யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் - ஜனாதிபதி Published By: Vishnu 16 Jan, 2026 | 08:49 PM பு.கஜிந்தன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடு வசதி இல்லாமல் வாழும் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க யாழில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (16) வீட்டுத் திட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையாற்றுகையில் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து பல காலங்கள் கடந்தாலும் இன்னும் பூர்த்தியடையாத வீட்டு திட்டங்களை பூர்த்தி செய்யும் முகமாக இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எனவும், வட மாகாண மக்கள் யுத்த காலத்திலும் மற்றும் யுத்த காலத்திற்குப் பிறகும் பல இடப் பெயர்களை சந்தித்துள்ளனர் எனவும், நீண்ட காலமாக சொந்த வீடு இல்லாமல் வாழ்வது இலகுவான விடயம் அல்ல எனவும் தெரிவித்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை பெற்றுக் கொடுப்பதே எமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டும் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், நாட்டில் முதல் முறையாக வட மாகாண மக்கள் நம்பிக்கை செலுத்தக்கூடிய வகையில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், முதலாவதாக மிகவும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எமது அரசாங்கம் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நிவர்த்தி செய்யும் எனவும் தெரிவித்தார். மேலும், வரவு செலவு திட்டத்தின் ஊடாக கல்விக்காக அதிக நிதியை இம்முறை ஒதுக்கியுள்ளதாகவும், மக்களுக்கு ஒரு சிறந்த வருமான வழியை ஏற்படுத்த வேண்டும் எனவும், விசேடமாக யாழ்ப்பாணத்தில் விவசாயத்துறை, சுற்றுலாத்துறை , கடற்றொழிற்துறை மற்றும் சிறு கைத்தொழில் துறை போன்றன இப் பகுதி மக்களுடைய வாழ்வாதாரமாக இருக்கின்றன எனவும், இவ் அனைத்து துறையையும் மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், யுத்த காலத்தில் முரண்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் இனவாதத்துடன் வாழ்ந்தனர் எனவும், இந்த முரண்பாட்டின் ஊடாக எவருமே நன்மை அடையவில்லை எனவும், மாறாக பாதிப்புக்கள் மட்டுமே மிஞ்சின எனவும் குறிப்பிட்டார். மேலும் அதிமேதகு சனாதிபதி தெரிவிக்கையில், மீண்டும் எமது நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு இனவாதத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், நாம் அனைவரும் அமைதியாக ஒற்றுமையாக சகோதரத்துடன் வாழும் ஒரு நாடு எமக்கு தேவை எனவும், இத்தோடு சிறப்பான பொருளாதாரத்துடனும் சிறந்த பொழுதுபோக்குடனும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை எமக்கு தேவை என்றும் குறிப்பிட்டதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பான உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அது தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது என தெரித்த அதிமேதகு சனாதிபதி அவர்கள், மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து, இத் திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதாகவும் இத் திட்டம் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும், எமது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நன்மை அளிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை நாங்கள் இத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இந்த உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் எமது இளம் சமுதாயத்திற்கு மிக முக்கியமானது எனவும் தெரிவித்தார். இதே போன்று சுற்றுலாத்துறையை எடுத்துக் கொண்டால் எமது நாட்டிற்கு பெரிய பங்களிப்பை இந்த சுற்றுலாத்துறை வழங்குகின்றது எனவும், வடக்கில் அழகிய கடற்கரைகள் மக்களை கவரக்கூடிய பல இடங்கள் இருந்தாலும் சக்தி வாய்ந்த சுற்றுலாத்தலம் ஒன்று இங்கு இல்லை எனவும், இதன் குறைபாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், இங்குள்ள விமான நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு எம்மால் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மிக வேகமாக காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், வட மாகாணத்தில் சிறந்த சுற்றுலாத் தலம் ஒன்றை அமைப்பது எமது தேவையாக உள்ளது எனவும், இளைஞர் யுவதிகளுக்குசிறப்பான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும், நல்ல ஒரு பொருளாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறான பொருளாதாரத்தை அமைத்துக் கொடுக்கும் பொறுப்பாக எமது அரசாங்கம் செயற்பட உள்ளதாகவும்தெரிவித்ததுடன், மேலும், இதற்கு மேலாக எனது நோக்கம் சிதறடிக்கப்பட்ட மனங்கள் மற்றும் உள்ளங்களை ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், நான் ஒருபோதும் மக்களை கைவிடமாட்டேன் என்று குறிப்பிட்ட சனாதிபதி அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/236228