Everything posted by ஏராளன்
-
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
“கரிநாள்” : வடக்கு, கிழக்கில் பேரணி ஏற்பாடு ; யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு 02 Feb, 2026 | 03:56 PM சுதந்திர தினத்தை “கரிநாள்” என பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இவ்விதமாக அழைப்பு விடுத்தனர். மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர். https://www.virakesari.lk/article/237614
-
‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு
‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழிகளுக்கு முரண் – வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு Published By: Vishnu 02 Feb, 2026 | 04:41 AM கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் அமைகிறது. நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில் குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. கிவுல் ஓயா நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (01) முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் கிழக்கு மாகாண ஓய்வு பெற்ற முன்னாள் காணி ஆணையாளர் கதிர்காமத்தம்பி குருநாதன் வளவாளராக கலந்துகொண்டதுடன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டதோடு, வவுனியா வடக்கு பிரதேச சபை உப தவிசாளர், வவுனியா வடக்கு, கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் கிவுல் ஓயா திட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வு முடிவடைந்த நிலையில்,வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வின் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாக 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம் இலங்கையின் தற்போதைய அரசாங்கம், சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவமான அபிவிருத்தி என்பவற்றை தனது கொள்கை உறுதி மொழிகளாக முன்வைத்து ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், 'நாட்டின் அபிவிருத்தி' என்ற பெயரில் வட மாகாணத்தில், குறிப்பாக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் 'கிவுல் ஓயா' நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டம்,மேற்கூறிய உறுதிமொழி களுக்கு முரணானதாக அமைந்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். நாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. அபிவிருத்தி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாகப் பயனளிக்க வேண்டிய ஒரு அடிப்படை அரசுப் பொறுப்பாகும். இருப்பினும், அபிவிருத்தி என்ற போர்வையில் அரசின் காலனித்துவ நோக்கங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், இம்மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமையுடன் இணைத்து, அவர்களின் வாழ்வாதார நிலைகளை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அரசாங்கம், அதனை விடுத்து வெளி பிரதேசங்களில் இருந்து மக்களை கொண்டு வந்து இப்பிரதேசங்களில் குடியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பது கவலைக்குரியதாக உள்ளது. இவ்வாறான குடியேற்றங்கள் தேவையற்ற அரசியல், கலாச்சார மற்றும் சமூக தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மகாவலி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின் படி, 'கிவுல் ஓயா' நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், தமிழர்களின் பூர்வீக கிராமமான வெடிவைத்த கல்லு கிராமத்திற்கு அண்மையாக, வடகிழக்கு திசையில் அமைக்கப்படவுள்ளது. சுமார் 37 மீற்றர் (121.37 அடிகள்) உயரமுடைய அணையின் மூலம் உருவாக்கப் படவுள்ள இந்த நீர்த்தேக்கம், பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த நீர் தேக்கத்திற்கான எல்லைகள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெடிவைத்த மகாவலி அதிகார சபையினால் எல்லைக்கல்லிடப்பட்டு காட்டப்பட்டுள்ளன. இதன்விளைவாக, கல்லு,ஈச்சங்குளம்,கூழாங்குளம்,காட்டு பூவரசங்குளம்,காஞ்சூர மோட்டை உள்ளிட்ட பாரம்பரிய கிராமங்களின் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய மற்றும்குடியிருப்பு நிலங்கள் முழுமையாக நீரில் மூழ்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. பெரியமேலும், 1921 ஆம் ஆண்டு வர்த்தமான அறிவித்தலின் மூலம் 'ஒதுக்குக் காடாக' அறிவிக்கப்பட்ட கட்டிக்குளம் ஒதுக்குக்காடு, சுமார் 4,000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியும், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் முழுமையாக அமிழ்ந்து போகும் நிலை உருவாகியுள்ளமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. அதேபோல், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்பட்ட 47 தொல்லியல் பிரதேசங்கள், கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் நீரில் மூழ்க போவதாக மகாவலி அதிகார சபையின் சொந்த திட்ட ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது. இது, நாட்டின் மரபுரிமை மற்றும் தொல்லியல் பாதுகாப்பு கொள்கைகள் ஒரே மாதிரியான முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இத்தகைய பின்னணியில்,இந்த நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை பிரதேசத்தில் வழிபாடுகள் மேற்கொள்ளப் படுவதை 'தொல்லியல் பாதுகாப்பு' என்ற பெயரில் கட்டுப்படுத்தும் நிலையில், அதே சமயம் பல தொல்லியல் பிரதேசங்கள் முழுமையாக அழிவடைய அனுமதிக்கப்படுவது தொடர்பில் தெளிவான, வெளிப்படையான விளக்கங்கள் அரச நிறுவனங்களால் வழங்கப்பட வேண்டும். மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் தெற்கு மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவு களுக்குரிய ஆமையன் குளம், உந்தராயன் குளம், அடையகர்த்தான், படுகாட்டுக் குளம், சாம்பான் குளம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் வளமான விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுள்ளமை பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனுடன், கொக்குத்தொடுவாய் சூரிய நாற்றுப் பகுதியில், தமிழ் மக்களுக்கு மத்திய வகுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 1,990 ஏக்கர் காணிகள், தற்போது கிவுல் ஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்டு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இது, இப்பிரதேசங்களில் இனப்பரம்பல் அமைப்பையும், சமூகச் சமநிலையையும் மாற்றக்கூடிய ஒரு நவீன காலனித்துவ செயல்முறையாக பார்க்கப்படுகிறது. எனவே, அரசு உடனடியாக இத்திட்டத்தின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு தாக்கங்களை மீளாய்வு செய்யவும், உள்ளூர், காணி இல்லாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அபிவிருத்தி திட்டங்களில் முன்னுரிமை உடன் இணைக்கவும், வெளிப்பிரதேச குடியேற்றங்களை தவிர்க்கவும், உள்ளூர் சமூகங்களின் காணி, வாழ்வாதாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாக்கவும் தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இலங்கையில் நிலையான அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால், அது உள்ளூர் மக்களின் உரிமைகள், மரியாதை மற்றும் வரலாற்றுப் பிணைப்புகளை மதிக்கும் அணுகுமுறையின் மூலம் சாத்தியமாகும் என்பதை அரசிற்கு தெளிவாக சுட்டிக்காட்டுகிறோம் .என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237583
-
சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல்!
சர்வதேச கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்; 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி Published By: Vishnu 02 Feb, 2026 | 04:46 AM ( செ.சுபதர்ஷனி) சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் நிறைவு செய்ததன் பின்னர் மீண்டும் கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்த 12 மீனவர்களில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், இலங்கை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வென்னப்புவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து தினிதி துவ உள்ளிட்ட இரு ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் 12 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளனர். கடந்த 28 ஆம் திகதி அவர்கள் மீன்பிடிப் பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் வென்னப்புவ நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த போது, சர்வதேச கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரின் கப்பலொன்று இவர்களை வழிமறித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மீன்பிடி படகிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அதிகாரிகள், மீனவர்களிடம் போதைப்பொருள் மற்றும் செய்மதித் தொலைபேசிகள் உள்ளனவா எனக் கேட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், இந்திய கடற்படையினர் மீனவர்களை விலங்குகளைப் போலக் கீழே தள்ளி மிதித்தும், ஐஸ் கட்டிகள் மீது படுக்க வைத்தும் முதுகுப் பகுதியில் கடுமையாகத் தாக்கியதாகக் குறிப்பிட்டனர். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகச் சந்தேகம் எழுப்பி, படகிலிருந்த உபகரணங்கள் மற்றும் உடமைகளைச் சேதப்படுத்தியதோடு, மீனவர்களுக்குக் கடும் உடல் ரீதியான சித்திரவதைகளை இந்திய அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இலங்கை எல்லைக்கு மிக அண்மித்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். காயமடைந்த மீனவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டு இன்று அதிகாலை கரைக்கு அழைத்து வரப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் இருவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய மீனவர்கள் படகுகளுடன் கரைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கையாள்வதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இலங்கை கடற்படைக்கும் வெளிவிவகார அமைச்சுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் உறவினர்களால் வைத்தியசாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/237584
-
சென்னை குடிநீருக்காக மாமல்லன் நீர்த்தேக்கம்
"சென்னை குடிநீருக்காக வாழ்வாதாரத்தை பறிப்பதா?" - மாமல்லன் நீர்த்தேக்கத்தை எதிர்க்கும் மீனவர்கள் படக்குறிப்பு, சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு என மீனவர்கள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் "டேமை எங்க வேணும்னாலும் கட்டலாம். 5,000 குடும்பங்கள் பாதிக்கற மாதிரி இங்க தான் கட்டணுமா?" "கடல் தொழில் எனக்குத் தெரியும், போனாலும் அதுல அதிகமாக வருமானம் கிடைக்காது. 10 ஆயிரம் கிடைத்தாலும் அதை வைச்சு குடும்பத்தை நடத்த முடியுமா?" சென்னைக்கு அருகே அமையுள்ள புதிய மாமல்லன் நீர்த்தேக்கத்தால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்று அஞ்சும் மீனவர்கள் எழுப்பும் கேள்விகள் இவை. சென்னை மாநகரின் அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த நீர்த்தேக்கம் கட்டப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. ஆனால், இந்த நீர்த்தேக்கம் அமைந்தால் மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி இடங்கள் அழிந்து மீன்வளமும், 5000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என பிபிசி தமிழிடம் பேசிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நகரமயமாக்கலின் விளைவாக அனைத்து திசைகளிலும் வளர்ந்து வரும் சென்னை பெருநகரத்தின் குடிநீர் தேவை ஒருபக்கம் இருக்க சூழலியல் பார்வையில் இயற்கையான நீர்நிலைகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்புவது ஏன்? சென்னை அருகே புதிய நீர்த்தேக்கத்திற்கான தேவை என்ன? மீனவர்கள் எழுப்பும் கவலைகள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது. மாமல்லன் நீர்த்தேக்கம் எங்கு அமைகிறது? படக்குறிப்பு,கடந்த ஜனவரி 19-ஆம் தேதி மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கான அடிக்கல்நாட்டு விழா நடத்தப்பட்டது. சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலை (ஈசிஆர்) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்) இடையே 'மாமல்லன் நீர்த்தேக்கம்' அமைகிறது. 5,161 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ளது. முதல் கட்டமாக சுமார் 342 கோடி ரூபாய் மதிப்பில் 4,375 ஏக்கரில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 19-ஆம் தேதி இதற்கான அடிக்கல்நாட்டு விழா நடத்தப்பட்டது. சில அரசியல் கட்சிகளும் சூழலியல் அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. படக்குறிப்பு,முதல்கட்டமாக சுமார் 342 கோடி ரூபாய் மதிப்பில் 4,375 ஏக்கரில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. "சென்னையின் குடிநீர் தேவை அதிகரிப்பு" சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் துறையின் தரவுகளின்படி, 2020-ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் தினசரி குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 1,720 மில்லியன் லிட்டராக உள்ளது. இது 2035-இல் 2,523 மில்லியன் லிட்டராகவும், 2050-இல் 3,746 மில்லியன் லிட்டராகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மாமல்லன் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 1.66 டிஎம்சி ஆகும். இதன் மூலம் தினமும் 170 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும், அதன் மூலம் சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 13 லட்சம் பேரும் மற்றும் கோவளத்தைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்களும் பயனடைவார்கள் என, தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பயனடையும் பகுதிகள்": சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பள்ளிக்கரணை சிறுசேரி கேளம்பாக்கம் மாமல்லபுரம் இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடம் தனித்துவமான சூழலியல் அமைப்பு கொண்டதாக உள்ளது. வடக்கே முட்டுக்காடு முகத்துவாரம் வழியாகவும் தெற்கே கொக்கிலமேடு முகத்துவாரம் வழியாகவும் கடல்நீர் உள்ளே வந்து செல்கிறது. பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து வரும் உபரிநீரும் இங்கு வந்து கலக்கிறது. படக்குறிப்பு,இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடம் தனித்துவமான சூழலியல் அமைப்பு கொண்டதாக உள்ளது. நன்னீரும் கடல்நீரும் கலக்கும் இடம் இந்த கழுவெளி பகுதிக்கென பிரத்யேகமான உயிரினங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன். "அங்கு வரும் வலசைப் பறவைகளும் உள்ளன. நன்னீரும் உப்புநீரும் கலக்கும் இடம் என்பதால் அங்கு மட்டுமே சில உயிரினங்கள் வாழும். அதனை வாழ்வாதாரமாக கொண்ட ஒரு மீனவ சமூகம் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் சில அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தது. ஆனால், இந்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்," என்றும் தெரிவித்தார். பட மூலாதாரம்,TNWRB படக்குறிப்பு,இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றி 34 கிலோமீட்டர் தூரத்திற்கு கரை அமைக்கப்பட உள்ளது. புதிய நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்? இந்த நீர்த்தேக்கத்தைச் சுற்றி 34 கிலோமீட்டர் தூரத்திற்கு கரை அமைக்கப்பட உள்ளது. கோவளம் வடிநிலப் பகுதிகளில் உள்ள 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் புதிய கால்வாய்கள் மூலம் இதில் தேக்கி வைக்கப்பட உள்ளன. இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடத்தில் பக்கிங்காம் கால்வாய் செல்வதால் அது சீரமைக்கப்பட்டு, நீரோட்டத்திற்காக அணையின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் புதிய கால்வாய் அமைக்கப்பட உள்ளது. தெற்குப் பகுதியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கான மதகுகள் அமைக்கப்பட உள்ளன. "பாதிக்கப்படும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்" படக்குறிப்பு,மீனவ கிராமங்களின் மீன்பிடி பகுதிகளை காண்பிக்கும் புகைப்படம் கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் தொடங்கி கடற்கரையை ஒட்டி பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடலுக்கு சென்றாலும் அவர்களின் பெரும்பாலான வாழ்வாதாரம் இந்த நீர்நிலையை நம்பியே உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல, பழைய மகாபலிபுரம் சாலையிலும் பல்வேறு மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரம் இதை நம்பி மட்டுமே இருப்பதாகவும் கூறுகின்றனர். பிபிசி தமிழ் குழு இவர்கள் மீன்பிடிக்கும் பகுதிக்குச் சென்றபோது மீனவர்கள் வலை பின்னும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கோவளம் தொடங்கி கொக்கிலமேடு வரை இதேபோல் பல்வேறு மீன்பிடி நிலைகள் உள்ளன. ஒவ்வொரு ஊர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கான பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் வழக்கம் இங்கு இருந்து வருகிறது. பல தலைமுறைகளாக இந்தத் தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறும் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த மகேந்திரன், கடந்த 25 வருடங்களாக மீன்பிடித் தொழிலில் இருந்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இங்கு இறால், நண்டு மற்றும் சிலவகை மீன்களை இங்கு பிடிக்கிறோம். இது தான் எங்களின் வாழ்வாதாரம். தண்ணீர் கொண்டு வருவதற்கு நீர்த்தேக்கம் அமைப்பது என்றால் வேறு எங்கு வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாமே, 5,000 பேரை பாதித்து இந்த இடத்தில் நீர்த்தேக்கம் வர வேண்டுமா? இங்கு சேறும் உப்பும் தான் இருக்கிறது." எனத் தெரிவித்தார். படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த மகேந்திரன் ஆனால், இந்தப் பகுதியில் நீர்த்தேக்கம் அமைய வேறு மாற்று இடம் இல்லை என திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு இந்தத் தொழிலில் தான் நிலையான வருமானம் கிடைப்பதாகக் கூறுகிறார் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ். "எனக்கு ஃபைபர் தொழில் தெரியும், ஆனால் வாழ்வாதாரம் குறைவு தான், அதில் கிடைக்கும் 300, 400 ரூபாயை வைத்து குடும்பத்தை நடத்த முடியாது. என் இரண்டு குழந்தைகள் படிக்கிறார்கள். இதை வைத்து தான் நான் குடும்பத்தை நடத்த முடியும்." என்றார். படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் அரசு கூறும் 3 முதன்மை தேவைகள், முதலமைச்சரின் உத்தரவாதம் இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனத் தெரிவித்திருந்தார். அந்த நிகழ்வில் பேசிய அவர், "இந்தப் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை 15 கிலோமீட்டர் நீளம், 311 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்பதால் உவர்நீர் மீன்வளத்தை நம்பி இருக்கக்கூடிய மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய மீனவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கப்படும்," எனத் தெரிவித்தார். குடிநீர் தேவை, வெள்ள தடுப்பு, கடல் நீர் உட்புகுவதைத் தடுத்து நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குவது ஆகிய மூன்றும் தான் இந்தத் திட்டத்துக்கான முதன்மையான தேவைகள் என அரசு கூறுகிறது. கடல் மீன்வளத்திற்கு பாதிப்பு உள்ளதா? இந்தத் திட்டத்திற்காக வழங்கப்பட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் சி.ஆர்.இசட் (CRZ) அனுமதியில் 36 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இந்தப் பகுதியின் பாரம்பரிய மீன்பிடி முறைகளில் எந்த தாக்கமும் இருக்காது என்பதை உறுதி செய்யும் விதத்தில் மீன்வளத் துறையிடம் ஆட்சேபனை இல்லா சான்று பெற வேண்டும் என்பதும் அந்த நிபந்தனைகளின் முக்கியமான ஒன்று. கழுவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்க மதிப்பீட்டு ஆய்வின்படி அந்தப் பகுதியில் இயற்கை நீரியல் முறை மீட்டெடுக்கப்படும் வரை இறால் மற்றும் மீன்வளம் மற்றும் வலசைப் பறவைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு,இந்தத் திட்டத்தால் கடல் மீன்வளமும் பாதிக்கப்படும் என்கிறார், சூழலியல் செயற்பாட்டாளரான நித்யானந்த் ஜெயராமன். ஆனால், இந்த நீர்த்தேக்கம் அமைந்தால் கழிமுக மீன் வளம் மட்டுமல்லாமல் கடல் மீன் வளமும் பாதிக்கப்படும் என்கிறார் சூழலியல் செயற்பாட்டாளரான நித்யானந்த் ஜெயராமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "உப்பங்கழியும், முகத்துவாரமும், இந்தப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களும் தான் கடலில் உள்ள மீன்களுக்கு தாய். இங்கு குஞ்சு பொறித்து பெரிதாகி கடலுக்குச் செல்லும் மீன்கள் தான் கடல் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. இறால், நண்டு போன்ற பல உயிரினங்கள் அப்படித்தான் உள்ளன. இந்தச் சூழலில் இதனால் ஏற்படும் பின் விளைவுகள் கடலிலும் தெரியும்," எனத் தெரிவித்தார். அரசு கூறுவது என்ன? இந்தச் சூழலில் மீன்வளத்தைப் பாதுகாக்கவும் வலசைப் பறவைகளின் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும் அரசு சில திட்டங்களை முன்வைத்துள்ளது. இதற்கு ஈடாக ஏற்கெனவே கொக்கிலமேடு பகுதியில் உள்ள ஈர நிலங்கள் மேம்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட உப்பங்கழி அமைந்துள்ள இடங்கள் புதிய ஈர நிலங்களாக மாற்றப்படும் என்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 6 செயற்கை தீவுகளும் உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என அரசாங்கத்திடம் பலமுறை தெரிவித்ததாக மீனவர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி மீன்வளத் துறையிடம் இந்தத் திட்டத்திற்கு ஆட்சேபனை இல்லா சான்று வழங்கக்கூடாது என மீனவர்களின் சார்பில் கோரிக்கை கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் முன்மொழிந்திருப்பதாகவும் சட்ட வழிகளைப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கிறார் கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன். படக்குறிப்பு,கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சௌந்தர பாண்டியன் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நாங்கள் சந்தித்தபோது எங்களுக்கு திட்டத்தை வரைபடம் போட்டுக் காண்பித்தார்கள். பக்கிங்ஹாம் கால்வாயை நாங்கள் விட்டுவிடுகிறோம். ஆனால், மற்ற இடங்கள் எங்களுக்குத் தேவை என்றார்கள். உங்களுக்கு தண்ணீர் போக்குவரத்துக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்றார்கள்." "ஆனால், அவர்கள் அமைக்கின்ற கால்வாயால் எங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் கிடையாது. கிளைக் கால்வாய்களில் தண்ணீர் பரவுவதால் தான் இரால், நண்டு, மீன் போன்றவை குஞ்சு பொரிக்கின்றன. அதை அவர்கள் ஆக்கிரமித்துவிட்டு எங்களுக்கு கால்வாய் கொடுத்தால் நாங்கள் அதில் படகு ஓட்டச் செல்வதா? படகு சவாரி வேண்டுமானால் செய்யலாம், அது மீன்பிடிப்பதற்கான இடம் கிடையாது." என்றார். இந்தத் திட்டம் வருவதால் தங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறும் சௌந்தர பாண்டியன், "காட்டுக் குப்பத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வந்தது. அதிலிருந்து கோவளத்திற்கு குடிநீர் கிடைக்கவில்லை. நெம்மேலி குப்பத்தில் இரண்டாவது திட்டம் உருவாகி வருகிறது. அதிலிருந்தும் எங்களுக்கு குடிநீர் வரப்போவதில்லை. இந்த மூன்றாவது திட்டமும் சென்னைக்குத் தான் போகப் போகிறது. எங்கள் இடத்தில் தண்ணீர் எடுத்து, வாழ்வாதாரத்தை கெடுத்து அதனால் எங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை." என்று தெரிவித்தார். நீர்வளத் துறை கூறுவது என்ன? இந்த நிலையில் நீர்த்தேக்கத் திட்டம் மற்றும் மீனவர்கள் எழுப்பும் கவலைகள் தொடர்பாக விளக்கம் பெற தமிழ்நாடு நீர்வளத் துறையை பிபிசி தமிழ் பலமுறை தொடர்புகொண்டது. ஆனால் அவர்களின் விளக்கத்தைப் பெற முடியவில்லை. இந்தத் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவின்போதே பதிலளிக்கப்பட்டு விட்டதாக நீர்வளத் துறையின் சார்பில் பிபிசி தமிழிடம் தெரிவிக்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy05j19l040o
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
வட்டு தெற்கு பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி கட்டும் பணி நடைபெறுகிறது. வங்கிப் பரிவர்த்தனை விபரம். தற்போதைய வங்கி மீதி சேமிப்பு வட்டியுடன் ரூபா 168,123.35 சதம்.
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடாது Published By: Vishnu 01 Feb, 2026 | 09:29 PM (நெவில் அன்தனி) இந்த வருட ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் எனவும் ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது எனவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. சுமார் ஒரு வாரம் நீடித்த நிச்சயமற்றத் தன்மைக்கு பின்னர் பாகிஸ்தான் அரசாங்கம் தனது அணியை ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற அனுமதிக்க இன்று முடிவுசெய்தது. ஆனால், பெப்வரி 15ஆம் திகதி இந்தியாவை எதிர்த்தாடாமல் இருக்க பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது. தனது பரம வைரியான இந்தியாவை பி குழுவுக்கான முதலாவது சுற்றில் பாகிஸ்தான் எதிர்த்தாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. 'ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் பங்குபற்றுவதற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக பெப்ரவரி 15ஆம் திகதி அட்டவணை படுத்தப்பட்டுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களம் இறங்காது' என பாகிஸ்தான் அரசாங்கத்தின் டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து பங்களாதேஷ் விலகியதை அடுத்து ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் நிலை தோன்றியதை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிபை கடந்த திங்களன்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரும் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி சந்தித்தார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விடயம் குறித்து பிரதமரிடம் விளக்கியதாக இந்த சந்திப்பின் பின்னர் குறிப்பிட்ட நக்வி, இது தொடர்காக வெள்ளிக்கிழமை அல்லது திங்களன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார். பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்தை இணைத்ததை அடுத்து பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது. அயல் நாடுகளான இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அரசியல் உறவுகளில் கசப்புணர்வு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணத்தைக் காட்டி இந்தியாவுக்கு செல்ல முடியாது என பங்களாதேஷ் அறிவித்தது. அதன் பின்னர் பங்களாதேஷுக்கு பதிலாக உலகக் கிண்ணத்தில் ஸ்கொட்லாந்து இணைத்துக்கொள்ளப்பட்டதாக ஜனவரி 24ஆம் திகதி ஐசிசி அறிவித்தது. தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதனை நிராகரித்த ஐசிசி, உலகக் கிண்ணப் போட்டி நெருங்கிவரும் நிலையில் இடத்தை மாற்றுவதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/237579
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@வீரப் பையன்26 ஓடி வாங்கோ, போட்டி தொடங்கப்போகிறது.
-
பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?
பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் ஒரு அறிவிப்பால் ஆட்டம் கண்ட பங்குச்சந்தை பட மூலாதாரம்,Getty Images 1 பிப்ரவரி 2026, 08:30 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரை பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. நிதி அமைச்சரின் உரை முடிவடைவதற்குள், பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் (Sensex) 2,000 புள்ளிகள் வரை சரிந்தது. நிஃப்டி 500 புள்ளிகள் வரை சரிந்தது. பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகத்தின் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை (STT) அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டதே இந்த எதிர்வினைக்குக் காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை இயங்குவது மிகவும் அரிதான ஒன்றாகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக பங்குச்சந்தை இன்று இயங்கியது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் முதல் கல்வி மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்னைகள் வரை சில முக்கியமான அறிவிப்புகளை பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ஆனால் அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பு பங்குச் சந்தைகளை ஆட்டம் காணச் செய்தது. மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி, ஃபியூச்சர்ஸ் ((Futures) மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்கிறது. ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு காணப்பட்டது. எஸ்டிடி என்றால் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் எஸ்டிடி என்பது 'பங்குப் பரிவர்த்தனை வரி' (Securities Transaction Tax) என்பதைக் குறிக்கும். இது பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் விதிக்கப்படுகிறது. ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். எஃப் அண்ட் ஓ மீதான எஸ்டிடி 0.02% ஆக இருந்தது. இப்போது அதனை 0.05% ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. எஸ்டிடி என்பது அடிப்படையில் மற்ற வரிகளிலிருந்து தனித்துவமானது. வருவாய் ஈட்டவும், நிதிச் சந்தைகளில் நிலைத்தன்மையை அதிகரிக்கவும் பங்குப் பரிவர்த்தனைகள் மீது இந்த வரி விதிக்கப்படுகிறது. இது முற்றிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலானது, அதாவது சம்பந்தப்பட்ட தனிநபர் பங்குப் பரிவர்த்தனையில் லாபம் ஈட்டினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு எஸ்டிடி வரி விதிக்கப்படும். வருமான வரி தொடர்பான அறிவிப்பு பட மூலாதாரம்,SANSAD TV படக்குறிப்பு,மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். வருமான வரித் தாக்கல் (ITR) தொடர்பான காலக்கெடு மற்றும் விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐடிஆர்-1 (ITR-1) மற்றும் ஐடிஆர்-2 (ITR-2) படிவங்களைத் தாக்கல் செய்பவர்கள் இனி ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். இந்த முறை வருமான வரி வரம்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பின் கீழ், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. சம்பளதாரருக்கான நிலையான கழிவு ₹75,000 ஆகும். எனவே ரூ.12.75 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இருக்காது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14rdlv87npo
-
பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!
கிளிநொச்சியில் லொறி மீது துப்பாக்கிச் சூடு Feb 1, 2026 - 05:11 PM கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (01) அதிகாலை தருமபுரம் பகுதியில் லொறி ஒன்று, வேகமாக பயணித்த நிலையில், அதனை வீதித் தடையில் நிறுத்தி பொலிஸார் சோதனையிட முற்பட்டுள்ளனர். எனினும் பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி அந்த லொறி பயணித்த நிலையில், அதன் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபரான சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அந்த லொறியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cml3o6s1i04pdo29nqn1t4u9g -கிளிநொச்சி நிருபர் சப்தன்-
-
நியூட்டனின் மூன்றாம் விதியை அன்றே சொன்னவர் வள்ளுவர்: வவுனியாவில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை
நியூட்டனின் மூன்றாம் விதியை அன்றே சொன்னவர் வள்ளுவர்: வவுனியாவில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை 01 Feb, 2026 | 05:09 PM நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மனித குலத்திற்கு முற்றிலும் பொருந்தக்கூடிய வாழ்வியல் நெறிகளைத் தன்னகத்தே கொண்ட ஒரு பொக்கிஷமாகத் திருக்குறள் விளங்குகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றம், வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், 'மனித மாண்பு' எனும் தொனிப்பொருளிலான 7ஆவது சர்வதேச திருக்குறள் மாநாட்டின் முதலாம் நாள் நிகழ்வு வவுனியா பல்கலைக்கழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறிவியல் சார்ந்த கருத்துகளைத் தற்காலக் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடும்போது, வள்ளுவரின் தீர்க்கதரிசனம் எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உதாரணமாக, 'ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு' என்ற நியூட்டனின் மூன்றாம் விதியை, வள்ளுவர் அன்றே, 'பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்' என்ற குறளின் மூலம் மிக எளிமையாக விளக்கியுள்ளார். நாம் ஒருவருக்குத் துன்பம் இழைத்தால், அது நிச்சயம் நமக்கே திரும்பி வரும் என்ற வாழ்வியல் உண்மையை அறிவியல் பூர்வமாக அவர் அன்றே எடுத்துரைத்துள்ளார். மனிதன் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கூறும் நூல் திருக்குறள். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வள்ளுவர் வகுத்த பாதை மிக அழகானது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்று அவர் கூறியது போல, அறநெறியில் நின்று வாழும் மனிதன், வானுலகில் உள்ள தெய்வத்திற்கு இணையாகப் போற்றப்படுவான். இத்தகைய உயரிய மனித மாண்புகளைப் போற்றும் திருக்குறளைப் படித்து, அதன்படி நடப்பவர்கள் வாழ்வில் சகல நலங்களையும் பெறுவார்கள். இத்தகைய பெருமைமிகுந்த திருக்குறள் மாநாடு வடக்கு மாகாணத்தின் வவுனியாவில் நடைபெறுவது எமக்கு மிகுந்த பெருமையளிக்கிறது. இம்மாநாடு இங்கு நடைபெறுவதற்குக் காரணமான வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா அவர்கள் பாராட்டுக்குரியவர். அவர் பல்கலைக்கழகத்தைச் சமூகத்துடன் ஒன்றிணைத்துப் பயணிக்கும் பல ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து வருகின்றார். அவர் தனது பெயரைப் போலவே ஒரு 'அற்புதமான' மனிதராகச் செயற்படுகின்றார்" என ஆளுநர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி, வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா, மொறிசியஸ் சர்வதேச திருக்குறள் மன்றத்தின் பொதுச் செயலாளரும் பேராசிரியருமான பாஞ்.இராமலிங்கம், சர்வதேச தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் நிறுவுனரும் தலைவருமான திரு. மாவை.சோ.தங்கராசா, முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், தமிழறிஞர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 40-இற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இதில் பங்கேற்றுள்ளமை சிறப்பம்சமாகும். https://www.virakesari.lk/article/237567
-
புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய செல்வந்தர்கள் என்ன ஆனார்கள்? - போரின் நடுவே நிலையற்ற சூழல்
புதினுக்கு எதிராக பேசிய ரஷ்ய செல்வந்தர்கள் என்ன ஆனார்கள்? - போரின் நடுவே நிலையற்ற சூழல் பட மூலாதாரம்,ALEXEY NIKOLSKY/SPUTNIK/AFP படக்குறிப்பு,யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்கு உத்தரவிட்ட நாளன்று, தொழில் தலைவர்களை கிரெம்ளினுக்கு புதின் வரவழைத்தார். கட்டுரை தகவல் விட்டலி ஷெவ்சென்கோ பிபிசி மானிட்டரிங் ரஷ்யா ஆசிரியர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனுடனான போரின் நடுவே, ரஷ்யாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது. ஆனால், விளாடிமிர் புதின் அதிகாரத்தில் இருக்கும் 25 ஆண்டுகளில், ரஷ்யாவின் செல்வந்தர்களும் சக்திவாய்ந்தவர்களும் - அதாவது 'ஒலிகார்ச்சுகள்' (oligarchs) தங்கள் அரசியல் செல்வாக்கை கிட்டத்தட்ட முழுமையாக இழந்துவிட்டனர். இவை அனைத்தும் ரஷ்ய அதிபருக்குச் சாதகமான செய்திகள். மேற்கத்திய நாடுகளின் தடைகள் பெரும் பணக்காரர்களை புதினுக்கு எதிரிகளாக மாற்றத் தவறிவிட்டன, மேலும் அவரது ' சலுகைகள் மற்றும் தண்டனைகள்' கொள்கைகள் அவர்களை மௌன ஆதரவாளர்களாக மாற்றியுள்ளன. முன்னாள் வங்கி கோடீஸ்வரரான ஓலெக் டின்கோவ், புதின் எவ்வாறு தண்டனைகளை வழங்குகிறார் என்பதைத் தெளிவாக அறிவார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் போரை "பைத்தியக்காரத்தனமானது" என்று விமர்சித்த மறுநாளே, அவரது நிறுவன நிர்வாகிகளை கிரெம்ளின் தொடர்புகொண்டது. அந்த நேரத்தில் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய வங்கியான அவரது 'டின்கோஃப் வங்கி' அதன் நிறுவனருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்காவிட்டால் தேசியமயமாக்கப்படும் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. "என்னால் விலை குறித்துப் பேச முடியவில்லை" என்று டின்கோவ் நியூயார்க் டைம்ஸிடம் கூறினார். "இது ஒரு பிணைக் கைதியைப் போன்றது - உங்களுக்கு என்ன வழங்கப்படுகிறதோ அதை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னால் பேரம் பேச முடியவில்லை." ஒரு வாரத்திற்குள், தற்போது ரஷ்யாவின் ஐந்தாவது பணக்கார தொழிலதிபரும், போர் விமான இயந்திரங்களுக்கு நிக்கல் வழங்குபவருமான விளாடிமிர் பொட்டானின் என்பவருடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் வங்கியினை வாங்குவதாக அறிவித்தது. அது அதன் உண்மையான மதிப்பில் 3% விலைக்கு மட்டுமே விற்கப்பட்டது என்கிறார் டின்கோவ். இறுதியில், டின்கோவ் தான் ஒரு காலத்தில் வைத்திருந்த சுமார் 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.82 ஆயிரம் கோடி ) மதிப்புள்ள சொத்தை இழந்து, ரஷ்யாவை விட்டு வெளியேறினார். பட மூலாதாரம்,Chris Graythen/Getty Images படக்குறிப்பு,யுக்ரேனுக்கு எதிரான போரை விமர்சித்த பிறகு ஓலெக் டின்கோவ் பில்லியன் கணக்கான டாலர்களை இழந்து ரஷ்யாவை விட்டு வெளியேறினார். புதின் அதிபராவதற்கு முன்பு இருந்த நிலைமைக்கு இது முற்றிலும் மாறானது. சோவியத் யூனியன் உடைந்ததைத் தொடர்ந்த ஆண்டுகளில், சில ரஷ்யர்கள் முன்னர் அரசுக்குச் சொந்தமாக இருந்த பிரமாண்ட நிறுவனங்களின் உரிமையைப் பெற்றதன் மூலமும், நாட்டின் ஆரம்பகால முதலாளித்துவ வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டதன் மூலமும் மிகப்பெரிய பணக்காரர்களானார்கள். அவர்கள் புதிதாகப் பெற்ற செல்வம், அரசியல் கொந்தளிப்பான காலக்கட்டத்தில் அவர்களுக்குச் செல்வாக்கையும் அதிகாரத்தையும் தந்தது; அவர்கள் 'ஒலிகார்ச்சுகள்' என்று அழைக்கப்பட்டனர். ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த ஒலிகார்ச்சான போரிஸ் பெரெசோவ்ஸ்கி, 2000-ஆம் ஆண்டில் புதின் அதிபராக உயர்வதற்குத் தான் தான் பின்னணியில் இருந்ததாகக் கூறினார், மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வாறு செய்ததற்காக மன்னிப்பும் கோரினார்: "சுதந்திரத்தை மிதித்து ரஷ்யாவின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு பேராசை கொண்ட எதிர்கால கொடுங்கோலனையும் ஆக்கிரமிப்பாளனையும் அவரிடம் நான் பார்க்கவில்லை," என்று அவர் 2012-இல் எழுதினார். பெரெசோவ்ஸ்கி தனது பங்கை மிகைப்படுத்தியிருக்கலாம், ஆனால் ரஷ்யாவின் ஒலிகார்ச்சுகள் அதிகாரத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் திறன் கொண்டவர்களாக இருந்தனர் என்பது நிச்சயம். அவர் மன்னிப்பு கேட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு, பிரிட்டனில் புகலிடம் பெற்றிருந்த பெரெசோவ்ஸ்கி அங்கு மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். அந்த காலகட்டத்திற்குள், ரஷ்ய ஒலிகார்ச்சி முறையும் முழுமையாக இறந்துவிட்டது. பட மூலாதாரம்,Hulton Archive/Getty Images படக்குறிப்பு,போரிஸ் பெரெசோவ்ஸ்கி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார், அங்கு அவர் பின்னர் 2013-இல் மர்மமான சூழ்நிலையில் இறந்தார். எனவே, பிப்ரவரி 24, 2022 அன்று யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்புக்கு உத்தரவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, கிரெம்ளினில் ரஷ்யாவின் பெரும் பணக்காரர்களை புதின் கூட்டியபோது, அவர்களின் சொத்துக்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கப் போகின்றன என்பதை அறிந்திருந்தும் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. "இந்த புதிய சூழ்நிலையிலும் நாம் அதே அளவு சிறப்பாகவும் திறம்படவும் இணைந்து செயல்படுவோம் என்று நம்புகிறேன்," என்று அவர் அவர்களிடம் கூறினார். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு நிருபர், அங்கு குழுமியிருந்த கோடீஸ்வரர்கள் "வெளிறிப்போய் தூக்கமில்லாதவர்களாக" இருந்தார்கள் என விவரித்தார். படையெடுப்புக்கு முந்தைய காலமும், அதன் உடனடிப் பின்விளைவுகளும் ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கு மிகவும் மோசமாக இருந்தன. ஃபோர்ப்ஸ் இதழின் படி, ஏப்ரல் 2022 வரையிலான ஓராண்டில், போர், தடைகள் மற்றும் பலவீனமான ரூபிள் மதிப்பு காரணமாக அவர்களின் எண்ணிக்கை 117-லிருந்து 83 ஆகக் குறைந்தது. ஒட்டுமொத்தமாக, அவர்கள் 263 பில்லியன் டாலர்களை இழந்தனர் - அதாவது சராசரியாக தலா 27% சொத்துக்களை இழந்தனர். ஆனால் அதற்குப் பிந்தைய ஆண்டுகள், புதினின் போர் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் பெரும் நன்மைகளை அறுவடை செய்ய முடியும் என்பதைக் காட்டின. போருக்கான தாராளமான செலவினங்கள் 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவில் ஆண்டுக்கு 4% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியைத் தூண்டின. பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக பில்லியன் கணக்கில் சம்பாதிக்காத ரஷ்யாவின் அதி-பணக்காரர்களுக்குக் கூட இது சாதகமாக அமைந்தது. 2024-ஆம் ஆண்டில், ரஷ்யாவின் பாதிக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் ராணுவத்திற்குப் பொருட்களை வழங்குவதில் ஏதோ ஒரு பங்கைக் கொண்டிருந்தனர் அல்லது படையெடுப்பால் பயனடைந்தனர் என்று ஃபோர்ப்ஸின் ஜியாகோமோ டோக்னினி கூறுகிறார். "நேரடியாக ஈடுபடாதவர்கள் ஆனால் கிரெம்ளினுடன் ஒரு வகையான உறவை வைத்திருக்க வேண்டிய அவசியமுள்ளவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே இந்த நிலை. ரஷ்யாவில் தொழில் நடத்தும் எவரும் அரசாங்கத்துடன் உறவு வைத்திருக்க வேண்டும் என்று சொல்வது நியாயமானது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். 2025ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஷ்யாவில் முன்னெப்போதும் இல்லாத அளவு மிக அதிகமான எண்ணிக்கையில் 140 கோடீஸ்வரர்கள் இடம்பெற்றனர். அவர்களின் கூட்டு மதிப்பு (580 பில்லியன் டாலர்) படையெடுப்புக்கு முந்தைய ஆண்டை விட வெறும் 3 பில்லியன் டாலர் மட்டுமே குறைவாக இருந்தது. விசுவாசமாக இருப்பவர்களை லாபம் ஈட்ட அனுமதிக்கும் அதே வேளையில், தனது சொல்லுக்குக் கட்டுப்படாதவர்களை புதின் தொடர்ந்து தண்டித்து வருகிறார். எண்ணெய் அதிபர் மிகைல் கோடர்கோவ்ஸ்கிக்கு என்ன நடந்தது என்பதை ரஷ்யர்கள் நன்கு அறிவார்கள். ஒரு காலத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த அவர், 2001-இல் ஒரு ஜனநாயக ஆதரவு அமைப்பைத் தொடங்கிய பிறகு 10 ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,மிகைல் கோடர்கோவ்ஸ்கி ரஷ்யாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார், ஆனால் அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார், அவரது யுகோஸ் எண்ணெய் நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது. படையெடுப்புக்குப் பிறகு, ரஷ்யாவின் பெரும் பணக்காரர்கள் கிட்டத்தட்ட அனைவரும் மௌனமாகவே உள்ளனர், மேலும் பகிரங்கமாக எதிர்த்த ஒரு சிலரும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி பெரும் சொத்துக்களை இழக்க நேரிட்டது. ரஷ்யாவின் பெரும் செல்வந்தர்கள் புதினின் போர் முயற்சிக்கு முக்கியப் பங்களிக்கின்றனர், மேலும் பிப்ரவரி 24, 2022 அன்று கிரெம்ளினுக்கு அழைக்கப்பட்ட 37 வணிகர்கள் உட்பட அவர்களில் பலர் மேற்கத்திய நாடுகளின் தடைகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் மேற்கத்திய நாடுகள் அவர்களை ஏழைகளாக்கி அதன்மூலம் அவர்களை கிரெம்ளினுக்கு எதிராகத் திருப்ப விரும்பியிருந்தால், ரஷ்ய கோடீஸ்வரர்களிடையே நீடிக்கும் செல்வம் மற்றும் எதிர்ப்பு இல்லாத நிலையை பார்க்கும்போது அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அவர்களில் யாராவது தங்கள் பில்லியன் கணக்கான டாலர்களுடன் மேற்கத்திய நாடுகளுக்குத் தப்பிச் செல்ல நினைத்திருந்தால், இந்தத் தடைகள் அதைச் சாத்தியமற்றதாக்கிவிட்டன. "ரஷ்ய கோடீஸ்வரர்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடியின் கீழ் அணிதிரள்வதை உறுதி செய்ய மேற்கத்திய நாடுகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தன," என்கிறார் ஐரோப்பிய கொள்கை ஆய்வு மையத்தின் (சிஇபிஏ) அலெக்சாண்டர் கோல்யாண்ட்ர். "அவர்களில் யாருக்கும் வெளியேற எந்தத் திட்டமோ, யோசனையோ அல்லது தெளிவான பாதையோ இல்லை. சொத்துக்கள் முடக்கப்பட்டன, கணக்குகள் முடக்கப்பட்டன. இவை அனைத்தும் புதின் கோடீஸ்வரர்களையும் அவர்களின் சொத்துக்களையும், அவர்களது பணத்தையும் திரட்டி அவற்றை ரஷ்ய போர் பொருளாதாரத்திற்கு ஆதரவாகப் பயன்படுத்த உதவியது," என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். யுக்ரேன் படையெடுப்பைத் தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை, கிரெம்ளின் ஆதரவு பெற்ற தொழிலதிபர்கள் விரைவாக நிரப்பினர்; அவர்களுக்கு மிகவும் லாபகரமான சொத்துக்களைக் குறைந்த விலைக்கு வாங்க அனுமதி வழங்கப்பட்டது. இது ஒரு புதிய "செல்வாக்குமிக்க மற்றும் தீவிர விசுவாச ராணுவத்தை" உருவாக்கியுள்ளது என்று கார்னகி ரஷ்யா யூரேசியா மையத்தின் அலெக்ஸாண்ட்ரா ப்ரோகோபென்கோ வாதிடுகிறார். "அவர்களின் எதிர்கால நலன் ரஷ்யாவுக்கும் மேற்குக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலைச் சார்ந்தே இருக்கிறது," அதே நேரத்தில் முந்தைய உரிமையாளர்கள் மீண்டும் வந்துவிடுவார்கள் என்பதே அவர்களின் மிகப்பெரிய அச்சமாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார். ஜியாகோமோ டோக்னினியின் கூற்றுப்படி, 2024-ஆம் ஆண்டில் மட்டும் 11 புதிய கோடீஸ்வரர்கள் இந்த வழியில் ரஷ்யாவில் உருவாகியுள்ளனர். போர் மற்றும் மேற்கத்திய தடைகள் இருந்தபோதிலும், அவற்றின் காரணமாகவே ரஷ்யத் தலைவர் நாட்டின் முக்கியப் புள்ளிகள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களைத் தனது உறுதியான பிடியில் வைத்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.virakesari.lk/article/237567
-
இந்திய பட்ஜெட் 2026 - இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு
இந்திய பட்ஜெட் 2026 - இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு Feb 1, 2026 - 01:35 PM இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும். "வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற இலக்கை மையமாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை" கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவியில் இம்முறை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு நிதியுதவியாக 400 கோடி இந்திய ரூபாயை (INR 400 Crore / 4 Billion INR) இந்தியா ஒதுக்கியுள்ளது. இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயை விட அதிகமாகும். இந்த நிதியானது இலங்கையில் முன்னெடுக்கப்படும் வளர்ச்சித் திட்டங்கள், மனிதாபிமான உதவிகள் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cml3gh6my04p5o29nkk65km2n
-
பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?
பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்? பட மூலாதாரம்,Arvind Yadav/Hindustan Times via Getty Images படக்குறிப்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்." ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த 2026 மத்திய பட்ஜெட்டில், ஒருபுறம் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பசுமை ஆற்றலுக்கு அரசு சலுகைகளை வழங்கியுள்ளது; மறுபுறம், பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகள் மற்றும் சில செயல்பாடுகளின் விலையை உயர்த்தியுள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரியை அரசு நீக்கியுள்ளது, இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த மருந்துகள் மலிவாகும். இது தவிர, 7 அரிய வகை நோய்களுக்கான சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மீதான வரியையும் அரசு நீக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தியுடன் தொடர்புடைய சில உபகரணங்கள் மீதான வரியையும் அரசு குறைத்துள்ளது. இது சாதாரண நுகர்வோர், நோயாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை அல்லது பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' (Vikasit Bharat 2047) என்ற இலக்கை நோக்கி நகர்வதில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானது என்று அரசு கூறியுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பை இந்தியா எதிர்கொண்டு வருவதும், உலகளாவிய நிச்சயமற்ற நிலையும் நிலவி வரும் வேளையில், இந்த பட்ஜெட் மீது மக்களின் உன்னிப்பான பார்வை இருந்தது. மலிவான சிகிச்சை மற்றும் மருந்துகள் பட மூலாதாரம்,Getty Images புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுடன் போராடும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சிகிச்சைச் செலவைக் குறைக்க மத்திய அரசு இந்த பட்ஜெட் மூலம் முயற்சி செய்துள்ளது. பட்ஜெட்டில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 17 உயிர் காக்கும் மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இது தவிர, 7 அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுகளுக்கும் வரி விதிக்கப்படாது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குச் சலுகை பட மூலாதாரம்,Getty Images மைக்ரோவேவ் அவன்களின் சில முக்கியமான பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. கடல் உணவு ஏற்றுமதிக்கான வரி இல்லாத உள்ளீட்டு வரம்பு 1 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தோல், செயற்கை காலணிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியிலும் வரி இல்லாத உள்ளீடுகள் மற்றும் கால வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவை மலிவாக வாய்ப்புள்ளது. அணுமின் திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கு 2035 வரை சுங்க வரி விதிக்கப்படாது. மின்சார வாகனங்கள், சோலார் மற்றும் பசுமை ஆற்றல் விலை குறைய வாய்ப்பு பட மூலாதாரம்,Getty Images மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தி மீதான வரியைக் குறைக்க அரசு முயற்சி செய்துள்ளது. லித்தியம்-அயன் பேட்டரி சேமிப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய பல உள்ளீடுகளுக்குச் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சோலார் பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சோலார் கிளாஸிற்கான மூலப்பொருளான 'சோடியம் ஆன்டிமோனேட்' மீதான வரியும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சார வாகனங்கள், சோலார் ஆற்றல் மற்றும் பேட்டரி துறையில் உற்பத்தி செலவு குறையக்கூடும். எனினும், இந்த பலன் வாடிக்கையாளர்களைச் சென்றடையுமா என்பதை நிறுவனங்களின் கொள்கைகளே தீர்மானிக்கும். உண்மையில், இந்த மாற்றங்கள் உற்பத்திச் செலவைக் குறைக்கும்; ஆனால் வாடிக்கையாளர்களுக்கான விற்பனை விலை குறையுமா இல்லையா என்பதை நிறுவனங்களே தீர்மானிக்கும். தனிநபர் இறக்குமதி மற்றும் வெளிநாட்டுச் செலவுகளிலும் சலுகை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு பொருட்கள் அல்லது பரிசுப் பொருட்கள் முன்பை விட மலிவாகக் கிடைக்கலாம். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களுக்கான மூலத்தில் வசூலிக்கப்படும் வரி 5% அல்லது 20% என்பதில் இருந்து மாற்றப்பட்டு, வரம்பு ஏதுமின்றி நிலையான 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாட்டுப் படிப்பு மற்றும் சிகிச்சைக்காக அனுப்பப்படும் 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கான மூலத்தில் வசூலிக்கப்படும் வரி, இப்போது 5 சதவீதத்திற்குப் பதிலாக 2 சதவீதமாக இருக்கும். இது சுற்றுலா அல்லது படிப்பிற்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்குச் சற்று நிம்மதியைத் தரும். விலை அதிகரித்த பொருட்கள்/சேவைகள் எவை? பட மூலாதாரம்,Getty Images பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது முன்பை விடச் சற்று விலை உயர்ந்ததாக மாறும். ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் செக்யூரிட்டி டிரான்சாக்ஷன் வரி (STT) 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான STT 0.1 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாகவும், ஆப்ஷன் எக்சர்சைஸ் மீதான வரி 0.125 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 'வருங்கால வர்த்தகம் மற்றும் விருப்ப வர்த்தகம் ' (ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ்' ) பிரிவில் வர்த்தகம் செய்வது செலவு பிடிக்கும் ஒன்றாக இருக்கும். நிறுவனங்களின் பங்குகளைத் திரும்பப் பெறுவதில் (Share Buyback) நிறுவன நிறுவனர்கள் (Promoters) வரி விதிப்பு முறை கடுமையாக்கப்பட்டுள்ளது. இனிமேல் நிறுவனர்கள்(Promoters) மூலதன ஆதாய வரியுடன் (Capital Gains Tax) கூடுதல் வரியையும் செலுத்த வேண்டியிருக்கும்; இது பங்குகளைத் திரும்பப் பெறுவதன் (Buyback) மூலம் லாபம் ஈட்டுவதைக் குறைவான ஈர்ப்புமிக்க ஒன்றாக மாற்றக்கூடும்." பொட்டாசியம் ஹைட்ராக்சைடு போன்ற சில வேதிப்பொருட்கள் மற்றும் சில நுகர்வோர் பொருட்கள் மீது முன்பு வழங்கப்பட்ட சுங்க வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளது. இவற்றின் மீது இப்போது 7.5 சதவீதம் வரை அடிப்படை சுங்க வரி விதிக்கப்படும், இது அவற்றின் இறக்குமதி செலவை அதிகரிக்கும். வேதிப்பொருட்களின் விலை உயர்வு, அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் விலையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மொத்தத்தில், 2026 பட்ஜெட்டில் தாதுக்கள், ஸ்கிராப், மதுபானம் ஆகியவை விலை உயர்ந்துள்ளன. தோல், துணி, செயற்கை காலணிகள், வெளிநாட்டுப் பயணம், 17 புற்றுநோய் மருந்துகள், மைக்ரோவேவ் அவன், விமானத் தயாரிப்பு தொடர்பான பொருட்கள், மின்சார வாகன பேட்டரி, சர்க்கரை நோய் மருந்துகள் போன்றவை மலிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் பகுப்பாய்வின்படி, உற்பத்தி மற்றும் நுகர்வை மலிவாக்கும் அதே வேளையில், நிதிப் பரிவர்த்தனைகளை விலை உயர்த்தும் பாதையை அரசு தேர்ந்தெடுத்துள்ளது என்பது தெளிவாகிறது. "செக்யூரிட்டிஸ் டிரான்சாக்ஷன் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பட்ஜெட்டுக்குப் பிறகு விலை உயரக்கூடிய பொருட்கள்/நடவடிக்கைகளில் பங்குச் சந்தையின் ஃபியூச்சர்ஸ்-ஆப்ஷன்ஸ் வர்த்தகமும் அடங்கும். அதேசமயம் மதுபானம், ஸ்கிராப், தாதுக்கள் மற்றும் டெண்டு இலைகளின் விற்பனை மீது மூலத்தில் வசூலிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்தத் துறைகளில் செலவுகள் உயரக்கூடும். பட்ஜெட்டுக்குப் பிறகு, மருத்துவச் செலவுகள் குறைவதற்கும், வெளிநாட்டுப் பயணம் மற்றும் கல்வி மீதான வரிகள் குறைவதற்கும், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பல மின்னணு மற்றும் எரிசக்தி தொடர்பான பொருட்கள் மலிவாவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyg56y4m7do
-
பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!
பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு! 01 Feb, 2026 | 04:30 PM தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இருந்து, இன்று அதிகாலை 3.00 மணியளவில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தைத் தருமபுரம் பொலிஸார் சோதனையிட முற்பட்டனர். இதன்போது பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற டிப்பர் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் டிப்பர் வாகனத்தின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர்கள் சேதமடைந்துள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் சாரதி தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகத் தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/237564
-
சீன இராணுவத்தின் இரண்டாம் நிலைத் தளபதி மீது விசாரணை!
சீனாவின் உயர்மட்ட ராணுவ தளபதி நீக்கம்: போர் தயார்நிலை கேள்விக்குள்ளாகிறதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,75 வயதான ஜாங் யூக்ஸியா, மத்திய ராணுவ ஆணையத்தின் (Central Military Commission) துணைத் தலைவராக இருந்தார் கட்டுரை தகவல் ஸ்டீபன் மெக்டொனெல் சீனா செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA) உயர்மட்டத் தலைமை நிலைகுலைந்துள்ளது. சீனாவின் உயர்மட்டத் தளபதி ஜாங் யூக்ஸியா மற்றும் மற்றொரு மூத்த ராணுவ அதிகாரி ஜெனரல் லியு ஜென்லி ஆகியோர் வார இறுதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். சீனாவில் அரங்கேறி வரும் இதுபோன்ற உயர்மட்ட அதிகாரப் போராட்டங்களைத் தூண்டியது எது என்பது குறித்தும், இது சீனாவின் போரிடும் திறனுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் – குறிப்பாக தைவானை பலவந்தமாகக் கைப்பற்றும் லட்சியம் அல்லது மற்றொரு பெரிய பிராந்திய மோதலில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் – கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. 75 வயதான ஜாங், மத்திய ராணுவ ஆணையம் அல்லது சிஎம்சியின் (Central Military Commission) துணைத் தலைவராக இருந்தார். நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சிக் குழு, ஆயுதப் படைகளை கட்டுப்படுத்துகிறது. பொதுவாக ஏழு நபர்களைக் கொண்ட சிஎம்சி, இப்போது வெறும் இரண்டு உறுப்பினர்களாக (ஷி மற்றும் ஜெனரல் ஜாங் ஷெங்மின்) குறைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைவரும் முந்தைய தடுப்புக் காலங்களைத் தொடர்ந்து "ஊழல் எதிர்ப்பு" ஒடுக்குமுறையில் வீழ்த்தப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான ராணுவ பணியாளர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு சிஎம்சி-க்கு உள்ளது. இந்த அமைப்பு (மத்திய ராணுவ ஆணையம்) எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால், டெங் சியோ பிங் சீனாவின் முழுமையான ஆட்சியாளராக இருந்தபோது அவர் வகித்த ஒரே பதவி இதனுடைய தலைவர் பதவிதான். ஷி மற்றும் ஒரு சிஎம்சி ஜெனரல் மட்டுமே எஞ்சியிருப்பது முன்னெப்போதும் இல்லாத நிகழ்வு என்று ஆசிய சமூக கொள்கை நிறுவனத்தைச் சேர்ந்த லில் மோரிஸ் கூறுகிறார். "மக்கள் விடுதலை ராணுவம் குழப்பத்தில் உள்ளது," என்று அவர் பிபிசியிடம் கூறினார், சீனாவின் ராணுவம் இப்போது "பெரிய தலைமை வெற்றிடத்தை" கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இவ்வளவு மூத்த ஜெனரல்களை அகற்றுவதற்கு உண்மையில் என்ன காரணம் என்று கேட்டபோது, "நிறைய வதந்திகள் சுற்றி வருகின்றன. இந்த நேரத்தில், எது உண்மை மற்றும் எது பொய் என்பது எங்களுக்குத் தெரியவில்லை... ஆனால் இது நிச்சயமாக ஷி ஜின்பிங்குக்கும், பிஎல்ஏ மீதான அவரது தலைமை மற்றும் கட்டுப்பாட்டுக்கும் மோசமானது", என்று அவர் கூறினார். சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் சோங் ஜா இயான், ஜெனரல் ஜாங்கின் வீழ்ச்சிக்கான உண்மையான காரணம் தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அதைப் பற்றி நிறைய ஊகங்கள் இருப்பதாகவும் கூறினார். "அமெரிக்காவுக்கு அணு ரகசியங்களை கசியவிடுவது முதல் சதி திட்டமிடுவது மற்றும் பிரிவு சண்டைகள் வரை . பெய்ஜிங்கில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூட வதந்திகள் உள்ளன," என்றார். "ஆனால், ஜாங் மற்றும் லியூவின் வீழ்ச்சியும், இந்தத் தீவிர ஊகங்களும் இரண்டு விஷயங்களை எடுத்துக்காட்டுகின்றன: ஒன்று, ஷி இன்னமும் அசைக்க முடியாதவராக இருக்கிறார்; மற்றொன்று, பெய்ஜிங்கில் தகவல்களுக்கு குறிப்பிடத்தக்க வரம்புகள் உள்ளன, இது நிச்சயமற்ற தன்மையைத் தூண்டி, இந்த ஊகங்களுக்கு வழிவகுக்கிறது." ஜெனரல்கள் ஜாங் மற்றும் லியு ஆகியோர் 'விசாரணையில்' இருப்பதாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அவர்கள் 'ஒழுக்கம் மற்றும் சட்டத்தை கடுமையாக மீறியதாக' குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது; இது ஊழலைக் குறிப்பதற்கான ஒரு நயமான சொல்லாடலாகும். பின்னர் மக்கள் விடுதலை ராணுவத்தின் (PLA Daily) அதிகாரப்பூர்வ நாளிதழ் இதனை ஒரு தலையங்கத்தில் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியது. அதில், இந்த நடவடிக்கை ஊழலைத் தண்டிப்பதில் கம்யூனிஸ்ட் கட்சியின் 'சற்றும் சகிப்புத்தன்மையற்ற' அணுகுமுறையைக் காட்டுகிறது என்றும், 'யாராக இருந்தாலும் அல்லது எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும்' அவர்களுக்குத் தண்டனை உறுதி என்றும் எழுதப்பட்டிருந்தது." இந்தத் தளபதிகள் அனைவருக்கும் எதிராகக் கூறப்படும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை, ஒருவேளை ஒருபோதும் வெளியிடப்படாமலும் போகலாம். இருப்பினும், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகப் பெயரிடப்பட்டிருப்பது, குறைந்தபட்சம் அவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்பதையே ஏறக்குறைய உறுதியாகக் குறிக்கிறது. பிஎல்ஏ டெய்லி பத்திரிகையின் தலையங்கம் ஏற்கெனவே ஜாங் யூக்ஸியா மற்றும் லியு ஜென்லி ஆகியோரை குற்றவாளிகளைப் போலவே சித்தரித்துப் பேசியது. அவர்கள் "கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் கடுமையாகத் துரோகம் செய்துவிட்டனர்" என்றும், "மத்திய ராணுவ ஆணையத்தை மிதித்து அதன் அதிகாரத்தைக் குறைமதிப்புக்கு உட்படுத்திவிட்டனர்" என்றும் அது குறிப்பிட்டிருந்தது. ஜெனரல்களை குறிவைக்கப்படுவது ஊழல் பற்றியதாக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் இதுபோன்ற சுத்திகரிப்புகள் நடந்த விதத்தைப் பார்க்கும்போது, இது அதிகார அரசியல் பற்றியதாகவும் இருக்கலாம். ஷி ஜின்பிங் ஆட்சிக்கு வந்தபோது சீனாவில் நிச்சயமாக ஊழல் பிரச்னை இருந்தது, ஆனால் அந்த நாட்டின் அதிபர், தனது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பயன்படுத்தி, கட்சியின் அஞ்சப்படும் ஒழுங்கு ஆய்வுக் குழுக்களைப் பயன்படுத்தி, தனக்கு அரசியல் போட்டியாளர்களாக வரக்கூடியவர்களையும், அல்லது அரசாங்கப் பதவிகளில் இருந்துகொண்டு தன்னிடம் முழு விசுவாசத்தைக் காட்டாதவர்களையும் ஒழித்துக்கட்டுகிறார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது பொதுச் செயலாளர் ஷி-க்கு, தலைவர் மாவோ காலத்திலிருந்து காணப்படாத ஒரு நிகரற்ற கட்டுப்பாட்டு அதிகாரத்தை வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த வகை தலைமை எதிர்விளைவாகவும் இருக்கலாம். உதாரணமாக, ராணுவத்தில், சந்தேகத்தின் சூழல் எச்சரிக்கையான, பலவீனமான முடிவெடுப்பதற்கு வழிவகுக்கும். ஜாங் யூசியாவின் தந்தை, ஷி ஜின்பிங்கின் தந்தையின் ஒரு புரட்சிகரத் தோழராக இருந்தார். அந்தத் தளபதிக்கு ஷியுடன் நீண்டகாலப் பழக்கம் உண்டு. சமீபத்திய குழப்பங்களுக்கு முன்பு அவர்கள் நெருங்கிய கூட்டாளிகளாகக் கருதப்பட்டனர். யாரும் பாதுகாப்பாக இல்லை என்ற நம்பிக்கை, இந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்கியிருக்கலாம். சீன மக்கள் விடுதலை ராணுவத்தில் போர்க்கள அனுபவம் கொண்ட ஒரு சில மூத்த அதிகாரிகளில் அவரும் ஒருவர் என்பதால், அவரது இழப்பு ராணுவத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க இழப்பு அவரது நீக்கம் ஷி ஜின்பிங்குக்கு நீண்ட காலப் பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது என்று மோரிஸ் கூறுகிறார். ஷி ஜின்பிங் மீண்டும் தனது அதிகாரத்தை நிலைநாட்டியிருக்கலாம், ஆனால் இந்த குழப்பம் தொடர்ச்சியான உராய்வுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். "இது நிச்சயமாக ஷி ஜின்பிங்குக்கு ஒரு மோசமான தோற்றத்தை அளிக்கிறது. மேலும், வரும் ஆண்டுகளில் ஷி ஜின்பிங்குக்கும் அவரது தலைவர்களுக்கும் – குறிப்பாக மக்கள் விடுதலை ராணுவத்தில் – குறிப்பிடத்தக்க கொந்தளிப்பு ஏற்படப் போகிறது என்று நான் நினைக்கிறேன்." மிக மூத்த தளபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளின் மீதும் கவனத்தை திருப்புகிறது. அடுத்தது யார் என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்திருக்கலாம். தங்களுக்கு மேலிருந்தவர்களின் கதியைக் கருத்தில் கொண்டு, ஷி ஜின்பிங்கின் ஊழல் எதிர்ப்புப் பார்வை எந்த நேரத்திலும் தங்கள் மீது பாயக்கூடிய அந்த அபாயகரமான பகுதிக்கு பதவி உயர்வு பெறுவதையும் அவர்கள் விரும்பாமல் இருக்கலாம். மேலும், இந்தச் சம்பவங்கள் அனைத்தும், தைவான் மீது பெய்ஜிங் அழுத்தம் அதிகரித்து வரும் ஒரு நேரத்தில் நிகழ்ந்துள்ளன. ஒரு முழுமையான தாக்குதல் மூலம் அந்த தன்னாட்சித் தீவை கைப்பற்றுவோம் என்று சீனா அச்சுறுத்தி வருகிறது. இந்த நீக்கங்கள் அத்தகைய சாத்தியத்தை எவ்வளவு தடுத்தன என்பதை ஆய்வாளர்கள் எடைபோடுவார்கள். "இந்த சுத்திகரிப்பு, தைவானை கட்டுப்படுத்தும் சீனாவின் லட்சியங்களைப் பாதிக்காது. அது ஒட்டுமொத்த சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், குறிப்பாக ஷி-க்கும் பொருந்தும்," என்கிறார் பேராசிரியர் சோங். கூடுதல் தகவல் சேகரிப்பு பிபிசி-யின் இவெட் டான் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdex0kn6nwgo
-
காந்தியின் தலித் வளர்ப்பு மகளின் கதை: ஆசிரமத்தில் அவர் குடும்பம் தங்குவதை கஸ்தூரிபா எதிர்த்த வரலாறு
காந்தியின் தலித் வளர்ப்பு மகளின் கதை: ஆசிரமத்தில் அவர் குடும்பம் தங்குவதை கஸ்தூரிபா எதிர்த்த வரலாறு பட மூலாதாரம்,Getty Images/HITESH DAFDA படக்குறிப்பு,கடந்த 1915ஆம் ஆண்டு ஆமதாபாத்தில் உள்ள கோச்ரப் ஆசிரமத்திற்கு ஒரு தலித் குடும்பம் வந்தபோது, ஆசிரமவாசிகள் பலர் அவர்களை எதிர்த்தனர். உள்ளே உள்ள படத்தில் காந்தியும் அவர் தத்தெடுத்த தலித் மகளான லட்சுமியும் காணப்படுகின்றனர் கட்டுரை தகவல் ஜெய் சுக்லா பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் காந்திக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு மகளைத் தத்தெடுத்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த மகள் யார்? அவர் கோச்ரப் ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவுடன், கஸ்தூரிபா உட்பட ஆசிரமவாசிகள் அவரை ஏன் எதிர்க்கத் தொடங்கினார்கள்? இந்த எதிர்ப்பை காந்தி எப்படி கையாண்டார்? இவ்வளவு எதிர்ப்புக்குப் பிறகு கஸ்தூரிபா அந்த மகளை எப்படி ஏற்றுக்கொண்டார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, பிபிசி குஜராத்தி காந்திய இலக்கியங்களைப் ஆய்வு செய்ததோடு, தத்தெடுக்கப்பட்ட அந்த மகளின் குடும்பத்தில் இன்று உயிருடன் இருக்கும் உறுப்பினர்களிடமும் பேசியது. காந்தியின் வளர்ப்பு மகளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள, நாம் வரலாற்றைப் புரட்ட வேண்டும். காந்தி ஜனவரி 9, 1915 அன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். அவர் மும்பையில் கால் பதித்தபோது, ஒரு தேசிய வீரரைப் போல அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 'டால்ஸ்டாய்' மற்றும் 'பீனிக்ஸ்' போலவே இந்தியாவிலும் ஒரு நிறுவனம் அல்லது ஆசிரமத்தை நிறுவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. மே 25, 1915 அன்று, காந்தி ஆமதாபாத்தில் 'சத்யாகிரக ஆசிரமத்தை' நிறுவினார். இது இன்று 'கோச்ரப் ஆசிரமம்' என்றும் அழைக்கப்படுகிறது. ஆமதாபாத்தில் காந்தி குடியேற உதவியவர்களில் ஜீவன்லால் பாரிஸ்டரும் ஒருவர். கோச்ரப்பில் உள்ள அவரது வீட்டை ஆசிரமத்திற்காக வாடகைக்கு எடுக்க காந்தி முடிவு செய்தார். தனது சுயசரிதையான 'சத்திய சோதனை'யில் காந்தி குறிப்பிடுகையில், அந்த நேரத்தில் ஆசிரமத்தில் 13 தமிழர்கள் இருந்ததாக எழுதியுள்ளார். அவர்களுடன் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஐந்து தமிழ் குழந்தைகளும் வந்திருந்தனர். சுமார் 25 ஆண்கள் மற்றும் பெண்களுடன் ஆசிரமம் தொடங்கியது. "அனைவரும் ஒரே சமையலறையில் சாப்பிட்டோம், ஒரே குடும்பமாக நடந்து கொள்ள முயற்சித்தோம்" என்று காந்தி எழுதியுள்ளார். இருப்பினும், ஆசிரமம் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே காந்திக்கு ஒரு கடுமையான சோதனை காத்திருந்தது. தீண்டத்தகாதவர்கள் என்று அக்காலத்தல் கருதப்பட்ட பிரிவினரில் ஒரு குடும்பத்தை ஆசிரமத்தில் குடியமர்த்தி ஒரு முன்மாதிரியை உருவாக்க காந்தி விரும்பினார். எனவே, ஆசிரமத்தில் வசிக்க விருப்பமுள்ள அத்தகைய குடும்பங்களைத் தேடினார். பட மூலாதாரம்,BHIKHUBHAI DAFDA படக்குறிப்பு,காந்தி துதாபாய் தஃப்டாவின் குடும்பத்துடன். லட்சுமி வலதுபுறத்தில் குடும்பத்துடன் ஆசிரமத்திற்குள் நுழைந்த தலித் மகள் லட்சுமி காந்தியின் கருத்துகளைப் பின்பற்றி, பழங்குடி சமூகங்களிடையே கல்வி கற்பிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பாடுபட்ட அமிர்தலால் தக்கர் (தக்கர் பாபா) என்பவரிடமிருந்து காந்திக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவர், "ஒரு ஏழ்மையான மற்றும் நேர்மையான அந்தியஜ (தலித்) குடும்பம் உள்ளது. அவர்கள் உங்கள் ஆசிரமத்திற்கு வந்து வாழ விரும்புகிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று எழுதியிருந்தார். காந்தி தனது சுயசரிதையில், "தக்கர் பாபாவின் பரிந்துரையுடன் வரும் அந்தக் குடும்பம் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடிதத்தை என் தோழர்களிடம் வாசித்துக் காட்டினேன். அவர்கள் அதை வரவேற்றனர். அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்தின் விதிகளைப் பின்பற்றத் தயாராக இருந்தால், அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று நான் அமிர்தலால் தக்கருக்குத் தகவல் அனுப்பினேன்," என்று குறிப்பிட்டுள்ளார். துதாபாய் செப்டம்பர் 6, 1915 அன்று ஒரு கடிதம் எழுதினார். அதில் தான் ஆசிரமத்தில் சேர விரும்புவதாகவும், அதன் அனைத்து விதிகளையும் பின்பற்றுவதாகவும் தெரிவித்திருந்தார். இறுதியாக, செப்டம்பர் 11, 1915 அன்று துதாபாய், அவரது மனைவி தானிபென் மற்றும் பெண் குழந்தையான லட்சுமி ஆகியோர் ஆசிரமத்திற்கு வந்தனர். பின்னர் செப்டம்பர் 26 அன்று அவர்கள் ஆசிரமத்தில் குடியேறினர். துதாபாய் தற்போதைய அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தேவராஜியா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் போடாட் நகரில் ஒரு பள்ளியை நடத்தி வந்தார், பின்னர் மும்பையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆனால் அவரது வருகையோடு, ஆசிரமத்தில் சிக்கல் தொடங்கியது. "ஆதரவாக இருந்த நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. பங்களா உரிமையாளருக்குப் பங்கிருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது." "அந்த நபர் மீது எங்கள் தண்ணீர் தெளித்தால் கோபப்படுவார். அவர் துதாபாயைத் திட்டவும் துன்புறுத்தவும் தொடங்கினார். அனைவரிடமும் அந்த வசவுகளைப் பொறுத்துக்கொண்டு, உறுதியுடன் தண்ணீர் எடுக்குமாறு நான் சொல்லியிருந்தேன்"என்று காந்தி பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த நபர் திட்டுவதை நிறுத்திக்கொண்டார். ஆனால், அதன் பிறகு ஆசிரமத்தில் மற்றொரு பிரச்னை உருவானது. பட மூலாதாரம்,HITESH DAFDA படக்குறிப்பு,காந்தி தனது வளர்ப்பு மகள் லட்சுமியுடன் ஆசிரமத்திற்கு கிடைத்து வந்த நிதி உதவி நின்றது. "ஆசிரம விதிகளுக்கு உட்பட்டு அந்தியஜர்கள் (தலித் மக்கள்) உள்ளே நுழைவதை ஆரம்பத்திலிருந்தே சந்தேகித்த அந்தச் சகோதரருக்கு, அவர்கள் ஆசிரமத்திற்குள் வருவார்கள் என்பதில் நம்பிக்கையே இல்லை. நிதி உதவி நின்றது. சமூகப் புறக்கணிப்பு பற்றிய வதந்திகள் என் காதுகளை எட்டின. புறக்கணிக்கப்பட்டு எந்த ஆதரவும் இல்லாமல் போனாலும், நாங்கள் ஆமதாபாத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று என் தோழர்களிடம் சொன்னேன். நாங்கள் அந்தியஜவாடாவுக்கே (தலித் மக்கள் வசிக்கும் பகுதி) சென்று அவர்களுடனேயே வாழ்வோம். அங்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்தோ அல்லது உழைத்தோ பிழைத்துக்கொள்வோம்," என்று காந்தி குறிப்பிட்டுள்ளார். நிதி உதவி நின்ற பிறகு, ஆசிரமத்தின் நிர்வாகம் மற்றும் செலவுகளைக் கவனித்து வந்த காந்தியின் மருமகன் மகன்லால் காந்தி, "அடுத்த மாத ஆசிரமச் செலவுகளைச் சமாளிக்க நம்மிடம் பணம் இல்லை"என்று காந்திக்கு ஒரு தகவலைத் தந்தார். மகன்லால் காந்தி, காந்தியின் மாமா ஜீவன் சந்தின் மகனான குஷால் சந்தின் மகன் . காந்தியைப் போலவே அவரும் தென்னாப்பிரிக்கா சென்றார். ஆனால் அங்கு தொழில் செய்யாமல், காந்தியின் ஆசிரமத்தில் இணைந்தார். மகன்லால் காந்தியின் எச்சரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக , "அப்படியானால் நாம் இறுதிவரை போராடுவோம்" என்று காந்தி எழுதியுள்ளார். மேலும், "இப்படிப்பட்ட இக்கட்டான நிலை எனக்கு வருவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறையும், 'ஷாம்லா' (கடவுள்) கடைசி நிமிடத்தில் உதவியை அனுப்பியிருக்கிறார்" என்று எழுதியுள்ளார். மகன்லால் அந்தத் தகவலைச் சொன்ன உடனேயே, ஒரு நாள் காலை ஒரு குழந்தை ஓடிவந்து காந்தியிடம், "ஆசிரமத்திற்கு வெளியே ஒரு கார் நிற்கிறது. ஒரு வணிகர் உங்களை அழைக்கிறார் என்று கூறியது. இதனைக் குறித்து காந்தி பின்வருமாறு எழுதியுள்ளார். "நான் அந்த நபரை அணுகினேன். அவர் என்னிடம், "நான் ஆசிரமத்திற்கு உதவ விரும்புகிறேன், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்டார். அதற்கு நான், "நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன், ஆனால் தற்போது நான் பெரும் நெருக்கடியில் இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்," என்று கூறியுள்ளார். "மறுநாள் சந்திப்பதாக அவர் கூறிச் சென்றார். அடுத்த நாள், அந்த வணிகர் காந்தியிடம் வந்து 13,000 ரூபாயை ரொக்கமாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்." பட மூலாதாரம்,Getty Images கஸ்தூரிபாவின் எதிர்ப்பு ஆசிரமத்தில் ஒரு தலித் குடும்பம் தங்குவது அங்கிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை. அவர்களில் காந்தியின் மனைவி கஸ்தூரிபாவும் ஒருவர். லட்சுமியின் சகோதரர் மோகன்பாய் தஃப்டாவின் மகனான பிகுபாய் தஃப்டா, பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "கஸ்தூரிபா கோபமாக இருந்தார். எனவே என் தாத்தா துதாபாய், காந்தியிடம் தாங்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறத் தயார் என்று கூறினார். ஆனால் காந்தி பிடிவாதமாக மறுத்துவிட்டார். அனைத்தையும் மௌனமாக பொறுத்துக் கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்"என்றார். காந்தி தனது 'அக்ஷர்தேக்' நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார். "துதாபாய் ஆசிரமத்திற்கு வந்த அன்று, தென்னாப்பிரிக்கா சத்யாகிரகத்தில் பங்கேற்ற சந்தோக் மகன்லால் காந்தி விரதத்தைத் தொடங்கினார். ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. சந்தோக் சாப்பிடாததால் நானும் சாப்பிடவில்லை. கஸ்தூரிபாவிற்கும் இது பிடிக்கவில்லை, அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். ஆசிரமத்தின் மற்ற சகோதரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்." காந்தி கஸ்தூரிபாவிடம், "நீ என்னை விட்டு பிரிந்து செல்லலாம், நாம் நல்ல நண்பர்களாகவே பிரிவோம்" என்று கூறிவிட்டார். செப்டம்பர் 24 அன்று சந்தோக்கும் மகன்லாலும் ஆசிரமத்தை விட்டு வெளியேறினர். இருப்பினும், அவர்கள் அக்டோபர் 3 அன்று மீண்டும் திரும்பினர். கஸ்தூரிபா எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஆசிரமத்தை விட்டு வெளியேறவில்லை. ஆசிரமவாசிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க காந்தி 'உண்ணா விரதம்' என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்தார். காந்தி எப்போதும் கஸ்தூரிபாவுக்கு நிலைமையை விளக்குவார், ஆனால் பா (கஸ்தூரிபா) சோர்ந்து போவார். அவர் கண்களில் கண்ணீர் வழியும், ஆனாலும் காந்தி தனது முடிவில் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில், காந்தியின் மூத்த சகோதரி ரலியத்பென்னும் ஆசிரமத்தில் வசித்து வந்தார். இளம் வயதிலேயே கணவரை இழந்த அவருக்கும், துதாபாயின் குடும்பம் ஆசிரமத்தில் தங்குவது பிடிக்கவில்லை. முதலில், அவர்கள் தனிச் சமையல் வேண்டும் என்று கோரினர், ஆனால் காந்தி அதை நிராகரித்தார். இதனால் அவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். அவர் ராஜ்கோட்டிற்குச் சென்றார், அங்கு அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை காந்தி செய்து கொடுத்தார். காந்தி கஸ்தூரிபாவிடமும், நீயும் ரலியத்பென் போலவே ராஜ்கோட்டிற்குச் செல்லலாம் என்று கூறினார். ஆனால் கஸ்தூரிபா, "அப்படிச் செய்வதன் மூலம், உங்கள் வாழ்நாள் முழுவதும் என்னை நீங்கள் பிரிக்க நேரிடும். நான் உங்களைப் பிரிந்து செல்ல மாட்டேன்," என்று கூறிவிட்டார். இறுதியாக, காந்தியின் கோரிக்கையை பா ஒப்புக்கொண்டார். பின்நாட்களில், லட்சுமியின் தலைமுடியைச் சீவி, குளிப்பாட்டி அவரை பா தயார் செய்வார். ஆரம்பத்தில் காட்டிய வெறுப்பிற்குப் பதிலாக, லட்சுமியின் மீது மிகுந்த அன்பைப் பொழிந்தார் கஸ்தூரிபா. பட மூலாதாரம்,ROLI BOOKS லட்சுமியை தத்தெடுத்த காந்தி இறுதியாக, எதிர்ப்புகளை சமாளிக்க லட்சுமியைத் தத்தெடுக்க காந்தி முடிவு செய்தார். அக்டோபர் 5, 1920 அன்று காந்தி லட்சுமியைத் தத்தெடுத்தார். அப்போது லட்சுமிக்கு சுமார் ஆறு வயது. அடுத்த 14 ஆண்டுகள் லட்சுமி காந்தியுடன் இருந்தார். லட்சுமி திருமண வயதை அடைந்ததும், அவருக்குத் திருமணம் செய்து வைக்க காந்தி முடிவு செய்தார். இதற்காக, ஆசிரமத்தில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த தமிழ் பிராமணரான மாருதி சர்மாவை அவர் தேர்ந்தெடுத்தார். மாருதி சர்மா விழித்திரை தொடர்பான பணிகளைச் செய்யும் ஒரு தொழிற்சாலையில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார். "அவர்களது திருமணத்தின் போது காந்தி எரவாடா சிறையில் இருந்தார். எனவே, காந்தி இல்லாத நிலையில், காந்தி ஆசிரமத்திற்கு எதிரே இருந்த சிவப்பு பங்களாவில் திருமணம் நடந்தது. பிரபல இசைக்கலைஞர் நாராயண் கரே லட்சுமிக்குச் சீர் செய்தார்"என்று பிகுபாய் தஃப்தாவின் மகன் ஹிதேஷ்பாய் தஃப்தா பிபிசி குஜராத்தியிடம் தெரிவித்தார். முன்னதாக, காந்தி சிறையில் இருந்ததால் லட்சுமியின் திருமணம் தள்ளிப்போனது. காந்தி நேரில் இல்லாமல் தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என லட்சுமி மறுத்து வந்தார். ஆனால், இந்த முறை காந்தி இல்லாத போதும் லட்சுமி திருமணத்திற்குச் சம்மதித்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். மகனுக்கு ஹரிபாய் சர்மா என்றும், மகளுக்கு கல்பனாபென் என்றும் பெயரிடப்பட்டது. ஹரிபாய் சர்மா, ரஸிலாபென் என்பவரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு சிநேக் என்ற மகள் உள்ளார். ஹரிபாய் சர்மா தற்போது உயிருடன் இல்லை. மாருதி சர்மா 1946-ல் காலமானார். லட்சுமிபென் 32 வயதிலேயே கணவரை இழந்தார். ஆனால், காந்தியின் பெயரைச் சொல்லி அவர் எந்தச் சலுகையையும் கேட்கவில்லை என்று குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள். "அவர் ஒரு மில்லில் வேலை செய்தார், பின்னர் ஒரு மருத்துவமனையில் மக்களுக்குச் சேவை செய்ய முடிவு செய்தார்," என்று ஹிதேஷ் சர்மா கூறுகிறார். லட்சுமிபென் ஷர்மாவின் மகன் ஹரிபாய் சர்மா இறந்துவிட்டாலும், அவரது மனைவி ரஸிலாபென் சர்மா இன்றும் உயிருடன் இருக்கிறார். பிபிசி குஜராத்தியிடம் பேசிய ரஸிலாபென் சர்மா, "அவர் எளிமையை விரும்பினார். காந்தியின் கருத்துகளின்படி வாழ விரும்பினார்," என்று கூறினார். "எனக்கு 1978-ல் திருமணம் நடந்தது, அவர் 1984-ல் இறந்தார். நாங்கள் ஒன்றாக இருந்த காலம் மிகக் குறைவு, ஏனெனில் அவர் காந்தி ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார்." காந்தி குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் போல அவர் ஏன் அரசியலில் ஈடுபடவில்லை அல்லது வெளிச்சத்திற்கு வரவில்லை? இந்தக் கேள்விக்கு ரஸிலாபென் பதிலளிக்கையில், "அவர் அரசியலில் இருந்து வெகுதூரம் விலகி இருந்தார். ஆடம்பரத்தை அவர் விரும்பவில்லை. எப்போதும் காதி ஆடைகளையே அணிந்தார், காந்தியைப் போலவே எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். மக்களுக்குச் சேவை செய்வதிலும் காந்திய சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் மிகவும் எளிமையான குணம் கொண்டவர்," என்றார். பட மூலாதாரம்,HITESH DAFADA படக்குறிப்பு,காந்தியின் வளர்ப்பு மகள் லட்சுமி 1984ஆம் ஆண்டு காலமானார் தஃப்டா குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவரது கணவர் மாருதி சர்மா இறந்த பிறகு, லட்சுமி தனது வாழ்வாதாரத்திற்காக ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆலையில் வேலை செய்யத் தொடங்கினார். ஒரு நாள், அவர் படிக்கட்டில் வழுக்கி விழுந்ததால், கடினமான வேலைகள் செய்வதை நிறுத்திக்கொண்டார். லட்சுமிபென்னின் மகன் ஹரிபாய் சர்மா குஜராத் காதி வாரியத்தில் ஸ்டெனோகிராஃபராகப் பணியாற்றி வந்தார். காந்திக்கு ஹரிபாய் மீது மிகுந்த அன்பு இருந்தது. ஹரிபாய் குழந்தையாக இருந்தபோது காந்தி அவருடன் விளையாடுவார். காந்தி உயிருடன் இருந்தவரை, ஒவ்வொரு ஆண்டும் லட்சுமியைத் தன்னுடன் வந்து தங்குமாறு (பிறந்த வீட்டிற்கு வருவது போல) அழைப்பார். கஸ்தூரிபாவின் மறைவுக்குப் பிறகும் காந்தி இந்த வழக்கத்தைத் தொடர்ந்தார். லட்சுமிபென்னை எப்போதும் கடிதங்கள் எழுதுமாறு காந்தி சொல்வார். காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி லட்சுமியைப் பெரிதும் உலுக்கியது. டெல்லிக்குச் செல்ல அவரிடம் போதிய வசதிகள் இல்லாததால், நான்காவது நாளில் தான் அவர் டெல்லியை அடைந்தார். பின்னர் அவரது அஸ்தியுடன் பிரயாகைக்குச் சென்றார். கஷ்டப்பட்டு தன் குழந்தைகளை வளர்த்த அவர், ஜனவரி 31, 1984 அன்று காலமானார். அவர் இறக்கும் போது, அவரது கடைசி விருப்பத்தின்படி காந்தி ஆசிரமத்திலேயே வசித்து வந்தார். லட்சுமிபென்னின் இரண்டாவது சகோதரி சந்திரிகாபென்னின் மகன் நரேந்திரபாய் கோஹில், பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், "அவர் இறுதிவரை காந்தி ஆசிரமத்தின் பிரார்த்தனைகளில் பங்கேற்றார். பஜனைகள் பாடுவார், ஆசிரம நிகழ்வுகளில் கலந்துகொள்வார். காந்தியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் ஒருபோதும் நடந்துகொண்டதில்லை"என்றார். "அவர் இறுதிவரை காதி ஆடைகளையே அணிந்தார். அவரது குழந்தைப் பருவமும் ஆசிரமத்தில் கழிந்தது, அவரது இறுதி நாட்களும் ஆசிரமத்திலேயே கழிந்தன." "அவருக்கு அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் கிடைத்து வந்தது. அதை வைத்தே அவர் வாழ்ந்தார். வேறு எந்த உதவியையும் அவர் எதிர்பார்க்கவில்லை"என்பதையும் நரேந்திரபாய் கோஹில் குறிப்பிட்டார். இருந்தபோதிலும், பொதுவாழ்வில் இருந்து லட்சுமிபென் எப்போதும் ஒதுங்கியே இருந்தார். "காந்தியின் முக்கிய குடும்ப உறுப்பினர்களுடனான எங்கள் தொடர்பு மிகக் குறைவாகவே இருந்தது. ஒருமுறை காந்தியின் வம்சாவளிப் பட்டியலைத் தயாரித்தபோது, அதில் லட்சுமிபென்னின் பெயர் இருந்தது. ஆனால் அதைத் தவிர மற்ற தொடர்புகள் அனைத்தும் நின்றுவிட்டன. நாங்களும் எதையும் எதிர்பார்க்கவில்லை," என்று பிகுபாய் டஃப்தா தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9wx0xqnz8wo
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முதலில் கொண்டுவாருங்கள் எதிர்க்கட்சியிடம் அமைச்சர் பிமல் கோரிக்கை ; பலவீனத்தை மக்கள் அறிந்துகொள்வார்கள் எனவும் தெரிவிப்பு 01 Feb, 2026 | 10:45 AM (இராஜதுரை ஹஷான்) பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முன்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவேண்டும். அப்போது தான் எதிர்க்கட்சியினரின் பலவீனத்தை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்வார்களென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச சகலவிதமான முறையற்ற செயற்பாடுகளுக்கும் துணைசெல்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கொழும்பில் நேற்று சனிக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடவில்லை. எதிர்க்கட்சியினரால் தோற்றுவிக்கப்பட்ட தவறான நிலைப்பாட்டையும், பாடப்புத்தக தயாரிப்பின் போது ஏற்பட்ட குறைபாட்டையும் நிவர்த்தி செய்வதற்காகவே ஆறாம் தரத்துக்கான கல்வி மறுசீரமைப்பு 2027 ஆம் ஆண்டு வரை பிற்போடப்பட்டது. புதிய கல்வி மறுசீரமைப்பின் போது தேசிய கல்வி நிறுவகம் இரு இடத்தில் தவறிழைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த தவறு திருத்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், தவறிழைத்தவர்களுக்கு நாட்டின் சட்டத்தின் பிரகாரமும், தாபன விதிக்கோவையின் பிரகாரமும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியையும் எதிர்க்கட்சித் தலைவர் தனது வங்குரோத்து அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டார். முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் போலி என்று நிரூபித்ததன் பின்னர் தாங்கள் கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பிற்போட்ட கல்விக் கொள்கையை உடன் அமுல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தற்போது குறிப்பிடுகிறார். உண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சுய சிந்தனையுடன் தான் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. கல்விக் கொள்கைக்கு எதிராக இரண்டு பிரதான ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்து தவறான நிலைப்பாட்டையே கொண்டு சென்றது. இந்த இரண்டு ஊடகங்களும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன. அதேபோன்று எதிர்க்கட்சிகளும் வங்குரோத்து நிலையடைந்துள்ளன. புதிய கல்வி மறுசீரமைப்பை முன்னிலைப்படுத்தி கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாக குறிப்பிட்டார்கள். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெகுவிரைவில் கொண்டுவருமாறு குறிப்பிட்டோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் சுவிஸ்லாந்தில் இருந்து நாடு திரும்பியவுடன் சபைக்கு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டார். பிரதமரும் நாட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்துக்கு வரவில்லை. பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பதவி நீக்கப்பட்ட விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதாக எதிர்க்கட்சியினர் தற்போது குறிப்பிடுகிறார். பிரதி செயலாளர் நாயகத்தை பதவி நீக்குவது தொடர்பில் ஆராய்ந்த குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலகவும் கலந்துக் கொண்டார். ஆகவே எதிர்கட்சித் தலைவர் மேலதிக தகவல்களை கயந்த கருணாதிலகவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237521
-
சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள்
செரெண்டிபை அதிரவைத்தது சென் மேரிஸ்; மீண்டும் நியூ ஸ்டார் ஹீரோவானார் பஸால் 01 Feb, 2026 | 07:51 AM (நெவில் அன்தனி) கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற மாவனெல்லை செரெண்டிப் கழகத்திற்கு எதிரான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுப்பர் 8 போட்டியில் யாழ். நாவாந்துறை சென் மேரிஸ் கழகம் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது. இரண்டு அணிகளும் எதிர்த்தாடுவதிலும் தடுத்தாடுவதிலும் மிகத் திறமையாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக சென். மேரிஸ் கழக வீரர்கள் முந்தைய போட்டிகளிலும் பார்க்க இந்தப் போட்டியில் சிறந்த வியூகங்களுடன் விளையாடினர். அதுவே அவர்களது வெற்றியில் பிரதான பங்காற்றியது. இடைவேளைவரை இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை. இடைவேளைக்குப் பின்னர் 50ஆவது நிமிடத்தில் சென். மேரிஸ் பின்களத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தைப் பயன்படுத்தி ஃப்ரிம்ப்பொங் யாவ் கோல் ஒன்றைப் போட்டு செரெண்டிபை முன்னிலையில் இட்டார். ஆனால், சென் மேரிஸ் வீரர்கள் திறமையாக விளையாடி அடுத்த இரண்டாவது நிமிடத்தில் ஜோன் லவானி மூலம் கோல் நிலையை சமப்படுத்தினர். அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. போட்டியின் 72ஆவது நிமிடத்தில் வலதுபுற முன்கள மாற்று வீரர் எம். மேரிசன் மிகவும் சாமர்த்தியமாக பந்தை நகர்த்திச் சென்று எம். பிரேம்குமாருக்கு பரிமாறினார். எம். பிரேம்குமார் மிகவும் பலமாக உதைத்து கோலாக்கி சென். மேரிஸ் கழகத்தை வெற்றிபெறச் செய்தார். பஸால் மீண்டும் ஹீரோவானார், மஞ்சள் அட்டைக்கும் இலக்கானார் நியூ ஸ்டார் கழகத்திற்கும் சொலிட் கழகத்திற்கும் இடையில் இரவு நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுப்பர் 8 போட்டியில் சொலிட் கழகத்தின் கடும் சவாலுக்கு மத்தியில் எம்.என்.எம். பஸால் உபாதையீடு நேரத்தில் கோல் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை வெற்றி அடையச் செய்து ஹீரோவானார். ஆனால், வெற்றிக்களிப்பில் ஜேர்சியைக் கழற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அப் போட்டியில் முதலாவது பகுதியில் கோல் எதுவும் போடப்படவில்லை. இடைவேளை முடிந்த பின்னர் 48ஆவது நிமிடத்தில் மொஹமத் ஷஹிர் கோல் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை முன்னிலையில் இட்டார். 15 நிமிடங்கள் கழித்து சொலிட் கழகம் சார்பாக ஹென்றி சிபுயேஸ் கோல் நிலையை சமப்படுத்தினார். அதன் பின்னர் போட்டியில் சூடு பிடிக்க இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. உபாதையீடு நேரத்தின்போது பஸால் அருமையான கோல் ஒன்றைப் போட்டு நியூ ஸ்டார் கழகத்தை வெற்றி அடையச் செய்தார். https://www.virakesari.lk/article/237503
-
ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி!
ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? - தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி! Feb 1, 2026 - 09:26 AM நாட்டின் முன்னணி பொருளாதார மத்திய நிலையங்கள் ஐந்தினை நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து நீக்கி, தனியானதொரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகப் பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கு அறிவித்துள்ளனர். நேற்று (31) பிற்பகல் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, 7 பணிப்பாளர்களை நியமித்து, தற்போது முகாமைத்துவ நிதியத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் நாட்டின் ஐந்து பொருளாதார மத்திய நிலையங்களை இந்த நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து வர்த்தகர்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விடயத்திற்குப் பொறுப்பான பிரதி அமைச்சர் சுனில் பியன்வில, அரச அதிகாரிகள், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவ நிதியத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர். இதன்போது, அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வர்த்தகச் சமூகத்தினர் அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கையில், இந்த வர்த்தக நடவடிக்கைகள் 35 வருடங்களுக்கும் மேலாக வர்த்தகர்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்பட்ட ஒரு நிறுவனம் என்று கூறினர். அதேபோன்று, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென அமைச்சருக்குத் தேவையான குழுக்களை நியமித்துத் தமது வர்த்தக நிலையங்களை நிர்வகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். வர்த்தகச் சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, புதிய நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகித்து, மக்களுக்கு மிக நியாயமான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே என்று குறிப்பிட்டார். அதற்கமைய தம்புள்ளை, நுவரெலியா, தம்புத்தேகம, கெப்பெட்டிபொல, நாரஹேன்பிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை இந்தப் புதிய நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்து, அவற்றின் மூலம் கிடைக்கும் மாதாந்த வாடகை மற்றும் நிர்வாகப் பணம் அனைத்தும் அடுத்த மாதம் முதல் இந்த நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பறிக்கப்படாது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அமைச்சரின் இந்தக் கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த வர்த்தகச் சமூகம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எவ்வித ஆராய்வும் இன்றி புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, தாம் நடத்தி வந்த வர்த்தகத்தை ஒப்படைக்க முடியாது என்றும், தற்போது மிகவும் பலமான முகாமைத்துவ நிதியத்தின் ஊடாக 30 வருடங்களுக்கும் மேலாகப் பொருளாதார மத்திய நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக வர்த்தக சங்கங்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய வர்த்தகச் சமூகத்தினர், அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயரை மிகவும் சூட்சுமமான முறையில் மாற்றி, புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தினர். இதற்காக எவ்வித அமைச்சரவை அனுமதியும் பெறப்படவில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் குற்றம் சாட்டினர். அதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் 29 வருட காலப்பகுதியில் அரசாங்கத்திடம் இருந்து எவ்வித பணத்தையும் பெற்றுக்கொள்ளாமல் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டு, தற்போதும் முகாமைத்துவ நிதியத்தில் 25 கோடி ரூபா பணத்தைச் சேமித்துள்ளதாகவும் அவர்கள் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினர். வர்த்தகச் சமூகம் விவசாய மக்களுக்கு வட்டியில்லாக் கடன், விதை உள்ளிட்ட மரக்கறிச் செய்கைக்கான செலவுகளை மேற்கொண்டு இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தைப் பராமரித்து வருவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்விதத்திலும் தெரியாத நிறுவனமொன்றுக்குத் தமது உரிமையை வழங்கத் தயாரில்லை என்றும் வர்த்தகச் சமூகம் அமைச்சரிடம் தெரிவித்தது. இதற்கு அமைச்சரும் பதில் வழங்க முற்பட்டபோது, வர்த்தகர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்புள்ளைக்கு வந்து, தேர்தல் வாக்குறுதியாக 30 வருட குத்தகை ஒப்பந்தத்தைப் பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்களுக்கு வழங்குவதாகக் கூறியதையும் வர்த்தகர்கள் அமைச்சரிடம் நினைவுகூர்ந்தனர். எனினும், அதற்கு எவ்வித பதிலையும் வழங்க அமைச்சர் இதன்போது முற்படவில்லை. எவ்வாறாயினும், அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனம் மற்றும் வர்த்தகர்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ள வர்த்தகப் பெயர் ஆகியவற்றுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிறுவனத்தின் பெயர் பின்னர் மாற்றப்பட்டதாகவும், அதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். எப்படியிருப்பினும், வர்த்தகச் சமூகத்திடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக, இது குறித்துத் தொடர்ந்தும் பரிசீலித்து, நிறுவனம் மற்றும் வர்த்தகச் சமூகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்துக் கலந்துரையாடத் தான் எதிர்காலத்தில் திகதி ஒன்றை வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cml37lycs04owo29nbuyyy2m5
-
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம்; அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அழைப்பு 01 Feb, 2026 | 09:36 AM ஆர்.ராம் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காலை பத்து மணிக்கு நெடுங்கே பஸ்நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடவுள்ளவர்கள் ஒன்றுகூடவுள்ளதோடு அங்கிருந்து பேரணியாக வருகை தந்து வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்னால் எதிர்ப்புக்கள் வெளியிடப்படவுள்ளதோடு மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது. இந்தப்போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஸ்ரீ ரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொது அமைப்புக்களும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2011ஆம் ஆண்டு இத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அப்போது வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களை அடுத்து கிடைப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது குறித்த திட்டம் மீள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 23,500மில்லியன் ரூபா செலவில் மீண்டும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் மணலாறு பிரதேசம் வெலிஓயாவாக மாற்றப்பட்டிருக்கின்றநிலையி;ல், அங்குள்ள குடியேற்ற பெரும்பான்மை மக்களின் நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் தமிழ் மக்களின் எல்லைக்கிராமங்கள் கையகப்படுத்தப்படும் ஆபத்துக்கள் காணப்படுவதோடு தமிழ் மக்களின் வாழ்வாதரத்தினை பூர்த்தி செய்யும் வயல்நிலைங்களும் பறிபோகும் ஆபத்துக்கள் காணப்படுவதாக கரிசனைகள் வெளிப்டடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த விடயத்தினை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதை மக்கள் பிரதிநிதிகளும், சிலில் அமைப்புக்களும் ஆணித்தனமாக வலியுறுத்தும் முகமாக அப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237510
-
இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி!
இலங்கை மக்களுக்கு தமிழக மறுவாழ்வு முகாம் வாழ் தமிழர்களின் பேருதவி! Jan 31, 2026 - 06:57 PM டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் இரண்டு கொள்கலன் நிவாரணப் பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கியுள்ளனர். இலங்கை மக்களுடன் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள், தித்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு, இரண்டு 20 அடி கொள்கலன் அளவிற்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், கணிசமான நிதி உதவியையும் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த நிவாரண உதவிகள், மீள்குடியேற்றப்பட்ட இலங்கை சமூகத்தின் பிரதிநிதிகளால் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாக கையளிக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் யாவும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படஉள்ளன. பொருள் உதவிகளுக்கு மேலதிகமாக, மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்களாக முன்வந்து, ஒருங்கிணைந்த முயற்சிகள் வாயிலாக இந்திய ரூபாய் 12,33,604 (பன்னிரண்டு லட்சத்து முப்பத்தி மூன்றாயிரத்து அறுநூற்று நான்கு) நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இது இலங்கை ரூபாய் ஏறத்தாழ 42,50,000க்கு (நாற்பத்து இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்) சமமானதாகும். நிவாரண பொருட்கள் கையளிக்கப்பட்டபோது, துணைத் தூதரகத்தில் பெருமளவிலான இலங்கை சமூகப் பிரதிநிதிகள் உடனிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில், தங்களின் நிவாரண உதவிகளை இலங்கைக்கு ஒருங்கிணைத்து அனுப்புவதற்கு எடுத்த முயற்சிகளுக்காக துணைத் தூதரகத்திற்கு அவர்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்த கடினமான காலகட்டத்தில் வெள்ளச் சூழ்நிலையைச் சமாளிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகளுக்கு அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்த உதவிகள், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் சென்றடையும் என்பதில் இலங்கை அரசாங்கத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர். மேலும் 40,000 மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள் முகாம்களுக்கு வெளியே பொலிஸில் பதிவு செய்துகொண்டு வாழ்கின்றனர். இடம் பெயர்வதால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், இந்த சமூகங்கள் இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூட்டாக நிவாரண உதவிகளைத் திரட்டிய செயலானது, அனைவரின் மனதினை நெகிழச் செய்துள்ளது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cml2cjlrq04ojo29nj8dugjyv
-
நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை!
நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்: இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை! Published By: Digital Desk 1 01 Feb, 2026 | 08:58 AM (நமது நிருபர்) வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, தமது வீட்டிற்குரிய செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய பெயர்கள் தொடர்பிலான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை இரண்டு மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படுவதுடன், அதன் பின்னர் உரிய தகவல்களை உள்ளடக்கிய பெயர் பட்டியல் காட்சிப்படுத்தல், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, அந்த அறிவித்தல் வெளியாகி 28 நாட்களுக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். 2026 ஆம் ஆண்டு திருத்தத்தின் போது தகைமைகளைப் பூர்த்தி செய்திருந்தும் ஈ.ஆர்.படிவத்தில் பெயரை உள்ளடக்க முடியாமல் போன நபர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் உரிமைகோரல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு பெயர் பட்டியலுக்குத் தகுதியற்ற ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அது குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு இந்தக் காலப்பகுதியில் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/237504
-
'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும்
'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்திய பிரதமர் மோதி 2017 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு பயணம் செய்தார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'எப்ஸ்டீன் கோப்புகள்' (Epstein Files) தொடர்பான மின்னஞ்சல் செய்தியில் பிரதமர் மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சந்தித்தார் என்று வெளியான கூற்றுகளை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நிராகரித்துள்ளார். அமெரிக்க பாலியல் குற்றவாளியும் மனித கடத்தல்களில் ஈடுபட்டவருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் பிரதமர் மோதியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் சனிக்கிழமை (ஜனவரி 31) குற்றம் சாட்டியது. காங்கிரஸ் தலைவர் பவன் கேரா சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல், "இதுவொரு தேசிய அவமானம். பிரதமர் மோதி தாமாக முன்வந்து எங்களது மூன்று கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்" என்று பதிவிட்டார். இருப்பினும், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது, ஜூலை 2017-இல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்ரேல் பயணத்தைத் தவிர, "மின்னஞ்சலின் மீதமுள்ள தகவல்கள் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளியின் வெற்றுப் பிதற்றல்களைத் தவிர வேறொன்றுமில்லை" என்று கூறியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுபவற்றில் இருந்து ஒரு மின்னஞ்சல் செய்தி பற்றிய அறிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். அதில் பிரதமர் மற்றும் அவரது இஸ்ரேல் பயணம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஜூலை 2017-இல் பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்ரேல் பயணத்தைத் தவிர, மின்னஞ்சலின் பிற தகவல்கள் தண்டனை பெற்ற குற்றவாளியின் பிதற்றல்களைத் தவிர வேறொன்றுமில்லை, அவற்றை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய கோப்புகள் வெளியிடப்பட்டதை அடுத்து, பிரதமர் மோதியிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. சனிக்கிழமை, காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "நரேந்திர மோதியின் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கத் தொடர் பாலியல் வன்கொடுமை குற்றவாளி, சிறார் பாலியல் வன்கொடுமையாளர் மற்றும் மனிதக் கடத்தல்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், ஜூலை 9, 2017 அன்று ஒரு மின்னஞ்சலில் அதை எழுதியுள்ளார்..." என்று கூறியது. "இந்தியப் பிரதமர் மோதி ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, சில வாரங்களுக்கு முன்பு அவர் சந்தித்த அமெரிக்க அதிபரின் நலனுக்காக இஸ்ரேலில் ஆடிப் பாடினார். அதற்கு பலன் அளித்தது." Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது "ஏழு நாட்களுக்குள் வெளியேறுங்கள்" - மாஞ்சோலையில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து மக்கள் கூறுவது என்ன? பிறப்புறுப்பை ஆக்கிரமிக்கும் ஒட்டுண்ணியால் "நத்தைக் காய்ச்சல்" - மலட்டுத்தன்மை ஏற்படுத்துமா? 'எப்ஸ்டீன் ஆவணங்களில் மோதி பெயர்' - காங்கிரசின் 3 கேள்விகளும் வெளியுறவுத்துறை பதிலும் ஐக்கிய அரபு அமீரகம், சௌதியின் இந்த முடிவு இரானை அமெரிக்கா தாக்காமல் தடுக்குமா? End of அதிகம் படிக்கப்பட்டது "'மோதி என்னிடம் ஆலோசனை பெற்று இஸ்ரேலுக்குச் சென்று அமெரிக்க அதிபரின் நலனுக்காக ஆடிப் பாடினார். அது பலன் அளித்தது என்றும் எப்ஸ்டீன் தெளிவாகக் கூறியுள்ளார்'." என காங்கிரஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளது. "நினைவில் கொள்ளுங்கள். இந்திய பிரதமர் மோதி ஜூலை 4 முதல் 6, 2017 வரை இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு எப்ஸ்டீன் இந்த மின்னஞ்சலை எழுதியுள்ளார். இஸ்ரேல் பயணத்திற்கு முன்னதாகவே, ஜூன் 25-26, 2017-இல் மோதி அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்தார். ஜெஃப்ரி எப்ஸ்டீனின் மின்னஞ்சலில் உள்ள தொடர்புகளை நாம் இணைத்தால், மோதி ஜூன் 2017-இல் அமெரிக்கா சென்று அங்கு எப்ஸ்டீனிடம் ஆலோசனை கேட்டார் என்பது தெளிவாகிறது." "ஒரு வாரம் கழித்து (ஜூலை 4-6, 2017), மோதி இஸ்ரேலுக்கு வந்து, அறிவுறுத்தப்பட்டபடி அங்கு ஆடிப் பாடினார், காரியமும் முடிந்தது. பிரதமர் மோதிக்கு ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ஆழமான மற்றும் நீண்டகால உறவு இருப்பது இப்போது தெளிவாகிறது, இது இந்தியாவிற்கு அவமானகரமானது. இது நாட்டின் கண்ணியம் மற்றும் சர்வதேச அளவிலான நற்பெயர் தொடர்பான விஷயம், இதற்கு பிரதமர் மோதி பதிலளிக்க வேண்டும்." மூன்று கேள்விகளை பட்டியலிட்டுள்ள காங்கிரஸ், "நரேந்திர மோதி ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன வகையான ஆலோசனைகளைப் பெற்றார்? அமெரிக்க அதிபர் டிரம்ப் எவ்வாறு பயன் பெற மோதி இஸ்ரேலில் ஆடினார்? 'இது பலன் அளித்தது' என்று எப்ஸ்டீன் எழுதியுள்ளார்... இதன் பொருள் என்ன?" "நரேந்திர மோதி ஜி, நாடு பதில்களைக் கோருகிறது. தொடர் பாலியல் வன்கொடுமை குற்றவாளி எப்ஸ்டீனுடன் உங்களுக்கு என்ன உறவு?" என பதிவில் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான புதிய கோப்புகள் வெளியீடு பட மூலாதாரம்,US Department of Justice படக்குறிப்பு,பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2019 இல் சிறையில் இறந்தார். தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான புதிய கோப்புகளை அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ளது.30 லட்சம் பக்கங்கள், 1,80,000 புகைப்படங்கள் மற்றும் 2,000 வீடியோக்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) பகிரங்கமாக வெளியிடப்பட்டன. எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து பதிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்ற சட்டப்பூர்வ காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தவறவிட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு, கணிசமான எண்ணிக்கையிலான கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கோப்புகளில் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் சிறைவாசம் பற்றிய தகவல்கள், உளவியல் அறிக்கை மற்றும் அவர் சிறையில் இருந்த போது ஏற்பட்ட மரணம் குறித்த விவரங்கள் உள்ளன. இது தவிர, எப்ஸ்டீனுக்கும் உயர்மட்ட பிரமுகர்களுக்கும் இடையிலான மின்னஞ்சல்களும் இதில் அடங்கும். பல மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலானவை மற்றும் எப்ஸ்டீனின் சட்டச் சிக்கல்களுக்கு மத்தியில் அவர்களுக்கு இடையே இருந்த உறவை அவை வெளிப்படுத்துகின்றன. புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளில் அமெரிக்க அதிபர் பற்றி நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டுள்ளது. டிரம்ப் எப்ஸ்டீனுக்கு நண்பராக இருந்தார். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த உறவு கசந்துவிட்டதாக டிரம்ப் கூறுகிறார். எப்ஸ்டீனின் பாலியல் குற்றங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் மறுத்துள்ளார். இந்த ஆவணங்களில் எப்ஸ்டீனுக்கும் உலகின் முதன்மையான செல்வந்தர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க்கிற்கும் இடையிலான மின்னஞ்சல் உரையாடல்களும் அடங்கும். இந்த வழக்கில் மஸ்க் மீது எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை. எப்ஸ்டீன் தன்னை அவரது தீவிற்கு அழைத்ததாகவும், ஆனால் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் அவர் முன்னதாகவே கூறியிருந்தார். இருப்பினும், எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியாவது இத்துடன் முடிவடையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. "இது மிகவும் விரிவான ஆவண அடையாளம் காணல் மற்றும் மறுஆய்வு செயல்முறையின் முடிவு, அமெரிக்க நீதித் துறையைப் பொறுத்தவரை அவர்களது பணி முடிந்துவிட்டது என்பதைக் குறிக்கிறது" என்று துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் கூறினார். இருப்பினும், சரியான காரணமின்றி சுமார் 25 லட்சம் வரையிலான ஏராளமான ஆவணங்களை நீதித் துறை தடுத்து வைத்துள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd0yx102mg8o
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"!
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் "நீதிக்கான சாட்சி"! Jan 31, 2026 - 10:29 PM 1996 தொடக்கம் 2009 வரையான காலப் பகுதிகளில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்றையதினம் யாழ். சிவகுரு ஆதீனத்தில் "நீதிக்கான சாட்சி" என்ற நூதன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதே போன்ற ஒரு நாளில் (1996.01.31) கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதியின் 31வது ஆண்டை நினைவுகூரும் முகமாக இந்த நூதன போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது, அவர்களது சிறைவாச ஆண்டுகளை வெளிப்படுத்தும் வகையில் காட்சி சித்தரிக்கப்பட்டு, அவர்களது வாழ்க்கை மெழுகுவர்த்தி போல தேய்வடைந்து செய்கின்றது என்ற விடயம் வெளிப்படுத்தப்பட்டது. இதில் அரசியல் கைதிகளின் உறவுகள் வேலன் சுவாமிகள், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், சட்டத்தரணிகள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், தமிழ் தேசியவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cml2k445m04ooo29ng9ox5cpd
-
மனதுக்கு இதமான இசை
திரைப்படம்: அவதாரம் இசை: இளையராஜா வருடம்: 1995 தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையமம்மாஉள்ளத நானும் சொன்னேன் பொன்னம்மா சின்னக் கண்ணே… தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுது உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப் பாடுது எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது ஓடை நீரோட இந்த ஒலகம் அது போல ஓடும் அது ஓடும் இந்த காலம் அது போல நிலையா நில்லாது நினைவில் வரு ம் நிறங்களே தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது அலையும் மனம் போல அழகெல்லாம் கோலம் போடுது குயிலே குயிலனமே அந்த இசையால் கூவுதம்மா கிளியே கிளியினமே அதைக் கதையாய் பேசுதம்மா கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான் தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன பொன்னம்மா சின்னக் கண்ணம்மா தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினைப்பில