சமாதானத்துக்கான நோபல் பரிசு sudumanal 2025 இன் சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரீனா மஹாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “ஏழு போர்களை நிறுத்தி, பல இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியவன் நான். நானே சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன்” என ட்றம்ப் எடுத்த தன்முயற்சியெல்லாம் வீணாகிப் போனது. நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரீனா “இப் பரிசை ட்றம்பினை கௌரவப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன். ட்றம் அதற்குத் தகுதியானவர்” என அறிவித்தார். இதை தன்னிடம் அவர் சொன்னதாக ட்றம்ப் சொல்லிவிட்டு, அத்தோடு சேர்த்து ஒன்றை நகைச்சுவையின் நிழலினுள் நின்று சொன்னார். “அவர் இப்படி என்னிடம் சொன்னபோது, அப்படியாயின் அந்தப் பரிசை என்னிடம் தந்துவிடு என நான் சொல்லவில்லை” என்றார். இந்த நிழலினுள் அவர் வெளிச்சமிடுவது மரியா கொரீனா தன்னைவிட தகுதியில்லாதவர் என்பதையே என சந்தேகப்பட இடமிருக்கிறது. யார் இந்த மரியா கொரீனா. வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர். தீவிர வலதுசாரி. ஆட்சியதிகாரக் கனவில் இருப்பவர். இவர் வெனிசுவேலாவின் பெரும் முதலாளியொருவரின் மகள். பொறியியல்துறை பயின்றாலும் தந்தையைப் போலவே பெரு முதலாளியாக இருக்கிறார். பெரும் எண்ணைவளம் கொண்ட நாடு வெனிசுவேலா. வெனிசுவேலாவின் நாயகனாகத் திகழ்ந்த சாவேஸ் ஏகாதிபத்தியங்களின் -குறிப்பாக அமெரிக்காவின்- சுரண்டலிலிருந்து தனது நாட்டின் எண்ணை வளத்தை தடாலடியாக மீட்டு எடுத்தவர். அமெரிக்கக் கம்பனிகள் வெனிசுவேலா எண்ணைவள நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கிடைத்த -நாட்டுக்கு சொந்தமான- இலாபத்தை மக்கள் நல அரசுக் கட்டமைப்புக்குள் திசைதிருப்பியவர். அதேநேரம் மரியா கொரீனா அமெரிக்காவால் இரண்டு தசாப்தங்களாக நிதியளிக்கப்பட்டு வெனிசுவேலா அரசினை கவிழ்க்க ஊக்குவிக்கப்பட்டவர். வெனிசுவேலா அரசை சர்வதேச ரீதியான கடுமையான அச்சுறுத்தலாலேயே அகற்ற முடியும் எனவும் அதற்கான சக்திகளாக அமெரிக்காவையும் இஸ்ரேலையும் தனது நாட்டின்மீது தாக்குதல் தொடுக்க அழைத்தவர். அதேபோல வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையை ஆதரித்ததின் மூலம் பலரது பட்டினி மரணத்துக்கு ஆதரவாக இருந்தவர். சாவேஸ் க்கு எதிராக இருந்து விமர்சித்தவர் மரியா கொரீனா. 2013 இல் சாவேஸ் இறந்தபின், இப்போதைய தலைவர் மடுரோ தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டு சாவேஸ் வழியில் ஆட்சியைத் தொடங்கினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூட்டாளியாக மரியா கொரீனாவும் அவரது கட்சியான “வென்ரே வெனிசுவேலா” உம் செயற்பட்டனர். நெத்தன்யாகுவின் “லிக்குவிட்” கட்சியோடு அவர்கள் கூட்டு ஒப்பந்தமொன்றும் செய்துகொண்டார்கள். “அரசியல் ரீதியிலும் கொள்கை ரீதியிலும் தமது கூட்டு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, பூகோள அரசியல் ரீதியிலும் பாதுகாப்பு அடிப்படையிலும் அது அமைந்துள்ளது” என்றனர் அவர்கள்!. அதை அவர்கள் “கூட்டு நடவடிக்கை” என வேறு அறிவித்தனர் இதனடிப்படையிலேயே வெனிசுவேலாவில் ‘சுதந்திரத்தை மீட்க’ இஸ்ரேல் உதவ வேண்டும் என நெத்தன்யாகுவுக்கு அழைப்பு விடுத்தனர். காஸா இனப்படுகொலையைக்கூட அவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக நெத்தன்யாகுவின் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர், மரியா கொரீனாவும் அவரது கட்சியும்!. தான் வெனிசுவேலாவின் தலைவராக வந்தால் இஸ்ரேலின் ரெல் அவீவ் இலுள்ள வெனிசுவேலா தூதரகத்தை ஜெரூசலேமுக்கு மாற்றுவேன் என்று வேறு சூளுரைத்தார் அவர். அமைதிக்கான நோபல் பரிசின் சூட்சுமம் இங்குதான் புதைந்திருக்கிறது. வெனிசுவேலாவில் சுதந்திரத்தை மீட்க, அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளிகளையும் உள்ளே அழைத்து, மீண்டும் சுரண்டவிட்டு, தானும் சுரண்டி, தமது செல்வத்தைப் பெருக்க விளையும் அவரது குரலிற்கு அங்கீகாரம் கொடுத்து, வெனிசுவேலாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சூழ்ச்சி நிறைந்தது, இந்தப் பரிசு அறிவிப்பு!. கம்யூனிசமே நிலவாத இந்த உலகில் வெனிசுவேலாவில் கம்யூனிசத்தை அகற்றி ஜனநாயகத்தை மலர்விக்க வேண்டும் என்ற மேற்குலகின் கதையாடலானது தமது சுரண்டலை தொடர பாவிக்கும் லைசன்ஸ். அதற்கான கதவைத் திறக்க போராடுபவர் மரியா கொரீனா. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது, “நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். கடவுளே, என்னால் நம்பவே முடியவில்லை” என்றார் மரியா கொரீனா. அவரே தான் அதற்குத் தகுதியில்லாதவர் என்பதை இந்த வார்த்தைகளில் உளறியிருக்கிறார். ட்றம்புக்கு தான் அதை சமர்ப்பிப்பதாக வேறு சொன்னார். பூகோள அரசியல் புகுந்து வீசும் இடைவெளி சமாதானத்துக்கான நோபல் பரிசையும் விட்டுவைக்கவில்லை என்பது தொடர் வரலாறு. கடந்த காலங்களில் சமாதானத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட பலரின் மீதும் இந்த நச்சுக் காற்று புகுந்துவிளையாடவே செய்தது. தனது பதவிக் காலத்தில் ஒரேநேரத்தில் ஆறு போர்களைச் செய்த ஒபாமாவுக்கு 2009 இல் நோபல் பரிசு கிடைத்தது. தலிபான் ஏகாதபத்தியங்களின் எதிரியாக மாறியபோது, தலிபான்களால் சுடப்பட்ட பதினேழே வயதான மலாலா யூசாப்சை (Malala Yousafzai ) கல்விப் புரட்சி செய்ததாக ஒரு கதையாடலை உருவாக்கி நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதேகாலத்தில் கல்விக்காக அதிகமும் தலைமறைவாக இருந்து உழைத்த மலாலா ஜோயா ( Malala Joya) இருட்டடிப்புச் செய்யப்பட்டார். ஏனெனில் அவர் சோவியத் யூனியன் மற்றும் தலிபான்களுக்கு மட்டுமல்ல, மேற்குலகுக்கு எதிராகவும் விமர்சனங்களை முன்வைத்தார். (article Malala Joya) நோபல் பரிசை வென்ற இளம் மலாலா இப்போதைய காஸா இனப்படுகொலை குறித்து மனிதாபிமான பெறுமதிக்கு அப்பால் சென்று பேசவில்லை. மேற்குலகின் தயாரிப்பான அவர் அரசியல் ரீதியில் மேற்குலகை செல்லமாகத்தன்னும் தீண்டாத வார்த்தைகளை உதிர்க்கிறார். நெத்தன்யாகுவையும் இஸ்ரேலையும் மட்டும் விமர்சித்து நழுவிவிடுகிறார். மியன்மாரின் ஜனநாயகப் புரட்சியாளர் என கதையாடப்பட்டு 1991 இல் நோபல் பரிசைப் பெற்றவர் Aung San Suu Kyi அவர்கள்!. அவரது நிழல் ஆட்சியில், மியன்மார் இராணுவத்தால் றொகிங்கா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இனவழிப்பாக ஐநாவால் கூட சுட்டப்பட்ட கொடுமையான நிகழ்வை அவர் விமர்சிக்கவோ, அதற்கெதிராக குரல் கொடுக்கவோ நடவடிக்கை எடுக்கவோ இல்லை. எரித்திரியாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவந்தார் என 2019 இல் எத்தியோப்பிய பிரதமர் Abiy Ahmed அவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2020 இல் அவர் எத்தியோப்பியாவின் வட பகுியிலுள்ள Tigray மக்கள் மீது போர் தொடுத்து இனச்சுத்திகரிப்பு செய்து இரண்டு மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்தார். வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் என கென்றி கிஸிங்கருக்கு 1973 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நிக்சனின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கிஸிங்கர் 500’000 தொன் குண்டுகளை லாவோஸ் மற்றும் கம்போடியா மீது விசியவர். ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் மக்களை கொன்றவர். வியட்நாம் புரட்சிப் படைகளின் தடவழியாக அவை இருந்ததாலும், ‘கம்யூனிசத்தின்’ பரவலாக்கலை தடுப்பதற்காகவும் அப்போது மேற்குலகின் சார்புநிலை கொண்ட கம்போடிய ஆட்சியை தக்கவைக்கவுமாக இந்த ‘காப்பெற்’ குண்டுவீச்சு நடத்தப்பட்டது. அதன் சூத்திரதாரியான கிஸிங்கர் நோபல் பரிசை வென்றார். இதுதான் சமாதானத்துக்கான நோபல் பரிசு -பெரும்பாலான சந்தர்ப்பங்களில்- நடந்து சென்று கொண்டிருக்கிற வழித்தடம். இதை ட்றம்ப் அறியாமலில்லை. மிக இலகுவான ஒரு கேள்வியால் அவர் கேட்கிறார். “அப்படி ஒபாமா என்னத்தைக் கிழிச்சார் நோபல் பரிசைப் பெற” என. உண்மைதான். நாம் ட்றம்ப் இன் கோரிக்கையை இந்த வழித்தடத்துக்கு வெளியே வைத்து நோக்கி, சமாதானத்துக்கான நோபல் பரிசினை புனிதப்படுத்தும் மனநிலையோடுதான் ட்றம்ப் அவர்களை (நான் உட்பட) கேலிசெய்கிறோமா என்று யோசிக்க வைக்கிறது. இந்த சமாதானத்துக்கான நோபல் பரிசின் வரலாற்றைப் பார்த்தால் ட்றம்புக்கு ஏன் அந்த ஆசை வரக் கூடாது! ravindran.pa https://sudumanal.com/2025/10/11/சமாதானத்துக்கான-நோபல்-பர/