கேள்வி : நீங்கள் 2002 இற்குப் பின் புலிகளிடமிருந்து விலகியிருந்த காலத்தில் அவர்கள் நக்ஸலைட் பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கலாம் என்று கூறுகிறீர்களா?
கே : அதன் பிறகு எனக்கும் புலிகளுக்கும் எந்தவித தொடர்பு இருக்கவில்லை. 2009 இல் தாங்களாகவே வந்து எனது உதவியினைக் கோரும்வரை நான் விலகியே இருந்தேன். ஆனால் நான் விலகியிருந்த 2002 முதல் 2009 வரையான காலப்பகுதியில் பெருமளவு தவறுகளைப் புலிகள் புரிந்திருந்தார்கள். அக்காலத்தில்த்தான் மாவோயிஸ்ட்டுக்களுக்கும் புலிகளுக்கும் இடையே ஆயுத ரீதியிலான தொடர்புகள் ஏற்பட்டதாக எனது நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன். புலிகளின் போராட்டம் தோற்றுப்போனதற்கு மாவோயிஸ்ட்டுக்களின் தொடர்பும் காரணம் என்றால் அது மிகையில்லை.
கேள்வி : நீங்கள் கூறுவது உண்மைதானா? ஏனென்றால், மாவோயிஸ்ட்டுக்கள் இந்திய ராணூவத்தினரின் மீது நடத்தும் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கான பயிற்சியையும், பொருட்களையும் புலிகளே வழங்கினார்கள் என்று இந்திய புலநாய்வுத்துறை அதிகாரிகள் கூறியிருந்தார்கள் ?
கே பி : நானும் அதனைக் கேள்விப்பட்டேன். இது உண்மையாகக் கூட இருக்கலாம், உறுதிப்படுத்த முடியவில்லை. இந்திய அதிகாரிகளிடம் இருந்தும், புலிகள் இயக்கத்தில் இன்னமும் இருந்த எனது முன்னாள் நண்பர்கள் மூலமும் இதனை நான் அறிந்துகொண்டேன்.
கேள்வி : வன்முறையினைப் பாவித்துப் போராடிய பயங்கரவாதிகளிடமிருந்து விலகி இன்று உங்களுக்கென்று ஒரு ஜனநாயகப் பாதையினைத் தெரிவுசெய்திருக்கிறீர்கள். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட, நீங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கும் உதவப்போவதாகக் கூறிவருகிறீர்கள். வன்முறை நடவடிக்கைகளிலிருந்து விலகி, சமாதானத்துடன், சமரசமாக வாழ முயற்சிப்பதாகக் கூறுகிறீர்கள். எந்த வகையில் நீங்கள் இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழர்களுக்கு உதவுவதாக எண்ணியிருக்கிறீர்கள்?
கே பி : மே மாதம் 2009 ற்குப் பின்னர் நான் வீட்டுக் காவலில் இருந்தாலும் கூட, தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. நான் தை 2009 இலிருந்தே போரினைத் தடுத்து நிறுத்தி பெருமளவு மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க முனைந்தேன். என்னால் முடிந்தவரை இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தேன். ஆனால் துரதிஷ்ட்டவசமாக புலிகள் பிடிவாதமாக மறுத்து மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமானார்கள். ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் எமது மக்கள் படும் அவலங்களைக் கேட்டிருக்கிறேன்.
அதனாலேயே, அவர்களுக்கு சமாதானமான முறையில் வாழ்க்கையினை மீளமைக்க நான் விரும்புகிறேன். புலிப் பயங்கரவாதிகளில் ஒருவனாக இருந்து, அம்மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அவலங்களுக்கும் நானும் ஒரு காரணம் எனும் வேதனையும், கழிவிரக்கமும் எனக்கு இன்றுவரை இருக்கிறது. ஆனால், போர் முடிந்துவிட்டது, நாம் அனைவரும் புதிய சகாப்த்தம் ஒன்றிற்குள் வந்திருக்கிறோம்.
இன்னொரு 100 வருடங்களுக்கு நாம் "ஈழம்" என்கிற கனவுபற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம், பயங்கரவாதச் சிந்தனைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் எதுவுமே நடக்கப்போவதில்லை.
காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்றுவரை ஒரு சிலர் இதுபற்றிப் பேசுவதில்லையா? அதுபோலத்தான் புலிகளின் "ஈழம்" எனும் வெற்றுக் கனவும். அவர்களோடு சேர்த்து அக்கனவும் அழிக்கப்பட்டபின்னரும் இன்னமும் சிலர் அதுபற்றிப் பேசிவருகிறார்கள்.
புலம்பெயர் நாடுகளின் தெருக்களில் காப்பியை அருந்திக்கொண்டு போராட்டம் , வன்முறை பற்றிப் பேசும் பிரிவினைவாதிகள் இன்னமும் இருக்கிறார்கள். அழிக்கப்பட்டுப்போன பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்கும் பேச்சுக்களை சில புலம்பெயர் தமிழர்கள் பேசிவருகிறார்கள். இந்த சிறிய பிரிவினைவாதக் குழு ஆதரவாளர்களுக்கு வேறு எதுவுமே செய்யமுடியாது, இப்படிப் பேசிப்பேசியே தமது காலத்தைக் கடத்திவிடுவார்கள். இவர்களுக்கு போராட்டமும், அவலமும் பணம்பார்க்கு வழி, ஆகவே அவர்கள் தொடர்ந்து இதுபற்றிப் பேசுவார்கள். நான் வைக்கோவிடமும் நெடுமாறனிடமும் புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகப்பேசுவதை நிறுத்துமாறு பலமுறை கேட்டுவிட்டேன், அவர்களோ கேட்பதாக இல்லை. அழிக்கப்பட்டவர்கள் பற்றிப் பேசினால்த்தானே அவர்களுக்கு புலம்பெயர் பிரிவினைவாதிகளின் மாதச் சம்பளம் கிடைக்கும்? இதுதான் அவர்களின் பிரச்சினை.
கேள்வி : தமிழ் மக்களின் அவலங்கள் பணம் பார்க்கும் ஒரு தொழில் என்று கூறுகிறீர்களா?
கே பி : ஆம். அதனைபலமுறை நான் பார்த்திருக்கிறேன். 2005 அல்லது 2006 ஆம் ஆண்டுகளில் இயக்கத்திற்கு பணம் சேர்த்தவர்களின் ஆண்டு வருமானம் 300,000 டாலர்கள்வரை இருந்ததாகக் கூறப்பட்டது.
கேள்வி : இதற்கான பணம் எங்கிருந்து வந்தது ?
கே பி : வேறு எங்கிருந்து? எல்லாம் புலம்பெயர் தமிழர் கொடுக்கும் பணத்தில் இருந்துதான். ஆகவே, நான் இதனை நிறுத்துங்கள் என்று சொன்னால், அவர்கள் வருமானத்திற்கு எங்கே போவார்கள்? நேற்றுக்கூட லண்டனில் ஒரு வீட்டிற்குச் சென்ற புலம்பெயர் பயங்கரவாதிகள் தாம் வன்னி தலைமைக் காரியாலயத்தில் இருந்து வந்ததாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், புலிகளின் வன்னித் தலைமைக் காரியாலயம் இரண்டு வருடத்திற்கு முன்னரே அழித்து இல்லாமலாக்கப்பட்டு விட்டது. இன்றும் வன்னித் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வருவதாகக் கூறி புலம்பெயர் தமிழரிடம் இருந்து பணம் பறிக்கிறார்கள். ஆனால், மக்களுக்கு இது சிறிது சிறிதாகப் புரிந்துவிட்டது. அதனால் இவர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கேள்வி : நீங்கள் உங்கள் கடந்தகால செயற்பாடுகளுக்குப் பிராயச்சித்தமாக சமாதான வழியில் சமரசம் செய்ய நினைக்கிறீர்கள். உங்களின் எதிர்காலக் கனவு என்ன?
கே பி : நான் கடந்த 35 வருடங்களாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவன். கடந்த இரு வருடங்களாக வீட்டுக் காவலில் இருப்பவன். சிலவேளை இன்னும் 10 வருடங்கள் வரை வீட்டுக் காவலில் நான் இருக்கலாம். எனது வாழ்க்கையில் இன்னும் அதிக வருடங்கள் வாழ எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்குமோ என்று எனக்குத் தெரியவில்லை. எனது மீதி வாழ்க்கையினையுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிச் சிறுவர்களுடன் கழிப்பதையே நான் விரும்புகிறேன். இவர்களுக்குப் பெற்றோரோ, அன்போ, கல்வி வசதியோ, அல்லது எதிர்காலமோ எதுவுமே இல்லை. ஆகவேதான் இச்சிறார்களுடன் எனது இறுதிவாழ்க்கையினைக் கழிக்க விரும்புகிறேன்.
வன்னியில் இருக்கும் இச்சிறுவர்களோடு எனது எதிர்காலத்தை கழிக்க அனுமதி தருமாறு பாதுகாப்பு அமைச்சினைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அத்துடன், போரில் தமது பிள்ளைகளை இழந்து, ஆதரிப்பார் எவருமின்றி இருக்கும் வயதானோரையும் பராமரிக்க விரும்புகிறேன். அதேபோல, அங்கவீனமுற்றிருக்கும் பெண்பிள்ளைகளையும் பராமரிக்கும் நோக்கமும் இருக்கிறது.அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியினைப் பார்ப்பதே எனது கனவாகும்.