விமர்சனம் : கூலி! 14 Aug 2025, 5:18 PM எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘கூலி’? ’ஆயிரம் கோடி வசூலை நிச்சயம் தமிழ் திரையுலகில் இருந்து நிகழ்த்தும்’ என்ற எதிர்பார்ப்பைப் பெருக்கியது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் உருவான ‘கூலி’. அனிருத்தின் இசை, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு மற்றும் சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், நாகார்ஜுனா, அமீர்கான், ஷ்ருதிஹாசனின் இருப்பு எனப் பல அம்சங்கள் அதற்குத் துணை நின்றன. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘கூலி’, இன்று (ஆகஸ்ட் 14) தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ‘கூலி’ எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவானது? பழிக்குப் பழி! விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடத்தல் வேலைகளைச் செய்து வருகிறார் சைமன் (நாகார்ஜுனா). அவரிடத்தில் வேலை செய்யும் கூலியாட்களில் காவல் துறையைச் சேர்ந்த உளவாளிகள் இருப்பதாகத் தகவல் தெரியும்போதெல்லாம், அவர்களைக் கண்டறிந்து கொடூரமாகக் கொல்கிறார் அடியாள் தயாள் (சௌஃபின் ஷாஹிர்). ஒருநாள் தங்கள் தொழிலுக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாதவரான ராஜசேகர் (சத்யராஜ்) என்பவரை நாடுகிறது சைமன் கும்பல். அதனைச் செய்யாவிட்டால், அவரது மூன்று மகள்களையும் கொலை செய்வதாக மிரட்டுகிறது. அதனால், வேறு வழியில்லாமல் அவர்கள் செய்கிற குற்றங்களுக்குத் துணையாக இருக்கிறார் ராஜசேகர். இந்த நிலையில், திடீரென்று ராஜசேகர் மரணமடைகிறார். இந்தத் தகவல் சென்னையில் இருக்கும் அவரது உயிர் நண்பரான தேவாவுக்குத் தெரிய வருகிறது. ராஜசேகரின் இறுதிச்சடங்குகளில் தேவா கலந்துகொள்வதை, அவரது மூத்த மகள் ப்ரீத்தி ஏற்கவில்லை. ‘நீங்க ஏன் இங்க வந்தீங்க’ என்று அவரை விரட்டுகிறார். ஆனால், அதே தேவா ப்ரீத்திக்கு உதவிக்கரம் நீட்டுகிற சூழல் உருவாகிறது. ராஜசேகர் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மையைக் கண்டறிகிறார் தேவா. அவர் சைமனிடத்தில் வேலை செய்தார் என்பதை அறிந்து, ப்ரீத்தி உடன் துறைமுகத்திற்குச் செல்கிறார். அங்கு தயாளின் இன்னொரு முகம் அவருக்குத் தெரிய வருகிறது. அதன்பிறகு என்ன ஆனது? நண்பனைக் கொன்றவரைத் தேவா கண்டறிந்தாரா? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கூலி’யின் மீதி. ’நண்பனைக் கொன்றவரைப் பழி வாங்காமல் விட மாட்டேன்’ என்று எதிரியின் கோட்டைக்குள் நுழைகிற ஒரு ஐம்பது ப்ளஸ்களில் இருக்கிற ஒரு ‘முன்னாள்’ கூலியின் ‘ஆக்ஷன் எபிசோடு’ தான் இப்படத்தின் ஆதார மையம். பெரிதாக பஞ்ச் டயலாக்குகள், ஹீரோவுக்கான காதல் காட்சிகள், காமெடி ட்ரூப் கலாட்டாக்கள் இல்லாமல், சீரியசாக கதை சொல்கிற பாணியில் இப்படத்தின் காட்சியாக்கத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆக்ஷன் படம் எனில் சஸ்பென்ஸ் அல்லது சர்ப்ரைஸ் ஆகச் சில விஷயங்கள் சொல்லப்படும். இதிலும் அப்படியொரு விஷயம் இருக்கிறது. அது ‘ஊமை விழிகள்’, ‘எல்லாமே என் காதலி’, ‘காக்கிசட்டை’ எனப் பல படங்களில் நாம் பார்த்ததுதான்.. படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கவும் அதுவே காரணமாக உள்ளது. ரஜினியின் ‘கெட்டப்’! வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்களில் காட்சியாக்கம் ‘புதிதாக ஏதோ ஒன்றை’க் கண்ட உணர்வை ஏற்படுத்தும். விஎஃப்எக்ஸும் டிஐயும் அதில் முக்கியப் பங்கு வகிக்கும். இதிலும் அப்படியே. ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், தயாரிப்பு வடிவமைப்பாளர் சதிஸ்குமார், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அதனைச் சாதித்திருக்கிறது. அனிருத்தின் இசையில் ‘சிக்குடு’, ‘மோனிகா’ பாடல்கள் எளிதாக ஈர்க்கின்றன. பின்னணி இசை சில காட்சிகளில் பிரமாண்டத்தை உணர வைக்கிறது; ஆனாலும் பல இடங்களில் இரைச்சல் அதிகம். இப்படத்தின் எழுத்தாக்கத்தைச் சந்துரு அன்பழகனோடு இணைந்து கையாண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படத்திலும் கிளாசிக் திரையிசைப் பாடல்களைப் புகுத்துகிற வேலையைச் செய்திருக்கிறார் இயக்குனர். ‘வா வா பக்கம் வா’ என ‘தங்கமகன்’ படத்தின் பாடல் ஒலிக்கிற அந்த இடைவேளைக்கு முன்பான காட்சி மண்டைக்குள் ‘ஜிவ்வ்..’வென்ற உணர்வை ஏற்படுத்துகிறது. போலவே, இடைவேளை ‘ப்ளாக்’கில் ரஜினியின் ஸ்டைலான நடிப்பு அசத்தல். அதேநேரத்தில், ‘இதேமாதிரி படம் முழுக்க விஷயங்களைக் கொட்டினா இன்னாவாம்’ என்று ரசிகர்கள் புலம்புகிற வகையில் இதர காட்சிகள் இருக்கின்றன. அந்த காட்சிகளைக் காண்கிறபோது வேறு கதாசிரியர்கள், திரைக்கதையாசிரியர்களின் பங்களிப்பைப் பெறலாமே என்ற எண்ணம் மனதில் விஸ்வரூபம் எடுக்கிறது. நட்சத்திர அந்தஸ்து உள்ள நாயகர்களைத் திரையில் காட்டுகிறபோது, முந்தைய படங்களில் அவர்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்த விஷயங்களையும் தொட்டுச் சென்றாக வேண்டும். அதோடு தனது கதை சொல்லலையும் இணைத்து சமநிலையை உருவாக்குவதில் தடுமாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணியில் இருக்கிற ஒரு நாயகனாக ரஜினியின் ஸ்டைல், ஆக்ஷன் பில்டப் எல்லாம் வழக்கமானதாக அமைந்திருக்கின்றன. அவற்றைத் தாண்டி, மிகச்சில இடங்களில் அவரது நடிப்பு சிரிக்க வைக்கிறது. ஒரு ‘பவர்ஹவுஸ்’ ஆக படத்தைத் தாங்கி நிற்கிறது. இந்த படத்தில் வில்லன்கள் என்று சிலர் வந்து போகின்றனர். அவர்களில் இயக்குனர் முதன்மையாக முன்னிறுத்துவது ‘கிங்’ என்று தெலுங்கு சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் நாகார்ஜுனா. ஆனால், அவர் சண்டையிடும்போது ‘வில்லனாக’ நம் கண்களுக்கு தெரிவதே இல்லை. அது இப்படத்தின் தலையாய ‘மைனஸ்’களில் ஒன்று. தனது இருப்பால் அந்தக் குறையைச் சமன் செய்திருக்கிறார் மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர். ‘தயாள்’ ஆக வந்து மிரட்டியிருக்கிறார். ரக்ஷிதா ராம், கண்ணா ரவி வருகிற காட்சிகள் புதிதாக இல்லை; அதேநேரத்தில், அவை சில ரசிகர்களை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்குகின்றன என்பதை மறுக்க முடியாது. சத்யராஜுக்கு இதில் பெரிதாகக் காட்சிகள் இல்லை. அதேநேரத்தில், கதையின் அச்சாணிப் பாத்திரமாக வந்து போயிருக்கிறார். ஷ்ருதிஹாசன் இப்படத்தில் ஆங்காங்கே வருகிறார். அவரது சோகமே உருவான பாவனைகள் நம்மை அயர்ச்சியுறச் செய்கின்றன. உபேந்திரா, அமீர்கான் இருவரும் ‘கேமியோ’வாக வந்து ‘கைத்தட்டல்’களை அள்ள முயற்சித்திருக்கின்றனர். இரண்டாமவர் அதனை எளிதாகச் சாதித்திருக்கிறார். இதுபோக மகேஷ் மஞ்ச்ரேகர், சார்லி, பாபுராஜ், காளி வெங்கட், தமிழ், ரிஷிகாந்த், திலீபன், ரொபா மோனிகா, மோனிஷா ப்ளெஸ்ஸி, மாறன் எனச் சிலர் இப்படத்தில் உண்டு. அவர்களது காட்சிகளில் பெரிதாக அதிருப்தி இல்லை. அதேநேரத்தில், அவர்களில் பலருக்குத் தனித்துவமான பாத்திர வார்ப்பு அமையாதது ‘மைனஸ்’ தான். ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்திய ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் அதிகமாக இடம்பெறாதது, ரஜினி – சத்யராஜ் நட்பு பிணைப்பைத் திறம்படக் காட்டாதது, இதற்கு முன்பான ‘லோ.க.’ படங்களில் உள்ள சில விஷயங்கள் இதிலும் ‘ரிப்பீட்’ ஆகியிருப்பது என ‘கூலி’யில் சில குறைகளைப் பட்டியலிட முடியும். அவற்றைக் கடந்து ‘ஓகே’ எனும்படியான திரையனுபவத்தைத் தருகிறது இப்படம். ’ஆஹா..’, ‘ஓஹோ..’ எனப் புகழும்படியாக ‘கூலி’யை உருவாக்கியிருந்தால், ரஜினியின் ஐம்பதாண்டு காலத் திரைப் பங்களிப்பை இன்னும் ‘அபாரமாக’ கொண்டாடலாம்.. அந்த வாய்ப்பினைத் தவறவிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே சொன்னது போல, ‘ஆயிரம் கோடி வசூல்’ இலக்கை எட்டுகிற ரேஸில் ‘கூலி’ அடைகிற இடம் என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஒருவேளை அந்த இலக்கு இல்லாமல் களமிறங்கியிருந்தால் கூட வெற்றி எளிதாக வாய்த்திருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது இப்படம் தருகிற திரையனுபவம்..! https://minnambalam.com/rajinikanth-coolie-movie-review/