பத்தொன்பது
எனது முகநூல் மெசெஞ்சரில் நீங்கள் இன்னும் ஊரில் தான் நிற்கிறீர்களா என்ற செய்தி வந்திருந்தது. பார்த்தால் சகாரா. தானும் அங்கு வருவதாக கூறியிருந்தாலும் வேலைகள் தொடர்ந்து காணியில் நடைபெற்றதால் நான் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை எனினும் வந்தவுடன் கூறுங்கள் சந்திக்கலாம் என்றுவிட்டு இருந்துவிட்டேன். 14 தை சகாரா போன் செய்கிறார். நாளை எங்கள் ஊரில் பட்டத்திருவிழா நடைபெற இருக்கு சுமே. வந்தீர்கள் என்றால் என் வீட்டில் தங்கிப் போகலாம் என்கிறார்.
நான் செல்வச்சந்நிதி கோயிலுக்கு சில தடவைகள் சென்று தொண்டைமான் ஆற்றில் குளித்துவிட்டு வந்ததுடன் சரி. வல்வெட்டித்துறை எப்படி என்றுகூடத் தெரியாது. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று வருகிறேன் என்றுவிட்டு அடுத்தநாள் காலையில் ஓட்டோ பிடித்துக்கொண்டு செல்கிறேன். ஓட்டோவுக்கு 3000 என்று பேசி கிளம்பியாச்சு. போய் இறங்கியவுடன் இன்னொரு ஆயிரம் தரும்படிகேட்க ஏன் முதலே 3000 என்று சொல்லித்தானே வந்தது. பிறகென்ன என்றதும் தூரம் கூட என்கிறார். நீங்கள் வந்த தூரத்துக்கு 3000 சரிதானே. னீகள் கேட்பதானால் 500 ரூபாய் கூடத் தருகிறேன். அதைவிடத் தரமாட்டேன் என்கிறேன். யாவரும் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு செல்ல எது சகாராவின் வீடு என்று தெரியாமல் போன் செய்ய வாசலுக்கு வந்து கையைக் காட்டுகிறார்.
வாசலில் ஒரு மலரின் பெயர் எழுதியிருக்க வெள்ளை நிறப் பெயிண்ட் அடிக்கப்பட்டு கம்பீரமாக நிற்கிறது வீடு. உள்ளே சென்றால் மிக விஸ்தாரமாக உயரமாக பிரமாண்டமான அறைகளுடன் அட்டாச் டாய்லெட் பாத்ரூமுடன் கூடிய வீடு என்னைப் பிரமிக்க வைக்கிறது. சினிமாக்களில் வரும் வீடுபோன்று மிக அழகாய் இருக்கிறது. என் வளவில் இப்படி ஒரு வீடு கட்டினால் எத்தனை அழகாய் இருக்கும் என எழுந்த கற்பனையை வேண்டாம் என்று முடிவெடுத்து இழுத்து மூடுகிறேன்.
அவரின் மருமகளாக வர இருப்பவர் தேநீர் ஊற்றிவர அவரையும் அறிமுகம் செய்துவிட்டு நாம் ஊர் கதை, உலகத்துக்கதை, யாழ்க் கதை எல்லாம் கதைக்கிறோம். கதைத்து முடியவில்லை. கொஞ்சம் வெயில் தணிய நாம் வெளிக்கிட்டு பட்டத்திருவிழாவுக்குக் கிளம்பினால் சகராவின் வீட்டுக்கு அண்மையில் இருக்கும் அவர் சிறுவயதில் படித்த பள்ளி தெரிய குதூகலத்தோடு பள்ளியைப் பற்றிக் கதைக்கிறார். போகவர அவரின் உறவினர்கள் தெரிந்தவர்கள் என நின்றுநின்று கதைத்தபடி செல்கிறோம். பட்டத் திருவிழாவுக்கு வேறு ஊர்களில் இருந்தும் சனங்கள் வருவதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கு. வீதிகளும் அடைக்கப்பட்டு குறிப்பிட்ட வீதியால் மட்டும் வாகனங்களை அனுமதிக்கின்றனர். கடற்கரைப் பக்கமாக செல்ல எக்கச்சக்கமான வாகனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. சாரிசாரியாக சனங்கள் போகின்றனர். கடற்கரை பார்க்க அந்த வெயிலிலும் அழகாக இருக்கிறது. இடையிடையே மீன்பிடிப் படகுகள் கட்டப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு சந்திசந்தியாக சிறு தெய்வங்களும் கட்டடங்களும் அது பற்றிய கதைகளுமாக சகாரா சொல்லியபடி வர நானும் கேட்டபடி நடக்கிறேன்.
வானத்தில் தூரத்தில் பட்டங்கள் தெரிகின்றன. மனது குதூகலம் கொள்கிறது. சிறுவயதில் திருவிழாவுக்குச் சென்ற நினைவுகள் வருகின்றன. கிட்டச் செல்லச் செல்ல விலத்த முடியாத சனம். எத்தனையோ விதமான பட்டங்கள், பிரமாண்டமான பட்டங்கள், உருமாறும் பட்டங்கள் என நாலு மூலைப் பட்டம் மட்டுமே பார்த்த எனக்கு இவற்றைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. ஒரு பக்கம் போய் நின்றால் இருப்பதற்கான இடமே இல்லை. ஒரு அரை மணிநேரம் அதில் நின்றுவிட்டு வேறு பக்கம் செல்கிறோம்.
அங்கும் சனக்கூட்டம் தான். இருந்தாலும் அங்கு நிற்பதும் பட்டங்களைப் பார்ப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதுமாக நேரம் கழிகிறது. சகாரா போனை எடுத்து வீடியோ கோலில் கண்மணி அக்காவை அழைக்கிறார். அவர் வந்ததும் அவருடன் கதைக்க தானும் வந்திருக்கலாம் என்கிறார் கண்மணியக்கா. நெட்வொர்க் சரியில்லாததாலும் சன இரைச்சலினாலும் கண்மணியக்கா கதைப்பது வடிவாகக் கேட்கவில்லை. பிறகு கதைப்போம் என்று போனை வைத்துவிட்டுப் பார்க்க ஏற்றியிருந்த பெரிய பட்டங்கள் போதிய காற்று இன்மையால் இறக்கப்பட நாம் அங்கிருந்து வேறு இசை நிகழ்வுகள் நடைபெற இருந்த இடம் நோக்கிச் செக்கிறோம். வழியில் பல ஐஸ்பழ வான்கள் நிற்க சகாரா எமக்கு வாங்கித் தர அதைக் குடித்தபடி நடக்கிறோம்.
வீதியில் போவதும் வருவதுமாக வாகன நெரிசல்கள். நாம் நடப்பதற்கே இடம் இல்லை. மோட்டார் சயிக்கிளில் வருவோரும் போவோரும் எம்மை யாரும் இடித்துவிடாதபடி நாம் முன்னும்பின்னும் பார்த்தபடி நடக்கிறோம். எமக்குக் கிட்டவாக இரண்டு மூன்று மோட்டார் சயிக்கிள்கள் வருவதும் நிற்பதுமாக சகாரா முன்னே செல்ல நடுவே அவர் மருமகள் நான் அவர்கள் பின்னே செல்கிறேன். போலீசாரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தியபடி அங்காங்கே நிற்க இருந்தாற்போல் ஒருவன். பார்க்க ரவுடி போல இருக்கிறான். எனக்கும் சகாராவுக்கும் அண்மையில் இடிப்பது போல் வருகிறான். என்ன தம்பி கவனமா ஓடுங்கோ என்கிறேன் நான்.
என்னட்டை சேட்டை விடாதை. தலையிலயோ தட்டுறாய் என்றபடி ஏதேதோ சொல்ல எனக்கோ ஒன்றும் புரியாமல் அவன் என்னைச் சொல்கிறானா அல்லது சகாராவா என்று எண்ண அவன் சகாராவைப் பார்த்துத் திட்டுவது தெரிய தவறுதலாத் தட்டுப்பட்டிருக்கும் தம்பி என்று அவனை நான் அமைதிப்படுத்தப் பார்க்க, நான் வேணும் என்றுதான் அவனுக்கு தலையில அடிச்சனான் என்கிறா சகாரா. எனக்குப் பதட்டமாகிறது. ஏன் அடித்தீர்கள் என்று கேட்க அவர் தேவையிலாமல் தனக்குக் கிட்ட அவர் மோட்டார் சயிக்கிளை கொட்டுவர அதுதான் மண்டையில போட்டனான். இவை எங்கள் ஊரவையும் இல்லை.வாற இடத்தில ஒழுங்கா நடக்க வேண்டாமோ என்று சகாரா கேட்க நான் சரிதான் என்கிறேன்.
தண்ணியும் அடித்திருக்கிறார்கள் போல. இந்தியத் திரைப்படங்களில் சிறிய ரவுடிகள் போலவே இருக்க இன்று என்ன நடக்கப்போகுதோ, கடவுளே காப்பாற்று என்று மனதில் வேண்டிக்கொள்கிறேன். மெதுவாக எனது போனை எடுத்து அவர்களை வீடியோ எடுத்தால் கண்டுவிடுவார்கள் எனப் பயந்து சும்மா கையில்வைத்திருப்பதுபோல் அவர்களின் மோட்டார் சயிக்கிளை வீடியோ எடுத்து வைத்துக் கொள்கிறேன். அதன்பின் இரண்டு மூன்றுபேர் எமக்குகிக்கிட்ட வந்து மன்னிப்புக் கேட்கவேணும் என்று கூற எனக்கு எந்தப் பக்கத்தால் ஓடுவது என்று கூடத் தெரியவில்லையே என மனதில் எண்ணுகிறேன். சகாராவோ அசரவில்லை. எங்கள் ஊரில வந்து என்ன தனகல் வேண்டிக்கிடக்கு. வந்தா வந்த அலுவலைப் பாருங்கோ. எங்கடை ஊர் ஆட்களைக் கூப்பிட்டன் என்றா வீடுபோய் சேரமாட்டியள் என்கிறா. அவர்கள் ஊரவர் என்று தெரிந்தபின் சமாளித்து பின்வாங்கிச் செல்ல எனக்குப் பதட்டம் தணியவே இல்லை.
அதன்பின் இந்தியாவில் இருந்து வரவளைக்கப்பட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்துக்குச் சென்றால் நிகழ்வு ஆரம்பிக்க இரவாகும் என்றதும் நாம் திரும்பி நடக்கிறோம். சிதம்பராக் கல்லூரி வரும் வழியில் இருக்க அதுபற்றியும் சகாரா கூறிக்கொண்டே வருகிறா. அண்ணரின் வீட்டையும் ஒருக்காப் பார்க்கவேண்டும் என்றதும் வீடு எங்கே இருக்கு வளவு மட்டும்தான் என்றபடி கூட்டிக்கொண்டு செல்கிறா. பார்த்தால் மதில்கள் எல்லாம் உடந்த நிலையில் இருக்க வளவு முழுவதும் மோட்டார் சயிக்கிளை நிறுத்தி வைத்துள்ளனர். மனதில் ஒருவித வலி எழுகிறது. இந்தப் பெரிய வீரனை நீங்கள் நினைக்கவேண்டாமா. அவரின் வீட்டைத்தான் இராணுவம் அழித்தால் அந்த வளவை மாசுபடுத்தாது பாதுகாக்கக்கூட முடியாதவர்களாக அவ்வூர் மக்கள் வாழ்கிறார்களே என்னும் ஆதங்கம் எழுகிறது.
சந்தியில் உள்ள ஆலமரத்தடியில் கட்டியிருந்த கட்டில் சிறிது நேரம் இருந்து என்னை அசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் எழுந்து அண்ணனின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவர் லண்டனில் வசித்தவர். தற்போது அங்கு வாழ்கிறார். அவருடனும் சென்று கதைத்துவிட்டு களைத்துப்போய் வீடு வருகிறோம். சகாராவின் அண்ணியார் எமக்காக தோசை, சம்பல், சாம்பார் என கொடுத்துவிட பசிக்கு அமிர்தமாக இருக்கிறது. அதன்பின் சகாராவின் சகோதரர்கள் வந்து இயல்பாகக் கதைத்துவிட்டுச் செல்ல வேறு உறவினர்களும் வருகின்றனர்.
மீண்டும் இரவு ஒன்பது மணிபோல் மிகப் பெரிதாக அழகாக வடிவமைக்கப்படிருந்த டோரா பொம்மை ஊர்வலமாக வந்து ஒரு கோவிலுக்கு அண்மையில் நின்று பொம்மையின் உள்ளே நின்று இருவர் ஆட்டுவிக்க பார்க்க அழகாக இருக்கிறது. மின்விளக்கு வெளிச்சத்தில் இளயவர்களும் சிறுவர்களும் குத்துப் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடுகின்றனர். அதற்கு ஒரு கதை கூட சகாரா சொன்னார். எனக்கு மறந்துவிட்டது. நடந்து நடந்து கால்கள் சரியான வலி. ஒரு இரண்டு மணி நேரத்தின் பின் வந்து நான்கு பேர் படுக்கக்கூடிய கட்டிலில் நான் மட்டும் படுத்து உடனே தூங்கியும் விட்டேன்.
அடுத்தநாட் காலை பிந்தி எழுந்து காலை உணவை உண்டு சகாராவுக்கும் எனக்கும் அலுவல்கள் இருந்தபடியால் நான் கிளம்பிவிட்டேன். வரும்போது ஓட்டோ பிடிக்காது பெரிய மினிபஸ்சில் இடங்களைப் பார்த்தபடி யாழ்ப்பாணம் வந்து அங்கு ஒரு திரைப்படமும் பார்த்துவிட்டு ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்கிறேன். சகாராவைச் சந்தித்ததும் பட்டத்திருவிழா அனுபவங்களும் ஒரு நீங்கா நினைவாக எப்போதும் என் மனதில் இருந்துகொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
நான் அவ்வூர் விடயங்கள் பலதையும் கூறாது விட்டுவிட்டேன். மன்னியுங்கள் சகாரா.
அண்ணர் பிறந்து வளர்ந்த இடம் இப்படியாய் இருக்கு.