தமது அமைச்சரவைப் பதவிகளைத் தக்கவைக்க இஸ்ரேல் தூதரகத் திறப்பினை அமைதியாக ஏற்றுக்கொண்ட முஸ்லீம் அமைச்சர்கள்
இரு அமெரிக்க உயர் அதிகாரிகளின் இலங்கைக்கான அடுத்தடுத்த வருகை இந்தியாவுக்குச் சந்தேகத்தினை ஏற்படுத்தியிருந்தது. இந்தியாவுக்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்டவரான வோல்ட்டர்ஸின் வருகை இந்தியாவை ஒரே நேரத்தின் ஆத்திரப்படவும் கவலைப்படவும் வைத்திருந்தது. வோஷிங்டனின் இந்தியாவுக்கெதிரான கொள்கையின் பிதாமகனே அவர்தான் என்று இந்தியா நம்பியது. இந்தியாவுக்கெதிரான சதியொன்றில் இறங்குவதற்காகவே வோல்ட்டர்ஸ், ஜெயவர்த்தனவைச் சந்தித்திருக்கலாம் என்று அது கருதியது. ஆகவே, வோல்ட்டர்ஸின் விஜயம் தமக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவர் இந்தியாவுக்கு விஜயம் செய்யாது தவிர்த்துவிட்டது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றும் வோஷிங்கடனுக்கு தனது அதிருப்தியை அறிவித்தது.
வோல்ட்டர்ஸின் வருகையின் பின்னர் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மிகுந்த செயற்றிரனுடன் காணப்பட்டது. அமெரிக்காவில் இருந்த இலங்கைத் தூதுவருக்கும் வோல்ட்டர்ஸுக்கும் இடையே முக்கியமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பில் அமைந்திருந்த அமெரிக்கத் தூதரகத்தில் இஸ்ரேலுக்கான அலுவலகம் ஒன்றினை அமைத்தல், சிலாபம் மாவட்டத்தின் இரணவில பகுதியில் வொயிஸ் ஒப் அமெரிக்காவுக்கான அஞ்சல் நிலையம் ஒன்றினை உருவாக்குவது, திருகோணமலை எண்ணெய்க்குதங்களை அமெரிக்க நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குவது, திருகோணமலை துறைமுகப்பகுதியில், அப்பகுதியினால் வலம்வரும் அமெரிக்கக் கடற்படை வீரர்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்ற பல விடயங்கள் இப்பேச்சுகளின்போது கலந்துரையாடப்பட்டன.
வோல்ட்டர்ஸ் மீண்டும் 1983 மார்கழியில் கொழும்பிற்கு விஜயம் செய்தார். தனது ஐப்பசி மாத விஜயத்தின்போது தான் கேட்டுக்கொண்ட விடயங்கள் தொடர்பாக ஜெயவர்த்தனவின் நிலைப்பாட்டினை அறிவதே அவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இஸ்ரேலுக்கான அங்கீகாரத்தினை வழங்குவதற்கு ஜெயார் இணங்கியிருந்தார். இஸ்ரேலுக்கான அங்கீகாரத்தை அரசு வழங்கினால், முஸ்லீம்களை அரசுக்கெதிராகத் திருப்பிவிட சிறிமா தலைமையிலான எதிர்க்கட்சிகள் முயல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த சிறிமாவின் அரசு உள்ளூர் முஸ்லீம்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவும், மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளின் ஆதரவினைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் இஸ்ரேலுடனான சகல தொடர்புகளையும் அறுத்தெறிந்திருந்தது.
இஸ்ரேலின் உளவு அமைப்புக்களில் ஒன்றான ஷின் பெத்தின் அதிகாரிகளை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இயங்கச் செய்வதனூடாக அவர்களின் உதவியினை இலங்கை இராணுவத்திற்குப் பெற்றுக்கொள்வதென்று ஒத்துக்கொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தத்தினை உருவாக்குவதில் வோல்ட்டர்ஸ் பெரும் பங்காற்றியிருந்தார். மேலும் இரணவில வொயிஸ் ஒப் அமெரிக்கா அஞ்சல் நிலையம், திருகோணமலை துறைமுக எண்ணெய்க்கிணறுகளின் குத்தகை, திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைக்கான பொழுதுபோக்கு அனுமதி தொடர்பாகவும் சாதகாமன இணக்கப்பாடுகள் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எட்டப்பட்டிருந்தன.
இலங்கையுடனான பேச்சுக்களில் பங்குபற்றியிருந்த இஸ்ரேலின் ஆசியாவுக்கான வெளிவிவகார அமைச்சின் உதவித் தலைவர் டேவிட் மதானி 1984 ஆம் ஆண்டு சித்திரையில் கொழும்பில் தமது அலுவலகம் ஒன்றினைத் திறக்கும் விடயமாக கொழும்பு வந்திருந்தார். சபை ஒத்திவைக்கப்படும் வேளை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை சபையில் போட்டுடைத்தார். அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி அவ்வுறுப்பினரின் கேள்விக்கான பதிலை வழங்கினார்.ஆனால், மழுப்பலாகவும், விடயத்தைத் திசைதிருப்பும் வகையிலுமே அவரது பதில் அமைந்திருந்தது. இஸ்ரேலின் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை மேற்கொண்டவரான லலித்தும் இஸ்ரேல் அலுவலகத்தை கொழும்பில் திறக்கும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
வைகாசி 3 ஆம் திகதி ஒப்பந்தத்தின் வரைபினை ஜெயவர்த்தன பாராளுமன்றத்தில் முன்வைத்தார். அமைச்சரவையில் இருந்த இரு முஸ்லீம்களான போக்குவரத்து அமைச்சர் எம்.எச். மொஹம்மட் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ் ஹமீத் ஆகியோர் இதனை எதிர்த்தனர். இஸ்ரேலுடன் ஒப்பந்தம் ஒன்றினைச் செய்வதன் மூலம் உள்ளூர் முஸ்லீம்களுக்கு அரசு துரோகம் இழைத்திருப்பதாகவும் இலங்கைக்கு நட்பான மத்தியகிழக்கு முஸ்லீம் நாடுகளை அரசு அவமதித்திருப்பதாகவும் அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
எம்.எச். மொஹம்மட்
முஸ்லீம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதைக் காட்டிலும் தமிழ்ப் பிரிவினைவாதத்தினை அழிப்பதே தனது முக்கிய நோக்கம் என்று கூறிய ஜெயார், இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தினை எதிர்க்கும் எவரும் தாராளமாக அரசிலிருந்து வெளியேறலாம் என்றும் அறிவித்தார். ஆனால், தமது அமைச்சரவைப் பதவிகளை விட்டுக் கொடுக்க விரும்பாத இரு முஸ்லீம் அமைச்சர்களும் அதன்பின்னர் அமைதியாக இருந்துவிட்டனர்.
ஏ.சி.எஸ் ஹமீத்
ஜெயாரின் நெருங்கிய சகாக்களான லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ் ஆகியோர் இவ்வொப்பந்தத்தினை முழுமையாக ஆதரித்து நின்றனர்.
கொழும்பில் இஸ்ரேலின் அலுவலகம் ஒன்றினைத் திறப்பதற்கு தமது எதிர்ப்பினைக் காட்ட சில முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருந்தனர், ஆனால் ஜெயார் இவை எதையுமே சட்டை செய்யும் மனநிலையில் இருக்கவில்லை. "எனது உடனடித் தேவை தமிழ்ப் பயங்கரவாதத்தினை அழிப்பதே. ஆகவே, இஸ்ரேலின் தொடர்புகளை எதிர்க்கும் எவரும் பயங்கரவாதத்தினை ஆதரிப்பவர்களாகக் கருதப்படுவர்" என்று ஜெயார் ஆர்ப்பாட்டங்களுக்குப் பதிலளித்தார். இதனையடுத்து முஸ்லீம்கள் மெளனமாகிவிட்டனர்.
மேலும், எதிர்க்கட்சிகளினால் இஸ்ரேலுடனான ஒப்பந்தத்திற்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பையும் ஜெயார் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து இவ்வொப்பந்தத்தினை எதிர்த்து கடுந்தொணியிலான அறிக்கை ஒன்றினை சிறிமா வெளியிட்டார்.
சிறிமாவின் அறிக்கை பின்வருமாறு கூறியது,
"எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், இஸ்ரேலின் அலுவலகத்தை இந்த நாட்டிலிருந்து அகற்றிய முதலாவது அரசுத் தலைவர் என்கிற வகையிலும் இந்த அரசு செய்துகொண்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தினை நான் முற்றாக நிராகரிக்கிறேன். மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் அரபு - இஸ்ரேல் பிரச்சினையினை எமது நாட்டிற்குள் கொண்டுவந்திருப்பதன் மூலம் ஏற்கனவே இங்கு நடந்துவரும் வன்முறைகளுக்கு மேலதிகமாக மேலும் வன்முறைகள் உருவாகவே இது வழிவகுக்கும்".
"இலங்கையின் நலன்கள் மீதும் அதன் மக்கள் மீதும் நடத்தப்பட்டிருக்கும் இந்த அப்பட்டமான தாக்குதலை இன, மத, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இலங்கையை நேசிக்கும் அனைவரும் எதிர்க்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் கொல்வின் ஆர் டி சில்வாவும் இதனை எதிர்த்து அறிக்கையொன்றினை வெளியிட்டார். இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்திருப்பதன் மூலம் இலங்கையின் அணிசேராக் கொள்கையினை மீறி அமெரிக்க முகாம் நோக்கி இலங்கை சாய்ந்துவருவததாக அவர் குற்றஞ்சாட்டினார்.
"இராணுவ ரீதியில், இஸ்ரேலின் பலம் என்பது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பலமேயன்றி வேறில்லை" என்று அவர் கூறினார்.
ஆனால், இந்த எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி இஸ்ரேலின் அலுவலகம் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 1984 ஆம் ஆண்டு வைகாசி 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. டேவிட் மதானி இந்த அலுவலகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இஸ்ரேல் அதன் இலங்கைக்கான தூதுவராக மூத்த இராஜதந்திரி அக்ரெயில் கார்னியை ஐப்பசி 24 ஆம் திகதி நியமித்தது.
பெரும்பாலான முஸ்லீம் நாடுகளின் இலங்கையின் இந்தச் செயலைக் கண்டித்தன. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவிருத்தித் திட்டம் ஒன்றிற்கான தனது நிதியுதவியினை சவுதி அரேபியா நிறுத்தியது. மேலும் லிபியா, சிரியா, ஈரான், ஜோர்தான் ஆகிய நாடுகளும் தமது கடுமையான எதிர்ப்பினை ஜெயவர்த்தனவுக்குத் தெரிவித்திருந்தன.
முன்னணிப் பிரெஞ்சுப் பத்திரிக்கை ஒன்றிற்குப் பேட்டியளித்த இந்திரா காந்தி, இலங்கையின் இந்த முடிவிற்கான தனது ஆட்சேபணையினைத் தெரிவித்திருந்தார். தனது தென்கோடியில் இருக்கும் அயல்நாடு ஒன்று வெளிநாட்டுச் சக்திகளை உள்ளே கொண்டுவருவது தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுருத்தலான விடயம் என்று அவர் கூறினார். "பயங்கரவாதத்தை ஒழிக்கவே வெளிச்சக்திகளை கொண்டுவருவதாக ஜனாதிபதி ஜயவர்த்தன கூறுகிறார். ஆனால், பயங்கரவாதத்தினை அழிக்கிறேன் என்கிற பெயரில் அவர் தமிழ் மக்களைப் படுகொலை செய்யாமலிருப்பார் என்று நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.