பிரபாகரன், அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் பதினெட்டுப் புலிகளோடு கொல்லப்பட்டார் - கருணா
ஹிந்துஸ்த்தான் டயிம்ஸ்
மே 20, 2009
பிரபாகரனுக்கு மிகவும் நெருங்கியவரும், பல்லாண்டுகளாக அவரால் வளர்க்கப்பட்டவரும், பின்னர் புலிகளியக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவருமான கருணா, பிரபாகரனின் மரணம் பற்றித் தெரிவிக்கும்போது, பிரபாகரனும் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இன்னும் 18 மெய்ப்பாதுகாவலர்களும் இராணுவத்தால் மடக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறினார். கொல்லப்பட்டது புலிகளியக்கத் தலைவர் பிரபாகரன் தான் என்பதை அடையாளங்கண்டு உறுதிப்படுத்திய வெகு சிலரில் கருணாவும் ஒருவர் என்பது குறிப்பிடத் தக்கது.
கருணாவினால் புலிகளின் தலைமைக்கு எதிராக 2004 இல் நடத்தப்பட்ட கிளர்ச்சியே புலிகளை முற்றாகப் பலவீனப்படுத்தி அழிக்கும் நிலைக்குக் கொண்டுவந்தது குறிப்பிடத் தக்கது.
புலிகளின் தலைவரின் மரணம் பற்றி மேலும் பேசிய கருணா, "புலிகள் அமைப்பு இனி ஒருபோதுமே எழுந்துவரமுடியாது, அவர்களை முற்றாக அழித்துவிட்டோம்" என்றும் கூறினார்.
தற்போது இலங்கை அரசாங்கத்தில் தேசிய நீர்ப்பாசண அமைச்சராகவும், நல்லிணக்க அமைச்சராகவும் இருக்கும் கருணாவுக்கு நந்திக்கடல்ப் பகுதியில் கொல்லப்பட்டுக் கிடந்ததது ஒருகாலத்தில் தனது தலைவனாகவும் ஆசானாகவும் இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் என்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லையென்று தெரிகிறது.
"முன்னர் நான் பார்த்த பிரபாகரனுடன் ஒப்பிடும்பொழுது, அவர் தற்போது சற்று மெலிந்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அவர் முன்பிருந்ததைப் போலவே இருந்தார். அவரது முகம், கண்கள், என்று எல்லாமே அவர் பிரபாகரன் தான் என்பதை எனக்குச் சொல்லியது" என்று தொலைபேசியூடாக எங்களுக்கு கருணா கூறினார்.
"பிரபாகரனைக் கொன்ற ராணூவ வீரர்கள் ஆச்சரியப்பட்டதாக அறிந்தேன். ஏனென்றால், பிரபாகரன் தன்னைத்தானே சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். பிரபாகரனை அன்று அங்கே அவர்கள் காணுவார்கள் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை" என்று கருணா கூறினார்.
"பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களுக்கும், ராணூவத்தினருக்குமிடையிலான சண்டை காலை 4 மணிக்கு ஆரம்பமாகியதாகத் தெரிகிறது. சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற கடுமையான சண்டையினையடுத்து சுமார் கால்நூற்றாண்டாக இலங்கையினை ஆட்டிப்படைத்த தீவிரவாதி முல்லைத்தீவு வாவியோரத்தில் கொல்லப்பட்டுக் கிடந்தார்" என்று கருணா மேலும் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆளும்கட்சியின் உப தலைவராகவும் இருக்கும் கருணா பிரபாகரனின் மரணம் தொடர்பாக மேலும் கூறுகையில் பிரபாகரனின் தலையின் மேற்பாகம் முற்றாகச் சிதைந்தோ அல்லது குண்டுகளால் வெடித்துச் சிதறப்பட்டோ தெரிந்ததாகக் கூறினார்.
அதேவேளை, ராணுவத்தினர் பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்டனியையும் அவரின் மூத்த தளபதிகளையும் கொன்றிருந்தார்கள்.
இன்று பிரபலமான அரசியல்வாதியாகத் திகழும் கருணா, புலிகளின் மீளுருவாக்கத்திற்கான சாத்தியப்பட்டுகள் குறித்து நாம் வினவியபோது, "சரணடைந்த புலிகளைக் கொண்டு வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர் புலிகளை மீளுருவாக்க நினைப்பார்கள் என்பது வெறும் கனவேயன்றி வேறில்லை" என்று கூறினார்.
"அது சாத்தியமேயில்லை. அதற்கான சூழ்நிலையோ அல்லது அவசியமோ இனிமேல் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. மக்களுக்கு யுத்தத்தின்மேல் வெறுப்பும், அயர்ப்பும் வந்துவிட்டது. இனிமேல் புலிகள் மீள வருவார்கள் என்பதற்கு எதுவிதமான சாத்தியப்பாடுகளும் நிச்சயமாக இல்லை" என்று மிகவும் உறுதியாகவும், ஆணித்தரமாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கருணா 1983 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து இறுதியில் முழுக் கிழக்கு மாகாணத்திற்குமான புலிகளின் தளபதியாக உயர்ந்திருந்தார். பல்லாண்டுகளாக பிரபாகரனின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவராக அவர் இருந்தார். 2002 - 2003 காலப்பகுதியில் அரசுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட கருணா, 2002 இல் கிளிநொச்சி நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்தார்.
பிரபாகரனின் மரணத்திற்காக பிரபாகரனையே குற்றஞ்சாட்டிய கருணா, "பிரபாகரனுக்கு யுத்தம்பற்றிய தெளிவு இருந்திருந்தால் இராணூவம் கடந்த ஆண்டு யுத்தத்தை ஆரம்பித்தபோதே தனது போராளிகளையும், பல தளபதிகளையும் வேறு இடங்களுக்கு அனுப்பிவைத்திருக்கமுடியும், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை" என்று கருணா கூறினார்.
"ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. இது அவரது மடைமையினையே காட்டுகிறது. மக்களின் அவலங்களைக் கண்டவுடன் சர்வதேச அசமூகம் யுத்தநிறுத்தமொன்றினை ஏற்படுத்தும் என்றும், தான் தப்பிவிடலாம் என்றும் இறுதிவரை எதிர்பார்த்திருந்தார்" என்று அவர் கூறினார்.
"அவர் ஒரு உண்மையான தலைவராக இருந்திருந்தால், சுதந்திரமான தனிநாட்டுக்கான போராட்டத்தை இன்னமும் கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்திருக்க மாட்டார். அது ஒருபோதுமே சாத்தியமில்லை என்பதை அவர் தெரிந்திருக்க வேண்டும். யுத்தத்தில் ஈட்டிய வெற்றிகளை அரசியல் ரீதியாக அவர் பாவித்திருந்தால் இன்று தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழ்ந்திருக்கலாம், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை".
"நான் பிரபாகரனிடமும், தமிழ்ச்செல்வனிடமும் மாறிவரும் உலக ஒழுங்கினை அவதானித்து, புலிகளியக்கமும் சில மாற்றங்களை உள்வாங்கிச் செயற்படவேண்டும் என்று கூறினேன், ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டார்கள்" என்று அவர் கூறினார்.
"இங்கே பிரச்சினையென்னவென்றால், பிரபாகரனைச் சுற்றியிருந்த சிலர் அவரை ஏதோ பெரிய தலைவராகக் கொண்டாடத் தொடங்கியிருந்தார்கள், இதனால் அவரும் தான் பற்றிய அதீத கற்பனைகளை வளர்க்கத் தொடங்கிவிட்டார். அவரை ஒருபோதுமே தோற்கடிக்க முடியாத மாவீரனாக அவர்கள் போற்றத்தொடங்கிவிட்டார்கள். அவர்கள் கூறுவதை நம்பிய அவர் அதே சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டார்" என்று தான் இயக்கத்தில் இருந்த காலத்தில் நடந்தவைபற்றிப் பேசும்போது கருணா கூறினார்.
"தமிழர்களுக்கு இனியிருக்கும் ஒரே வழி ஜனநாயக ரீதியிலான அரசியல்தான். அதைவிட வேறு தெரிவுகள் அவர்களுக்கு இல்லை. எம்மிடம் பலமான பாராளுமன்றக் குழு ஒன்று இருந்திருந்தால் நாம் பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கலாம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு பிரியோசனமும் அற்றது" என்றும் அவர் மேலும் கூறினார்.
"90,000 தமிழர்களையும், 24,000 இற்கும் மேற்பட்ட புலிப் போராளிகளையும் 1983 ஆம் ஆண்டிலிருந்து போராட்டத்தில் பலிகொடுத்தபின்னரும் கூட தமிழினம் இன்னும் நடுரோட்டிலேயே நிற்கிறது" என்று கருணா கூறினார்.
"இந்தளவு இரத்தக்களறியின் பின்னரும் தமிழர்கள் கண்டது என்ன, வெறும் அழிவுகள்தானே?" என்று கருணா பதிலளித்தார்.
https://www.hindustantimes.com/world/prabhakaran-was-with-18-men-when-he-was-killed-karuna/story-UfaVjat36kCwDhBclaajfL.html