மட்டக்களப்பில் கருணாவைப் உளவியல் யுத்தத்திற்காகப் பாவிக்கும் ராணுவம்
கருணாவுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே இருக்கும் மிக நெருங்கிய ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டு, மட்டக்களப்பிலிருந்து கருணாவை வெளியேற்றும் நடவடிக்கையினை புலிகள் மேற்கொண்டபோது ராணுவம் நடந்துகொண்ட விதத்தினைப் பார்த்தல் அவசியம். புலிகளுக்கும் கருணாவுக்குமிடையிலான பிணக்கில் தாம் நடுநிலைமை வகிப்பதாக வெளியே பாசாங்குக் காட்டிக்கொண்டிருந்த ராணுவம், உண்மையில் கருணாவுக்கு ஆதரவாக செயற்பட்டிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சந்திரிக்கா நடத்திக்கொண்டிருந்த தேர்தலில், சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவினை வேண்டி நின்றதனால், கருணாவை வெளிப்படையாகவே ஆதரிப்பதென்பது ராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் தர்மசங்கடமான நிலையினை ஏற்படுத்தியிருக்கும்., அதுமட்டுமல்லாமல், புலிகள் வெறும் 3 நாட்களிலேயே கருணாவை அடித்துவிரட்டுவார்கள் என்பதை ராணுவம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதும் இந்த நடுநிலைமை நாடகத்தின்மூலம் வெளிச்சமாகிறது.
கருணாவை வெளியேற்றும் முடிவினைப் புலிகள் தாமதப்படுத்தியிருந்தாலோ அல்லது, இத்தாக்குதல் முயற்சி நீண்டு சென்றிருந்தாலோ, ராணுவம் தனது உண்மையான முகத்தினைக் காட்டியிருக்கும் என்றே கருதமுடிகிறது.
போர் என்பது தடுக்கமுடியாததாகவே இருந்திருக்கலாம், ஆனால் கருணா மீதான புலிகளின் இலகுவான வெற்றியென்பது ராணுவம் கருணாவின் பெயரில் புலிகள் மீதான வெளிப்படையான போர் ஒன்றிற்குள் இறங்கும் கனவினைத் தவிடுபொடியாக்கிவிட்டது.
தனது அரசியல் ரீதியான செல்வாக்கிற்கும், அரசியல் இருப்பைப் பலப்படுத்திக்கொள்ளவும், கருணாவின் மூலம் புலிகள் மீதான ராணுவ வெற்றியொன்று பெருமளவில் உதவியிருக்கும் என்று சந்திரிக்கா நினைத்திருக்கலாம். ஆனால், அது நடைபெறாமல்ப் போயுள்ளதோடு, சமாதானப் பேச்சுவார்த்தையும் பல சங்கடங்கள் ஊடாக இன்னும் பயணித்துக்கொண்டே செல்கிறது.
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான பிரச்சினையை போரின்மூலம் தீர்க்கமுடியாதென்பதே உண்மை. உண்மையான சமாதானப் பேச்சுவார்த்தைகளினாலன்றி, கபடத்தனமான ராணுவ அழுத்தங்களின்மூலம் சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாதென்பதை சந்திரிக்கா உணரவேண்டும். 1995 இல் அவர் இதனை ஏற்கனவே பரீசிலித்துப் பார்த்து அதில் தோல்வியும் கண்டிருக்கிறார். தமிழர்களுக்கெதிரான சமூகமயப்படுத்தப்பட்ட காழ்ப்புணர்வை சிங்களவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், தமிழர்களுக்கெதிரான வெளிப்படையான சமூகமயப்படுத்தப்பட்ட தாக்குதல்களைச் செய்ய அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், தமிழர்களை சகல வழிகளிலும் அடக்கியொடுக்கி, தோல்வியடைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் சந்திரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆகவே, தமிழர்கள் சிங்களவர்களின் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு, அமைதியாகவும், சுயகெளரவத்துடனும் வாழும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுதல் அவசியமாகிறது. இருதுருவங்களக பிரிந்துநிற்கும் தமிழ் மற்றும் சிங்களச் சமூகங்களைப் பார்க்கும்போது இரு இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதானத் தீர்வொன்றிற்கான சாத்தியம் இல்லையென்றே தெரிகிறது. ஆகவே, நாம் நிச்சயமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட, வெற்றிகரமான பொறிமுறை ஒன்றிற்கே வரவேண்டியிருக்கிறது. உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான பரீட்சார்த்த முயற்சிகள் உலகின் பலநாடுகளில் வெற்றியளித்திருக்கின்றன. புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் 2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு, பல சிக்கல்களை எதிர்கொண்டு, தற்பொழுது புலிகள் தமது சார்பாக திட்டம் ஒன்றினை முன்வைத்திருக்கிறார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் உண்மையாகவே புதிய அரசாங்கம் அக்கறைகொண்டிருந்தால், உறுதியளிக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகளை மனதிற்கொண்டு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் உண்மையாக ஈடுபடுதல் அவசியம். புலிகளின் உத்தேச தீர்வினை ஏற்றுக்கொண்டு, அரசு பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, சர்வதேச உதவியுடன் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதோடு, நீண்டகால அரசியத் தீர்வுதொடர்பாகவும் தொடர்ந்து செயற்படுதல் அவசியமானது.