போதமும் காணாத போதம் – 01
October 2, 2023
வீரயுகத்தின் அந்தி நந்திக்கடலில் சாய்ந்து ஆண்டுகள் இரண்டாகியிருந்தன. செட்டிக்குளம் அகதி முகாமில் அடைக்கப்பட்டு பலாத்காரங்களுக்கும் வன்முறைக்கும் உள்ளான சொற்ப சனங்கள் சொந்தவூர்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட்டனர். வரிசையில் நிற்க வைத்து அடையாளங்களைச் சரிபார்த்து ஆவணங்களை தருவித்து இராணுவப் பேருந்துகளில் அவர்கள் ஏற்றப்பட்டனர். செத்துப்போனாலும் சொந்தக் காணியில் சாகவேண்டும் என்பவர்களுக்கு நிம்மதி திரும்பிற்று. ஒரு பெருங்கனவு சிதைந்து உருக்குலைந்து மண்ணோடு மண்ணாகியிருந்தது. அளவற்ற தியாகமும், உயிரிழப்பும் அந்த மண்ணில் வெறித்திருந்தது.
சொந்தவூரில் இறக்கிவிடப்படும் வரை அம்மாவோ அக்காவோ எதுவும் கதையாமல் வந்தனர். வழிநெடுக பனைகள் தலையற்றும் நிமிர்ந்து நின்றன. வீட்டுக்கு முன்பாக இறக்கிவிடப்பட்டோம். புதர்கள் மண்டிக்கிடந்தன. வீட்டுக் கூரையில் கறையான் படை. சுடுகாட்டமைதி. வாசலற்ற வீடு. சொந்த வீட்டினுள் செல்வதற்கு வழியற்று நின்றோம். எந்தத் துயரத்திலும் கண்ணீர் சிந்தாத அம்மா தனது காலடி மண்ணை இரண்டு கைகளாலும் அள்ளி வான் நோக்கி எறிந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அது சாபமோ, பிரார்த்தனையோ யாரறிவார்?
காணியைத் துப்புரவு செய்வது அவ்வளவு கஷ்டமாயிருக்கவில்லை. இரண்டு காட்டுக்கத்திகளாலும் மண்வெட்டியாலும் மரங்களையும் புதர்களையும் புரட்டிப்போட்டோம். வீட்டினுள்ளே எழுந்திருந்த பாம்பு புற்றுக்களை எதுவும் செய்யாமல் அடுத்தநாள் பார்த்துக் கொள்ளலாம் என்றாள் அம்மா. பார்த்தீனியத்தின் நாற்றம். இரவானதும் மாமரத்தின் கீழே அம்மாவும் நானும் அக்காவும் படுத்துக் கொண்டோம். நான்கு வருடங்களுக்குப் பிறகு சொந்தக் காணியில் நித்திரையாவது கனவெனத் தோன்றியது. அம்மாவுக்கு நித்திரை வரவில்லை. அவள் லாம்பைத் தீண்டி வைத்துவிட்டு எழுந்திருந்தாள். காற்றில்லாத இரவு. அம்மாவிடம் அனலின் விறைப்பு. அவள் மெல்ல எழுந்து கிணறு நோக்கிப் போனாள். வெட்டப்பட்ட செடிகளும், புற்களும் கும்பியாகி கிடந்தது. என்ன தோன்றியதோ! லாம்பிலிருந்து மண்ணெண்ணையை ஊற்றி கும்பியில் தீ வைத்தாள்.
அந்த இரவுக்கு அப்படியொரு வெளிச்சம் தேவையாகவிருந்தது. தீயின் சடசடப்பு பச்சையத்தில் எழுந்தது. அக்கா பயந்தடித்து நித்திரையிலிருந்து எழுந்தாள். புன்னகைத்தபடி நெருப்பு என்றேன். ஏற்கனவே சித்தம் குழம்பியிருந்த அவள் வெளிச்சத்தைப் பார்த்து வெருண்டிருந்தாள். நந்திக்கடலில் இறப்பதற்கு விஷம் தேடி அலைந்து களைத்தவள் அக்கா. “ஊழியில சாவு வாய்ப்பதெல்லாம் ராசியடி மோளே” என்று ஆச்சி சொல்லியும் அவள் கேட்கவில்லை.
அக்காவுக்கு சித்தம் குழம்பியதை அம்மாதான் முதலில் உணர்ந்தாள். ஆனால் என்னிடமோ யாரிடமோ அதனைச் சொல்லாமல் தவிர்த்தாள். முள்ளிவாய்க்கால் நாட்களில் கட்டுப்படுத்தமுடியாமல் போயிற்று. பதுங்குகுழிக்குள் இருந்தபடி வெறித்துப் பார்த்து அழுவாள். யாரேனும் சமாதானம் சொன்னால் வெளியே எழுந்து ஓடுவாள். பிறகு அந்தக் கூடாரங்களுக்குள் அவளைக் கண்டுபிடிப்பது பெரியதொரு வாதை. என்னிடமொரு பழங்கால செபமாலையிருந்தது. டச்சுக்காரர்களின் தேவாலய அருங்காட்சியத்திலிருந்து அதனைக் களவாடியிருந்தேன். எங்கு சென்றாலும் என்னோடு வருகிற நிழலது.
அக்காவின் கழுத்தில் அதனை விளையாட்டாக அணிவித்து உனக்கு வடிவாக இருக்கிறது என்றேன். அவள் சிலுவையைப் பிடித்து அறுத்தாள். செபமாலையை பதுங்குகுழிக்கு வெளியே எறிந்துவிட்டு “போடா கள்ளா” என்று அழத்தொடங்கினாள். சாவுகள் மலிந்து விளைந்த படுகளத்தில் தற்கொலை செய்து உயிரை மாய்க்க எண்ணி பலமுறை முயன்றும் தோற்றாள். ஒருநாள் இரவு அவளைப் பதுங்குகுழியில் காணாமல் தேடித்திரிந்தோம். நீரடர்ந்த குளத்து ஒற்றைப்பனையின் கீழே நின்றாள்.
அவள் இன்னும் நந்திக்கடல் வீழ்ச்சியை அறியவில்லை. எரியும் நெருப்பைப் பார்த்தபடி அம்மா….அம்மா என்று கூப்பிட்டாள். எந்த அசைவுமின்றி எரிந்தசையும் ஒளியின் முன்னே இரவு முழுவதும் நின்றாள் அம்மா. அடுத்தநாள் காலையில் மீண்டும் துப்பரவு பணிகளைத் தொடங்கினோம். வீட்டினுள்ளே இருந்த புற்றை வெட்டியெறிந்தோம். பாம்பில்லை. புற்று மண்ணை அம்மா பத்திரமாக எடுத்து வைத்தாள். காணி கொஞ்சம் வடிவெய்தியிருந்தது. கிணறு இறைக்க வேண்டும். வீடு வேயவேண்டும் என பெரிய பட்டியல் போட்டோம்.
நாங்கள் இடம்பெயர்கையில் மண்ணுக்குள் புதைத்து வைத்த அம்மிக்கல்லையும், சில பொருட்களையும் எடுக்கலாமென்று அகழ்ந்தோம். எல்லாமும் இருந்தது. இரண்டு பெரிய புகைப்பட அல்பங்கள் பொலித்தீன் படையால் காக்கப்பட்டிருந்தது. அக்கா ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டினாள். வீரயுகத்தின் நாயகர்கள் பலர் உயிர்ப்புடன் இருந்த புகைப்படங்கள். அக்கா எல்லோரையும் பார்த்து புன்னகை செய்து, அவர்களின் பெயர்களையெல்லாம் மறவாமல் சொன்னாள். அம்மிக்கல்லை எடுத்து தென்னைமரத்தின் கீழே வைத்தோம். அம்மியில் அரைத்த சம்பலும், ரொட்டியும் சாப்பிடவேண்டுமென சொன்னேன். அம்மா சரியென்று தலையசைத்தாள்.
அன்றைக்கு வெளியில் அடுப்பு மூட்டி, மாவைக் குழைத்து ரொட்டி சுட்டோம். சம்பலுக்கு வெங்காயம் போடாமல் வெறும் மிளகாயை தேங்காய்ப் பூவோடு அரைத்தோம். அக்கா நன்றாகச் சாப்பிட்டாள். அவளுக்கு ஏதோ பேய் பிடித்திருக்கிறது என்றாள் அம்மா.
ஊரில் ஏனையோரும் தங்களது வீட்டையும் வளவையும் சீராக்கியிருந்தனர். பொதுக்கிணற்றை எல்லோரும் பணம் போட்டு இறைத்துச் சுத்தம் செய்தனர். கள்ளருந்திக் கூத்திசைக்கும் கனவான்கள் பனைமரங்களின் பாளையைச் சீவி முட்டியைக் கட்டிக் காத்திருக்கத் தொடங்கினர். கள்வெறிக்கு நிகர்த்த இன்பம் ஈழருக்கு வேறில்லை. காவோலையில் கருவாட்டைச் சுட்டு இரண்டு தூசணங்களோடு பொழுதை மங்கலமாக்கும் அப்புமார் பனைக்கு கீழே அமர்ந்திருந்து கதையளந்தனர். வசந்தம் வருமென்றில்லை, ஆனாலும் நாம் பூப்போம் என்பதைப் போல பெண்கள் கூந்தல் நனைத்து வழிநெடுக காற்சங்கிலி ஒலிக்க நடந்து போயினர்.
கனரக ஆயுதங்களின் வெற்றுக் கோதுகளைச் சேமித்து பூஞ்செடிகளை நட்டுவைத்து சின்னஞ்சிறுசுகள் தங்களை ஆமி இயக்கமாய் பாவித்து சண்டை செய்து விளையாடினர். கிளித்தட்டு விளையாடும் இளையோர்கள் வேர்த்தொழுக மறிக்கின்றனர். அடிக்கின்றனர். இரவானதும் விளக்குகள் திரி குறைக்கப்பட்டு வீடுகள் குளிர்கின்றன. வெறுமை அழிந்து உடல்கள் இன்பம் நுகர்கின்றன. காற்றில் ஈரம் திரும்புகிறது. கிளைகளில் அசையும் மலர்களில் தேன் அடர்ந்து திரள்கின்றது. ஊரில் மனுஷ வாசனை தளும்பத் தளும்ப முட்டிகளில் கள் நிரம்பிற்று.
ஒரு மாதத்தில் வீட்டை திறமாகச் சரிப்படுத்தியிருந்தோம். அக்காவும் நானும் யாழ்ப்பாணத்திலுள்ள பெரியம்மா வீட்டுக்குச் சென்றிருந்தோம். அம்மா மட்டுமே வீட்டிலிருந்தாள். ஒரு குழம்பும் சோறும் வைத்துச் சாப்பிடுவது அவளுக்கு போதுமானதாக இருந்தது. உறைப்புக்கு கொச்சி மிளகாய் காய்த்திருந்தது.
ஒருநாள் சந்தைக்குச் சென்று திரும்புவதற்குள் அம்மாவைத் தேடி வந்திருந்த ஆச்சியொருத்தி வீட்டின் முன்னால் குந்தியிருந்துள்ளாள். நடுவெயில் வெக்கை வீச தலைவிரிகோலமாய் வெள்ளைச் சீலை உடுத்தியிருந்த ஆச்சியைப் பார்த்த ஊரவன் “ஆரன வேணும்” என்று கேட்டிருக்கிறார். ஆச்சி வீட்டைக் காண்பித்து “இவள் தான்” என்றிருக்கிறாள்.
“சந்தைக்குப் போயிட்டாள். வரப்பிந்தும். அவள் வருகிற வரைக்கும் என்ர வீட்டில வந்து இருங்கோ. அவள் வந்ததும் இஞ்ச வரலாம்”
“அவள் வரட்டும். நான் இதிலையே இருக்கிறன்”
“நீங்கள் எங்க இருந்து வாறியள்”
“உதில இருந்துதான். நடந்து வந்தனான்.”
“உதில எண்டால் எங்க”
“எனக்கு சரியான பசி. அவளைச் சோறு கொண்டுவந்து தரச் சொல்லு. என்னைக் கொஞ்சம் குளிப்பாட்டச் சொல்லு. நான் வெளிக்கிடுறன்” என்றெழுந்த ஆச்சியின் வெண்கூந்தல் மண்வரை நீண்டு, அவளது தடத்தையே அழித்திருக்கிறது.
“எங்க இருந்து வந்தனியள், உங்கட பேர் என்ன, எதுவும் சொல்லாமல் போனால், அவளிட்ட நான் எப்பிடிச் சொல்லுவன்” என்று கேட்ட ஊரவனைப் பார்த்து “நீ அவளிட்ட சூலக்கிழவி வந்தனான் என்று சொல்லு, என்னை நல்லாய்த் தெரியும்” என்றிருக்கிறாள்.
ஊரவன் அவளுடைய பதிலைக் கேட்டு உறைந்து நின்றார். முன்னே நடந்து சென்றவள் வெயிலானாள். கண்கள் கூசுமளவுக்கு வெளிச்சம் வந்தடைந்த ஊரவன் மயக்கமுற்று வீதியில் விழுந்தான். அம்மா வீட்டுக்கு வந்ததும் இந்தச் செய்தியை அவரே சொன்னார்.
“உன்னைத் தேடி சூலக்கிழவி வந்து தனக்கு பசிக்குதாம், குளிக்க வேணுமாம், வந்து பார்க்க சொல்லுது” என்றார். அம்மாவிடம் அந்தத் தகவலைச் சொன்னதும் ஊரவனுக்கு இந்தச் சம்பவத்தின் அனைத்து துளிகளும் மறந்து போயிற்று.
விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆற்றாமையும் சந்தோசமும் பொலிந்த அம்மா கொட்டடி காளி கோயிலை நோக்கி ஓடினாள். வழிநெடுக அவள் காளியை நோக்கி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள்.“இஞ்ச உள்ள ஒருத்தரிட்டையும் வராமல் என்ர வீடு தேடி வந்த உனக்கு நான் என்ன செய்வேன். என்ர ஆச்சியே” என்றபடி கோயிலிருக்கும் இடத்தை அடைந்தாள். சதுப்புக் காணியில் வெள்ளம் தேம்பி நின்றது. புதர்களும் செடிகளும் மண்டி வளர்ந்திருந்தன. காளி செடிகளுக்குள் புதைந்திருந்தாள். ஓடுகளற்ற கோயில் கூரையையும் கொடிகள் சடைத்து பிடித்திருந்தன. ஆழமிக்க தண்ணீரில் இறங்கி நடந்தாள். எதற்கும் அஞ்சாதவள் தாய். உக்கிரம் பெருகி தளும்பித் தளும்பி அழுதபடி புதர்களை பிடுங்கி எறிந்தாள். ஈரச்சருகுகளின் வாசனையும் பூச்சிகளும் குமைந்து கிடந்தன. வெடிக்காத எறிகணையொன்று குத்திட்டிருந்து. துருவேறிய அதன் மேற்பரப்பில் லட்சோப லட்ச சனங்களின் குருதியுறைவு. காளியின் பீடம் தகர்ந்திருந்தது.
எங்களுடைய குலத்தின் விலா எலும்பு சூலம். எங்கே எங்கள் விலா எலும்பு! அம்மா பிய்த்துக் கொண்டு அலறினாள். விஷப்பூச்சிகள், எதையும் பொருட்படுத்தாமல் சருகுகளை கைகளால் அகற்றினாள். ஒரு படை விலக இன்னொரு படை. சருகுகள் அழுகிக் கிடந்தன. நாற்றம் குமட்டியது. முறிந்து துருப்பிடித்த சூலத்தை கண்டெடுத்து நெஞ்சோடு அணைத்து “என்ர ஆச்சி, உன்னைக் கைடவிடமாட்டேன்” என்ற அம்மாவின் குரல் பேரிகையாக ஒலித்தது. அவளது இரு கால்களுக்குமிடையால் துயின்றிருந்த நாகமொன்று படமெடுத்தபடி அசைந்து அருளியது.
மண்ணில் சரிந்திருந்த சூலத்தை நிமிர்த்தி ஊன்றிய அம்மா, புதர்களில் மலர்ந்திருந்த செங்காந்தள் மலர்களை ஆய்ந்து படைத்தாள். சூலத்தில் சூட்டப்பட்ட செங்காந்தள் மலர்களின் நெருப்பு இதழ்கள் கனன்று நிறத்தன. வளவை மொத்தமாய் துப்புரவு பண்ணி, அடுத்தமாதமே பூசையைத் தொடங்கவேண்டுமென எண்ணம் தகித்தது. ஊழியுண்ட பெருநிலத்தின் மீதியாய் தன்னைப் போலவே காளியும் காந்தள் மலர்களோடு வெறித்திருப்பதை அவளால் ஏற்கமுடியாதிருந்தது. தெய்வமும் வாழ்வுக்கு மீளட்டுமென்று மண்ணை வேண்டிக்கொண்டு புறப்பட்டாள்.
கொட்டடி காளி காந்தள் மலர்கள் சூடி நின்ற அன்றிரவு அம்மா விளக்கு வைத்தாள். வெகு விரைவிலேயே கோவில் வளவைத் துப்பரவு செய்து வழிபாடு தொடங்கியது. முறிந்து போன சூலத்தை வைத்து வழிபடுவது ஊருக்கு நல்லதில்லை என்று பலர் சொல்லியும் அம்மா கேட்கவில்லை. அதே சூலம் புளிபோட்டு மினுக்கி மீண்டும் வழிபடு பீடத்திற்கு வந்தது. காந்தள் மலர்கள் மீண்டும் சூடப்பட்டது. கொட்டடி காளிக்கு இப்போது காந்தள் காளி, கார்த்திகைப் பூ காளி எனப் பலபெயர்கள். கோயிலை ஒட்டியுள்ள சதுப்பு நிலத்தில் எல்லா மாதங்களிலும் காந்தள் பூக்கள் மலர்கின்றன. அது காளியின் அற்புதம் என்கின்றனர் சனங்கள்.
நீண்ட வருடங்களின் பின்னர் காந்தள் காளி அம்மாவின் கனவில் வந்தாள். அவளுடைய முகத்தில் ஒருவித உலர்ச்சியிருப்பதைக் கண்ட அம்மா “ஏதேனும் உடம்பு சுகமில்லையா” என்று கேட்டாளாம். காளி ஓமென்று தலையசைத்திருக்கிறாள். என்னவென்று கேட்க காளி பதில் சொல்லாமல் உம்மென்று இருந்திருக்கிறாள். சித்தம் பிசகிய அக்காவிடம் கனவைச் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. எல்லாவற்றையும் கேட்ட அக்கா, தன்னுடைய கனவிலும் காளி வந்தாள் என்றாள்.
அம்மா திகைப்புற்று “என்ன சொன்னவா” என்று கேட்டாள்.
“காளிக்கு ஒரு காயமிருந்திருக்கு. ஷெல் காயம். ஒரு பீஸ் துண்டு காளியின்ர தலைக்குள்ள இப்பவும் இருக்கு. வெயில் நேரத்தில அது குத்தி நோக வெளிக்கிடுது. மண்ட பீஸ். காளி அதை நினைச்சு பயப்பிடுறா” என்றாள் அக்கா.
அம்மாவுக்கு வந்த கோபம் ஆறாமல் “போடி விசரி, உனக்குத் தான் மண்ட பீஸ்” என்றாள்.
“அதுதான் நானும் சொல்றேன். காளிக்கு மண்ட பீஸ். கொட்டடி காளிக்கு மண்ட பீஸ்” என்று அக்கா அரற்றத் தொடங்கினாள்.
அப்போதும் சூலம் மண்ணில் நிமிர்ந்து நிற்க காந்தள் மலர்கள் கனன்று மலர்ந்தன.
https://akaramuthalvan.com/?p=847