கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான தாக்குதல் குறித்த புலிகளின் அறிக்கை
முதலில் இக்கொடூரமான தாக்குதல் குறித்து புலிகள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம். இத்தாக்குதலுக்கும் தமக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று மறுக்காவிட்டாலும், இத்தாக்குதல் "மன்னிக்கமுடியாத, கடுமையான கண்டனத்திற்கு உள்ளாக்கப்படவேண்டிய படுகொலைகள்" என்று கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல், தாக்குபவர்களின் உண்மையான குறிக்கோள் எந்தளவு நியாயத்தன்மையினைக் கொண்டிருப்பினும், நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நியாயப்படுத்தப்படவோ முடியாதது என்றும் கூறியிருக்கிறார்கள்.
புலிகளின் அறிக்கை வருமாறு,
" அப்பாவிகள் பேரூந்துமீதான இத்தாக்குதலினை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கெப்பிட்டிக்கொல்லாவையில்,அப்பாவிகளை இலக்குவைத்துத் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல் எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான படுகொலை அரசியல் காரணங்களுக்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஜெனீவாவில் முடித்துக்கொண்டு புலிகளின் பேச்சுவார்த்தைக்குழு நாடு திரும்பியிருக்கும் தருணத்துடன் ஒன்றாக்கி நடத்தப்பட்டிருக்கும் இந்த அப்பாவிகளின் படுகொலை, இப்பழியினை புலிகள் மீது சுமத்தும் ஒற்றை நோக்கத்திற்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. இலங்கை அரசினாலோ அல்லது அவர்களால் வழிநடத்தப்படும் துணைராணுவக் குழு ஒன்றினாலோ நடத்தப்பட்டிருக்கும் இந்த படுகொலையினைக் காரணமாகக் காட்டி இலங்கை அரசு வன்னிமீது தனது கொடூரமான வான் தாக்குதல்களையும் ஆரம்பித்திருக்கிறது. ஆனால், துரதிஷ்ட்டவசமாக, அரசின் இந்த நயவஞ்சகப் பிரச்சாரத்திற்குள் அகப்பட்டிருக்கும் சர்வதேச செய்திநிறுவனங்களும், அமைப்புக்களும் புலிகள் மீது அநியாயமாக இத்தாக்குதலுக்கான பொறுப்பினைச் சுமத்துவது தெரிகிறது. தற்போது நடந்துவரும் வன்முறைகள் தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் பொறுப்பாகவும், நிதானத்துடனும் செய்தி வெளியிடவேண்டும் என்று நாம் வேண்டுகிறோம். யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களாக புலிகள் இயக்கத்தினால் ராணுவ இலக்குகள் மீது மட்டுமே நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசு குற்றச்சாட்டுக்களாக முன்வைத்து வந்தது. ஆனால், இப்போது சிங்கள மக்கள் மீது குறைந்தது 3 தாக்குதல்களையாவது புலிகள் செய்திருப்பதாகக்குற்றஞ்சாட்டுகிறது. இன்றுவரை சிங்கள அரசாலும், அதன் துணைராணுவக் குழுக்களாலும் தமிழ் மக்களும், சிறார்களும் ஆயிரக்கணக்கில் கொன்றுகுவிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். இத்தாக்குதல் ஒன்றின்போது கூட அரசோ அல்லது அதன் துணை ராணுவக் குழுக்களோ தமிழ் மக்கள் மீது தயவு தாட்சண்ணியம்பார்க்காமல், மிகவும் கொடூரமாகவே நடந்திருக்கின்றன. ஆகவே, இத்தாக்குதலிலும் கூட அரசும் அவர்களது துணைராணுவக் குழுவுமே பின்னால் இருப்பதாக நாம் நம்புகிறோம். இந்த நெருக்கடியான நேரத்தில் சிங்கள மக்கள் மீது புலிகள்பெயரால் படுகொலையொன்றினை நிகழ்த்துவதன் மூலம், சர்வதேசத்தில் புலிகளுக்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தவும், அவர்களைத் தனிமைப்படுத்தவுமே அரசு முயன்றிருக்கிறது" என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.