இரண்டு
என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவள் கூறியபோது எனக்கும் நின்மதியாக இருந்தது. எனது கடைசி மகளின் பட்டப்படிப்பு யூலை மாதம் முடிவடைகிறது. அதன்பின் நாம் கிளம்பலாம் என்றதற்கு செப்டெம்பர் மாதம் தான் தான் வரமுடியும் என்று கூற, இப்பவே விமானச் சீட்டை எடுத்தால் மலிவாக இருக்கும் என்றேன் நான்.
அந்த மாதம் யாரும் விடுமுறையில் செல்ல மாட்டார்கள் ஆகவே ஒரு மாதத்தின் முன் எடுத்துக் கொள்ளலாம் என்றாள் அவள். சரி அவளுக்கும் என்ன பிரச்சனையோ, கொஞ்சம் பொறுப்போம் என்று எண்ணிக்கொண்டு நானும் அப்பப்ப வேறுவேறு விமானச் சீட்டுகளை மலிவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எமக்கு அங்கே தேவைபடக்கூடிய சில பொருட்களையும் வாங்கியாயிற்று. சரியாக ஒரு மாதம் இருக்க இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று எண்ணியபடி அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி எத்தனையாம் திகதி புக் செய்வது என்று கேட்டபோது “சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. உள்ளுக்குள்ளே சரியான கோபம் கனன்றுகொண்டிருந்தாலும் வெளியே அவளைத் திட்டவேயில்லை. சரி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு தொலைபேசியை வைக்க பல தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேச் வர அதையும் திறந்து பார்க்காது என் கோபத்தை அவளுக்குக் காட்டுகிறேன்.
சரி இந்தியா போவது சரிவாராது. ஒஸ்ரேலியாவுக்காவது போகலாம். நீங்கள் எதற்கும் இலங்கை சென்று அங்கிருந்து செல்லலாம் என மனதுள் தனியாக அங்கு செல்வது என்னவோபோல் இருக்க அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப ஊருக்குத்தானே தனியாகப் போகலாம் என முடிவெடுத்து விமானச் சீட்டைப் பார்க்கத் தொடங்க எனக்கும் படிப்பு முடிஞ்சிட்டதுதானே, நானும் ஊருக்கு வரப்போறன் என்றாள் என் கடைக்குட்டி. ஆனால் உங்களோட வந்து ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வரமாட்டியள். எதுக்கும் அப்பாவோடை நான் வாறன். நீங்கள் தனியப் போங்கோ என்றதற்கு உடனே இடைப் புகுந்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போக 55,60 கேட்பான்கள். எதுக்கும் அம்மாவோடையே சேர்ந்து போவம் என்றார் என் ஆத்துக்காறர். எனக்கும் ஒருவிதத்தில அது நின்மதியாய் இருந்தது. இல்லாவிட்டால் நான் தானே இரண்டு பயணப் பொதிகளையும் இழுத்துக்கொண்டு திரியவேண்டும். யாழ்ப்பாணம் போனபிறகு எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு நானே ரிக்கற்றை புக் செய்கிறேன் என்று கணனியியின் முன் இருந்தாச்சு.
நேரடியாகக் கொழும்பு செல்வதற்கு 880 பவுண்டஸ். ஓரிடத்தில் மட்டும் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்வது 760 பவுண்டஸ். lufthansa என்னும் ஜெர்மன் விமானத்தில் சுவிசில் நான்கு மணித்தியாலங்களும் பொம்பேயில் இரண்டு மணித்தியாலங்களும் தரித்துச் செல்வதற்கு 440 பவுண்ஸ் மட்டும் என்று இருக்க வேறு எதையும் யோசிக்காமல் டிக்கற்றை புக் செய்தாச்சு. கிட்டத்தட்ட அரைவாசிக்காசு மிச்சம் என்று மனதுள் எண்ணியபடி மனிசனிடம் சொல்கிறேன். எத்தனை கிலோ கொண்டுபோகலாம் என்று கேட்கிறார். அப்போதுதான் என் மண்டையில் உறைக்கிறது. நான் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பார்க்கவுமில்லை. உடனே சென்று பார்க்கிறேன் ஒருவருக்கு 23 kg பொதியும் கையில் கொண்டுபோக 8 kg மட்டுமே அனுமதி என்று இருக்க ஐயோ அவசரப்பட்டிட்டனே என்கிறேன். அது என்ன புதிசா. மகளிடம் கொடுத்திருந்தால் அவள் கவனமாக கேட்டுக் கேட்டு புக் பண்ணியிருப்பாள். எல்லாம் நீதான் செய்யவேணும். அங்க வந்து உன்னோடை என்ணெண்டு சமாளிக்கப் போறனோ என்கிறார். நீங்கள் இருவரும் உங்கள் தங்கை வீட்டில் இருந்துகொள்ளுங்கள். நான் சித்தியுடன் நிக்கிறன் என்றுவிட்டு “மூன்று பேர் போறம். உங்கள் சூட்கேசில் முக்கால்வாசி இடம் இருக்கத்தானே போகுது” என்று சமாதானம் சொன்னாலும் உள்மனது போதாது போதாது என்கிறது.
DMA என்னும் பார்சல் சேர்விஸ் இங்கே உண்டு. நான்கு தொடக்கம் ஆறு வாரங்களில் பொதிகளை வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்கள். சிறிய பெட்டியுள் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ வரை வைக்கலாம் 35 பவுண்டஸ். அடுத்தது ஒரு 45 கிலோ வரை வைப்பது 55 பவுண்டஸ். அதிலும் பெரியது 105 பவுண்டஸ். அவர்களுக்கு தொலைபேசி எடுத்து நடுத்தரப் பெட்டியை தெரிவுசெய்து கொண்டுவரும்படி கூறிவிட்டு தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினேன். என் பக்கம் ஒரு 10 பேர். கணவனின் நெருங்கிய உறவினர் ஒரு இருபதுபேர் எனக் கணக்கிட்டு சொக்ளற், பிஸ்கற், நிடோ பால்மா, சவர்க்காரங்கள், ஏலக்காய், ஷாம்பூ, toilet liquid cleaners, kitchen sink and basin cleaner,சேலைகள், சொக்ளற் பௌடர், சோஸ், …… இப்பிடிப் பார்த்துப் பார்த்து வாங்க மூன்று பெட்டி பொருட்கள் சேர்ந்துவிட்டன. கணவருக்குத் தெரியாமல் இரண்டு பெட்டிகளையும் தெரிய ஒரு பெட்டியையும் அனுப்பியாச்சு. கணவரும் மகளும் ஒரு மாதத்தில் திரும்பிவிடுவார்கள் என்பதால் பார்சல்கள் எப்படியும் நான்கு வாரங்களுள் வந்துவிடாது என்னும் நம்பிக்கையில் மனிசனின் திட்டிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ந்துபோகிறேன்.
நான் ஆறு மாதங்கள் நிற்கப் போவதால் எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க எனது வீட்டின் conservatory யினுள் நிற்கும் நூற்றுக்கணக்கான பூங்கன்றுகள் செடிக்கொடிகளை எல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறார்களோ என்னும் கவலை கனவிலும் அவற்றைப் பாராமரிக்கச் செய்தது. வாரம் ஒருதடவை எவ்வளவு நீரைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டும் என்று ஒவ்வொருவாராகச் சொல்லி ஒருவாறு மனதைத் தேற்றித் தயார் படுத்த, கனடாக்காறி போனேடுத்து என்னடியப்பா எல்லாம் ரெடியா என்கிறாள். நீர் வாராட்டில் நானும் நிண்டிடுவன் என்று நினைச்சீராக்கும் என்கிறேன். எதுக்கும் இரண்டு மூன்று மாதம் கழிய நான் வந்தாலும் வருவன். எதுக்கும் ஒரு அறை எனக்கும் எடுத்துவையும் என்கிறாள். சொறி இம்முறை உமக்காக உம்மை நம்பி நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீர் வந்தால் உமது அம்மாவுடன் தங்கி எனக்கு போன் செய்யும், வசதிப்படி பிறகு பார்ப்போம் என்கிறேன்.
பயணத்துக்கு ஒரு வாரம் இருக்க மனிசன் வானில் ஏறும்போது கால் சறுக்கி கெழித்துவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்று கட்டோடு நொண்டியபடி வர, என்ன இது சகுனம் சரியில்லையோ என மனதுள் கவலை எழுகிறது. அதை வாய் விட்டும் சொல்ல" நான் என்ன நடக்கவே முடியாமலா இருக்கிறன். ஒரு கிழமையில் எல்லாம் மாறிவிடும்" என்கிறார். அம்மா இதுவும் நல்லதுதான். விமானநிலையத்தில் சொன்னால் அப்பாவை electric வீல் செயாரில் கூட்டிக்கொண்டுவந்து விடுவார்கள். முதலில் ஏறவும் விடுவார்கள். நான் பொதிகளுக்குப் பொறுப்பு. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்கிறாள். எனக்கு உபத்திரவம் இல்லாவிட்டால் சரி என எண்ணிக்கொள்கிறேன்.