சப்தம் வந்த பாடசாலை குப்பைமேட்டு திசையை நோக்கி ஓடினர் நால்வரும், ஐடியா மணியோ "மச்சான் சுலக்சனை நாய் முழுதும் குதறிப்போட்டுதோ தெரியாது, இண்டைக்கு நாய்க்கு வேட்டை தான் " என்று திகில்களத்திலும் கிளுகிளுப்பேற்றினான், அவனை முறைத்துவிட்டு நான்குபேருமாக டார்ச் ஒளியில் குப்பை மேட்டை நோட்டமிட துவங்கினர், அந்த இடத்தில் சுலக்சன் இருந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை,
அப்போதுதான் குப்பை மேட்டை கூர்ந்து கவனித்தான் அவன் , ஓரிடத்தில் அழுத்தமாக இரத்த திட்டு தென்பட
அந்த திசைவழியே நால்வரும் வெளிச்சத்தை பாய்ச்சினர் கொஞ்சம் தள்ளி இரத்தத்தடம் சற்று அதிகமாக காணப்பட்டது, இரத்தத்தடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்க ஆரம்பித்தது, இரத்தத்தடத்தில் இரத்தத்தின் அடர்த்தியும் மெதுவாக மெதுவாக அதிகரித்திருந்தது, நால்வருக்கும் விளங்கிவிட்டது எதுவுமே சரியாக்கப்படவில்லை.
இரத்ததடத்தை தொடர தொடர மெதுவாக சுலக்சனின் முனகல் ஈனஸ்வரத்தில் கேட்கத்தொடங்கியது,
இவர்கள் சென்ற வழி ஆண்கள் மலசல கூடத்திற்கு செல்லும்வழி அந்த வழியிலிருந்த ஒரு சிறிய வகுப்பறையின் மூலையில் முனகல் சத்தம் அதிகமாக கேட்க தமது டார்ச் வெளிச்சத்தை பாய்ச்சினர், அங்கே இடது காலில் குருதி பெருக்கெடுக்க வலியில் முனகியவாறு சுலக்சன் சுவருடன் குந்ததவைத்து உட்காந்திருந்தான்,பெருக்கெடுத்த குருதியின் அளவிலேயே விளங்கிவிட்டது இது நாய் கடித்த காயத்தால் வந்ததல்ல பயபிள்ளை நாய் விரட்டியதும் தலைதெறிக்க ஓடிய ஓட்டத்தில் குப்பை மேட்டில் நீட்டிக்கொண்டிருந்த போத்தல் ஓடு ஒன்றின் மீது காலை வைக்க தயாராக இருந்த ஓடு பாட்டா செருப்பை துளைத்துக்கொண்டு தம்பியுடைய காலை பதம் பார்த்து விட்டது , தரமான கீறல் , இடது பாதத்தில் தசை கிழிந்து தொங்கியது,
"இப்படியே பார்த்து கொண்டு நிக்காமலுக்கு தூக்குங்கடா, இன்னும் கொஞ்ச நேரம் விட்டால் இரத்தப்போக்கில் மயங்கிருவான் "
எல்லோரும் சேர்ந்து கைலாகு கொடுத்து சுலக்சனை தூக்க இவனோ ஐடியா மணியை பார்த்து சுலக்சனின் அப்பாவை வைத்தியசாலைக்கு அழைத்துக்கொண்டுவருமாறு தகவல் அனுப்பிவிட்டு, சுலக்சனுடன் பாடசாலையிலிருந்து நடைதூரத்திலிருந்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை நோக்கி நடந்தனர்
இவர்கள் வைத்தியசாலையை அடையவும் சுலக்சனுடயை அப்பா மோட்டார் சைக்கிளில் வரவும் சரியாக இருந்தது, வந்தவர் இவர்களை பார்த்து முறைத்துவிட்டு சுலக்சனுடன் வைத்தியரை நோக்கி சென்றுவிட. நால்வரும் வெளிச்சத்தில் வெளி நோயாளர் பிரிவு இருக்கைகளில் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு உட்கார்ந்துகொண்டு நடந்தவைகளை அலச ஆரம்பித்தனர்,
அண்ணளவாக 15 நிமிடங்கள் கரைந்தித்திருக்கும், சுலக்சனை கொண்டு சென்ற அறையிலிருந்து வெளிப்பட்டார் அவனுடைய அப்பா, மெதுவாக நடந்து இவர்களை நோக்கி வந்தவர் அருகிலிருந்த இருக்கையில் உட்கார்ந்தவாறே கேட்டார்,
"டேய் நீங்களெல்லாம் படிக்கிறம் எண்டுபோட்டு இரவில் குப்பை மேட்டுப்பக்கம் என்ன செய்றிங்கள் ,
ஒண்ணுக்கு ஒதுங்குவது என்றால் பார்த்து ஒதுங்குறதில்லையா,ஆளுக்கு கால் நன்றாக கிழிஞ்சுபோட்டு எப்படியும் 15 தையலுக்கு மேல விழும் போல" என்று விட்டு இவர்கள் முகத்தை பார்த்தார், நால்வரும் நடந்தவற்றை சொல்லவா முடியும்.? ஆளாளுக்கு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு தலையை குனிந்து கொண்டு உடகார்ந்திருந்தனர்.
சற்றைக்கெல்லாம் சுலக்சனுக்கு சிகிச்சை முடிந்துவிட்டது, காலை கெந்தியவாறே வெளிநோயாளர் பிரிவிலிருந்து வெளிப்பட்டான் சுலக்சன்.
நால்வரும் சுலக்சனை நோக்கிச்செல்ல, சுலக்சனின் அப்பாவோ நிறுத்திவிட்டு வந்த மோட்டார்சைக்கிளை எடுக்க சென்றுவிட்டார், சுலக்சன் மெதுவாக "நடந்த ஒன்றையும் சொல்லவில்லை தானே ...?"
என்று கேட்க நால்வரும் ஏக காலத்தில் இல்லை என்று தலையை ஆட்டினர்,
சுலக்சன் மெதுவான குரலில் "நான் உனக்கு பின்னால தான் ஓடிவந்து கொண்டிருந்தன் திடீரென்று பார்த்தால் முன்னாள் அதே நாய் மச்சான் , இரண்டி அடி முன்னாலே வைத்து பாய தயாராக நானும் திரும்பி குப்பை மேட்டுப்பக்கம் ஓட்டமெடுத்தேன் போத்தல் ஓடும் காலை பதம் பார்த்து விட்டது" என்றான்
அவனோ "நான் திரத்திய கறுப்புருவத்தை கண்டனியோ...? என்று கேட்க "ஓமடா உனக்கு முன்னால சில அடிதூரத்தில் தானே ஓடிக்கொண்டிருந்தவன், பிடிச்சிட்டீங்களோ" என்று கேட்க "இல்லடா மண்டப மூலையில் திரும்பினான் திடீரெண்டு ஆளை காணோம் ", "என்னடா சொல்றாய்...?" கால் வலியிலும் விறைத்து போய் நின்றிருந்தான் சுலக்சன், எல்லோரும் முழித்துக்கொண்டிருந்த தருணத்தில் சுலக்சனின் அப்பாவும் மோட்டார்சைக்கிளுடன் வந்துவிட அவருடன் போய் தொற்றிக்கொண்டான் சுலக்சன். சுலக்சனையும் அவனது தந்தையையும் அனுப்பிவிட்டு திரும்பிய அவன் இன்றைக்கு படித்தது போதும் எல்லோரும் வீட்டுக்கு கிளம்புவோம் என்று சொல்லிமுடிக்க முதல் ஐடியா மணியோ "வேற இனி இந்த விளையாட்டே வேணாம் நான் இனி இரவில் படிக்க வரமாட்டேன்" என்று சொல்லவும் மற்ற இருவரும் அதனை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டினர் , நால்வரும் பாடசாலைக்கு திரும்பி தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு ஆளை விட்டால் போதும் என்றவாறு ஓட்டமெடுத்தனர்
1962, இலங்கை கிழக்கு மாகாணம்
வில் ......காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது, சமையல்காரியின் கூக்குரல், சற்று நிமிடத்தில் செய்தி தீயை போல் பரவ முழு பாடசாலை ஆசிரியர்களும், ஊர் மக்களும் சகோதர்களது இல்லத்தில் முன் கூடிவிட்டனர், சகல சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு வில்லியின் உயிரற்ற உடலை சவப்பெட்டியில் கிடத்தி மக்கள் பார்வைக்கு வைத்தனர், பீலிக்ஸோ வியர்த்து விறுவிறுத்து காணப்பட்டார், கொரோனரிடம் வில்லியின் உடல் சென்றுவிடாமல் இருக்க செய்த பகீரத பிரயத்தனங்கள் அவரை அப்படி வியர்க்கவைத்துவிட்டது, வில்லியின் ஈமச்சடங்கில் முழு பாடசாலையும்,ஊரும் கதறியழுதது, ஒருவாறாக
வில்லியை நல்லடக்கம் செய்துவிட்டு வந்த சகோதரர்கள் தங்களது முழு இல்லத்தையும் சுத்தம் செய்துவிட்டு களைத்து போய் தூங்கச்சென்றார்கள், பீலீக்ஸும் களைத்துப்போய் வந்து கட்டிலில் சரிந்தார் அப்படியே தூங்கிப்போனார், திடிரென்று திடுக்கிட்டு முழித்த பீலீக்சிற்கு கொஞ்சம் தண்ணீர் சாப்பிடலாம் போல தோன்றவும் , ஒரு குவளையில் நீரை நிரப்பிகுடித்துக்கொண்டே மொட்டை மாடியில் நின்று நோட்டம் விட்டார்,
அங்கெ அவர்கண்ட காட்சியால் அவர் கை நடுநடுங்க கையிலிருந்த குவளை தவறி விழுந்து உடைய அதனுள்ளிருந்த நீர் அவர் முகத்தில் தெறித்தது.
(தொடரும் )