2006 இல் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் வெளிவந்த கருணாவின் பலவந்த ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர்களைப் பலவந்தமாக தனது துணை ராணுவக் குழுவில் சேர்த்தது தொடர்பான விரிவான தகவல்கள்
பாகம் 1 :
2006 இல் இடம்பெற்ற கடத்தல்கள்
2004 இல் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி ராணுவத்துடன் சேர்ந்துகொண்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பரவலாக பல இடங்களிலும் சிறுவர்களைக் கடத்திச் செல்லும் நடவடிக்கையில் அவரது குழு இறங்கியிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்நாட்களில் செயற்பட்டுவந்த உள்ளூர் மற்று சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களின் கருத்துப்படி கருணா குழு மட்டக்களப்புச் சிறுவர்களை பொலொன்னறுவை மாவட்டத்தில் வேலை செய்வதற்கு எங்களுடன் வாருங்கள் என்று பலவந்தமாக அழைத்துச் சென்றதாகவும், இவ்வாறு பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் ஒருபோதுமே தமது வீடுகளுக்குத் திரும்பவில்லையென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2006 ஜூன் மாதமளவில் கருணா குழுவால் கடத்திச்செல்லப்பட்ட சிறுவர்களினதும் இளைஞர்களினதும் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துக் காணப்பட்டதாக இவ்வறிக்கை மேலும் கூறுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதத்தில் மட்டும் கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 40 இற்கும் அதிகம் என்றும், இவர்களுள் 23 சிறுவர்கள் ஒரு நாளில் கடத்திச்செல்லப்பட்டதாகத் தெரியவருகிறது.
இவ்வாறு ஒருநாளில் கடத்திச்செல்லப்பட்ட சிறுவர்கள் இரு கிராமங்களிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாக இச்சிறுவர்களின் குடும்பங்களை செவ்விகண்ட மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறியிருக்கிறார்கள். இச்சிறுவர்களின் பெற்றோர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் தமது பிள்ளைகளை விட்டுவிடுமாறு தாம் கருணா குழு ஆயுததாரிகளைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டபோதும், அவர்களை இழுத்துச் சென்றுவிட்டதாகவும், பின்னர் கருணாவின் முகாம்களுக்கு தாம் தமது பிள்ளைகளைத் தேடிச் சென்றவேளை தமது பிள்ளைகள் கருணா குழு ஆயுததாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.
இன்னும் சில பெற்றோர் தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விபரிக்கையில் காலையில் தமது கிராமத்திற்குள் புகுந்த இலங்கை ராணுவம் 7 சிறார்களை இழுத்துச் சென்று அவர்களது புகைப்படங்களை எடுத்துக்கொண்டதுடன் வேறு விபரங்களையும் பதிவுசெய்துவிட்டு திருப்பியனுப்பியதாகவும், அதே நாள் இரவுவேளையில் தமது வீடுகளுக்கு வந்த கருணா குழு ஆயுததாரிகள் அப்பிள்ளைகளை இழுத்துச் சென்றதாகவும் கூறுகின்றனர்.
கருணா குழுவிற்கு சிறுவர்களை பலவந்தமாகச் சேர்க்கும் நடவடிக்கையில் இலங்கைராணுவமும் ஈடுபடுகிறதா என்னும் கடுமையான சந்தேகத்தினை இம்மாதிரியான சம்பவங்கள் உருவாக்கிவருகின்றன என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
மனித உரிமைக் கண்காணிப்பகம் இன்னொரு கிராமத்தில் கடத்திச் செல்லப்பட்ட 13 சிறுவர்களின் பெற்றோருடன் பேசியதில் இன்னும் சில தகவல்களை சேகரித்துவைத்திருக்கிறது. அப்பெற்றோரின் கருத்துப்படி தமது பிள்ளைகள் கடத்தப்பட்ட நாளில் தமது கிராமத்திற்கு ராணுவத்தினரின் சீருடையில் வந்த 15 கருணா குழு ஆயுததாரிகள் தமது பிள்ளைகளை கிராமத்திலிருக்கும் கடையொன்றின் முன்றலுக்கு இழுத்துச்சென்று சில மணிநேரம் அவர்களை வைத்திருந்து பின்னர் வாகனங்களில் ஏற்றிச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள்.
இக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் கருணா குழு ஆயுததாரிகள்தான் என்று உறுதிபடக் கூறும் பெற்றோர்கள், தாம் தமது பிள்ளைகளைத் தேடி கருணா குழுவின் முகாமிற்குச் சென்றதபோது இதே கடத்தற்காரர்கள் அங்கே நின்றிருந்ததையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
கருணா குழுவினரால் பலவந்தமாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு அருகில் நின்ற இராணுவத்தினரை இப்பெற்றோர்கள் வேண்டிக்கொண்டபோதிலும், ராணுவம் அவர்களை அசட்டை செய்து கருணா குழுவுடன் அலவலாவிக்கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லப்பட்ட கருணா குழுவின் சிறுவர்களைப் பலவந்தமாகக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகளையடுத்து ஐநா வின் சிறுவர்களுக்கான அமைப்பு வெளியிட்டிருந்த பொது வேண்டுகோளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் பற்றி விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும் அந்த வேண்டுகோளில், "சிறுவர்களைக் கடத்துவதையும், கட்டாய ராணுவப் பயிற்சிக்கும் இழுத்துச்செல்வதையும் கருணா குழு நிறுத்த வேண்டும் என்றும், இதுவரை கடத்திச் செல்லப்பட்ட சிறுவர்கள் அனைவரையும் அக்குழு விடுவிக்கவேண்டும் " என்றும் கேட்டிருந்தது.
அத்துடன் இக்கடத்தல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சிறுவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிசெய்யவேண்டும் என்றும் அது அரசாங்கத்தைக் கேட்டிருந்தது.
ஐ நா வின் இந்த அறிக்கை சாதகமான நிலையினை சில நாட்களுக்கு ஏற்படுத்தித் தந்திருந்தது. இவ்வறிக்கையினையடுத்து கருணா குழுவின் சிறுவர் கடத்தல்கள் சற்றுக் குறைந்திருந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும், ஒரு சில வாரங்களிலேயே கருணா குழு மீண்டும் தனது பலவந்த சிறுவர் கடத்தல்களை தீவிரமாக்கியிருந்தது. புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஆரம்பித்த மோதல்களை தனது கடத்தல்களுக்குச் சாதகமாகப் பாவித்த கருணா 2006 ஜூலை மாதத்தில பல சிறுவர்களைக் கடத்திச் சென்றதாக உள்ளூர் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் பதிவுசெய்திருக்கின்றன. ஆடி மாதத்திலிருந்து மார்கழி மாதம்வரையான 5 மாத காலத்தில் கருணாகுழுவினரால் குறைந்தது 200 சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கருணா துணைராணுவக் குழுவிடம் தமது பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மர்கள் 48 பேர் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் இதுதொடர்பான முறைப்பாடொன்றினைக் கொடுத்திருந்தனர். மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. தமது பிள்ளைகள் கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டார்கள் என்றும், அவர்களை உடனடியாகத் தேடி மீட்டுத்தருமாறும் கோரப்பட்ட இவ்வழக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், இடர் நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கும் வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது.
ஐந்து மாதங்களின் பின்னர் கண்துடைப்பிற்காக ராணுவ அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்குழு, இத்தாய்மார்களைத் தொடர்பு கொண்டு, "கருணா குழு என்று குறிப்பிட வேண்டாம், இனந்தெரியாத குழு என்று குறிப்பிடுங்கள்" என்று வற்புறுத்தியதாக இத்தாய்மார்கள் தெரிவித்திருக்கின்றனர்.
தொடரும்