பெளத்த துறவிகளின் கைகளில் தவழும் தானியங்கித் துப்பாக்கிகள் இங்கிலாந்துச் செய்தியாளர்
டேவிட் செல்போர்ன் எனும் இங்கிலாந்துச் செய்தியாளர் மஞ்செஸ்டர் கார்டியன் எனும் பத்திரிகைக்கும் ஏனைய வேறு பத்திரிகைகளுக்கும் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்தவர். லலித் அதுலத் முதலியுடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர். 1982 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு பயணம் செய்தபோது ஜெயவர்த்தனவுக்கும், காமிணி திஸாநாயக்கவுக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். ஒருநாள் பொதுக்கூட்டம் ஒன்றிற்காகச் சென்றுகொண்டிருந்த ஜெயவர்த்தன, காரில் தன்னுடன் அந்தச் செய்தியாளரையும் அழைத்துப் போனார். செய்தியாளர்களை தன்பக்கம் இழுத்துக்கொள்வதற்கு ஜெயார் பாவித்த வழிமுறைகளில் இதுவும் ஒன்று. காரில் பயணித்துக்கொண்டிருந்த ஜெயாருக்கும் டேவிட் செல்போர்னுக்கும் இடையிலான சம்பாஷணை தமிழர்களின் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் தடம் மாறியது.
தனது அறிக்கையில் லலித் அதுலத் முதலி கூறியவற்றை செல்போர்ன் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்.
"நாங்கள் சிலரின் தலைகளை நொறுக்கப் போகிறோம்" என்பதுதான் லலித் அதுலத் முதலி செபோர்னிடம் கூறிய வார்த்தை.
ஆனால் பின்னாட்களில் தான் அப்படிச் சொல்லவில்லை என்பதனை மறுத்திருந்த லலித் அதுலத் முதலி, செல்போர்னை தனது எதிரியாகவும் பார்க்கத் தலைப்பட்டிருந்தார். 1983 ஆம் ஆண்டு செல்போர்ன் மீண்டும் இலங்கைக்கு வந்திருந்தபோது உளவாளிகள் அவரைப் பின் தொடர்ந்திருந்தார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.
தேர்தல் கடமையில் இருந்த ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கலாக இராணுவம் வெறியாட்டம் ஆடிய கந்தர்மடம் பகுதிக்கு செல்போர்ன் சென்றிருந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் செல்போர்ன் பேசியபோது, கந்தர்மடத்திற்கு வந்திறங்கிய இராணுவத்தினர் தமது அதிகாரி அங்கு வரும்வரையில் காத்திருந்ததாகவும், அவர் வந்து உத்தரவு பிறப்பித்த பின்னரே தாக்குதலை ஆரம்பித்ததாகவும் அவரிடம் கூறியிருக்கின்றனர்.
செல்போர்ன் அமிர்தலிங்கத்தையும் செவ்வி கண்டிருந்தார். அமிர்தலிங்கம் அவருடன் பேசும்போது "புலிகளின் செயற்பாடுகளை தமிழ் மக்கள் ஆதரிப்பதாகவும், அதனாலேயே அவர்களை பாதுகாப்பதாகவும்" கூறியிருக்கின்றார். மேலும், "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் முன்னணியில் திகழ்பவர்கள் புலிகள் தான்" என்றும் அமிர் செல்போர்னிடம் தெரிவித்திருக்கிறார்.
பின்னர், செல்போர்ன் பிரதம நீதியரசரர் நெவில் சமரக்கோனையும் செவ்வி காண ஒழுங்கு செய்திருந்தார். . ஆனி 11 ஆம் திகதி உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ரத்வத்தை, பேர்சி சொலிம் தோமே, சொய்சா ஆகியவர்களுக்கெதிராக ஜெயார் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டதையடுத்து நீதியரசர் ஜெயாருடன் முரண்பட்டிருந்த வேளை அது. கம்யூனிசக் கட்சியின் உறுப்பினரான விவியேன் குணவர்த்தண மீது கொள்ளுப்பிட்டிய பொலீஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து அவர் தொடர்ந்திருந்த வழக்கில் நீதி வழங்கியவர்களே இந்த மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் ஆகும். அதற்குப் பழிவாங்கலாகவே அவர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டக்காரர்களை ஜெயார் தூண்டிவிட்டிருந்தார். செல்போர்னுடனான செவ்வியின் போது ஜெயார் குறித்து கடுமையான விமர்சனங்களை பிரதம நீதியரசர் முன்வைக்கலாம் என்று அஞ்சிய அரசு, ஆனி 25 ஆம் நாள் இரவு, செல்போர்னைக் கைது செய்து நாடு கடத்தியிருந்தது.
தம்புள்ளை குகை விகாரை
நன்கு அறியப்பட்ட செய்தியாளரைக் கைது செய்து நாடு கடத்தியமை இலங்கை அரசுக்கு சர்வதேசத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. மஞ்செஸ்ட்டர் கார்டியன் பத்திரிக்கையில் செல்போர்ன் எழுதிய "வன்முறைகளை தடுக்கத் தவறிய இலங்கை ராணுவம்" எனும் தலைப்பிலான செய்தி அதிகம் பகிரப்பட்டதோடு வேறு பல செய்தித்தாள்களிலும் மேற்கோள் காட்டப்பட்டு வெளிவந்திருந்தது. ஆடி 6 ஆம் திகதி வெளிவந்த இச்செய்தியை இந்தியாவின் முக்கிய பத்திரிக்கைகளும் மீள் பிரசுரித்திருந்தன. தான் எழுதிய செய்தியாக்கத்தில் செல்போர்ன் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார், "காவி உடை தரித்த பெளத்த பிக்குகளின் கைகளில் இன்று தானியங்கித் துப்பாக்கிகள் பளபளக்கின்றன". மேலும், இலங்கை அரசாங்கத்தின் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் புரட்டாதி மாதத்தில் சத்தியாக்கிரக நிகழ்வொன்றினை நடத்துவதற்கும் உத்தேசித்திருக்கிறார்கள் என்று அவர் எழுதியிருந்தார்.