மலர்............(12).
நிர்மலாவின் குடும்பத்தினரும் அங்கு வந்து ஒரு இடத்தைப் பிடித்து பந்தல் எல்லாம் போட்டு சாமான்களை இறக்கி வைத்து அப்புவை காவலுக்கு வைத்து விட்டு மாதாவின் ஊர்வலம் பார்க்கப் போயிருந்தார்கள். பின் தரிசனம் முடிந்து அவர்கள் வந்து சமைக்கத் தொடங்கியதும் அப்பு கோயில் பார்க்கப் போகிறார். கதிரவனும் முகிலனும் விளையாட்டு சாமான்கள் வாங்குவதற்கு கடைகள் இருக்கும் பக்கமாகப் போகிறார்கள். சிவாங்கியும் சரவணனும் சிறுவர்களாதலால் தாயோடும் பேத்தியாரோடும் இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஆச்சியும் நிர்மலாவும் சமையல் வேலைகளை முடித்து விட்டிருந்தார்கள். இனி எல்லோரும் வந்து சாப்பிட்ட பின் ஊருக்கு கிளம்பு வேண்டியதுதான். ஆச்சி அங்கிருக்க நிர்மலாவும் பிள்ளைகளுக்கு பிராக்கு காட்ட இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு மூவருமாய் வீதியில் நடக்கிறார்கள். அப்போது ஒரு பந்தலுக்குள் இருந்த அம்மா அவளைக் கூர்ந்து பார்த்து விட்டு பிள்ளை நிர்மலா என்று சத்தமாய் கூப்பிடுகிறாள். உடனே நிர்மலாவும் திரும்பிப் பார்க்க அங்கு இராசம்மா ஒரு சிறிய கதிரையில் இருந்து எழும்ப முயற்சித்தபடி இவர்களை அழைக்கிறாள். ஓம் ...அம்மா நான் நிர்மலாதான், நீங்கள் இருங்கோ நான் அங்கு வாறன் என்று சொல்லி பிள்ளைகளுடன் அங்கே செல்கிறாள். அவளைக் கண்டதும் இராசம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. கண்களில் நீர் சொரிய அவளின் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள்.
--- நிர்மலா எப்பிடியடி இருக்கிறாய். இவர்கள் உன் பிள்ளைகளோ என்று வினவுகிறாள்.
---ஓம் அம்மா நான் நல்லா இருக்கிறன். இவன் என் மகன் சரவணன். இவள் என் புருசனின் மூத்த தாரத்து மகள் சிவாங்கி. இவ பிறக்கும்போது அவ தவறிட்டா.
--- அப்ப நீ இரண்டாம்தாரமாகவோ அவரைக் கட்டியிருக்கிறாய். அவருக்கு வேறு பிள்ளைகளும் இருக்கோ என்று கேட்கிறாள்.
--- ஓம் அம்மா இவளுக்கு மூத்த சகோதரன் முகிலன் என்றொரு மகனும் இருக்கிறார். பின் இராசம்மாவும் அவள் வயிற்றைப் பார்த்து விட்டு கண்ணாலேயே விசாரிக்க அவளும் ம்....என்று சொல்கிறாள்.
--- எத்தனையாவது மாசம் என்று கேட்க நிர்மலாவும் ஆறுமாசமாகுது என்கிறாள்.
--- பிள்ளை அன்று நீ போனதில் இருந்து நாங்கள் உன்னைத் தேடாத இடமில்லை. உன்ர அப்பா அம்மாவுடன் கதைக்கிறனியே.
--- இல்லையம்மா, இனிமேல்தான் அவையளோட தொடர்பு கொள்ள வேணும்.
--- கெதியா அவையளோட கதை பிள்ளை.அவையிலும் கலங்கிப்போய் இருக்கினம். நாங்கள்தான் உன்னை ஏதோ செய்து போட்டம் என்று சண்டை பிடித்து விட்டு போனவை. பிறகு ஒரு தொடர்பும் இல்லை. அதுசரி உன்ர புருசனும் அவை வீட்டுக்காரரும் உன்னை நல்லபடியா வைத்திருக்கினமோ.
--- ஓம் அம்மா. அவர் மட்டுமன்றி அப்பு ஆச்சியும் என்மேல் நல்ல பாசமாய்தான் இருக்கினம்.
--- எனக்குத் தெரியும் பிள்ளை, நீ உன்ர குணத்துக்கு எங்கிருந்தாலும் நல்லா இருப்பாய் என்று சொல்லி சரவணனை தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறாள்.
--- நான் அங்கு போகும்போது அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன. நான் அவையளது வீட்டில் வாடகைக்குத்தான் இருந்தனான். பின் அவரைத் திருமணம் செய்துதான் கடவுள் அருளால் எனக்கு இந்தப் பிள்ளைகள் கிடைத்தன. அது சரி அம்மா உங்களுக்கு பேரன் பேத்தி இருக்கினமோ.
--- இராசம்மாவுக்கு கண்களில் நீர் கோர்த்து விட்டது. அவள் மூக்கை சிந்தி அங்கால வரப்பில் எறிந்து விட்டு, அதை என் பிள்ளை கேட்கிறாய், ஜோதியை கலியாணம் செய்து கொண்டு வந்து இப்ப நாலைந்து வருடமாகி விட்டது. இன்னும் கடவுள் கண் திறக்கேல்ல. நானும் கையடுத்துக் கும்பிடாத தெய்வமில்லை, செய்யாத பரிகாரமுமில்லை, இனி இந்த மாதாவாவது கண் திறக்க வேணும் குரல் கம்முகிறது.
--- அழாதையுங்கோ அம்மா. எல்லாம் நல்லபடியா நடக்கும். எனக்குத் தெரிந்தவரையில அவருக்கு ஒரு குறையும் இருந்ததில்லை. நான் செய்த இந்தத் திருமணம் கூட நானே எனக்கு செய்து கொண்ட ஒரு சுயபரிசோதனைதான். ஒருவேளை இந்தப் பிள்ளைகள் கிடைக்காதிருந்தாலும்கூட நான் வளர்க்க அவர் மூலமா இரண்டு பிள்ளைகள் இருக்கு என்னும் மனநிறைவுதான்.
--- நீ சொல்லுறதும் சரியாத்தான் இருக்கு. ஆனால் என்ன செய்வது எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.
--- நிர்மலா தனக்குள் நினைக்கிறாள் "ஒருவேளை சங்கரும் யாராவது ஓரிரு பிள்ளையுடன் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்திருந்தால் அவருக்கும் பிள்ளைகள் பிறந்திருக்கக் கூடுமோ என்று.
--- அதே எண்ணம் இராசம்மாவுக்கும் அதேநேரத்தில் தோன்றுகிறது.
--- பின்பு நிர்மலாவும் சரியம்மா அவர்கள் வரும் நேரமாச்சுது, என்னையும் பிள்ளைகளையும் தேடுவார்கள். நாங்கள் போகிறோம் என்று சொல்லி பிள்ளையை அவளிடம் இருந்து வாங்கும் போது எதிர்பாராமல் இராசம்மாவும் தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழட்டி பிள்ளையின் கழுத்தில் போடப்போக நிர்மலா அதைத் தடுத்து வேண்டாம் அம்மா இது சிலநேரம் வீட்டில் பிரச்சினையாகி விடும், ஏதாவது இனிப்போ பலகாரமோ குடுங்கள் போதும் என்று சொல்ல இராசம்மாவும் ம்.....அதுவும் சரிதான் என்றுவிட்டு பைக்குள் இருந்து கொஞ்சம் சொக்கிலேட்டுகள் எடுத்து பிள்ளைகளிடம் கொடுக்கிறாள்.
நிர்மலாவும் சரியென்று சொல்லி விட்டு பிள்ளைகளுடன் போவதையே அவள் பார்த்துக் கொண்டிருக்க கோயில் மணியும் ஒலிக்கிறது. அவர்களின்தலைக்கு மேலால் மாதாவின் கோயில் தெரிகிறது. அவளையறியாமல் கைகள் கோயிலைப் பார்த்து கும்பிடுகின்றன.
அதேநேரம் யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் ஆலயத்தில் ஒரு பெண்ணும் சிறு பையனும் வந்து அங்கிருந்த கடலை விக்கிற பெண்ணின் அருகில் பாதணிகளை கழட்டி வைத்து விட்டு கால் கை முகம் கழுவி பையனுக்கும் முகத்தை நீரால் துடைத்துவிட்டு அர்ச்சனைத் தட்டுடன் உள்ளே செல்கிறார்கள். அங்கு ஒருரூபாய் அர்ச்சனை சீட்டு பத்து வாங்கிக் அர்ச்சனைத் தட்டில் வைத்துக் கொண்டு தண்டாயுதபாணி சந்நிதிக்கு வந்து அய்யரிடம் தருகிறாள்.
--- ஐயா இன்று இவருக்கு பிறந்தநாள்.ஒரு அர்ச்சனை செய்ய வேண்டும்.
--- அதுக்கென்ன செய்திடலாம். துண்டில பையனின் பெயர் நட்ஷத்திரம் மற்றும் பெற்றோரின் பெயர்களையும் எழுதிவிடுங்கோ. அது சரி ஏனம்மா பிள்ளைக்கு பிறந்தநாள் என்று சொல்கிறாய், முன்னுக்கு மூலவர்,உற்சவர், ஆறுமுகசாமி எல்லாம் கல்யாண கோலத்தில் இருக்க இந்தப் பழனியாண்டியிடம் வந்திருக்கிறாய்.
--- அது வந்து ஐயா இந்த சாமிதான் தந்தையின் வீடும் வேண்டாம் சொத்து பத்து எதுவும் வேண்டாம் என்று தனியாக வந்து தனக்கென ஒரு இடம் பிடித்து கம்பீரமாய் எழுந்தருளிக் கொண்டு இருக்கிறார் அதுதான்.
--- அதுவும் சரிதான், அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டுபோய் முருகனுக்கு முன்னால் ஜெய்சங்கர் மூலநட்ஷத்திரம் சங்கர் தாயம்மாவின் ஏகபுத்திரன் என்று பெயர் சொல்லி தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்கிறார். பின் தட்டோடு வந்து அவனின் நெற்றியில் வீபூதி இட்டு சந்தனப் பொட்டும் வைத்து விட்டு தீர்த்தம் குடுக்கும்போது அவன் கையை கவனிக்கிறார் அதில் ஆறு விரல்கள் இருக்கின்றன. நீ ராஜாடா, நன்றாக வாழ்வாய், "ஆண் மூலம் அரசாளும்" என்று சொல்லி விட்டு போகிறார்.
சுபம்.......! 🌺
யாவும் கற்பனை......!
யாழ் இணையம் 25 வது அகவைக்காக
அன்புடன் சுவி.....!