தமிழீழத்திற்கான போராட்டமும் இந்தியாவும்
இந்திய றோவின் உப தலைவரின் இலங்கை வருகையினையடுத்து திகைப்படைந்துள்ள அரசியல் மற்றும் ராணுவத் தலமைப்பீடங்கள் - இனவாத பத்திரிக்கையில் வெளியான கட்டுரை
காலம் : 21, ஐப்பசி 2008
இனவாதிகளின் கட்டுரையினைப் படிக்குமுன், ஒரு சிறிய முன்னோட்டத்துடன் இதனை ஆரம்பிக்கலாம். "ஒரு விடயம் பற்றி என்னதான் சொல்லப்பட்டாலும், அதை எவர்தான் சொல்லியிருந்தாலும், அதனை சீர்தூக்கிப் பார்த்து உண்மைதனை அறிதலே சரியான அறிவுடமையாகும்" என்கிறது திருக்குறள். ஒரு முழுப் பொய்யைவிட, அரை உண்மைகளை உறுதிப்படுத்துவது கடிணமானது. இலங்கைக்கு வருகை தந்திருக்கும் றோவின் உபதலைவர் தொடர்பாக இனவாதிகளின் ஊதுகுழல் பயப்படுவது அவருக்கும் புலிகளுக்கும் முன்னர் இருந்த தொடர்புகளுக்காக அல்லாமல், இன்று சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் அச்சு நோக்கி நகர்ந்துவரும் மகிந்த ராஜபக்ஷவுக்கு அவர் கொடுக்கவிருப்பதாகக் கருதப்படும் அழுத்தம் பற்றியே என்றால் அது மிகையில்லை. ஆகவேதான், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை விமர்சிப்பதனை விடுத்து, அதனைக் காவிவந்து தமக்கு நினைவூட்டக்கூடும் என்று சிங்களம் கருதும் சந்திரசேகரன் எனும் அந்த றோ அதிகாரிமீது ஐலண்ட் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. ஆனால், இதில் உள்ள உண்மையென்னவென்றால் சந்திரசேகரனும் இன்னும் ஒரு றோ அதிகாரியும் பூட்டான் , திம்புவில் 1985 இல் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட்டு வந்தவர்கள் என்பதும், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை பிசகின்றி முன்னெடுத்துச் செல்வதில் தீவிர உறுதிப்பாடு கொண்டவர்கள் என்பதும் சிங்கள இனவாதிகள் அறியாததல்ல.
சரி, இதன் பின்னணியில் தி ஐலண்ட் எழுதியிருக்கும் கட்டுரையினைப் படிக்கலாம்.
"புலிகளின் அனுதாபியென்று கருதப்பட்டும் முன்னாள் றோ உயர் அதிகாரி, சந்திரன் எனப்படும் சந்திரசேகரனின் கொழும்பு விஜயம் கொழும்பில் அரசியல் வட்டாரங்களிலும், ராணுவ வட்டாரங்களிலும் புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
பாராளுமன்ற மேலதிகச் செயலாளரான சந்திரன் 1980 களில் இலங்கைத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கான பயிற்சிமுகாம்களை நிறுவுவதில் முன்னின்று செயற்பட்டவர். பின்னர், புலிகளுடன் நெருங்கிச் செயற்பட்ட அவர் யாழ்தேவி புகையிரதம் மீதான தாக்குதல், 1985 ஆம் ஆண்டு அநுராதபுரம் மீதான தாக்குதல்களுக்கு புலிகளுக்கு உதவியவர். இவ்வாறான தாக்குதல்களின்பொழுது புலிகள் இவருடன் தொடர்ச்சியான தொடர்பிலிருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது.
அதேவேளை ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் பத்மநாபாவுடனும் நெருங்கிச் செயற்பட்ட சந்திரன், பத்மநாபாவின் சென்னை விஜயம் குறித்து புலிகளுக்குத் தகவல் வழங்கி 1990 இல் அவர் கொல்லப்பட உதவிபுரிந்தவர் என்றும் கூறப்படுகிறது. பத்மநாபாவின் நெருங்கிய தோழர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் அவரது சென்னை விஜயம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. பத்மநாபாவின் தோழர்களின் கூற்றுப்படி சந்திரனைத் தவிர பத்மநாபாவின் வருகையினை வேறு எவரும் அறிந்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
சந்திரனுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்ததாகக் கருதப்படும் தொடர்பினையடுத்து, 1991 ஆம் ஆண்டின் ராஜீவ் கொலைக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று றோவே அஞ்சும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் இருந்திருக்கின்றன. இதனால், சந்திரன் றோவிலிருந்து விலகி மேற்படிப்பிற்காக அமெரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டார்.
ஐலண்டிற்குக் கிடைத்த தகவல்களின்படி, சந்திரன் புலிகளுக்கு பயிற்சிகள், திட்டமிடல், பிரச்சார உத்திகள் தொடர்பாக பல உதவிகளைப் புரிந்திருக்கிறார் என்று தெரியவருகிறது. சென்னையில் அரசு சாரா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சந்திரன் அதன்மூலம் புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாட்டில் நடத்திவருகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சந்திரன் இலங்கைக்கு முன்னரும் பலதடைவைகள் விஜயம் செய்திருந்தபோதும், தற்போதைய விஜயமானது சுற்றிவளைக்கப்பட்டு அழியவிருக்கும் புலிகளை மீட்பதற்காகவே என்று தெரியவருகிறது. இதுவரை அவர் பல தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா மற்றும் ஈ பி டி பி யின் தலைவர் டக்கிளஸ் ஆகியோரைச் சந்தித்திருக்கும் சந்திரன் இவ்விடயம் தொடர்பாகப் பேசியதாகத் தெரிகிறது.
குறிப்பாக கருணாவுடனான அவரது கலந்துரையாடல்களின்போது, புலிகளின் செயற்பாடுகளுக்கு கருணா குழு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாதென்று கேட்டுக்கொண்டதாக ஐலண்ட் பத்திரிக்கைக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. கருணா இந்தியாவில் பயிற்சியெடுத்த காலத்தில் சந்திரனே அவருக்குப் பொறுப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சந்திரனின் கோரிக்கையினை முற்றாக மறுத்துவிட்ட கருணா, புலிகளுடன் சமரசம் என்கிற பேச்சிற்கே இடமில்லையென்றும், புலிகள் முற்றாக அழிக்கப்படவேண்டும் என்றும், அதன் பின்னரே தீர்வு தொடர்பான பேச்சுக்கள பற்றி சிந்திக்க முடியும் என்று கூறியதாகவும் தெரியவந்திருக்கிறது.
1989 இல் வடக்குக் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் ராணுவமான தமிழ்த் தேசிய ராணுவத்திற்கான ஆயுதங்களை வழங்குவதில் சந்திரனே முன்னின்று செயற்பட்டிருந்தார். புலிகளுக்குக் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்திய ராணுவம் வெளியேறிக்கொண்டிருந்த நேரத்தில்க் கூட தமிழ்த் தேசிய ராணுவத்திற்கென்று கார்ல் குஸ்டவ் பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளை வரவழைத்துக் கொடுத்திருந்தார்.
எதிர்பார்க்கப்பட்டதுபோலவே தமிழ்த்தேசிய ராணுவத்தை எளிதில் வீழ்த்திய புலிகள் தமக்கான புத்தம் புதிய பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளையும் சந்திரன் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொண்டனர். பின்னர் அதே உந்துகணைகள் இலங்கை ராணுவத்தின்மேல் புலிகளால் பாவிக்கப்பட்டன.
புலிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், புலிகள் தென்னிலங்கையில் நாசகாரத் தாக்குதல்களை நடத்தலாம் என்கிற சூழல் நிலவும் இந்தத் தருணத்தில், புலிகளின் அனுதாபியான றோ அதிகாரியொருவரை இலங்கைக்கு வர அனுமதிப்பதும், சுதந்திரமாக உலாவுவதை அனுமதிப்பதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.