ஆண்டு 1955. Zavalichi எனும் உக்ரைனில் இருக்கும் ஒரு சிறு கிராமம். இரவு 11 மணி. வெளியில் இலேசாக பனி பெய்து கொண்டு இருந்தது. குளிர்காலத்தின் ஆரம்பகாலம் இது. நீண்ட தூரத்தில் இருக்கும் மாதா கோயிலின் மணி அடித்து 11 என்பதை காட்டியது. இரவை இருள் மூடி இருந்தது. கிராமத்தில் உள்ள எல்லாரும் எப்பவோ உறங்க போயிருந்தனர்.
புலோவிச் தன் நரைச்ச தாடியினை மெதுவாக தடவி விட்டுக் கொண்டு தன் கபினில் மாட்டியிருந்த அட்டவணையை மீண்டும் ஒருமுறை பார்த்து இனி அடுத்த 6 மணித்தியாலங்களுக்கு எந்த ரயிலும் வரப்போவதில்லை என்பதை நிச்சயத்துக் கொண்டார். வீட்டுக்கு சென்று மனைவி சினிக்கா சமைத்து வைத்து இருக்கும் சூப்பை குடித்து விட்டு 5 மணித்தியாலங்கள் உறங்கலாம் என நினைத்து மதியம் பாதி குடித்து மிச்சம் வைத்து இருந்த சுருட்டின் முனையில் மீண்டும் நெருப்பை பற்ற வைத்தார்.
புலோவிச் இந்த கிராமத்தில் இருக்கும் சிறு ரயில் நிலையத்தின் சிக்னலுக்கு பொறுப்பானவர். இரண்டாம் உலக யுத்த காலத்தில் இராணுவத்தில் இருந்து பணியாற்றி விட்டு ஒய்வு பெற்று விட்டு இப்ப இதற்கு பொறுப்பாக இருக்கின்றார். அவரது 4 மகன்களும் இராணுவத்தில் பணியாற்றுகின்றனர். மிகவும் இயல்பான வாழ்க்கை. ஒவ்வொரு கணத்தையும் ரசித்து வாழும் மனிதர் அவர். வீட்டுக்கு செல்வதற்கு நடக்க தொடங்குகின்றார்.
ரயில் நிலையத்தில் இருந்து நான்கு அடி தூரம் மட்டுமே நடந்து இருப்பார்.
தூரத்தில் ஒரு ரயில் வரும் ஓசை கேட்கின்றது.
இந்த நேரத்தில் எந்த ஒரு ரயிலும் வருவதற்கு வாய்ப்பே இல்லையே என்று தன் கண்களை சுருக்கிக் கொண்டு மீண்டும் பார்க்கின்றார்.
அந்த ரயில் மெதுவாக ஆனால் சீராக வந்து கொண்டு இருந்தது. அதன் சக்கரங்கள் ரயில் தண்டவாளத்தில் பட்டும் படமாலும் ஒரு தாள கதியில் தவழ்ந்து கொண்டு வருவது போல இருந்தது.
தான் சிக்னல் கொடுக்கவில்லையே... எப்படி இந்த ரயில் சிக்னலையும் அலட்சியப்படுத்திக் கொண்டு இப்படி வருகின்றது என அங்கலாய்ப்புடன் அதனையே உற்றுப் பார்க்கின்றார்.
ரயில் பழமையான ரயில். நீராவி இயந்திரம் மூலம் இயக்கப்படும் ரயில். அதன் எஞ்சின் ஏதோ ஒரு விருந்தில் சிறப்பு நடனம் ஆட வந்திருக்கும் மங்கையின் புன் முறுவல போன்று இருந்தது. அதன் அருகே மெல்லிய புகை மூட்டம் பனியின் சாரல்களுக்கு மத்தியிலும் தெளிவாக தெரிந்தது.
புலோவிச் தன் 10 வருட சமிக்ஞை பொறுப்பாளர் காலத்தில் ஒரு போதுமே இந்த ரயிலை கண்டதில்லை. இப்படி பழைய ரயிலை ரஷ்சியஅரசு பயன்படுத்துவதும் இல்லை. அவர் தன் கண்களை மேலும் சுருக்கி ரயிலையே பார்த்துக் கொண்டு நிற்கின்றார்.
அது அவர் நிற்கும் இடத்தினை கடக்க தொடங்குகின்றது.
அப்பொழுதுதான் அதை கவனிக்கின்றார். அதன் எஞ்சினில் ரயிலை செலுத்துவதற்கு எவரும் இல்லை. எஞ்சின் கண்ணாடியில் எந்த முகத்தையும் காணவில்லை.
புலோவிச்சின் தோலில் இருந்து அவரது வெண்ணிற முடிகள் மெல்ல கிளர்ந்து எழுகின்றன.
ரயிலின் பெட்டிகளிலும் எவரும் இல்லை போன்றே தோன்றுகின்றது. அதன் அனைத்து சிவப்பு நிற யன்னல்களும் மூடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு பெட்டியின் நுழைவாயில்களும் கறுப்பு நிற கதவுகளால் சாத்தப்பட்டு இருந்தன. புகைபோக்கியுனூடாக திரவ நுரை வெளியாகிக் கொண்டு இருந்தது.
இறந்த காலம் ஒன்றை தனக்குள் புதைத்துக் கொண்டு அந்த ரயில் செல்வதாக புலோவிச்சுக்கு தோன்றியது
ரயில் கடக்கும் போது, மாதா கோயிலின் மெழகுவர்த்தி வாசனையை ஒத்த வாசனை காற்றில் பரப்பிக் கொண்டு கடந்து கொண்டிருந்தது.
வெண்ணிற அன்னம் ஒன்று தன் சிறகுகளை படபடவென அடிக்கும் ஓசையுடன் ரயில் அவரை விட்டு கடந்து செல்கின்றது.
அதன் கடைசிப் பெட்டியும் கடந்து சென்ற பின் தண்டவாளத்தில் இருந்து நெடிய தூரம் சென்று மறையும் வரைக்கும் அவர் பார்த்துக் கொண்டு நின்றார்.
அடுத்த நாள் காலையில் தொலைபேசி மூலம் ஏனைய ரயில் நிலையங்களில் விசாரிக்கும் போது, அப்படி ஒரு ரயில் தம் நிலையங்களை கடந்து செல்லவே இல்லை என அறிந்தவுடன் அவர் செய்த முதல் வேலை, வேலையை விட்டு விலகியதே.
(ரயில் இன்னும் பயணம் செய்யும்)
பின் குறிப்பு:
இக் கதை 'உண்மையாக நடந்தது' என்று சொல்லப்படுகின்ற ஒரு மர்மமான கதையை / செய்தியை ஒட்டி (unresolved mystery), அதைத் தழுவி புனையப்படுகின்றது....
இந்தக் கதையை கண்டிப்பாக உங்களில் சிலர் அறிந்து இருப்பீர்கள். அப்படி அறிந்து இருப்பின் இப்போதைக்கு அதை சொல்ல வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.