2003 , இலங்கை கிழக்கு மாகாணம்
அன்றும் பாடசாலைக்கு சுலக்சன் வரவில்லை, என்னவாக இருக்கும் ...? இரவில் படிக்கமட்டும் வருகிறான்
சரி இன்று பாடசாலை முடிந்து போகும்போது ஒரு எட்டு அவனது வீடு சென்று ஏன் வரவில்லை என்று கேட்டு விட்டு வருவோம் என்று யோசித்தவாறே அன்றைய பொழுதை கடத்திக்கொண்டிருந்தான் அவன்.
மாணவத்தலைவன் என்பதால் பாடசாலை மாணவர்களை ஒழுங்குபடுத்தி பாடசாலையை விட்டு வெளியேறவைத்து சைக்கிள் பாதுகாப்பு பகுதியின் படலையை மூடி சாவியை அதிபரிடம் கொடுத்துவிட்டு வர
போதும் போதுமென்றாகிவிட்டது, கையைத்திருப்பி கடிகாரத்தை பார்த்தான் நேரமோ மதியம் 2:20
சரி போய் சுலக்சனை பார்த்துவிட்டுவருவோம் என்று சைக்கிளை சுலக்சனின் வீட்டினை நோக்கி செலுத்தி
சுலக்சனது மதில் வாசலை நெருங்கவும் வாசலடியிலிருந்து மைதிலி வெளியேறவும் சரியாக இருந்தது,
இவனை கண்ட மைதிலி சிரித்துவிட்டு செல்ல, சைக்கிளை விட்டிறங்கிய அவன் படலையை திறந்துகொண்டு
சுலக்சனை கூப்பிட்டவாறு வீட்டினுள் உள்நுழைந்தான், இவனது குரலை கேட்டு வெளியே வந்த சுலக்சனின் தாயார் "ஓ தம்பியா கொஞ்சம் பொறு மனே மைதிலி இப்பதான் வந்து அவனோட கதைச்சுப்போட்டு போறாள் இப்பதான் பாத்ரூம் பக்கம் நான் கொண்டுபோய் விட்டுப்போட்டு வாறன் முடிஞ்சதும் கூப்பிடுவான் நீ அங்க இரு" என்று விட்டு குசினிப்பக்கம் செல்ல
சுலக்சனோ நன்றாக கெந்தி கெந்தி நடக்கிறான், இந்த மனிசி பாத்ரூமிற்கும் தான் தான் கொண்டுபோய் விடுறன் என்று சொல்லுது, என்ன கூத்தடா இது ..சரி வரட்டும் கேட்போம் என்று யோசித்தவாறே சோபாவில் அமர்ந்தான் அவன்.
"அம்மா" என்று கொஞ்சநேரம் கழித்து சுலக்சனின் குரல் கேட்க சோபாவிலிருந்து எழுந்துகொண்டவன் "அன்ரி நீ ங்க வேலையை பாருங்கோ நான் போய் கூட்டிக்கொண்டுவாறன்" என்று சொல்லிவிட்டு எழுந்து பாத்ரூம்பக்கம் போக லுங்கியை அக்குளிற்குள் இடுக்கியவாறு சுலக்சன் வெளிப்பட்டான்,
காலை நிலத்தில் வைக்கவே சிரமப்பட்டுக்கொண்டிருந்தவன் , போதாக்குறைக்கு தண்ணீர்படாமல் இருக்க காயத்தை சுற்றி ஒரு சிவப்பு பொலித்தீன் பையையும் இறுகக்கட்டியிருந்தான்.
கைலாகு கொடுத்து மெதுவாக தூக்கிக்கொண்டு சுலக்சனை சோபாவில் கிடத்தி விட்டு பேச ஆரம்பித்தனர் இருவரும்
"ஏனடா பள்ளிக்கு இண்டைக்கும் வரலை"
"நான் இருக்கும் நிலையை பார்த்தாய் தானே, ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவதிற்கே அம்மா கொண்டுபோய் விட வேண்டிக்கிடக்கு "
"அப்போ நேற்று இரவு படிக்க வந்தது "
"மச்சான் நானில்லாத நேரத்தில் எங்கேயும் கஞ்சாவை வாங்கி பள்ளிக்குள் இழுக்கியோ, நானெப்படா நேற்றுவந்தனான் விசரா உனக்கு "
"மச்சான் விளையாடாதடா, நீ நேற்று என்னவெல்லாம் சொன்னாய் என்று யோசித்துப்பார் "
"டேய் மனுசனுக்கு கடுப்பேத்தாத நானே வரவில்லை என்றன், இவரு பேசினாராம் "
என்று விட்டு அம்மா என்று கூப்பிட்டான் சுலக்சன் , சுலக்சனுடைய குரலை கேட்டு அவன் தயார் எட்டிப்பார்க்கவும் "அம்மா நேற்று இரவு நான் என்னசெய்தனான்" என்று கேட்க
சுலக்சனின் தாயாரோ பொரிந்துதள்ள துவங்கினார்.
"எடுத்தாலும் எடுத்தான் ஒரு காயத்தை எனக்கு தூக்கம் போச்சு, நேற்று இரவு மட்டும் ஆறுதடவை இவனை இழுத்துக்கொண்டு பாத்ரூம்பக்கம் போவதும் வருவதுமாக நித்திரையே போச்சு மனே " என்று அவர் முடிக்கவும்,அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த அவனுக்கு தலைக்குள் சுரீர்...சுரீர் என்று வலிக்கத்தொடங்கியிருந்தது
மூளை கோணல் மாணலாக வேலை செய்துகொண்டிருந்தது அப்படியானால் இரவு என்னோடு பேசிக்கொண்டிருந்தது யார், பிரதர் wilheim ஆ இருக்குமோ, ஒவ்வொரு நாளும் மண்டபத்திற்குள் வருகிறேன் என்று நேற்று சொல்லியது சுலக்சன் உருவிலிருந்த Wilheim ஆ...? அப்போ அந்த கரிய உருவம் பிரதர் wilheim ஆ
எதற்கு என்னை தெரிவுசெய்தார்...? இப்படி கேள்விகள் அவனுடைய மூளையில் குறுக்கும் நெடுக்குமாக ஓட
விறைத்துப்போயிருந்த அவனை கவனிக்காது சுலக்சன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தொடர்ந்தான்.
"மச்சான் மைதிலியை கண்டனியோ "
அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாது " ம்ம்" என்றுமட்டும் முடித்துக்கொண்டான் அவன்
"வாணியிடமிருந்து தகவல் எனக்கு கால் வெட்டப்பட்டதை தெரிந்து கொண்டு சுகம் விசாரிச்சு கேட்டனுப்பியிருக்கிறாள் " என்று தொடர்ந்து நேற்று இரவு அவன் வாயினால் விபரித்த அனைத்தையும் மீண்டும் ஒன்றும் விடாமல் புதிதாக சொல்வதுபோல் தொடர்ந்து விபரித்துக்கொண்டிருந்தான் சுலக்சன்
அவனது மூளை ஏற்கனவே கொள்ளளவுக்கு அதிகமாக அதிர்ச்சியினை உள்வாங்கிக்கொண்டு தளர்ந்து போயிருந்ததால் சுலக்சன் விபரித்த அனைத்தையும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டது, புள்ளிகள் எல்லாம்
நேர்கோடுகளால் இணைய அவன் ஆழ்மனதில் Wilheim இன் புகைப்படம் தோன்றி தோன்றி மறைந்தது.
எந்த சலனமும் இன்றி இருக்கையை விட்டு எழும்பியவனை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த சுலக்சன் கேட்டான்
"என்னடா ஒரு பதிலும் சொல்றாயில்லை "
"மச்சான் எனக்கு தலை சரியாக இடிக்கிது, உதைப்பற்றி நாளைக்கு கதைப்போம்" என்று விட்டு அவனது பதிலையே எதிர்பாராதவனாக வெளியே வந்து சைக்கிளை எடுத்து வீட்டை நோக்கி விரட்டினான்,
இந்த சம்பவம் நடந்து நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக இந்த அமானுஷ்யம் அவனது வாழ்வில் ஒரு இனிமையான நினைவாக மட்டும் மாறிப்போனது.
2020 , இலங்கை கிழக்கு மாகாணம்
"தம்பி வாங்கோ", பாடசாலையின் தற்போதைய அதிபர் அவனை இன்முகத்துடன் வரவேற்றார்,
"தம்பிகள் பழைய மாணவர் சங்கத்தினால் செய்யும் உதவிகளுக்கு பாடசாலை பெருமளவில் கடமைப்பட்டிருக்கிறது, கனநாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள் பள்ளியை சுற்றிப்பாருங்கோ நான் ஒரு இருபது நிமிஷத்தில் வாறன் " என்று விட்டு அதிபரும் நகர
பதினைந்து வருடங்களுக்கு பிறகு கால்வைக்கும் அவனது பாடசாலை இஷ்டத்திற்கு முற்றுமுழுதாக மாறியிருந்தது, உயர்தரத்தில் அவன் படித்த வகுப்பறையை தவிர மற்றயதெல்லாம் இடிக்கப்பட்டு மாடிக்கட்டிடங்களாக மாறியிருந்தன, மெதுவாக பழைய விடயங்களை அசைபோட்டவனுக்கு அப்போதுதான் அந்த சம்பவமும் ஞாபகம் வர, அவனது கால்கள் அந்த குடவுன் இருந்த திசையை நோக்கி தானாகவே நடந்தது, அங்கே அந்த கூடவுன் இருந்த அடையாளமே தெரியாமல் அந்த இடத்தில் இரண்டுமாடி கட்டிடமொன்று முளைத்திருந்தது,
இந்த குடவுனுக்கு என்ன ஆனது என அறியும் நோக்கத்தில், அந்த வழியால் சென்றுகொண்டிருந்த சிறுவனொருவனை கூப்பிட்டான் அவன்,
இவனது தோற்றத்தை பார்த்த சிறுவனும் பம்மிக்கொண்டு தயங்கி தயங்கி அவனருகில் வந்தான்
"சேர்"
"தம்பி சேர் எல்லாம் இல்ல அண்ணன் என்றே கூப்பிடும், இந்த இடத்தில் ஒரு பாழடைந்த குடவுன் ஒன்று இருந்ததே அதை எப்ப இடிச்சவைங்க"
இவனை மேலேயும் கீழேயும் பார்த்த அவன் " அண்ணன் கனகாலத்திற்க்கு இங்கால வரலை என்ன, அதை இடித்து பத்து வருடத்திற்கு கூட இருக்கும் நான் பள்ளியில் சேர்ந்த காலத்தில் தான் இடித்தவை, இடித்துப்போட்டுத்தான் அந்த பெரிய கட்டிடத்தை கட்டினவங்கள் " என்று முடித்தான்.
"அப்போ ஏன் அந்த கட்டிடம் பூட்டியிருக்கு யாரும் பாவிக்கறதில்லயா...?"
"அது இரவில் யாரும் அங்காலைப்பக்கம் போறதில்லை, அடிக்கடி லையிட் தானாக எரியுறதும், மெஷின் இரைச்சல் வாறதுமென்று ஒருவரும் போறதில்ல,அப்படி துணிஞ்சும் போன நாலைஞ்சுபேர் நாய்க்கடியும் வாங்கியிருக்கினம் "
"சுற்றி மதில் போட்டிருக்கே நாய் எங்கயிருந்து வருகிறது "
"தெரியாது அண்ணன், ஏழடி மதில் அப்படியிருந்தும் அந்தப்பக்கம் நாய்கள் ஏறி வருகிறது,பகலிலே மட்டும் எதாவது தேவைக்கு பாவித்துவிட்டு பொழுதுபட பூட்டிவிட்டு வந்துவிடுவோம் " என்று முடிக்க
"என்ன தம்பி நம்மடை பாடசாலை எப்படியிருக்கிறது...?" என்று கேட்டுக்கொண்டே அதிபர்வரவும்
அதிபரை கண்ட பயத்தில் இவனை பார்த்து சிரித்துவிட்டு நொடிப்பொழுதில் சீட்டாய்ப்பறந்துவிட்டான் அந்த சிறுவன், அதிபரை நோக்கி திரும்பிய அவனும் வந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தான், சற்றைக்கெல்லாம் அவனது வேலை முடிந்துவிட அதிபரிடம் விடை பெற்றுக்கொண்டு அதிபரின் காரியாலயத்தில் இருந்து வெளியேறி தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்துகொண்டிருக்க அவனது சிந்தனையோ அந்த சிறுவன் சொன்ன விடயங்களை சுற்றியே சுழன்றது, உண்மை என்றாவது ஒருநாள் வெளியே வரும்வரை பிரதர் Wilheim அமைதியாக இருக்கமாட்டார் என்று தோணியது ,அந்த உண்மைகள் கிழிக்கப்பட்ட பிரதிகளாக எங்கே ஒழிந்துகொண்டிருக்கின்றனவோ என்று யோசித்துக்கொண்டே தன்னுடைய வாகனத்தில் ஏறி இக்னீஷியனை உசுப்பினான், சிறிய கனைப்புடன் உயிர்பெற்ற வாகனம் மெதுவாக வேகமெடுத்தது அவனது வாகன பக்ககண்ணாடியில் பாடசாலை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்க அவனது நாவோ ஒரு வசனத்தை உச்சரித்துக்கொண்டிருந்தது அது பைபிளில் பிரசித்தமான ஒரு வசனமான "பாவத்தின் சம்பளம் மரணம்"
(முற்றும் )