பகுதி 2
2020 எங்களுக்குக் கோவிட் வந்து, முதலாவது ஊசி போட்ட ஒரு வாரத்தில் மீண்டும் மூட்டைப் பூச்சிக்கடி தொடங்கியாச்சு. அதுவும் ஒவ்வொருநாளும். கை, கால், முதுகு, கன்னம், பிடரி கூட மிச்சமில்லை. அதுவும் முதுகுப் பக்கம் ஊர்வதுபோல் ஆரம்பித்து கடிக்கும். நான் துடித்துப் பதைத்து எழுந்து மூட்டை எங்கு கடித்ததோ படுக்கையில் அந்த இடத்தை கைகளால் விறாண்டிவிட்டுப் படுக்க பின்னர் எதுவும் கடிக்காது. என் தாக்குதலுக்குப் பயந்து கட்டில் சட்டங்களுக்குக் கீழே பூச்சிகள் போய் ஒளிந்துகொள்வதாக நான் எண்ணிக்கொண்டேன். மீண்டும் அடுத்தநாள் அவை கடிக்க நான் எழுந்து கைகளால் கிர் கிர் என்று விறாண்ட, மனிசன் திடுக்கிட்டு எழுந்து என்ன செய்யிறாய் என்று கேட்க மூட்டை கடிக்குது. இப்பிடிக்க செய்தால் கடிக்காது என்றுவிட்டு நான் படுக்க, உனக்கு என்ன விசரே. எனக்கு ஒண்டுமே கடிக்கேல்லை. நீ நாளைக்கு என்ர கட்டில்ல படு. நான் உதில படுத்துப் பாக்கிறன் என்கிறார்.
கம்போடிய அனுபவத்தில நாளைக்கு நல்லாக் கடி வாங்கப் போறார் என்று மனதில் எண்ணியபடி தூங்கி எழுந்து அடுத்தநாள் அவர் படுக்கும் பக்கம் நானும் என் பக்கம் அவரும் படுக்க ஒரு மணித்தியாலம் எந்தப் பிரச்சனையுமில்லை. கொஞ்சநேரம் போக இடது பக்கமாகத் திரும்பிப் படுத்து ஒரு பத்து நிமிடம் ஆகவில்லை கன்னத்தில் சுரீர் என்று கடி. அட கடவுளே! தலையணைக்குள்ளும் வந்திட்டிதா என எண்ணியபடி “இந்தாங்கோ, இந்தத் தலையணையில் படுங்கோ” என தலையணையை எதுவும் சொல்லாமல் கொடுத்தபின்னும் மனிசனிடம் எந்த அசுமாத்தமும் இல்லாமல் நித்திரைக்கொள்ள, நானும் வேறு வழியின்றி எனக்குக் கடிச்சதில ஒண்டாவது கடிக்கும் தானே என எண்ணியபடி தூங்கிப்போகிறேன்.
காலையில் “எனக்கு எதுவுமே கடிக்கேல்லை. உனக்கு விசர்” என்றபடி மனிசன் போக, மனிசன்ர ரத்தம் உண்மையில நல்லதோ அல்லது என்ர தான் ருசியெண்டு குடிக்குதோ என்ற சந்தேகம் என்னுள் ஏற்பட்டுப் போக, என்ன செய்வது? வீட்டில மூட்டை இருக்கு என்றாலே எவ்வளவு கேவலம். யாரிட்டையும் போய் கேட்கவும் ஏலாமல் கூகிளில் மூட்டைப் பூச்சி பற்றிய தேடுதலைத் தொடங்கினன்.
மொத்தமாக 12 இக்கும் அதிகமான மூட்டைகள் இருப்பதாகவும் அதில் மூன்று விதமானவையே கட்டில்களில் வாழ்வதாகவும் ஒருவரின் இரத்தம் குடிக்காமல் 45 நாட்கள் வரைகூட அதனால் வாழ முடியும் என்றும் அதன்பின் இன்னொரு மூட்டையின் இரத்தத்தைக் குடித்தே வாழும் என்றும் ஒரு youtube வீடியோ பார்த்தபின் எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது.
அடுத்தநாள் காலை எழுந்து என் கட்டிலில் மூட்டைப் பூச்சிகள் இருக்கு. மருந்து அடிக்க வேண்டும் என்றேன் கணவரிடம். தான் வாங்கிக் கொண்டு வாறன் என்றதும் மனம் நின்மதியடைய மனிசன் தேநீர் அருந்திய உடனேயே கடைக்குக் கலைத்தேன். மனிசன் போய் நாலு கடை ஏறி இறங்கி ஒரு ஸ்பிறே மட்டும் வாங்கிக்கொண்டு வர எனக்குக் கடுப்பானது. எதில தான் நப்பித்தனம் பாக்கிறது எண்டு இல்லையோ. ஒரு மூண்டாவது வாங்கி வந்திருக்கலாம் என்று திட்ட, முதல் இதை நான் நல்லாக் கட்டில் எங்கும் அடிச்சுவிடுறன். அதுக்குப் பிறகு சொல்லு என்று சொல்ல வாய்மூடுகிறேன்.
“எடுக்கிறதை எடு. இரண்டு மூன்று மணித்தியாலங்கள் அறைப்பக்கம் வரக்கூடாது” என்று மனிசன் சொல்ல ஆடைகளையும் துவாயையும் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல மனிசன் தன் வேலையைக் தொடங்குகிறார்.
அன்று மாலை கட்டிலுக்கு புதிதாக எல்லாம் விரித்து மூட்டை செத்திருக்கும் என்ற நினைப்போடு போய் படுத்தால் ஒரு கடியும் இல்லை. மனிசனைத் தேவையில்லாமல் திட்டினது என நினைத்து முதலே இந்த ஸ்பிறேயை வாங்கி அடிச்சிருக்கலாம் என மனதுள் நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை.
நடுச் சாமம் இருக்கும் நல்ல தூக்கம். சுரீர் என்று ஒரு கடி. துடித்துப் பதைத்து எழுந்து கோபத்தில் படுக்கையை விறாண்ட மனிசனும் எழும்பி இந்த நேரத்தில என்ன செய்யிறாய் என்கிறார். திரும்பவும் மூட்டை கடிக்குது. நீங்கள் ஒழுங்கா மருந்தை அடிச்சியளா? அல்லது மிச்சம் வச்சிட்டியளா என்று கேட்க, “கட்டில் சட்டம் எல்லாம் வடிவா அடிச்சு முடிச்சிட்டன். ஸ்பிறே டின் குப்பை வாளிக்குள்ள கிடக்கு விடியப் போய் பார்” என்கிறார்.
“சட்டங்களுக்கு மட்டும் அடிச்சா மெத்தைக்குள்ள இருக்கிற பூச்சி எப்பிடிச் சாகும்? நாளைக்கு நானே கடையில வாங்கிவந்து அடிச்சு பூச்சிக்கு ஒரு வழி பண்ணுறன் என்றபடி தூங்க முயல்கிறேன். முதல் நாள் இணையத்தில் மூட்டைகள் பற்றிப் பார்த்தபோது அவை எங்கெங்கு இருக்கும், எப்படி எல்லாம் பயணம் செய்யும், எத்தனை தரம் இரத்தம் குடிக்கும் என்றெல்லாம் போட்டிருந்தது அந்த இரவில் என் நினைவில் வந்து நின்மதியைக் கெடுக்க, எங்கெல்லாம் ஸ்பிறே அடிக்க வேண்டும் என்று மனதில் எண்ணியபடி ஒருவாறு தூங்கிப் போகிறேன்.
அடுத்தநாள் கடைகளில் சென்று பார்த்தால் பல கடைகளில் ஸ்பிறே முடிந்துவிட்டிருந்தது. கடைசியில் ஒரு கடையில் இருந்த மூன்று ஸ்பிறேயையும் எடுத்துக்கொண்டு வீடுவந்து கட்டில், மெத்தை, தலையணை மட்டுமன்றி அங்கிருந்த கதிரை, கபேட், காபெற், கதவு கூட விடாமல் முழுவதும் அடி அடியென்று ஒன்றும் விடாமல் அடித்து கதவு யன்னல் எல்லாவற்றையும் இறுக மூடி கதவின் அடியில் காற்றே உள்ளே போகாதவாறு ஒரு துணியினால் அடைத்துவிட்டு நானும் கையோடு குளித்து ஆடை மாற்றிக்கொண்டு மனநின்மதியுடன் கீழே வருகிறேன்.
அன்று முழுவதும் அறைப்பக்கம் போகவே இல்லை. ஒவ்வொருநாள் மாலையும் ஒன்றிரண்டு மணிநேரம் தூங்குவது என் கடமை. என் அறைக்குப் போக முடியாது. சரி மகளின் கட்டிலில் படுப்போம் என்று போனால், எங்கள் அறையில் மூட்டை இல்லை. தயவு செய்து கொண்டுவந்துவிடாதீர்கள். எதற்கும் குறை நினைக்காமல் வரவேற்பறையிலேயே தூங்குங்கள் என்கின்றனர் பிள்ளைகள் சிரித்தபடி ஒன்றுசேர.
இத்தனைக்கும் ஒரு வாரமாக அவற்றிலிருந்து மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக போர்வை, விரிப்புகள், தலையணை என ஒன்றும் விடாமல் கடும் சுடுநீரில் வோசிங்க் மெஷினில் போட்டு எடுத்தபடிதான் இருந்தேன்.
அன்று இரவும் வரவேற்பறையே கதியாகிட அடுத்தநாள் அறைக்குச் சென்று யன்னலை நன்கு திறந்து காற்றோட்டமாக்கியபின் மாலை புதிதாக எல்லாம் மாற்றி, வாசனைக்காக மெழுகுதிரியும் கொளுத்தி வைத்தாயிற்று.
இனிமேல் எதுவுமே இல்லாமல் நின்மதியாகத் தூங்கலாம் என எண்ணியபடி கட்டையைச் சாய்த்தால் முதுகுப்பக்கம் ஏதோ ஊர்வதுபோல் ............................... என்ன இது. இவ்வளவு மருந்து அடித்தும் இன்னும் மூட்டைகள் சாகவில்லையே. என்ன பிரச்சனை என்று கட்டிலுக்குப் பக்கத்தில் உள்ள கதிரையில் எழும்பி இருந்து யோசிக்க மனிசனுக்கு மூக்கில வேர்க்க கண்ணை முழிச்சு எதையோ பாக்கிற மாதிரிப் பார்த்திட்டு, மூட்டை இப்பவும் கடிக்குது எண்டால் நீ உதில இருந்தபடி நித்திரை கொள்ளு. தயவு செய்து என்னை எழுப்பிக் கதை சொல்லிக்கொண்டிருக்காதை. என்ர நல்ல மனதுக்கு என்னை எதுவும் கடிக்கேல்லை எண்டு சொல்லிவிட்டுப் படுக்க, இரவு பதினொரு மணிக்கு நான் எழுந்து கீழே சென்று என் கணனியை இயக்குகிறேன்.
உண்மையில மூட்டை இருக்கா இல்லையா என்று அறிய வேறு என்ன வழி என்று தேடினால் amazon இல் Bed Bug Trap எண்டு ஒண்டு கிடக்க, இதுதான் மூட்டை உடனடியா சிக்க சிறந்த வழி என்று எண்ணி உடனேயே £15 இக்கு ஓடர் செய்ய amazon prime இனூடாக அடுத்தநாளே வந்து சேர, கட்டில் கால்களுக்கும் மெத்தைகளுக்குக் கீழும் ஒட்டிவிட்டேன். பிள்ளைகள் மதியம்தான் “என்ன மூட்டைகள் போய்விட்டதா” என்று கேட்க, எனக்கு நேற்றும் ஊர்ந்ததுபோல் இருந்தது என்று இழுக்கிறேன்.
எதுக்கும் நாங்கள் ஒரு சினிமா பார்க்கத் திட்டம் போட்டனாங்கள். இரண்டு மணி நேரப் படம். உங்கள் கட்டிலில் இருவரும் படுத்தபடி ஐப்பாட்டில் படத்தைப் பார்க்கிறோம் என்கிறாள் கடைக்குட்டி. சரி படுங்கோ என்றுவிட்டு மனதை அங்கும் இங்குமாக அலைபாயவிட்டபடி இரண்டு மணிநேரம் பொறுமை காக்கிறேன். ஒரு மகள் தனக்கு எதுவும் கடிக்கவில்லை என்கிறாள். மற்றவள் தனக்கு ஏதோ ஊர்வதுபோல் இருந்தது ஆனால் கடிக்கவில்லை என்கிறாள். எதற்கும் இன்றும் கடிக்கிறதா என்று பாருங்கள். சில நேரம் நீங்கள் விரித்துள்ள கட்டில் விரிப்புத்தான் உங்களுக்குக் கடிப்பதுபோல இருக்கோ தெரியவில்லை என்கிறாள்.
சரியென்று அன்று இரவு சரியான குளிர் நன்றாக போர்வையைப் போர்த்துக்கொண்டு ஒரு பக்கமாகப் படுக்கிறேன். முதுகுப் பக்கம் எந்த அசுமாத்தமும் இல்லை. ஆனால் கையின் மேற்பகுதியில் சுரீர் என்று ஒருவலி. எனக்கு எரிச்சலிலும் ஒரு சந்தோசம். கடுகடுத்த கையைப் பார்க்க அந்த இடம் சிறிது தடித்துப்போய் இருக்கு. உடனே போனை எடுத்து அதை வீடியோ எடுத்து எங்கள் குடும்பத்துக்கான வற்சப் குழுமத்தில் போடுகிறேன். அடுத்தநாள் காலை எழுந்து ஒட்டிவிட்ட டேப் எதிலாவது ஒரு மூட்டைக் குஞ்சாவது ஓட்டுப்பட்டிருக்கா என்று பார்த்தால் அதன் ஒரு கால் அடையாளம் கூட அதிலில்லை. என் ஏமாற்றத்தை உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்றே எனக்குப் புரியவில்லை.
அடுத்தநாள் காலை எல்லாரும் வரவேற்பறையில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கின்றனர். இதை வளரவிட்டால் மூட்டை வீடு முழுதும் பரவிவிடும். எனவே உடனடியாக மூட்டை பிடிப்பவர்களை அழைக்கவேண்டும் என்கின்றனர். உடனடியாக அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுக்க,அடுத்தநாளே வருவதாகக் கூறுகின்றனர். அதற்கான கொடுப்பனவு £100.
மனிசன் ஏதோ புறுபுறுத்தபடி எழுந்து போக நான் வாயே திறக்கவில்லை. அடுத்தநாள் காலை எட்டு மணிக்கு வருவதாக அவர்கள் எனது போனுக்கு செய்தியை அனுப்ப, காலை ஏழு மணிக்கு எழுந்து கோப்பி குடித்துவிட்டு அவர்களுக்காகக் காத்திருக்கிறேன்.
சரியாக எட்டு மணிக்கு வீட்டு மணி அடிக்க விரைந்து கீழிறங்கிக் கதவைத் திறக்கிறேன். இரண்டு இளம் ஆண்கள் நிற்கின்றனர். தங்கள் அடையாள அட்டைகளைக் காட்டிவிட்டு உள்ளே வார முதல் அவர்களின் காலணி களுக்கு பிளாஸ்டிக் கவர் போடுகின்றனர். கோவிட்டுக்காகத்தான் அந்தப் பாதுகாப்பு என்று அவர்கள் சொன்னாலும் மூட்டைக்காகத்தான் என நான் நம்புகிறேன்.
அவர்களுக்கு மேலே கைகாட்டிவிட்டு அவர்கள் செல்ல நான் பின்னே செல்கிறேன். எல்லாம் ஒரு பாதுகாப்பு முறைமைதான். அவர்கள் இருவரும் இரண்டு டோச் லைட் மட்டுமே வைத்திருக்கின்றனர். கட்டில் எல்லாம் சோதிக்கப் போகிறோம் என்று கூற நான் தலையாட்டிவிட்டு வாசலில் பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.
முதலில் இரண்டு தலையணைகளையும் எடுத்து கதிரையில் வைத்துவிட்டு காட்டில் விரிப்பை இருவரும் சேர்ந்து ஒழுங்காக மடிக்கின்றனர். பின்னர் படுக்கையை நிமிர்த்தி அலுமாரியுடன் சாய்த்து வைத்துவிட்டு லைட் அடித்து அங்குலம் அங்குலமாகப் பார்க்க எனக்கு நெஞ்சு பாதைக்குது. எவ்வளவு மூட்டைகள் இருந்து துலைச்சு என்ர மானத்தை வாங்கப் போகுதோ என்று. 2019 கம்போடியா போட்டு வந்ததிலிருந்துதான் கடிக்கத் தொடங்கினது என்று அவர்கள் கேட்காமலேயே நான் கூற, ஓ என்று தலையை நிமிர்த்திக் கூறிவிட்டு காட்டில் சட்டங்களை எல்லாம் தூக்கிவிட்டு, கால் பகுதி எல்லாம் பார்த்து முடிய இருவரும் ஒருசேர நிமிர்கின்றனர். நானும் ஒருக்கா மூட்டைகளைப் பார்க்கலாமா என்கிறேன். அவர்கள் முகங்களில் சிரிப்பு. நீ பார்க்க முடியாது என்கின்றனர்.
அவர்கள் எதற்கு சிரிக்க வேண்டும். “என் வீட்டில் உள்ள மூட்டைகளை ஏன் நான் பார்க்க முடியாது என்கிறேன் சிரித்தபடி ஆனால் சிறிது கோபமும் உள்ளே எழ. “உன் கட்டிலில் ஒரு மூட்டைப் பூச்சி கூட இல்லை. நானும் எதுவும் கொண்டு வரவில்லை” என்கிறான் ஒருவன் சிரித்தபடி. “உண்மையாகத்தான் சொல்கிறாயா” என்கிறேன் நம்பமுடியாமல்.
சத்தம் கேட்டுப் பிள்ளைகளும் எழுந்து வருகின்றனர். மூட்டை ஒன்று இருந்தாலே அது கடித்துவிட்டு வரும்போது இரத்தம் கட்டாயம் கட்டில் விரிப்பிலோ அல்லது மெத்தையிலோ அன்றி சட்டங்களில்எல்லாம் கூடப் பிரண்டிருக்கும். ஆனால் இங்கு எந்தவித அடையாளமும் இல்லை. இரண்டு மூட்டைகள் இருந்திருந்தாலே இரு ஆண்டிலுள் இராண்டாயிரமாய்ப் பெருகியிருக்கும். வீட்டில் ஒரு மூட்டைகளும் இல்லை. நாங்கள் போகிறோம். மீண்டும் எப்போதாவது மூட்டைகள் இருப்பதாக எண்ணினால் கூப்பிடு என்று சிரித்துக்கொண்டே செல்ல, கீழே எல்லாம் கேட்டபடி நின்ற மனிசன் 100 பவுண்டஸ் தண்டம் என்கிறார். சரியப்பா இனி அம்மாவுக்கு மூட்டையே கடிக்காது. அப்பிடிக் கடிச்சா வைத்தியரிட்டதான் கூட்டிக்கொண்டு போக வேணும் என்று சொல்லிச் சிரிக்க நான் செய்வதறியாது நிற்கிறேன்.