மைத்திரி - ரணில் அரசாங்க உறவும் ஹர்த்தாலும் ******** ****** **** *இராணுவ எண்ணிக்கையை குறைக்க ரணில் முன்வைத்த யோசனை. *இராணுவ எண்ணிக்கை குறைப்பு - IMF பரிந்துரை! *முல்லைத்தீவு சம்பவத்துக்கு பின்னணி இதுதான்! *** *** *** 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில், வடக்கு கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், 2009 இற்கு முன்னரான முப்பது வருட ஆயுதப் போராட்டம் ஒட்டுமொத்த இன விடுதலை என்ற அடிப்படையில் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரான முப்பது வருடங்கள் அதாவது, 1950 களில் இருந்து அஹிம்சை வழியில் நடந்தன. அது சட்ட மறுப்பு போராட்டமாகவே இருந்தது. இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் யாப்புச் சட்டங்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்பதை மையப்படுத்தியே "தமிழ்த் தேசியம்" என்ற கோட்பாடு எழுந்தது. ஆனால், 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தால் தான், ஈழத்தமிழர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் பேச முடியும் என்ற புதிய கற்பிதம் ஒன்றை சில தமிழ்த் தேசிய அரசியல் பிரதிநிதிகள் முன்வைத்தனர்... இக் கற்பிதம் வேடிக்கையானது என்ற பின்னணியில், 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்தை எப்படி நோக்குவது? தேர்தலில் தத்தமது கட்சிகளின் ஆசனங்களை அதிகரிப்பது என்ற ஒரேயொரு இலக்கைத் தவிர, வேறு அரசியல் உத்திகள் - இராஜதந்திரம் எந்த ஒரு அரசியல் கட்சியிடமாவது இருந்ததா? ஆகக் குறைந்த பட்சம் வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு நிதி வழங்கும் நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே பரிந்துரைத்திருந்தன. ஆனால், இப் பரிந்துரைகள் கூட உரியமுறையில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்த விரும்பவில்லை என்று ஏதாவது ஒரு தமிழ்க் கட்சி பிடிவாதமாக நின்று அழுத்தம் கொடுத்ததா? இராணுவ எண்ணிக்கையை குறைப்பதற்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இராணுவத்துக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருந்ததாக எகனாமி நெக்ஸ்ட் (EconomyNext) என்ற சஞ்சிகை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரசுரித்திருந்த கட்டுரை ஒன்றில் கூறியிருந்தது. இக் கட்டுரையை மேற்கோள் காண்பித்து "த டிப்ளோமற்“ (thediplomat) என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த ரதீந்திர குருவிற்ற (Rathindra Kuruwitaa) என்ற சிங்களப் பத்திரிகையாளர், ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தை (International Monetary Fund - IMF) மகிழ்விக்க, ரணில் இராணுவ எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக விமர்சித்திருந்தார். ஆனாலும் ஐஎம்எப் வழங்கிய பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச செலவினங்களை குறைக்க, இராணுச் செலவினங்களை குறைப்பது போன்ற ஒரு ஏற்பாட்டை ரணில் அப்போது செய்திருக்கிறார். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பற்றி ஐஎம்எப் ஒருபோதும் வெளிப்படையாக பரிந்துரைக்கவில்லை. அவ்வாறிருந்தும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜேபிவியும் ரணிலின் இராணுவ எண்ணிக்கை குறைப்பு முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. ஐஎம்எப்பின் பல பரிந்துரைகளின் பிரகாரம் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமே தவிர, இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க முடியாது என தேர்தல் பிரச்சாரங்களிலும் ஜேவிபி சொல்லியிருந்தது. எவ்வாறாயினும் வடக்குக் கிழக்கில் இதுவரை இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேநேரம், வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் பற்றிய விடயங்களைத் தவிர வேறு பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க முடியும் என்ற தொனியில் கோட்டாபய ஜனாதிபதியாக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்திடம் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டிருந்தது. ஆகவே, இப் பின்னணியில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்துள்ள ஜேவிபியிடம் இராணுவத்தை குறைக்கும் திட்டத்தை எதிர்பாரக்க முடியாது. ஆனாலும், மீள் நல்லிணக்கம் (Reconciliation) என ஐஎம்எப் அடிக்கடி ஞாபகப்படுத்தி வரும் மொழியின் உள்ளடக்கத்தின் (Content) பிரகாரம், வடக்கு கிழக்கில் இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். இராணுவ முகாம்கள் பலவற்றையும் மூடித்தான் ஆக வேண்டும்... ஆனால், இதற்கு அநுர அரசாங்கம் மாத்திரமல்ல வேறு எந்தவொரு சிங்கள அரசியல் தலைவர்களும் உட்படுவார்கள் என்று கூறுவதற்கு இல்லை. எவ்வாறாயினும் உள்ளகத் தகவல்களின் பிரகாரம், இராணுவ எண்ணிக்கைகள் குறைக்கப்பட வேண்டும் என ஐஎம்எப் அநுர அரசாங்கத்திடம் மறைமுகமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகிறது. இல்லையேல் நிதி கிடைக்காது போலும். ஆகவே இதனை அறிந்துதான் ஹர்த்தால் ஏற்பாட்டை சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் செய்திருக்கக் கூடும்....என்ற சந்தேகங்கள் இல்லாமில்லை.... அவ்வாறு இராணுவ எண்ணிக்கை குறைக்கப்பட்டால், தமது போராட்டமே காரணம் என காணிப்பித்து தமிழரசுக் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கமாகவும் அது இருக்கலாம். ஆனால், இராணுவ எண்ணிக்கை குறைப்பிற்கு அநுர அரசாங்கம் தயாராக இல்லை என்பதை சமீபகால அணுகுமுறைகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இப் பின்புலத்தோடு---- 2015 ஆம் ஆண்டு ரணில் - மைத்திரி அரசாங்கத்துக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து இலங்கையை பிணை எடுத்தது சம்பந்தன் தலைமையிலான அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும். இந்த ஞாபகப்படுத்தலின் பிரகாரம் ---- முல்லைத்தீவு இராணுவ முகாமுக்குச் சென்ற ஐந்து இளைஞர்கள் தாக்கப்பட்டு ஒருவர் மரணித்தமைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியதற்கு யார் பொறுப்பு என சிந்திக்க வேண்டும்! ஏனெனில் 2015 இல்தான் இராணுவ முகாம் விஸ்தரிப்பு - காணி அபகிரிப்பு- புத்த கோவில் கட்டும் நகர்வுகள் போன்ற ஆக்கிரமிப்புகள் சட்ட ரீதியாக மாற்றப்பட்டன. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட அரச திணைக்களங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் இன்றுவரை முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே ----- 2015 இல் இழைத்த இக் குற்றத்துக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்டாலும், வரலாறு மன்னிக்காது. இயற்கை நீதி பதில் சொல்லும். ஹர்த்தால் நடத்தி சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல், இராணுவ எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் தொடர்பாக கொழும்பில் உள்ள ஐஎம்எப் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பது பற்றிச் சிந்திப்பதே சிறந்த பரிகாரம். இராணுவ எண்ணிக்கை குறைப்பு பரிந்துரை தமிழர்களுக்கானது அல்ல. இலங்கையின் பொருளாதார நெருக்கடி மீட்சிக்கானது. இருந்தாலும், அழுத்தம் கொடுத்து குறைந்த பட்சம் இராணுவ எண்ணிக்கை குறைக்கும் பணியையாவது உருப்படியாக செய்ய வேண்டும். அத்துடன், ஜெனீவா மனித உரிமை சபைக்கு எழுத்து மூலம் உடனடியாகவும் கூட்டாகவும் அறிவிக்கவும் வேண்டும். மாறாக... இது இன அழிப்பு என்று தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் போலியாகக் கருத்துச் சொல்லி, கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் வியூகங்களை வகுக்க வேண்டாம். இப் பிழையான அரசியல் உத்திகள் ஊடே சர்வதேசச் சட்டங்கள், புவிசார் அரசியல் தன்மைகளை அறிந்து அதன் ஊடாக காய் நகர்த்தும் இராஜதந்திர முறைமை, 2009 இற்குப் பின்னர் தமிழ்த் தரப்பிடம் அற்றுப் போயுள்ளது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றம் என்பதன் ஊடாக தமிழ் மரபு அடையாள அழிப்பு நடவடிக்கைகள் வெவ்வேறு வடிவங்களில் 2009 இற்குப் பின்னரும் அரங்கேறுவதற்கு இதுவே காரண - காரியம் என்பதும் பட்டவர்த்தனம். ஆனால் இயற்கை நீதியும் மக்களின் சமகால பட்டறிவு - உணர்வுடன் கூடிய புரிதல்களும் பலருடைய வாக்கு வங்கிச் சரிவை ஏற்படுத்தும் என்பது கண்கூடு... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid033Brh5tG5HfTNqrkELWcoZy3LPn39sDRg411GtATRu2PzgKsDEEy7EivmTZLyB53il/?