பதினெட்டு
ஒரு பத்து நிமிடங்களில் எனது சித்தியையும் கூட்டிக்கொண்டு வந்துவிட சித்தி வழமையாக நான் அழைக்கும் ஓட்டோக்காரருக்கு போன் செய்ய அவரும் உடனேயே வந்துவிடுகிறார். நான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். இன்னமுமே எதுவும் தெரியவில்லை. சித்தியை அழைத்துவந்த உறவினரின் வீடு அருகிலேயே இருப்பதனால் அவர் ஸ்கூட்டியை தன் வீட்டில் கொண்டுபோய் விடுகிறேன் என்று கூற நான் தலையாட்டுகிறேன்.
அவரிடம் ஸ்கூட்டியில் வேலை செய்பவர்களுக்கான உணவு இருக்கு. தயவுசெய்து அவர்களுக்கு அதைக் கொண்டு சென்று கொடுக்க முடியுமா என்று கேட்க ஓமக்கா நான் கட்டாயம் கொண்டுபோய் குடுக்கிறன் என்கிறார். உது இப்ப முக்கியமோ என்கிறா சித்தி. சரியில்லை சித்தி அவர்களுக்காகச் சமைத்தது. உங்களுக்கு என்ன பிரச்சனை என்கிறேன். அதன்பின் அவர் ஒன்றும் கூறாமல் வாயை மூடிக்கொள்ள நான் கண்களைத் திறக்காமலேயே இவ்வளவும் கதைக்கிறேன். எங்கே கொண்டுபோறது என ஓட்டோக்காரர் கேட்க பெரியாசுபத்திரி என்கிறா. அங்க சரியான சனமாய் இருக்கும். தெல்லிப்பளைக்கே கொண்டுபோவம் என்று அவர் சொல்ல ஓட்டோ நகர்கிறது.
ஓட்டோவுக்குள் இருக்க இருக்க முழங்கால் நோவெடுக்கிறது. எவ்வளவு நேரம் எடுத்தது என்று தெரியவில்லை. மருத்துவமனை வந்துவிட நீங்கள் இருங்கோ. நான் போய் அவையைக் கூட்டிக்கொண்டு வாறன் என்று சொல்லிவிட்டு போக, நான் கண்ணைத் திறக்கிறேன். கண் கண் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. சக்கரநாற்காலியுடன் ஒருவர் வர ஓட்டோக்காரர் பக்கத்தில் வருகிறார். இறங்கி இதில இருங்கோவென்று சொல்ல நான் ஒருவாறு இறங்கி இருக்கையில் அமர, அவர் என்னைத் தள்ளிக்கொண்டு செல்ல சித்தியும் ஓட்டோக்காரரும் வருகிறார்கள். இடது முழங்காலும் வலது பாதமும் விண் விண் என்று தெறிப்பதுபோல் இருக்கு.
அங்கு மூன்று மருத்துவத் தாதியரும் இரு மருத்துவர்களும் நிற்கின்றனர். அன்று பெரிதாக ஆட்களும் இல்லைப்போல. ஒரு பெரிய கோல் போன்ற பகுதியில் ஒரு இருபது கட்டில்கள் இருக்கின்றன. ஒரு சிறுவனும் தாயும் மற்றும் ஒரு வயதுபோன பெண்ணும் மட்டுமே இருக்கின்றனர். என் பெயர் விபரம் எல்லாம் பதிந்து என்ன நடந்தது என்று கேட்டு எழுதிவிட்டு இருங்கோ வைத்தியர் வந்து பார்ப்பார் என்று கூறிவிட்டு அந்தப்பக்கம் உள்ள அறை ஒன்றுக்குள் எல்லோரும் சென்று கதைத்து சிரித்து ஏதோ அதுக்கே வந்ததுபோல் இருக்கின்றனர். ஒரு தாதி மருத்துவர் ஒருவரைப் பார்த்து கிரிபத்தும் இருக்கு சாப்பிடுங்கோ என்றுவிட்டு அப்பால் செல்கிறார்.
நான் அந்த வாங்கிலேயே இருக்கிறேன். வாங்கில் தொடர்ந்து பலகையை அடிக்காது அதிக இடைவெளி விட்டு அடித்திருக்க அதுவேறு பயங்கர நோவை ஏற்படுத்துகிறது. வைத்தியர் வந்து சும்மா வாயால் கேட்டுவிட்டு ஒரு ஏற்பூசி போட்டுவிடுங்கோ. நாளைக்குத்தான் எக்ஸ்றே எடுக்கலாம் என்கிறார். நாளை வரை எக்ஸ்ரே எடுக்காமல் இருக்க ஏலாது எனக்குச் சரியான நோவா இருக்கு என்கிறேன். இண்டைக்கு புது வருடம் எண்டதால எக்ஸ்றே எடுக்கிறவர் வரமாட்டார் என்றவுடன் நான் அப்ப வேறு மருத்துவமனைக்குப் போறன் என்கிறேன். உடனே அவர் இல்லை இல்லை நான் எதுக்கும் வேறை யாரையும் வரச் சொல்லுறன். பொறுங்கோ என்றுவிட்டுப் போக தாதி ஊசியைக் கொண்டுவந்து போடுறா.
அதன்பின் மீண்டும் எல்லோரும் அந்த அறைக்குள் சென்று கதைத்துச் சிரிப்பதும் உண்பதுமாக இருக்க, இன்னொரு தாதி வர எத்தனை மணிக்கு எக்ஸ்றே எடுப்பார்கள் என்கிறேன். ஒண்டரைக்குத்தான் அவர் வருவார் என்றுவிட்டு அவ செல்ல நான் சித்தியை தேவையில்லாமல் ஏன் நிற்பான். போங்கோ. எக்ஸ்றே முடிந்ததும் நான் ஓட்டோவுக்குப் போன் செய்கிறேன். எனக்கு தண்ணீர் போத்தல் மட்டும் வாங்கித் தந்துவிட்டுச் செல்லுமாறு கேட்க ஓட்டோக்காரர் சென்று வாங்கி வருகிறார்.
அவர்கள் சென்றபின் மேலும் அரை மணிநேரம் யாரும் தாதிமார் வருவார்கள் என்று பார்த்தால் யாரையும் காணவில்லை. யாரும் இருக்கிறீர்களா என்று மூன்று தரம் பெலத்துக் கூப்பிட்டபின் ஒருதாதி வெளியே வந்து என்ன இடைஞ்சல் தருகிறாய் என்பதுபோல் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ சொல்கிறா. எனக்கு சிங்களம் தெரியாது என்று தமிழில் சொல்ல அவ உள்ளே சென்று இன்னொருவரை அனுப்புகிறா.
என்னால் தொடர்ந்து இப்பிடி இருக்க முடியவில்லை. உடலெல்லாம் நோவாக இருக்கு. நான் படுக்கவேண்டும் என்கிறேன். எட்டாம் நம்பர் பெட்டுக்குப் போங்கோ என்கிறா. நான் எழுந்து நொண்டி நொண்டி அந்தக் கட்டிலைத் தேடிப் போக என்ன நம்பர் என்று அந்த வார்டில் பிள்ளையுடன் இருந்த பெண் கேட்கிறா. நான் 8 என்றதும் அந்த அம்மாவுக்குப் பக்கத்தில என்கிறா. நான் நடந்து சென்று கட்டிலை அண்மிக்கிறேன். கட்டிலில் ஒரு விரிப்புக்கூட இல்லை. ஏன் கட்டிலுக்கு ஒன்றும் விரிக்காமல் இருக்கினம் என்று கேட்க எனக்குப் பக்கத்துக் கட்டிலில் இருக்கும் முதிய பெண் நீங்கள் தான் பிள்ளை எல்லாம் கொண்டுவரவேணும். உங்களுக்குத் தெரியாதோ என்கிறா.
நான் சித்திக்குப் போன் செய்து உணவும் படுக்கை விரிப்பும் ஓட்டோக்காரரிடம் கொடுத்துவிடுமாறு சொல்கிறேன். என்னால் இருக்கவே முடியவில்லை. நான் எப்போதும் ஒரு shawl- சால்வையையும் கழுத்தில் சுற்றிக்கொண்டுதான் போவது. அதனால் அதை எடுத்து கட்டிலில் விரித்துவிட்டு ஒரு பக்கமாக தலைக்கு கையைக் கொடுத்துக்கொண்டு படுத்ததுதான் தூங்கியும் விட்டேன்.
அக்கா எழும்புங்கோ என்று கூப்பிடுவதுபோல் கேட்க ஓட்டோக்காரர் இரு பைகளுடன் நிற்கிறார். எக்ஸ்றே எடுத்தாச்சோ என்று கேட்க இல்லை என்று தலையாட்டுகிறேன். நான் ஒருவாறு எழுந்து கட்டிலுக்கு விரிப்பை விரித்துவிட்டு மீண்டும் அமர அவர் உணவுக்கான பையைத் தந்துவிட்டு தாதிமார் நிற்குமிடம் சென்று எப்போது எக்ஸ்றே எடுப்பினம் என்று கேட்க இன்னும் ஒன்றரை மணித்தியாலம் செல்லும் என்று கூற அவர் வந்து என்னிடம் விடையத்தைச் சொல்லி அக்கா நீங்கள் சாப்பிட்டுவிட்டு இருங்கள். எல்லாம் முடிந்ததும் போன் செய்யுங்கோ என்றுவிட்டுப் போக வளவில் வேலை செய்பவரிடம் இருந்து போன் வருகிறது.
அக்கா இப்பதான் அண்ணை சாப்பாடு கொண்டுவந்து தந்ததிட்டுப் போறார். மோட்டசயிக்கிளோட விழுந்து அடிபட்டிட்டுது எண்டு சொன்னவர். இப்ப உங்களுக்கு ஓகேயோ என்கிறார். ஓம் இன்னும் எல்லாம் முடியேல்லை என்றுவிட்டு அவர்களின் வேலை பற்றிக் கேட்க, அக்கா நன்றி அக்கா உதுக்குள்ளையும் சாப்பாட்டைக் கொண்டுபோய் குடுக்கச் சொல்லியிருக்கிறியள். நாங்கள் பாண் வாங்கிச் சாப்பிட்டிருப்பம் தானே என்று நெகிழ்ந்துபோய் சொல்கிறார். அதனால் என்ன வடிவாச் சாப்பிட்டுவிட்டு வேலையைச் செய்யுங்கோ என்கிறேன்.
அதன்பின் நான் எனது உணவை எடுக்கிறேன். பக்கத்தில் இருக்கும் முதியவரை சாப்பிட்டிட்டீங்களோ என்று கேட்க இல்லைப் பிள்ளை. என்ர மகள் வாறன் எண்டவள். இன்னும் காணேல்லை என்றவுடன் கொஞ்சம் தாறன் நீங்களும் சாப்பிடுங்கோ என்றபடி அவரின் பதிலை எதிர்பாராது அவரிடம் ஒரு பெட்டியைக் கொடுக்க எந்த மறுப்பும் கூறாது வாங்கி உண்கிறார். அதன்பின் தூங்காது கட்டிலில் சாய்ந்து அமர்ந்து எப்போது என்னை அழைப்பார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்க, ஒருவர் சக்கர நாற்காலியுடன் வந்து என்னை அழைத்துப்போய் மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்.
மேலும் இரண்டுமணிநேரம் சென்றபின்னும் என் எக்ஸ்றே ரிசல்ற் வந்தபாடில்லை. அதில் ஒரு பெண் நிலத்தைச் சுத்தம் செய்துகொண்டிருக்க ஒருக்கா தாதி ஒருவரைக் கூப்பிட முடியுமா என்று கேட்க அவ அங்கு சென்று சொல்லியபின்னும் யாரும் வருவதாய்க் காணவில்லை.ஒருக்கா சிறுநீர் கழித்துவிட்டு வருவோம் என்று சென்றால் நாற்றம் எதுவும் பெரிதாக இல்லை என்றாலும் நிலமெங்கும் தண்ணீராக இருக்கு.
மீண்டும் சென்று கட்டிலில் அமர்ந்தபின்னும் எவரையும் காணவில்லை. கணவர் இப்ப நித்திரையால் எழுந்திருப்பார் என்று எண்ணிக்கொண்டு போனை எடுத்தால் போனில் 2 % தான் பற்றறி இருக்கு என்று சிவப்பில் காட்டுது. கட்டிலுக்கு மேலே சார்ச் செய்வதற்கான இடம் இருப்பினும் எந்த வயரும் என்னிடம் இல்லை. நான் எங்கு சென்றாலும் power bank ஐ கொண்டுதான் செல்வேன். இன்று அது ஸ்கூட்டியுடன் போய்விட்டது. ஓட்டோக்காரருக்கு போன் செய்தால் தான் வேறு ஒரு சவாரியில் இருப்பதாகவும் உங்களுக்கு வேறு ஒருவரை அனுப்பிவிடவா என்று கேட்கிறார். வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றுவிட்டு மெதுவாக நொண்டியபடி தாதிமார் இருக்கும் இடத்துக்கு செல்கிறேன்.
அவர்களின் இடத்தில் ஒரு எல்லாம் போடக்கூடிய போன் வயர் இருக்க, எனது போனுக்கு சார்ச் இறங்கிவிட்டது. எனக்கு ஒருக்கா தரமுடியுமா என்கிறேன். அது தமது பாவனைக்குரியது அங்கு நாம் சாச் செய்ய முடியாது என்கிறார். கணவனுக்கு போன் செய்யவேண்டும். நீங்கள் சார்ச் செய்து தாருங்கள். வேண்டுமானால் நான் பணம் தருகிறேன் என்றவுடன் ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்துவிட்டு அப்படி எல்லாம் செய்ய முடியாது. இது ஒன்றும் தனியார் மருத்துவமனை இல்லை என்றுவிட்டு தன்பாட்டில் இருக்க இது தனியார் மருத்துவமனை இல்லையா என்கிறேன். அதனால் என்ன? நீங்கள் ஒரு உதவி செய்ய மாட்டேன் என்கிறீர்கள் என்று சிறிது பெரிதாகக் கேட்க அந்த நேரம் பார்த்து ஒரு இளம் வைத்தியர் வந்து அவவிடம் என்ன என்று கேட்க அவ சிங்களத்தில் அவருடன் கதைக்கிறா.
உடனே நான் எனக்கு சிங்களம் தெரியாது அதனால் நீங்கள் என் பிரச்சனைதான் கதைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தமிழில் எனக்கும் புரியும்படி கதையுங்கள் என்று சொல்கிறேன். அவவுக்கு தமிழ் வடிவாத் தெரியாது என்கிறார் வைத்தியர். அப்ப என்னுடன் தமிழில் தானே கதைத்தவ என்கிறேன். ஓகே இப்ப உங்கள் பிச்சனை என்ன என்கிறார். நான் போன்சார்ச் பற்றிச் சொல்ல, நீங்கள் கோவிக்கவேண்டாம். இதில சார்ச் செய்ய அனுமதி இல்லை என்றவுடன் நான் வெளியே செல்ல எனக்கே செல்கிறீர்கள் என்கிறார். நான் யாரையும் பிடித்து ஒரு சாச்சர் வாங்கப்போகிறேன் என்றபடி அவரின் அனுமதிக்குக் காத்திருக்காமல் மெதுவாக நொண்டியபடி நடக்க வெளிநாடுகளில் மருத்துவர்களும் தாதியர்களும் எத்தனை பண்பாக நடப்பார்கள் என எண்ணிப் பெருமூச்சு வருகிறது. நான் அன்றுதான் அந்த மருத்துவமனைக்கு முதன் முதலில் வந்ததாலும் சிறுவயதில் வெளிநாடு வந்துவிட்டதாலும் யாழ் மருத்துவமனைதான் அரசாங்க மருத்துவமனை என்று எண்ணியிருந்தேன். சித்தியும் யும் ஓட்டோக்காரர் சொன்னவுடன் எதுவும் பேசாததால் இங்கு வந்து மாட்டுப்பட்டாச்சே என எண்ணியபடிநடக்கிறேன்.
நடந்தது சரியான நோவெடுக்க அதில் இருந்த ஒரு இருக்கையில் யாராவது வருக்கிறார்களா என்று பார்த்தபடி இருக்க மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவர் என்னைக் கடந்து செல்ல தம்பி எனக்கு ஒரு உதவி செய்கிறீர்களா என்று கேட்க, போனவர் நின்று என்ன என்கிறார். நான் விடயத்தைக் கூற பக்கத்தில ஒரு கடையும் இல்லை. ஒரு ஐந்து நிமிடம் போனால்தான் ஒரு கடை இருக்கு. பொறுங்கோ நான் என மோட்டார் சயிக்கிளைக் கொண்டுவாறன் என்றுவிட்டு எடுத்துக்கொண்டுவர நான் இரண்டாயிரம் ரூபாய்களை எடுத்துக் கொடுக்க அவர் சென்று வாங்கி வருகிறார். அவருக்கு 1000 ரூபாய்களைக் கொடுத்து தம்பி உங்கள் பெற்ரோல் காசுக்கு வைத்துக்கொள்ளுங்கோ என்று கூற வாங்கிக் கொள்கிறார்.
அவருக்கு நன்றி கூறிவிட்டு உள்ளே செல்ல இரண்டு வைத்தியர்கள் நிற்க என் ரிசல்ட் வந்துவிட்டதா என்கிறேன். அது நாளைக்குத்தான் வரும் என்கின்றனர். எனக்கு உடனே வெளிநாடு நினைவில் வர, எக்ஸ்றே எடுத்தது வர நாளையாகுமா என்கிறேன். இல்லை எக்ஸ்றேயை யாழ் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கு. நாளை தான் பார்த்துச் சொல்வார்கள் என்கிறார். உதை முதலே சொன்னால் நான் அப்போதே வீட்டுக்கு சென்றிருப்பேனே என்றுகூற உங்களுக்கு இங்கு பதிவு போட்டாச்சு. நாளை பெரிய மருத்துவர் வரும்வரை நீங்கள் போக முடியாது என்கிறார்.
நான் இன்று இரவு இங்கு தங்க முடியாது. போய்விட்டு நாளை காலை வருகிறேன் என்று பெரிய மருத்துவர் வந்துதான் உங்களை டிஸ்சார்ச் செய்யமுடியும் என்றுவிட்டு அவர் சென்றுவிட நான் சென்று போனை சார்சில் போடுகிறேன். அந்த நேரம் அங்கு வந்த தாதி நீங்கள் எட்டுமணிக்குப் பிறகுதான் சார்ச் போடலாம் என்கிறா. ஏன் இப்ப போட்டால் என்ன என்று கேட்க கரண்ட் காசு கூட வரும் என்கிறா. நானோ அதைக் கழற்றாமல் எனக்குக் கட்டாயம் போன் செய்ய வேணும் என்றுவிட்டு இருக்க, அவர் கோபமாக வேகமாகச் செல்கிறார். அவருடன் சேர்ந்து இன்னொரு தாதியும் வந்து இப்ப போடக் கூடாது என்கிறா. எனக்கு இத்தனை நேரம் அடக்கிவைத்த கோபம் மேலெள நீங்கள் மனிதர்களா?? ஒரு மனிதாபிமான உதவிகூட செய்யாமல் இப்பிடி காட்டு மிராண்டிகள் போல நடக்கிறீர்கள். நான் இங்கு நிற்க முடியாது என்கிறேன். நீங்கள் இன்று போக முடியாது என்று கூறிவிட்டு இருவரும் செல்கின்றனர். நான் போனை எடுத்துப் பார்க்க சிறிது சார்ச் ஏறியிருக்க, என் தங்கையின் கணவனுக்கு போன் செய்து விடயத்தைக் கூற அக்கா ஒரு மணித்தியாலம் பொறுங்கோ வாறன் என்று கூறிவிட்டு போனை வைக்க நானும் மனதுள் கறுவியபடி எதுவும் செய்ய முடியாது காத்திருக்க என் தங்கையின் கணவர் இரண்டு மணி நேரத்தில் பின் வர இருட்டியும் விடுகிறது.
அவர் வந்து நான் கதைச்சுப் பார்க்கிறன் அக்கா என்றுவிட்டு அங்கு நின்ற வைத்தியாரிடம் வீட்டுக்குப் போவதைப் பற்றிக் கூற அவரும் மறுத்துவிட நான் அவர்களிடம் சொல்லாமலே போவம் செய்வதைச் செய்யட்டும் என்கிறேன். அவர் என் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வர நானும் அவருடன் வந்து தாதிமார் இருக்கும் இடத்தடிக்கு வர போன் சார்ச் போட வேண்டாம் என்று சொன்ன தாதி நிற்க, நான் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறிவிட்டு அவர் ஏதோ சொல்ல அதைக் காதில் வாங்காது வெளியே வருகிறேன்.
அதில் நின்ற ஓட்டோவில் என்னை ஏறச் சொல்லிவிட்டு அவர் பின்னே வர வீடு வந்து அடுத்தநாள் மாலைவரை காத்திருந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று ஒரு அரைமணிநேரக் காத்திருப்புக்குப் பின் எக்ஸ்றே எடுத்து அடுத்த பத்து நிமிடத்தில் காலில் முறிவு ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறி பாண்டேச் போடும்படி கூறி மருந்தும் எழுதித் தர ஆக 2800 ரூபாய்கள் தான். அடுத்தநாள் முழங்காலுக்கும் பாதத்துக்கும் பாண்டேச் 10000 ரூபாய்களுக்கு வாங்கி அணிந்து இரண்டு நாட்களின் பின் மீண்டும் ஓட்டோவில் வளவுக்குச் சென்று வந்து ஒருமாதம் முடிந்தபின் தான் மீண்டும் ஸ்கூட்டியை எடுத்து ஓட ஆரம்பித்தது.