Ribeiro என்னுடைய நண்பன். போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவன். ஒரு சிறிய பயண நிறுவனத்தை நடத்தி வந்தான். தொண்ணூறுகளில் நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த போதெல்லாம் என்னுடைய விமானச் சீட்டுகளை அவன்தான் ஒழுங்குபடுத்தித் தந்தவன். முதல் முறை எனக்கான விமானச்சீட்டை ஏற்பாடு செய்யும் போது, என் நீண்ட பெயரைப் பதிவதில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதற்குச் சிரமம்? என்று நினைத்து, என் பாஸ்போர்ட்டை அவனிடம் நீட்டினேன். அதை வாங்கிப் பார்த்தவுடன் அவன் சொன்னான், “நீ பிறந்த இடம் Point-Pedro அல்லவா? அந்தப் பகுதியில் 'பேட்ரோ' என்னும் போர்த்துக்கல் ஆளுநர் ஒருவர் இருந்துள்ளார்” என்றான். நான் சற்றே ஆச்சரியத்துடன், “என் ஊரைப் பற்றிய விபரம் உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அதற்கு அவன், “'பேட்ரோ' என்பது போர்த்துக்கீஸிஸ், ஆங்கிலத்தில் ‘பீற்றர்’, டொச்சில் ‘பேற்றர்’” என்றான். என்னுடைய சொந்த ஊரின் பெயரில் போதுமான வரலாறு இருப்பதை நான் அதுவரை அறியாதிருந்ததை உணர்ந்தேன். அந்த நிமிஷத்தில் என்னுள் ஒரு விருப்பம் பிறந்தது, ஒரு தடவை போர்த்துக்கலுக்குப் போக வேண்டும் என்று. பல நாடுகளுக்குப் பயணித்திருந்தும், போர்த்துக்கல் மட்டும் எப்போதும் சாத்தியப்படவில்லை. ஆனால் கடந்த வருடம், இந்த வருடக் கோடைகாலத்தில் போர்த்துக்கலுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தேன். அந்த முடிவே இந்தப் பயணத்திற்கு வழிவகுத்தது. பயண நகரமாக போர்ட்டோ (Porto)வைத் தேர்ந்தெடுத்தேன். பறப்பதற்கு நேரம் 2 மணி 45 நிமிடங்கள் மட்டுமே. போர்ட்டோவிற்கு வந்ததும், உயரமாக வளர்ந்த மரங்களும், பழமையான கட்டிடங்களும்தான் முதலில் கண்களில் பட்டன. எங்கள் ஊரிலுள்ள பூவரச மரங்களின் உயரத்துக்கு இங்கு சிதம்பரத்தை மரங்கள் வளர்ந்து, பூத்து அழகாக நின்றன. சில இடங்களில் பனைமரங்களும் திமிராக நிமிர்ந்து நின்றன. வீதிகளில் நடக்கும்போது, அந்த நகர அமைப்பு எனக்கு கொழும்பு நகரத்தை நினைவூட்டியது. போர்ட்டோவில் இருந்த நாட்களில், இறைச்சி உணவுகளைத் தவிர்த்து, மீன்களை மட்டுமே சாப்பிடுவது எனத் தீர்மானித்தேன். அதில் என்னை மிகவும் கவர்ந்தது Corvina என்ற மீன். இவ்வளவு காலமும் நான் சாப்பிட்ட மீன்களில் இல்லாத ஒரு தனிச் சுவை அந்த மீனில் இருந்தது. ஏன் இந்த மீன் யேர்மனியில் கிடைக்கவில்லை என அறிய இணையத்தில் தேடியபோது, “Meerrabe” அல்லது “Koenigs-Corvina” என்ற பெயர்கள் வந்தன. ஆனால் சந்தைகளில் கிடைக்கவில்லை. தமிழில் அதன் பெயரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இனிமேல் மீண்டும் இந்த மீனைச் சாப்பிட விரும்பினால், போர்த்துக்கலுக்குத்தான் போக வேண்டும் போலிருக்கிறது. Corvina மீனை “போர்த்துக்கல் மீன்” என்றொரு பெயரிலும் அழைப்பார்கள் என்று தெரிந்தது. பழமையான கட்டிடங்கள், கல்வி நிறுவனங்களால் நிரம்பிய தெருக்கள்... என்றிருந்த இந் நகரத்தின் மத்தியில் Livraria Lello என்ற ஒரு பிரபலமான சிறிய புத்தகக் கடை இருந்தது. 1906ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தக் கடை, இன்று “உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கடைக்குள் செல்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். கடையின் வெளியே நீண்ட வரிசை. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை, ஒவ்வொரு வரிசையாக உள்ளே அனுமதிக்கின்றனர். வரிசையில் நின்றபோது, காலநிலை பாதுகாப்பிற்காக சிவப்புக் குடைகள் கொடுக்கப்பட்டன. எனக்கு முன்னால் ஒரு யேர்மனியக் குடும்பம், இரண்டு பிள்ளைகளுடன் வரிசையில் நின்றனர். அவர்கள் பேசுபவை காதில் விழுந்தன. “முன்பு கடைக்குள் செல்ல இரண்டு யூரோக்கள் மட்டும் கொடுக்க வேண்டியிருந்தது. பின்னர் ஐந்து யூரோக்கள் ஆகி, கொரோனாவுக்குப் பிறகு பத்து யூரோக்கள் ஆகிவிட்டது. ஆனால் உள்ளே புத்தகம் வாங்கினால் அந்தப் பத்து யூரோக்கள் கழிக்கப்படும். இல்லையெனில், அவர்களுக்குப் பத்து யூரோக்கள், எங்களுக்குத் திரும்ப வெறும் கைகள்தான்!” புத்தகக் கடைக்குள் சென்றபோது, என்னை மிகவும் கவர்ந்தது, நடுப்பகுதியில் இடது, வலது என இரண்டாகப் பிரிந்து வளைந்து செல்லும் சிவப்பு மரப் படிக்கட்டுகள். மேல்தளத்திலுள்ள வண்ணக் கண்ணாடிகள், அவற்றில் வரும் இயற்கை ஒளி, கடையை ஒரு கலை அரங்கமாக மாற்றிக் கொண்டிருந்தது. இந்தக் கடையை, ஹரி போட்டர் புத்தகத் தொடர் எழுத்தாளர் J.K. Rowling, போர்ட்டோவில் தங்கி இருந்த போது பார்வையிட்டதாகக் கூறுகிறார்கள். இந்தக் கடையின் சூழலும் படிக்கட்டுகளும் தான் ஹரி போட்டர் கதையில் இடம் பிடித்திருக்கும் ஹோக்வோர்ட்ஸ் பள்ளியின் வடிவமைப்புக்கு உந்துதலாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஒரு காரணம்தான், ஹரி போட்டர் ரசிகர்களையும், உலகளாவிய பயணிகளையும் இங்கே இழுத்து வருகிறது. என் முன்னால் நின்ற யேர்மனியப் பிள்ளைகளும் ஹரி போட்டர் ரசிகர்களாகவே எனக்குத் தெரிந்தார்கள். கடைக்குள் பல மொழிகளில் நூல்கள் இருந்தன. தமிழ் புத்தகங்கள் ஏதாவது இருக்குமா என்று தேடினேன். நீண்ட புத்தக அலுமாரியின் ஒரு பகுதியில் “Asian Literature” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் சீன, ஜப்பான், கொரிய எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமே இருந்தன. தமிழ் நூல்கள் எதுவுமே இருக்கவில்லை. “திருக்குறளை என்றாலும் வைத்திருக்கலாமே” என்ற ஏமாற்றம் மனதில் தோன்றியது. Livraria Lello–வில் நான் எதையும் வாங்கவில்லை. ஆனால் வாசிப்பு என்பது எல்லா மொழிகளிலும் ஒரு கலை என்பது தெளிவானது. உலகின் அழகான புத்தகக் கடைகளில் ஒன்றான இந்தக் கடை, உண்மையிலேயே ஒரு வாசகப் பூங்காதான்.