உமா மகேஸ்வரன்
தலைவர்களின் இந்த முடிவிற்கெதிராக தமிழ் இளைஞர் பேரவை புரட்சிசெய்ய ஆரம்பித்தது. அவ்வமைப்பின் கொழும்பு கிளையின் தலைவர் ஈழவேந்தனும், செயலாளர் உமா மகேஸ்வரனும் தமிழ்த் தலைவர்களைப் புறக்கணிக்குமாறு கடுமையான அறிக்கையொன்றினை வெளியிட்டனர். "மக்கள் விரும்புவதை உங்களால் செய்யமுடியாவிட்டால், தயவுசெய்து விலகிச் செல்லுங்கள்" என்பதே அவ்வறிக்கையின் செய்தியாக இருந்தது.
ஈழவேந்தன்
சமஷ்ட்டிக் கட்சியில் இளைய தலைவர்களான அமிர்தலிங்கம், நவரட்ணம் மற்றும் ராஜதுரை ஆகியோர், இளைஞர்களை ஆசுவாசப்படுத்த முயன்றதுடன், தாம் மீண்டும் சமஷ்ட்டி முறை ஆட்சிக்கான கோரிக்கையினை மீண்டும் தில்லையென்று தெரிவித்தனர்.
"எமது முடிவு உறுதியானது. நாம் சமஷ்ட்டி முறைத் தீர்வினை கைவிட்டு விட்டோம். தமிழர் ஐக்கிய முன்னணியின் தீர்மானத்தில் சுய ஆட்சியென்று பாவிக்கப்படும் பதத்தினை நாம் சமஷ்ட்டி என்று அர்த்தப்படுத்தக் கூடாது. அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்படுவது தனிநாட்டிற்கான கோரிக்கையே அன்றி, அதற்குக் குறைவான எதுவுமல்ல" என்று ஈழவேந்தனிடமும் உமா மகேஸ்வரனிடமும் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
தான் சமஷ்ட்டிக் கட்சியில் தலைவராக 1973 ஆம் ஆண்டு, ஆடி 25 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டதையடுத்து வெளியிட்ட அறிக்கையில் அமிர்தலிங்கம், சமஷ்ட்டிக் கட்சியில் நடவடிக்கைகளில் நிச்சயம் இளைஞர்களின் விருப்பங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்படும் என்று கூறினார். அவர் தான் கூறியபடி செயற்படவும் தலைப்பட்டார். அதன்படி, 1973 ஆம் ஆண்டு புரட்டாதி 9 ஆம் திகதி மல்லாகத்தில் இடம்பெற்ற மாநாட்டில் சமஷ்ட்டிக் கட்சி, சமஷ்ட்டி அடிப்படையிலான கோரிக்கையினைக் கைவிடுவதாகவும், தனிநாட்டிற்கான கோரிக்கையே தமது தற்போதைய நிலைப்பாடு என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. தமது தீர்மானம் பற்றிப் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு கூறினார்,
"சிங்கள மக்களின் விருப்பத்துடன் எமக்கான உரிமைகளை எம்மால் பெறமுடியாது என்பது உறுதியாக்கப்பட்டுள்ள நிலையில், எமக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு தமிழர் பூர்வீக தாயகத்தில் தமிழ் தேசமாக, உலகின் எந்தவொரு நாடும் சுயநிர்ணய உரிமையின் பால் தாமைத் தாமே அள்வதுபோல, எம்மை நாமே ஆளும் நிலையினை உருவாக்குவதுதான்" என்று கூறினார்.
மல்லாகம் தீர்மானத்தின் இறுதிப்பகுதி இதனைத் தெளிவாக விளங்கப்படுத்துகிறது,
"இன்று நடந்த தேசிய மாநாட்டின் பிரகாரம், தமிழர்கள் தமக்கான தனியான தேசத்தை அமைக்கும் அனைத்து இலக்கணங்களையும், தனியான நாட்டில் வாழும் உரிமையினையும் கொண்டிருக்கிறார்கள் என்பதனை தெரிவிப்பதோடு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களின் முன்னால் உள்ள ஒரே தெரிவு சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையான சுயநிர்ணய உரிமையினைப் பாவித்து தமிழர்களும் தமது பூர்வீக தாயகத்தில் தனியான தேசமாக வாழ்வதுதான்"
இத்தீர்மானத்தினையடுத்து இளைஞர்கள் மகிழ்வுடன் காணப்பட்டனர். தமிழ் ஈழமே எங்கள் தாய்நாடு, தமிழ் ஈழமே எங்கள் ஒரே விருப்பு என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
ஆயுத அமைப்புக்கள் இந்தச் சுலோகங்களையே தமது தாரக மந்திரமாக வரிந்துகொண்டன. அமிர்தலிங்கத்தைத் தமது தோள்களில் சுமந்துசென்ற இளைஞர்கள், தமிழர் தாய்நாட்டை உருவாக்குவதற்காக தமது வாழ்வை அர்ப்பணிப்பதாகவும் அவர்கள் அறைகூவல் விடுத்தனர்.
அமிர்தலிங்கம் இயல்பாகவே உணர்வுபூர்வமானவர். இளைஞர்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாட்டினால் உந்தப்பட்ட அவர் பின்வருமாறு கூறினார்,
"எங்களின் இளைஞர்களுக்காக, இந்தத் தருணத்தில் நான் கூற விரும்புவது, எங்களால் வழங்கக் கூடியது இரத்தமும், வியர்வையும், கண்ணீரும்தான். இதனால் உங்கள் மீது பொலீஸாரின் தடியடியும், இராணுவத்தின் அராஜகத் தாக்குதல்களும், வழக்கின்றித் தடுத்துவைக்கப்படும் அட்டூழியங்களும் நிகழ்த்தப்படலாம். ஆனால் மிகவும் ஆபத்துநிறைந்த இந்தப் பாதையூடாகப் பயணித்து எமக்கான சுந்தத்திரத்தை நாம் அடைவோம்".
"எமது தாய்நாட்டிற்கான விடுதலைக்காக எமது இரத்தத்தையும் , உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராகிவிட்டோம்" என்று இளைஞர்கள் பதிலுக்கு ஆர்ப்பரித்தனர்.
ஆனால், வெறும் இரு மாத காலத்திற்குள் தமிழ்த் தலைவர்களும், தமிழ் இளைஞர் அமைப்பினை வழிநடத்திய சமஷ்ட்டிக் கட்சியின் அடியாட்களும் இளைஞர்களைக் கைவிட்டனர். அரசுக்கெதிரான எதிர்ப்பினைக் காட்டவேண்டிய அவசியத்தில் தவித்த தமிழர் ஐக்கிய முன்னணியினர், தபால் சட்டமான "உபயோகித்த முத்திரைகளைப் பாவிக்கப் படாது" என்பதனை மீறும் முகமாக பாவித்த முத்திரைகளையே தாம் பாவிக்கப்போவதாக அறிவித்தனர். காந்தி ஜயந்தி தினமான ஐப்பசி 2 ஆம் திகதியன்று ஆலயங்களில் சத்தியாக்கிரக நிகழ்வுகளை நடத்தப்போவதாகவும், 10,000 கடிதங்களை பாவித்த முத்திரைகளை மீண்டும் இணைத்து அனுப்பப்போவதாகவும் அறிவித்தனர். இவ்வறிவித்தலை எள்ளி நகையாடிய இளைஞர்கள், பாவிக்கப்பட்ட முத்திரையுடன் அனுப்பப்படும் கடிதங்களை தபால் ஊழியர்களே குப்பையினுள் எறிந்துவிடுவார்கள், உங்களின் எதிர்ப்பும் பிசுபிசுத்துப் போய்விடும் என்று கூறியிருந்தார்கள். அவர்கள் கூறியப்டியே அந்த எதிர்ப்பு நடவடிக்கை பிசுபிசுத்துப் போனது.
தமிழ் இளைஞர் பேரவை 50 நாள் சுழற்சிமுறை உண்ணாவிரதத்தினை யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பித்தது. பகல் வேளையில் உண்ணாவிரதமிருந்த உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்யுமாறு கோரிக் கோஷமிட்டனர். இந்த சுசுழற்சிமுறை உண்ணாவிரத நிகழ்வினை பரிகசித்த சிவகுமாரன், இதனை ஒரு மோசடி நாடகம் என்று வர்ணித்தார். சத்தியாக்கிரகம் எனும் உயரிய செயற்பாடு தமிழ்த் தலைவர்களால் அரசியல் விபச்சாரமாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களில் இயங்கும் பல இளைஞர்கள் தமது மறைவிடங்களில் உண்ண உணவின்றி நாள்தோறும் பட்டினியை எதிர்கொண்டுவருவதாக அவர் கூறினார். தமிழர் ஐக்கிய முன்னணியினரும், தமிழ் இளைஞர் பேரவையும் கைதுசெய்யப்பட்ட இளைஞர் விவகாரத்தை தமது அரசியல் ஆதாயங்களுக்காகப் பாவிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஐப்பசி மாதமளவில், தமிழர் ஐக்கிய முன்னணியினரை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவிடாது தடுப்பதென்பது அரசைப் பொறுத்தவரையில் அவசியமானதாக உணரப்பட்டது. ஐப்பசி 11 அன்று, அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் எதிர்க்கட்சியினரின் பேரணியொன்றினை ஐக்கிய தேசியக் கட்சி ஒழுங்குசெய்திருந்தது. இப்பேரணியில் பேசுவதற்கு தமிழர் ஐக்கிய முன்னணியினரின் பிரதிநிதி ஒருவரையும் அனுப்பிவைக்குமாறு அது கேட்டிருந்தது. எதிர்க்கட்சியினரின் இந்தப் பேரணியில் தமிழர் ஐக்கிய முன்னணியினர் கலந்துகொள்வதை சிறிமா விரும்பவில்லை. ஆகவே, அவர் தந்தை செல்வாவிற்கு சிநேகபூர்வமான கடிதம் ஒன்றினை அனுப்பினார். அதில், காங்கேசந்துறை இடைத்தேர்தலினை தான் நடத்தாமைக்கான காரணம் பொலீஸாரின் அறிவுருத்தலேயன்றி வேறில்லை என்றும், தமிழர் ஐக்கிய முன்னணியினருடன் தான் புதிய பேச்சுக்களை ஆரம்பிக்க ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஐப்பசி 8 ஆம் திகதி அரசுடன் தமிழர் ஐக்கிய முன்னணி நடத்திய பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன. இதற்குக் காரணம், தந்தை செல்வா முன்வைத்த 4 கோரிக்கைகளில் ஒன்றினை மட்டுமே செய்வதாக சிறிமா ஒத்துக்கொண்டதுதான். நீதிமன்ற மொழிப்பாவனைக்கான சட்டத்தினை அரசியல் யாப்பில் சேர்க்க சிறிமா இணங்கியபோதும், ஏனைய மூன்று கோரிக்கைகளான தமிழ் மொழியினை அரச கரும மொழியாக யாப்பினுள் இணைப்பது, வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு சுய அதிகாரத்தை வழங்குவது, அரச ஆதரவுடன் தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை உடனே நிறுத்துவது ஆகியவை சிறிமாவினால் முற்றாக நிராகரிக்கப்பட்டன.
பேச்சுவார்த்தைகளின் தோல்வி, 1973 ஆம் ஆண்டு, மார்கழி 2 ஆம் நாள் அன்று அரச நிர்வாகத்துக்குக் கீழ்ப்படியாமை எனும் எதிர்ப்புப் போராட்டத்தினை நோக்கி தமிழர் ஐக்கிய முன்னணியினரைத் தள்ளியது. மேலும், கைதுசெய்யப்பட்டு, வழக்கின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுவிக்கக் கோரும் போராட்டத்தினையும் தமிழர் ஐக்கிய முன்னணியினர் கையிலெடுத்தனர்.
மார்கழி 31 இற்கு முன்னர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் விடுதலை செய்யப்படாதவிடத்து, சில தெரிவுசெய்யப்பட்ட அவசரகாலச் சட்டங்களை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அது அரசுக்கு அறிவித்தது. "மிகவும் நேர்த்தியாக ஒழுங்குசெய்யப்பட்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொலீஸார் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கைதுசெய்யவேண்டி ஏற்படும்" என்று அமிர்தலிங்கம் கூறியிருந்தார்.
பொலீஸார் இளைஞர்களைக் கைதுசெய்து தடுத்துவைக்கும்போது சரியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அமிர்தலிங்கம் குற்றஞ்சாட்டி வந்தார். தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்யமுடியாது என்று பொலீஸாரை தலைமை வழக்கறிஞர் அறிவுருத்தியபோது, இந்த இளைஞர்களை தாம் தொடர்ந்தும் விசாரித்துவருவதாகவும், விசாரணைகள் இன்னமும் முற்றுப்பெறவில்லை என்றும் பொலீஸார் அறிவித்தனர். இந்த பொய்க்காரணங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்ததுடன், காசி ஆனந்தன் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக பொலீஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அரசாங்கம் காசி ஆனந்தனை விடுதலை செய்தது. மீமாக இருந்த 42 பேரில் 25 இளைஞர்களை மார்கழி 29 வரையில் விடுதலை செய்திருந்தது.நீதியமைச்சராக இருந்த பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்கா, தந்தை செல்வாவிற்கு எழுதிய கடிதத்தில், மீதமிருக்கும் இளைஞர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் அல்லது அவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்படும் என்று கூறிருந்தார். இதனையடுத்து தமிழர் ஐக்கிய முன்னணியினர் தமது சட்டங்களை மீறும் ஆர்ப்பாட்டத்தினைப் பின்போட்டுவிட்டனர்.
ஆனால், தை 10 ஆம் திகதி தமிழ் மக்களை, குறிப்பாக இளைஞர்களை ஆத்திரப்படுத்தும் நடவடிக்கை ஒன்றினை சிறிமாவின் அரசு எடுத்திருந்தது.