Everything posted by ஏராளன்
-
பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன ரீதியாக அமைக்கப்பட மாட்டாது; அரசாங்கம் எழுத்து மூல உத்தரவாதம் வழங்கியுள்ளது என்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி
03 Aug, 2025 | 04:56 PM பிரதேச நிர்வாகங்கள் ஒருபோதும் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும்.பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக அம்பாறை, ஒலுவில் விடுதியில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமான்லெப்பை, தாஹிர் அஷ்ரப் மற்றும் அப்துல் வாசித் உள்ளிட்டோரும் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். இக்கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவிக்கையில்; பிரதேச செயலகங்களோ அல்லது பிரதேச சபைகளோ இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உறுதியான உத்தரவாதத்தை தாம் ஏற்கனவே அரசாங்கத்திலிருந்து எழுத்து மூலமாக பெற்றுள்ளேன். இந்த விடயத்தை அரசியலாக்கவோ, இன உணர்வுகளை தூண்டி அரசியல் பலன் பெறவோ நான் விரும்பவில்லை. அதனாலேயே நான் இது பற்றி ஊடகங்களில் பிரஸ்தாபித்து, எந்தவொரு விளம்பரத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமிழ், முஸ்லிம் உறவைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் நான் செயற்படுகிறேன். முஸ்லிம் பெரும்பான்மையுள்ள பிரதேசங்களில் தமிழர்களுக்கும், தமிழ் பெரும்பான்மையுள்ள பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கும் எந்த அநீதியும் நிகழக்கூடாது என்பதே எனது நிலைபாடு. காணி, நிதி ஒதுக்கீட்டுகள் மற்றும் நிர்வாக தீர்மானங்களில் ஏதேனும் சரிபார்க்கக் கூடிய முறைப்பாடுகள் இருந்தால், அதனை மாவட்ட மட்டத்தில் இரு சமூக பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்யும் குழு அமைப்பது ஒரு கட்டமைக்கப்பட்ட வழியாக இருக்கலாம். கிராம சேவை பிரிவுகள் போன்ற நிர்வாக மாற்றங்களில் முன்பே சில அநீதிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது போன்ற பிரச்சினைகள் சமூகத் தலைவர்களுடன் கலந்துரையாடல் மூலமே தீர்க்கப்பட வேண்டும். இன அடிப்படையில் அரசியல் செய்வது எதிர்மறையான விளைவுகளையும் தமிழ் - முஸ்லிம் உறவுகளை பலவீனமாக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும். கடந்த அரசாங்கங்களில் இஸ்ரேல், மொசாட் போன்ற வெளிநாட்டு உளவுத்துறைகள் அரசாங்கங்களுக்கு வழங்கிய ஆலோசனைகளின் பின்னணியில் இன மோதல்களும் அதனை அடுத்து நடந்த கொடூர கொலைகளிலும் ஏற்படுத்தப்பட்ட கசப்பான அனுபவங்களை ஒருபோதும் மறங்க முடியாது என்றார். https://www.virakesari.lk/article/221710
-
இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் கிழக்கில் மேற்கொண்ட ஒரு முக்கிய சதி நடவடிக்கை
தமிழ் பிரதேசங்களில் ஆயுதங்களுடன் நடமாடிய தலிபான்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் இஸ்லாமியர்களின் இறுக்கமான சில சரியா சட்டங்கள் இலங்கையில் தற்போது வரை நடைமுறையில் இருக்கின்றது என யாராவது கூறினால், அது நம்பத்தகாத ஒரு விடயமாக இருக்கும். காரணம், எண்ணிடலங்கா அடக்குமுறை, பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள், ஒருவர் எப்படி இருக்க வேண்டும் மற்றும் இருக்க கூடாது என்ற நிபந்தனைகள் என அடிமைப்படுத்தலின் உச்சக்கட்டத்தில் அந்த சட்டங்கள் காணப்படும். இது தற்போதைய நவீன காலத்தில் அதுவும் இலங்கையில் காணப்படுகின்றது என்று சொன்னால் அனைவரும் நம்புவது சற்று கஷ்டம்தான். இருப்பினும், இவ்வாறான சம்பவங்களில் நேரடியாக தொடர்புபட்ட சிலர் இது தொடர்பில் விளக்கும் போது நம்ப வேண்டிய ஒரு கட்டாய சூழல் இங்கு உருவாகியுள்ளது. இவ்வாறு, இலங்கையில் கிழக்கு பகுதியில் செயற்பட்டு வந்த முஸ்லிம் அடிப்படைவாத குழுக்கள், அந்த குழுக்கள் புரிந்த படுகொலைகள், மேலும் பலதரப்பட்ட வெளிவராத உண்மைகள், என்பவை தொடர்பில் அந்த காலப்பகுதியில் குறித்த குழுக்களுடன் பயணித்த சில நேரடி சாட்சியங்கள் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி, https://ibctamil.com/article/armed-taliban-in-tamil-regions-1753373208
-
அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை - வேலணை பிரதேச சபை அறிவிப்பு!
வேலணை பிரதேச சபை எல்லைக்குள் குழாய்க்கிணறு அடிக்க அனுமதி அவசியம்; மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை 03 Aug, 2025 | 02:20 PM வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது குழாய்கிணறு அடிக்கும் இயந்திரங்களின் உரிமையாளர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது. இது குறித்து பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வேலணை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக எந்தவிதமான அனுமதியும் பெறப்படாது அதிகளவான குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அமைக்கப்படும் குழாய்க்கிணறுகளை எந்தவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் போதிய வழிகாட்டுதல்களுமின்றி தான்தோன்றித்தனமாக அமைப்பதானது எமது பிரதேசத்தில் காணப்படுகன்ற மிக சொற்பமான நன்னீர்க் கிணறுகளையும் வெகுவிரைவில் பாதிப்படையச் செய்யும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது. இதனால் குறித்த செயற்பாட்டை விரைந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அதடிப்படையில் குழாய்க்கிணறுகளை அமைக்க உத்தேசித்துள்ளவர்கள் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பித்து அவர்களது சிபார்சிற்கு அமைவாக பிரதேச சபையின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும். அத்துடன் உடனடியாக செயற்படும் வண்ணம் இந்த நடைமுறை இறுக்கமாக பின்பற்றப்படும் என்பதோடு அனுமதியின்றி குழாய்க்கிணறு அமைப்பவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே நேரம் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் தங்களது சேவை வழங்கல் தொடர்பாக பிரதேச சபையில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிமப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுடன் அனுமதிப்பத்திரம் இல்லாதோருக்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தல் தண்டனைக்குரிய குற்றச்செயலாகும் அத்துடன் குழாய்க்கிணறு அமைப்பதற்கான சேவை வழங்கல் உரிமப்பத்திரமின்றி எமது பிரதேச சபைக்குள் பிரவேசிக்கும் குழாய்க்கிணறு அமைக்கும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் பிரதேச சபையால் பொலிசார் ஊடாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அருகிவரும் தீவகப் பிரதேசத்தின் நன்னீர் வளத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு வேலணைப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலணை பிரதேச சபை கோருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221696
-
‘சோமரத்ன ராஜபக்ச மனைவியின் கோரிக்கையை ஏற்று, அனுர தன்னை நிரூபிக்க வேண்டும்” மனோ
செம்மணி தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தினால் சாட்சியமளிக்கத் தயார்; கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளி - சோமரத்ன ராஜபக்ஷ கூறியதாக அவரது மனைவி ஜனாதிபதிக்குக் கடிதம் 03 Aug, 2025 | 01:32 PM (நா.தனுஜா) யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அத்தோடு 7 ஆம் காலணி இராணுவப்படை தலைமையகத்தில் கொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தாரின் சடலங்களை கப்டன் லலில் ஹேவாகேயின் ஆணைக்கு அமைய புதைத்ததைத் தவிர வேறேந்தக் குற்றத்தையும் தனது கணவர் புரியவில்லை எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று கடந்தகால அரசாங்கங்கள் இராணுவ உயரதிகாரிகளைப் பாதுகாத்துக்கொண்டு, கீழ்மட்ட வீரர்களைத் தண்டிப்பதன் ஊடாக, குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தாம் தண்டித்திருப்பதாக சர்வதேச சமூகத்துக்குக் கூறிவந்ததாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதுமாத்திரமன்றி இவ்விடயம் தொடர்பில் இவ்வாரம் அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் கடிதமொன்றை அனுப்பிவைக்கவுள்ளார். அதன்படி ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு: எனது கணவர் சோமரத்ன ராஜபக்ஷ சட்டவிரோதமான முறையில் தண்டிக்கப்பட்டிருக்கிறார். எனவே செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்குமாறும், அதில் சாட்சியமளிப்பதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் எனது கணவர் தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட எனது கணவர் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் 7 ஆவது காலணி இராணுவப்படையணியின்கீழ் செம்மணி பிரதேசத்தில் பணியில் ஈடுபட்டவந்தபோது இடம்பெற்ற மனிதப்படுகொலையுடன் தொடர்புடையவகையில் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து மூவரடங்கிய நீதியரசர் குழாமின் முன்னிலையில் நடைபெற்ற விசேட வழக்கு விசாரணைகளின் பின்னர் 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 29 வருடங்களாக அவர் சிறையில் இருந்துவருகிறார். இருப்பினும் இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டமைக்கும் எனது கணவருக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை. மாறாக 7 ஆவது காலணிப்படை தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரியான கப்டன் லலித் ஹேவாகே தலைமையிலான புலனாய்வு அதிகாரிகளால் செம்மணி சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்படும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7 ஆவது படையணி தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு மரணித்தவர்களின் உடல்கள் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடி அமைந்துள்ள இடத்துக்குக் கொண்டுவரப்படும். அங்கு பணியாற்றிய எனது கணவர் உள்ளடங்கலாக இவ்வழக்கில் தண்டனை பெற்ற ஐவரிடமும் அந்த உடல்களைப் புதைக்குமாறு மேலே பெயரிட்ட கப்டன் லலித் ஹேவாகேயினால் ஆணையிடப்படும். அதன்பிரகாரம் எனது கணவர் உள்ளடங்கலாக ஐவரால் செம்மணி சோதனைச்சாவடிக்கு அண்மையில் உள்ள பகுதியில் அந்த உடல்கள் புதைக்கப்படும். வீதியில் செல்லும் வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே 1996 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் செம்மணி சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டுவந்த எனது கணவர் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஏனைய ஐவரினதும் வேலையாக இருந்தது. செம்மணி சோதனைச்சாவடியானது அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்குள் உள்நுழையும் பிரதான சோதனைச்சாவடியாக இருந்தது. அச்சோதனைச்சாவடியில் பணியாற்றிய எனது கணவர் உள்ளடங்கலாக ஏனைய ஐந்து இராணுவத்தினருக்கு மேலதிகமாக கப்டன் லலித் ஹேவாகேயின் ஆலோசனைக்கு அமைவாக காலை 9.00 மணி முதல் மாலை 4.00 - 6.00 மணி வரை மொழிபெயர்ப்பாளர்கள் என்ற ரீதியில் நாளாந்தம் இந்த சோதனைச்சாவடிக்கு வருகைதரும் லெப்டினன் துடுகல, லெப்டினன் உதயகுமார, மொழிபெயர்ப்பாளரான பொலிஸ் பரிசோதகர் சமரசிங்க, பொலிஸ் பரிசோதகர் நஸார் ஆகியோரால் அங்கு அழைத்துவரப்படும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரால் அடையாளம் காண்பிக்கப்படும் வீதியில் செல்லும் சந்தேகநபர்கள் செம்மணி சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்படுவர். அவர்கள் மாலை 4.00 மணியின் பின்னர் ட்ரக் வாகனத்தில் ஏற்றப்பட்டு 7 ஆவது காலணி இராணுவப்படை தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்படுவர். அங்கு மரணிப்போர் இரவு வேளையில் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்படுவர். அவர்களைப் புதைக்குமாறு எனது கணவர் உள்ளிட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுவிட்டு, வந்தவர்கள் மீண்டும் திரும்பிச்செல்வார்கள் என்றே எனது கணவர் கூறியிருக்கிறார். செம்மணி சோதனைச்சாவடியில் இவ்வாறான நடவடிக்கைகள் சுமார் ஒருவருடகாலமாக இடம்பெற்றிருக்கின்றன. எனது கணவர் உள்ளடங்கலாக தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்த ஐவரும் செய்தது உயரதிகாரிகளால் கொண்டுவந்து தரப்படும் உடல்களைப் புதைத்தமை மாத்திரமேயாகும். எனது கணவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கான ஒரே சாட்சியாக இருந்தது அவர் மனிதப்புதைகுழிகளை அடையாளம் காண்பித்தமை மாத்திரமேயாகும். எனது கணவருடன் தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய ஐவரும் உயரதிகாரிகள் கொண்டுவந்து தருகின்ற சடலங்களைத் தாம் புதைத்தாக நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளடங்கலாக அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாத்திரம் வெளிவந்தமைக்கான காரணம் என்ன? செம்மணி சோதனைச்சாவடியில் இதுவரையில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு, புதைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறிருக்கையில் கிருஷாந்தி குமாரசுவாமி குடும்பத்தின் படுகொலை மாத்திரம் வெளியே வந்தமைக்கு இதுவே காரணமாகும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சகோதரியான சுனேத்ரா பண்டாரநாயக்கவின் கணவர் ளசர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளரான குமார் ரூபசிங்க ஆவார். குமார் ரூபசிங்க கிருஷாந்தி குமாரசுவாமி குடும்பத்தின் உறவினர் என்பதனால், அவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை விவகாரம் தொடர்பில் மாத்திரம் கவனம்செலுத்தப்பட்டு, செம்மணி சோதனைச்சாவடியில் பணியாற்றிய எனது கணவர் உள்ளிட்ட இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளடங்கலாக அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்ட முறைமையில் கப்டன் லலித் ஹேவாகே குழுவினராலேயே கைதுசெய்யப்பட்டனர். செம்மணி சோதனைச்சாவடியில் இறுதியாகக் கைதுசெய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், கைதான அன்றைய தினம் மாலை 4.00 மணியின் பின்னர் 7 ஆம் காலணி இராணுவப்படை தலைமையகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு இரண்டு தினங்களில் பின்னர் அவர்கள் கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் மீண்டும் செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கு எனது கணவர் உள்ளடங்கலாக ஏனைய இராணுவத்தினரிடம் அவர்களது உடல்கள் ஒப்படைக்கப்பட்டதுடன், அவற்றைப் புதைக்குமாறு உத்தரவிட்ட கப்டன் லலித் ஹேவாகே, அங்கிருந்து வெளியேறினார். தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் எனது கணவரால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்களுக்கு அமைவாக 1999 ஆம் ஆண்டு கப்டன் லலில் ஹேவாகே, கப்டன் பெரேரா, லெப்டினன் உதயகுமார, மொழிபெயர்ப்பாளர்களான பொலிஸ் பரிசோதகர் சமரசிங்க, பொலிஸ் பரிசோதகர் அப்துல் ஹமீட் நஸார், லெப்டினன் துடுகல ஆகிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 6 மாதங்களில் அவர்கள் பிணையில் விடுதலையானதன் பின்னர், அந்த வழக்குக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. இச்சம்பவத்தின் பின்னர் எனது கணவர் சார்பில் முன்னிலையாவதற்கு விருப்பம் தெரிவித்து, போகம்பரை சிறைச்சாலைக்கு வருகைதந்து அவரைச் சந்தித்த ஜனாதிபதி சட்டத்தரணி குமார் பொன்னம்பலம், எனது கணவரிடம் விடயங்களைக் கேட்டறிந்ததன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று அவரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார். இருப்பினும் திடீரென குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் என்பது கணவரால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் உயர்நீதிமன்றத்துக்கு அழுத்தம் பிரயோகித்து, எனது கணவர் உள்ளிட்ட தரப்பினருக்கு மீண்டும் மரண தண்டனை விதிக்கச்செய்தவர் அப்போதைய ஜனாதிபதியாவார். செம்மணி சோதனைச்சாவடி குறித்த சகல தகவல்களையும் மேல்நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியமையே அதற்குக் காரணமாகும். அந்தப் பழிவாங்கல்கள் இன்றுவரை தொடர்கின்றன. 1998 ஆம் ஆண்டு எனது கணவர் உள்ளடங்கலாக இராணுவத்தினர் ஐவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட தினத்திலிருந்து தற்போதுவரை பதவியிலிருந்த ஜனாதிபதிகளுக்கு மேன்முறையீட்டுக்கடிதங்களை அனுப்பிவைத்திருந்தாலும், இன்னமும் எவ்வித நிவாரணத்தையும் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. செம்மணி பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தியமையினால் எனது கணவர் உள்ளிட்ட சாட்சியாளர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு 29 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆனால் இதற்கு இடைப்பட்ட காலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, வெறுமனே 5 - 10 வருடங்களுக்குக் குறைந்த ஆண்டுகள் மாத்திரம் சிறையில் இருந்த பலர் கடந்த 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளால் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுவதற்குக் காரணம் உங்களுக்கோ அல்லது உங்களது அரசாங்கத்துக்கோ எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதனாலாகும். எனவே நீதியை நிலைநாட்டும் வகையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை உள்ளடங்கலாக செம்மணி சோதனைச்சாவடியில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள். 1998 ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை செம்மணி சோதனைச்சாவடியை அண்மித்த பகுதிகளில் 5 மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு இக்கடிதத்தை எழுதும் 2025 ஆம் ஆண்டுலும் அங்கு மனிதப்புதைகுழியொன்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே 1998 ஆம் ஆண்டு மேல்நீதிமன்றத்தில் எனது கணவர் கூறிய சகல விடயங்களும் உண்மையானவை என்பதை இப்போது ஒட்டுமொத்த உலகமும் அறிந்துகொண்டிருக்கிறது. இதுவரை காலமும் அதிகாரத்தில் இருந்த ஆட்சியாளர்கள் இராணுவத்தின் உயரதிகாரிகளைக் காப்பாற்றி, கீழ்மட்டத்தில் இருந்தவர்களைத் தண்டித்துவிட்டு, குற்றமிழைத்த இராணுவத்தினருக்குத் தாம் தண்டனை அளித்திருக்கிறோம் என்று சர்வதேச சமூகத்துக்குக் கூறிவந்திருக்கிறார்கள். இப்போது தண்டனையை அனுபவித்துவரும் இராணுவ வீரர்கள் தண்டனை பெறும்போது கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, டி.எம்.ஜயதிலக, ஜே.எம்.ஜயசிங்க, ஏ.எஸ்.பி.பெரேரா ஆகியோர் இராணுவத்தில் இணைந்து முறையே 7, 5, 2 மற்றும் ஒரு வருடங்களே கடந்திருந்தன. அதேபோன்று பொலிஸ் பரிசோதகர் பொலிஸில் இணைந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. அவர்களால் 250 - 300 பேரை கைதுசெய்து, படுகொலை செய்திருக்க முடியுமா? இவ்வாறானதொரு பின்னணியில் யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல படுகொலைகள் மற்றும் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளிப்படுத்துவதற்கு எனது கணவர் தயாராகிவருகிறார். இந்நிலையில் எவ்வித சாட்சியங்களுமின்றி குற்றவாளிகளாக்கப்பட்ட எனது கணவர் உள்ளிட்ட இந்த இராணுவத்தினருக்கு நியாயமான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக்கூடியவகையில் ஆணைக்குழுவொன்றை நியமித்து செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் எனது கணவர் அளித்த வாக்குமூலம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்கும், யாழ்ப்பாணத்தில் அன்புக்குரியவர்களை இழந்த தரப்பினருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுங்கள். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்களுடன் தொடர்புடைய சகல இராணுவ உயரதிகாரிகளினது பெயர் விபரங்களை எதிர்வருங்காலங்களில் வெளியிடுவதற்கு எனது கணவர் தயாராகிவருகிறார். எனவே எனது கணவரால் என்னிடம் கையளிக்கப்பட்ட இந்தக் கடிதம் தொடர்பில் உரியவாறு அவதானம் செலுத்துமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறைப்பாடளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.எனது கணவர் சோமரத்ன ராஜபக்ஷ சட்டவிரோதமான முறையில் தண்டிக்கப்பட்டிருக்கிறார். எனவே செம்மணி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்குமாறும், அதில் சாட்சியமளிப்பதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் எனது கணவர் தெரிவித்துள்ளார். 1999 - 2024 ஆம் ஆண்டு வரை அதிகாரத்திலிருந்த ஜனாதிபதிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத்தினர் என சந்தேகிக்கப்படும் பலரை விடுதலை செய்திருப்பதுடன் இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு, புறக்கோட்டை குண்டுவெடிப்பு, நாட்டின் தலைவர்கள் படுகொலை, பாடசாலை மாணவர்கள் மீதான தாக்குதல், பிக்குகள் மீதான தாக்குதல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களை விடுதலை செய்வதற்குப் பரிந்துரைகளை வழங்கியிருக்கிறார்கள். அவ்வாறிருக்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு 29 வருடகாலமாக சிறையில் இருந்துவரும் எனது கணவர் உள்ளிட்ட ஐவருக்கு மன்னிப்பு வழங்குமாறு உரிய கட்டமைப்புக்களுக்குப் பரிந்துரைக்கமுடியாதது ஏன் என்பது புரியவில்லை என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221688
-
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி போராட்டம்
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் சிலாவத்தை தெற்கு பகுதியில் இன்று (03) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மத சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்று இக் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் தொடர்ச்சியாக 100 நாட்கள் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் குறித்த தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. போராட்டத்தின் இறுதியில் அவர்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/mullaitivu-protest-demanding-federal-power-sharing-1754213950
-
வட மாகாணத்தில் 982 பாடசாலைகளில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன - அமைச்சர் சந்திரசேகர்
வடக்கில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள் வட மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தலைமையில் நேற்று (03.08.2025) சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை என்பது தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதில் கல்வியின் நிலைமை, பாடசாலையின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்படவுள்ள மாற்றம் என்ன என்பது தொடர்பாகவும் குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம் முக்கிய தேவையனெ தெளிவாக வலியுறுத்தியிருந்தார். வட மாகாணமே இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்ட பிரதேசமாக இருக்கிறது. இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியிருக்கிறது. சமூக சீரழிவுகள், குற்றசெயல்கள் இதனால் வறுமையுடன் இணைத்து கல்வி தொடர்பான பிரச்சினையையும் அணுக வேண்டியுள்ளது. வறுமையிருக்கும் இடங்களிலெல்லாம் கல்வி பிரச்சினையும் காணப்படுகிறது. கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள இடங்களில் வறுமை அதிகரித்துள்ளது. மேலும் சமூக சீரழிவுகள், குற்றசெயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இன்று யாழ் மாவட்டத்திலும் இந்த சவால்கள் காணப்படுகிறது. இந்த சவால்களில் இருந்து மீண்டு புதிய யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதனால் எமது அரசாங்கத்தில் கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது. இதற்கமைவாகவே கல்வி புலத்தை வெளிப்படுத்தி ஹரிணி அமரசூரியவுக்கு கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் மூட வேண்டிய நிலை இதேவேளை வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11 – 20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும் 20 – 50 பிள்ளைகள் கற்கும் 171 பாடசாலைகள் இருப்பதாகவும் 50 – 100 பிள்ளைகள் கற்கும் 174 பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எவ்வித கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது கல்வியில் மறுசீரமைப்பு தேவை என்பது உணரப்படுகின்றது. இது தொடர்பில் அனைவரும் புரிதலுடன் செயற்பட்டால் சமூகத்துக்கு நல்ல செய்தியை கொண்டு செல்ல முடியுமென எதிர்பார்க்கிறேன் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/70-schools-will-closed-in-north-education-ministry-1754182274
-
அரச ஊழியர்கள் மீது பாயப்போகும் சட்டம் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிப்புகளை இதுவரையில் சமர்ப்பிக்காத அரச அதிகாரிகள் அவற்றை சமர்ப்பிக்கவில்லை எனில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 30.06.2025 முதல் 31.08.2025 வரை தாமதமாக சமர்ப்பிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அறிவிப்புகளுக்கு சட்ட விதிகளுக்கு அமைவாக அபராதம் விதிக்கப்படும் என்றும், அதற்கமைய, இதுவரை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அதிகாரிகள் யாராவது இருந்தால், அவர்கள் அந்த அறிவிப்புகளை விரைவில் தங்கள் நிறுவனத் தலைவர்களிடம் சமர்ப்பித்து, அவர்களுக்கு விதிக்கப்படக்கூடிய நிர்வாக அபராதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், ஜூன் 30 ஆம் திகதிக்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் அறிவிப்புகளை நிறுவனத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு அவற்றை நிறுவனத் தலைவர்கள் ஏற்க மறுத்தால், இது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அறியத்தருமாறும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ibctamil.com/article/legal-action-against-government-employees-1754216518
-
"முதுகுக்குப் பின்னால் சதி" : எமர்ஜென்சியை அமல்படுத்த இந்திரா காந்திக்கு இருந்த காரணங்கள்
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1971 போருக்குப் பிறகு, உச்சத்தில் இருந்த இந்திரா காந்தியின் புகழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதல பாதாளத்திற்கு சென்றது கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திரா காந்திக்கு எதிரான அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அவரது புகழ் உச்சத்தில் இருந்த வங்கதேசப் போருக்குப் பிறகு உடனடியாக வந்திருந்தால், அன்றைய சூழல் முற்றிலும் வேறுபட்டதாக மாறியிருக்கும். ஆனால் போர் நடைபெற்ற1971 க்குப் பிறகு, மூன்று ஆண்டுகளில் நாட்டு மக்களின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டிருந்தது. 1971 போருக்குப் பிறகு, உச்சத்திற்குச் சென்ற இந்திரா காந்தியின் புகழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. அதிலும், அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, இந்திரா காந்திக்கு பகிரங்கமாக ஆதரவு கொடுக்க வெகு சிலரே இருந்தனர். பிரபல பிரிட்டிஷ் பத்திரிகையாளரான ஜேம்ஸ் கேமரூன், "தவறான இடத்தில் தனது காரை நிறுத்தியதற்காக அரசாங்கத்தின் தலைவர் ஒருவரை ராஜினாமா செய்யச் சொல்வது போன்றது" என்று கருத்து தெரிவித்தார். ஜூன் 12, 1975 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்தது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அமைச்சரவை உறுப்பினர்கள் சஃப்தர்ஜங் சாலையில் இருந்த பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்திற்கு வரத் தொடங்கினார்கள். ஆனால் இந்திரா காந்தி ஒரு சிலரிடம் மட்டுமே பேசினார். பட மூலாதாரம், Getty Images பிரபல பத்திரிகையாளர் இந்தர் மல்ஹோத்ரா தனது 'Indira Gandhi: A Personal and Political Biography' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "1975 ஜூன் 12ஆம் நாளன்று, இந்திரா காந்தி ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்திருந்தார். தனக்கு பதிலாக ஸ்வரண் சிங்கை பிரதமராக்குவது குறித்தும் அவர் யோசித்துக்கொண்டிருந்தார்." "உச்ச நீதிமன்றத்தில் தனது மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், தனது தேர்தல் வெற்றி மீட்டெடுக்கப்பட்ட பிறகு, மீண்டும் பிரதமராகிவிடலாம் என்றே அவர் நினைத்தார். இந்திரா காந்தியின் தலைமையில் பணியாற்றுவதில் தனக்கு மகிழ்ச்சி என, மூத்த அமைச்சர் ஜக்ஜீவன் ராம் சமிக்ஞைகளை வழங்கினார். இந்த நிலையில், ஸ்வரண் சிங்கை தற்காலிக பிரதமராக்குவது சரியாக வருமா? மூப்பு அடிப்படையில் ஜக்ஜீவன் ராம், தான் பிரதமராக வேண்டும் என்று கோருவார்." என்பதே இந்திராவின் யோசனைக்கு முக்கியக் காரணமாக இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு முன்னதாகவே தான் ராஜினாமா செய்தால், அது பொதுமக்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தனக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினால், மீண்டும் பதவியேற்றுக் கொள்ளலாம் என்றும் இந்திரா காந்தி கணக்குப் போட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திராவின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜக்ஜீவன் ராம் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை மாற்றிக்கொண்ட இந்திரா காந்தி இந்திரா காந்தியின் செயலாளராக இருந்த பி.என். தார், தனது 'Indira Gandhi, The 'Emergency', and Indian Democracy ' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார், "எதிர்க்கட்சித் தலைவர்கள், குறிப்பாக ஜே.பி., பதவி விலகும் முடிவை இந்திராவிடமே விட்டுவிட்டிருந்தால், அவர் ராஜினாமா செய்திருக்கலாம். ஆனால் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ஜே.பி., இந்திரா காந்தியின் ராஜினாமா முடிவுக்கு தானே கட்டாயப்படுத்தியதாக உலகுக்குக் காட்ட விரும்பினார்." "ஜே.பி., தனது கூட்டங்களிலும், பொது அறிக்கைகளிலும் இந்திரா காந்தியை சிறுமைப்படுத்த முயன்றார். இதுபோன்ற தனிப்பட்ட விரோதப் போக்கும் தாக்குதலும் இந்திராவின் போர்க்குணத்தை சீண்டிவிட்டது. என்ன விலை கொடுத்தாவது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அவரது முடிவை வலுப்படுத்தியது." மேலோட்டமாகப் பார்க்கும்போது, கட்சியின் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் இந்திராவிடம் தங்கள் விசுவாசத்தைக் காட்டினர், ஆனால் அடையக்கூடிய தூரத்தில் பிரதமர் பதவி இப்போது வந்துவிட்டதையும் அனைவரும் உணர்ந்திருந்தனர். படக்குறிப்பு, இந்திரா காந்திக்கு எதிரான இயக்கத்தை வழிநடத்தியவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் இந்திராவின் ராஜினாமாவை விரும்பிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள் "இந்திராவை பகிரங்கமாக ஆதரித்துக் கொண்டே, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் பலர், தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்" என கூமி கபூர் தனது 'The Emergency: A Personal History' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இந்திரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர்களில் ஜக்ஜீவன் ராம், கரண் சிங், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜலகம் வெங்கல் ராவ் மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் ஆகியோர் அடங்குவர். ஆனால் இதை நேரடியாக இந்திரா காந்தியிடம் சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை." பிறருக்கு அந்த தைரியம் இல்லையென்றாலும், ராஜினாமா செய்வதே நல்லது என கரண் சிங் இந்திரா காந்தியிடம் மறைமுகமாக தெரிவித்ததாக நம்பப்படுகிறது. இந்திரா காந்தியின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த கரண் சிங், ராஜினாமா செய்வது தொடர்பாக இந்திரா காந்தியிடம் பேசியதாகவும், இதைப் பற்றி கரண் சிங்கே, தன்னிடம் கூறியதாக நீர்ஜா செளத்ரி தனது 'How Prime Ministers Decide' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். "உங்கள் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவுக்கு அனுப்புவது நல்லது. அவர் உங்கள் ராஜினாமாவை நிராகரித்து, உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவு வரும் வரை உங்கள் பதவியில் தொடருமாறு கேட்கலாம்" என்று கரண் சிங், இந்திரா காந்திக்கு அறிவுறுத்தினார். தனது அறிவுரையை கேட்டுக் கொண்ட இந்திரா காந்தி, அதற்கு பதில் சொல்லவில்லை என்றும், இருப்பினும் "இந்திரா காந்திக்கு அது பிடிக்கவில்லை என நான் உணர்ந்தேன்" என நீர்ஜா சவுத்ரியிடம், கரண் சிங் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திராவின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்த டாக்டர் கரண் சிங் இந்திராவின் ராஜினாமாவை எதிர்த்த சஞ்சய் காந்தி இந்திராவின் ராஜினாமா முடிவை எதிர்த்தவர்களில் முக்கியமானவர், அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி. அதேபோல, இந்திராவின் உதவியாளரும், தனிச் செயலாளருமான ஆர்.கே. தவண் மற்றும் ஹரியானா முதல்வர் பன்சிலால் ஆகியோர் ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று கூறி, இந்திராவின் பதவி விலகல் முடிவை எதிர்த்தனர். "ராஜினாமா செய்யலாம் என்ற இந்திரா காந்தியின் எண்ணம் சஞ்சய் காந்திக்கு தெரிந்ததும், அவர் தனது தாயை தனியறைக்கு அழைத்துச் சென்று பேசினார். அவரை பதவியில் இருந்து விலக விடமாட்டேன் என்றும் கூறினார்" என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் புபுல் ஜெயகர் குறிப்பிட்டுள்ளார். "உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு முடிவடையும் வரை, இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கலாம் என்றும், அந்த சிறிது காலத்திற்கு தான் பிரதமராக பதவியில் இருப்பதாக தேவ்காந்த் பரூவா கூறியது சஞ்சய் காந்தியின் சீற்றத்தைத் தூண்டியது. விசுவாசமாய் இருப்பதாக அனைவரும் நடிப்பதாக இந்திராவிடம் கூறிய சஞ்சய், உண்மையில் அனைவரும் அதிகாரத்தைத் தேடி ஓடுகிறார்கள், என்று சொன்னார்." பட மூலாதாரம், INC படக்குறிப்பு, எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த தேவ்காந்த் பரூவா இந்திராவுக்கு மாற்றாக யாரை முன்னிறுத்துவது? காங்கிரஸ் கட்சியின் தேடல் இந்திரா காந்தியின் பாதுகாப்பின்மை உணர்வே, எமர்ஜென்சி என்ற அவசரநிலையை அறிவிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கம் தவிர, தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே தன்னை அதிகாரத்திலிருந்து அகற்ற தனது முதுகுக்குப் பின்னால் சதி செய்வதாகவும் இந்திரா காந்திக்கு கவலை இருந்தது. குல்தீப் நாயர் தனது 'தி ஜட்ஜ்மென்ட்' புத்தகத்தில், "நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ்காரர்கள் இந்திராவை நீக்கும் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தனர். அவரது மிகப்பெரிய ஆதரவாளர் என்று கூறிக்கொண்ட தேவகாந்த் பரூவா கூட, காங்கிரஸ் தலைவர் சந்திரஜித் யாதவின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டார். அவரும் இந்திராவை விட்டு விலக நினைத்தார். கட்சியின் மிகவும் மூத்தத் தலைவரான ஜக்ஜீவன் ராம் மற்றும் 1952 முதல் மத்திய அமைச்சராக இருந்த மூத்தத் தலைவர் ஸ்வரண் சிங் ஆகிய இருவரில் யாரை பிரதமராக்கலாம் என்ற விசயத்தில், அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அமைச்சர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை" என்று எழுதுகிறார். சந்திரஜித் யாதவும், தேவ்காந்த் பரூவாவும் அந்தக் கூட்டத்தில் இந்திரா காந்திக்கு எதிரான சூழலை உருவாக்க முயன்று கொண்டிருந்த அதே சமயத்தில், இளைஞர் தலைவர்கள் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகர், கிருஷ்ணகாந்த், மோகன் தாரியா போன்றவர்கள் பத்திரிகைகள் மூலமாகவும் பொதுமக்கள் முன்னிலையிலும் இந்திரா காந்திக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர். கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் மற்றும் பிரதினவ் அனில் ஆகியோர் தங்கள் 'India's First Dictatorship The Emergency, 1975-77' என்ற புத்தகத்தில், "கட்சியைக் காப்பாற்றுவது என்பது பிரதமரின் வாழ்க்கையை விட முக்கியமானது என்று இந்தத் தலைவர்கள் குரல் எழுப்பினார்கள். விசாரணையை எதிர்கொண்டிருக்கும் ஒரு பிரதமரின் தலைமையில் 1976 பிப்ரவரியில் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட முடியாது என்று கட்சித் தலைவர்கள் கருதினார்கள். அதிலும், இந்திராவை பாதுகாக்க காங்கிரஸ் முன்வந்தால், நாட்டில் புரட்சி ஏற்படும் என்றும், இந்திரா காந்தி மூழ்குவதுடன், அவருடன் சேர்ந்து கட்சியும் மூழ்கிவிடும் என்றே கிருஷ்ண காந்த் நம்பினார்" என்று குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம், HARPER COLLINS படக்குறிப்பு, கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் மற்றும் பிரதினவ் அனில் ஆகியோர் எழுதிய 'India's First Dictatorship The Emergency, 1975-77' புத்தகம் எதிர்கட்சியினரின் எதிர்ப்பை விட சொந்தக் கட்சியினரின் கிளர்ச்சியே இந்திராவின் கவலையை அதிகரித்தது இவை ஒருபுறம் என்றால், இந்திரா காந்திக்கு எதிரான கிளர்ச்சியை ஆதரித்த உத்தரபிரதேச முதலமைச்சர் ஹேம்வதி நந்தன் பகுகுணா மற்றும் கிருஷ்ண காந்த் ஆகியோருடன் ஜக்ஜீவன் ராம் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். இந்திராவின் ஆதரவாளரான யஷ்வந்த் ராவ் சவாண், கட்சியில் ஒற்றுமையைப் பேணுமாறு மோகன் தாரியாவிடம் வேண்டுகோள் விடுத்தார். "ஜூன் 12 முதல் 18 வரை, காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்தியில் ஜக்ஜீவன் ராமுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகத் தெரிந்தது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அம்ரித் டாங்கே மற்றும் காங்கிரஸ் இடதுசாரித் தலைவர் கே.டி. மாளவியா ஆகியோர் ஜக்ஜீவன் ராமுக்கு ஆதரவு தேடும் பிரசாரத்தை முன்னெடுத்தனர்" என்று கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலாட் மற்றும் பிரதினவ் அனில் எழுதுகிறார்கள். "தனது எதிரிகளை விட, கட்சி உறுப்பினர்களைப் பற்றியே இந்திரா காந்தி அதிகம் கவலைப்பட்டார்" என்று பிரபல பத்திரிகையாளர் நிகில் சக்ரவர்த்தி நம்பினார். இந்த நேரத்தில் இந்திரா காந்தியை விட வேறு யாரும் பாதுகாப்பற்றவர்கள் அல்ல என்று அவரது வெளிப்புற எதிரிகளும் உணரத் தொடங்கிய நேரம் அது. 1975 ஆகஸ்ட் ஒன்பதாம் நாளன்று நியூ ரிபப்ளிக்ஸில் ஒரியானா ஃபல்லாசி எழுதிய 'இந்திரா காந்தியை எதிர்க்கும் மொரார்ஜி தேசாய்' என்ற கட்டுரையில் மொரார்ஜி தேசாய் கூறியதை அவர் குறிப்பிடுகிறார். "அவரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்துவதே எங்கள் நோக்கம். பெண்கள் நாட்டை வழிநடத்த முடியாது என்பதை இந்திரா காந்தியை பார்த்து உறுதியாக நம்புகிறேன். இந்தப் பெண்ணால் எங்கள் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திராவுக்கும் ஜகஜீவன் ராமுக்கும் இடையிலான நீண்ட கால கருத்து வேறுபாடுகள் இந்திரா காந்தியை எதிர்ப்பதற்கு இளம் காங்கிரஸ் தலைவர்களுக்கு தனிப்பட்ட காரணங்கள் இருந்தன. ஜெயபிரகாஷ் நாராயணனுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்த மோகன் தாரியாவை மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இந்திரா காந்தி அமைச்சரவையில் இருந்து நீக்கினார். இந்திரா காந்தியின் எதிர்ப்பையும் மீறி 1972 ஆம் ஆண்டு சந்திரசேகர் காங்கிரஸ் செயற் குழுவின் உறுப்பினரானார். "இந்திரா காந்திக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று ஜக்ஜீவன் ராம் கூறியது தவறான உறுதிமொழி தான். ஏனெனில் அவர் பிரதமர் பதவியை ஏற்கக் காத்திருந்தார். இந்திராவுக்கும் ஜக்ஜீவன் ராமுக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்தன என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த விசயம்தான்" என்று கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலாட் மற்றும் பிரதினவ் அனில் தங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜக்ஜீவன் ராமுக்கு 13 எம்.பி.க்களின் ஆதரவு இருந்ததாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தன கவலையளித்த உளவுத்துறை அறிக்கை 350 காங்கிரஸ் எம்.பி.க்களில் 191 பேரின் ஆதரவு மட்டுமே இந்திரா காந்திக்கு இருப்பதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவித்திருந்தது. ஷா கமிஷனில் சாட்சியமளித்த இந்திரா காந்தியின் முன்னாள் செயலாளர் பி.என். தார், "அப்போதைய உளவுத்துறை அமைப்பின் இயக்குநர் ஆத்மா ஜெயராம், 350 காங்கிரஸ் எம்.பி.க்களில் 159 எம்.பி.க்கள் கட்சியின் எதிர்தரப்பினரின் ஆதரவாளர்கள் என்று என்னிடம் கூறியிருந்தார்" என்று கூறினார். "இளம் தலைவர்களுக்கு 24 எம்.பி.க்களின் அதரவு இருந்தது. யஷ்வந்த்ராவ் சவாணுக்கு 17, ஜக்ஜீவன் ராமுக்கு 13, பிரம்மானந்த் ரெட்டிக்கு 11, கமலாபதி திரிபாடிக்கு 8, ஹேம்வதி நந்தன் பகுகுணாவுக்கு 5, டி.பி. மிஸ்ராவுக்கு 4, ஷியாமா சரண் சுக்லாவுக்கு 3 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தது. இது தவிர, தனிப்பட்ட, அரசியல் மற்றும் பிற காரணங்களால் 15 எம்.பி.க்கள் இந்திரா காந்தியை எதிர்க்கின்றனர்." (ஷா கமிஷன் ஆவணங்கள், பொருள் கோப்பு 1, பக்கம் 25-26) இந்திரா காந்திக்கு இருதரப்பு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை எழுந்தது. கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் மற்றும் பிரதினவ் அனில் ஆகியோரின் கூற்றுப்படி, "அரசியலமைப்பை திருத்தலாம் என்றால் அதற்கு நாடாளுமன்றத்தில் அவருக்கு தேவையான பெரும்பான்மை இல்லை என்பது முதலாவது பிரச்னை. அடுத்து, இந்திரா காந்தியின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 191 என்பதிலிருந்து 175 அல்லது அதற்கும் குறைவாகிவிட்டால், தங்கள் கட்சியின் வேறொரு தலைவரின் தலைமையை ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்திராவை கைவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததை நிராகரிக்க முடியாது." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திரா காந்தியின் செயலாளர் பி.என். தார் (வலது) திசை மாறிய காற்று ஆனால் ஜூன் 18ஆம் தேதிக்குள், காற்று இந்திராவின் பக்கம் வீசத் தொடங்கியது. இதற்குக் காரணம், அதுவரை நிலைமை அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்த யஷ்வந்த்ராவ் சவாணும், ஸ்வர்ண் சிங்கும் இந்திராவிற்கு சாதகமாக வந்தனர். அதற்குள் தனக்கு முன்னால் மாபெரும் சவால் இருப்பதை ஜக்ஜீவன் ராம் உணர்ந்துவிட்டார். ஒருபுறம், டெல்லியில் காலியாகவிருக்கும் பதவிக்கு போட்டியாளர்கள் பலர் இருந்தனர் என்றாலும், அவர்கள் போட்டியிட வேண்டியது இந்திரா காந்தியுடன் என்பது முக்கியமானதாக இருந்தது. பிரதமராக அவர் பதவி வகிக்கலாமா என்பதில் சிக்கல் எழுந்திருக்கலாம், ஆனால் கட்சி அமைப்பில் இந்திராவின் பிடி தளரவில்லை. பட மூலாதாரம், Getty Images இந்திராவின் தலைமையின் மீதான நம்பிக்கையை உறுதி செய்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான 'Two faces of Indira Gandhi' புத்தகத்தில் உமா வாசுதேவ் இவ்வாறு எழுதுகிறார், "தலைமைக்கான போட்டியில் இணைந்தால், மிகப் பெரிய நெருக்கடி ஏற்படும் என்பதை ஜக்ஜீவன் ராம் உணர்ந்திருந்தார். அத்துடன் கட்சி மீண்டும் பிளவுபடவும் வாய்ப்பிருந்தது, அதற்கு அவர் தயாராக இல்லை." ஜக்ஜீவன் ராம் எதிர்க்கவில்லை என்ற தகவல் இந்திரா காந்திக்கு தெரியவந்ததும், அவர் தனது தலைமையின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்த காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தை கூட்டுமாறு சித்தார்த்த சங்கர் ரே மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வி.பி. ராஜு ஆகியோரிடம் கேட்டுக் கொண்டார். ஜூன் 18 அன்று நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த மொத்தம் 518 காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இந்திரா காந்தியின் தலைமையின் மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன், இந்திராவின் தலைமை நாட்டிற்கு இன்றியமையாதது என்றும் கூறினார்கள். ஆரம்பத்தில் சுமார் 70 காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற இளம் காங்கிரஸ் தலைவர் சந்திரசேகருக்கு கட்சியில் ஆதரவு குறையத் தொடக்கியது. ஜெயபிரகாஷ் நாராயணனை பெருமைப்படுத்தும் வகையில் சந்திரசேகர் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தபோது, 20-25 காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் இந்திராவுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களுடன் இருந்த ஒடிசா மாநில முதலமைச்சர் நந்தினி சத்பதி, ஜூன் 18ஆம் தேதிக்குள் இந்திரா காந்தியுடன் இணைந்தார். அடுத்த சில நாட்களில், காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் இந்திராவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். இருந்தபோதிலும் காங்கிரஸ் தலைவர்களிடையே தனக்கு முழு ஆதரவு இல்லை என்பதை இந்திரா காந்தி உணர்ந்தார். இந்த உணர்தலே, அவசரநிலையை அறிவிக்கும் அவரது முடிவுக்கு வலு சேர்த்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜனதா கட்சி தலைவர் சந்திரசேகர் மற்றும் ஒடிசா முதல்வர் நந்தினி சத்பதி எமர்ஜென்சி குறித்த தனது முடிவை மாற்றிக்கொண்ட இந்திரா காந்தி 1975 ஆகஸ்ட் மாதத்திற்குள், நாட்டில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி நிலையில் சிறிது தளர்வு அளிக்க அல்லது அதை முற்றிலுமாக நீக்க திட்டமிட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. மழை நன்றாக பெய்தது, பணவீக்கம் மற்றும் வேலையின்மை விகிதம் குறைந்திருந்தது. எதிர்க்கட்சிகள் முற்றிலும் பலவீனமடைந்திருந்தன, அடுத்த ஆறு அல்லது ஏழு மாதங்களில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெறவிருந்தன என எமர்ஜென்சியை தளர்த்தவோ, அகற்றவோ பல காரணங்கள் இருந்தன. "ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றவிருந்த உரையில் இந்திரா காந்தி எமர்ஜென்சி தொடர்பான தளர்வை அல்லது ரத்து செய்வதை அறிவிக்கவிருந்தார், ஆனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை வங்கதேசத்தில் நடந்த மோசமான சம்பவம் இந்தியாவின் அரசியல் சமன்பாட்டை மாற்றியது" என்று புபுல் ஜெயகர் எழுதுகிறார். ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படுகொலை, இந்திரா காந்திக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கோட்டையில் உரை நிகழ்த்துவதற்கு முன், தனது நண்பர் புபுல் ஜெயக்கரிடம், "நான் யாரை நம்புவது?" என்று இந்திரா காந்தி கேட்டார். வங்கதேசத்தில் நடந்த கொலையின் எதிரொலி, தனது சொந்த பாதுகாப்பைப் பற்றிய இந்திராவின் கவலைகளை அதிகரித்தது. பட மூலாதாரம், PENGUINE படக்குறிப்பு, புபுல் ஜெயக்கரின் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு இந்திராவின் உயிருக்கு ஆபத்து 1975 ஆகஸ்ட் 19ஆம் நாளன்று, எதிர்க்கட்சியைச் சேர்ந்த என்.ஜி. கோருக்கு வங்கதேசத்தில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதிய கடிதத்தில், "உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ள நேரத்தில், அவசரநிலையைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று எழுதினார். "ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, 'The Day of the Jackal' பாணியில் இந்திரா காந்தியைக் கொல்லும் நோக்கத்துடன் இருந்த தஜா ராம் சாங்வான் என்ற ராணுவ கேப்டன், டெலஸ்கோபிக் துப்பாக்கியுடன் பிடிபட்டார்" என்று குல்தீப் நாயர் தனது 'தி ஜட்ஜ்மென்ட்' புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதே ஆண்டு மார்ச் 18ஆம் தேதி, எமர்ஜென்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, இந்திரா காந்தி சாட்சியமளிக்க ஆஜராக வேண்டியிருந்த அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே துப்பாக்கியுடன் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்தியாவில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதன் பின்னணியில், அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர, இந்திரா காந்தியின் தலைமைக்கு எதிரான சவால், காங்கிரஸின் உட்கட்சிப்பூசல், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜே.பி.யின் இயக்கம் மற்றும் இந்திரா காந்தியின் உயிருக்கு இருந்த அச்சுறுத்தல் என பல முக்கியமான காரணங்கள் இருந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939q7xvnnyo
-
வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர் இறைக்கும் இயந்திரம் பயனாளர்களுக்கு வழங்கி வைப்பு
03 Aug, 2025 | 03:39 PM ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களினால் நீர் இறைக்கும் இயந்திரம் பயனாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையின் அவசர அவசியத்தினை கவனத்தில் எடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான பா.ஸ்ரீதரன், க.கஜகரன், மற்றும் ஆர்.சுகீர்த்தனா ஆகியோரின் கூட்டு முயற்சியினால் இந்த செயற்றிட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221685 அங்க தடையாம், இங்க உறுப்பினர்களே குழாய்க்கிணற்றில் போட்டு இறைக்க மோட்டர் வழங்குகினமாம்! என்னய்யா நடக்குது அங்க?!
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
புதிய வரலாறு எழுதிய ஜடேஜா - 23 ஆண்டு கால சாதனை முறியடிப்பு இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சகல துறை துடுப்பாட்ட வீரர் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) இமாலய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்திய அணி வெளிநாடுகளில் ஆடிய ஒரு டெஸ்ட் தொடரில் 6 ஆம் இலக்கத்தில் அல்லது அதற்குக் கீழான துடுப்பாட்ட வரிசையில் களமிறங்கி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா தன்வசப்படுத்தியுள்ளார். இதன்படி அவர் குறித்த தொடரில் 516 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 5 அரை சதங்களும், ஒரு சதமும் உள்ளடங்கும். அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் முன்னதாக விவிஎஸ் லக்ஷ்மன் கடந்த 2002 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 474 ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக இருந்தது. குறித்த சாதனையை 23 ஆண்டுகளின் பின்னர் ரவீந்திர ஜடேஜா முறியடித்துள்ளார் அத்துடன் SENA டெஸ்டில் 6 வது வரிசையில் களமிறங்கி இரண்டாவது சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/indian-cricketer-jadeja-break-world-record-1754192102?itm_source=parsely-top
-
'வன்மம்" கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு நூல்
செம்மணி மனித புதைகுழி நீதிக்கான பயணத்தில் புதிய கதவுகளை திறந்துவிடும்; அது மனிதபடுகொலை, யுத்த குற்றம் இடம்பெற்ற இடம், இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன - சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ் இரத்தினவேல் Published By: Rajeeban 03 Aug, 2025 | 12:33 PM நீதிக்கான பயணத்தில் செம்மணி மனித புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும். இவை பெரியளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட புதைகுழிகள் - இது மனிதபடுகொலை யுத்த குற்றம் இடம்பெற்ற இடம் - இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்துள்ள சிரேஸ்ட சட்டத்தரணி கேஎஸ் இரத்தினவேல் கடந்தகால அரசாங்கங்களை போலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுவதாக தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற 'வன்மம்" கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கு நூல் அறிமுகநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கிருஷாந்தி குமாரசுவாமி கொலை செம்மணி என்ற பாரிய புதைகுழியை திறந்துவிட்டது. சோமரத்ன ராஜபக்ச தனது வாக்குமூலத்தின்போது "நான் மாத்திரம் இதில் தொடர்புபட்டிருக்கவில்லை, ஜெனரல்கள் தர அதிகாரிகள் கூட இதில் தொடர்புபட்டிருக்கின்றனர், அவர்கள் வழங்கும் உடல்களை நாங்கள் செம்மணியில் புதைப்போம்" என தெரிவித்திருந்தார். செம்மணி புதைகுழிகளில் 500க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டன என அவர் வாக்குமூலம் வழங்கியதை தொடர்ந்து இடம்பெற்ற அகழ்வுகளின் போது 1999 இல் 15 உடல்களை மீட்டார்கள். ஆனால் தொடர்ந்து உடல்களை அகழ்வதை ஏதோ ஒரு காரணத்திற்காக நிறுத்திவிட்டார்கள், அரசியல் அழுத்தம் என்றார்கள். எனினும் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்திருக்கின்றது. சித்துப்பாத்தி இந்துக்களின் மயானம், அங்கு உடல்கள் புதைக்கப்படுவது இல்லை, அங்கு உடல்கள் எரிக்கப்படுகின்றன,சுடுகாடு.. செம்மணி மனித புதைகுழியில் 500க்கும் மேற்பட்ட உடல்கள் இருக்கலாம் என அனுமானிக்கப்படுகின்றது. ஸ்கான் நிறைவடைந்த நிலையில் மேலும் பல பகுதிகளில் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்து. இவை சாதாரண புதைகுழிகள் இல்லை, பெரியளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்ட புதைகுழிகள். இதனை செய்தவர்கள் அக்காலப்பகுதியில் சட்டத்திற்கு மேற்பட்டவர்களாக விளங்கியுள்ளனர், தங்களை சட்டத்திற்கு மேற்பட்டவர்களாக கருதியுள்ளனர், சட்டத்தை பற்றி கவலைப்படாதவர்களாக காணப்பட்டுள்ளனர். 1995ம் ஆண்டின் பின்னர் யாழ்குடாநாட்டிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்ட பின்னரே இது இடம்பெற்றுள்ளது. 1995 முதல் 2009 வரை இராணுவத்தினர் கேட்டுக்கேள்வி இல்லாதவர்கள் போல செயற்பட்டனர். யாழ் குடாநாட்டை முழுமையாக தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். சட்டத்திற்கு மேற்பட்ட அதிகாரங்கள் அவர்களிற்கு காணப்பட்டன. அவர்கள் சட்டத்திற்கு பயப்படாதவர்களாக தான்தோன்றித்தனமாக செயற்படுபவர்களாக காணப்பட்டனர். இராணுவத்தினரே செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. புதிய அரசாங்கம் காரணமாகவே செம்மணி மனித புதைகுழி அகழ்வு சாத்தியமானது என சிலர் தெரிவிக்கின்றனர், காலம்தான் இதற்கு பதில்சொல்லவேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோர்க்கர் டேர்க்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் என தகவல் வெளியானதும் அவர் கட்டாயம் செம்மணி மனித புதைகுழி காணப்படும் பகுதியை சென்று பார்க்கவேண்டும், நேரடியாக சென்று பார்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம். இது முக்கியமான விடயம் அவர் செம்மணிக்கு செல்வது குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் கட்டாயம் செம்மணிக்கு விஜயம் செய்யவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம், இலங்கை வெளிவிவகார அமைச்சும் இதற்கு சாதகமான பதிலை வழங்கியிருந்தது. எனினும் பின்னர் திடீர் என செம்மணி புதைகுழி நீதவான்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால் மனித உரிமை ஆணையாளர் அங்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவருடைய அனுமதி அவசியம் என தெரிவித்தார்கள். அந்த காலப்பகுதியில் அகழ்வுகள் நிறுத்தப்பட்டிருந்ததால் அவரின் அனுமதி அவசியம் என்றார்கள். அனுமதி பெறும் விடயத்தை காணாமல்போனோர் அலுவலகம் செய்யும் என்றார்கள் எனினும் பின்னர் திடீர் என சட்டமா அதிபர் திணைக்களம் கையாளும் என்றார்கள். சட்டமா அதிபர் திணைக்களம் என்றால் இனி ஒன்றும் நடக்காது என்பது எங்களிற்கு தெரியும். அதன் காரணமாக நாங்கள் உடனடியாக நீதவான் நீதிமன்றத்தை நாடி அனுமதியை கோரினோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நேரடியாக சென்று பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்குமாறு கோரினோம். நீதிமன்றத்தில் அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆஜராகியிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மயானத்தின் கேட்டிற்கு வெளியேதான் நிற்கலாம் அவருக்கு உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்தார். எனினும் நாங்கள் இது மிகமுக்கிய - சர்வதேச இராஜதந்திரியை அவமதிக்கும் செயலாக அமையும், இலங்கை அரசாங்கத்துடனான உடன்பாட்டின் அடிப்படையிலேயே வோல்க்கெர் டேர்க் செம்மணிக்கு வருகின்றார் என சுட்டிக்காட்டினோம். அதனை தொடர்ந்து நீதவான் அதற்கான அனுமதியை வழங்கினார். நாடாளுமன்றத்தில் ஒன்றை சொல்கின்றார்கள் வெளியே வேறொன்றை செய்கின்றார்கள். கடந்தகால அரசாங்கங்கள் எப்படி செயற்பட்டனவோ அதேபோன்றே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது. நிதி அனுமதியை பெறுவது மிகவும் கடினமான விடயமாக உள்ளது. இது மனிதபடுகொலை யுத்த குற்றம் இடம்பெற்ற இடம், ஒரு அடி தோன்றினாலே உடல்கள் வெளிவருகின்றன. சம்பிரதாய பூர்வமாக அவை புதைக்கப்படவில்லை. இந்த உடல்கள் ஆடைகள் அற்ற விதத்தில் மரியாதை குறைவான விதத்தில்புதைக்கப்பட்டுள்ளன, சிறுவர்களின் உடல்கள் காணப்படுகின்றன. இது யுத்தத்தில் மரணித்தவர்கள் தொடர்பான புதைகுழியில்லை. எங்கள் சரித்திரத்தில், எங்கள் விடயங்களை நீதிமன்றம் மிகவும் குறைவான - வரையறுக்கப்பட்ட விதத்திலேயே அணுகியிருக்கின்றது. எங்கள் மக்களிற்கு நீதிமன்ற கட்டமைப்பில் நம்பிக்கையில்லை, பாதிக்கப்பட்ட மக்கள் காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் சர்வதேச விசாரணைகளையே எதிர்பார்க்கின்றனர் நம்புகின்றனர், உள்நாட்டு பொறிமுறையை அவர்கள் நம்புவதற்கான எந்த தடயமும் இல்லை.. சில அரசியல்வாதிகள் கூறுவதற்கு மாறாக எங்களிற்கு வேறு சாத்தியப்பாடுகளும் உள்ளன. வேறு பல நாடுகளில் தற்காலிக தீர்ப்பாயங்களை நிறுவியுள்ளனர். அதற்காக அவர்கள் சர்வதேச சட்டங்களை உருவாக்கியுள்ளனர். செம்மணி மனித புதைகுழி நிச்சயமாக மிகவும் முக்கியமானது நீதிக்கான பயணத்தில் செம்மணி மனித புதைகுழி புதிய கதவுகளை திறந்துவிடும். https://www.virakesari.lk/article/221677
-
எடையைக் குறைக்க ஜூஸ் மட்டுமே குடித்தவர் மரணம் - உணவுக் கட்டுப்பாட்டில் செய்யக் கூடாத தவறுகள்
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த 17 வயதான சக்தீஸ்வரன் என்கிற இளைஞர் கடந்த மே 24 ஆம் தேதி அவரது வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர காத்திருந்த சக்தீஸ்வரன் உடற்பயிற்சியிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். அவரின் இறப்பு தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சக்தீஸ்வரன் கடந்த சில மாதங்களாக இணையத்தில் அறிமுகமான சில திரவ உணவுமுறையைப் (டயட்) பின்பற்றி வந்ததாக அவர்களின் பெற்றோர் கூறியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, உடல்நலன் சார்ந்த காரணங்களுக்கான உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றுபவர்கள் முறையான ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். படக்குறிப்பு, சக்தீஸ்வரன் இளைஞர்களிடையே டயட் என்பதைப் பற்றிய தவறான புரிதல் இருப்பதாகக் கூறுகிறார் மூத்த உணவியல் நிபுணரான ரேஷ்மா அலீம். ஒரு மாதத்தில் குறைந்தது 10 பேராவது தவறான டயட் முறையால் ஏற்பட்ட சிக்கல்களுக்கான தன்னிடம் சிகிச்சைக்கு வருவதாக அவர் தெரிவித்தார். "டயட் என்பது உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதோ அல்லது குறைவாக உணவுகளை எடுப்பதோ அல்ல. முறையான டயட் என்றால் சரியான அளவில் உணவுகளை எடுத்துக் கொள்வது" எனத் தெரிவித்தார் ரேஷ்மா. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் குறிப்பாக உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் உடற்பயிற்சி நிபுணரான சுஜாதா. மருத்துவ சிக்கல்கள் உள்ளவர்களுக்கு சரியாக பின்பற்றப்படாத உணவு முறையால் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் இதயநோய் நிபுணரான அசோக் குமார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நிலையான உணவுமுறை தான் ஆரோக்கியமான இயக்கத்திற்கு உகந்தது. கலோரிகள் உட்கொள்வதை நாம் நிறுத்தினால் அது ஆபத்தானது. ஏனென்றால் உடலுக்குத் தேவையான கலோரிகள் உணவு மூலம் உள் எடுப்பது குறைகிறபோது உடலில் கல்லீரல் மற்றும் தசைகளில் உள்ள கலோரிகள் செரிமானம் ஆகத் துவங்கும்." "கார்போஹைட்ரேட்ஸ், கலோரிகள், நுண் ஊட்டச்சத்துக்கள் என அனைத்துமே சரியான அளவுகளில் கிடைக்க வேண்டும். இவைகளில் சமநிலை குறைகிறபோது தசைகள் உடைய ஆரம்பிக்கின்றன. நல்ல கொழுப்பும் சரியான அளவில் உடலில் இருக்க வேண்டும். எடை குறைக்க உடற்பயிற்சி செய்கிறபோது தசையும் குறையும்." "இதய தசைகள் குறைகிறபோது உடலுக்கு ரத்தம் செலுத்தப்படுவது குறையும். இதனால் இதய பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். ஒருவருக்கு ஏற்கெனவே மருத்துவ சிக்கல்கள் (pre-existing conditions) இருந்தால் அவை மேலும் மோசமாக்கும்." என்றார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் (ஐசிஎம்ஆர்) இயங்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இந்தியர்களுக்கு எவ்வளவு ஆற்றல் தேவை என்பதை வகைப்படுத்தி பரிந்துரைக்கிறது. அதன்படி, ஆண்களில் உடல் சார்ந்த வேலைகள் (Sedentary work) அதிகம் செய்யாத பெரிய நபர்களுக்கு நாளொன்றுக்கு 2,110 கிலோ கலோரி தேவைப்படுகிறது. அதுவே, ஓரளவிற்கு உடல் சார்ந்த வேலைகள் (Moderate work) உள்ள ஆண்களுக்கு நாளொன்றுக்கு 2,710 கிலோ கலோரி தேவைப்படுகிறது. கடினமான உடல் சார்ந்த வேலைகள் (Heavy work) செய்பவர்களுக்கு நாளொன்றுக்கு 3,470 கிலோ கலோரி தேவைப்படுகிறது. இதே பெண்களில் பெரியவர்களுக்கு முறையே 1,160, 2,130, 2,720 கிலோ கலோரி என இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து விதமான சத்துக்களும் அடங்கியிருக்க வேண்டும் என்கிறார் ரேஷ்மா. "உடலுக்கு தேவைப்படும் சத்துகள் கார்போஹைட்ரேட், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் வகைகள், புரத உணவான முட்டை அல்லது மாமிசங்கள் போன்ற பல உள்ளன. இவற்றை திரவ உணவுகளால் மட்டும் வழங்க முடியாது" என்றார். படக்குறிப்பு, மருத்துவ வட்டாரங்களில் இணையத்தைப் பார்த்து பின்பற்றும் உணவுப் பழக்கத்தை Fad diet என்று அழைக்கப்படுகிறது. "பழங்களை திரவ உணவாக உட்கொள்கிற போது அதில் உள்ள நார்ச் சத்துகளும் கழிந்துவிடும். ஆகவே இதனை ஃப்ரூட் டயட் எனச் சொல்ல முடியாது. ஜூஸ் டயட் என்று தான் கூற வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். ஐசிஎம்ஆர் பரிந்துரைக்கும் அளவு காய்கறிகள்: 400 கிராம் பழங்கள்: 100 கிராம் பருப்பு வகைகள், முட்டை அல்லது மாமிசம் - 85 கிராம் நட்ஸ் மற்றும் விதைகள் - 35 கிராம் கொழுப்பு மற்றும் எண்ணெய் - 27 கிராம் தானியங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் - 250 கிராம் சராசரியாக பரிந்துரைக்கப்பட்ட உணவு உட்கொள்ளும் அளவு இது. உடற்பயிற்சியில் ஈடுபடுவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்குப் பொருத்து இவை மாறுபடும் என்று தெரிவித்தார் ரேஷ்மி. இதற்கு ஒரு உதாரணத்தை முன்வைத்த சுஜாதா, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபவர்களுக்கு புரதச்சத்து அதிகமாக தேவைப்படும் என்பதால் அவர்களுக்கு உணவுமுறையில் புரதங்கள் கூடுதலாக பரிந்துரைக்கப்படும் என்றார். மருத்துவ வட்டாரங்களில் இணையத்தைப் பார்த்து பின்பற்றும் உணவுப் பழக்கத்தை ஃபேடு டயட் (Fad diet) என்று அழைக்கப்படுகிறது. "இரண்டு நாட்கள் திரவ ஆதாரங்களை எடுத்துக் கொண்டால் எடை சற்று குறையவே செய்யும். ஆனால் அதனால் வேறு சில சிக்கல்களும் வரும்" எனக் கூறினார் ரேஷ்மி தொடர்ந்து விவரித்த அவர், "ஒருவரின் ஆரோக்கியமான உடல் இயக்கத்திற்கு திட உணவும், திரவ உணவு என இரண்டுமே அவசியம். திரவ உணவை மட்டுமே எடுத்துக் கொண்டால் மூளை சார்ந்த, உடல் சார்ந்த எந்த வேலைகளையும் செய்வது கடினமாக இருக்கும். திட உணவுகளை ஒருவர் எடுத்துக் கொள்ளவில்லையென்றால் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தசையின் அளவு குறைந்துவிடும். உடலுக்கு தேவையான வைட்டமின் சி அல்லது பொட்டாசியம் போன்ற சத்துகள் கிடைக்காமல் போய்விடும்." என்று தெரிவித்தார். டயட் மேற்கொள்ள நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒருவரின் உடல்நிலையைப் பொருத்து தான் அவருக்கான உணவுமுறையைப் பரிந்துரைக்க முடியும் என்கிறார் ரேஷ்மா. ஒருவரின் உடல்நிலையைப் பொருத்து தான் அவருக்கான உணவுமுறையைப் பரிந்துரைக்க முடியும் என்கிறார் ரேஷ்மா. "ஒருவரின் ரத்தப் பரிசோதனை, கொழுப்பு அளவு, நுரையீரல், சிறுநீரகத்தின் நிலை, அவருக்கு ஏற்கெனவே உள்ள மருத்துவ சிக்கல்கள், குடும்பத்தில் மரபணு ரீதியாக உள்ள சிக்கல்கள் போன்றவற்றை அறிந்த பிறகே அவருக்கான உணவு முறையைப் பரிந்துரைக்க முடியும்." என்றார் ஒருவர் தனது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால் அதற்கு முறையாக பயிற்சி பெற்றவர்கள் மூலம் அறிவுரை பெறுவது தான் சிறந்தது என்றும் தெரிவித்தார். "மனித உடல் அமைப்பிலே திட உணவுகள் உட்கொள்வது என்பது அடிப்படையானது. திட உணவுகள் இல்லையென்றால் உடல் செரிமானம் மேற்கொள்ளாது. இதனால் உடல் திசுக்களையே செரிமானம் செய்யத் தொடங்குகிறது. அப்போது தான் குடலழற்சி போன்ற சிக்கல்கள் எழத் தொடங்குகின்றன." என்றார் அவர். உடற்பயிற்சி செய்பவர்கள் எவ்வாறு டயட் பின்பற்றலாம்? பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளாததைப் போல டயட்டையும் முறையான பரிந்துரை இல்லாமல் பின்பற்றக்கூடாது என்கிறார் சுஜாதா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சமூக ஊடகங்களைப் பார்த்து உணவு பழக்கங்கள், உணவு முறைகளை மாற்றிக் கொள்வது மிகவும் சிக்கலாக உள்ளது. தற்போது பலரும் இருவேளை உணவு, ஒருவேளை உணவு எனப் பின்பற்றுகிறார்கள். இதனால் பல சிக்கல்கள் எழுகின்றன. இதனுடன் சேர்ந்து தீவிர உடற்பயிற்சியும் மேற்கொள்ளும்போது சிக்கல்கள் அதிகமாகின்றன." என்று தெரிவித்தார் தசை அளவு குறைவதன் ஆபத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், "எடையை குறைக்க உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மாற்றினால் உடலில் தசையின் மற்றும் கொழுப்பின் அளவும் பெருமளிவு குறைகிறது. இதில் இதய தசை குறைவது தான் மிகவும் ஆபத்தானது. அப்போது தான் இதய நோய் வருவதற்கான சிக்கல்களும் அதிகரிக்கின்றன." என்றார். படக்குறிப்பு, டயட் மட்டுமல்ல ஒருவரின் உடற்பயிற்சியும் அவரின் வயது, எடை உடல்நிலை, அவரின் உடல் ஆரோக்கியம் எனப் பலவற்றைப் பொருத்து தான் பரிந்துரைக்கப்படுகிறது டயட் மட்டுமல்ல ஒருவரின் உடற்பயிற்சியும் அவரின் வயது, எடை உடல்நிலை, அவரின் உடல் ஆரோக்கியம் எனப் பலவற்றைப் பொருத்து தான் பரிந்துரைக்கப்படுகிறது என்று கூறியவர், "மனிதர்களின் உடல் பரவலாக மூன்று வகைகளின் கீழ் அடங்கும். மெலிதான உடல்வாகு உடையவர்கள், சிலருக்கு உடலிலே கொழுப்பு இருக்கும், சிலருக்கு தசை அளவு கூடுதலாக இருக்கும். மரபணு ரீதியாக இதய நோய் வருகிறது என்றால் அவருக்கு கார்டியோ சார்ந்து தீவிர உடற்பயிற்சி வழங்க முடியாது. ஒருவரின் முழுமையான உடல்நிலை, அவருக்கு ஏற்கெனவே உள்ள பிரச்னைகள், குடும்பத்தில் பரம்பரை ரீதியாக உள்ள சிக்கல்களைப் பொருத்து தான் தகுந்த உடற்பயிற்சி பரிந்துரைக்கப்படும்." என்று தெரிவித்தார். ஒருவர் எதிர்கொள்ளும் அழுத்தமும் உடற்பயிற்சியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக விவரித்தவர், "ஒருவருக்கு என்ன மாதிரியான மன அழுத்தம் உள்ளது, அவரின் வேலை அழுத்தம் என்ன மாதிரி உள்ளது, எந்த அளவிற்கு ஆழமான உறக்கம் அவருக்கு கிடைக்கிறது, அவரின் தனிப்பட்ட மனநிலை, சமூக வட்டம் எப்படிப்பட்டதாக உள்ளது என அனைத்துமே இதில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கின்றன" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr5rmmq7j5mo
-
ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை - ஹமாஸ்
03 Aug, 2025 | 10:31 AM சுதந்திர பாலஸ்தீன தேசமொன்று உருவாகும் வரை ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது. 2007 முதல்; காசாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹமாஸ் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வேண்டுகோள்கள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளித்துள்ள ஹமாஸ் ஜெரூசலேமை தலைநகராக கொண்ட சுதந்திரமான முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாவிட்டால் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளது. இதேவேளை ஹமாஸ் தன்னிடமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதியை காண்பிக்கும் வீடியோவொன்றையும் வெளியிட்டுள்ளது. எவியதார் டேவிட் என்ற பணயக்கைதியின் வீடியோவையே ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது, மிகவும் மெலிந்த நிலையில் காணப்படும் அவர் ஒரு குழியை வெட்டுகின்றார், இந்த குழி எனக்கானது என அவர் தெரிவிக்கின்றார். பணயக்கைதிகளும் பட்டினி கிடக்கின்றார்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/221664
-
தமிழ்த் தேசிய பிரச்சினை விடயத்தில் கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் அரசு பிற்போக்குத்தனமாக உள்ளது ; தயான் ஜயத்திலக்க சுட்டிக்காட்டு
03 Aug, 2025 | 11:44 AM ஆர்.ராம் இந்திய எதிர்ப்புவாதத்துக்கு முன்னதாக ஜே.வி.பி. தமிழ் மக்களின் சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நிராகரித்துள்ளதோடு அதனை தொடர்ச்சியாகவும் பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பட்ட இராஜதந்திரியான கலாநிதி. தயான் ஜயத்திலக்க கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் பிற்போக்குத்தனமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்பின்னர் 1983ஜுலைக்குப் பின்னர் தெற்கு நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய ஒன்றோடொன்று இணைந்த ஆனால் வேறுபடுத்தக்கூடிய இரண்டு அரசியல் நிகழ்வுகள் இருந்தன. ஆதிலொன்று தமிழ் கேள்விக்கான அரசியல் தீர்வுக்கான கவன மாற்றம் இரண்டாவது இந்தியாவின் வளர்ந்து வரும் வகிபாகமாகும். கறுப்பு ஜுலை தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வு தேவை என்பதை வெளிப்படுத்தியது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கில் அரை தன்னாட்சி அதிகார சுய-நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டதாக 1957இல் பண்டாரநாயக்க மற்றும் செல்வநாயகம் இடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. 1983நிகழ்வுகளுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தடைசெய்யப்பட்ட ஜே.வி.பி. எந்தப் பக்கத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டது? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர 1983 மற்றும் 1984 இல் தனது தலைமறைவுக் காலத்தில் கட்சியின் மத்திய குழுவில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார், அது 1985 இல் தமிழீழப் போராட்டத்திற்கு என்ன தீர்வு என்ற தலைப்பில் 350பக்கங்களைக் கொண்ட புத்தகமாக இரகசியமாக வெளியிடப்பட்டது. அதில் அவர் தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான கேள்விக்கு ஒரு தீர்வாக எந்தவொரு சுயாட்சி முறைமையையோ அல்லது அதிகாரப்பகிர்வையோ ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அவ்விதமான கோரிக்கைகளை முற்றிலும் நிராகரித்து எதிர்த்திருந்தார். அவரது வெளிப்படையான நிராகரிப்பில் அவரது கட்சி 1981இல் போட்டியிட்ட மாவட்ட அபிவிருத்தி சபைகளைக்கூட உள்ளடக்கப்பட்டிருந்தது. ஜே.வி.பி.யின் அதிகாரப் பகிர்வுக்கு எதிரான நிலைப்பாடு இந்திய இராணுவத் தலையீட்டிற்கு எதிர்வினையாக ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு முன்னரேயே இருந்தது. ஜுலை கலவரத்துக்குப் பின்னர் ஜி பார்த்தசாரதி தலைமையிலான தூதுக்குழு விஜயத்துடன் இந்திய இராஜதந்திர வகிபாகம் ஆரம்பித்திருந்தாலும் ஜே.வி.பி. அதற்கு முன்னராகவே தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தது. அதன்பின்னர் இந்திய தலையீட்டையும் ஜே.வி.பி எதிர்த்தது. ஜே.வி.பி.இடதுசாரித்து சிந்தனைகளைக் கொண்டது என்ற அடிப்படையில் சமஷ்டியை ஏற்காது விட்டாலும் சீன மற்றும் வியட்நாமிய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வெளிப்படையான ஒற்றையாட்சி அரசின் கீழ் இன-பிராந்திய சுயாட்சியை ஏற்றிருந்தன. ஆனால் ஜே.வி.பி.அதற்கு கூட தயாரக இல்லை. இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக, தமிழ்த் தேசியப் பிரச்சினை சம்பந்தமாக விஜேவீர 1985இல் வெளியிட்ட புத்தகத்தில் வெளிப்படுத்தி நிலைப்பாடுகளில் இருந்து தற்போது வரையில் அக்கட்சி மாறவில்லை. அக்கட்சி தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வாகவோ அல்லது தற்காலிகமான தீர்வாகவோ அல்லது பகுதியளவிலான தீர்வாகவோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல்-பிராந்திய சுயாட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய பிரச்சினையை ஒரு தனித்துவமான அரசியல் கோரிக்கையாகக்கூட அங்கீகரிக்கவில்லை. லெனினின் கோட்பாட்டில் பார்க்கின்றபோது ஜே.வி.பியானது சொல்லில் சோசலிசத்தைக் கொண்டிருந்தாலும் செயலில் பெருமிதத்தையே (இனவாதத்தையே)கொண்டிருக்கின்றது என்ற வரையறைக்குள்யே காணப்படுகின்றது. விசேடமாக அரைச்சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களைக் கூட அங்கீகரிப்பதற்கு முன்வராது விட்டாலும் கூட, 13ஆவது திருத்தச்சட்டத்தினைக் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் முடக்கப்பட்டு 68ஆண்டுகள், ஜூலை கலவரம் நிகழ்ந்து 42 ஆண்டுகளாகின்றன, மாகாண சபைகளுக்கு முதன்முதலாக தேர்தல் நடைபெற்று பிறகு 35 ஆண்டுகளாகின்றன, வடக்கு மாகாண சபைக்கு நடத்தப்பட்ட தேர்தல் முடிவiடைந்து 12ஆண்டுகளாகின்றன. ஆனால் தற்போதும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாகாண சபைத்தேர்தல்கள் குறித்து மௌனமாக உள்ளார். தமிழ் தேசியப் பிரச்சினை குறித்த அரசியல் உரையாடல், தற்போது 1957க்கு முந்தைய காலத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசியல் வெற்றிடம், தமிழ் புலம்பெயர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க புதிய இனப்படுகொலைக்கு நீதி கோரும் தலைமுறைக்கு எதிராக அநுர அரசை அரசியல் ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் பாதுகாப்பற்றதாக விட்டுவிடும். அரசுக்கு தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகள் மற்றும் முதலமைச்சர்களைக் கொண்டுள்ளோம் என்று பகிரங்கமாக கூறுவதற்கு முடியாது விட்டால் தெற்கில் சிங்கள பெரும்பான்மை இனப்படுகொலை'என்ற விடயத்தினைப் பயன்படுத்தி அதிதீவிர தேசியவாதத்துடன் பதிலளிக்கும் நிலைமையே உருவாகும். இது இனங்களுக்கு இடையிலான துருவமயமாக்கலை மேலும் அதிகரிக்கும். இந்த விடயம் சம்பந்தமாக ஜே.வி.பிக்கு கவலைகள் காணப்படவில்லை என்பது வெளிப்படையான விடயமாகும். ஜே.ஆர்.ஜயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய ஜனாதிபதிகளின் கீழாக மாகாண சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. உலகளாவிய இடதுசாரி-தாராளவாதிகளின் வெறுப்பின் சின்னமாக இருந்த மஹிந்த கூட தனது முதல் மற்றும் இரண்டாவது பதவிக்காலங்களில் இரண்டு தடவைகள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் போலியான முற்போக்கு நிர்வாகம், மற்றும் அதனை ஆதரிக்கும் பிரதான ஜனநாயகக் கட்சிகளும் தலைவர்களும் 1980களில் நிகழ்ந்தேறிய துன்பத்தின் முக்கிய முற்போக்கான கட்டமைப்பு விளைவான தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளை, மௌனமான புறக்கணிப்பால் அகற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்காக ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை, அவர்கள் திரண்ட மக்களாக வாழும் அருகருகே உள்ள பகுதிகளை இணைக்க முடியாதவாறு ஜே.வி.பி பறித்துவிட்டது. அத்தகைய ஜே.வி.பியினர் தற்போது என்.பி.பிஆக இருந்தாலும் மகாண சபைகளுக்கான தேர்தல் விடயத்தில் எதிர்-சீர்திருத்தவாதிகளாகவே காண்பிப்பதோடு, ஜெயவர்த்தன, சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை விட மிகவும் பிற்போக்குத்தனமானவர்களதக உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/221668
-
ரஷ்யாவின் கருத்துக்கு எதிர்வினை - அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்
அணுசக்தி நீர்மூழ்கி நகர்வு: அமெரிக்கா - ரஷ்யா அணு ஆயுத மோதலுக்கு வழிவகுக்குமா? ஓர் அலசல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் புதின் கட்டுரை தகவல் ஸ்டீவ் ரோசென்பெர்க் ரஷ்ய ஆசிரியர், மாஸ்கோவிலிருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் சமூக ஊடகத்தில் நிகழ்ந்த ஒரு வாக்குவாதத்தால் அணு ஆயுத மோதல் தூண்டப்படுவது வரலாற்றில் இதுவே முதன்முறையா? ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவின் சமூக வலைதள பதிவுகளால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யாவை நோக்கி நகர்த்த உத்தரவிட்டுள்ளார். இதற்கு ரஷ்யா எப்படி எதிர்வினையாற்றும்? அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான அணு ஆயுத மோதல் உடனடியாக நிகழக் கூடிய ஒன்றாக உள்ளதா? இது, 1962ம் ஆண்டில் நிகழ்ந்த கியூபா ஏவுகணை நெருக்கடியின் இணைய யுக வடிவமாக உள்ளதா? ரஷ்யாவின் ஆரம்பக்கட்ட எதிர்வினைகளின் அடிப்படையில் நான் அவ்வாறு இல்லை என சந்தேகிக்கிறேன். டிரம்பின் அறிவிப்பை ரஷ்ய செய்தி ஊடகங்கள் நிராகரித்துள்ளன. மாஸ்கோவ்ஸ்கி கோம்சோமோலெட்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் ராணுவ ஆய்வாளர் ஒருவர் டிரம்ப் "பிடிவாதம் காட்டுவதாக" கூறுகிறார். ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கோமெர்சென்ட் (Kommersant) செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து பேசுவது, "அர்த்தமற்ற உளறல். அதன் மூலம் அவர் உற்சாகம் அடைகிறார்." என்றார். "டிரம்ப் (நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்து) எந்த உத்தரவையும் வழங்கவில்லை என உறுதியாக கூறுகிறேன்," என ரஷ்ய பாதுகாப்பு நிபுணர் அதே செய்தித்தாளிடம் கூறினார். பட மூலாதாரம், Getty Images 2017-ம் ஆண்டு, வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பியதாக டிரம்ப் கூறியதையும் அந்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்பின் சிறிது காலத்திலேயே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் டிரம்ப் சந்திப்பு நடத்தினார். நீர்மூழ்கிக் கப்பல்களை நகர்த்துவது குறித்த சமீபத்திய நிகழ்வுகள் அமெரிக்கா-ரஷ்யா உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இருக்குமா? நான் அவ்வளவு தூரம் செல்ல மாட்டேன். ஆனால், ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து வரும் எதிர்வினைகள் சுவாரஸ்யமாக உள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையிடமிருந்தோ அல்லது வெளியுறவு அமைச்சகம் அல்லது பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்தோ இந்த கட்டுரையை எழுதும் வரை எவ்வித கருத்தும் வரவில்லை. ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்காவுக்கு நெருக்கமாக நிறுத்தப்படுவது குறித்தும் நான் எவ்வித அறிவிப்பையும் பார்க்கவில்லை. இது, ரஷ்யா இன்னும் இந்த சூழல் குறித்து ஆராய்ந்து வருகிறது, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறது என கருதலாம், அல்லது எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கலாம். எதிர்வினையாற்ற வேண்டிய அவசியம் இல்லை என ரஷ்யா நினைப்பதாகவே, முன்பு நான் குறிப்பிட்ட ரஷ்ய ஊடகங்களில் வெளியான எதிர்வினைகள் உணர்த்துகின்றன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் கருத்து மோதல்களுக்குப் பிறகு, கிம் ஜாங் உன்னும் டொனால்ட் டிரம்பும் பலமுறை சந்தித்தனர். டிரம்ப் - மெத்வதேவ் கருத்து மோதல் டிரம்ப் கடந்த சில தினங்களாகவே சமூக ஊடகத்தில் மெத்வதேவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார். யுக்ரேனுடனான போரை நிறுத்துவதற்கு தான் அளித்த 50 நாட்கள் காலக்கெடுவை டிரம்ப் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களாக மாற்றினார். இதையடுத்து, மெத்வதேவ் தன் சமூக வலைதள பக்கத்தில் "டிரம்ப் ரஷ்யாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து விளையாடுகிறார்… ஒவ்வொரு இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தல், போரை நோக்கிய ஒரு நகர்வு" என தெரிவித்திருந்தார். டிரம்ப் அதற்கு, "தோல்வியடைந்த, தான் இன்னும் ஆட்சியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ரஷ்ய முன்னாள் அதிபர் மெத்வதேவிடம், தன் பேச்சில் கவனமாக இருக்குமாறு கூறுங்கள். அவர் மிகவும் ஆபத்தான பிரதேசத்துக்குள் நுழைகிறார்" என தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் (வலது) சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்களில் டொனால்ட் டிரம்புடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகிறார் இதற்கு மெத்வதேவ் தனது அடுத்த பதிவில், சோவியத் ஒன்றியத்தின் தயாரிப்பான தானியங்கி அணு ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பான "டெட் ஹேன்ட்" (Dead Hand) பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இதை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. 2008 முதல் 2012 வரை ரஷ்ய அதிபராக மெத்வதேவ் இருந்தபோது, அவர் ஒப்பீட்டளவில் ஒரு தாராளவாத ஆளுமையாக பார்க்கப்பட்டார். "சுதந்திரம் இல்லாமல் இருப்பதை விட சுதந்திரம் சிறந்தது," என்பது அவருடைய பிரபலமான மேற்கோளாகும். ஆனால், நாளடைவில் அவர் ஆக்ரோஷமானவராக மாறிவருகிறார். குறிப்பாக, யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்கு பிந்தைய கால கட்டத்தில் அதிரடியான, மேற்கு நாடுகளுக்கு எதிரான சமூக வலைதள பதிவுகளுக்காக அவர் அறியப்படுகிறார். ரஷ்ய அதிபர் மாளிகையின் குரலாக பார்க்கப்படாததால், அவரது பல கருத்துகள் கவனிக்கப்படாமல் இருந்தன. அமெரிக்க அதிபரால் அவருடைய கருத்துகள் திடீரென கவனிக்கப்பட்டன. கவனிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், டிரம்பின் எரிச்சலுக்கும் அவர் ஆளானார். சமூக ஊடக பதிவை ஒருவர் விரும்பாமல் இருப்பது வேறு விஷயம். நாம் எல்லோரும் அதில் இருக்கிறோம். ஆனால், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவது வரை செல்வது மிகையான ஒன்றாக உள்ளது. டிரம்ப் ஏன் அப்படி செய்தார்? ஆனால், டிரம்ப் ஏன் அவ்வாறு செய்தார்? நியூஸ்மேக்ஸுக்கு டிரம்ப் இதுகுறித்து தன் விளக்கத்தை அளித்துள்ளார்: அதில், "மெத்வதேவ் அணு ஆயுதங்கள் குறித்து மோசமான சில விஷயங்களை பேசியுள்ளார். அணு ஆயுதம் உச்சபட்ச எச்சரிக்கையாக இருப்பதால், அந்த வார்த்தையை குறிப்பிடும் போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீதான டிரம்பின் புதிய வரிகளால் யாருக்கு பாதிப்பு அதிகம்? ரஷ்யாவின் கருத்துக்கு எதிர்வினை - அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப் 'இந்தியாவுக்கு பாகிஸ்தான் கச்சா எண்ணெய் விற்கலாம்' - பாகிஸ்தானின் எண்ணெய் வளம் பற்றிய ஒரு பார்வை ஆறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை - இரான் கடும் எதிர்வினை ஏன்? ஆனால், சமூக ஊடகம் வாயிலாக அணு ஆயுத போருக்கு அச்சுறுத்துவதாக மெத்வதேவ் மீது நீண்ட காலமாக குற்றம் சாட்டப்படுகிறது. இது புதிதல்ல. மெத்வதேவின் சமீபத்திய பதிவுகளை மிகவும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு டிரம்ப் எதிர்வினையாற்றியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதுவொரு வியூகமாகவும் இருக்கலாம். டிரம்பின் வணிகத்திலும் அரசியலிலும் அவர் காரியமாற்றும் விதத்தில், கணிக்க முடியாத தன்மை உள்ளது; பேச்சுவார்த்தைக்கு முன் அல்லது பேச்சுவார்த்தையின் போது போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளின் சமநிலையை குலைக்கக் கூடிய எதிர்பாராத முடிவுகளை எடுப்பது அவருடைய வியூகமாக உள்ளது. யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது என்கிறது அவரது உறுதிமொழி ஓர் உதாரணமாகும். நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வு, இதன்கீழ் வரலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx294j42rd2o
-
திருகோணமலை ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு
‘கன்சைட்’ சித்திரவதை சிறைக் கூண்டுகளில் வெளிநாட்டவர்கள் உட்பட 60 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை அம்பலம் ; முன்னாள் கடற்படை தளபதி உலுகேதென்னவின் வாக்கு மூலத்தால் விரிவடையும் விசாரணைகள் Published By: Digital Desk 3 03 Aug, 2025 | 11:03 AM (எம்.எப்.எம்.பஸீர்) திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் படியும் மேலும் பல சாட்சிகளின் பிரகாரமும் குறித்த சட்ட விரோத சிறையில் இரு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 60 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தததாக சி.ஐ.டி. யினர் விசாரணையில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சி.ஐ.டி. அதிகாரிகள் குறித்த 60 பேரும் யாரென அடையாளம் காண்பதற்கு, கடற்படை தளபதியிடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை பொல்கஹகவல நீதிவானின் உத்தரவூடாக கோரியுள்ளனர். எனினும் அந்த தகவல்கலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட இதுவரை வழங்கவில்லையென சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தொடர்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது. இந்த வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பிலான விசாரணைகளில் ‘கன்சைட்’ எனும் நிலத்தடி வதை முகாம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று நடாத்திய விசாரணைகளின் போது கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவிக்ரம அல்லது கேகாலை சாந்த, இப்பாகமுவையைச் சேர்ந்த பிரதீப் ஆகியோரின் கடத்தல்கள் தொடர்பில் தகவல் வெளிப்பட்டன. இந்நிலையில் கேகாலை மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கொன்றின் பிரதிவாதியான சாந்த சமரவிக்ரம, இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் ‘கன்சைட்’ முகாமில் இருந்தமைக்கான ஆதாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்து அது குறித்து கோட்டை நீதிவானுக்கு அறிக்கையும் சமர்பித்தனர். அவ்வாறான நிலையில் கேகாலை மேல் நீதிமன்ற பதிவாளரின் முறைப்பாட்டுக்கு அமைய கேகாலையைச் சேர்ந்த குறித்து தனியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. கேகாலை சாந்த சமரவிக்ரம, அலவ்வ பொலிஸாரால் கடந்த 2010 ஜூலை 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் போது தப்பியோடியதாக பொலிஸ் தரப்பில் அப்போது கூறப்பட்டது. எனினும் விசாரணையில் பொலிஸ் அதிகாரிகள் கடற்படையினரின் உதவியுடன் அவரை ‘கன்சைட்’ முகாமில் சிறை வைத்து காணாமலாக்கியமை வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இது குறித்த விசாரணைகளில் இதுவரை அலவ்வ பொலிஸ் நிலையத்தின் அப்போதைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாரும், கன்சைட் வதை முகாமின் பொறுப்பாளராக இருந்த கொமாண்டர் ரணசிங்க உள்ளிட்ட 5 கடற்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையிலேயே கடந்த ஜூலை 28 ஆம் திகதி முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார். சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளின் போது 2010 ஜூலை 23 ஆம் திகதி காணாமல் போன கேகாலை சாந்த அதிலிருந்து 6 மாதங்கள் வரை திருகோணமலை ‘கன்சைட்’ நிலத்தடி சித்திரவதை முகாமில் இருந்தமை சாட்சிகளுடன் வெளிப்படுத்தப்ப்ட்டது. அதன்படியே, கடந்த 2010 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 2013 வரை கடற்படை உளவுத்துறை பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவிடம் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை நடாத்தியது. இதன்போது தான் 2010 ஒக்டோபர் முதலாம் திகதி உளவுத்துறை பணிப்பாளராக கடமையேற்ற பின்னர், அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவிடம் பெற்றுக்கொண்ட எழுத்து மூல அனுமதிக்கு அமைய ‘கன்சைட்’ முகாமை பார்வையிட சென்றதாக முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி.யினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு 40 முதல் 60 வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘கன்சைட்’ என்பதை பதிவு செய்யப்பட்ட சிறைச்சாலை அல்ல என்பதையும், அது சட்ட விரோத தடுப்பு மையம் என்பதையும் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன ஏற்றுக்கொன்டதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கும் அறிவித்துள்ளனர். அதன்படியே, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன தண்டனை சட்டக் கோவையின் 356,141,296,32,47 ஆகிய பிரிவின் கீழ் கடத்தல் மற்றும் சிறை வைப்பு, சட்டவிரோத கும்பல் ஒன்றின் உறுப்பினராக இருத்தமை, கொலை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட தண்டனைக் குரிய குற்றங்களை புரிந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த சட்ட விரோத செயலை அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திசாநாயக்க அறிந்திருந்ததாக சாட்சியங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், அவரையும் அப்போது கிழக்கு பிராந்திய கடற்படை தளபதியாக இருந்த கொலம்பகேவையும் விசாரணை வலயத்துக்குள் கொண்டு வந்து சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர். முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய, கன்சைட் முகாமை பார்வையிட தான் என்ர போது, அங்கு விஷேட உளவுப் பிரிவு என ஒரு பிரிவு செயற்பட்டதாகவும், அது கடற்படையின் உளவுத் துறையால் வழிநடத்தப்பட்ட பிரிவு அல்ல என்பதை தான் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார். குறித்த விசேட பிரிவுக்கு, உளவுத் துறையுடன் தொடர்புபடாத கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க கட்டளைகளை வழங்கியுள்ளதாகவும், அதில் ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி, கௌசல்யா ஆகிய கடற்படை வீர வீராங்கனைகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி பின்னர் தான் அந்த விசேட உளவுத்துறை பிரிவை கலைத்ததாகவும் நிஷாந்த உலுகேதென்ன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கடற்படை விசேட உளவுத்துறை தொடர்பிலும் சி.ஐ.டி. அவதானம் செலுத்தி விசாரித்து வருகின்றது. கடந்த ஜூலை 30 ஆம் திகதி நிஷாந்த உலுகேதென்னவை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும், முன் வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அடையாள அணிவகுப்பை இரத்துச் செய்தது. இந்த விவகாரத்தில், விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு பொறுப்பாளராக இருந்த பாரதி, கடற்படையின் விஜேகோன் உள்ளிட்ட சாட்சியாளர்கள் அளித்துள்ள சாட்சியங்களின் பிரகாரம் இரு வெளிநாட்டவர்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது. அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதனிடையே, இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இளங்கசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் நாமல், சார்ஜன் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை கடற்படை உளவுப் பிரிவு அச்சுறுத்தும் வண்ணம் பின் தொடர்ந்த்துள்ளமை குறித்து பொல்கஹவல நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கன்சைட்’ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் குறித்து கடற்படை வீரர் விஜேகோனின் சாட்சியத்தை மையபப்டுத்தி, பருத்தித் துறையை சேர்ந்த்த கரன், சரீதா எனும் கணவன் மனைவியிடம் சாட்சியம் பெற அவர்களை தேடி சி.ஐ.டி. குழு சென்ற போது கடற்படை உளவுப் பிரிவினர் அவர்களை பின் தொடர்ந்த்துள்ளனர். பருத்தித் துறையை சேர்ந்த குறித்த கணவன் மனைவி தற்போது சுவிட்சர்லாந்தில் வசிப்பது தெரியவரவே, சி.ஐ.டி.யினர் அவர்ளது வீட்டாரிடம் தகவல் பெற்று தொலைபேசியில் தொடர்புகொள்ள நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பின்னர் அவ்வீட்டுக்கு கடற்படையினர் சென்று விசாரித்துள்ளனர். இது குறித்து சி.ஐ.டி.யினர் தகவல் தெரிந்த பின்னர், சி.ஐ.டி.யினரை பிந்தொடர்ந்த கடற்படையினரை சி.ஐ.டி.க்கு அழைத்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர். இதன்போது காங்கேசன்துறை பகுதிக்கு பொறுப்பான கடற்படை உளவுத் துறை பொறுப்பதிகாரி லெப்டினன் கமாண்டர் ரூபசிங்க என்பவரே சி.ஐ.டி.யை பிந்தொடர உத்டவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து நீதிமன்றுக்கும் அறிவித்த விசாரணை அதிகாரிகள் ரூபசிங்கவை அழைத்து விசாரித்துள்ளனர். இதன்போது தனது முடிவுக்கு அமையவே தான் அவ்வுத்தர்வை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் கடந்த ஜூலை 30 ஆம் திகதி பொல்கஹவல நீதிவான் நீதிமன்றில் நிஷாந்த உலுகேதென்னவுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்த போது, குறித்த ரூபசிங்க எனும் லெப்டினன் கொமாண்டரும் அங்கு இருந்த நிலையில், இது குறித்து சி.ஐ.டி.யினர் நீதிவானுக்கும் அறிவித்துள்ளனர். இவ்வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி மீள விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதுவரை முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன விளக்கமரியலில் வைக்கப்ப்ட்டுள்ளார். அத்துடன் மேலதிக விசாரணை முன்னேற்றத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி சமர்ப்பிக்க நீதிவான் சி.ஐ.டி.யினருக்கு அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/221661
-
கரு உருவாகி 30 ஆண்டு கழித்து பிறந்த குழந்தை - மருத்துவ உலகில் புதிய ஆச்சர்யம்
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்பு படம் கட்டுரை தகவல் டானாய் நெஸ்டா குபெம்பா பிபிசி செய்திகள் 3 ஆகஸ்ட் 2025, 07:20 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை, புதிய உலக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. 35 வயதான லிண்ட்சே மற்றும் 34 வயதான டிம் பியர்ஸ் தம்பதிக்கு 2025 ஜூலை 26 சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது. தாடியஸ் டேனியல் பியர்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் பேசிய டிம் பியர்ஸ், "இது அறிவியல் புனைக்கதை திரைப்படத்தில் நடைபெறும் சம்பவத்தைப் போல் இருக்கிறது" என தனது குடும்பத்தினர் நினைப்பதாகக் கூறினார். கருவை உறைய வைத்து பின்னர் அதை பயன்படுத்தி குழந்தை பெறும் தொழில்நுட்பத்தில், நீண்ட காலமாக உறைநிலையில் இருந்து, நேரடி பிரசவம் மூலம் வெற்றிகரமாக பிறந்த குழந்தை இது என்று நம்பப்படுகிறது. இதற்கு முன்பு 1992 ஆம் ஆண்டு உறைய வைக்கப்பட்ட கருவிலிருந்து 2022 ஆம் ஆண்டு பிறந்த இரட்டைக் குழந்தைகள்தான் நீண்ட காலமாக உறைநிலையில் இருந்த கருவில் இருந்து பிறந்த குழந்தைகள் என்ற சாதனையை படைத்திருந்தனர் . 1994ஆம் ஆண்டில் லிண்டா ஆர்ச்சர்டு என்பவர் தனது கணவருடன் இணைந்து உருவாக்கிய கரு இது. தற்போது 62 வயதாகும் லிண்டா ஆர்ச்சர்டு, தனது அப்போதைய கணவருடன் இணைந்து ஐ.வி.எஃப் IVF மூலம் குழந்தை பெறும் முயற்சியில் நான்கு கருக்களை உருவாக்கினார். அதில் ஒன்றை பயன்படுத்தி பெண் குழந்தை பெற்றெடுத்தார். அந்த குழந்தை வளர்ந்து தற்போது 30 வயது அடைந்துவிட்டது. மற்ற மூன்று கருக்கள் சேமிப்பிலேயே இருந்தன. பட மூலாதாரம், Reuters லிண்டா ஆர்ச்சர்டுக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஆன பிறகும், அவர் தனது கருக்களை அகற்றவோ, ஆராய்ச்சிக்காக தானம் செய்யவோ அல்லது பெயர் குறிப்பிடாமல் வேறு குடும்பத்திற்கு கருவை தானமாக கொடுக்கவோ விரும்பவில்லை. ஏனென்றால், உறைநிலையில் இருக்கும் கரு, குழந்தையாக பெற்றெடுக்கப்பட்டாலும், அந்தக் குழந்தையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார். ஏனெனில் தன்னுடைய மகளுடன் அந்தக் குழந்தைக்கு தொடர்பு இருக்கவேண்டும் என்று விரும்பினார். நைட்லைட் கிறிஸ்டியன் அடாப்ஷன்ஸ் என்ற கிறிஸ்தவ கரு தத்தெடுப்பு நிறுவனத்துடன் தொடர்பு ஏற்படும் வரை, லிண்டா ஆர்ச்சர்ட், தனது கருக்களை சேமிப்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான டாலர்களை கட்டணமாக செலுத்தி வந்தார். லிண்டா ஆர்ச்சர்ட் தேர்ந்தெடுத்த ஸ்னோஃப்ளேக்ஸ் என்ற திட்டம், நன்கொடையாளர்கள் கருவை தத்தெடுக்கும் ஒரு ஜோடியைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது. அதாவது, கருவை நன்கொடையாக கொடுப்பவர், தத்தெடுப்பவர்களின் மதம், இனம் மற்றும் எந்த நாட்டவராக இருக்கவேண்டும் என்று தங்கள் விருப்பத்தின்படி நன்கொடை பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கலாம். திருமணமான, காகேஸியன், கிறித்தவ தம்பதிக்கு தனது கருவை தத்துக் கொடுக்க லிண்டா ஆர்ச்சர்டு விரும்பினார். அந்த தம்பதியினர் அமெரிக்காவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஏனெனில் தனது குழந்தை "நாட்டை விட்டு வெளியே செல்வதில்" தனக்கு விருப்பமில்லை என்று அவர் எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் தெரிவித்தார். லிண்டா ஆர்ச்சர்டின் விருப்பப்படியே நன்கொடையாளர்களாக லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் தம்பதியர் தத்தெடுக்க முன்வந்தனர். லிண்டா ஆர்ச்சர்டின் கருவை தத்தெடுக்க முடிவு செய்வதற்கு முன்பு, பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த தம்பதியர் குழந்தை பெறும் மருத்துவ நடைமுறையை மேற்கொண்ட டென்னசியில் உள்ள ரிஜாய்ஸ் கருத்தரித்தல் மையம் (Rejoice Fertility) என்ற ஐவிஎஃப் மருத்துவமனை, கரு எத்தனை ஆண்டுகளாக உறைநிலையில் இருந்தது அல்லது அதன் நிலைமையை பொருட்படுத்தாமல், கிடைத்த எந்தவொரு கருவையும் பயன்படுத்தி தம்பதிக்கு வெற்றிகரமாக குழந்தை பெறச் செய்வதே தங்களது நோக்கம் என்று கூறியது. தானும் தனது கணவரும் "எந்தவொரு சாதனையையும் முறியடிக்க" விரும்பவில்லை, மாறாக "ஒரு குழந்தையைப் பெறவே விரும்பினோம்" என்று லிண்ட்சே பியர்ஸ் கூறினார். தனது கருவிலிருந்து உருவான குழந்தையை இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்றும், ஆனால் தனது மகளைப் போலவே இருப்பதை காண முடிந்தது என்றும் லிண்டா ஆர்ச்சர்ட் எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn47zq2p8wko
-
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி; எச்சங்கள், பொருட்கள் தொடர்பில் தகவல் தாருங்கள் - காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பு
03 Aug, 2025 | 10:09 AM (நா.தனுஜா) கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் அவற்றுடன் கண்டறியப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடம் இருப்பின், அவர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை தமது அலுவலகத்துக்கு வருகைதந்தோ அல்லது தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோ அத்தகவல்களை வழங்கமுடியும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் உள்ள மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டத் தொல்பொருள் பகுப்பாய்வுகள் இந்த மனிதப்புதைகுழி 1994 - 1996 க்கு இடைப்பட்ட காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கூறுகின்றன. காணாமல்போன மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட நபர்களைக் கண்டுபிடிப்பதற்கு எமது அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பரந்துபட்ட முயற்சிகளின் ஓரங்கமாக, 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் 12(ஆ) பிரிவின் ஊடாக கீழான கடப்பாடுகளின் பிரகாரம் மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகளை எமது அலுவலகம் கண்காணிப்புவருகிறது. அதற்கமைய புதைகுழியில் உள்ள மனித எச்சங்களின் அடையாளம் குறித்துத் தீர்மானம் மேற்கொள்வதற்கு உதவுமாறு எமது அலுவலகத்திடம் முல்லைத்தீவு நீதவான் கோரிக்கைவிடுத்துள்ளார். இந்நிலையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பொதுமக்களிடம் இந்த வழக்குடன் தொடர்புடைய முக்கிய தகவல்கள் இருக்கக்கூடும் என எமது அலுவலகம் நம்புகிறது. எனவே கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களிடமிருந்து புதைகுழியில் உள்ள எச்சங்கள் தொடர்பான சாத்தியமான அடையாளங்கள், அவற்றின் உடலியல் அம்சங்கள், உடைகள், முன்னைய காலங்களில் ஏற்பட்டிருந்த காயங்கள் என்பன பற்றிய விபரங்கள், புதைகுழியில் உள்ள எச்சங்களின் நெருங்கிய உறவினர்களைத் தொடர்கொள்ளக்கூடிய தகவல்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து இந்த உடல்கள் இவ்விடத்தில் எவ்வாறு வந்தன என்பது பற்றிய சம்பவங்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை நாம் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இந்த வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை அறிந்த உறவினர்கள், சாட்சிகள் மற்றும் ஏனைய நபர்களை எமது அலுவலகத்pன் பயிற்சிபெற்ற அதிகாரிகள் நேர்காணல் செய்வார்கள். அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் இரகசியத்தன்மையைப் பேணுவதற்கு எமது அலுவலகம் கடமைப்பட்டுள்ளது. அதன்படி இதுகுறித்த தகவல்கள் பொதுமக்களிடம் இருப்பின், எமது தலைமை அலுவலகத்துக்கோ அல்லது எமது பிராந்திய அலுவலகங்களுக்கோ எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை வருகைதந்து அல்லது தொலைபேசி ஊடாக எம்மைத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221655
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
3 இல் இருந்து போகும் பாதை அடைபட்டுவிட்டதால் 3 தான் நிரம்பும் ஐயா.
-
செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள், ஒளிப்படங்கள் எடுக்க தடை
03 Aug, 2025 | 09:37 AM செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட, ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) 1.30 மணி முதல் 05 மணி வரை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சான்று பொருட்களை காண்பிப்பது தொடர்பில் நீதிமன்றினால் வழங்கப்பட்ட கட்டளை தொடர்பான ஒழுங்குவிதிகள் பின்வருமாறு: மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாக காணப்படுவதால், கண்ணியம். அந்நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும். காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும். இருபத்தொரு (21) வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள் பங்குபற்றும் நபர்கள்; மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது. பங்குபற்றும் நபர்கள்; காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், மேற்படி நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/221650
-
இலங்கைக்கு எதிராக மீண்டும் ஜெனிவாவில் தீர்மானம் ; எந்தவொரு தீர்மானத்தையும் வலுவாக எதிர்கொள்வோம் - அமைச்சர் விஜித ஹேரத்
03 Aug, 2025 | 09:14 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மொண்டெனேகுரோ உள்ளிட்ட நாடுகளின் அனுசரனையுடன் இலங்கை குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த விடயம் குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு ஜெனிவாவுக்கு செல்லவும், தீர்மானத்தை முன்வைக்க உள்ள நாடுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் கடந்தகால விடயங்களில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதிலும் முழு அளவிலான ஈடுப்பாடுடன் அரசாங்கம் செயல்படுகிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக எந்தவொரு நாடும் ஜெனிவாவில் கொண்டுவரக்கூடிய தீர்மானங்களை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள பன்னாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட சில நாடுகள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்க உள்ளது. இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் செய்து நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்து சென்றுள்ளார். அவர் வழங்கிய உத்தரவாதத்தின் பிரகாரம் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் இலங்கைக்கு சாதகமாகவே அமையும். மேலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் நேர்மையாக செயல்படுகிறது என தெரிவித்தார். எவ்வாறாயினும் கடந்தகால மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் விடயத்தில் நிலவிவரும் அதிருப்தியை அடுத்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறலை மையப்படுத்திய புதிய தீர்மானம் ஒன்றை முன்வைக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த சர்வதேச கண்காணிப்பையும், அழுத்தத்தையும் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த புதிய தீர்மானத்தை பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரிய குழு (Core Group on Sri Lanka) முன்வைக்கவுள்ளது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட 46/1 மற்றும் 51/1 போன்ற தீர்மானங்களின் தொடர்ச்சியாகவே இது அமைய உள்ளது. குறிப்பாக, 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, பாதுகாக்கும் 'இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்' (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இந்த புதிய தீர்மானத்தின் பிரதான நோக்கமாக இருக்கும் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதும், எதிர்காலத்தில் இத்தகைய மீறல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதும் இதன் முக்கிய இலக்குகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221646
-
குணச்சித்திர நடிகர் மதன் பாப் காலமானார்
நடிகர் மதன்பாபு காலமானார் 02 Aug, 2025 | 09:40 PM பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மதன்பாபு, தனது 71 ஆவது வயதில் காலமானார். அவர் கடந்த சில காலமாக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மதன்பாபுவின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'வானமே எல்லை' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழ்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான பாணியால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 'தேனாலி', 'ஃப்ரெண்ட்ஸ்', 'ரெட்' போன்ற பல படங்களில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/221643
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
கில் சாதனை, ஜெய்ஸ்வால் சதம்: இங்கிலாந்தின் திட்டங்களை தவிடுபொடியாக்கிய ஆகாஷ் தீப் - யாருடைய கை ஓங்கியுள்ளது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஆகாஷ் தீப் கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. ஸ்டோக்ஸ், பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதும், இரு அணிகளும் சரிக்கு சமமாக சண்டையிடுகின்றன. இன்றைய தினம் தொடரின் முடிவு தெரிந்துவிடும். ஓவல் டெஸ்டின் இரண்டாம் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, மூன்றாம் நாளிலும் தன் பிடியை விடாமல் பார்த்துக்கொண்டது. நைட் வாட்ச்மேனாக முதல் நாளில் களம்புகுந்த ஆகாஷ் தீப், நேற்று உடும்பு போல விக்கெட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு விளையாடி, இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் நிம்மதியை கெடுத்தார். கிடைக்கும் ஒவ்வொரு ரன்களும் அணிக்கு லாபம் என்று, ஜெய்ஸ்வாலும் அவருக்கு அதிக ஸ்ட்ரைக் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாளின் முதல் ஓவரிலேயே, பெத்தேல் பந்தில் பவுண்டரி அடித்து அதிரடியை ஆரம்பித்த ஆகாஷ் தீப் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. உயிரைக் கொடுத்து வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை, அலட்சியமாக ஸ்லிப் பிராந்தியத்திலும் மிட் விக்கெட் திசையிலும் பறக்கவிட்டு ரன் சேர்த்தார். ஆகாஷ் தீப் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து பீல்டர்கள் சொல்லிவைத்தது போல போட்டிப் போட்டுக்கொண்டு தவறவிட்டனர். ஆகாஷ் தீப் மீது இங்கிலாந்து அணியின் பார்வை திரும்பியதை பயன்படுத்திக் கொண்டு, ஜெய்ஸ்வால் சத்தமின்றி சதத்தை நோக்கி நகர்ந்தார். ஜெய்ஸ்வால் பெரிதாக எந்த பரீட்சார்த்த முயற்சிகளையும் எடுக்கவில்லை. தனக்கு தோதான பந்துகள், தனக்கு விருப்பமான திசையில் கிடைக்கும் போது நம்பிக்கையுடன் பேட்டை விளாசினார். ஒரு நல்ல தொடக்க பேட்டருக்கு, பந்தின் வேகத்தை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வித்தை தெரிந்திருக்க வேண்டும். கழுத்தை குறிவைத்து வீசப்பட்ட பந்துகளை ரொம்பவும் லாவகமாக தேர்ட் மேன் திசையில் அப்பர் கட் விளையாடினார்; தவறான லைனில் வீசப்பட்ட பந்துகளை பாயிண்ட் திசையிலும் சீவிவிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சதம் அடித்ததைக் கொண்டாடும் ஜெய்ஸ்வால் வோக்ஸ் இல்லாத குறை இங்கிலாந்து பந்துவீச்சில் அப்பட்டமாக வெளிப்பட்டது. மொத்த ஓவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேல் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுமே பங்கிட்டு வீசினர். அதிர்ஷ்டத்தின் துணையுடன் 67 ரன்கள் குவித்த ஆகாஷ் தீப், ஓவர்டனின் பேக் ஆஃப் எ லெந்த் பந்தை லெக் சைடில் அடிக்க முயன்று, அட்கின்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் முக்கியமான ரன்களை குவித்ததோடு மட்டுமின்றி, மூன்று வேகப்பந்து வீச்சாளர்களையும் களைப்படைய செய்தார். இது ஆட்டத்தின் பின்பகுதியில் இந்திய பேட்டர்களுக்கு கைகொடுத்தது. ஜெய்ஸ்வால்–ஆகாஷ் தீப் ஜோடி, 107 ரன்களை குவித்தது. ஐந்தாவதாக களமிறங்கிய கில், அடுத்தடுத்து அட்டகாசமான பவுண்டரிகள் விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார். இந்தியா–இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த கிரஹாம் கூச்சின் (752) சாதனையை கில் (754) முறியடித்தார். ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகான முதல் பந்திலேயே அட்கின்சன் பந்தை கால்காப்பில் வாங்கி, எல்பிடபிள்யூ முறையில் மீண்டும் ஒருமுறை ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸை போலவே மிகவும் எளிதாக விக்கெட்டை தூக்கிக் கொடுத்த விதம், கில் போன்ற ஒரு மிகத்திறமையான பேட்டருக்கு அழகல்ல. 700 ரன்களுக்கு மேல் குவித்தாலும், உள்ளே வரும் பந்துகளுக்கு தொடர்ச்சியாக அவர் விக்கெட்டை பறிகொடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த பலவீனத்தை விரைவில் சரிசெய்யாவிட்டால், எதிரணிகள் அவருடைய காலைக் குறிவைத்து வியூகம் வகுக்க ஆரம்பித்துவிடுவார்கள். கில் தனது ஆட்டத்தில் விடாப்பிடித்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். ஜெய்ஸ்வாலிடம் இங்கிலாந்து மண்ணில் தாக்குப்பிடித்து விளையாடுவதற்கான டெக்னிக் இல்லை. கில் அளவுக்கு அவருக்கு பேட்டிங்கில் டைமிங்கும் கிடையாது. ஆனால், எப்படியாவது தாக்குப்பிடித்து விக்கெட்டை பத்திரப்படுத்தி விளையாடி ரன் சேர்க்கும் நுட்பம் அவருக்கு வாய்த்துள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஐந்தாவதாக களமிறங்கிய கில், அடுத்தடுத்து அட்டகாசமான பவுண்டரிகள் விளாசி, ரசிகர்களை குஷிப்படுத்தினார் அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 127 பந்துகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய ஆறாவது சதத்தை பதிவுசெய்தார்; இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் 4 சதங்களை குவித்துள்ளார். கில் பெவிலியன் திரும்பிய பிறகு களமிறங்கிய கருண் நாயர், தொடக்கம் முதலே தடுமாறினார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அவர் தடுமாறியதை பார்க்கும்போது தான், ஜெய்ஸ்வால் இன்னிங்ஸின் மதிப்பு புரிந்தது. ஆடுகளம் முழுவதுமாக தட்டையாகவில்லை; இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதை கருண் நாயரின் குறுகிய நேர இன்னிங்ஸ் உணர்த்தியது. ஒவ்வொரு பந்துக்கும் விக்கெட்டை கொடுப்பதற்கு தயாராக இருந்த கருண், அட்கின்சன் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது கடைசி இன்னிங்ஸை கருண் நாயர் விளையாடிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். 118 ரன்களில் டங் பந்தில் ஆஃப் சைடில் தனக்கு பிடித்த ஷாட் விளையாட ஆசைப்பட்டு, பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து அணி கோட்டைவிட்டது. ஒட்டுமொத்தமாக ஆறு கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டது. முதல் டெஸ்டில் தான் தவறவிட்ட கேட்ச்களுக்கு பரிகாரம் தேடியதை போல, கிடைத்த வாய்ப்புகளை ஜெய்ஸ்வால் கெட்டியாக பிடித்துக்கொண்டார். எட்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜுரெல் ஆரம்பம் முதலே நல்ல ஷாட்கள் விளையாடி ரன் குவித்தார். நறுக்கென்று நான்கு பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்த ஜுரெல், ஓவர்டன் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கரில் விக்கெட்டை பறிகொடுத்தார். டங் பந்தில் பவுண்டரி விளாசி, அரைசதத்தை கடந்த ஜடேஜா, ஒன்பதாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சுந்தருடன் ஜோடி சேர்ந்து வேகமாக ரன் சேர்த்தார். கடந்த டெஸ்டின் நாயகர்கள் இருவரும் சீக்கிரம் ரன் சேர்த்தாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடியது போல தெரிந்தது. 77 பந்துகளில் 53 ரன்களை குவித்த ஜடேஜா, இந்த தொடரில் முதல்முறையாக இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார். அடுத்த இரு பந்துகளில் சிராஜும் வெளியேற, ஓவல் மைதானத்தில் சிக்ஸர் மழை பொழிய வைத்தார் வாஷிங்டன் சுந்தர். 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்த அவர், கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். வாஷிங்டன் சுந்தரின் கடைசிகட்ட வாணவேடிக்கை, 335 இல் இருந்த ஸ்கோரை ஐந்தே ஓவர்களில் 374 ரன்களுக்கு கொண்டு சென்றது. 374 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டுவதற்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, நம்பிக்கையுடன் அடித்து விளையாடியது. கிராலி–டக்கெட் இருவரின் ஆட்டமும், ஆடுகளம் இன்னும் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதை காட்டியது. போகப் போக கவனமாக விளையாடத் தொடங்கிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விக்கெட் கொடுக்காமல் விளையாடினர். முன்றாம் நாளின் கடைசி ஓவரின், ஐந்தாவது பந்தில் சிராஜின் யார்க்கரில் கிராலி வீழ்ந்தார். நாளின் கடைசி ஓவரில் ஷேன் வார்ன்தான் இதுபோன்ற மாயாஜாலங்களை நிகழ்த்துவார். இல்லாத ஒன்றை இருப்பது போல பேட்டரை நம்பவைத்து, எதிர்பாராத ஒன்றை செய்து விக்கெட் எடுப்பது அவருடைய பாணி. ஜெய்ஸ்வாலை லெக் சைடில் பவுண்டரி லைனுக்கு நகர்த்தி, பவுன்சர் போடப் போவதாக போக்கு காண்பித்து, யார்க்கரில் ஆளை காலிசெய்தார். அதிரடி டக்கெட்டை 'அன்புடன்' வழியனுப்பிய ஆகாஷ்: இந்தியா - இங்கிலாந்து தொடரில் அடுத்த சர்ச்சை ஓவல் டெஸ்ட்: ஒரு ரன்னுக்காக விக்கெட்டை விட்ட கில் - 8 ஆண்டுகளுக்குப் பின் கருண் நாயரின் போராட்டம் ஓவல் டெஸ்ட் : காயத்தால் பென் ஸ்டோக்ஸ் விலகல் - இந்திய அணிக்கு சாதகமான 3 அம்சங்கள் கடைசி டெஸ்டிற்கான பிட்ச் எப்படி இருக்கும்? பார்வையிட்ட கம்பீர் மைதான ஊழியருடன் வாக்குவாதம் ஆட்ட நேர இறுதியில் விக்கெட்டை இழந்தாலும், இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கம் என்றே சொல்ல வேண்டும். இன்னும் 324 ரன்கள் தேவை என்கிற நிலையில், நான்காவது நாளில் இங்கிலாந்து அணிக்கு பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்று தேவைப்படுகிறது. ஹெடிங்லி டெஸ்டில் 371 ரன்கள் இலக்கை அநாயசமாக விரட்டிய இங்கிலாந்து அணி, ஓவலிலும் அதை நிகழ்த்திக் காட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இங்கிலாந்து அணி, இந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டி எட்டும்பட்சத்தில், அது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச சேஸாக அமையும். 2021–2022 தொடரில் இந்தியாவுக்கு எதிராக எட்ஜ்பஸ்டன் டெஸ்டில் 378 ரன்களை சேஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வோக்ஸ் பேட் செய்ய களமிறங்க 99 சதவிகிதம் வாய்ப்பில்லாத நிலையில், இந்திய அணி டெஸ்டை வென்று தொடரை சமன்செய்ய 8 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. ஆட்டத்தின் முடிவு எப்படியும் நான்காவது நாளிலேயே தெரிந்துவிட அதிக வாய்ப்புள்ளது. ஒன்று இந்தியா வென்று தொடரை சமன் செய்யும். அல்லது இங்கிலாந்து வென்று 3–1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும். டிராவுக்கு வாய்ப்பே இல்லை என்பது மட்டும் நிச்சயம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c30zd27z71po
-
வட மாகாணத்தில் 982 பாடசாலைகளில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன - அமைச்சர் சந்திரசேகர்
02 Aug, 2025 | 09:18 PM கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் சனிக்கிழமை (02) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கல்வி சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை? அதில் கல்வியின் நிலைமை, பாடசாலையின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்படவுள்ள மாற்றம் என்ன என்பது தொடர்பாகவும் குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம் முக்கிய தேவை. அதுபோலவே எமது அரசாங்கத்தின் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது. கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம், நாட்டை டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பிரதான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளது. அதில் வறுமை ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டத்துக்கு கூடுதலான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வட மாகாணத்தை விசேடமாக கவனத்தில் கொண்டனர். வட மாகாணமே இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்ட பிரதேசமாக இருக்கிறது. இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியிருக்கிறது. இதனால் வறுமையுடன் இணைத்து கல்வி தொடர்பான பிரச்சினையையும் அணுக வேண்டியுள்ளது. வறுமையிருக்கும் இடங்களிலெல்லாம் கல்வி பிரச்சினையும் காணப்படுகிறது. கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள இடங்களில் வறுமை அதிகரித்துள்ளது. மேலும் சமூக சீரழிவுகள், குற்றசெயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இன்று யாழ் மாவட்டத்திலும் இந்த சவால்கள் காணப்படுகிறது. இந்த சவால்களில் இருந்து மீண்டு புதிய யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதனால் எமது அரசாங்கத்தில் கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது. இதற்கமைவாகவே கல்வி புலத்தை வெளிப்படுத்தி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11 – 20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும் 20 – 50 பிள்ளைகள் கற்கும் 171 பாடசாலைகள் இருப்பதாகவும் 50 – 100 பிள்ளைகள் கற்கும் 174 பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எவ்வித கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது கல்வியில் மறுசீரமைப்பு தேவை என்பது உணரப்படுகின்றது. இது தொடர்பில் அனைவரும் புரிதலுடன் செயற்பட்டால் சமூகத்துக்கு நல்ல செய்தியை கொண்டு செல்லமுடியுமென எதிர்பார்க்கிறேன் என்றார். இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா, கல்வி அமைச்சின் பிரதிநிதித்துவ அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/221637
-
இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
அதிரடி டக்கெட்டை 'அன்புடன்' வழியனுப்பிய ஆகாஷ்: இந்தியா - இங்கிலாந்து தொடரில் அடுத்த சர்ச்சை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆட்டமிழந்த டக்கெட்டின் தோளில் கைபோட்டு ஆகாஷ் நடந்து கொண்ட விதம் சர்ச்சையாகியுள்ளது. கட்டுரை தகவல் தினேஷ் குமார்.எஸ் பிபிசி தமிழுக்காக 2 ஆகஸ்ட் 2025 இந்தியா - இங்கிலாந்து இடையே ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மழை குறுக்கீடுகளையும் கடந்து புயல் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆண்டர்சன்–டெண்டுல்கர் தொடரில் முதல் நான்கு டெஸ்ட்களும் தட்டையான ஆடுகளங்களில் தான் நடந்தன. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளம் இரு அணிகளுக்கும் சவாலாக இருந்து வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களில் இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, 224 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் ஆட்டத்தில் தாறுமாறாக பந்துவீசிய டங், ஒரு அபாரமான பந்தின் மூலம் கருண் நாயர் கால்காப்பை தாக்கி, எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன்பிறகு சீட்டுக்கட்டு போல, இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. வாஷிங்டன் சுந்தரை சரியாக குறிவைத்து வீசப்பட்ட பவுன்சர் மூலம் கைப்பற்றிய அட்கின்சன், சிராஜ், பிரசித் கிருஷ்ணா இருவரையும் ரன் ஏதுமின்றி வெளியேற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் எந்தவொரு போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல் விக்கெட்டைப் பறிகொடுத்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, இந்த தொடரின் மற்ற போட்டிகளில் தடுமாறிய கருண் நாயர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். கடும் நெருக்கடியில் இருந்தபோது நன்றாக விளையாடியவர், அரைசதம் அடித்த திருப்தியில் கவனத்தை தொலைத்துவிட்டாரோ என்று தோன்றும் விதமாக அவர் ஆட்டமிழந்த விதம் அமைந்தது. என்னதான் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்றாலும், சுந்தர் ஆட்டமிழந்த பந்து, அவருடைய திறமைக்கு பொருத்தமான ஒன்றல்ல. இரண்டாம் நாளில் இன்னிங்ஸ் தொடங்கி, வெறுமனே 34 பந்துகளில் இந்திய ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கிய போது, ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவான ஒன்றாக மாறியிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிராலி–டக்கெட் இருவரும் தொடக்கம் முதலே நம்பிக்கையுடன் அடித்து விளையாடினார்கள். கிராலி வழக்கம் போல கவர் டிரைவ், ஸ்கொயர் கட், ஆஃப் டிரைவ் என பாரம்பரிய முறையில் ரன்கள் குவிக்க மறுபுறம் டக்கெட் ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்கூப் என விளையாடி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை கலங்கடித்தார். குறிப்பாக ஆகாஷ் தீப்–டக்கெட் இடையிலான சமர், ஆட்டத்துக்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியது. டியூக்ஸ் பந்து, முதல் 12–15 ஓவர்களுக்கு பெரிதாக ஒத்துழைக்காது என்பதால் சிராஜுக்கு தொடக்கத்தில் ஒன்றும் சரியாக அமையவில்லை. 38 பந்துகளில் 43 ரன்கள் குவித்து, அபாரமான தொடக்கம் அமைத்துக் கொடுத்த டக்கெட், அபாயகரமான ஷாட் ஒன்றை ஆட முற்பட்டு, ஆகாஷ் தீப் பந்திலேயே விக்கெட்டை இழந்து நடையைக்கட்டினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த தொடர் முழுக்க, இரு அணி வீரர்களும் உணர்ச்சிவயப்படுவதையும் ஸ்லெட்ஜிங் செய்வதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது ஆட்டமிழந்து சென்று கொண்டிருந்த டக்கெட் தோள் மீது கைபோட்டு ஆகாஷ் தீப் நடந்துகொண்ட விதம் பேசப்பட்டது. தினேஷ் கார்த்திக், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் ஆகாஷ் தீப் நடந்து கொண்ட விதத்தை விமர்சித்ததுடன் டக்கெட் காட்டிய நிதானத்தை பாராட்டவும் செய்துள்ளனர். இந்த தொடர் முழுக்க, இரு அணி வீரர்களும் உணர்ச்சிவயப்படுவதையும் ஸ்லெட்ஜிங் செய்வதையும் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. சிராஜ்–ஆகாஷ் தீப் இருவரும் ரன்களை வாரி இறைத்ததால், கொண்டுவரப்பட்ட பிரசித் கிருஷ்ணா, தொடக்கத்தில் சில பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தாலும், பிரமாதமான லைன் அண்ட் லெங்த்தில் வீசினார். ஜெஃப்ரி பாய்காட் அடிக்கடி உச்சரிக்கும் "The corridor of uncertainty" என்று சொல்லக்கூடிய லெங்த்தில் வீசினார். புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்த கிராலியின் விக்கெட்டை கிருஷ்ணா கைப்பற்றிய பிறகு, ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு கதவு திறந்தது. கிராலி விக்கெட்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி தடுமாறத் தொடங்கியது. ஓரளவுக்கு நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போப், சிராஜின் தவிர்க்க முடியாத உள்ளே வரும் பந்தில் (Nip backer) எல்,பி.டபிள்யூ ஆகினார். பிரசித் கிருஷ்ணா உடனான வாய்த் தகராறால், வழக்கத்துக்கு மாறாக களத்தில் ஆக்ரோஷத்தை காட்டிய ரூட், அதனாலேயே கவனத்தை தொலைத்து சிராஜ் பந்துக்கு ஆட்டமிழந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரசித் கிருஷ்ணா, நேற்று அபாரமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசினார். முதல் இரு டெஸ்ட்களில் தாறுமாறாக வீசியதால், அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரசித் கிருஷ்ணா, நேற்று அபாரமான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசினார். தன்னை நிரூபித்தாக வேண்டும் என்கிற தாகம், அவருடைய பந்துவீச்சில் தெரிந்தது. பெத்தேல் விக்கெட்டை சிராஜ் கைப்பற்ற, கடைசிக்கட்ட விக்கெட்டுகள் அனைத்தையும் பிரசித் கிருஷ்ணா சடசடவென கைப்பற்றி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார். மழை குறுக்கீடு அடிக்கடி இருந்ததால், அதைப் பயன்படுத்தி இந்திய அணி வீரர்கள் களைப்பின்றி பந்துவீசினர். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், நட்சத்திர வீரர் புரூக் ஒருபக்கம் அடித்து விளையாடினார். அதிர்ஷ்டமும் அவருக்கு நிறைய கைகொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி அவரும் சிராஜ் பந்துக்கு ஸ்டம்புகளை பறிகொடுக்க, இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி, கடைசி 9 விக்கெட்களை 155 ரன்களுக்கு இழந்தது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்கள் கைப்பற்றினர். காயம் காரணமாக வோக்ஸ் பந்துவீச முடியாத சூழலில், டங் புதிய பந்தை கையிலெடுத்தார். முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ஜெய்ஸ்வால் நம்பிக்கையுடன் இன்னிங்ஸைத் தொடங்கினார். இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறைக்கு சவால் அளிக்கும் விதமாக, அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட் போல சிக்ஸர்களும் பவுண்டரியுமாக விளாசி, இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். அபாரமாக வீசப்பட்ட சில பந்துகளை சிறப்பாக எதிர்கொண்ட ராகுல், ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் சென்ற பந்தை தேவையில்லாமல் தொட்டு ஆட்டமிழந்தார். தொடரின் ஆரம்பத்தில் தென்பட்ட கவனமும் உற்சாகமும் இப்போது ராகுலின் ஆட்டத்தில் குறைவாகத் தெரிகிறது. ராகுல் ஆட்டமிழந்த பிறகு ஜெய்ஸ்வாலுடன் சாய் சுதர்சன் கைகோர்த்தார். ஜெய்ஸ்வால் கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளை இங்கிலாந்து வீரர்கள் தவறவிட்டனர். சாய் சுதர்சனின் கேட்ச் வாய்ப்பையும் கிராலி தவறவிட்டபோதும், அந்த வாய்ப்பை சுதர்சன் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆட்டம் முடிவதற்கு சில பந்துகள் இருந்த நிலையில், அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மேற்கொண்டு டாப் ஆர்டர் விக்கெட்டுகள் சரியக்கூடாது என்ற முன்னெச்சரிகையில் நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறங்கினார். இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், ஜெய்ஸ்வால் 51 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். இன்று சூரியன் கைகொடுக்கும் பட்சத்தில், இந்திய அணி வலுவான நிலைக்குச் செல்வதற்கு வாய்ப்புள்ளது. வோக்ஸ் இல்லாததால், 3 வேகப் வீச்சாளர்களின் ஸ்பெல் முடிந்தவுடன் எப்படியும் சுழற்பந்து வீச்சாளர்களை நோக்கிதான் இங்கிலாந்து கேப்டன் போப் சென்றாக வேண்டும். ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாத இங்கிலாந்தின் பந்துவீச்சில் தென்படும் பலவீனத்தை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் அபார முன்னிலை பெற்று இந்த டெஸ்டை வென்று தொடரை சமன் செய்யலாம். நேற்றைய நாளில் மட்டும் ஒட்டுமொத்தமாக 15 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இப்படியாக ஓவல் டெஸ்டில் இரண்டாவது நாளிலும் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8z2nnzdmro