யாழ்ப்பாணப் படுகொலைகள்
இராணுவத்தினரின் பொதுவான மரணச்சடங்கு கொழும்பில் நடப்பதை எதிர்த்த அதிகாரிகள், பிடிவாதமாக நின்ற ஜெயார்
தாக்குதலினால் நிலைகுலைந்துபோன யாழ்ப்பாணத் தளபதி பல்த்தசாரும் ஏனைய இராணுவ அதிகாரிகளும் திருநெல்வேலியிலிருந்து குருநகர் முகாம் திரும்பியவுடன் அவசரக் கூட்டம் ஒன்றினை நடத்தினர். இதேவேளை, 13 இராணுவத்தினர் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட செய்தி குருநகர் ரேடியோ அறையிலிருந்து கொழும்பிற்கு அறிவிக்கப்பட்டது. முதலாவதாக பலாலியிலிருந்தும் பின்னர் கொழும்பிலிருந்தும் பல்த்தசாருக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன. கொழும்பு ராணுவத் தலைமையகத்திலிருந்து ராணுவத் தளபதி திஸ்ஸ வீரதுங்கவுக்கு தாக்குதல் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் யாழ்ப்பாணத் தளபதி பல்த்தசாருடன் பேசினார்.
"நான் ஜனாதிபதிக்கு உடனடியாக இதுபற்றி அறிவிக்க வேண்டும், இது ஒரு மிகப் பாரதூரமான சம்பவம்" என்று அதிர்ச்சியடைந்த நிலையில் ராணுவத் தளபதி யாழ்ப்பாணத் தளபதியிடம் கூறினார்.
பின்னர் திஸ்ஸ வீரதுங்க ஜனாதிபதியை எழுப்பினார். தான் திருநெல்வேலித் தாக்குதல் குறித்து ஜெயாருக்குச் சொன்னபோது அவர் மிகுந்த கோபம் அடைந்ததாக தனது அதிகாரிகளுடன் பேசும்போது திஸ்ஸ வீரதுங்க கூறியிருந்தார். "நாம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்" என்று ஜயவர்த்தன ஆவேசத்துடன் கூறினார். காலை விடிந்தவுடன் தன்னை வந்து சந்திக்குமாறு ஜெயார் வீரதுங்கவைப் பணித்தார்.
குருநகரில் நடந்த கூட்டத்தில் மூன்று முக்கிய விடயங்கள் இராணுவ அதிகாரிகளால் ஆரயாப்பட்டிருந்தன. தாக்குதலினால் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையினைச் சமாளித்தல், கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்களை சரியான வகையில் பராமரித்தல் மற்றும் யாழ்ப்பாண நகரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் என்பனவே அவையாகும்.
லெப்டினன்ட் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க (காளை மாட்டு வீரதுங்க)
உருவாகியிருக்கும் சூழ்நிலையினைச் சமாளித்தல் என்பதற்குள் கண்ணிவெடித் தாக்குதல் குறித்த விசாரணைகளை ஆரம்பிப்பதும் அடங்கியிருந்தது. முனசிங்கவும் அவரது ராணுவ புலநாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொள்ளப் பணிக்கப்பட்டனர். கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையின் பிரேத அறையில் அடுக்கப்பட்டிருந்தன. கொழும்பில் இயங்கிவந்த இறந்தவர்களை தூய்மைப்படுத்தி அலங்கரித்து உறவினர்களிடம் கையளிக்கும் ஏ. எப். ரேமண்ட் எனும் தனியார் நிறுவனத்திடம் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களை தயார்ப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டது. யாழ்நகருக்கான பாதுகாப்பிற்கென்று மேலதிக இராணுவப் பிரிவுகள் கடமையில் அமர்த்தப்பட்டன.
மறுநாள் காலை, வோர்ட் பிளேசில் அமைந்திருக்கும் ஜெயாரின் பிரத்தியேக வாசஸ்த்தலத்தில் அதியுயர் பாதுகாப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. "என்ன நடந்தது?" என்று ஜெயார் இராணுவத் தளபதி வீரதுங்கவைப் பார்த்துக் கேட்டார்.அவரிடம் பதில் இருக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு தமிழ்ப் பயங்கரவாதத்தை முற்றாக அழித்துவிட்டதாக பிரகடனம் செய்த இராணுவ அதிகாரியும் இதே வீரதுங்கதான். இப்பிரகடனத்தைச் சிறப்பிக்க பாரிய களியாட்ட நிகழ்வொன்றினையும் வீரதுங்க நடத்தியதுடன், ஜனாதிபதி ஜெயாரையும் அதற்கு அழைத்திருந்தார்.
அன்று வோர்ட் பிளேசில் நடந்த கூட்டத்தில் பங்குகொண்ட இராணுவ அதிகாரியொருவர் என்னுடன் பேசுகையில் கூட்டம் முழுவதிலும் ஜெயார் கடுங் கோபம் கொண்டு காணப்பட்டதாகக் கூறினார். "இது உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும், நாம் இதனை இப்படியே நடப்பதற்கு அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது" என்று மீண்டும் மீண்டும் ஜெயார் கூட்டத்தில் கூறியிருக்கிறார். அவர் இப்படிக் கூறியபோது அங்கிருந்த அனைவருக்கும் அவர் ஏதோ ஒரு விடயத்தை மனதில் வைத்தே இதனைக் கூறுகிறார் என்பது தெரிந்தது.
கூட்டத்தின் முடிவில் இரு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. முதலாவது விடயம் ராணுவத் தளபதி வீரதுங்கவை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவது. இரண்டாவது கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களுக்கும் கொழும்பில் அமைந்திருக்கும் பொது மயானமான பொரள்ளை கனத்தையில் பூரண இராணுவ மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகளை நடத்துவது.
கொழும்பில் பூரண இராணுவ மரியாதைகளுடன் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் மரணச் சடங்கினை நடத்துவதென்பது ஜெயாரினால் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால், கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு, அவ்விடங்களில் இராணுவ மரியாதையுடன் சடங்குகள் நடப்பதே வழமையாக இருந்து வந்தது, ஆகவே ராணுவத் தளபதி இம்முறையும் அவ்வாறே செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். இக்கூட்டத்தில் பொலீஸ் மா அதிபர் ருத்ரா ராஜசிங்கம் பங்குகொண்டிருக்கவில்லை, ஆகவே அவர் சார்பாக வேறு இரண்டு பொலீஸ் உயரதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். அவர்களும் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி ராணுவ மரியாதையுடன் வழியனுப்பி வைப்பதே சரியானது என்று கூறினர். 13 இராணுவத்தினருக்கும் ஒரே நேரத்தில் கொழும்பில் மரணச் சடங்கினை நடத்தும்போது அச்ம்பாவிதங்கள் நேரலாம் என்று அந்த பொலீஸ் அதிகாரிகள் தமது அச்சத்தைத் தெரியப்படுத்தினர். பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் பொலீஸார் கூறிய காரணத்தை ஏற்றுக்கொண்டு, அவ்வாறு செய்வதே சரியானது என்று கூறினர். அனால், இவர்கள் எவரினதும் கருத்துக்களையும் செவிமடுக்கும் நிலையில் ஜெயார் இருக்கவில்லை. கொல்லப்பட்ட 133 இராணுவத்தினருக்கும் கொழும்பிலேயே கூட்டு மரணச் சடங்கினை நடத்துவதென்பதில் அவர் பிடிவாதமாக இருந்ததுடன், "13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பது சாதாரண விடயமல்ல, அவர்களுக்கு பூரண இராணுவ மரியாதைகளுடன் தகுந்த முறையில் வழியனுப்பி வைப்பதே நாம் அவர்களுக்குச் செலுத்தும் சரியான வணக்கமாகும்" என்று காட்டமாகக் கூறினார்.