குருவானவர் சந்திரா பெர்ணான்டோ அவர்களின் படுகொலை காலம் : ஆனி, 1988 இடம் : மட்டக்களப்பு , மரியண்ணை பேராலயம் நான் மட்டக்களப்பில் தங்கி வசிக்கத் தொடங்கியிருந்த காலம். மரியாள் ஆண்கள் விடுதியில் இன்னும் 40 மாணவர்களுடன் தங்கி பாடசாலை சென்று வந்தேன். விடுதி கத்தோலிக்க பாதிரிகளால் நடத்தப்பட்டு வந்தமையினால் பெரும்பாலான மாணவர்கள் கத்தோலிக்கர்கள், ஓரிருவரைத் தவிர. ஆகவே ஒவ்வொரு காலையும் தவறாது 6 மணிக்கு அருகில் அமைந்திருந்த புனித மரியண்ணை தேவாலயத்திற்கு காலைத் திருப்பலிக்காகச் செல்வது எமது நாளாந்தக் கடமைகளில் முதலாவது. சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் திருப்பலியினை ஒவ்வொரு நாளும் அத்தேவாலயத்தின் பங்குத் தந்தையான, குருவானவர் சந்திரா பெர்ணான்டோவே நடத்துவார். அவரது கனிவான முகவும், மென்மையான குரலும், அவர் திருப்பலியினை நடத்திச் செல்லும் விதமும் ஈர்ப்பினை உருவாக்கும். நாம் மிக்கேல் கல்லூரியின் மாணவர்கள் என்பதை அறிந்த அவர் எம்முடன் சிலவேளைகளில் பேசுவதுண்டு. எமது விடுதி நடத்துனரும், குருவானவர் சந்திராவும் நண்பர்கள் ஆதலால் திருப்பலி முடிந்தபின்னர் சிலவேளைகளில் அவர்கள் பேசும்வரை நாம் காத்திருப்போம். வார விடுமுறை நாளான சனி காலையில் அவரது திருப்பலி முடிந்தவுடன், சிசிலியா பெண்கள் பாடசாலையில் நடைபெறும் கத்தோலிக்க வகுப்புகளுக்கு நாம் செல்வோம். அங்கு தவறாது குருவானவர் சந்திராவும் கலந்துகொள்வார். சிலவேளைகளில் வகுப்புகளுக்கு வந்து மாணவர்களுடன் பேசுவதும் நடக்கும். இவ்வாறு மாணவர்களாலும், ஆசிரியர்கள், பெற்றோர்களாலும் நன்கு அறியப்பட்ட ஒருவர் சந்திரா அவர்கள். புலிகள் தொடர்பாக மென்மையான போக்கினைக் கொண்டிருந்தவர் என்று அறியப்பட்ட சந்திரா அவர்கள், அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பேசிவந்தவர். மட்டக்களப்பில் இயங்கிய பிரஜைகள் குழுவின் தலைவராகவும் அக்காலத்தில் பணியாற்றியவர். இராணுவத்தினராலும், துணைராணுவக் குழுவினராலும் கைதுசெய்யப்பட்ட பல இளைஞர்களை மீட்கும் காரியங்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். ஆகவே கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல் மட்டகளப்பு வாழ் தமிழர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு மனிதராக அவர் வலம்வந்தார். இவ்வாறான ஒரு நாள், ஆனி மாதம் 6 ஆம் திகதி மாலை வேளையில், விடுதி மாணவர்கள் சிலருடன் எமது விடுதிக்கு முன்னால் இருந்த வெற்றுக் காணியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். விடுதி நடத்துனரான ஸ்டீபன், ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை படிப்பதை வாடிக்கையாகக் கொண்டவர். ஆகவே அவர் படிக்கும் வீரகேசரிப் பத்திரிக்கையினை வழக்கமாக போல் என்று அழைக்கப்படும் ஒரு மாணவனே மட்டக்களப்பு நகருக்குச் சென்று வாங்கிவருவான். அன்று வழமை போல போல் நகருக்கு பத்திரிக்கை வாங்கச் சென்றான்.சென்ற சிறிது நேரத்திலேயே அதிர்ச்சி மேலிட்டவனாக திரும்பி வந்தான். "பாதர் சந்திராவைச் சுட்டுப் போட்டாங்கள். கோயிலுக்குள்ள நிறைய ஆக்கள் நிக்கிறாங்கள்" என்று படபடக்கக் கூறினான். மரியாள் பேராலயம், எமது விடுதியில் இருந்து பார்க்கும் தூரத்திலேயே இருக்கிறது. ஓடிச்சென்றால் இரு நிமிடங்களில் ஆலயத்தை அடைந்துவிட முடியும். ஆகவே அவன் கூறியவுடன் மைதானத்தில் நின்ற அனைவரும் தேவாலயம் நோக்கி ஓடினோம். தேவாலயம் பூட்டிக் கிடந்தது. ஆனால் அதன் அருகில் இருக்கும் குருவானவர் சந்திரா பெர்ணான்டோவின் அலுவலகம் சனக்கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஒருவாறு சனக்கூட்டத்தினுள் நுழைந்து, அவரது அறையினுள்ச் சென்றோம். எனக்கு நன்கு பரிச்சயமான ஒருவரை, நாம் மதிக்கும் ஒருவரை, இரத்த வெள்ளத்தில் நான் முதன் முதலாகப் பார்த்தது அங்கேதான். குருவானவர் தனது கதிரையில் அமர்ந்தபடி கொல்லப்பட்டிருந்தார். அவரது உடல் கதிரையில் இருந்து பின்புறமாகச் சரிந்திருக்க, நெற்றியின் அருகிலிருந்து குருதி வழிந்தோடி அவரது ஆசனம் இருந்த அறையின் பகுதியை நனைத்திருந்தது. அவர் சுடப்பட்டு வெகுநேரமாக இருக்கமுடியாது, ஏனென்றால் குருதி இன்னமும் காயாது அப்படியே கிடந்தது. அவர் அணிந்திருந்த வெண்ணிற ஆடை குருதியில் நனைந்திருக்க அவர் அங்கு கிடந்த காட்சி பார்த்த அனைவரையும் மிகுந்த துன்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. எவ்வளவு நேரம் அங்கிருந்தோம் என்று நினைவில் இல்லை. அதிர்ச்சியும், பயமும் எம்மை ஆட்கொள்ள மெதுமெதுவாக விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இதனை யார் செய்திருப்பார்கள் என்கிற கேள்வியே எம்மிடம் அன்று இருந்தது. குருவானவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவரைச் சந்திக்கவென்று இருவர் வந்ததை தேவாலயத்தில் தோட்டவேலைகளில் ஈடுபட்டு வரும் ஒருவர் பார்த்திருக்கிறார். குருவானவருடன் வந்த இருவரும் முரண்பாட்டுடன் சத்தமாகப் பேசுவது கேட்டிருக்கிறது. அதன்பின்னரே அவர்கள் குருவானவின் நெற்றியில், மிக அருகில் நின்று சுட்டிருக்கிறார்கள். மரியாள் பேராலயம் அமைந்திருந்த பகுதி இந்திய ராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதியாகும். இப்பகுதியில் அமைந்திருந்த ஒவ்வொரு இந்திய இராணுவ முகாமின் முன்னாலும் தவறாது தமிழ் துணை ராணுவக் குழுவினரின் பிரசன்னமும் அக்காலத்தில் இடம்பெற்றிருக்கும். குருவானவர் கொல்லப்பட்டு சில நாட்கள் கடந்தபின்னர் அவரைக் கொன்றது இந்திய ராணுவத்துடன் மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த புளோட் மற்றும் ஈ பி ஆர் எல் எப் துணை ராணுவக் குழுவினரே என்று பேசிக்கொண்டார்கள். குருவானவரைக் கொன்றவர்கள் மிக நிதானமாகவே அப்பகுதியில் இருந்து வெளியேறிச் சென்றிருக்கிறார்கள். தாம் அகப்பட்டுவிடுவோம் என்றோ, அருகில் அமைந்திருக்கும் இந்திய ராணுவ முகாமில் தடுக்கப்படுவோம் என்றோ அவர்கள் கலவரம் அடைந்திருந்ததாகத் தெரியவில்லை. இந்திய இராணுவத்தினதும், துணை ராணுவக் குழுக்களினதும் மனிதவுரிமை மீறல்கள் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசிவந்த குருவானவர் சந்திராவின் குரலை அடக்கவேண்டிய தேவை இந்திய இராணுவத்திற்கும் இருந்தமையினால், அவர்களின் பூரண ஆசீர்வாதத்துடனேயே சந்திரா துணை ராணுவக் குழு உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குருவானவர் சந்திராவின் இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பில் நடைபெற்றன. மிகப்பெருந்திரளான மக்கள் மத வேறுபாடின்றி அதில் கலந்துகொண்டார்கள். நானும் அந்த இறுதிநிகழ்வில் கலந்துகொண்டேன்.