Everything posted by ஏராளன்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை திரு நா.பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடம் அரைவாசி கட்டியபடி இருந்தது, இதனை பூரணப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்தபோது நீங்கள் உட்பட யாழ் - முன்னோடி செயற்றிட்டத்தில் பங்களிப்போர் பலரும் சம்மதித்து தான் அந்தப்பணிக்கு நிதி வழங்க தொடங்கினோம். இரண்டாவது பொன்னாலை திரு ஏரம்பு ஐயாவின் 3 இயலாமை உடைய பிள்ளைகளின் மலசலகூடத்திருத்தத்திற்கு ஏனைய உறவுகள் சம்மதித்துத் தான் அதனைத் தொடங்கி விரைவாக இன்று முடித்துக் கொடுத்துள்ளோம். அவர்களை நிலத்தில் உள்ள மலசல கூடத்தில் வைத்து தான் மலங்கழிக்க வைத்ததாக இன்றையதினம் நேரடியாக சென்றபோது சகோதரி கூறினார். இதனால் எனக்கு இந்தப்பணியை உடனடியாக செய்து கொடுத்தது மிகுந்த மனநிறைவைத் தந்தது. இவர்களுடைய மலசலகூடப் பிளேற் உடைந்துள்ளதால் உடனடியாக தண்ணீர்க் கொள்கலன் வைப்பதற்கு மாற்றுவழி செய்யவேண்டி உள்ளது. அவர்கள் உள்ளே இருக்கையில் ஆபத்தை தேடாமல் இருக்க குறைவாக நீரை அடித்து பாவிக்க சொல்லிவிட்டு வந்தேன். இந்தப்பணியை இத்தோடு முடித்துவிடவா? இல்லை தண்ணீர் கொள்கலன்(500 லீற்றர்) வைப்பதற்கான ஏற்பாட்டை செய்துகொடுப்பமா? உங்கள் பதில் தெரிந்தபின் செய்வோம். குமாரசாமி அண்ணா விரும்புவது போல் புதிய மலசலகூடம் கட்டுவது மட்டும் தான் நல்லது என விரும்பினால் இவர்களுடைய மலசல கூடப்புனரமைப்புக்கான நிதியை புலர் அறக்கட்டளை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பெற்றுத்தர முயல்வேன், அல்லது வேறு பொருத்தமான அமைப்புகளிடம் கேட்டுப்பெற்றுத் தருவேன். நான் புரிந்து கொள்வது அறவே மலசலகூடம் இல்லாதவர்களின் வாய்ப்பைத்தட்டிப்பறிக்கக் கூடாதல்லவா? அங்கு எஞ்சியுள்ள பொருட்கள் 3 1/2 பைக்கற் சீமந்து 7000 ரூபா பெறுமதியானது, அண்ணளவாக 1 லான்ட் மாஸ்ரர் மண் 12500 ரூபா பெறுமதியானது, அண்ணளவாக 3/4 லான்ட் மாஸ்ரர் சல்லி 5625 ரூபா, 1 1/2 கம்பி 1500 ரூபா. மொத்தமாக மிஞ்சிய பொருட்கள் பெறுமதி அண்ணளவாக 26625 ரூபா.(லான்ட் மாஸ்ரர் கணக்கு என்னுடைய கண் பார்வையின் புரிதல்படி) இன்று நேரடியாகச் சென்று பார்த்து வந்தேன், படங்கள் சில. முதலாவது பற்றுச்சீட்டு: 8 பைக்கற் சீமந்து 16000 ரூபா பெறுமதியானது, 2 லான்ட் மாஸ்ரர் மண் 25000 ரூபா(விலை 1000 ரூபா கூட), 2 லான்ட் மாஸ்ரர் சல்லி 15000 ரூபா, 20 கம்பி 20000 ரூபா, 1 கிலோ கட்டுக்கம்பி 400 ரூபா, பொருட்கள் இறக்கிய கூலி 2000 ரூபா(1000 ரூபா கூட முதலில் கூறியதை விட 4 தடவைகள் இறக்கியது) இரண்டாவது பற்றுச்சீட்டு: 4 1/2 கிலோ பொலித்தீன் 1500 ரூபா மூன்றாவது பற்றுச்சீட்டு: என்ன பொருள் என விளங்கவில்லை 700 ரூபா, 1 1/2 இஞ்ச் பைப் 2 பிற் வென்ரிலேசனுக்கு 2500 ரூபா, 2 பென்ட் 400 ரூபா, 4 சீற் ரெஜிபோம் 1350 ரூபா. மொத்தச் பொருட்கள் செலவு 78400+1500+4950=84850 ரூபா கணேஷா ஹாட்வெயார் கடைக்கு செலுத்தவேண்டி உள்ளது 84850-80000=4850 ரூபா. கம்பிகட்டி பிளேற் போட்ட கூலி, கொமட் பூட்டிய கூலி, அசிட் போட்டு சுத்தமாக்கிய கூலி(அசிற் காசும்) கொடுக்கவேண்டும்.
-
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு - அமைச்சரவை எடுத்த முடிவு
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு - அமைச்சரவை எடுத்த முடிவு 20 Jan, 2026 | 07:40 PM அரச பணிகளுக்காக 2016.01.01 திகதியின் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களில் ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அவர்களின் நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான ஏற்பாட்டை ‘இந்நியமனம் ஓய்வூதியம் உள்ளதாகும். நீங்கள் விதவை அல்லது தபுதாரர் ஓய்வூதிய முறைக்கு பங்களிப்புத் தொகை செலுத்தப்படல் வேண்டும்’ என்றவாறு திருத்தம் செய்வதற்கும், குறித்த விடயம் தொடர்பான ஆலோசனை சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச அலுவலர்களுக்கு மிகவும் பொருத்தமான பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகம் செய்வது தொடர்பான 2016 வரவு - செலவு திட்ட முன்மொழிவுக்கமைய 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் ‘இந்நியமனம் ஓய்வூதியத்துடன் கூடியதாகும். ஊழியர்களுக்கு உரித்தான ஓய்வூதிய முறை தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு இணங்கியொழுக வேண்டும்’ எனும் ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2016.01.01 திகதியின் பின்னர் அரச சேவைக்கு நியமனம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய முறை இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பதுடன், தற்போதுள்ள ஓய்வூதிய முறைக்கான அவர்களது உரித்தை உறுதி செய்து, குறித்த நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான நிபந்தனை திருத்தம் செய்வதற்காக 2026 வரவு - செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236558
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
தமிழர் உள்பட 18 இந்தியர்களுடன் கப்பலை சிறைபிடித்த இரான் - என்ன நடக்கிறது?
தமிழர் உள்பட 18 இந்தியர்களுடன் கப்பலை சிறைபிடித்த இரான் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கடந்த ஆண்டு டிசம்பரில் இரான் ஒரு கப்பலைக் கைப்பற்றியது. கப்பலில் இருந்த (இடமிருந்து வலமாக) துங்கா ராஜசேகர், தலைமை அதிகாரி அனில் குமார் சிங் மற்றும் மசூத் ஆலம். கட்டுரை தகவல் முகமது சர்தாஜ் ஆலம் பிபிசி ஹிந்திக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில், இரானில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். மறுபுறம் உலக அரங்கில் இரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அறிகுறிகளை அமெரிக்கா வெளிப்படுத்தியது. இந்நிலையில், இரானில் கடந்த மாதம் இந்தியாவைச் சேர்ந்த 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர், அவர்களில் 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரானில் நிலவும் தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சிறையில் உள்ள இந்தியர்களின் குடும்பங்களும் ஒரு குழப்பமான சூழலில் சிக்கியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி, சட்டவிரோத டீசல் வைத்திருந்ததாகக் கூறி டிப்பா துறைமுகத்திற்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் 'எம்டி வேலியன்ட் ரோர்' (MT Valiant Roar) கப்பலை 18 பணியாளர்களுடன் இரான் அதிகாரிகள் கைப்பற்றினர். கப்பல் குழுவினரில் இந்தியர்கள் பத்து பேரை ஜனவரி 6-ஆம் தேதி இரான் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த கப்பலில் 16 இந்தியர்கள், ஒரு வங்கதேசத்தவர், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர். இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன? பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கப்பலின் கேப்டன் விஜய் குமார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இரான் பிரிவில் பணியாற்றும் இந்திய வெளியுறவுத் துறை (IFS) அதிகாரியான எம். ஆனந்த் பிரகாஷ் இந்த விவகாரத்தை பிபிசி ஹிந்தியிடம் உறுதிப்படுத்தியுள்ளார். எம். ஆனந்த் பிரகாஷ் கூறுகையில், "வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே குற்றச்சாட்டுகள் குறித்து இரான் நீதிமன்றமே முடிவு செய்யும். ஆனால் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், பணியாளர்களுக்குத் தூதரக ரீதியிலான அணுகலைப் பெற முயற்சி செய்து வருகிறது," என்றார். "ஜனவரி 10-ஆம் தேதி தூதரக அணுகல் கிடைக்கும் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் இரானில் நிலவும் குழப்பம் காரணமாக எங்களால் அதைப் பெற முடியவில்லை. நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்," என்றும் கூறினார். டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் ஒரு செய்திக்குறிப்பில் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் மற்றும் 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இரான் அரசாங்கம் இன்னும் பதில் அளிக்கவில்லை. இதற்கிடையில், 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார், கப்பலில் ஆறாயிரம் மெட்ரிக் டன் சட்டவிரோத டீசல் இருந்ததாகக் கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று கூறினார். பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "கப்பல் டீசலை ஏற்றிச் செல்லவில்லை, ஆனால் 'மிகக் குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெயை' (VLSFO) ஏற்றிச் சென்றது. இது, சர்வதேச கடற்பரப்பில் எங்களது பிற கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இருக்கக்கூடிய ஒரு வசதி. இது வழக்கமான செயல்முறையின் ஒரு பகுதியாகும்," என்றார். "ஆனால் கப்பலின் எரிபொருளை டீசல் என்று தவறாகக் கருதி இரான் எங்கள் குழுவினரை மோசமாக நடத்தியது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், எங்களது அனைத்துப் பணியாளர்களையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதே எங்களது முன்னுரிமை," என்றார் ஜோகிந்தர் பிரார். உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,ஆகாஷ் குப்தா, திவாகர் புத்தி மற்றும் விஷால் குமார் (இடமிருந்து வலமாக) உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கப்பல் கேப்டன் விஜய் குமார் மற்றும் ஆய்லர் (Oiler) ஆகாஷ் குப்தா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி துங்கா ராஜசேகர், டெக் ஃபிட்டர் நந்தகி வெங்கடேஷ் மற்றும் சமையல் பணிகளைச் செய்யும் திவாகர் புத்தி, பஞ்சாப்பைச் சேர்ந்த சீமேன்-1 விஷால் குமார் ஆகியோர் கடந்த 45 நாட்களாகக் கப்பலில் இரான் பாதுகாப்புப் படையினரின் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு இந்தியர்களைத் தவிர, வங்கதேசத்தைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் முகமது லுக்மான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மின்-தொழில்நுட்ப அதிகாரி பிரியா மனதுங்க ஆகியோரும் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் உள்ள பணியாளர்களிடமிருந்து பிபிசி ஹிந்திக்கு கிடைத்த தகவலின்படி, எட்டு பணியாளர்களின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் 14-க்கு-10 அளவுள்ள உணவு அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அங்கேயே அவர்கள் இரவில் உறங்குகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும், இந்திய தூதரகமும் கப்பல் நிறுவனமும் தங்களை மீட்டுவிடும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் கண் விழிக்கிறார்கள். அதே சிறிய அறையிலேயே அவர்கள் தங்களது நாட்களைக் கழிக்கிறார்கள். இந்த நிலை கடந்த ஒன்றரை மாதங்களாகத் நீடிக்கிறது. பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கேதன் மேத்தாவின் தந்தை முகேஷ் மேத்தா டிசம்பர் மூன்றாவது வாரத்தில் கப்பலில் இருந்த அனைத்து உணவுப் பொருட்களும் தீர்ந்துபோனபோது, கப்பல் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார் டிசம்பர் 25-ஆம் தேதி உணவுப் பொருட்களை அனுப்பினார். ஆனால் ஒரு வாரம் கழித்து, அரிசி மட்டுமே எஞ்சியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், கப்பலில் உள்ள இந்தியச் சமையல்காரரான திவாகர் புத்தி, ஒரு நாளைக்கு இரண்டு முறை அரிசி சமைக்கிறார், அதை எட்டு பேரும் உப்போடு சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். கப்பலில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் கடந்த பத்து நாட்களாக குடிநீர் இல்லாமல் இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே, அவர்கள் கப்பலில் உள்ள "குடிப்பதற்கு அல்ல" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சாலை நீரை (Industrial water) கொதிக்க வைத்து குடிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். எரிபொருள் பிரச்னை காரணமாக, அவர்கள் இரவில் மட்டுமே ஜெனரேட்டரைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய முயற்சிகள் ஒருபுறம் என்றாலும், டீசல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கவலை உள்ளது. கேப்டன் விஜய்யின் சகோதரர் வினோத் பன்வாரின் கூற்றுப்படி, கப்பலின் எரிபொருளும் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. பணியாளர்களின் உடைமைகளைக் கைப்பற்றிய இரான் பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,அன்சாரி மன்சூர் ஆலம், கேதன் மேத்தா, ஷோயப் அக்தர் (இடமிருந்து வலமாக) டிசம்பர் 8-ஆம் தேதி, இரான் பாதுகாப்புப் படையினர் 'எம்டி வேலியன்ட் ரோர்' பணியாளர்கள் அனைவரின் மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய பைகளை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இரான் பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு ஒரு மொபைல் போனை வழங்கினர், அதன் உதவியுடன் இந்த ஆறு இந்தியர்களும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் தங்களது குடும்பத்தினருடன் பேசுகிறார்கள். ஆனால் ஜனவரி 31-ஆம் தேதி வரை 5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதால், இத்தகைய அழைப்புகளும் நீண்ட காலம் நீடிக்காது என்று கேப்டன் விஜய் குமாரின் சகோதரர் வினோத் பன்வார் கூறுகிறார். ஆரம்பத்தில், அனைவரும் மொபைல் போன்கள் பயன்படுத்தக் கடுமையாகத் தடை விதிக்கப்பட்டது. சமீப நாட்களில், அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள மொபைல் போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கப்பலில் நிலவும் தண்ணீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளின் தட்டுப்பாடு குறித்துப் பேசிய ஜோகிந்தர் பிரார், "அவர்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாக வழங்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம்," என்றார். அதே சமயம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கப்பல் நிறுவனம் மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர். கப்பலின் மூன்றாவது பொறியாளர் கேதன் மேத்தாவின் தந்தை முகேஷ் மேத்தா கூறுகையில், "டிசம்பர் 8-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தபோதே, கப்பல் நிறுவனம் இதைத் தீவிரமாக எடுத்து முன்னுரிமை அளித்திருந்தால், இன்று எனது மகன் உட்பட பத்து பேர் சிறையில் இருந்திருக்க மாட்டார்கள்," என்றார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,மசூத் ஆலமின் தந்தை இப்ரார் அன்சாரி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலைமை அதிகாரி அனில் குமார் சிங், சீமேன் ஆகாஷ் குமார் சிங், கோபால் சௌகான் மற்றும் ஷோயப் அக்தர், ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த மூன்றாம் நிலை அதிகாரி ஜம்மு வெங்கட், ஹரியானாவைச் சேர்ந்த இரண்டாம் பொறியாளர் சதீஷ் குமார், டெல்லியைச் சேர்ந்த மூன்றாவது பொறியாளர் கேதன் மேத்தா, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர் ஏரோ தாரிஷ், பிகாரைச் சேர்ந்த ஆயிலர் மசூத் ஆலம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆயிலர் அன்சாரி மன்சூர் அகமது ஆகியோர் ஜனவரி 6-ஆம் தேதி இரானிய பாதுகாப்புப் படையினரால் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 16 பணியாளர்களில், பலரது பயணம் இந்த ஜனவரியில் முடிவடையவிருந்தது. விஷால் குமார், நந்தகி வெங்கடேஷ் மற்றும் மசூத் ஆலம் ஆகியோரின் ஒன்பது மாதப் பயணம் இந்த ஜனவரியில் முடிவடையவிருந்தது. பிகாரைச் சேர்ந்த மசூத் ஆலமின் தந்தை இப்ரார் அன்சாரி கூறுகையில், "எனது மகன் கடைசியாக ஜனவரி 5-ஆம் தேதி அழைத்தான், ஆனால் அப்போது குறைவான நேரமே பேச முடிந்தது. அதன்பிறகு என்னால் அவனுடன் பேச முடியவில்லை," என்றார். தனது மகனின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் இப்ரார் அன்சாரி, "டிசம்பர் 8-ஆம் தேதி அனைவரும் காவலில் எடுக்கப்பட்டபோது, மசூத் ஆலமுக்கு காய்ச்சல் இருந்தது. இப்போது அவரது நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை," என்றார். ஈத் பண்டிகைக்குப் பிறகு மசூத் திருமணம் செய்யவிருந்தார், ஆனால் இப்போது அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மசூத்தைப் போலவே, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த துங்கா ராஜசேகரின் ஒரே சகோதரிக்கு மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இத்தகைய சூழல்கள் குறித்துப் பேசிய முகேஷ் மேத்தா, "எனது வீட்டில் திருமணம் எதுவும் இல்லை, ஆனால் மகன் கேதன் சிறைக்குச் சென்ற செய்தியைக் கேட்ட பிறகு, அவரது தாயாரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது," என்றார். பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "இது எனது குடும்பத்தின் பிரச்னை மட்டுமல்ல, 16 குடும்பங்களின் பிரச்னை. நாங்கள் மின்னஞ்சல் அனுப்பாத துறையே இல்லை, ஆனால் இன்றுவரை யாரிடமிருந்தும் எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை," என்றார். குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,அனில் சிங்கின் மனைவி காயத்ரி சிங் முகேஷ் மேத்தாவைப் போலவே, அனில் சிங்கின் மனைவி காயத்ரி சிங், தனது கணவர் உட்பட கப்பல் பணியாளர்கள் அனைவரையும் இரான் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக நம்புகிறார். "இரானுக்குக் கப்பல் நிறுவனம் மீதோ அல்லது அதில் ஏற்றிச் செல்லப்படும் சரக்கு குறித்தோ ஏதேனும் பிரச்னை இருந்தால், அது நேரடியாக நிறுவனத்திடம் பேச வேண்டும், ஊழியர்களைத் துன்புறுத்தக் கூடாது," என்றார் காயத்ரி சிங். இந்தக் கருத்துடன் உடன்படும் இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் கூறுகையில், "நிறுவனமே கப்பலின் ஆபரேட்டர். கப்பலில் என்ன செல்கிறது என்பதை நிறுவனம் தான் தீர்மானிக்கிறது, பணியாளர்கள் அல்ல. எனவே, பணியாளர்களைச் சிறைக்கு அனுப்பும் இரானின் முடிவு முற்றிலும் மனிதத்தன்மையற்றது," என்றார். துபாயைச் சேர்ந்த 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார், "இரானுடன் பேச்சுவார்தை நடத்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது, ஆனால் இரான் அரசு பேசத் தயாராக இல்லை" என்றார். "இது முதல் முறை அல்ல, இரண்டாவது முறையாக எங்களது கப்பல் இரானால் கைப்பற்றப்பட்டுள்ளது," என்கிறார் ஜோகிந்தர் பிரார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் டிசம்பர் 5, 2023 அன்று, பிராரின் மற்றொரு கப்பல் சட்டவிரோத டீசல் ஏற்றிச் சென்றதாகக் கூறி இரானால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அந்தக் கப்பலில் "21 பணியாளர்கள் இருந்தனர். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்களில் 18 பேரை இரான் விடுவித்தது. மூன்று பணியாளர்கள் இன்றும் சிறையில் உள்ளனர்," என்று ஜோகிந்தர் பிரார் கூறுகிறார். "நாங்கள் அன்றிலிருந்து முயற்சி செய்து வருகிறோம். இப்போது அவர்கள் இரண்டாவது கப்பலைப் பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு கப்பல்களிலும் மிகக் குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெய் (VLSFO) தொடர்பான ஆவணங்கள் இருந்தபோதிலும், இரானில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை," என்கிறார் அவர். இந்திய மாலுமிகள் பொதுச் செயலாளர் பிரதீப் சிங், 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' தொடர்பாகப் பல பிரச்னைகள் தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அது குறித்து ஏற்கனவே கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். ஆனால் கேப்டன் விஜய் குமாரின் மனைவி சோனியா பெரும் சோகமும் கோபமும் கலந்த ஒரு நிலையில் தவிக்கிறார். "இந்த 42 நாட்களில் நாங்கள் விரக்தியடைந்துவிட்டோம். எனவே இந்தப் பிரச்னையை சமாளிக்க, நாங்கள் (குழுவினரின் குடும்ப உறுப்பினர்கள்) அனைவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்," என்றார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கேப்டன் விஜய் குமாரின் மனைவி சோனியா நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விஜய் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஜனவரி 15 அன்று நடைபெற்றது. அதில் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சிஜிஎஸ்சி (CGSC) நிதி ராமன், "அரசாங்கத்தால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மனுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்று கூறினார். நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் கப்பல் நிறுவன உரிமையாளர், "விவகாரத்தைத் தீர்க்க நாங்கள் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளோம். ஆனால் இரானில் நிலவும் மோசமான உள்நாட்டுச் சூழ்நிலை காரணமாக, வழக்கறிஞரால் பணியாளர்களைச் சந்திக்க முடியவில்லை," என்றார். இருப்பினும், சரக்குகளை கையாளும் கப்பல் நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் கூறுகிறார். "பணியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, அனைத்துப் பணியாளர்களையும் உடனடியாகத் தாயகம் அழைத்து வரக் கோரி கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரைச் சந்திப்போம்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgkzg67v6xo
-
“சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரில் அரசியல் இலாபம் தேடுகிறது அமெரிக்கா – சீனா குற்றச்சாட்டு
“சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரில் அரசியல் இலாபம் தேடுகிறது அமெரிக்கா – சீனா குற்றச்சாட்டு 20 Jan, 2026 | 11:41 AM கிரீன்லாந்துக்கு சீனா அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் “சீனா அச்சுறுத்தல்” என்ற சொற்றொடரை பயன்படுத்தி அமெரிக்கா தன்னிச்சையான சுயலாபங்களை அடைய முயற்சிப்பதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது. பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் இந்த விடயத்தைத் தெரிவித்தார். “சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரை ஒரு காரணமாகக் கொண்டு தங்களின் அரசியல் மற்றும் இராணுவ இலக்குகளை முன்னெடுக்க அமெரிக்கா முயற்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த கண்டனம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நீண்ட பதிவைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. அந்த பதிவில், ஆர்க்டிக் பிராந்தியத்தில் சீனா மற்றும் ரஷ்யா ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், வட அமெரிக்காவை கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் “கோல்டன் டோம்” (Golden Dome) என அழைக்கப்படும் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து அவசியம் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், கிரீன்லாந்து தொடர்பான சீனாவின் நிலைப்பாடு ஏற்கனவே பல தடவைகள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் நோக்கங்களும் கொள்கைகளும் அடிப்படையாகக் கொண்ட சர்வதேச சட்டமே இன்றைய உலக ஒழுங்கின் அடித்தளமாக இருப்பதாகவும், அந்தச் சட்டங்களை அனைத்து நாடுகளும் மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை பேணுவது சர்வதேச சமூகத்தின் பொது பொறுப்பாகும் எனவும், மோதல்களை தூண்டும் வகையிலான குற்றச்சாட்டுகள் உலக அமைதிக்கு பாதகமாக அமையும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/236505
-
தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!
தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு Jan 20, 2026 - 01:26 PM ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத்த குறிப்பிடுகையில், அதற்கமைய குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திருத்தச் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது, இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலம் ஏதேனும் கைத்தொழில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர் தொடர்பில், அண்மைய தொழில் வழங்குநர் மற்றும் இறுதித் தொழில் வழங்குநர் உட்பட அனைத்துத் தொழில் வழங்குநர்களும் அச்சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருத்தச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் படி, வரவு செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவுகளைச் சேர்ப்பதைத் தவிர, ஊழியர் ஒருவரால் 2025.03.31 ஆம் திகதியாகும் போது பெற்றுக்கொண்டிருந்த வேறு எந்தக் கொடுப்பனவையும் குறைந்தபட்ச சம்பளத்திற்காக ஈடுசெய்ய பயன்படுத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), மேலதிக நேரம் (Overtime), பணிக்கொடை (Gratuity), மகப்பேற்று நன்மைகள் மற்றும் விடுமுறைத் தினக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கும் பொறுப்பு தொழில் வழங்குநர்களுக்கு உரித்தாகும். ஏதேனும் ஒரு வகையில், உரிய முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாத தொழில் வழங்குநர்கள் இருப்பின், அது தொடர்பான முறைப்பாடுகளை cms.labourdept.gov.lk ஊடாக தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பில் பதிவிடலாம் அல்லது அருகில் உள்ள தொழில் அலுவலகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியும். https://adaderanatamil.lk/news/cmkmavctd046ao29ng3cgx9f5
-
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர 19 Jan, 2026 | 09:40 PM (இராஜதுரை ஹஷான்) பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட ஒன்பது பேர் திங்கட்கிழமை (19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது கஸ்ஸப்ப தேரருக்கு சார்பாக சரத் வீரசேகர உட்பட பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும் எந்நிலையிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வெண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்காமல் அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுகிறது. திருகோணமலை பகுதியின் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை வைத்ததற்கு எதிராக கரையோர பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவ்வாறாயின் கடற்கரையோரங்களில் உள்ள சகல புத்தர்சிலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அநுராதபுரத்துக்கு பௌத்த வழிபாடுகளுக்கு வருபவர்கள் மனதில் குரோதத்துடன் வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமிழ் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காகவும் பௌத்த தேரர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையேல் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/236460
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
அயர்லாந்தை வெற்றிகொண்ட இலங்கை உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது Published By: Vishnu 19 Jan, 2026 | 11:35 PM (நெவில் அன்தனி) விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அயர்லாந்தை 106 ஓட்டங்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது. ஏற்கனவே ஜப்பானை வெற்றிகொண்ட இலங்கை 3.090 என்ற நிகர ஓட்ட வித்தியாசத்துடன் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்று தனது சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. இக் குழுவில் இடம்பெறும் அவுஸ்திரேலியா நாளைய போட்டியில் ஜப்பானை வெற்றிகொண்டால் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை விளையாடுவது உறுதிசெய்யப்படும். இன்றைய போட்டியில் விமத் தின்சார, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் துல்னித் சிகேரா, ரசித் நிம்சார ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அயர்லாந்துடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது. எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஜப்பானுக்கு எதிரான முதல் போட்டியில் சதங்கள் குவித்து உலகக் கிண்ண சாதனை நிலைநாட்டிய திமன்த மஹாவின்ச, விரான் சமுதித்த ஆகிய இருவரும் ஒற்றை இலக்கை எண்ணிக்கைகளுடனும் துல்னித் சிகேரா 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 3 விக்.) எனினும், அணித் தலைவர் விமத் தின்சார நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் கவிஜ கமகேயுடன் 80 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் சாமிக்க ஹீனட்டிகலவுடன் 100 ஓட்டங்களையும் பகிர்ந்து இலங்கையை பலமான நிலையில் இட்டார். விரான் சமுதித்த துரதிர்ஷ்டவசமாக 5 ஓட்டங்களால் சதத்தைப் பெறத் தவறினார். 102 பந்துகளை எதிர்கொண்ட விமத் தின்சார 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 95 ஓட்டங்களையும் கவிஜ கமகே 49 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 40.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் கெலம் ஆம்ஸ்ட்ரோங் (39), ரூபன் வில்சன் (32), அணித் தலைவர் ஒலிவர் ரைலி (31 ஆ.இ.) ஆகிய மூவரும் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் துல்னித் சிகேரா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரசித் நிம்சார 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: விமத் தின்சார https://www.virakesari.lk/article/236471
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷின் நிலைப்பாடு குறித்து ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது 19 Jan, 2026 | 06:00 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு சென்று ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க பங்களாதேஷுக்கு ஜனவரி 21வரை (நாளைமறுதினம்) ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது. டாக்காவில் கடந்த சனிக்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷுக்கு ஐசிசி இந்த காலக்கெடுவை விதித்தது என அறியக்கிடைத்ததாக கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது. ஐசிசிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையில் ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது, தனது ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளை விளையாடத் தயார் எனவும் ஆனால் அவை இந்தியாவுக்கு வெளியே விளையாடப்படவேண்டும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் தெரிவித்திருந்தது. ரி10 உலகக் கிண்ணத்தை இணை வரவேற்பு நாடாக நடத்தும் இலங்கை அவர்களது மாற்று இடமாகும். இந்தியாவுக்கு பயணிப்பதிலும் அங்கு விளையாடுவதிலும் பாதுகாப்பு கரிசனைகள் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் சி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷின் போட்டி அட்டவணை மாற்றப்படமாட்டாது என ஐசிசி உறுதிபடத் தெரிவித்துள்ளது. தங்களது கரிசனை குறித்து ஜனவரி 4ஆம் திகதி பங்களாதேஷ் முதல் தடவையாக ஐசிசியுடன் தொடர்பாடலில் ஈடுபட்டதிலிருந்து இந்த பிணக்கு கடந்த 3 வாரங்களாகத் தொடர்கிறது. பங்களாதேஷ் தனது ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை கொல்கத்தாவில் பெப்ரவரி 7ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. அதே மைதானத்தில்தான் இத்தாலியை பெப்ரவரி 9ஆம் திகதியும் இங்கிலாந்தை பெப்ரவரி 14ஆம் திகதியும் பங்களாதேஷ் சந்திக்கவுள்ளது. நேபாளத்துக்கு எதிரான பங்களாதேஷின் கடைசி போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஒருவேளை, ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற இந்தியா செல்வதை பங்களாதேஷ் முற்றாக மறுத்தால் 1996இல் அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நடந்த கதியை பங்களாதேஷ் எதிர்கொள்ள நெரிடும் என கருதப்படுகிறது. அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி 1996 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இலங்கைக்கு செல்ல முடியாது என விடாப்பிடியாக இருந்தன. இதனை அடுத்து அவுஸ்திரேலியா, மேற்கிற்தியத் தீவுகள் ஆகியவற்றுடனான இலங்கையின் போட்டிகளுக்கு போட்டியின்றி தலா 3 வெற்றிப் புள்ளிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அடுத்து 1996 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே இலங்கை 6 வெற்றிப் புள்ளிகளை சம்பாதித்துக்கொண்டது. அந்த வருடம் தோல்வி அடையாத அணியாக இலங்கை உலக சம்பியனாகி இருந்தது. https://www.virakesari.lk/article/236459
-
ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு; 02 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு ; 02 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 20 Jan, 2026 | 11:44 AM ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) கடந்த ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அந்தப் பிராந்தியத்தையே உறைய வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை முறியடித்துள்ள இந்தப் பனிப்பொழிவை உள்ளூர் மக்கள் "பனி அபோகாலிப்ஸ்" (Snow Apocalypse) என அழைக்கின்றனர். பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) நகரில் 2 மீட்டருக்கும் அதிகமான பனி கொட்டியுள்ளது. சில இடங்களில் பனிச்சரிவுகள் 5 மீட்டர் (16 அடி) உயரம் வரை குவிந்துள்ளன. கட்டிடங்களின் கூரைகளில் இருந்து திடீரென சரிந்த பனிக் கட்டிகளில் சிக்கி இரண்டு முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நகரில் அவசரநிலை (State of Emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பனி வீடுகளின் வாசல்களை மறைத்ததால், மக்கள் சுரங்கங்கள் தோண்டி வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டது. பல அடுக்குமாடி குடியிருப்புகளின் இரண்டாவது மாடி வரை பனி மூடியுள்ளது. பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, பொது போக்குவரத்து முற்றிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, வீதிகளைச் சீரமைக்க மேலதிக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டனர். போக்குவரத்து முடங்கியதால் கடைகளில் பால், ரொட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது வீதிகள் மெதுவாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 21 ஆம் திகதிக்குள் முக்கிய வீதிகளை முழுமையாகச் சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குளிர் காற்று வீசுவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236502
-
செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு
செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு Jan 19, 2026 - 08:30 PM யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில், அகழ்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து இன்று (19) முக்கியத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில், பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் மயான நிர்வாகக் குழுவினர் ஆகியோர் அகழ்வுப் பணி நடைபெறும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். ஏற்கனவே அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற குழிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், உடனடியாக அகழ்வுப் பணிகளைத் தொடர முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், சட்ட வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் தேங்கியுள்ள நீரை வெளியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர் அகற்றப்பட்ட பின்னரே அகழ்வுப் பணிகளுக்கான திகதி நிர்ணயிக்கப்படும். மயானத்தின் உட்புறத்தில் உள்ள பாதையை நல்லூர் பிரதேச சபையினர் சீரமைத்துள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், அகழ்வுப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை குறித்த வளாகத்தில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையோ அல்லது நிலத்தின் தோற்றத்தில் மாற்றங்களையோ ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி எவ்வித பணிகளையும் அங்கு மேற்கொள்ள முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான ரனிதா ஞானராஜா மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை மீண்டும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmklakm8f0459o29n81uv65ns
-
கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் !
கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் ! 19 Jan, 2026 | 05:55 PM படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் (SLPI) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ‘இருளை போக்கக்கூடிய வழி’ (අඳුර දුරු කළ හැකි මඟ) என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதில் ஊடக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுகூரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர் சாவித்ரி குணசேகர, மூத்த ஊடகவியலாளர் விஜயானந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தனர். கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மேலும், சுனில் ஜயசேகர, ஹனா இப்ராஹீம் மற்றும் ஆர். ராம்குமார் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன், ஊடக சுதந்திரத்தின் அவசியத்தையும், ஊடகவியலாளர்களுக்கு நீதியினை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர். https://www.virakesari.lk/article/236456
-
விஜயின் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கம்
'விஜய் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கம்' - பிபிசி தமிழுக்கு கிருஷ்ணசாமி பேட்டி பட மூலாதாரம்,Krishnasamy கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சி போலப் பார்க்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் நடக்கவிருக்கின்ற அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்று நான் கருதுகிறேன்.'' என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி: கடந்த சில தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம், இப்போதும் அந்த கூட்டணியில் நீடிக்கிறதா? இந்த தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறதா? கடந்த 2019 தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தோம். அதன்பின் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஏழு பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயரிட வேண்டும், இந்த சமுதாயத்தை பட்டியல் பிரிவிலிருந்து (SC) பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் பெயர் மாற்றம் மட்டும் ஏற்கப்பட்டதால் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தோம். சென்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெற்றது. அப்போது பாஜவுடன் கூட்டணியில் இருந்தால்தான் திமுக கூட்டணியை எதிர்கொள்ள முடியுமென்று கூறினோம். அதை அதிமுக ஏற்கவில்லை. அப்போதும் நாங்கள் அதிமுகவுடன் இருந்தோம். ஆனால், அதன்பின் சில மாதங்களிலேயே பாஜவுடன் மீண்டும் சேரும் முடிவை அதிமுக தலைமை எடுத்தது.'' கடந்த தேர்தலில் எங்களுடன் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளிடம் இதைப் பற்றிச் சொன்னார்களா என்று தெரியாது. ஆனால், எங்களிடம் எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதனால் நாங்கள் இப்போது இந்த கூட்டணியில் இருந்து விலகியதாகவும் இல்லை. துாரமாகப் போய்விட்டதாகவும் இல்லாமல் நாங்கள் நாங்களாக இருக்கிறோம்.'' தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி மீதான அதிருப்தியால் (Anti Incumbency) மட்டுமே இரு கட்சிகளிடையே ஆட்சி மாற்றம் நடக்கிறது. மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு, கனிம வளக்கொள்ளை நிறுத்தம், வேலைவாய்ப்பு சார்ந்து கொள்கைரீதியான ஆட்சி மாற்றம் வரவேண்டுமென்று நினைக்கிறோம். அது மட்டுமின்றி, இந்தத் தேர்தலில் ஜெயித்து சட்டமன்றத்துக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கேற்ப இந்த தேர்தலில் கூட்டணி முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற குரல், இந்த தேர்தலில் ஓங்கி ஒலிக்கிறது. கேரளாவைப் போல இங்கேயும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவேண்டுமென்று நீங்களும் வலியுறுத்தியிருக்கிறீர்கள். தமிழகத்தில் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ஒரே கட்சி தவெக என்பதால் அக்கட்சியுடன் புதிய தமிழகம் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா? தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டுக்குப் பின்பு, அரசியல் மாற்றம் எதுவும் நிகழவில்லை. இரு கட்சிகள்தான் மாறிமாறி ஆளுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. கடந்த 2006–2011 இடையிலான காலத்தில் திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலும், ஆட்சிக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி முயன்றும் அமைச்சரவையில் பங்கேற்க முடியவில்லை. இப்போதும் இந்த கோரிக்கையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாகப் பேச மறுப்பது வருத்தமாக உள்ளது. கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தந்ததால் அந்த ஆட்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. நன்றாகத்தான் ஆட்சியும் நடந்தன, நடக்கின்றன. இங்கு மட்டும் அந்த கட்சிகள் அதை பேச மறுப்பது ஏனென்று தெரியவில்லை. கூட்டணி ஆட்சி என்பதை திமுக, அதிமுக இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சியைப் போலப் பார்க்கின்றன. சமூகநீதி என்று வாயில் மட்டும் பேசக்கூடாது. சமூகநீதி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். இந்த தேர்தலில் எந்தக் கட்சியும் தனித்து பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை. அந்த வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்றே கருதுகிறேன். சமீபத்திய ஆண்டுகளில் மாநில உரிமைகள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் நீங்கள் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தெரிவித்த பல கருத்துகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின... இதற்கு உங்கள் கட்சியில் எதிர்ப்பு எழவில்லையா... உண்மையிலேயே மாநில உரிமைகளில் பாஜக அரசு சரியாக நடந்துகொள்கிறதா? மாநில உரிமைகள் சார்ந்த பிரச்னைகளில் மத்திய பாஜக அரசு முழுமையாக நியாயமாக நடந்துகொள்கிறது என்றோ, அனைத்திலும் அநியாயமாக நடந்துகொள்கிறார்கள் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், அனைத்து விஷயங்களிலும் திமுக அரசியல் மட்டுமே செய்கிறது என்பதுதான் என் குற்றச்சாட்டு. கடந்த 2021 கோவிட் காலத்துக்குப் பின்பு, நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயன்றபோது மத்திய அரசை தமிழகத்தில் கண்டித்த ஒரே கட்சி நாங்கள்தான். நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை துவங்கும் முன்பே தமிழகத்தில் 8 தொகுதி போய்விடுமென்று திமுக பீதியைக் கிளப்பியது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வந்தால் மொத்தமாக வாக்காளர் உரிமை போகுமென்று திமுக சொன்னதும் அரசியல்தான். ஆனால், நாங்கள் அதை ஆதரித்தோம். இப்போது திமுகதான் எஸ்ஐஆரில் அதிகமாக பங்களித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட ஒரு நாடு. இங்கே மத்திய, மாநில அரசுகள் இருந்தாலும் ஒரே நாடு என்ற வகையில் சில முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அதில் மாநில சுயாட்சி என்ற பெயரில் தமிழகத்தை தனி நாடு போன்ற உணர்வைக் காட்டி சுயமாக கொள்ளையடிப்பதும், அரசியல் செய்வதும்தான் திமுகவின் முயற்சியாக உள்ளது. அதனால்தான் நாங்கள் சில விஷயங்களில் திமுக நிலைப்பாட்டை ஆதரிப்பதில்லை. பட மூலாதாரம்,Krishnasamy கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அனுமதி, கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சித் திட்டங்கள், கல்வி உள்ளிட்ட நிதி ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் தமிழகத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாக திமுக குற்றம்சாட்டி வருகிறதே? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியின் 40 எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள்... நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்றார்கள். அதைச் செய்ய முடிந்ததா? உங்கள் கடமையை சரியாகச் செய்யாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுவதில் அர்த்தமே இல்லை. மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதி அனைத்தையும் இந்த அரசு சரியாகப் பயன்படுத்துவதும் இல்லை. பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர ஆந்திரா, தெலங்கானா அரசுகள் தனி பட்ஜெட் போடுகின்றன. இங்கே ஏன் அதைச் செய்வதில்லை... பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமங்களில் குடிநீர், சாலை, மயான வசதிகள் இல்லை. கிடைக்கின்ற நிதியைச் சரியாகப் பயன்படுத்தி எல்லா திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி, அடித்தட்டு மக்களுக்கும் உரியவை கிடைக்கச் செய்துவிட்டு, நிதி போதவில்லை என்று கேட்டால் அதை ஆதரித்து நாங்களும் குரல் கொடுக்கத் தயாராகவுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு நல்ல திட்டத்தையுமே திமுக அரசு செயல்படுத்தவில்லை என்கிறீர்களா? நல்ல திட்டம் என்பது வேறு. கவர்ச்சித் திட்டம், இலவசத்திட்டம் என்பது வேறு. திமுக அரசு கடந்த தேர்தலில் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை. நிலைத்த, நீடித்த வளர்ச்சிக்கான (Sustainable Development) எந்த திட்டத்தையும் இந்த அரசு செய்யவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. ஆனால் திமுக கூட்டணிதான் தற்போது பலமாக இருக்கிறது என்ற ஒரு தோற்றம் இருக்கிறதே... அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? நான் அப்படி நினைக்கவில்லை. தவறு செய்பவர் ஒருவரின் தலைமையில் 10, 15 நல்லவர்கள் சேர்ந்தாலும், தலைமையில் இருப்பவர் தவறானவராக இருந்தால் மற்றவர்களையும் மக்கள் அப்படித்தான் பார்ப்பார்கள். முதல் எண் பூஜ்யம் என்றால் அதன்பின் வரும் எல்லாமே பூஜ்யம்தான். ஆட்சியின் மீதான அதிருப்தி என்பதைத் தாண்டி திமுக அரசு செய்யத் தவறிய பல விஷயங்களால் மக்களுக்கு கோபம் இருக்கிறது. தமிழக அரசியலில் விஜய் வருகை, அவரது கட்சியின் கொள்கை, அவருக்கு கிடைக்கும் வரவேற்பு ஆகியவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்... விஜய் கட்சியின் வளர்ச்சி, எந்தக் கட்சியின் வாக்குவங்கிக்கு ஆபத்தாக மாறுமென்று நினைக்கிறீர்கள்? தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் உண்மையான கொள்கை என்று எதுவும் கிடையாது. திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ் கட்சிகள் பேசும் கொள்கை வேறு, நடந்து கொள்ளும் விதம் வேறு. விஜய் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வர வேண்டுமென்று நினைக்கிறார். அவருக்கு எவ்வளவு வாக்கு கிடைக்குமென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால், அவர் அபரிமிதமான மக்கள் செல்வாக்குடன் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தமிழகத்தில் தனி நபராக, ஒரு புதிய கட்சியைத் துவக்கியிருக்கிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் அவை எல்லாமே அவருக்கு சாதகமாக மாறுவதைத்தான் நான் பார்க்கிறேன். அதனால் அவர் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியைப் பிரிப்பார் என்று மட்டும் பார்க்க முடியாது. மாறாக அவரே ஒரு பெரும் அரசியல் சக்தியாக வளர்கிறார் என்பதாகத்தான் தெரிகிறது. பட மூலாதாரம்,TVK விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற சில கட்சிகள் எம்.பி., எம்எல்ஏக்கள் என்று வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சிக் கட்டமைப்பும் வாக்குவங்கியும் ஒரு கட்டத்தைத் தாண்டாமல் இருப்பது ஏன்? கட்சி துவங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால், ஒரு கட்சியின் செயல்பாட்டையும், மதிப்பையும், மக்களிடமுள்ள மரியாதையையும் அப்படிப் பார்க்கக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை மட்டும் வைத்து ஒரு கட்சியின் வளர்ச்சியை மதிப்பிடக்கூடாது. கடந்த 1995 ஆம் ஆண்டில் கொடியங்குளம் கொடுமையை உலகறியச் செய்ததில் துவங்கி எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து, எத்தனையோ சாதனைகளை புதிய தமிழகம் செய்திருக்கிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 5 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வெறும் 65 ரூபாய் சம்பளத்திலிருந்து 450 ரூபாய் சம்பளத்தைக் கொண்டு வந்தது புதிய தமிழகம் கட்சியின் செயல்பாட்டால் ஏற்பட்ட விளைவுதான். தமிழகத்திலுள்ள ஒரு லட்சம் கிராமங்களில் 40 ஆயிரம் கிராமங்களில் டீக்கடைகளில் பட்டியலின மக்கள் சமமாக நடத்தப்படாமல் இருந்த இரட்டைக்குவளை முறையை ஒழித்ததும் புதிய தமிழகம்தான். கண்டதேவி உட்பட கிராமக்கோவில்களில் பட்டியலின மக்கள் நுழைய முடியாத நிலையை மாற்றியதும், கிராமங்களில் பட்டியலின மக்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை உருவாக்கியதும் நாங்கள்தான். அரசியலில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் தவறு என்றால் தவறு என்று சுட்டிக்காட்டுவதால்தான் நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம். ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்து, ஐந்தாண்டுகளுக்கு புகழ்வதாக இருந்திருந்தால் நாங்களும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்போம். அது தேவையில்லை. ஆனால் வரும் தேர்தலில் வெற்றி பெற்று புதிய தமிழகம் சட்டமன்றத்தில் இடம்பெறும். பட மூலாதாரம்,Krishnasamy தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் ஆதரிக்காத அளவுக்கு, பாஜகவை நீங்கள் அதிதீவிரமாக ஆதரித்தும் உங்களுக்கான அங்கீகாரத்தை அவர்கள் தரவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? சமீபத்தில் கூட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதும், உறுதி என்பதை அகற்றியதையும் நான் கண்டித்தேன். அதனால் மத்திய அரசை எங்கே எப்போது கண்டிக்க வேண்டுமோ அந்தளவுக்கு நான் கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பாஜவை கண்மூடித்தனமாக என்றைக்குமே நான் ஆதரித்ததில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை நான் தெளிவாகக் கூறினேன். ஏனெனில், திருப்பரங்குன்றம், பாஜகவுக்கோ, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கோ எழுதி வைக்கப்பட்டதில்லை. அந்த விவகாரத்தில் திமுகதான் உண்மையை உணராமல் கண்மூடித்தனமாக எதிர்த்தது. இறுதியில் நாங்கள் சொன்னதையே நீதிமன்றமும் சொன்னது. தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் இந்த விஷயத்தை நாங்கள் அணுகினோம். அதற்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தை காங்கிரஸுடனும், தமிழ் மொழிக்கான போராட்டத்தை திமுகவுடனும் பொருத்திப் பார்ப்பது எவ்வளவு தவறோ, அதேபோல வழிபாட்டு உரிமைகளை குறிப்பிட்ட கட்சியுடன் பொருத்திப் பார்ப்பதும் தவறு. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட பின்பு அதுதொடர்பான உங்களின் முயற்சி முடிவடைந்துவிட்டதா? மீண்டும் மீண்டும் மத்திய அரசை அணுகுவதில் பயனில்லை. அதனால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் பங்கேற்கும் நிலை வரும்போது, 'தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பட்டியலினப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, ஓபிசி பட்டியலில் இணைக்கப்படுகிறது' என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி அதைச் செயல்படுத்த வைப்போம். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.'' மற்ற மாநிலங்களில் தலித் முதலமைச்சர் அல்லது தலித் துணை முதலமைச்சர் என்கிற கனவு சாத்தியப்படும்போது, தமிழகத்தில் மட்டும் அது கானல் நீராக இருப்பது ஏன்? தமிழக அரசியலில் பொய் முகங்கள்தான் அதிகம். திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான ஒரு கட்டமைப்பை உருவாக்கியது வெளிப்படை. வெளியே தெரியாத விஷயம், தமிழகம் முழுவதும் கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான ஒரு மனநிலையைத்தான் அவை உருவாக்கி வைத்திருக்கின்றன. அந்தக் கட்சியில் இருக்கும் பட்டியலினத்தவரும் அப்படியே நடக்கின்றனர். உத்தரப்பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் இவர்கள் சொல்லும் சமத்துவம் பேசப்படுவதில்லை. ஆனால், அங்கே பட்டியலினத்தைச் சேர்ந்தவரால் முதலமைச்சர், துணை முதலமைச்சராக அல்லது முதலமைச்சர் வேட்பாளராக முடிகிறது. மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக முடிகிறது. உத்தர பிரதேசத்தில் மாயாவதி முதலமைச்சராக இருந்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் பட்டியலின முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் என்ற நிலை இங்கே உருவாகியிருக்க வேண்டும். ஆனால், திராவிடக் கட்சியினர் சமத்துவம் பேசுகின்றனரே தவிர, அதைச் செயல்படுத்த முன்வருவதில்லை. திமுக, அதிமுக இரு கட்சிகளிலுமே மத்திய, மாநில அமைச்சர்களாக முக்கியப் பொறுப்புகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே... அதனால் பட்டியலின மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது... அவர்கள் அந்த கட்சிகளின் கொள்கை சார்ந்துதான் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பேசுகிறார்கள். மாஞ்சோலை விவகாரம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னை, வேங்கை வயல் என்று பட்டியலின மக்களின் பிரச்னைகளைப் பேசுவதில்லை. முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் நிலைக்கு இந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் வரும்போதுதான், உண்மையாகவே இந்த சமுதாயத்தால் முன்னேற முடியும். அதற்கான வாய்ப்பு, வரும் தேர்தலில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அது எப்படி யாரால் சாத்தியமாகும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg1kx931k2o
-
இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
முன்னணி வீரர்கள் இருந்தும் இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்குக் காரணம் இதுவா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,பிரதீப் கிருஷ்ணா பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மண்ணில் முதன் முறையாக ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது நியூசிலாந்து. வெற்றியோடு தொடரைத் தொடங்கியிருந்தாலும், அடுத்தடுத்து தோல்விகளால் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தவிர்த்து இந்திய அணியின் அனைத்து முன்னணி வீரர்களுமே இந்தத் தொடரில் இடம்பிடித்திருந்தார்கள். நியூசிலாந்து அணியிலோ வில்லியம்சன், சான்ட்னர், ஹென்றி, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அப்படியிருந்தும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் வீழ்த்தியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன? மிடில் ஓவர்களில் இந்தியா vs நியூசிலாந்து மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம், 2 சதங்கள் என இந்தத் தொடரின் நாயகனாக விளங்கினார் டேரில் மிட்செல். 176 என்ற சராசரியில் 352 ரன்கள் எடுத்தார் அவர். அதையும் 110.34 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் எடுத்தார். ராஜ்கோட், இந்தூர் ஆகிய இரு இடங்களிலும் சதமடித்து இந்தியாவுக்கும் வெற்றிக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தினார் மிட்செல். நான்காவது வீரராக ஆடிய மிட்செல், மிடில் ஓவர்களாக கருதப்படும் 11 முதல் 40வது ஓவர் வரை நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்தார். அவருடன் மற்ற வீரர்களும் ஒத்துழைப்பு தர மிடில் ஓவர்களில் இந்தியாவைக் காட்டிலும் நியூசிலாந்து அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது கரும்பு தின்றால் ரத்த சர்க்கரை உயருமா? - 4 சந்தேகங்களும் விளக்கமும் இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா? சாபஹார்: அமெரிக்காவின் அழுத்தத்தால் இரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா? 'கடந்த 8 ஆண்டுகளில் எனக்கு பாலிவுட் வாய்ப்பு நின்றுவிட்டது' - ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி குறித்து பாலிவுட் கலைஞர்கள் கருத்து End of அதிகம் படிக்கப்பட்டது "மிடில் ஓவர் பேட்டிங் மற்றும் மிடில் ஓவர் பௌலிங் இரண்டிலும் சொதப்பியதுதான் இந்தியா இந்தத் தொடரை தோற்றதற்கான காரணம்" என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும், வர்ணனையாளருமான நானி. இரண்டாவது போட்டியின் மிடில் ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இந்த 30 ஓவர்களில் அவர்களுடைய சராசரி ரன்ரேட் 6.43. ஆனால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இந்த கட்டத்தில் எடுத்த ஸ்கோர் 142 மட்டுமே. 4.73 என்ற ரன்ரேட்டில் ஆடியிருந்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதுவே இந்தூரில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் 6.37 என்ற ரன்ரேட்டில் 191 ரன்களை எடுத்தது நியூசிலாந்து. இந்த முறை அவர்கள் இழந்தது ஒரு விக்கெட் மட்டுமே. மிட்செலோடு சேர்ந்து கிளென் ஃபிலிப்ஸும் சதம் அடித்தார். ஆனால், சேஸ் செய்த இந்திய அணி மிடில் ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களே எடுத்தது. ரன்ரேட் 5.47. இந்த வித்தியாசம் இந்தியா மிடில் ஓவர் பேட்டிங் மற்றும் மிடில் ஓவர் பௌலிங் இரண்டிலுமே பின்தங்கியதைக் காட்டுகிறது. படக்குறிப்பு,இந்தத் தொடரில் மிடில் ஓவர்களில் முன்னிலை பெற்ற அணிகளே அந்தப் போட்டியையும் வென்றிருக்கின்றன. வதோதராவில் இந்தியாவும், மற்ற இரு போட்டிகளில் நியூசிலாந்தும் மிடில் ஓவர்களில் முந்தி, போட்டிகளிலும் வெற்றி பெற்றன. மிடில் ஓவர்களில் இந்திய பந்துவீச்சு பின்தங்கியது ஏன்? கடைசி இரண்டு போட்டிகளின் மிடில் ஓவர்களில், மொத்தம் 60 ஓவர்களில் இந்தியா வீழ்த்தியது 3 விக்கெட்டுகள் தான். இது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் சும்பன் கில், "எங்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. சர்க்கிளுக்கு உள்ளே ஐந்து வீரர்கள் இருக்கும்போது விக்கெட் வீழ்த்த முடியவில்லையெனில் அதன்பிறகு அது மிகவும் கடினம். புதிய பந்தில் நன்றாகத்தான் வீசினோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் தைரியமாகப் பந்துவீசியிருக்கலாம்" என்று தெரிவித்தார். "விக்கெட் எடுக்கவேண்டிய முக்கியமான இந்தக் கட்டத்தில் இந்திய அணி அதைச் செய்யத் தவறிவிட்டது" என்று சொல்லும் நானி, கேப்டன் சுப்மன் கில் கூட இரு தவறுகளை செய்ததாக கூறுகிறார். "குல்தீப் யாதவ் பந்தை நன்கு தூக்கிப் போடுபவர், விக்கெட் எடுப்பவர். ஆனால், மிட்செல் அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் அவர் மிகவும் 'flat'-ஆகவே பந்துவீசிக் கொண்டிருந்தார். அப்படியிருக்கும்போது அவருடைய விக்கெட் எடுக்கும் தன்மையே போய்விடும். ஒரு பௌலர் அப்படி சற்று யோசிக்கும்போது, கேப்டனோ, வேறு யாராவதோ சென்று அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதை யாரும் செய்யவே இல்லை. அவர் ராஜ்கோட் போட்டியில் 82 ரன்கள் கொடுக்கக் காரணமே அதுதான்.'' என்கிறார் நானி. இந்தியாவின் முக்கிய 'விக்கெட் டேக்கிங் பௌலர்' என்று கருதப்படுபவர்களுள் ஒருவரான குல்தீப், இந்தத் தொடரில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். நியூசிலாந்து பேட்டர்கள் அவருக்கு எதிராக யோசிக்காமல் அதிரடியைக் கையில் எடுத்தார்கள். அதனால் அவர்களது ரன்ரேட் மிடில் ஓவர்களில் மிகவும் சீராகச் சென்றது. ஜடேஜா மீது விமர்சனம் அதேபோல், ஜடேஜாவைப் பயன்படுத்திய விதம் குறித்தும் நானி தன் விமர்சனத்தை முன்வைத்தார். "ஒரு ஸ்பின்னரை எப்போது பந்துவீச்சுக்குக் கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியம். மூன்றாவது போட்டியில் ஜடேஜாவை 30-வது ஓவரில்தான் கில் பயன்படுத்தவே தொடங்கினார். என்னதான், பௌலர் ஃபார்மில் இல்லாவிட்டாலும், ஒரு முன்னணி ஸ்பின்னர் இருக்கும்போது அவர் மீது நம்பிக்கை வைக்கவே வேண்டும்" என்று சுட்டிக்காட்டினார். அதேசமயம், ஜடேஜாவின் செயல்பாடு பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஒருநாள் போட்டிகளில் ஜடேஜாவின் செயல்பாடு சமீபமாக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்தத் தொடரில் 23 ஓவர்கள் வீசிய அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பந்துவீச்சில் அவரது எகானமியும் 6.13 என அதிகமாகவே இருக்கிறது. கடைசி 6 ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரேயொரு விக்கெட் தான் வீழ்த்தியிருக்கிறார். கிரிக்பஸ் வலைதளத்தில் உரையாடிய ஜாஹிர் கான் மற்றும் அஜிங்க்யா ரஹானே, ஜடேஜா - அக்ஷர் பட்டேல் இடையிலான போட்டி பற்றிப் பேசியிருந்தார்கள். அக்ஷர் பட்டேல் நிச்சயம் ஜடேஜாவுக்கு தொடர் நெருக்கடி கொடுப்பார் என்று கூறிய ஜாஹிர் கான், "இந்த ஃபார்மட் மாறிவருகிறது. மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தும் பௌலராக இருந்தால் மட்டும் போதாது, நீங்கள் விக்கெட் எடுக்கத் தொடங்கவேண்டும். அதை ஜடேஜா புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார். ரஹானேவோ, "ஒருநாள் போட்டிகளுக்கு நிறைய வேரியேஷன்கள் தேவை. ஜடேஜா சிறந்த வீரர் என்றாலும் அவர் ஒரே மாதிரியான வேகத்தில் பந்துவீசக் கூடியவர். அதை பேட்டர்கள் கணித்துவிடுவார்கள். அதேசமயம் அக்ஷர் படேலிடம் நிறைய வேரியேஷன்கள் இருக்கின்றன" என்று கூறினார். வழக்கமாக ரன்களைக் கட்டுப்படுத்தும் ஜடேஜா ஒருபக்கம் அதிக ரன்களைக் கொடுத்ததுமே, குல்தீப் மீதும் அது நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். இந்த இடத்தில் தான் இந்திய அணி வருண் சக்கரவர்த்தி போன்ற ஒரு விக்கெட் எடுக்கக்கூடிய பௌலரைத் தவறவிட்டதாகச் சொல்கிறார் நானி. சாம்பியன்ஸ் டிராபியில் நன்கு செயல்பட்ட அவரை, இப்போது ஒதுக்கி வைத்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், வருண் இருந்தால் இந்த மிடில் ஆர்டர் விக்கெட் பிரச்னை நிச்சயம் தீர்ந்துவிடும் என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தத் தொடரில் இந்திய ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டார் டேரில் மிட்செல் மிடில் ஓவர் & மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னை நியூசிலாந்து அணி மிடில் ஓவர்களில் நன்றாக ரன் சேர்க்க வில் யங், கிளென் ஃபிலிப்ஸ் போன்றவர்கள் மிட்செலுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததும் ஒரு காரணம். இந்த ஒத்துழைப்பு விராட் கோலிக்கோ, இரண்டாவது போட்டியில் கேஎல் ராகுலுக்கோ கிடைக்கவில்லை. இந்தத் தொடரில், இந்திய மிடில் ஆர்டர் (நான்காவது முதல் ஏழாவது வரிசை வரை களமிறங்கும்) பேட்டர்களின் சராசரி 34.7. இதுவே நியூசிலாந்தின் சராசரி 80.86. அதில் பெரும்பகுதி ரன்களை எடுத்த மிட்செலின் பங்களிப்பை நீக்கினாலும் கூட அந்த சராசரி 42.8 ஆக இருக்கும். இந்த வித்தியாசத்துக்குக் காரணம் இந்தியா இங்கு நிறைய விக்கெட்டுகளை இழந்தது. "இந்திய பேட்டர்களுக்கு ஸ்பின் ஆட வருவதில்லை. அதுதான் இதற்கான மிகப் பெரிய பிரச்னை" என்று இதற்கான காரணத்தைக் கூறுகிறார் நானி. "இது கொஞ்சம் கடுமையாகக் கூடத் தெரியலாம். ஆனால், அதுவே உண்மை. இந்திய பேட்டர்கள் ஸ்பின்னுக்கு எதிராக முன் வந்து விளையாடவே அஞ்சுகிறார்கள். காலை நகர்த்தவே அவர்கள் மறந்துவிட்டார்கள். முதல் போட்டியின் ஒருகட்டத்தில் ஷ்ரேயாஸ், ஆதித்யா அஷோக் ஓவரில் சிறப்பாக ஆடினார். அதன்பிறகு இந்திய அணி ஸ்பின்னை சரியாகவே கையாளவில்லை" என்றும் அவர் கூறினார். கடைசி 2 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயராலும் அப்படியான ஆட்டத்தைக் கொடுக்க முடியவில்லை. அவர் வேகப்பந்துவீச்சாளர்களிடம் விரைவாக வீழ்ந்துவிட்டார். அடுத்து வந்த நித்திஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரலும் சுழலை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. இப்படி ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்ததால், கோலி, ராகுல் ஆகியோரும் ரன் சேர்ப்பதை விட விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது. அதனால், ரன் ரேட் வெகுவாகக் குறைந்தது. இந்திய பேட்டர்களின் பயத்தால், லெனக்ஸ் போன்ற ஒரு புதிய வீரர் கூட ஆதிக்கம் செலுத்துவதுபோல் தெரிந்ததாகக் கூறினார் நானி. "நாளை சான்ட்னர், சோதி போன்றவர்கள் வந்துவிட்டால் இந்த வீரர்கள் பிளேயிங் லெவனிலேயெ இருக்கமாட்டார்கள். ராஜ்கோட் போட்டியில் பந்துவீசியபோது பிரேஸ்வெல் தன் முதல் 8 ஓவர்களில் 18 ரன்கள் தான் கொடுத்திருந்தார். அவருக்கு எதிராக இந்திய பேட்டர்கள் கடைபிடித்தது சரியான அணுகுமுறையே அல்ல." என்றும் அவர் கூறினார். மறுபுறம் நியூசிலாந்து அணியோ இந்தியா போல் அல்லாமல், ஸ்பின்னர்களை தைரியமாகக் கையாண்டதுதான் அவர்கள் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தக் காரணமாக அமைந்தது. குறிப்பாக குல்தீப் யாதவுக்கு எதிராக அதிரடியாக ஆடினார்கள். குல்தீப் இந்தத் தொடரில் வீசிய முதல் ஓவரிலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார் கான்வே. டேரில் மிட்செல் பல தருணங்களில் இறங்கி வந்து பவுண்டரிகள் அடித்தார். குல்தீப் ஒரு ஆபத்தான பௌலராகக் கருதப்பட்டாலும், நியூசிலாந்து பேட்டர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கவில்லை. குல்தீப்புக்கு எதிராக அப்படி ஆடியது பற்றி இரண்டாவது போட்டிக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் பிரேஸ்வெல், "எங்கள் பேட்டர்கள் சூழ்நிலையை உணர்ந்து நன்றாக ஆடினார்கள். அதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்றார். அதேசமயம், மிடில் ஆர்டர் பிரச்னை என்பது இன்றோ நேற்றோ தோன்றிய பிரச்னை அல்ல என்றும், இந்தியாவுக்குக் காலங்காலமாகத் தொடரும் ஒரு பிரச்னை என்று குறிப்பிட்டார் நானி. "இந்தியாவுக்கு இந்த மிடில் ஆர்டர் பிரச்னை எப்போதுமோ இருந்து வந்திருக்கிறது. என்ன பெரும்பாலும் யாராவது ஒருவர் காப்பாற்றிவிடுவார். அவ்வப்போது மொத்தமாக வெளிப்பட்டுவிடும். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல." என்றார் நானி. தென்னாப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்தியா தோற்ற போதும் கூட சுழலுக்கு எதிரான இந்திய அணியின் பேட்டிங் பிரச்னை பெருமளவு விவாதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் தவிர்த்து, மற்ற போட்டிகளில் இந்திய மிடில் ஆர்டர் நியூசிலாந்தின் ஸ்பின்னர்களை தைரியமாக எதிர்கொள்ளவில்லை என்கிறார் நானி ஆல்ரவுண்டர்கள் அதிகமாக இருப்பது தான் பிரச்னையா? இந்தியாவின் இந்தத் பேட்டிங் தடுமாற்றத்துக்கு அதிக ஆல்ரவுண்டர்களை அணியில் சேர்த்திருப்பது ஒரு காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. நித்திஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக 'ஸ்பெஷலிஸ்ட்' பேட்டர்களைப் பயன்படுத்தலாமே என்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். இந்தியாவின் தடுமாற்றத்துக்கு இது காரணமா என்று கேட்டால், இல்லை என்று மறுக்கிறார் நானி. "இந்தியாவின் 'டெயில்' அதாவது பின்வரிசை பேட்டிங் மிகவும் பெரியது. பும்ரா, சிராஜ், குல்தீப், வருண், அர்ஷ்தீப் ஆகியோரில் மூவர் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார்கள் எனும்போது ஆல்ரவுண்டர்கள் தேவை. ஜடேஜாவின் இடத்தில் அக்ஷரும், நித்திஷ் இடத்தில் ஹர்திக்கும் வந்துவிட்டால் பிரச்னைகள் சரியாகிவிடும்" என்று சொல்கிறார் அவர். 2027 உலகக் கோப்பை நடக்கும் தென்னாப்ரிக்க ஆடுகளங்களில் நித்திஷ் ரெட்டியாலும் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று அவர் சொல்கிறார். இந்த பேட்டிங் பிரச்னைக்குக் காரணம் என்ன? ஒரு நிலைத்தன்மை இல்லாதது தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் நானி. இதுபற்றிப் பேசிய அவர், "வீரர்கள் யாருக்கும் தங்கள் இடம், ரோல் பற்றிய தெளிவு இல்லை. சில வீரர்களுக்கு அடுத்த போட்டியில் ஆட இடம் கிடைக்குமா என்ற பயம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் ஒரு அரைசதம் அடித்து இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வோம் என்று நினைக்கிறார்கள். ஸ்பின்னர்களுக்கு எதிராக தைரியமாக ரிஸ்க் எடுத்து ஆடவேண்டிய சூழ்நிலையில் அவர்கள் அப்படிச் செய்யாததன் காரணம் இந்த நிலையற்ற தன்மைதான். தொடர்ச்சியாக செய்துகொண்டே இருக்கும் மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என்றார். அணியில் செய்யும் மாற்றங்கள், அணியின் வரிசையில் செய்யும் மாற்றங்கள் அனைத்துமே வீரர்களைப் பாதிக்கின்றன என்கிறார் அவர். இந்த விஷயத்திலும் கூட இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. முதலிரு போட்டிகளில் ஏழாவது வீரராகக் களமிறங்கிய பிரேஸ்வெல், கடைசிப் போட்டியில் ஆறாவது வீரராக பேட்டிங் செய்தார். மற்றபடி டாப் 7 இடங்களில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. ஆனால், இந்திய அணியில் அப்படி இருக்கவில்லை. டாப் 4 ஒரே மாதிரி இருந்தாலும், 5 முதல் 7 வரை பல மாற்றங்கள் நடந்தன. இது இந்தத் தொடரில் இந்தியாவின் 5 முதல் 7 வரையிலான பேட்டிங் வரிசை: முதல் ஒருநாள் போட்டி: ஜடேஜா, ராகுல், ஹர்ஷித் ராணா 2வது ஒருநாள் போட்டி: ராகுல், ஜடேஜா, நித்திஷ் ரெட்டி 3வது ஒருநாள் போட்டி: ராகுல், நித்திஷ் ரெட்டி, ஜடேஜா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போன்ற போட்டிகளில் வீரர்களுக்கு ஒரு நிலையான இடமும், தெளிவான ரோலும் இருக்கவேண்டும் என்கிறார் நானி. இந்த இந்திய அணியில் ஒருசில வீரர்களுக்கு அது இல்லாதது பெரிய பிரச்னையாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். இந்த மிடில் ஓவர் சுழல் பிரச்னைகள் இருந்தாலும், 2027 உலகக் கோப்பை தென்னாப்ரிக்காவில் நடப்பது ஒரு வகையில் நம்பிக்கையான விஷயம் என்று சொல்கிறார் நானி. இருந்தாலும், அதற்காக ஒரு 20 வீரர்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் கொடுத்து, அதிலிருந்து உலகக் கோப்பை அணியைத் தேர்வு செய்யவேண்டும் என்கிறார். அதேசமயம், அந்த வீரர்களுக்கும் நிலையான இடமும், தெளிவான ரோலும் கொடுக்கப்படவேண்டும் என்று கூறுகிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yvll0nn3wo
-
"கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை
"கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை 19 Jan, 2026 | 05:31 PM யாழப்பாணத்தில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை (19) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால், கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில், தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பெயர் பலகை கடந்த 08 ஆம் திகதி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது. அதேவேளை, குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலையே பொலிஸார் தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/236454
-
இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்த மாவட்ட ரீதியில் கருத்துகளைப் பெறும் விசேட நிகழ்வு
களுத்துறையில் இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்த மாவட்ட ரீதியில் கருத்துகளைப் பெறும் விசேட நிகழ்வு 19 Jan, 2026 | 05:36 PM இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ரீதியில் இயலாமையுடைய நபர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் விசேட நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி களுத்துறையில் இடம்பெறவிருப்பதாக இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதத் வசந்த.த சில்வா தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் "இயலாமையுடைய நபர்களுக்கான உணர்திறன் மிக்க பாராளுமன்றம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க, நாடு முழுவதும் உள்ள இயலாமையுடைய நபர்களிடமிருந்து நேரடி கருத்துக்களைப் பெறுவதற்கான தொடர் நிகழ்ச்சிகளின் இரண்டாம் கட்டமாக இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த பாராளுமன்ற ஒன்றியத்தனால் எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் குறித்த ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.சில்வா தலைமையில் கடந்த 9ஆம் திகதி கூடியபோதே இது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர், இந்தத் தொடரின் முதல் கட்டம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்டங்கள் முறையே பெப்ரவரி 27ஆம் திகதி மட்டக்களப்பிலும், மார்ச் 27ஆம் திகதி பொலன்னறுவையிலும் நடைபெறும். இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்பாட்டின் ஓர் அம்சமாக அமைச்சுக்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி சுகாதார அமைச்சிலும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம், ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித்.பி பெரேரா, (பேராசிரியர்) எல்.எம்.அபேவிக்ரம, சந்திம ஹெட்டிஆரச்சி, பத்மசிறி பண்டார, (வைத்தியர்) இளையதம்பி சிறிநாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236451
-
நம் உடலின் புரதத் தேவையை பூர்த்தி செய்ய இறைச்சி அவசியம் என்பது உண்மையா?
நம் உடலின் புரதத் தேவையை பூர்த்தி செய்ய இறைச்சி அவசியம் என்பது உண்மையா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சோஃபி மாக்ஃபி பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் 19 ஜனவரி 2026, 01:52 GMT ஒரு உடற்பயிற்சி நிபுணர் மற்றும் தாவர அடிப்படையிலான உணவு வகைகளை உருவாக்குபவர் என்ற முறையில், அதிக புரதம் கொண்ட தாவர அடிப்படையிலான சமையலின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதே எனது நோக்கம். இது குறித்து 'சோஃப்ஸ் பிளான்ட் கிச்சன்' (Soph's Plant Kitchen) என்ற புத்தகத்தையும் நான் எழுதியுள்ளேன். நீங்கள் அதை வலிமைப் பயிற்சியுடன் (வலிமையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயிற்சிகள்) இணைக்கும்போது, புரதம் நமது உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் மற்றும் சரிசெய்யவும் உதவுகிறது. இது மிகவும் நிறைவான ஊட்டச்சத்தும் கூட, இது நமக்குத் திருப்தி உணர்வைத் தருகிறது. ஆனால் புரதத்தைப் பற்றி குறிப்பாக அது தாவரங்களிலிருந்து வரும்போது பல கட்டுக்கதைகள் உள்ளன. புரதத்திற்காக உங்களுக்கு உண்மையில் இறைச்சி தேவையா? தாவரப் புரதங்கள் விலங்குப் புரதங்களைப் போலச் சிறந்தவை அல்ல என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. அங்கு கிடைக்கும் தகவல்கள் குழப்பமானதாகவும் முரண்பட்டதாகவும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றை நீங்கள் நம்புவதில் வியப்பில்லை. உண்மை என்னவென்றால், அனைத்து தாவர உணவுகளிலும் அத்தியாவசியமானவை எனக் கருதப்படும் ஒன்பது அமினோ அமிலங்கள் உட்பட 20 அமினோ அமிலங்களும் (புரதத்தின் அடிப்படை அலகுகள்) உள்ளன. இவற்றை நமது உடலால் உருவாக்க முடியாது, எனவே நாம் உணவின் மூலம் அவற்றைப் பெற வேண்டும். தாவரங்களில் உள்ள ஒன்று அல்லது இரண்டு அமினோ அமிலங்கள் போதுமான அளவில் இல்லாததால், அவை 'முழுமையான புரதம்' (complete protein) என்று கருதப்படுவதில்லை என்பதே இந்த குழப்பத்திற்குக் காரணம். இதற்கு ஒரு எளிய வழி உள்ளது: நாள் முழுவதும் பல்வேறு வகையான தாவர உணவுகளை உட்கொள்வது. சமச்சீரான உணவில் இது இயற்கையாகவே நடக்கும் என்பதால், உங்கள் புரத இலக்குகளை அடைவது எளிது. பட மூலாதாரம்,Getty Images 'முழுமையான' புரதங்களாக இருக்கும் தாவர உணவுகளும் உள்ளன - அவற்றைப் பற்றிப் பின்னர் பார்ப்போம். வாரந்தோறும் சிறிய அளவில் விலங்குப் புரதத்திற்குப் பதிலாகத் தாவரப் புரதத்திற்கு மாறுவது நோய் அபாயத்தை 10% வரை குறைக்கும் என்று நீண்ட கால ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே வாரத்திற்கு ஒரு முறை இறைச்சி இல்லாத உணவை உண்பது கூட நன்மை பயக்கும். உங்கள் உணவில் அதிக தாவர உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், உங்கள் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் மற்றும் கூடுதல் நார்ச்சத்தையும் (fibre) பெறலாம். இது பிரிட்டனில் உள்ள 90% பேருக்குப் போதுமானதாகக் கிடைப்பதில்லை. எனவே இது ஒரே முயற்சியில் மூன்று நன்மைகளை வழங்குகிறது நமக்கு உண்மையில் எவ்வளவு புரதம் தேவை? வலிமைப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு, உடல் எடையில் ஒரு கிலோவிற்கு 1.6 கிராம் புரதம் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை சாதாரணமாக உடற்பயிற்சி செய்பவர் என்றால், ஒரு கிலோவிற்கு 1.1 முதல் 1.2 கிராம் புரதம் போதுமானது. நம்மில் பெரும்பாலோர் ஏற்கனவே போதுமான புரதத்தை உண்கிறோம், எனவே நாம் உணவில் கூடுதலாகச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக நாம் அதை எங்கிருந்து பெறுகிறோம் என்பதைப் பற்றி யோசிப்பது உதவியாக இருக்கும். பெரும்பாலும் இது விலங்கு மூலங்களிலிருந்து பெறப்படுவதால், அவற்றுடன் நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவை சேர்கின்றன. அதிக புரதமுள்ள தாவர உணவுகள் எவை என்பது இங்கே விவரித்து கொடுக்கப்பட்டுள்ளது. 1. சோயா (Soy) பட மூலாதாரம்,Getty Images சோயாவில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது, கொலஸ்ட்ரால் இல்லை. இது நார்ச்சத்து நிறைந்தது மற்றும் அதிக புரதம் கொண்டது. இது பல்துறை சார்ந்தது மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு அடிப்படையாக அமைகிறது. டோஃபுவில் (Tofu) 100 கிராமிற்கு 7-15 கிராம் புரதம் உள்ளது. சில்கன் டோஃபு குறைந்த அளவைக் கொண்டிருந்தாலும் (100 கிராமிற்கு 7 கிராம்), அதை சாஸ்கள் அல்லது சூப்களில் கலந்து கிரீமி அமைப்பைப் பெறலாம் - இது புரதத்தைப் பெறுவதற்கான எளிதான வழி. டெம்பே (Tempeh) முழு சோயா பீன்களையும் பயன்படுத்துகிறது மற்றும் நொதிக்க வைக்கப்படுகிறது, எனவே குடலில் ப்ரீபயாடிக் (prebiotic) விளைவைக் கொண்டுள்ளது. இதில் 100 கிராமிற்கு 20 கிராமுக்கும் அதிகமான புரதம் உள்ளது. எடமேம் (Edamame) என்பது இளம் சோயா பீன்கள், 100 கிராமிற்கு 11 கிராம் புரதம் கொண்டது. மிசோ (Miso) என்பது நொதிக்க வைக்கப்பட்ட சோயா பீன் பேஸ்ட் - 100 கிராமிற்கு 13 கிராம் புரதத்துடன் ஒரு சிறந்த சுவையை அளிக்கிறது. இனிப்பு சேர்க்கப்படாத சோயா தயிரில் புரதம் அதிகம். சோயா பால் அனைத்து தாவர அடிப்படையிலான பாலை விட அதிக புரதத்தைக் கொண்டுள்ளது (100 மில்லிக்கு 3.5 கிராம்). 2. பயறு வகைகள் (Legumes) பட மூலாதாரம்,Getty Images பீன்ஸ் மற்றும் கொண்டைக் கடலையில் பொதுவாக 100 கிராமிற்கு 6-9 கிராம் புரதம் உள்ளது. இவை பாஸ்தா, சாலட், சூப் மற்றும் கறிகளில் சேர்க்க ஏற்றவை. பருப்புகளில் பொதுவாக 100 கிராமிற்கு 11-24 கிராம் புரதம் உள்ளது. இவற்றை அரிசி அல்லது தானியங்களுடன் சேர்த்து புரதம் மற்றும் நார்ச்சத்துக்காகப் பயன்படுத்தலாம். 3. செய்டான் (Seitan) இது கோதுமை குளூட்டனிலிருந்து தயாரிக்கப்படுகிறது, 100 கிராமிற்கு 25 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. சோயா ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது சிறந்தது. 4. நியூட்ரிஷனல் ஈஸ்ட் (Nutritional yeast) இந்த மசாலாப் பொருள் 50% புரதத்தைக் கொண்டது. ஒவ்வொரு தேக்கரண்டி நியூட்ரிஷனல் ஈஸ்டிலும் சுமார் 3 கிராம் புரதம் உள்ளது. எனவே இது எந்த உணவிலும் புரதத்தை அதிகரிக்க சுலபமான வழி. இது கொட்டை (nutty) மற்றும் சீஸ் (cheesy) போன்ற சுவையைக் கொண்டுள்ளதுடன், சாஸ்களைக் (sauces) கெட்டியாக்கும் பொருளாகவும் செயல்படுகிறது. சத்துணவு ஈஸ்ட் மற்றும் பருப்புகள் சேர்க்கப்பட்டிருப்பதால், ஒருமுறை பரிமாறப்படும் அளவில் 16 கிராம் புரதத்தைக் கொண்டுள்ள 'வீகன் மூசாக்காவில்' இதனை முயற்சித்துப் பாருங்கள்." 5. முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் பட மூலாதாரம்,Getty Images தாவரப் புரதங்களைப் பற்றிப் பேசும்போது முழு தானியங்கள், கொட்டைகள் மற்றும் விதைகளை மறந்துவிடாதீர்கள். "ஒரு வேளை உணவில் ஏராளமான புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைச் சேர்ப்பதற்கு 'பவர் பவுல்' (புத்தா பவுல் அல்லது தானியக் கிண்ணம்) ஒரு சிறந்த வழியாகும். வெள்ளை அரிசிக்குப் பதிலாக, 100 கிராமிற்கு சுமார் 7-9 கிராம் புரதம் கொண்டுள்ள குயினோவா மற்றும் பக்வீட் ஆகியவற்றின் கலவையை நான் பயன்படுத்த விரும்புகிறேன்." "நீங்கள் இதன் மேலே கொட்டைகள் மற்றும் விதைகளைச் சேர்த்தால் (ஒரு மேசைக்கரண்டியில் சுமார் 2–4 கிராம் புரதம் இருக்கும்), அவை புரதத்துடன் கூடுதல் மொறுமொறுப்பையும் வழங்குகின்றன. சாலட், சூப் மற்றும் ஸ்டூக்களுக்கு (stews) உடனடி 'டாப்பராக' (மேலே தூவுவதற்கு) பயன்படுத்துவதற்காக, நான் இவற்றை ஓவனில் சிறிது தமாரி (tamari) அல்லது சோயா சாஸ் மற்றும் சில மசாலாக்கள் சேர்த்து வறுக்க விரும்புகிறேன். இதற்காக 'துக்கா' (Dukkah) எனும் நறுமணப் பொருள் கலவையும் மிகச் சிறந்தது." ஓட்ஸும் ஒரு முழு தானியமாகவும் புரதச் சத்துக்கான ஆதாரமாகவும் (100 கிராமிற்கு 10.9 கிராம்) கருதப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், காலையில் நீங்கள் முதலில் உட்கொள்ளும் 'ஓவர்நைட் ஓட்ஸ்' மூலம் உங்கள் புரதத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும்; அதனுடன் நார்ச்சத்துக்காகப் பெர்ரி பழங்களையும், மொறுமொறுப்பு மற்றும் கூடுதல் புரதத்திற்காகக் கொட்டைகளையும் அடுக்குகளாகச் சேர்த்துக் கொள்ளலாம்." சிறிய அளவு விலங்குப் புரதத்திற்குப் பதிலாகத் தாவரப் புரதத்திற்கு மாறுவது, நீங்கள் ஆரோக்கியமாக வயதாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். தாவரப் புரதங்கள் சுற்றுச்சூழல் ரீதியாகவும் சிறந்தவை; குறைந்த நிலம் மற்றும் நீரைப் பயன்படுத்துவதோடு குறைந்த கார்பன் வெளியேற்றத்தை உருவாக்குகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd0y4eg0y3jo
-
பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த ஜப்பான் பிரதமர் தீர்மானம்
பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த ஜப்பான் பிரதமர் தீர்மானம் Published By: Digital Desk 3 19 Jan, 2026 | 04:14 PM ஜப்பான் பிரதமர் சனா தகாய்ச்சி, அந்நாட்டு பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பெப்ரவரி மாதம் பொதுத்தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு வியூகத்தை வலுப்படுத்தவும், பொருளாதார செலவினங்களை அதிகரிக்கவும் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த அதிரடி தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜன 23) ஜப்பான் பாராளுமன்றத்தின் கீழ் சபையை (Lower House) கலைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். இதற்கான வாக்கெடுப்பு பெப்ரவ 08 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்ற சனா தகாய்ச்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் களம் இதுவாகும். பாராளுமன்றத்தின் கீழ் சபையில் உள்ள மொத்தம் 465 இடங்களுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது பிரதமருக்கு மக்களிடையே நிலவும் பலமான ஆதரவைப் பயன்படுத்தி, ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் (LDP) செல்வாக்கை உறுதிப்படுத்த அவர் விரும்புகிறார். பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்தவும், பொருளாதார ஊக்கத்தொகைகளை வழங்கவும் மேலதிகமாக நிதி தேவைப்படுகிறது. இதற்கு மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெற அவர் திட்டமிட்டுள்ளார். இருப்பினும், ஜப்பான் மக்கள் தற்போது சந்தித்து வரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு (Cost of Living) இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும். அண்மைய கருத்துக்கணிப்பில் 45 சதவீதமான மக்கள் விலைவாசி அதிகரிப்பையே தங்களின் முதன்மையான கவலையாகக் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர விவகாரங்களுக்கு 16 சதவீதம் மக்களே முக்கியத்துவம் அளித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236436
-
கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு!
திருட்டு, ஊழலற்ற அபிவிருத்தியே அரசாங்கத்தின் நோக்கம் Jan 19, 2026 - 05:07 PM திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 'பாலதக்ஷ மாவத்தை' மேம்பாலத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். "திருடியும், வீண்விரயம் செய்தும் நாட்டை அழித்தமையாலும், நாட்டை வங்குரோத்து அடையச் செய்தமையாலும் ஏற்பட்ட பொருளாதாரக் குற்றங்களின் சாபத்திற்கு முழு நாடும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. நாங்கள் அந்த சவால்களை வெற்றிக்கொண்டு, திருட்டு மற்றும் ஊழல் இல்லாமல் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறோம். கொழும்பு நகரின் மிகவும் பரபரப்பான வர்த்தக நிலையங்கள், ஜனாதிபதி செயலகம், பெருமளவான ஹோட்டல்கள் இப்பகுதியை அண்மித்து அமைந்துள்ளதால் இவ்விடம் குறிப்பிடத்தக்க வாகன நெரிசல் நிலவிய ஒரு இடமாகும். அந்த வாகன நெரிசலுக்குத் தீர்வாக மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க சில வருடங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. அவற்றில் இரண்டு மேம்பாலங்களின் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த மேம்பாலம் 2022 ஆம் ஆண்டில் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த ஒன்றாகும். ஆனால் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய காரணங்களால் இப்பாலத்தின் நிர்மாணப் பணிகள் நீண்ட காலம் தாமதமானது. பொலிஸ் மா அதிபருடன் நாங்கள் மேற்கொண்ட கள விஜயத்தின் பயனாக, பொலிஸ் உத்தியோகபூர்வ தங்குமிடங்கள் தொடர்பில் நிலவிய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொண்டு நிர்மாணப் பணிகளைத் துரிதப்படுத்த முடிந்தது. 2,700 மில்லியன் ரூபாவில் மூன்று வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்படவிருந்த இந்த மேம்பாலத்திற்கு, நிர்மாணப் பணிகள் தாமதமானதால் மேலதிகமாக மேலும் ஒரு பில்லியன் ரூபாவை செலவிட நேரிட்டது. இந்த மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்தமை மக்களுக்கு பெரும் வசதியாகவும் பயனாகவும் அமையும். இதன் நிர்மாணப் பணிகளைத் துரிதமாக நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொலிஸ் திணைக்களத்திற்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று அமைச்சர் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkl3cn8o044wo29nuv7za74u
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் Jan 19, 2026 - 04:31 PM திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில், கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியமை மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நான்கு பிக்குகள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று (19) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmkl21ty3044to29nb21v87yo
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் இரண்டாவது வெற்றிகளுடன் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளன 19 Jan, 2026 | 05:52 AM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வேயிலும் நமிபியாவிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்தும் ஆப்கானிஸ்தானும் தத்தமது இரண்டாவது வெற்றிகளை ஈட்டி சுப்பர் சிக்ஸ் வாய்பை அதிகரித்துக்கொண்டுள்ளன. அதேவேளை ஐக்கிய அமெரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை காரணமாக முடிவு கிட்டவில்லை. ஹராரே டக்காஷிங்கா விளையாட்டுக் கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சி குழு போட்டியில் ஸிம்பாப்வேயை 8 விக்கெட்களால் இங்கிலாந்து வெற்றிகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் சிம்பரஷே மட்ஸெங்கெரெரே (45 ஆ.இ.), துருவ் பட்டேல் (36), கியான் பிலிங்நோட் (33), டெட்டெண்டா சிமுகோரோ (30 ஆகியோர் 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் மெனி லம்ஸ்டென் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளையோர் அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. இங்கிலாந்து அதன் முதல் இரண்டு விக்கெட்களை 42 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆனால், அணித் தலைவர் தோமஸ் ரியூ (86 ஆ.இ.), பென் மேயெஸ் (77 ஆ.இ) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 167 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியை இலகுவாக்கினர். பந்துவீச்சில் ஷெல்டன் மஸ்விட்டோரேரா 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: தோமஸ் ரியூ. ஆப்கானிஸ்தான் வெற்றி விண்ட்ஹோக் ஹை பேர்ஃபோமன்ஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி குழு போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணியை எதிர்த்தாடிய ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 138 ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 262 ஓட்டங்களைக் குவித்தது. காலித் அஹ்மத்ஸாய் (34), ஒஸ்மான் சதாத் ஆகிய இருவரும் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர. இந் நிலையில் சீரான இடைவெளியில் 3 விக்கெட்கள் சரிந்தன. ஆனால், ஒஸ்மான் சதாத் (88), அணித் தலைவர் மஹ்பூப் கான் (86) ஆகிய இருவரும் 77 ஒட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். மத்திய வரிசையில் அஸிஸ்உல்லா மியாக்கில் 21 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஜக்கீன் பொல்லார்ட் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விட்டெல் லோவெஸ் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் இளையோர் அணி 32.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஜுவெல் அண்ட்றூ (57), ஜக்கீம் பொல்லார்ட் (11) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்சாய் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் காதிர் ஸ்டானிக்சய் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வாஹிதுல்லா ஸத்ரான் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மெஹ்பூப் கான் போட்டியில் முடிவில்லை புலாவாயோ, குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண டி குழு போட்டியின் இடையில் மழை பெய்ததால் ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்க இளையோர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது. 22 ஓவர்கள் நிறைவில் ஐக்கிய அமெரிக்கா 6 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால், 7ஆம் இலக்க வீரர் நிட்டிஷ் சுதினி அபார சதம் குவித்ததுடன் 8ஆம் இலக்க வீரர் ஆதித் கப்பாவுடன் 7ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார். நிட்டிஷ் சுதானி 133 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 117 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்ததுடன் கடைசி 28 ஓவர்களில் நான்கு வீரர்களுடன் 156 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஆதித் கப்பா 40 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ப்ளின் மோரி 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மேசன் க்ளார்க் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து இளையோர் அணி ஒரு ஓவரில் 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடும் பழை பெய்ததால் அதன் பின்னர் ஆட்டம் தொடரப்டாமல் கைவிடப்பட்டது. https://www.virakesari.lk/article/236375
-
நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு
நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு Jan 19, 2026 - 03:08 PM அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, தமது அடுத்தகட்ட நிலவு பயணமான 'ஆர்ட்டெமிஸ் II' திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, 'ஓரியன்' (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு கொண்டு செல்லப்படும். இதில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு நினைவுப் பொருளாக, அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட 'டிஜிட்டல் போர்டிங் பாஸ்' நாசாவால் வழங்கப்படும். இதற்கானப் பதிவுகள் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதியுடன் முடிவடைகிறது. சுமார் 10 நாட்கள் நீடிக்க உள்ள இந்தச் சோதனைப் பயணத்தில், நான்கு விண்வெளி வீரர்கள் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ய உள்ளனர். ஆர்ட்டெமிஸ் II பயணமானது, மனிதர்களை மீண்டும் நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் செல்லும் மற்றும் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது. இந்தக் குழுவினர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க மாட்டார்கள், ஆனால் அதை சுற்றி பறப்பார்கள். விண்வெளி ஆய்வில் பொதுமக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும், இந்த வரலாற்றுப் பயணத்தில் அவர்களை இணைக்கவும் நாசா இந்த 'போர்டிங் பாஸ்' முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான go.nasa.gov/49NQ4mf மூலம் தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம் https://adaderanatamil.lk/news/cmkkz3lfu044mo29nvzwngewu
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
நன்றி உங்கள் கருத்துகளுக்கு அண்ணா.
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன - ஆளுநர் நா.வேதநாயகன்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன - ஆளுநர் நா.வேதநாயகன் 19 Jan, 2026 | 01:08 PM இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில், சிகரம் அக்கடமி மற்றும் சேப் (SAPE) நிறுவனம் இணைந்து நடாத்திய 'இந்தியாவில் கல்வி' (Study in India) கல்வி வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் திங்கட் கிழமை (19) நடைபெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, இந்த நிகழ்வானது ஒரு சாதாரணக் கண்காட்சி மட்டுமல்ல. இது எமது இளைஞர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு நுழைவாயில். அத்தோடு, இது வலுவடைந்து வரும் 'இந்தியா - இலங்கை அறிவுசார் பங்காண்மையின்' ஒரு சான்றாகவும் திகழ்கின்றது. இந்தியா இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய கல்வி மையமாகத் திகழ்கின்றது. அங்கு ஏறத்தாழ 1,300 பல்கலைக்கழகங்களும் 75,000 கல்லூரிகளும் உள்ளன. இங்குள்ள யாழ்ப்பாண மாணவர்களுக்கு, முதன்மையான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்குகின்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான கலாசார மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் உள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் ஒரு மாணவருக்கு, இந்தியாவில் கல்வி கற்பது அதிகபட்ச கலாசார இணக்கப்பாட்டையும், ஒரு இணக்கமான சூழலையும் வழங்குகின்றது. எமது பிராந்தியம் ஏற்கனவே வலுவான பழைய மாணவர் தடம் ஒன்றைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி ஆகியவற்றின் பல விரிவுரையாளர்கள், இந்தியாவில் தமது பயிற்சியைப் பெற்ற பெருமைமிக்க ஐ.சி.சி.ஆர். புலமைப்பரிசில் பெற்றவர்கள். இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்காக ஆண்டுதோறும் ஏறத்தாழ 800 புலமைப்பரிசில்களை வழங்குகின்றது. இவை இளங்கலை, முதுகலை மற்றும் செவ்வியல் இசை, நடனம் போன்ற விசேட துறைசார் பயிற்சிகளையும் உள்ளடக்கியுள்ளன. இந்தக் கண்காட்சியானது 'நம்பிக்கையின் புதிய பாலமாக அறிவு' அமையப் பெறுவதற்கான ஒரு மேடையாகும். இந்தியாவில் கல்வி கற்கத் தெரிவு செய்வதன் மூலம், எமது மாணவர்கள் வெறும் பட்டத்தை மட்டும் பெறவில்லை. அவர்கள் எமது முழுப் பிராந்தியத்தின் எதிர்காலத்தையும் முன்னெடுத்துச் செல்லும் கருத்துக்கள் மற்றும் புத்தாக்கங்களின் இருவழிப் பரிமாற்றத்தில் பங்குகொள்கின்றனர். ஒன்றாக இணைந்து, பாக் நீரிணையை ஒரு 'அறிவுசார் நீரிணையாக' மாற்றுவோம். பகிரப்பட்ட கற்றல் மற்றும் வளர்ச்சியின் ஊடாக எமது சிறந்த அறிவாளிகள் அங்கு வளம் பெறட்டும் என்றார். இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி அவர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளும், இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://www.virakesari.lk/article/236416
-
'நல்ல சம்பளம், போட்டி குறைவு' - கப்பல் வேலையில் சேர்வது எப்படி?
'நல்ல சம்பளம், போட்டி குறைவு' - கப்பல் வேலையில் சேர்வது எப்படி? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2047-ஆம் ஆண்டின்போது இந்த துறையில் 1.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கட்டுரை தகவல் பிரியங்கா ஜா பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெருங்கடல் என்பது பயணிப்பதற்கான இடம் மட்டுமல்ல, அது உலக வர்த்தகத்தின் முதுகெலும்பாகவும் கருதப்படுகிறது. உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி இங்கு தான் நடைபெறுகிறது. இந்தியாவில் சுமார் 12 பெரிய மற்றும் 200 சிறிய துறைமுகங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல லட்சம் கோடி மதிப்புள்ள சரக்குகள் ஒவ்வொரு நாளும் கையாளப்படுகின்றன. வணிக கப்பல் துறை எதிர்காலத்தில் மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2047-ஆம் ஆண்டின்போது இந்த துறையில் 1.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வணிக கப்பல் வேலையில் அதிக சம்பளம் மற்றும் உலகைச் சுற்றி பயணிக்கும் வாய்ப்பு உள்ளது. மிக இளம் வயதிலே முக்கியமான பொறுப்பு கிடைப்பது இந்த வேலையை கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. ஆனால் இதில் சவால்களும் உள்ளன. வணிக கப்பல் துறை என்றால் என்ன? அதில் சேர்வதற்கான வழிகள் என்ன? யாருக்கு இந்த துறை சரியான தேர்வாக இருக்கும் மற்றும் இதில் எழக்கூடிய சவால்கள் என்ன? வணிக கப்பல் துறை என்றால் என்ன? பட மூலாதாரம்,Getty Images இளைஞர்கள் பலரும் இந்திய கடற்படையில் இணையலாமா அல்லது வணிக கப்பல் வேலையில் இணையலாமா என குழப்பத்தில் உள்ளனர். இரண்டு பாதைகளும் கடலை நோக்கித் தான் செல்கின்றன என்றாலும் அதன் இலக்குகள் முற்றிலும் வேறாக உள்ளன. முதலில் இவை இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்வோம். கடற்சார் கல்வி மற்றும் பயிற்சி அகாடமியின் வேலைவாய்ப்பு இயக்குநராக உள்ள கேப்டன் சந்திரசேகர் இதைப்பற்றி பேசுகையில், "கடலில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வேலைகளை வணிக கப்பல்கள் செய்கின்றன. அதில் லாபம் அல்லது நஷ்டம் ஏற்படலாம். ஆனால் கடற்படை என்பது பாதுகாப்புக்கானது. ராணுவம், விமானப் படை போல இந்திய பாதுகாப்பு படைகளின் ஒர் அங்கமாக கடற்படை உள்ளது." என்றார். மெர்சன்ட் நேவி டீகோடட் என்கிற நிறுவனத்தை நடத்தி வரும் பிரநீத் மெஹ்தா கடலில் முதன்மை பொறியாளராகவும் பணியாற்றி உள்ளார். "கடற்படைக்கான பாதை என்பது வித்தியாசமானது. அதற்கென தனி தேர்வு உள்ளது. நீங்கள் தேசிய பாதுகாப்பு அகாடமியில் கலந்து கொள்ள வேண்டும். அங்கு நீங்கள் மூன்று ஆண்டுகள் தீவிரமான பயிற்சி எடுக்க வேண்டும்.வணிக கப்பல் துறை ஒரு தனியார் துறை, கடற்படை என்பது முழுவதும் அரசுத் துறை, இந்த துறை நாட்டிற்கு சேவை செய்கிறது. சம்பளங்களில் கணிசமான வேறுபாடு உள்ளது," என்று தெரிவித்தார். வணிக கப்பல் துறையில் பல்வேறு வேலைகள் உள்ளன. வழிநடத்தல் துறை அல்லது டெக் துறை (Navigation Department or Deck Department): இந்த துறைக்குள் நுழைய கடற்சார் அறிவியலில் பட்டப்படிப்பு அல்லது பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். இதன் பணி கடல்நிலைகளைப் புரிந்து கொண்டு கப்பலை பாதுகாப்பாக வழிநடத்திச் செல்வது ஆகும். இதில் டெக் கேடட், மூன்றாம் அதிகாரி, இரண்டாம் அதிகாரி மற்றும் கேப்டன் எனப் பல்வேறு நிலைகள் உள்ளன. என்ஜின் துறை (கடற்சார் பொறியியல்): வழிநடத்தல் துறை போலவே கப்பலின் என்ஜின், இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு பொறுப்பான துறை ஆகும். இந்தப் பணிக்கு கடற்சார் பொறியியலில் பி.டெக் அல்லது பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். கடற்சார் பொறியியல் படிப்பிற்கு இந்திய கடற்சார் பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவு தேர்வு மூலம் சேர்க்கை நடைபெறும். கூடுதலாக பட்டதாரி கடற்சார் பொறியியல் என்கிற 1 வருட சிறப்பு பட்டயபடிப்பும் உள்ளது. ஜூனியர் பொறியாளராக இணைந்து அடுத்தடுத்து நான்காம் நிலை பொறியாளர், மூன்றாம் நிலை பொறியாளர், இரண்டாம் நிலை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் வரை உயரலாம். மின்-தொழில்நுட்ப அதிகாரி (இடிஓ): வணிக கப்பலின் என்ஜின் துறையில் வேலை செய்யும் இவர் சென்சார் மற்றும் எச்சரிக்கை அமைப்புகளைக் கண்காணிப்பதற்கு பொறுப்பானவர். இதற்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் துறைகளில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு டிஜி ஷிப்பிங் அங்கீகாரம் பெற்ற இடிஓ படிப்பும் முடித்திருக்க வேண்டும். ஜிபி ரேடிங் (உதவிக் குழு): இதில் அதிகாரி நிலையில் எந்தப் பணியும் கிடையாது. ஆனால் கப்பல் மற்றும் குழுவினரை பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கலாம். இதற்கு 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. வயது 17 முதல் 25-ற்குள் இருக்க வேண்டும். 10வது அல்லது 12வது வகுப்பு முடித்த பிறகு ஆறு மாத ஜிபி ரேடிங் படிப்பு ஒன்றை முடித்தால் போதும். யாருக்கானது? பிரதிக் திவாரி தற்போது ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில் மூத்த மேலாளராக உள்ளார். 2006-ஆம் ஆண்டு அவர் 12-ஆம் வகுப்பை முடித்தபோது மற்ற மாணவர்களைப் போல அவருக்கு என்ன படிப்பதென்று தெரியவில்லை. "என் குடும்பத்தினர் நான் ஐடி அல்லது கணிணி அறிவியல் படிக்க வேண்டும் என விரும்பினர். நான் வேறு ஏதாவது வித்தியாசமாக படிக்க வேண்டும் என நினைத்தேன். அப்போது வணிக கப்பல் பற்றி எனக்குத் தெரியாது. அப்போது வழிகாட்டுதல்களும் இல்லை என்பதால் முடிவு எடுப்பது கடினமாக இருந்தது. நான் கடற்சார் பொறியியல் படிக்க முடிவு செய்தேன். நான்கு ஆண்டு படிப்பு முடித்த பிறகு கடற்சார் பொறியாளராக எனது பயணம் தொடங்கியது," என்கிறார் பிரதிக் திவாரி. இந்தப் பயணம் எளிதானது இல்லை என்றும் அவர் குறிப்பிடும் அவர் இது யாருக்கு உகந்தது என்பதையும் பட்டியலிடுகிறார். பொறியியல், இயந்திரங்கள், நேவிகேஷன் அமைப்புகள் போன்றவற்றில் விருப்பம் கொண்டவர்கள். வீட்டை விட்டு நீண்ட காலம் விலகி இருக்கக்கூடியவர்கள் மிகவும் ஒழுக்கம் நிறைந்த சூழலில் பொறுப்புடன் வேலை பார்க்கக்கூடியவர்கள் உடலளவிலும் மனதளவிலும் உறுதியுடன் இருப்பவர்கள் பயணத்திலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலை பார்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர்கள் வணிக கப்பல் வேலை பல சவால்களைக் கொண்டது என்கிறார் பிரநீத் மெஹ்தா. "உதாரணமாக ஆறு மாதங்கள் கடலில் செலவழிக்க வேண்டும். வீட்டை விட்டும் குடும்பத்தை விட்டும் இவ்வளவு நீண்ட காலம் விலகி இருப்பது தனிமை மற்றும் தீவிர மன அழுத்தத்தை உருவாக்கலாம். எந்த நேரத்திலும் உடலளவிலும் மனதளவிலும் தயாராக இருப்பதும் கடினமான ஒழுக்கத்தை கடைபிடிப்பதும் அவசியமான பணி இது," என்கிறார். மேலும் அவர், "சமீப நாட்களில் வேலைகளும் அரிதாகி வருகிறது. பலரும் அதிகம் போட்டி உள்ள துறைகளுக்கே செல்கின்றனர். மாறாக தொடர்ந்து அதிகரித்து வரும் உலக வர்த்தகம் மற்றும் விநியோகத்தால் வணிக கப்பல் துறை அடுத்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சியடையும். எனவே கடற்சார் படிப்புகளை தேர்வு செய்வதற்கு உகந்த தருணம் இது. இங்கே போட்டி குறைவு, சம்பளமும் அதிகம்." எனத் தெரிவித்தார். படிப்புகள் என்னென்ன? பட மூலாதாரம்,@IMU_HQ கடற்சார் அறிவியல் பட்டயபடிப்பு (டிஎன்எஸ்) - 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு டெக் துறையில் சேர்வதற்கான படிப்பு. கடற்சார் அறிவியலில் பி.எஸ்சி - டெக் துறையில் சேர்வதற்கான 3 ஆண்டு படிப்பு கடற்சார் பொறியியலில் பி.டெக் - என்ஜின் துறையில் சேர்வதற்கான 4 ஆண்டு படிப்பு பட்டதாரி கடற்சார் பொறியியல்: நீங்கள் 12-ஆம் வகுப்பு முடித்த பிறகு மெக்கானிக்கல் துறையில் பி.டெக் படித்திருந்தால் இந்த 8-12 மாத படிப்பை முடித்து என்ஜின் துறையில் சேரலாம். மின்-தொழில்நுட்ப அதிகாரி (எடிஒ) - 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு மின்னணுவியல், மின்னது-தொடர்பியல் துறைகளில் பி.டெக் முடித்திருந்தால் நீங்கள் 4 மாத படிப்பு ஒன்றை முடித்து என்ஜின் துறையில் சேரலாம். ஜிபி ரேடிங்: டெக் மற்றும் என்ஜின் துறைகளில் சேர்வதற்கான 6 மாத படிப்பு இது. யார் சேரலாம்? பட மூலாதாரம்,@IMU_HQ நீங்கள் 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் 60% மதிப்பெண் மற்றும் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்ணும் பெற்றிருந்தால் வணிக கப்பல் துறையில் எளிதாக நுழையலாம். பார்வை திறன் 6/6 என இருக்க வேண்டும். இந்தியாவில் வணிக கப்பல் துறை படிப்புகளுக்கான ஒரே பல்கலைக்கழகமாக இந்திய கடற்சார் பல்கலைக்கழகம் (ஐஎம்யூ) உள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கடற்சார் அறிவியலில் பி.எஸ்சி அல்லது கடற்சார் பொறியியலில் பி.டெக் படிப்புகளில் சேரலாம். இது தொடர்பாக கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அதற்கான பதில்களை தெரிந்து கொள்ளலாம். 12-ஆம் வகுப்பில் அறிவியல் பாடம் படிக்கவில்லை என்றால் ஜிபி ரேடிங் மூலமாகவும் வணிக கப்பல் துறையில் நுழையலாம், ஆனால் அதிகாரி ஆக முடியாது. இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு 17 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். வளர்ச்சி மற்றும் சம்பளம் எப்படி இருக்கும்? பட மூலாதாரம்,@IMU_HQ வணிக கப்பல் துறையில் இளம் வயதிலே நல்ல சம்பளம் பெற முடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதில் போட்டியும் குறைவு, கடந்த ஆண்டு ஐஎம்யூ நுழைவுத் தேர்வில் 40,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவு தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொள்வார்கள். ஒரு கேடட் (Cadet) ஆக சேர்ந்தால் ஆரம்ப சம்பளம் மாதத்திற்கு சுமார் 30,000 ரூபாய் இருக்கும் என்கிறார் கேப்டன் சந்திரசேகர். நான்காண்டு படிப்பு முடித்து ஒருவர் அதிகாரியானால் 45,000 - 90,000 வரை சம்பளம் பெறலாம். வணிக கப்பல் துறையில் மூன்றாம் நிலை அதிகாரியில் இருந்து இரண்டாம் நிலை அதிகாரி ஆக டிஜி ஷிப்பிங் நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது திறன் சான்றிதழ் (சிஒசி) என அழைக்கப்படுகிறது. ஆனால் இது பதவி உயர்வை உறுதி செய்யாது. பதிவு உயர்விற்கான ஒரு தகுதி மட்டுமே. முதன்மை பொறியாளர் மற்றும் கேப்டனின் சம்பளம் மாதத்திற்கு 8 லட்சம் முதல் 15 லட்சம் வரை இருக்கலாம் என்கிறார் பிரதிக். எனினும் இது ஒருவரின் அனுபவம் மற்றும் வேலை பார்க்கும் கப்பலைப் பொருத்து மாறுபடும். உதாரணமாக மற்ற சரக்கு கப்பல்களைவிடவும், எண்ணெய் கப்பல்களில் வேலை பார்ப்பவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும். எங்கு படிக்கலாம்? பட மூலாதாரம்,IMU கடற்சார் படிப்புகளில் அனைத்து கல்வி நிலையங்களிலும் வழங்கப்படுவதில்லை. மாறாக இந்திய கடற்சார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அல்லது டிஜி ஷிப்பிங் அங்கீகரித்த குறிப்பிட்ட கல்வி நிலையங்கள் இதற்காக உள்ளன. இந்தியாவில் சுமார் 200 கடற்சார் கல்வி நிலையங்கள் உள்ளன. மத்திய பல்கலைக்கழகமான ஐஎம்யூவின் தலைமையிடம் கொல்கத்தாவிலும் அதன் வளாகங்கள் சென்னை, மும்பை, விசாகப்பட்டனம் மற்றும் கொச்சியிலும் உள்ளன. இங்கு கடற்சார் பொறியியலில் பி.டெக், கடற்சார் அறிவியலில் பி.எஸ்சி, ஜிஎம்இ பட்டயபடிப்பு, இடிஒ படிப்பு மற்றும் கடற்சார் மேலாண்மையில் முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை போக சென்னையில் உள்ள கடற்சார் கல்வி மற்றும் பயிற்சிக்கான அகாடமி மற்றும் புனேவில் உள்ள டொலானி கடற்சார் நிறுவனத்திலும் கடற்சார் படிப்புகளை மேற்கொள்ளலாம். ஜிபி ரேடிங், உதவிக் குழு மற்றும் கடலுக்குச் செல்வதற்கு முந்தைய பயிற்சி போன்றவற்றை பெற வேண்டுமென்றால் அதற்கென சில கல்வி நிலையங்களும் உள்ளன. ஆங்லோ ஈஸ்டர்ன் கடற்சார் அகாடமி (கொச்சி) தென் இந்தியா கடற்சார் அகாடமி (சென்னை) கடற்சார் பொறியியல் மற்றும் பயிற்சிக்கான லயோலா இன்ஸ்டிடியூட் (சென்னை) சர்வதேச கடற்சார் அகாடமி (நொய்டா) அறிவியல் கடற்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் (கொல்கத்தா) கட்டணங்களைப் பொருத்தவரை கடற்சார் பொறியியல் மற்றும் கடற்சார் அறிவியல் படிப்புகளுக்கு ஐஎம்யூவில் ஆண்டு ஒன்றுக்கு 2.25 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை ஆகிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் இவை வேறுபடலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clywl5z347jo