவியலாளர் அமைப்பின் ஜாவிட் முனவ்வரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டோம்.
பேச்சுக்களில் ஈடுபட்ட சுதந்திர ஊடகவியலாளர்களும், இனியபாரதியுடன் அவரது உதவித் தலைவரும்
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு கருணா குழுவினால் இழைக்கப்பட்டு வந்த அநீதிகளைச் சரிசெய்யும் நோக்கிலேயே எமது இந்தப் பயணம் அமைந்திருந்தது. அந்தவருடத்தில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இனியபாரதியால் பல தடவைகள் கொலைப்பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன. நாம் அம்பாறை மாவட்ட கருணா துணைராணுவக் குழுத் தலைவரும் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பாளருமான இனியபாரதி மற்றும் அவரது உப தலைவரான ஜீவேந்திரன் ஆகியோரை அவர்களின் அலுவலகத்தில் அன்று சந்தித்தோம்.
அவரது அலுவலகத்தினுள்ளே பல சிறுவர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை நான் கண்டேன். அதுல லியனகேயுடன் சேர்ந்து இரகசியமாக அச்சிறுவர்களைப் படமெடுக்க நான் எண்ணினேன். அத்துடன், அவர்களின் அலுவலகத்தின் முன்னால், இலக்கத்தகடு பத்திரிக்கையினால் மறைக்கப்பட்ட வெள்ளைநிற வான் ஒன்றைக் கொண்டோம். அருகில் சென்று பார்க்கும்பொழுதுதான் அவ்வாகனத்தில் இலக்கத்தகடே இருக்கவில்லையென்பது எமக்குப் புரிந்தது.
கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் இலக்கத்தகடற்ற வெள்ளை நிற வான்
தற்போதைய தேசமான்ய கெளரவத்தினைப் பெற்றிருக்கும் இனியபாரதியுடன் சேர்த்து அவ்வாகனத்தினைப் படம்பிடித்துக் கொண்டேன். அவர்களுடன் கூடவே ஆயுதம் தாங்கிய இரு சிறுவர்களையும் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
இப்புகைப்படம் என்னாலேயே முதன் முதலாக வெளிக்கொண்ரப்பட்டது. பல்வேறு ஊடகங்கள் இப்புகைப்படத்தினைப் பகிருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டபோதும்கூட, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளரின் பாதுகாப்புக் கருதி அதனைப் பகிர நான் விரும்பியிருக்கவில்லை.
கருணா துணைராணுவக் குழுவினரின் அலுவலகத்தின் முன்னால் இலக்கத்தகடற்ற வெள்ளைநிற வாகனம் நிறுத்தப்பட்டிருப்பது அவர்கள் ஆட்களைக் கடத்திச் செல்ல இந்த வாகனத்தைப் பாவிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. பலநூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலீஸாரிடம் கிடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றுவரை ஒருவர் கூட விடுவிக்கப்படவுமில்லை, குற்றமிழைத்தவர்கள் கைதுசெய்யப்படவுமில்லை.
பலவந்த சிறுவர் ராணுவப் பயிற்சியும் இனியபாரதியும்
ஐ நா சிறுவர் நிதியத்தின் அறிக்கைப்படி, "64 வீதமான சிறுவர்கள் புலிகளால் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு இணைக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறுகிறது. ஆனால், தவறாகப் பிரசுரிக்கப்பட்ட இவ்வறிக்கையினைப் பார்த்த பிரபல சிறுவர் உரிமைகள் அமைப்பின் பிரமுகர் ஒருவர் என்னிடம் தொடர்புகொண்டு, கடத்தப்பட்ட சிறுவர்கள் அரச ராணுவத்தாலும் கருணா குழுவாலும் கடத்தப்பட்டிருக்கும்பொழுது, இதனைப் புலிகள் செய்தார்கள் என்று அறிக்கை வெளியிடுவது எப்படிச் சாத்தியம் என்று வினவினார். அரசு நேரடியாக கடத்தல்களில் ஈடுபடவில்லையென்று நான் கூறினாலும் கூட, இவ்வளவு பெரிய தவறை இந்தவறிக்கை எப்படி சுமந்து வந்தது என்று எண்ணுகிறேன். ஆனால், உண்மையென்னவெனில், அரசின் ஆதரவுடனேயே கருணா துணைராணுவக் குழு இக்கடத்தல்களைச் செய்துவருகிறது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். புலிகளுடனான போருக்காகவே இவர்கள் தமிழ்ச் சிறார்களைக் கடத்திச்சென்று பயிற்றுவிக்கிறார்கள் என்பது வெளிப்படையானது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட செய்திக்குறிப்பில் இங்குநடக்கும் கடத்தல்களும் காணாமற்போதல்களும் பற்றி அமெரிக்கா நன்கு அறிந்தே வைத்திருக்கிறதென்பது தெளிவாகிறது. அத்துடன், நாட்டின் ஜனாதிபதி மகிந்த மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ஆகியோருக்கும் இக்கடத்தல்கள் பற்றி தெளிவாகவே தெரிந்திருக்கிறது.
கருணாவினால் கட்டாய ராணுவப் பயிற்சிக்காக கடத்தப்பட்டு போரில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள்
"ஜனாதிதிபதியுடனும், பாதுகாப்புச் செயலாளருடனுமான சந்திப்புக்களில் எமது இரு நாடுகளுக்குமிடையேயான பரஸ்பர ராணுவ உதவிகளைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்கு சிறுவர்களை துணைராணுவப் படையில் இணைக்கும் விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்கப்படவேண்டும் என்று தூதுவர் கோரியிருந்தார். அதன் போது பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், துணைராணுவக் குழுக்களை நிராயுதபாணிகளாக்கும் நடவடிக்கையினைத் தாம் ஆரம்பித்திருப்பதாகவும், அதன் ஒரு கட்டமாக துணைராணுவப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர்களை விலக்குவதும் அடங்கும்" என்றும் கூறியிருந்தார்.
மே மாதம் 26 ஆம் திகதி, 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட இந்த கேபிள் செய்தியின் காலப்பகுதியில் தூதுவராக ரொபேட் ஓ பிளேக்கே இருந்தார். அமெரிக்காவுக்கு, சிறுவர்களை படையில் சேர்த்து போரில் ஈடுபடுத்திவருவது இலங்கை அரசும், துணைராணுவக் குழுக்களும்தான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் யுனிசெப் அமைப்பு புலிகளை மட்டும் குற்றஞ்சாட்டுவது ஏன்? அவர்கள்கூட அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரமாக மாறிவிட்டனரா?
கோத்தாபய அவர்கள் ஐலண்ட் பத்திரிக்கைக்கு வழங்கிய பேட்டியில் "100 ஆட்டிலெறிக் குண்டுகளால் செய்யமுடியாததை ஒரு மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுவர் தற்கொலைப் போராளியைக் கொண்டு பிரபாகரனால் செய்யமுடிந்தது. இன்று சிறுவர்களை நாம் படையில் சேர்க்கிறோம் என்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள் அன்றே பிரபாகரனுக்கெதிராக நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால் அவர்களால் ஆயுதங்களைத் தருவித்தோ, கட்டமைப்புக்களை உருவாக்கியோ போராடியிருக்க முடியாது. அவர்களின் சொத்துக்களை, கட்டமைப்பினை, வங்கிக் கணக்குகளை முடக்கியிருந்தால், அவர்களாகவே போராட்டத்தைக் கைவிட்டு, சிறுவர்களை இணைப்பதையும் நிறுத்தியிருப்பார்கள். ஆகவே, இன்று முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள், யுனிசெப்பை விமர்சிக்காமல், புலிகளுக்கெதிரான அதன் விமர்சனத்தை ஆதரிக்க வேண்டும்" என்று கூறினார்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவை ஐலண்ட் நாளிதழுக்கு வழங்கிய செய்தியில் இறுதிப்போரில் நடந்த மனிதவுரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் பற்றிப் பேசுபவர்கள், சிறுவர்களை படையில் சேர்த்தது பற்றிப் பேசவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். அப்படியானால், புலிகளால் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் மட்டுமல்லாமல் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் சேர்க்கப்பட்ட சிறுவர்கள் பற்றியும் பேசப்படுவதுதான் நியாயமாக இருக்கும்.