கேள்வி : ஐ நா வினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை பற்றிய உங்கள் பார்வை என்ன? போர்க்குற்றம் தொடர்பாகக் கடுமையான வாதப் பிரதிவாதங்களை அது ஏற்படுத்தியிருக்கிறதே?
கே பி : நாம் ஒரு புதிய தசாப்த்தத்தினுள் வந்திருக்கிறோம். பழயவை பற்றிப் பேசிக்கொண்டிருப்பதில் இனிப் பயனில்லை. அறிக்கையின்படி இரு பக்கத்தினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது. இந்த அறிக்கை மூலம் நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. இந்த அறிக்கையே மிகவும் குழப்பகரமானது, பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. நல்லிணக்க முயற்சிகளை முற்றாக தடம்புரள வைக்கக் கூடியது.
எம்மைப் பொறுத்தவரை இந்த அறிக்கையினால் எவருக்குமே நண்மையேதும் கிடைக்கப்போவதில்லை. இது வெறுமனே தகவல் அறியும் முயற்சி என்றுதான் பார்க்கப்படல் வேண்டும். நீங்கள் வன்னிக்குச் சென்று இந்த அறிக்கை மூலம் யாராவது ஒரு குடும்பமாவது நண்மை அடைந்ததா என்று கேட்டுப் பாருங்கள், அப்போது தெரியும் உண்மை. இவ்வறிக்கையினால் எவருக்குமே நண்மை கிடைக்கப்போவதில்லை. தமிழர்கள் உட்பட முழு நாடுமே இந்த ஐ நா அறிக்கையினை முழுமனதோடு எதிர்க்கிறார்கள். நீங்கள் கள யதார்த்தத்தினை உணர்ந்துகொள்ள வேண்டும். பழையவற்றை நாம் கிளறுவதால் இன்னும் அழிவுகளே மிஞ்சும். போர் என்று வரும்போது யார் முதலில் கொல்லப்படுகிறார்கள் என்பதே முக்கியமானது. போரில் உண்மையும் கொல்லப்பட்டுவிடும். மக்கள் கொல்லப்படாமல் யுத்தம் செய்ய முடியாது. போர் என்றால் மக்கள் இறப்பது இயல்பானது. போரில் நல்லபோர், கெட்ட போர் என்று வேறுபாடில்லை, போர் என்றால் போர், அவ்வளவுதான். இதில் ஒருவரையொருவர் குறைகூறுவதில் அர்த்தமில்லை.
இரு தரப்பினரும் தமது எதிரியை அழிக்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். ஆகவே ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இப்படியே ஒவ்வொரு யுத்தத்திற்கும் ஐ நா அறிக்கை விட்டு நடவடிக்கை எடுப்பதென்றால், இது எப்போது முடியப்போகின்றது? என்னைப்பொறுத்தவரை யுத்தம் முடிந்துவிட்டது, மக்கள் இரண்டுவருடங்களைக் கடந்து வந்துவிட்டார்கள், அவ்வளவுதான். இந்த அறிக்கைகளில் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. ஒருவேளை, தாம் அறிக்கையில் செய்யப்போவதாகச் சொல்லும் விடயங்களை உண்மையாகவே செய்தார்கள் என்றால், பின்னர் பார்க்கலாம்.
இந்தப்போரில், அரசாங்கம் முழுமையான வெற்றியை அடைந்துவிட்டது, புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், தோற்றுப்போன புலிகளின் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். நான் நேரடியாக சிங்கள மக்களுக்கெதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென்றாலும் கூட புலிகளுக்கான ஆயுத முகவராகத் தொழிற்பட்டதனால், நானும் முன்னர் இயக்கத்தில் இருந்தவன் தான். ஆகவே, எமது நலன்பற்றி இந்த அறிக்கை ஏதாவது கூறுகிறதா? இல்லையே?
மக்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் இருந்தால்ப் போதும். அவர்களைப்பொறுத்தவரை போர்க்குற்றம் என்பதோ , ஐ நா அறிக்கை என்பதோ தேவையற்றது. அவர்கள் இவ்வறிக்கையிலிருந்து நண்மை எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. வெறும் தகவல் அறியும் பணிக்காக வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை பற்றி நாம் அலட்டிக்கொள்ளவேண்டிய தேவையென்ன? இந்த அறிக்கை, போரில் இப்படியான குற்றங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறதே, அதுபற்றி உங்களின் கருத்தென்ன என்று இராஜதந்திர ரீதியில் அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான், இதைத்தவிர இந்த அறிக்கைபற்றிப் பேச ஒன்றுமில்லை.
கேள்வி : ஆகவே உங்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு இன்று தேவையானது கல்வி, அபிவிருத்தி, மருத்துவ வசதிகள் என்பன மட்டும் தான் என்று தெரிகிறது, அப்படித்தானே?
கே பி : நிச்சயமாக. போர் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மக்கள் இன்னும் அல்லற்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முன்னர் பல கசப்பான அனுபவங்கள் எமக்குக் கிடைத்திருக்கலாம். பல பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், பழைய விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருப்பதால் எமக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை. வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களைப் போன்றே, இனிமையான அனுபவங்களும் எமக்குக் கிடைக்கும். நாம் இந்த அனுபவங்களையெல்லாம் பாவித்து ஒற்றுமையாக ஒரு தீர்வினைக் காண சேர்ந்து இயங்கவேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கேட்பது உணவும், உடையும், இருக்க வீடு, வேலைவாய்ப்பும் மட்டுமே. அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் நிச்சயம் வழங்க முடியும்.