கருணா குழுவுடனான அரசாங்கத்தின் உறவும் அதனை மறைக்கும் அரசின் கைங்கரியமும்
கடத்தல்களுக்காக கருணா பாவிக்கும் ஏ 11 நெடுஞ்சாலையின் ஒருபகுதியும், அங்கே அமைக்கப்பட்டிருக்கும் இலங்கை அரச ராணுவத்தின் சோதனைச் சாவடியும்
இவையெல்லாவற்றிற்கும் மேலாக கருணா குழுவுக்கு பாதுகாப்பினையும், முகாம்களையும், வளங்களையும் வழங்கி காத்து வருவது அரசுதான் என்பதற்கு கருணாவினால் கடத்தப்பட்ட சிறுவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் அமைந்திருக்கும் பகுதியினைப் பார்க்கும்போது நன்கு தெளிவாகிறது.
வெலிக்கந்தைப் பகுதியில் கருணாவுக்காக அரசு அமைத்திருக்கும் முகாம்களுக்குத் தமது பிள்ளைகளைப் பார்க்கச் சென்ற பெற்றோரின் கூற்றுப்படி இம்முகாம்கள் முற்றான ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், ராணுவ முகாம்களுக்கு மிக அருகில் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறுகின்றனர். கருணாவின் முகாம்களுக்குச் செல்லும் பெற்றோர் தொடர்பான விபரங்களை சோதனைச் சாவடியில் உள்ள ராணுவ வீரர்கள் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பாவித்து கருணா குழுவின் முகாம்களுக்கு வழங்கிவருவதை இப்பெற்றோர்கள் கண்டிருக்கின்றனர். கருணா குழுவின் முகாம்களுக்குச் செல்வதற்கு ஏ 11 பாதையில் இருந்து செவனப்பிட்டிய எனும் சிங்களக் கிராமத்திற்கு பல சோதனைச் சாவடிகளூடாகவே பேரூந்துகளில் இப்பெற்றோர்கள் பயணித்து வருகின்றனர். இச்சோதனைச் சாவடிகளிலேயே இப்பெற்றோரின் பெயர் விபரங்கள், கடத்தப்பட்ட பிள்ளையின் பெயர் ஆகிய விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் ராணுவ வீரர்கள் அதனை உடனடியாகவே குறிப்பிட்ட கருணா குழு முகாமின் உறுப்பினர்களுக்கு அறியத் தருகின்றனர். பலவிடங்களில் பேரூந்துகளை விட்டு இறங்கியவுடன் தயாராக நிற்கும் முச்சக்கரவண்டிகளில் ஏற்றப்படும் இப்பெற்றோர்களை அப்பகுதி சிங்கள்வர்கள் கருணா குழுவின் முகாம்களுக்குக் கொண்டு சென்று இறக்கிவிடுகின்றனர்.
இப்பகுதியில் கருணா குழுவின் ஆயுததாரிகள் அனைவருமே ராணுவத்தினரின் சீரூடைகளையே அணிந்து உலாவருகின்றனர் என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர் . "சோதனைச் சாவடியில் ராணுவத்தினர் எனது பெயர், அடையாள அட்டை இலக்கம், கடத்தப்பட்ட எனது மகனின் பெயர், கடத்தப்பட்ட நாள், அவரைத் தடுத்து வைத்திருக்கும் கருணா முகாம் ஆகிய விபரங்களைப் பெற்றுக்கொண்டபின்னர் , என்முன்னாலேயே அவர் தொலைபேசியில் கருணா குழுவின் முகாமைத் தொடர்புகொண்டு நான் வந்திருப்பதுபற்றிக் கூறிவிட்டு, என்னைத் தொடர்ந்து பயணிக்க அனுமதியளித்தார்" என்று கடத்தப்பட்ட தனது 16 வயது மகனைத் தேடிச் சென்ற தாயொருவர் மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திடம் கூறினார்.
மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திற்கு வழங்கிய செவ்வியில் பல பெற்றோர்கள் தாம் வெலிக்கந்தைக்கு வந்திருப்பது தமது பிள்ளைகளைத் தேடித்தான் என்பது நன்கு தெரிந்தும், அவர்களை விடுவித்து எம்முடன் அனுப்பிவைக்க எதுவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை, மாறாக அம்முகாம்களுக்கு சகலவிதத்திலும் ஒத்துழைப்பு வழங்கி, கருணாவின் கடத்தல்களை ஊக்குவிப்பது வெளிப்படையாகவே தெரிகிறது என்றும் கூறுகின்றனர்.
"முதுகல பகுதியில் கருணாவுக்காக ராணுவத்தால் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு நாம் முதல்முறையாகச் சென்றபோது , அருகிலிருந்த ராணுவ முகாமிலிருந்து வந்த இரு படைவீரர்கள் நாம் எதற்காக இங்கே நிற்பதாகக் கருணா குழுவினரிடம் கேட்டனர். அவர்கள் தமது பிள்ளைகளைப் பார்க்க வந்திருப்பதாக கருணா குழு ஆயுததாரிகளால் கூறப்பட்டது. அதன்பின்னர் சிங்களத்தில் எம்மிடம் பலகேள்விகளை அப்படைவீரர்கள் கேட்டதுடன், இவர்களை இங்கே நிற்க விட வேண்டாம், உடனடியாக வெளியேறச் சொல்லுங்கள் என்று கருணா குழுவிடம் கூறியபோது, எம்மை அப்பகுதியிலிருந்து கருணா குழுவினர் விரட்டினர்" என்று அப்பெற்றோர்கள் கூறுகின்றனர் .
மனிதவுரிமைக் கண்காணிப்பகத்திற்கு கொடுக்கப்பட்ட முறைப்பாடொன்றில், வெலிக்கந்தைப் பகுதி கருணா குழு முகாம் ஒன்றிலிருந்து தப்பியோடிய சிறுவன் அருகிலிருந்த ராணுவ முகாமில் தஞ்சமடைந்து, தன்னை காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டபோது, அம்முகாமிலிருந்த ராணுவ வீரர்கள் அச்சிறுவனை மீண்டும் கருணாகுழு முகாமிற்கு இழுத்துச் சென்று, அவனைக் கடத்திவந்தவர்களிடமே கையளித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை வெலிக்கந்தையெனும் சிங்களக் குடியேற்றப்பகுதியுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலையாக ஏ 11 இருக்கிறது. ராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டிலும், பூரணமாக ராணுவமயப்படுத்தப்பட்ட நிலையிலும் இப்பிரதேசம் இயங்கிவருகிறது. இப்பகுதியில் ஐந்து பாரிய முகாம்களை அமைத்து பலநூற்றுக்கணக்கான கடத்தப்பட்ட சிறுவர்களை இப்பகுதிக்குக் கொண்டுவந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவதென்பது ராணுவத்தினருக்குத் தெரியாமல் நடப்பதற்குச் சாத்தியமேயில்லாதது. சாதாரண மக்களுக்கே இப்பகுதிக்குள் பிரவேசிப்பதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளும், சோதனைகளும் விதிக்கப்படுமிடத்து, பல வாகனங்களில், ஆயுதங்கள் சகிதம் கருணா குழு இப்பாதையினூடாக இப்பிரதேசத்தினுள் நுளைவது எப்படிச் சாத்தியம்?