கருணாவைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் தமது நோக்கத்திற்காகப் பாவிப்பது எந்தளவு தூரத்திற்கு வெற்றிகரமானதாக இருக்கும் எனும் ராணுவத்தினரின் கேள்விக்கான பதிலை நான் சற்று விளங்கப்படுத்த முயல்கிறேன்.
கருணாவின் பிளவானது புலிகளியக்கத்திற்கு முன்னர் ஏற்பட்ட ஏனைய பிளவுகளைக் காட்டிலும் வித்தியாசமானது என்று சிலர் கூறலாம். இதில் முதலாவதாக 1978 இல் பிரபாகரனுடன் முரண்பட்டுக்கொண்டு உமா மஹேஸ்வரன் பெருமளவு வளங்களையும் எடுத்துக்கொண்டு பிரிந்து சென்றது. பின்னர் பிரபாகரனின் இரண்டாம் நிலைத் தளபதியாகவிருந்த ராகவன் 1985 இல் பிரிந்து சென்றார். 1992 இல் மாத்தையாவின் கலகம் நடந்தது.
இவை மூன்றுமே பிரபாகரனை "தம்பி" என்று அழைத்த காலகட்டத்துப் போராளிகளால் நடைபெற்றவை. இவர்கள் அனைவருமே பிரபாகரனைக் கொல்ல விரும்பியிருந்தனர். அதற்கான மிகவும் தெளிவான திட்டங்களும் அவர்களிடம் இருந்தன.
என்னைப்பொறுத்தவரை கருணாவின் பிரிவென்பது ஆரம்பம் முதல் இறுதிவரை தற்செயலாக நடந்தது என்றே நினைக்கிறேன். இப்பிரிவினைக் கருணா நீண்டகாலமாகத் திட்டமிட்டு வந்தார் என்று நான் நம்பவில்லை. அவர் பிரபாகரனின் தலைமைத்துவத்தை நிராகரிக்கவில்லையென்றும், விடுதலைக்கான பாதையினை விட்டு அகலப்போவதில்லையென்றும் தனது 42 நாள் கிளர்ச்சியின்போது தனது ஆதரவாளர்களிடமும், சமாதானம் செய்ய முன்வந்த பலரிடம் தொடர்ச்சியாகக் கூறிவந்திருந்தார். பிரபாகரனை "அண்ணை" என்று அழைக்கும், பிரபாகரனின் ஆளுமையினை, வெற்றியினினைக் கண்டு தரிசித்த, அவரால் வளர்க்கப்பட்ட போராளிகளின் காலகட்டத்தில் இருந்தே கருணாவும் வந்திருக்கிறார். கிழக்கில் தனித்து இயங்குவதாக கருணா பிரபாகரனுக்கு எழுதிய முதலாவது கடிதத்தில், "நீங்கள் எனக்குக் கடவுளைப் போன்றவர்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆரம்பத்தில் கருணாவின் கிளர்ச்சியென்பது, தன்னை சுதந்திரமாக, பிரபாகரனுக்கு நேரடியாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு தளபதியாக செயற்பட அனுமதிக்கும் வேண்டுகோளாகவே அமைந்திருந்தது. அத்துடன், புலிகளியக்கத்தின் ஏனைய தலைவர்களோ, தளபதிகளோ தனது நிர்வாகத்தில் தலையிடுவதனை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவர் பிடிவாதமாகக் கூறியிருந்தார்.
ஆனால், பிரச்சினை மாசி மாதம் 16 ஆம் திகதியே தொடங்கியது. புலிகளின் ராணுவத் தலைமைச் செயலகம் கருணாவை வன்னிக்கு வருமாறு அழைத்தபோது, அதனை கருணா வெளிப்படையாக நிராகரித்தப்பதாக பிரபாகரனுக்கு அறிவித்தபோதே அது ஆரம்பமாகியது. தான் வன்னிக்குச் சென்றால், புலிகளின் தலைவைரின் கோரிக்கையினை நிராகரித்ததற்குத் தண்டனையாக தனது பதவி பறிக்கப்படும் என்று நிச்சயமாக கருணா தெரிந்து வைத்திருந்தார். ஐரோப்பாவில் கருணா சென்ற இடங்களிலெல்லம் தமிழ் மக்கள் அவரை பெரிய வீரனாகவே பார்த்தார்கள். கூடச் சென்ற தமிழ்ச் செல்வனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
கருணா சிறிது சிறிதாக, ஆனால் தவிர்க்கமுடியாமல் யதார்த்தத்திலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியே தான் என்றும், அந்தவிடுதலை தன்னால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் அவர் நம்பத் தொடங்கினார்.
தனது கிழக்கு மாகாண தாளபதிக்கும் தனக்கும் இருந்த நெருங்கிய நட்பினாலும், நம்பிக்கையினாலும், பிரபாகரன் தனது உளவுத்துறையும், கணக்காய்வுத்துறையும் கருணா பற்றிய முறைகேடுகளை அவரிடம் முன்வைத்தபோது அவற்றை ஏறெடுத்துப் பார்க்கக் கூட விரும்பியிருக்கவில்லையென்றும், கருணா கூறுவதுபோல நிர்வாகத்தில் தலையீடுகள் இருப்பின் அவற்றினை நிவர்த்திசெய்து கருணாவை கிழக்கின் தளபதியாகத் தொடர்ந்து பணியாற்ற பிரபாகரன் விரும்பியிருந்ததாகவும் தெரியவருகிறது. போராட்டத்தின் மீதும், இயக்கத்தின்மீதும் கருணா வைத்திருந்த விசுவாசத்தை ஆணித்தரமாக நம்பியிருந்த பிரபாகரன், கருணா கேட்பவற்றை வழங்கும் விருப்பினைக் கொண்டிருந்தார் என்றும் தெரியவருகிறது.
கடந்தவருடம் கருணா வன்னிக்குச் சென்றிருந்தவேளையில், கிழக்கில் தமிழீழ நீதித் துறை மற்றும் காவல்த்துறை நடவடிக்கைகளுக்கு கருணாவின் போராளிகளால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தொடர்பாக பிரபாகரன் கருணாவைக் கடிந்துகொண்டதாகத் தெரியவருகிறது. இதனால் கருணா அவமானப்பட்டதாகத் தெரிகிறது. அதேபோல, மட்டக்களப்பு சர்வதேச பாடசாலை விவகாரத்தில் கருணாவின் செயற்பாடு தலைவருக்குத் தெரியவந்தபோது, அதனைக் கூட தோழமையுடனான அறிவுருத்தலினையே பிரபாகரன் கருணாவுக்கு வழங்கியிருந்தார். கருணா மிக உயர் தளபதியாகப் பிரகடணப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து தலைவரிடமிருந்து கருணாவுக்கு பாராட்டுதல்களும், கணிவான அறிவுருத்தல்களும் மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்தன என்றால் மிகயில்லை. ஆனால் தற்போதோ, தலைவரின் கட்டளையினை வெளிப்படையாக நிராகரித்தமை, பாரிய நிதிமுறைகேடுகள் ஆகிய குற்றங்களுக்காக கருணா தனது தகைமையினை இழக்கப்போவது உறுதியென்று அவர் தெரிந்துவைத்திருந்தார். கருணாவைப் பொறுத்தவரை தனது தலைவரின் முன்னால் இவ்வாறான குற்றவுணர்வுடன் நிற்பது தாங்கொணாத, மிகப்பெரிய அவமானம் என்று கருதினார். ஆகவே இதற்கான ஒரே பரிகாரமாக, "வீட்டுவேலையினைச் செய்யவில்லையென்றால், பள்ளிக்கு ஒழிப்பது போல " தலைவரிப் பார்ப்பதைத் தவிர்ப்பதே ஒரே முடிவென்று அவர் கருதினார்.
முதலில், கருணாவின் நிராகரிப்பின் பின்னால் வெளிச்சக்திகள் இருக்கின்றனவா என்று புலிகள் ஆராயத் தொடங்கினர்.
ஆரம்பத்தில் தலைவரின் கட்டளையினை நிராகரிக்கும் கருணாவின் முடிவின் பின்னால் இலங்கை ராணுவத்தின் உளவுப்பிரிவோ அல்லது வெளிநாட்டுச் சக்திகளோ இல்லையென்பதை புலிகள் அறிந்துகொண்டார்கள். கருணாவின் பின்னால் அமெரிக்கா இருக்கலாம் என்று கரிகாலன் கூறியது, செய்தியாளர் ஒருவரினால் அவர் மீண்டும் மீண்டும் துருவப்பட்டு சங்கடத்திற்கு உள்ளானபோதுதான் என்பது வெளிப்படை.
இக்கட்டத்தில், தமிழ்ச் செல்வன் மட்டக்களப்பிற்குச் சென்று, கருணாவுடன் சுமூகமாகப் பேசி, அவரை வன்னிக்கும் அழைத்துவரும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்வந்தார். புலிகளின் மூத்த தளபதிகளின் கருத்துப்படி, கருணாவை விசாரித்து, தனது நியாயப்படுத்தமுடியாத செலவுகளுக்கான காரணங்களை வெளிப்படுத்தத் தவறிய குற்றத்திற்காக 4 இலிருந்து 6 மாதாங்கள் தண்டனைக்குப் பின், அவரை மீண்டும் சகல அதிகாரங்களுடனும் கிழக்கு மாகாணத்தின் தளபதியாக நியமிக்கும் யோசனையில் பிரபாகரன் இருந்ததாகத் தெரியவருகிறது.