பிசுபிசுத்துப்போனன் கண்ணிவெடித் தாக்குதல்
சதாசிவம் செல்வநாயகம் - செல்லக்கிளி
சுமார் 3 மாதங்களுக்குப் பின்னர், புரட்டாதி 19 ஆம் திகதியன்று, ஜனாதிபதி ஜெயவர்த்தன தேர்தல்ப் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார். இந்தநாளே, செல்லக்கிளி தலைமையிலான புலிகளின் முதலாவது தோல்விகரமான கண்ணிவெடித் தாக்குதல் எத்தனிக்கப்பட்டது. ஜெயாரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக, தமிழ் ஈழ விடுதலை முன்னணி, ஈழ மாணவர் அமைப்பு மற்றும் கொம்மியூனிஸ்ட் அமைப்புகள் ஒழுங்குசெய்த ஹர்த்தால் நிகழ்விற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இந்தக் கண்ணிவெடித் தாக்குதலை புலிகள் திட்டமிட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில், யாழ்நகரிலிருந்து 2 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த விவசாயக் கிராமமான கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர் செல்லக்கிளி. புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த செல்லக்கிளி, பஸ்டியாம்பில்லை மீதான துணிகரமான திடீர்த் தாக்குதலின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர். தம்மைக் கைதுசெய்ய வந்திருந்த பஸ்டியாம்பிள்ளை தலைமையிலான பொலீஸ் குழுவினரை கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தியவர். பஸ்டியாம்பிள்ளை தேநீர் அருந்த எத்தனிக்கும்போது, அவரின் இயந்திரத் துப்பாக்கியைப் பறித்து அதனாலேயே அவரைச் சுட்டுக் கொன்றவர். செல்லக்கிளியின் துரித அசைவுகளுக்காகவும், சூழ்நிலையினை அவதானித்துச் செயற்படும் விவேகத்திற்காகவும் பிரபாகரன் அவரை கண்ணிவெடித் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக நியமித்திருந்தார்.
வீதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத நிலையிலிருந்த கண்ணிவெடியைப் பரிசோதித்த ராணுவ குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் அது புலிகளால் உருவாக்கப்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்தினர்.
அக்குண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கவில்லை. உள்ளே அடைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளும் சரியான முறையில் அடைக்கப்பட்டிருக்கவில்லை. உருக்கு இரும்பிலான கோதுகளினுள் ஐந்து கிலோகிராம் வெடிபொருட்களும்,இரும்புத் துண்டுகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஹொண்டா மின்பிறப்பாக்கியொன்றிலிருந்து இக்குண்டினை வெடிக்கவைக்க மின்சாரக் கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன.
பொண்ணாலை வீதியூடாக தினம் தோறும் பயணிக்கும் கடற்படையினரின் ரோந்தைக் குறிவைத்து தமது முதலாவது பரீட்சார்த்த கண்ணிவெடித் தாக்குதலை நடத்தலாம் என்று செல்லக்கிளியும் தோழர்களும் தீர்மானித்தார்கள்.
காரைநகர் கடற்படை முகாமினுள் குடிநீர் இருக்கவில்லை. முகாமினுள் உப்புத்தண்ணிர்ரே கிடைத்தது. ஆகவே, முகாமின் பாவனைக்காக யாழ்ப்பாணப் பெருநிலப்பரப்பில் அமைந்திருந்த மூளாய்க் கிராமத்திலிருந்தே குடிநீர் கடற்படையினரால் எடுத்து வரப்பட்டது. ஒவ்வொருநாள் காலையும் இதற்காக முகாமிலிருந்து மூன்று தண்ணீர்த் தாங்கி வாகனங்கள் வெளிக்கிளம்பிச் செல்லும்.
புரட்டாதி 29 ஆம் திகதி, காலை 6:30 மணிக்கு வழமை போல மூன்று தண்ணீர் தாங்கி வண்டிகளுடன் கடற்படை அணியொன்று கிளம்பிச் சென்றது. இந்த அணிக்கு கடற்படை அதிகாரியான செல்வரட்ணம் பொறுப்பாக இருந்தார்.
முன்னால் சென்ற இரு ஜீப் வண்டிகளில் 12 கடற்படை வீரர்கள் ஏறிக்கொள்ள, கடற்படை வாகனத் தொடரணி மெதுவாக பொன்னாலை வீதியூடாக நகர்ந்துசெல்லத் தொடங்கியது.
காரைநகர் பொன்னாலை வீதி
புரட்டாதி மாதம் என்பது பொதுவாக யாழ்க்குடாநாட்டைப் பொறுத்தவரையில் வறட்சியான காலமாகும். வட கிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு மழைவீழ்ச்சியைக் கொண்டுவரும் காலம் புரட்டாதி மாதத்திற்குப் பின்னரே ஆரம்பிக்கிறது. யாழ் ஏரியினால் உருவாக்கப்பட்ட மணற்திட்டுக்கள் அவ்வீதியின் இருமரங்கிலும் தொடர்ச்சியாகக் காணப்படும். சில மணற்திட்டுக்களில் சிறிய பற்றைகளும் அவ்வபோது வளர்ந்திருக்கும். வீதியின் தென்முனையிலிருந்து சுமார் 100 மீட்டர்கள் தொலைவில் நான்கு அகழிகளை செல்லக்கிளியும் தோழர்களும் வெட்டினார்கள். இந்த அகழிக்குள் அவர்களால் கொண்டுவரப்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு இணைக்கப்பட்ட நீண்ட மின்கம்பிகள் மணற்மேட்டின் பற்றைகளுக்குப் பின்னால் மறைத்துவைக்கப்பட்டிருந்த மின்பிறப்பாக்கிக்கு இணைக்கப்பட்டிருந்தன. மின்கம்பிகள் வெளித்தெரியாவண்ணம் அவற்றின் மீது தாரும், மணலும் கொட்டப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தது.
மின்பிறப்பாக்கிக்கு அருகில் ஒளிந்திருந்த செல்லக்கிளி கையில் கண்ணிவெடியினை இயக்கும் கருவியை வைத்திருந்தார். மின்பிறப்பாக்கியை இயக்குவதற்குப் பொறுப்பாக அருணாவும் அருகில் இருந்தார்.
வழமைபோல, அதே நேரத்திற்கு கடற்படையின் வாகனத் தொடரணி அவ்வீதியூடாக வந்தது. வாகனங்களின் வேகத்தைத் தவறாகக் கணிப்பிட்ட செல்லக்கிள், தொடரணியில் முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் வரும்போதே கண்ணிவெடியின் இயக்கு கருவியை அழுத்திவிட்டார். முதலாவது கண்ணிவெடி வெடித்துச் சிதறியபோது உள்ளிருந்த இரும்புத் துண்டுகளும், கற்களும் மணலும் நாலாபுறமும் வெடித்துச் சிதறின. அவ்வெடிப்பு சுமார் ஒரு மீட்டர் ஆளமான அகழியொன்றை வீதியில் ஏற்படுத்தியது. ஆனால், மீதி மூன்று கண்ணிவெடிகளும் வெடிக்கத் தவறிவிட்டன.
தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, தன்னுடன் இருந்த அனைவரையும் தாம் வந்திருந்த மினி பஸ் நோக்கி ஓடுமாறு கட்டளையிட்டார் செல்லக்கிளி. அருணா மின்பிறப்பாக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடினார். ஆனால், பாரம் மிகுதியால் அவர் சிரமப்பட்டதுடன், ஏரிக்கரை மண்ணில் அவரது கால்கள் புதைய ஆரம்பித்தன. ஆகவே, வேறு வழியின்றி, மின்பிறப்பாக்கியை அவ்விடத்திலேயே விட்டு அவர் ஓடத் தொடங்கினார். கடற்படை அணிக்கு முன்னால் 50 இலிருந்து 100 மீட்டர்கள் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த புலிகளை நோக்கிக் கடற்படையினர் ஒரு துப்பாக்கி வேட்டையேனும் தீர்க்க நினைக்கவில்லை. இத்தாக்குதல் குறித்த விசாரணையில் சாட்சியளித்த செல்வரட்ணம், தனது வீரர்கள் அனைவரும் தமக்கு முன்னால் நடப்பதைப் பார்த்து அதிர்சிக்குள்ளாகி விக்கித்து நின்றுவிட்டதாகக் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் பிரபலமான மிட்சுபிஷி ரோசா மினிவான்
கடற்படையினர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நடப்பதை அறியமுன்னர், புலிகள் அங்கிருந்து மறைந்துவிட்டார்கள்.
சுமார் 400 மீட்டர்கள் வரை ஏரிக்கரை மணலில் ஓடி, தமக்காகக் காத்து நின்ற ரோசா பஸ் வண்டியில் ஏறி மூளாய் நோக்கித் தப்பொஇச் சென்றது புலிகளின் அணி.
முதல் நாள் இரவு கடத்தப்பட்ட அந்த பஸ்வண்டியில் மூளாயிலிருந்து பொன்னாலைப் பகுதிக்கு புலிகளின் தாக்குதல் அணி வந்திருந்தது. தாக்குதல் தோல்வியின் பின்னர், மயிரிழையிலேயே அவர்கள் தப்பிச் சென்றார்கள். கடற்படை சுதாரித்துக்கொண்டு தாக்குதலில் இறங்கியிருந்தால் புலிகளின் தாக்குதல் அணியில் அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள். இத்தாக்குதல் தொடர்பாக நடந்த விசாரணைகளில் செல்வரட்ணத்தை விசாரித்த உயரதிகாரி, "நீங்கள் அன்று சுட்டிருந்தால், புலிகளின் முதுகெலும்பை முறித்திருக்கலாம்" என்று ஆத்திரத்துடன் கத்தினார்.
புலிகளின் முதலாவது கண்ணிவெடித் தாக்குதல் தோல்வியடைந்தது. ஆனால், இந்தத் தோல்வியே கண்ணிவெடித் தாக்குதலை புலிகளின் தாக்குதல் முறைகளில் இலங்கை படைகளுக்கு கடுமையான உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆயுதமாக நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கும் உத்வேகத்தினைக் கொடுத்திருந்தது. பின்னாட்களில் நடைபெற்ற புலிகளின் பல வெற்றிகரமான கண்ணிவெடித் தாக்குதல்களையடுத்து, தெற்கின் ஊடகங்கள் உள்நாட்டுப் போரினை. "கண்ணிவெடிப் போர்" என்று அழைக்கும் நிலையும் உருவாகியிருந்தது. இராணுவத்தைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் நடமாட்டத்தை முடக்கவும் கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் மிகவும் துல்லியமாகப் பாவிக்கத் தொடங்கினர்.
செல்லக்கிளியைப் பொறுத்தவரையிலும் இத்தாக்குதலின் தோல்வி அரிய சந்தர்ப்பம் ஒன்றினைத் தவறவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கம் மீதும் கடுமையான தாக்கத்தைச் செலுத்தக்கூடியதும், தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரக்கூடியதுமான ஒரு தாக்குதலை புலிகளால் வெற்றிகரமாக நடத்திமுடிக்க முடியாது போய்விட்டது.
யாழ்ப்பாணக் கோட்டை 2019 இல்
ஆனால், இத்தாக்குதல் தோல்வியினால் எல்லாமே இழந்துவிட்டதாகவும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையில் அன்று காலைவரை தங்கியிருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு இக்கண்ணிவெடி முயற்சி பற்றி உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் மிகவும் சினமடைந்து காணப்பட்டார். இக்கண்ணிவெடித்தாக்குதல் பற்றி ஆராய்வதற்கு தேசிய பாதுகாப்புச் சபையினை அவர் உடனடியாகக் கூட்டியிருந்தார். இராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்க, பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம், வடமாகாண இராணுவத் தளபதி சிறில் ரணதுங்க, வடமாகாண உதவி ராணுவத் தளபதி லயனல் பலகல்ல, கப்டன் சரத் முனசிங்க, யாழ்ப்பாணத்திற்கான ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி உட்பட பல மூத்த ராணுவ பொலீஸ் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இலங்கை ராணுவத்தின் பேச்சாளராகப் பின்னாட்களில் கடமையாற்றிய கேணல் சரத் முனசிங்க
ஜெயவர்த்தன மிகவும் கோபத்துடன் காணப்பட்டார். புலிகளின் மீளெழுச்சி பற்றி தனக்குத் தெரியத் தராமைக்காக கப்டன் சரத் முனசிங்கவை அவர் கடுமையாக வைதார்.
முனசிங்கவைப் பார்த்து ஜெயார் பின்வருமாறு கேட்டார், "பிரபாகரன் தற்போது எங்கே?". "அவர் மதுரையில் இருக்கிறார்" என்று முனசிங்க பதிலளித்தார். கண்ணிவெடித்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரென்று கேட்டறிந்துகொண்ட ஜெயார், "இந்த சிக்கலை நாம் முளையிலேயே கிள்ளி எறியாதுவிட்டால், எமக்குப் பெரும் பிரச்சனையாக இது மாறச் சந்தர்ப்பம் இருக்கிறது" என்று அவர் கூறினார்.
ஆனால், தனக்கெதிராக நடத்தப்பட்ட ஹர்த்தாலினாலோ, அல்லது தனது வருகையினையொட்டு நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலினாலோ ஜெயார் பயந்து ஓடிவிடவில்லை. தனது திட்டத்தின்படியே யாழ்ப்பாணம் முத்தவெளியரங்கில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த தேர்தல்ப் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஜெயாருக்கு முன்னதாக காமிணி திசாநாயக்க மேடையில் பேசினார். தனது பேச்சின் நிறைவில் , "எமது தலைவர் இப்போது உங்கள் முன் உரையாற்றுவார். அவர் உங்களிடத்தில் முக்கியமான விடயம் ஒன்றுபற்றிப் பேசுவார்" என்று கூறி முடித்தார்.
அடுத்ததாக ஜெயவர்த்தன பேசத் தொடங்கினார். தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் பற்றித் தனக்குத் தெரியும் என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தைகளினூடாக தான் தமிழர்களின் பிரச்சினை குறித்து அறிந்துகொண்டதாக அவர் கூறினார். 1977 ஆம் ஆண்டின் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவற்றை உள்ளடக்கியிருந்ததாகவும் அவர் கூறினார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கானஅடிப்படைகளை தான் உருவாக்கியிருப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவிருப்பதாக அவர் கூறினார். தனது அடுத்த இலக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்துவதே என்று கூறிய ஜெயார், அதற்கான மக்களை ஆணைக்காகவே தான் தமிழ் மக்களிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.
ஈரோஸ் அமைப்பினரால அனுப்பப்பட்ட இளைஞர் ஒருவர் கூட்டத்தில் இருந்து எழுந்து, "அப்படியானால், பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து எதற்காகப் பாதயாத்திரை சென்றீர்கள்?" என்று ஜெயாரைப் பார்த்துக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ஜெயார், "ஆம், நான் எதிர்த்தேன். இனிமேலும் யாராவது அந்த ஒப்பந்தத்திற்கு புத்துயிர் கொடுக்க நினைத்தாலும், நான் மீண்டும் கண்டிக்குப் பாத யாத்திரை போவேன்" என்று அகம்பாவத்துடன் அந்த இளைஞனைப் பார்த்துக் கூறினார்.
ஆனால், ஜெயார் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது மேடையைச் சுற்றியிருந்த தூண்களுடன் இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிறுகளை சில ஈரோஸ் இளைஞர்கள் அறுத்தெறிந்தார்கள். இதனையடுத்து மேடை சரிந்துவிழ, மேடையிலிருந்த காமிணியும், ஜெயாரும் கீழே விழுந்தார்கள். ஆனால், ஜெயாருக்கு உடம்பில் காயங்கள் எதுவும் படவில்லை. ஆனால், அவரது இதயத்தில் பலமான அடியொன்று விழுந்துவிட்டது. 79 வயதான ஜெயாரின் 50 வருடகால அரசியல் வாழ்க்கையில் அன்றுபோல் என்றுமே அவர் அவமானப்பட்டதில்லை. ஆகவே, தமிழருக்குச் சரியான பாடம் ஒன்றினைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்கிற அவரது வெறி இன்னும் இன்னும் அதிகமாகியது.