பிரபாகரன் மதிவதனி திருமணம்
பிரபாகரனின் காதல் விவகாரம் அவரது இயக்கத்தினுள்ளேயும் அவருக்கு விரோதமான இயக்கங்களுக்குள்ளேயும் எதிர்ப்பினை உருவாக்கியிருந்தது. அவரது எதிராளிகள், குறிப்பாக புளொட் அமைப்பின் தலைவரான உமா மகேஸ்வரன் பிரபாகரனைத் தாக்குவதற்கான தனது சந்தர்ப்பமாக இதனைப் பாவிக்க நினைத்தார். பிரபாகரனின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள்ளும் இந்த விவகாரம் விமர்சனங்களை உருவாக்கி விட்டிருந்தது. தனது கொள்கைகளையே பிரபாகரன் மீறுகிறார் என்று அவரது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர்.
"பிரபாகரனுக்கு அது மிகுந்த சோதனைக் காலமாக இருந்தது" என்று சந்தோசம் என்னிடம் தெரிவித்திருந்தார்.
ஆகவே, அடேல் பாலசிங்கத்திடம் தனக்கான உதவியினை பிரபாகரன் தேட விழைந்தார். அன்டன் பாலசிங்கத்தைக் காட்டிலும் இவ்விடயத்தில் அடேல் பாலசிங்கமே பிரபாகரனுக்குத் துணையாக நின்றார். பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே ஊர்மிளாவைக் காரணம் காட்டி ஏற்பட்ட பிணக்கில் திருமணம் தொடர்பாக பிரபாகரன் காண்பித்த கடுமையான கொள்கைகளை அடேல் அன்று ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. பிரபாகரன் இயக்கத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது எனும் கொள்கையினைத் தளர்த்தவேண்டும் என்றே அடேல் அப்போதிருந்து கோரிவந்தார். மனிதர்களின் உணர்வுகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் அவசியம் என்பதே அவரது வாதமாக இருந்துவந்தது.
அடேல் கொண்டிருந்த நெகிழ்ச்சியான போக்கே உமா மகேஸ்வரன் விடயத்தில் அவர் ஊர்மிளாவைத் திருமணம் செய்தால் பிரச்சினை எல்லாம் முடிவிற்கு வந்துவிடும் என்கிற நிலைப்பாட்டினை எடுக்க அன்டன் பாலசிங்கத்திற்கு உதவியிருந்தது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், உமாவும் ஊர்மிளாவும் தமக்குள் உறவெதுவும் இல்லையென்று பிடிவாதமாக மறுத்ததோடு திருமணம் செய்யத் தாம் தயாரில்லை என்றும் கூறியிருந்தனர். இதேவகையான நிலைப்பாட்டையே பிரபாகரன் மதிவதனி விடயத்திலும் பாலசிங்கம் எடுத்துக்கொண்டார். அதாவது திருமணம் முடித்தால் சரியென்பதே அவரது நிலைப்பாடு.
பிரபாகரன் மதிவதனி காதல் விடயத்தை பாலசிங்கம் மிகவும் அவதானமாகவே கையாண்டார். இந்த விடயம் இன்னொரு பிளவினை ஏற்படுத்துவதை அவர் விரும்பவில்லை. ஆகவே, புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களையும், பிரபாகரனுக்கு நெருக்கமானவர்களையும் அவர் சென்னைக்கு வரவழைத்தார். அவர்களுள் சிலர் பிரபாகரனின் காதலுக்கான தமது எதிர்ப்பினை ஏலவே வெளிப்படுத்தியிருந்தனர். இயக்கத்தின் கொள்கை நிலைப்பாட்டினை அது மீறுவதாக அவர்கள் வாதிட்டனர். உமா மகேஸ்வரனுக்கெதிராக பிரபாகரன் பாவித்த அதே காரணங்களை அவர்களும் பாவித்தனர். இயக்கத்தின் விதிகளை வகுத்த தலைவரே அதனை மீறுவது தவறு என்றும் கூறினர்.
உமா மகேஸ்வரன் ஊர்மிளா விவகாரத்தில் தான் முன்மொழிந்த தீர்வினையே பாலசிங்கம் இந்த விடயத்திலும் முன்வைத்தார். நெகிழ்ச்சித்தன்மையினை இயக்கத்தினுள் அனுமதிப்பதை தான் ஆதரிப்பதாக அவர் கூறினார். உமா - ஊர்மிளா விடயத்தில் தாம் நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடித்து அவர்களை திருமணம் முடித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டபோதும் அவர்கள் அதனை மறுத்துவிட்டதாக அவர் ஞாபகப்படுத்தினார். மேலும் தான் அதே நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடித்து பிரபாகரனையும் மதிவதனியையும் திருமணம் முடிக்கக் கோரப்போவதாக புலிகளின் ஏனைய மூத்த உறுப்பினர்களிடம் கூறினார்.
இயக்கத்தினுள் நெகிழ்வுத்தன்மையினை ஏற்றுக்கொள்ளச் செய்ய பாலசிங்கம் அதிகம் வாதாடவேண்டியிருந்தது. இது குறித்து அடேல் இவ்வாறு கூறுகிறார்,
"இயக்கத்தின் பழைய கோட்பாடுகளும், விதிகளும் காலத்திற்கு ஒவ்வாதவை என்பதால் அவை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று பாலா வாதாடினார். காதலும் வீரமும் தமிழரின் கலாசாரத்தில் போற்றப்பட்ட இருவிடயங்கள் என்று அவர் கூறினார். பிரபாகரனின் காதல் திருமணத்தின் மூலம் அவரின் போராளிகளும் தமக்குள் காதல் திருமணங்களில் ஈடுபட்டு எதிர்காலத்தில் குடும்ப வாழ்க்கைக்குள் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வழி இதனால் உருவாக்கப்படும் என்று அவர் எடுத்தியம்பினார். இயக்கத்தின் வளர்சிக்கும், அபிவிருத்திக்குமான நற்காரணிகளாக இவை பார்க்கப்படுதல் அவசியம் என்றும் அவர் கூறினார்".
மூத்த உறுப்பினர்கள் பாலசிங்கத்தின் முன்மொழிவை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டதாக அடேல் எழுதுகிறார். இந்த விவாதங்களில் பங்கெடுத்திருந்த இரு மூத்த உறுப்பினர்களுடன் எனக்குப் பேச சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அவர்களைப் பொறுத்தவரை பிரபாகரன், மதிவதனி மீது தீராக் காதல் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்கள். ஆகவே, அதனை உடைக்கும் எந்த நடவடிக்கையும் பிரபாகரனை மனதளவில் பாதிக்கும் என்பதோடு உணர்வுரீதியாகவும் அவரைக் கீழே இழுத்துவிடும் என்று அவர்கள் கருதினார்கள். பிரபாகரனுக்கு எப்படியாவது இவ்விவகாரத்தில் உதவ வேண்டும் என்று இயங்கிய அடேல், மூத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு, "தயவுசெய்து ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். பிரபாகரனின் திருமணம் என்பது அவருக்குப் பலமாக அமையும் என்பதோடு, இயக்கத்திற்கும் பலமாக அமையும். ஆகவே, அதற்குக் குறுக்கே நிற்கவேண்டாம்" என்று கேட்டுக்கொண்டு வந்தார்.
பிரபாகரன் மதிவதனி திருமணம் ஐப்பசி முதல்ம் திகதி, 1984
பிரபாகரன் மதிவதனியை திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக இயக்கத்தின் விதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று மூத்த உறுப்பினர்கள் பாலசிங்கத்திடம் கேட்டுக்கொண்டனர். இவ்விதி இயக்கத்திற்குள் எல்லோருக்கும் பொதுவானதாக இருப்பதோடு எவரும் விதிவிலக்கில்லை என்றும் அவர்கள் கூறினர். அதனை வரவேற்ற பாலசிங்கமும் இயக்கத்தினுள் ஐந்துவருட சேவையினை நிறைவுசெய்த போராளிகள் திருமணம் செய்ய முடியும் என்கிற விதியைக் கொண்டுவந்தார்.
பிரபாகரனின் திருமணம் இயக்கத்தினுள் பாரிய தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது. ஒருவர் பின் ஒருவராக இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் திருமண பந்தங்களில் ஈடுபட்டு குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தார்கள். இயக்கத்தில் திருமணம் செய்துகொள்வதென்பது வழமையான நடைமுறையாகிப் போனது.
பிரபாகரனிடம் பேசிய பாலசிங்கம், அவர் உடனடியாக மதிவதனியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், இதற்காக மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கோரினார். இதற்காக மதிவதனியின் பெற்றோர்களான ஏரம்பு வாத்தியார் மற்றும் சின்னம்மை ஆகியோரை சென்னைக்கு வரவழைக்கும் ஒழுங்குகளில் அவர் ஈடுபட்டார். அவர்களுடன் பேசிய பாலசிங்கம், அவர்களது மகள் பிரபாகரனைக் காதலிக்கிறார் என்றும், ஆகவே தாம் செய்யவேண்டிய கடமை யாதெனில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைப்பதே என்றும் கூறினார். பின்னர் அவர்களை மதிவதனியுடன் பேசி அவரது எதிர்காலம் குறித்து தீர்மானம் எடுக்கும்படியும் கோரினார்.
கந்தசுவாமி கோயில் திருப்பூர்
தமது மகளான மதிவதனியுடன் பேசிய பின்னர் அவரது திருமணத்திற்குத் தமது பூரண சம்மதத்தினை அவரது பெற்றோர் வழங்கினர். இலங்கை அரசால் தேடப்பட்டுவரும் கெரில்லாத் தலைவர் ஒருவரை மணப்பதால் அவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் இன்னல்கள் குறித்து தமது மகளிடம் அவர்கள் விளங்கப்படுத்தியதாக ஏரம்பு தம்பதிகளின் நண்பர் ஒருவர் பின்னாட்களில் என்னிடம் கூறியிருந்தார். "உனது வாழ்க்கை கடுமையான ஆபத்தில் எப்போதும் இருந்துகொண்டிருக்கும் என்று அவளிடம் எச்சரித்தேன். ஆனால், அவளோ பிரபாகரனுக்காக தனது உயிரையும் கொடுக்க முன்வருவேன் என்று என்னிடம் கூறினாள். அதன்பிறகு எனக்குச் சொல்வதற்கு எதுவுமே இருக்கவில்லை. அவர்களது திருமணத்திற்கு எனது சம்மதத்தினைத் தெரிவித்தேன்" என்று ஏரம்பு வாத்தியார் தனது உறவினரிடம் கூறியிருக்கிறார்.
பிரபாகரன் மதிவதனி திருமணம் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி முதலாம் திகதி தமிழ்நாடு திருப்பூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது. சைவர்களின் கடவுளான முருகன் மீது அளவுகடந்த பக்தி கொண்டவர் பிரபாகரன். அவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்தேறியது. திருமணத்தின் பின்னர் பாலசிங்கம் தம்பதிகள் வாழ்ந்துவந்த வீட்டிலிருந்து வெளியேறிய மதி, பிரபாகரனுடம் வாழத் தொடங்கினார்.