Mantras and Miracles · Suivre ersotnSopd2brh951 n1924e7fl2m02l9cuh 1gm6e5vft08t6i,of9c:262 · அஹோபிலம் மடத்தில் அழுத முஸ்லீம் மூதாட்டி! நேரம் மாலை மணி 5 இருக்கலாம். தஞ்சை ஜில்லா மாயவரம் பக்கத்தில் உள்ள தேரழுந்தூர் அக்ரஹாரம் , அஹோபில மடத்தின் வாசல் திண்ணையில் நடந்தது இந்த சம்பாஷணை. ஊரில் இருந்த ஒரே அக்ரஹாரத்தில் மிச்சம் மீதி இருந்த நான்கைந்து பிராமண குடும்பத்தில் ஒன்று அஹோபில மடத்தின் இந்தக் கிளை. 600 ஆண்டுகளுக்கு முன் ஆந்திரத்தில் அஹோபில மலையில் துவங்கிய இந்த மடம், ஒரு காலத்தில் விண்ணைப்பிளக்கும் வேத பாராயணம் விழாக்கள் மற்றும் நான்கு வீதி முழுதும் நிறைந்திருக்கும் பெரிய பெரிய பிராமண அய்யங்கார் வீடுகள் என்று கல கலப்பாக இருந்தது . இன்று அக்ரஹாரங்கள் முஸ்லிம் மயமாகி மசூதிகளில் பாங்கு சொல்லும் சத்தங்கள் மற்றும் அக்ரஹார திண்ணைகளில் முஸ்லிம் சிறுவர்கள் குரான் ஓதும் சத்தமும் கேட்கிறது ! சில ஆயிரம் மைல் தொலைவில் உள்ள தேரழுந்தூரில் ஒரு கிளை கொண்டுள்ளது இந்த அஹோபில மடம் .கருங்கல் மண்டபங்கள் கொண்ட இந்த மடத்தில் ஊரில் உற்சவம் என்றால் மட்டும் மடத்தை சேர்ந்த வைஷ்ணவ அய்யங்கார் வகுப்பை சேர்ந்த மக்கள் கூடுவர். வெளி ஊர்களில் இருந்து அந்த ஊரிலிருந்து சென்று விட்டவர்கள் , அங்கு தங்கி ஊர் வேலை செய்வர். ஆமருவிப் பெருமாள் கோவில் உற்சவம் தான் என்றாலும் உற்சவங்கள் அஹோபில மடத்தின் திண்ணையில் இருந்தே பெரியவர் களால் தீர்மானிக்கப்படும், கணக்கு வழக்குகள் சரி பார்க்கப்படும். இது சில நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. பல நூறு ஆண்டு காலக் கோவிலுக்கும், மடத்துக்கும் வருமானம் இல்லையா ? என்று பல முறை பலர் கேட்டதுண்டு. நாற்பது வேலி நிலம் உள்ளது பெருமாளுக்கு. சொந்தமாக நிலங்கள் ஆனாலும் அவர் பக்தர்களை நம்பியே உள்ளார் என்றால் நம்பவா முடிகிறது ? ஆனால் அதுதான் தமிழகக் கோவில்களில் பலவற்றின் நிதர்ஸனம். மடம் கோவில் சார்ந்தது அல்ல. இதற்கும் சில நில புலன்கள் உண்டு. ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை. வெளியூர் வாசிகள் போவதோ ஒரு வாரம். கோவில் வேலைகள் செய்து விட்டு பிழைப்பு வேண்டி வெளியூர் செல்ல வேண்டும். ஒரு வாரத்தில் நில அளவைகள் செய்ய முடியாது.அவை எங்குள்ளது என்று தேட அவகாசம் இல்லை! ஒரு நாள் கணக வழக்கு சரிபார்க்க சில மட ஊழியர்கள் ரஸீதுகளைத் துழாவிக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குரல் கேட்டது. ‘சாமி, இங்கெ கொஞ்சம் வரீங்களா ?’, என்றது அந்தக் குரல். தூரத்தில் இருந்து பார்த்த போது வெள்ளை துப்பட்டி முக்காடு போட்ட வயதான் பெண் போல் தெரிந்தது. வாசலில் ,வந்திருந்தது 75 வயது மதிக்கத் தக்க முஸ்லீம் பெண்மணி. மடத்தில் இந்த அம்மாளுக்கு என்ன வேலை என்று யோசித்தபடியே மற்றவர்கள் நிமிர்ந்து பார்த்தால் அந்த பெண்மணி, ‘சாமி, பெரியவங்க யாராது இருக்காகளா ?’, என்றார் அவர். மடத்தில் ஒரு பெரியவர் யாரென்று கேட்டபடியே வந்தார். ‘யாரும்மா நீ?’, என்று கேட்டார். ‘மடத்து ஐயா நீங்க தானே, கொஞ்சம் பேசணும்’, என்றார். வாசல் திண்னையில் அமர்ந்தார். மடத்தின் உள்ளே இருந்து சில வயதான பிராமணர்கள் எட்டிப் பார்த்தனர். அவர்கள் அனைவரும் ஸேவார்த்திகள். உற்சவத்திற்காக வந்திருந்தனர். ‘சாமீ, முடியலெ சாமீ’, என்று அழ ஆரம்பித்தார் அந்த அம்மாள். மடத்தில் உள்ளவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்னன்னு சொல்லும்மா. யாராவது ஏதாவுது சொன்னங்களா ?’, என்று கவலையுடன் கேட்டார் மடத்து பெரியவர் ! ‘அதில்லீங்க. கொஞ்ச நாளா தூக்கமே இல்லீங்க. சொப்பனம் ஒண்ணு வருது. தினம் அதுவே வருது. சிங்கம் ஒண்ணு வந்து மூஞ்சீலெ அறையுது. என்னுது, எங்கிட்டே குடுத்துடுன்னுது. ஒண்ணும் புரியலீங்க’, என்றார் அந்த அம்மாள். மட சிப்பந்திகளுக்கும் ஒன்றும் புரியவில்லை. இந்த அம்மாள் காணும் கனவுகளுக்கும், மடத்துக்கும் என்ன சம்பந்தம் ? ‘சரிம்மா, தூக்க மாத்திரை ஏதாவது போட்டுக்குங்க. நான் என்ன செய்ய முடியும் ?’ என்றார் மடப்பெரியவர் . ‘அப்பிடி சொல்லப் பிடாது சாமி. நம்ம வீட்டுக்கு ஒரு தரம் வரணும் சாமி. இங்கெ பலரு இருக்காங்க, சில விஷயங்கள் இங்கெ சொல்ல தோதுப்படாதுங்க ஐயா’, என்றார் அந்த அம்மாள். யோசிச்சுச் சொல்வதாக பெரியவர் சொன்னார். கோவில் தேர் ஓடி, அதன் பின் புஷ்பப் பல்லாக்கு நடந்து முடிந்தது. உற்சவங்கள் முடிந்தன அன்று கொடி இறக்கப்பட்டது. அன்று இரவு சென்னை செல்ல ரயில் டிக்கெட் எடுத்த வெளியூர் வாசிகளுக்கு 11 மணிக்கு ரயில். 9 மணி அளவில் கிளம்பி வாசலில் வந்து கோபுரம் நோக்கிக் கை கூப்பி னார் மடப் பெரியவர் திரும்பிப்பார்த்தால் எதிரே அந்த முஸ்லிம் அம்மாள். ‘சாமி, வரேன்னு சொன்னீங்களே’, என்றார். அப்போதுதான் அவர்களுக்கும் நினைவு வந்தது. ‘ஊருக்குக் கிளம்பிட்டீங்க போல. பயணம் தொடருங்க. சித்தே அஞ்சு நிமிஷம் திண்ணைலெ அமருங்க’, என்று சொல்லித் தன் கையில் கொண்டுவந்திருந்த ஒரு காகிதச் சுருளை எடுத்துத் திண்ணையில் பரப்பினார். ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார் பெரியவர் .அப்போது அவரே பேசினார். ‘சாமீ, நான் சின்ன புள்ளையா ஒரு 7–8 வயசு இருந்தப்ப எங்க வாப்பா வருஷம் தோறும் ‘மடத்துக் கிரையம்’ன்னு சொல்லி பத்து மூட்ட நெல்லு எடுத்து வெப்பாரு. அவுங்க வாப்பா காலத்துலே ஐயமாருங்க சில பேரு மடத்தும் பேர்ல இருந்த நஞ்சை நாலு ஏக்கரா நிலத்த எங்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்தாங்க. அப்பொலேர்ந்து வருஷம் தவறாம எங்க தாத்தாவும், வாப்பாவும் விளைச்சல்ல நாலுல ஒரு பங்கு மடத்துக்குக் கொடுப்பாங்க. எங்க புருஷங்ககாலத்துல அது மாறிப்போச்சு. இப்போ எனக்கு வயசானப்புறம் இது நினைப்பு வந்துது. ஆனாலும் அப்பிடியே உட்டுட்டேன். ரெண்டு மாசமா தூக்கத்துல சிங்கம் வந்து அறையுது. தூக்கமும் வரல்லே. ரொம்ப யோசிச்சுப் பார்த்தேன். மடத்து வாசல்லெ சிங்கம் முகம் இருக்கற சாமி சிலை தெரிஞ்சுது. பொட்டுல அறஞ்ச மாதிரி இருந்தது. ‘என்னுது என்னுது’ன்னு சிங்கம் சொன்னது இது தான் போலன்னு உங்ககிட்டே அன்னிக்கி வந்தேன். ஆனாலும் பல பேர் இருந்தாங்க. அப்பிடியே போயிட்டேன். தேடிப் பார்த்ததுல, எங்க வாப்பாவோட பெட்டில இந்த பத்திரங்கள் கெடைச்சுது. இது என்னான்னு வக்கீல் ஐயர் கி்ட்டே கேட்டேன். அவுருதான் சொன்னாரு 100 வருஷம் முன்னாடி நடந்த கிரையம் பத்தி. அப்பவே உங்க கிட்டே குடுத்துடணும்னு நெனைச்சேன். பாருங்க, அப்பலேர்ந்து சொப்பனம் நின்னு போச்சு’, என்று கதறிக் கதறி அழுதார் அந்த அம்மாள். பத்திரங்கள் யாவையும் வெள்ளைக்கார அரசாங்கப் பத்திரக் காகிதங்கள். துரைசாமி ஐயங்கார் என்பவர் 1908-ம் வருஷம் ஜனாப் அப்துல் வஹாபுக்குக் குத்தகை கொடுத்த விபரம் இருந்தது. அவர் இந்தப் பாட்டியின் தாத்தா. சுமார் 40 வருடம் குத்தகை நெல் வந்துள்ளது. பின்னர் நின்றுவிட்டது. அஹோபில மடத்தின் வழிபடு தெய்வம் நரசிம்மப் பெருமாள் தன் சொத்தை கனவில் அந்த முஸ்லீம் மூதாட்டிக்கு உணர்த்தி மீட்டுள்ளார் என்று அங்குள்ள மடத்து சிப்பந்திகளுக்கு புரிந்து விட்டது ! இந்த முறை மடத்திலிருந்து ஒருவர் தேரழுந்தூர் சென்றபோது அந்த அம்மாளின் வீட்டைத்தேடிச் சென்றார். அவரது பேரனும் மனைவியும் இருந்தனர். அந்த அம்மாள் பத்திரங்களை ஒப்படைத் தவுடன் மிக நிம்மதியாக இருந்ததாகவும் பின்னர் ஆறு மாதங்கள் கழித்துக் காலமா னதாகவும் சொன்னார்கள். சுவற்றில் தெரிந்த படத்தில் அவரது முகம் சாந்தமாகத் தெரிந்தது. பெருமாள் சொத்து பொல்லாதது ........!