இந்தியாவின் ஆட்சேபம்
பயங்கரவாதத்தினை அழித்தே தீருவேன் என்றும், அதனால் தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுபற்றி தான் கவலைப்படப்போவதில்லை என்றும் டெயிலி டெலிகிராப் பத்திரிக்கைக்கு ஜெயார் கொடுத்திருந்த செவ்வி இந்திய வெளியுறவுத்துறையில் சிறிய சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, இந்தவிடயத்தை பிரதமர் இந்திரா காந்தியிடம் அவர்கள் கொண்டுசென்றபோது, இந்தியாவின் இது தொடர்பான கரிசணையினை இலங்கைத் தூதுவரான பேர்ணாட் திலகரத்ணவை அழைத்துத் தெரிவிக்கும்படி வெளியுறவுத்துறையின் மேலதிகச் செயலாளரான சங்கர் பாஜ்பாயை இந்திரா பணித்தார்.
ஏ.சி.எஸ்.ஹமீட்
அவசரகாலச் சட்டத்தின் மூலம் கைதுசெய்யப்படுவோர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களை எரித்துவிடும் அதிகாரம் ராணுவத்தினருக்கும் பொலீஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு, இக்கொலைகளுக்கான தண்டனைகளில் இருந்து ராணுவத்தினருக்கும், பொலீஸாருக்கும் முற்றான விலக்கும், மேலும் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீது பரேதப் பரிசோதனை செய்யவோ தேவையில்லை என்ற விதிவிலக்கும் அளிக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியா கரிசணை கொண்டிருந்தது. மிகக் கொடுமையான இந்தச் சட்டங்கள் குறித்து இந்தியப் பத்திரிக்கைகள் தொடர்ச்சியாக எழுதி வந்ததையடுத்து, கொழும்பிலிருந்து இந்திய உயர்ஸ்த்தானிகர் எஸ்.ஜே.ஜே. சாட்வாலை தனது வெளியுறவுத்துறை அமைச்சின் அலுவலகத்திற்கு அழைத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை அமுலாக்கவேண்டியதன் அவசியம் குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட் விளக்கவேண்டியதாயிற்று. ஹமீடின் விளக்கத்தினை ஷட்வால் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை எதிர்த்து அறிக்கையொன்றினை அவர் இந்திய வெளியுறவுத்துறைக்கு அனுப்பிவைத்தார்.
பேர்ணாட் திலகரட்ண
அன்று மாலையே தில்லியில் தங்கியிருந்த பேர்ணாட் திலகரட்ணவை தனது அலுவலகத்திற்கு அழைத்த இந்திய வெளியுறவுத்துறையின் மேலதிகச் செயலாளர் பாஜ்பாய், பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த இந்தியாவின் கரிசணையினைத் தெரிவித்தார். இச்சட்டங்கள் தமிழர்களுக்கான அடிப்படை மனிதவுரிமைகளை மீறுவதாகவும், இதனால் தமிழ்நாட்டில் மக்கள் கொந்தளித்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியா இச்சட்டம் தொடர்பான தனது கருத்தினையே முன்வைக்கிறது, அழுத்தங்களையல்ல என்றும் மிகவும் பவ்வியமாக அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த திகரட்ண, "கடவுளே, இது எமது நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் அல்லவா?" என்று பாஜ்பாயைப் பார்த்து அதிர்ச்சியுடன் கேட்டார். பின்னர், அவரைப் பார்த்து, "இது தமிழ்நாட்டு அரசின் கருத்தா அல்லது மத்திய அரசின் கருத்தா?" என்று கேட்டர் திலகரட்ண.
அதற்குப் பதிலளித்த பாஜ்பாய், "இது மத்திய அரசின் அதிமேலிடத்தில் உள்ளவரின் கருத்து" என்று கூறினார்.
உடனடியாக கொழும்புடன் தொடர்புகொண்ட திலகரட்ண, "இது எனக்கு அதிர்ச்சிதரும் ஒரு அறிக்கை" என்கிற தலைப்பில் இந்தியாவின் கரிசணையினை அனுப்பிவைத்தார்.
இந்தியாவின் கரிசணை பற்றி தனது தூதுவர் மூலம் அறிந்துகொண்டபோது கொழும்பு அரசாங்கம் கடும் எரிச்சலடைந்தது. டெயிலிநியூஸ் பத்திரிக்கையில் இதனைச் செய்தியாகப் போடுமாறு பணிக்கப்பட்டதுடன், ஆசிரியர்த் தலையங்கத்திலும் இந்தியாவின் கரிசணை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. செய்தியின் தலைப்பு இப்படிச் சொல்லியது, "எமது விவகாரங்களில் இந்தியா தலையிடுவதை இலங்கை வெறுப்புடன் நோக்குகிறது". மேலும் அதன் ஆசிரியர் தலையங்கத்தில், "இதனை எப்படிச் செய்தாய் பெரியண்ணா?" என்கிற கருத்தில் விமர்சித்திருந்தது. இனவாதப் பத்திரிக்கையான சண் ஒருபடி மேலே சென்று, "பெரிய சண்டியன் இந்தியா" என்று தலைப்பிட்டிருந்தது.
சர்வகட்சி மாநாடு
ஆடி 20 ஆம் திகதி காலை 10 மணிக்கு நடக்கவிருப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த பயங்கரவாதத்தினை ஒழிக்கும் சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும், தோழமைக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் மட்டுமே சமூகமளித்திருந்ததனால், அம்மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. சுதந்திரக் கட்சி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சமசமாஜக் கட்சி, தமிழ் காங்கிரஸ் மற்றும் புதிய சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வதைத் தவிர்த்திருந்தனர்.
பயங்கரவாதத்தினை அழிக்கும் தனது திட்டத்தினை ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை வெளியிடாததனால் தாம் இந்த மாநாட்டில் பங்குபெற்ற விரும்பவில்லை என்று சுதந்திரக் கட்சி கூறியது. அக்கட்சியின் பேச்சாளாரான லக்ஷ்மண் ஜயக்கொடி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது "ஜெயவர்த்தனா சதியில் இறங்கியிருக்கிறார், பயங்கரவாதத்தினை அழிப்பதற்கான எமது திட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டு, பின்னர் ஏதும் தவறுகள் நடக்குமிடத்து சுதந்திரக் கட்சியே இவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொண்டது என்று பழியினை எம்மீது போட்டுவிடுவார்" என்று கூறினார். "இந்த சித்து விளையாட்டுக்களில் ஈடுபடுவதை விடுத்து தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை அவர் நாட்டு மக்களுக்கு முதலில் வெளிப்படையாகச் சொல்லட்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வகட்சி மாநாட்டில் தனது கட்சி ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதற்கு அமிர்தலிங்கம் இரு காரணங்களை முன்வைத்தார். முதலாவதாக, பிரச்சினைக்கான மூல காரணத்தை அறியாமலும், அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை முன்வைக்காமலும் பயங்கரவாதத்தை அழிப்பதற்காக மட்டுமே இந்த மாநாடு கூட்டப்படுவதால் தனது கடசி அதில் கலந்துகொள்ளாது என்று கூறினார். மேலும், இம்மாநாட்டில் சுதந்திரக் கட்சி கலந்துகொள்ளாமையினால், தமிழருக்கான தீர்வினைத் தருவதில் இக்கட்சிகள் இரண்டினதும் ஒருமித்த கொள்கை ஒன்று இல்லாமல்ப் போயிருயிப்பதாகவும், இதுவே தனது கட்சி இம்மாநாட்டில் கலந்துகொள்ளாமைக்கான மற்றைய காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார்.
"இம்மாநாட்டில் மேசைகள் எவ்வாறு அடுக்கப்பட்டிருக்கின்றன, வட்டமாகவா அல்லது சதுரமாகவா?" என்று லலித்திடம் நான் கேட்டேன். அதற்குப் பதிலளித்த லலித், "1977 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வட்டமேசை மாநாடு என்றே நாம் பேசி வந்தோம், ஆகவே வட்டவடிவில்த்தான் அவை ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன" என்று கூறினார்.
ஆனால், தேர்தல் முடிந்த கையோடு அவர் எனக்கு அளித்த பதில் குறித்து அவருக்கு நான் நினைவுபடுத்தினேன். அன்று நான் அவரிடம் "தேர்தலில் நீங்கள் அளித்த வாக்குறுதிக்கு என்னவாயிற்று?" என்று கேட்டிருந்தேன். அதற்குப் பதிலளித்திருந்த லலித், "வட்டமேசையா, அது என்ன? மக்களின் ஆணையுடன் பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பெரும்பான்மையினைக் கொண்டிருக்கிறோம். நாங்களே மேசையைச் சுற்றி அமர்ந்துகொள்வோம். இனப்பிரச்சினையாக இருந்தாலென்ன, அல்லது வேறு எந்தப் பிரச்சனையாக இருந்தால் என்ன, நாமே என்ன செய்யவேண்டும் என்பதை முடிவெடுப்போம்" என்று கர்வத்துடன் கூறியிருந்தார்.
ஆகவே, நான் இன்று கேட்டபோது, "இன்றைக்கும் எமது முடிவு அப்படியே இருக்கிறது, நாமே முடிவுகளை எடுப்போம்" என்று மீண்டும் அதனை உறுதிப்படுத்தினார்.
மறுநாள், ஆடி 21 ஆம் திகதி, தனது கருத்தினை பாராளுமன்றத்தில் முன்வைத்தது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்து பெளத்த சிங்களக் கட்சிகளுக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் தமது போருக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இவ்வாறு கோரிக்கை விடுக்கும்போது ஜெயாரின் உணர்வுகளை அச்சொட்டாக அவர் விரும்புவதுபோலவே வெளியிட்டார்.
பாராளுமன்றத்தில் அதுலத் முதலி கூறியது இதைத்தான்,
"அரசாங்கத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பிரச்சினையினை எப்படித் தீர்க்கவேண்டும் என்று நினைக்கின்றோமோ, அந்தவகையில் நாம் தீர்த்துவைப்போம். நீங்கள் அதனை ஏற்றுக்கொண்டாலென்ன, விட்டாலென்ன அல்லது அதனை ஆதரித்தலேன்ன இல்லாவிட்டாலென்ன, நாம் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை எமது திட்டத்தின்படி கொடுப்போம். பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட எது சரியான தீர்வென்று எமது அரசாங்கம் நினைக்கின்றதோ, அந்தவைழியில் சென்று நிச்சயம் அதனை முற்றாக நடத்தி முடிப்போம்".
"பயங்கரவாதத்தை அழிக்கும் இந்த செயற்பாட்டில் அப்பாவிகள் பாதிக்கப்படலாம். அப்பாவிகளின் அழிவுகளை குறைக்க நாம் முயற்சி எடுப்போம். சுதந்திரக் கட்சிக்கும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போர் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும், ஆனால் தற்போது எதற்காகப் பின்வாங்குகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு சிங்கள பெளத்த கட்சியாக இருந்துகொண்டு பயங்கரவாதத்தை அழிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் எப்படிக் கலந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? பயங்கரவாதத்தை அழிக்க முன்வராது இருந்துவிட்டு எப்படி மக்களையும் தேர்தல்களையும் எதிர்கொள்ளப்போகிறீர்கள்? பாஸிஸப் பயங்கரவாதிகளை அழிப்பதற்கான போரில் உங்களை இணைந்துகொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
இங்கிலாந்துக் கூலிப்படையான கீனி மீனியின் கொலைஞன் ஒருவனுடன் உலங்குவானூர்தியில் இருந்துகொண்டு உரையாடும் சிங்கள பெளத்த கொலைஞன் லலித் அதுலத் முதலி
ஜெயவர்த்தனவைத் திருப்திப்படுத்துவதன் மூலம் காமிணியை ஓரங்கட்டிவிட்டு ஜெயாருக்கு நெருக்கமாகலாம் என்று லலித் எண்ணினார். அவர் பிரேமதாசாவால் ஒதுக்கப்படும்வரைக்கும் அதுவே அவரது அரசியலாக இருந்தது. ஏனென்றால், பிரேமதாசா கூட ஜெயாரின் இனவாதத்தைத்தான் கைக்கொண்டு வந்தார்.