Everything posted by ஏராளன்
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண தெரிவு அணியில் பாகிஸ்தான் விக்கெட் காப்பாளர் சிட்ரா நவாஸ் 04 Nov, 2025 | 08:54 PM (நெவில் அன்தனி) இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்து முடிந்த 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, விக்கெட் காப்பு ஆகியவற்றில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய 11 வீராங்கனைகள் உலகக் கிண்ண தெரிவு அணியில் பெயரிடப்பட்டுள்ளனர். தென் ஆபிரிக்க அணித் தலைவி லோரா வுல்வார்டை தலைவியாகக் கொண்ட உலகக் கிண்ண தெரிவு அணியில் பாகிஸ்தான் வீராங்கனை சிட்ரா நவாஸ் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் விக்கெட் காப்பாளர் நிலையில் சிட்ரா நவாஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தெரிவு அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவர் 4 பிடிகளை எடுத்ததுடன் 4 ஸ்டம்ப்களை செய்துள்ளார். கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோரின் மிகவும் கடினமான பிடியை சிட்ரா இடப்புறமாக தாவி எடுத்த விதமும் அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் கிம் கார்த்தை மின்னல் வெகத்தில் ஸ்டம்ப் செய்த விதமும் அனைவரையும் பிரமிக்கவைத்தது. அவரை விட உலகக் கிண்ண தெரிவு அணியில் உலக சம்பியனான இந்திய அணியிலிருந்து மூவரும் இரண்டாம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்க அணியிலிருந்து மூவரும் இங்கிலாந்து அணியிலிருந்து ஒருவரும் பதில் விராங்கனை ஒருவரும் இடம்பெறுகின்றனர். உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றவர் லோரா வுல்வார்ட் ஆவார். அவர் 2 சதங்கள் உட்பட 571 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 22 விக்கெட்களைக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். அவர் துடுப்பாட்டத்திலும் 3 அரைச் சதங்களுடன் 215 ஓட்டங்களைப் பெற்றதால் மகளிர் உலகக் கிண்ண தொடர் நாயகி விருது அவருக்கு வழங்கப்பட்டது. துடுப்பாட்ட வரிசையில் அந்தந்த இலக்கங்களில் பிரகாசித்தவர்களில் அதிசிறந்தவர்களே உலகக் கிண்ண தெரிவு அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சகலதுறை வீராங்கனைகளாவர். உலகக் கிண்ண தெரிவு அணி (துடுப்பாட்ட வரிசை பிரகாரம்) ஸ்ம்ரித்தி மந்தனா (434 ஓட்டங்கள்), லோரா வுல்வார்ட் (571 ஓட்டங்கள்), ஜெமிமா ரொட்றிக்ஸ் (292 ஓட்டங்கள்), மாரிஸ்ஆன் கெப் (208 ஓட்டங்கள், 12 விக்கெட்கள்), ஏஷ்லி கார்ட்னர் (328 ஓட்டங்கள், 7 விக்கெட்கள்), தீப்தி ஷர்மா (215 ஓட்டங்கள், 22 விக்கெட்கள்), அனாபெல் சதர்லண்ட் (117 ஓட்டங்கள், 17 விக்கெட்கள்), நாடின் டி க்ளார்க் (208 ஓட்டங்கள்), சிட்ரா நவாஸ் (4 பிடிகள், 4 ஸ்டம்ப்கள்), அலானா கிங் (13 விக்கெட்கள், 59 ஓட்டங்கள்), சொஃபி எக்லஸ்டோன் (13 விக்கெட்கள்) 12ஆம் இலக்க வீராங்கனை: நெட் சிவர் - ப்றன்ட் (262 ஓட்டங்கள், 9 விக்கெட்கள்) https://www.virakesari.lk/article/229515
-
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கான சேவை; நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லை - அரசாங்கம் விளக்கம்
04 Nov, 2025 | 04:54 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் எமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது. திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தனக்கான சேவை நீடிப்பு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 சந்தர்ப்பங்களில் கடிதம் அனுப்பியதாகவும், அவற்றில் ஒன்றுக்கேனும் பதில் கிடைக்கவில்லை என்றும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கவலை வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டது. அவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது சேவைகள் தொடர்பில் சமூகத்தில் மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது. இவரைப் போன்று பல அரச அதிகாரிகள் காணப்படுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் சேவை நீடிப்புக்கள் வழங்கப்படும் போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் அடுத்தடுத்த நிலைகளுக்கு பதவியுயர்வு பெற வேண்டியவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக் கூடும். அவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கலாம். மாறாக திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருக்கவில்லை. இது வழமையான நடைமுறையாகும். சில துறைகளில் சேவை நீடிப்புக்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அங்கு பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களுக்கு பொறுத்தமானவர்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே தான் அங்கு ஓய்வு பெறவிருந்த அதிகாரிகளுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருக்கும். எனவே முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனது சட்டத்துறைசார் சேவை மீது என்றும் எமக்கு மதிப்பும் கௌரவமும் காணப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/229482
-
போதைப்பொருள் மாபியாக்கள், குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் - அமைச்சர் சந்திரசேகர்
சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்; வடக்கு மண்ணிலிருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் - அமைச்சர் சந்திரசேகர் 04 Nov, 2025 | 08:19 PM போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் இணைந்து நடத்திய நடமாடும் சேவை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்றது. இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் சத்தியசோதி, நகர சபை தவிசாளர், பிரதேச சபை தவிசாளர், அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு அழைப்பு விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “போதைப்பொருள் விற்பனையாளர்கள், கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் வாள்வெட்டு குழுவினரால் யாழ். மாவட்டம் சீரழிந்து வருகின்றது. எனவே, இவற்றுக்கு முடிவு கட்டி, சுமூக நிலைமையை தோற்று விக்குமாறு யாழ். மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது போதைப்பொருள் கும்பல் மற்றும் பாதாள குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகின்றது. போதைப்பொருளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு பின்னணியில் கறுப்பு நிர்வாக பொறிமுறையொன்றே உள்ளது. இதற்கு உதவும் சில நபர்கள் எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கின்றனர். இதன் பின்னணியில் கறுப்பு பணம் புகுந்து விளையாடுகின்றது. இந்நிலைமையை கண்டும், காணாததுபோல் இருக்க முடியாது. அது எமது இளைய தலைமுறையினருக்கு இழைக்கும் பெரும் துரோகமாகும். எனவே, யுகத்துக்கு முடிவு கட்டப்படும். மக்களால் சட்டப்பூர்வமாக செயற்படும் அரசாங்கம் தான் நாட்டை ஆள வேண்டும். கறுப்பு உலகத்தால் நிர்வாகத்தை முன்னெடுக்க இடமளிக்க முடியாது. மக்களுக்காக செயலாற்றுவதே எமது அரசாங்கத்தின் நோக்கம். ஊழல், மோசடிகளற்ற தூய நிர்வாகத்தை நோக்கிய பயணத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அரச ஊழியர்களுக்குரிய அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். மக்களுக்கு தகவல் தெரியும். அதனை உரிய தரப்பினருக்கு அறிவியுங்கள். எதற்கும் அஞ்சவேண்டாம். இளைஞர்களே முன்வாருங்கள், உங்களுக்கு பின்னால் அரசாங்கம் நிற்கும். சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம்” என்றார். https://www.virakesari.lk/article/229511
-
இலங்கையில் நிழலுலக குழுக்களிடம் ராணுவ துப்பாக்கிகள் சென்றது எப்படி?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, (சித்தரிப்புப்படம்) கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் அண்மைக் காலமாக துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள், நிழலுலக செயற்பாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களை மையப்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி, இந்த ஆண்டில் (2025) இதுவரையான காலம் வரை 105 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அரசு குற்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளன. இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், 58 பேர் காயமடைந்துள்ளனர். அரசியல் மற்றும் நிழலுக நபர்களை குறிவைக்கும் துப்பாக்கிகள் நிழலுலக செயல்பாடுகளில் ஈடுபடுவோரை இலக்கு வைத்து அண்மை காலமாக அதிகளவான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருந்தன என்கிறது காவல்துறை. இதில் பிரபல நிழலுலக தலைவர் கனேமுல்ல சஞ்ஜீவ என அழைக்கப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்னவின் கொலை பேசு பொருளாக மாறியது. கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்ற விசாரணை கூண்டில் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19-ஆம் தேதி கனேமுல்ல சஞ்ஜீவ கொலை செய்யப்பட்டார். வழக்கறிஞர் வேடமிட்டு வந்திருந்த துப்பாக்கித்தாரி, இந்தக் கொலையை மேற்கொண்டு, நீதிமன்ற வளாகத்தை விட்டு தப்பியோடினார். சந்தேக நபரை போலீஸார், 8 மணிநேரத்தில் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக போலீஸார் சுட்டிக்காட்டும் இஷாரா செவ்வந்தி என்ற பெண், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டார். பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA FB படக்குறிப்பு, பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மாத்தறை வரலாற்று சிறப்பு மிக்க தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக மார்ச் 21-ஆம் தேதி நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்தது. பௌத்த மக்களின் புனித ஆலயத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோக சம்பவமும் அதிகளவில் பேசப்பட்ட ஒரு சம்பவமாக பதிவாகியிருந்தது. இதேவேளை, வெலிகம பிரதேச சபையின் தவிசாளராக கடமையாற்றிய லசந்த விக்ரமசேகர துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த 22-ஆம் தேதி உயிரிழந்தார். வெலிகம பிரதேச சபை வளாகத்திற்குள் வந்த துப்பாக்கித்தாரிகள், பிரதேச சபையின் தவிசாளரின் அறைக்குள் சென்று துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த லசந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. லசந்த, இலங்கையின் பிரதான எதிர்கட்சியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவாகியிருந்தார். உயிரிழந்த லசந்த விக்ரமசேகர, "நிழலுலக செயற்பாடுகளில் ஈடுபட்ட ஒருவர்" என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ''கடந்த காலங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களின் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு எந்த வித அச்சுறுத்தலும் கிடையாது. வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர என்ற வெலிகம லசா மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் நிழலுலக குற்றவாளி. மாத்தறை, குருநாகல் போன்ற மேல் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழக்கப்பட்டுள்ளது. நிழலுலக செயற்பாடுகளும் அவர் தொடர்புடையவர்.'' என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார். பட மூலாதாரம், pmd sri lanka ராணுவ ஆயுதங்கள் பயன்பாடு நாட்டில் இடம் பெறுகின்ற துப்பாக்கி பிரயோகங்கள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாகவே காணப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக முழு நாட்டையும் ஒன்றிணைக்கும், தேசிய செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 30-ஆம் தேதி கொழும்பில் இடம்பெற்ற போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டிருந்தார். ''கருப்புப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வர்த்தகமாக போதைப்பொருள் மாறியுள்ளது. அதனால் அவர்களிடையே சந்தையை பங்கு போடுவதில் மோதல் காணப்படுகிறது. ஒவ்வொரு குழுக்களுக்கிடையில் துப்பாக்கிச் சூடு நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதேச எல்லைகளுக்கு மற்றைய தரப்பு நுழைய முடியாது. போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாகவே இந்த கொலைகள் நடைபெறுகின்றன. பொதுச் சமூகத்தின் பாதுகாப்பிற்காவே அரச பொறிமுறையொன்று உள்ளது. ஆனால் அவர்களிடமுள்ள பண பலத்தினால் அரச பொறிமுறை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இனிமேலும் இதனை மறைத்து இந்தப் பிரச்னைக்கு முகங்கொடுக்க முடியாது." என ஜனாதிபதி கூறினார். ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் குழுக்களிடமும் இருப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டினார். "அரசிடம் இருக்க வேண்டிய ஆயுதங்கள் எவ்வாறு அவர்கள் கைகளுக்குச் சென்றது? சில ராணுவ முகாங்களில் இருந்து 73 ரீ56 ரக துப்பாக்கிகள் அவர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. அதில் சுமார் 35 துப்பாக்கிகள் மீளப் பெறப்பட்டுள்ளன. அதற்குப் பயன்படுத்தும் ரவைகள் பிடிபட்டுள்ளன. ராணுவ கேர்னல் ஒருவர்தான் இவற்றை வழங்கியுள்ளார். அதற்காக அவரின் வங்கிக் கணக்கிற்கு பணம் கிடைத்துள்ளது. ஒரு பொலிஸ் அதிகாரி தனது ஆயுதத்தை விற்பனை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அந்த ஆயுதக் குழுக்களிடமுள்ள பண பலத்தினால் இவை நிகழ்ந்துள்ளன.'' என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். பட மூலாதாரம், pmd sri lanka நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய பின்னர், அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. "பாதுகாப்பு இல்லாததால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மாஅதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்," என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்துள்ளார். எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. போலீஸ் மாஅதிபர் பங்கு பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக எதிர்கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lpvrr48dyo
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் 04 Nov, 2025 | 08:22 PM தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் இடம்பெற்று வரும் இந்த போராட்டம் இன்று ஆரம்பமாகி நாளை புதன்கிழமை (5) மாலை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229507
-
யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்!
மாவீரர் தினத்தை முன்னிட்டு மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுப்பு 04 Nov, 2025 | 08:23 PM தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் தின நினைவேந்தல் எதிர்வரும் 27ஆம் திகதி வடக்கு கிழக்கு மற்றும் தமிழர் தாயக பகுதிகளில் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப் படவுள்ளது. அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் நினைவு நிகழ்வுக்கு தயாராக ஆரம்பித்துள்ளது. இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணி குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த ஆரம்ப நாள் நிகழ்வு மற்றும் சிரமதான பணியில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், துயிலும் இல்ல பணி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/229506
-
கொழும்பில் பனை உற்பத்தியாளர்களுக்கான 'கற்பகம்' விற்பனை நிலையம் திறப்பு
04 Nov, 2025 | 08:25 PM கொழும்பில் பனை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் "கற்பகம்" கொழும்பு மாவட்ட விற்பனை நிலையம், செவ்வாய்க்கிழமை (04) கொழும்பு 06, வெள்ளவத்தை, பொஸ்வெல் பிளேஸில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பினால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. இந்த விற்பனை நிலையம், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் செயல்படும் பனை அபிவிருத்தி மற்றும் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமானது. வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பனை உற்பத்தியாளர்களின் பல்வேறு உணவு வகைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில், பனை அபிவிருத்தி மற்றும் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ர.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வாய்ப்பை முன்னிட்டு எதிர்காலத்தில் மலையகம் மற்றும் பிரபலமான சுற்றுலா தளங்களிலும் இதே போன்ற 'கற்பகம்' விற்பனை நிலையங்களைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/229502
-
யாழில் 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு
யாழில் 950 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு 04 Nov, 2025 | 04:56 PM யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட 950 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு செவ்வாய்க்கிழமை (04) அழிக்கப்பட்டன. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் மற்றும் மேலதிக நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் சான்று பொருட்களாக நீதிமன்றில் வைக்கப்பட்டிருந்தன. அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தொடர்ந்து 950 கிலோ கஞ்சாவையும் தீயிட்டு அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கோம்பயன் மணல் மயான மின் தகன மேடையில் கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு முற்றாக அழிக்கப்பட்டன. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதபதி மற்றும், மேலதிக நீதவான் ஆகிய இருவரின் நேரடி கண்காணிப்பில் அவை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229471
-
கோவை மாணவி பாலியல் பலாத்காரம்.. 3 பேரை சுட்டு பிடித்த காவல்துறை
Advance Booking- ல Rape பண்ணிட்டு இருக்கீங்க | Kadhal Sadugudu | Vikram | Vivek முதல் மூன்று நிமிடம் 5 விநாடிகளில் நீங்கள் குறிப்பிட்ட தண்டனை மைனருக்கு வழங்கப்பட்டது.
-
மாதவிடாய் பற்றி பிள்ளைகளிடம் பெற்றோர் பேசுவது அவசியம்
மாதவிடாய் பற்றி மகள்களிடம் அப்பாக்களும் பேசுவது அவசியம் - ஏன் தெரியுமா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் யாஸ்மின் ரூஃபோ பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது பதினாறு வயதாகும் ஹெலனுக்கு முதல் மாதவிடாய் ஏற்பட்ட போது, அவருடைய தந்தை தான் அவருக்கு உதவினார். அப்போது, அவர் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார். இளம் வயதினருடன் மாதவிடாய் பற்றிப் பேசுவது சங்கடமாக இருக்கலாம். அதிலும் அதை அனுபவிக்காதவர்கள் அதைப் பற்றி பேசும் போது சங்கடமாக இருக்கலாம். இருப்பினும், மாதவிடாய் பற்றி வெளிப்படையாகப் பேசிய தனது அப்பா, இது வழக்கமாக எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சொன்னது அந்த சமயத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியாக இருந்தது என்று ஹெலன் கூறுகிறார். "அந்த உணர்வு எப்படியிருக்கும் என்று அப்பாக்களால் சொல்ல முடியாது என்பது உண்மை என்றாலும், அது உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் சொல்ல முடியும், அதைப் பற்றி பேசவும், ஆலோசனை வழங்கவும் முடியும்" என்று அவர் கூறுகிறார். இருப்பினும் மாதவிடாய் பற்றிப் பேசுவது பலருக்கும் சங்கடம் அளிக்கிறது என்பதால், பெண் குழந்தைகளிடம் மாதவிடாய் தொடர்பான விஷயத்தை கையாள்வது பெரும்பாலும் அம்மாக்களாகவே இருக்கின்றனர். பட மூலாதாரம், Getty Images மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேசக்கூடாது என்று நினைப்பதை கேள்வி எழுப்பும் அப்பாக்களில், ஹெலனின் தந்தை ஜான் ஆடம்ஸ்-உம் ஒருவர். இப்போது 16 மற்றும் 12 வயதுடைய மகள்கள் இருவரும் குழந்தைகளாக இருந்த போது வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரித்து வந்தார் ஜான். அப்போது, தங்கள் குழந்தைகளிடம் மாதவிடாய் பற்றிப் பேசுவதற்கு மிகவும் சங்கடமாக உணர்ந்ததாக வேறு சில பெற்றோர்கள் கூறியதை அவர் கேட்டார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எஸ்.ஐ.ஆர் பற்றிய முழு விவரம் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த இந்தியா 2 வாரங்களில் சாம்பியன் - 3 காரணங்கள் இதுவா? இந்தியாவில் இன்றும் தொடரும் 'தேவதாசி' முறை - அந்த பெண்கள் என்ன செய்கிறார்கள்? End of அதிகம் படிக்கப்பட்டது "இதைப் பற்றி பள்ளியில் சொல்லிக் கொடுப்பார்கள் என்று அவர்கள் காத்திருந்தார்கள், ஆனால் இதைப் பற்றி நமது குழந்தைகளிடம் பேசுவது ஆசிரியர்களின் வேலை என்று எனக்குத் தோன்றவில்லை." மாதவிடாய் சமயத்தில் எப்படியிருக்கும், அனுபவிக்கக் கூடிய வலியின் அளவு மற்றும் அப்போது தேவைப்படும் பல்வேறு சுகாதாரப் பொருட்கள் குறித்து தனது மகள்களுடன் ஜான் பேசினார். "ஆண்கள் இந்த விஷயத்தைப் பற்றி சரியாக தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் மாதவிடாயைப் பற்றி பேசவில்லை, நடைமுறை விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள்," என்று அவர் பிபிசி ரேடியோ 5 லைவ்வின் மாத நேர நிகழ்ச்சியில் பேசும் போது தெரிவித்தார். தற்போது கல்வித்துறையில் பணிபுரியும் ஜான், தான் நிபுணர் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். இருப்பினும் அவர் தனது மனைவி மற்றும் தாயிடம் இது குறித்துப் பேசி தெரிந்து கொண்டார், மேலும் புத்தகங்கள் மற்றும் ஆன்லைன் ஆதாரங்களைப் பயன்படுத்தி மகள்களுக்கு வழிகாட்டினார். பட மூலாதாரம், Getty Images அவரைப் பொறுத்தவரை மாதவிடாய் என்பது சங்கடம் அல்ல, உடல்நலம் சார்ந்த விஷயம். அப்பாக்கள் மாதவிடாய் பற்றி குழந்தைகளுடன் பேசுவது சரியா என்ற எண்ணத்திற்கு தற்போதும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. "நீங்கள், உங்கள் குழந்தைகளின் அருகில் இருப்பதும், அணுகக் கூடியவர்களாக இருப்பதும்" முக்கியம் என்று ஜான் கூறுகிறார். மனைவியை இழந்த ராய்க்கு வேறு வழியில்லை. அவரது மனைவி புற்றுநோயால் இறந்த பிறகு, அவர் தனது மகளை தனியாக வளர்த்து வருகிறார். அந்த சமயத்தில் எப்படி இருக்கும் என்பது பற்றிய சில புத்தகங்களை மகளுடன் சேர்ந்து படிப்பதன் மூலம், ஒன்பது வயதாக இருந்த மகளிடம் மாதவிடாய் பற்றிப் பேச ஆரம்பித்தார். "ஆரம்பத்தில் அவளுக்கு சிறிது சங்கடமாக இருந்தாலும், நாங்கள் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசினோம்." பின்னர், அவர் தனது மகளுக்கு செய்முறை விளக்கமும் செய்துக் காண்பித்தார். ஒரு பேண்டை எடுத்து, அதில் சானிடரி நாப்கினை எப்படி ஒட்ட வேண்டும் என்பதை செய்து காட்டி, அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்குமாறு பரிந்துரைத்தார். "என்ன நடக்கிறது என்று தெரியாத போது தான் விஷயங்கள் பயமாக இருக்கும். என்னுடைய மகளை யதார்த்த வாழ்க்கைக்குத் தயார்படுத்துகிறேன், அதில் மாதவிடாய், செக்ஸ், காதலர்கள், உறவுகள் ஆகியவையும் அடங்கும். இது எல்லாம் கடினமானது, ஆனால் எதையும் மறைக்க முடியாது." பல பெண்களுக்கு, அவர்களின் முதல் மாதவிடாய் தொடர்பான நினைவுகள் மிகவும் குறைவாகவே இருக்கும். 'மாதவிடாய்க் கால வறுமை'(போதுமான மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள், கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் இல்லாத நிலை) நிறுத்துவதற்காக பாடுபடும் லாப நோக்கற்ற குழுவான Hey Girls-இல் பணிபுரியும் ஹன்னா ரூட்லெட்ஜ், தான் எதிர்கொண்ட சங்கடமான நிலையை நினைத்துப் பார்க்கிறார். "நான் மிகவும் சிறியவளாக இருந்தபோதே மாதவிடாய் தொடங்கிவிட்டது, அப்போது எனக்கு 10 வயது" என்கிறார் அவர். "நான் படித்த பள்ளியில் எந்தவிதமான வசதியும் கிடையாது, குப்பைத் தொட்டி கூட இல்லை." பட மூலாதாரம், Hannah Routledge படக்குறிப்பு, அப்பாக்களுக்கு மாதவிடாய் பற்றிப் பேச உதவும் ஆதாரங்களையும் வழிகாட்டுதலையும் Pads for Dads வழங்குகிறது Hey Girls அமைப்பு, 2019-ஆம் ஆண்டில் Pads for Dads என்ற தனது பிரசாரத்தைத் தொடங்கியது, மகள்களிடம் மாதவிடாய் தொடர்பாக எப்படி பேசத் தொடங்குவது என்பதை தந்தைகள் புரிந்துக் கொள்வதற்கான இலவச வழிகாட்டுதலையும் வழங்குகிறது. "அப்பாக்கள் மற்றும் பெற்றோருக்கு இருக்கும் பொதுவான மாதவிடாய் குறித்த தவறான நம்பிக்கைகளை உடைக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று அவர் விளக்குகிறார். "பெரிய உரையாடலுக்காக காத்திருக்க வேண்டாம், சிறிய அளவிலான பல உரையாடல்கள் தேவை. அத்துடன், வீட்டில் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் இருப்பதை உறுதிசெய்வது, ஆதரவாக இருப்பது பற்றியது" என்று ஹன்னா ரூட்லெட்ஜ் கூறுகிறார். பெற்றோர்கள் தங்கள் மகன்களிடம் மாதவிடாய் பற்றிப் பேசி அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம் என்று அவர் கூறுகிறார். பெண்கள் சுகாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற பொது மருத்துவர் நிகாத் ஆரிஃப், தனது மகனிடம் மாதவிடாய் பற்றி பேசத் தொடங்கிய தருணத்தைப் பகிர்ந்துக் கொள்கிறார். தனது குளியலறையில் இருந்த டாம்பான்களில் ஒன்றைப் பார்த்த மகன் அதைப் பற்றி கேட்டபோது, "'ரத்தம் கசிவதால் இதைப் பயன்படுத்துகிறேன்' என்று சொன்னேன்". ஆரம்பத்தில், அவனுக்கு இது பதற்றத்தை ஏற்படுத்தியது என்றும், ஆனால் இது சாதாரணமானது என்றும் எல்லா பெண்களுக்கும் மாதந்தோறும் இவ்வாறு ரத்தம் கசிவது இயல்பான ஒன்று மகனுக்கு புரிய வைத்ததாக நிகாத் ஆரிஃப் கூறினார். தற்போது மக்களின் மனோபாவம் வேகமாக மாறி வருவதாக கூறும் ஹன்னா, ஒருகாலத்தில் மாதவிடாய் தொடர்பான உரையாடல்களைத் தவிர்த்திருந்த தனது தந்தையின் மாற்றத்தை கவனித்ததாகக் கூறுகிறார். இப்போது "அவரது பேத்திகளுக்கு ஏதாவது தேவைப்பட்டால் அல்லது மாதவிடாய் தொடர்பாக பேச விரும்பினால், அவர் இப்போது வெளிப்படையாக இருப்பார் என எனக்குத் தோன்றுகிறது". மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர் கிறிஸ்டின் எகேச்சி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பருவமடைதல் மற்றும் மாதவிடாய் பற்றிப் பேசுவதில் பெரும்பாலும் இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதாகக் கூறுகிறார். "ஆண் குழந்தைகளை வளர்க்கும் ஏராளமான ஒற்றைத் தாய்மார்கள் உள்ளனர். அவர்கள், பருவமடைதல், மாதவிடாய், இளமைப் பருவம் மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவு பற்றி தங்கள் மகன்களிடம் பேசுவதில்லை. "அவர்கள் இவ்வாறு பேசுவதை ஏன் நிறுத்தி வைத்திருக்கிறோம், ஏன் அவை இயல்பானதாக இல்லை?" என்று அவர் கேட்கிறார். வீட்டில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பது, சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தகவலறிந்த தந்தைகள் சிறந்த சக ஊழியர்களையும் தலைவர்களையும் உருவாக்குகிறார்கள் என்று டாக்டர் எகேச்சி நம்புகிறார். இது பணியிடத்தில் மாதவிடாய் குறித்த அவமானத்தைக் குறைக்கவும், மாதவிடாய் சமத்துவத்தை மேம்படுத்தவும் உதவும். அனைத்திற்கும் மேலாக, "தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான பிணைப்பை மேம்படுத்த இதுவொரு அருமையான வழி" என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2pd1yy4plo
-
இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது வெளிகளில் மலம் கழிப்பதாக தகவல்!
பாம்புகளுக்கு பயமில்லையா ஐயா?!
-
கோவை மாணவி பாலியல் பலாத்காரம்.. 3 பேரை சுட்டு பிடித்த காவல்துறை
கோவை பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை சுட்டுப் பிடித்தது எப்படி? படக்குறிப்பு, காவல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம் கோவையில் கல்லுாரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேரை சுட்டுப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசினார். ''குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. குற்றவாளிகள் துடியலுார் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. அவர்களை கைது செய்யச் சென்றபோது காவலர் ஒருவரைத் தாக்கியதால் அவர்களை சுட்டுப்பிடிக்க வேண்டியிருந்தது. இதில் குற்றவாளிகள் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.'' என்றார். காவல் ஆணையர் விளக்கியபடி, இவ்வழக்கில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா என்கிற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் காளீஸ்வரன், கருப்பசாமி ஆகிய இருவரும் சகோதரர்கள். மூவர் மீதும் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ''நவம்பர் 2 இரவு, இவர்கள் மூவரும் மது அருந்திவிட்டு, மறுபடியும் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு, சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது காரில் இருந்த இருவரையும் மிரட்டி, கார் கண்ணாடியை கல்லால் உடைத்து, அதன்பின் அந்த புகார்தாரரை (ஆண் நண்பர்) அரிவாளால் தாக்கி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.'' என்று காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார். "இரவு 11:20 மணிக்கு புகார்தாரர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட பலரும் சென்று அந்தப் பகுதி முழுவதும் பெண்ணைத் தேடியுள்ளனர். காலை 4 மணிக்கு, அந்தப் பெண் வெளியில் வந்தபின்பு, அவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்." என்றார் அவர். படக்குறிப்பு, துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு தாமதம் ஏன்? கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பெண்ணை மீட்க முடியாதது ஏன் என்பது குறித்து காவல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''அந்தப் பகுதி மிகவும் பரந்து விரிந்த பகுதி. எந்த விளக்குகளும் இல்லை. கேமராக்களும் இல்லை. அங்கிருந்த சில கேமராக்கள் வேலை செய்யவுமில்லை. 100 போலீசார் லைட்களை வைத்துத் தேடியும் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.'' என்றார். ''சம்பவம் நடந்த பகுதியில் சின்னதாக ஒரு சுவர் இருந்துள்ளது. அதற்குப் பின் கும்மிருட்டாக இருந்ததால் அவரைப் பார்க்க முடியாத நிலை இருந்துள்ளது.'' எனத் தெரிவித்தார். 'ரகசிய தகவல்' இவ்வழக்கிற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர், 200–300 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். அவற்றில் ஐந்தாறு கேமரா காட்சிப்பதிவுகளில் 3 பேரும் வந்ததைக் கண்டறிந்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்பு, அந்த 3 நபர்களின் நடமாட்டம் குறித்து காவல்துறைக்கு ரகசியத் தகவல் வந்ததாக காவல் ஆணையர் தெரிவித்தார். அந்தத் தகவலையும், கேமரா காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவர்கள்தான் என்று உறுதியானதாகவும் அவர் கூறினார். மூவர் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார். இவர்கள் மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் பரிசீலிக்கப்படுமென்றும் கூறினார் அவர். கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் ஆணையர் தெரிவித்தார். இவர்களுக்கு யாராவது உதவி செய்தனரா என்பது பற்றி விசாரித்து வருவதாக கூறிய காவல் ஆணையர், அவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் மற்றும் மோதிரம் ஆகியவற்றையும், திருட்டு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறினார். காவல் உதவி செயலி தமிழக அரசு, ''2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கிய காவல் உதவி செயலியை மொபைல்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால், ஆபத்தான நேரங்களில் 100க்கு போன் செய்யத் தேவையில்லை. அந்த செயலியை திறந்து அதிலுள்ள எஸ்ஓஎஸ் பட்டனை அழுத்தினாலே போதும். அதற்கும் முடியாத பட்சத்தில் 3 முறை அந்த போனை ஷேக் செய்தாலே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்று, அடுத்த சில நிமிடங்களில் அங்கே காவல் துறையினர் வந்துவிடுவர்.'' என்று காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9v1xpe947xo
-
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இடைநிறுத்த தீர்மானம்
Nov 4, 2025 - 01:36 PM எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று (03) காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குறித்த கருத்திட்டங்களில் ஒரு கருத்திட்டமான தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலைய நடவடிக்கைகள் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய கருத்திட்டங்களான 20 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் 50 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முறையே இரண்டு தனியார் நிறுவனங்களால் 2025 டிசம்பர் மற்றும் 2026 டிசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மன்னார் தீவு மக்களின் விருப்பமின்றி தொடர்ந்தும் குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென ஜனாதிபதியினால் ஏற்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, வலுசக்தி அமைச்சரால் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhkaca9501e7qplpy869fdwf
-
ரி20 கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்
ரி20 கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்; தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான் Published By: Vishnu 03 Nov, 2025 | 12:30 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கு எதிராக லாகூர் கடாபி விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பாபர் அஸாம் துடுப்பாட்ட சாதனை ஒன்றை நிலைநாட்டியதுடன் பாகிஸ்தான் 4 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் கைப்பற்றியது. அப் போட்டியில் 68 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தானின் முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம், சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்றவர் என்ற புதிய சாதனையை நிலைநாட்டினார். தனது 131ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பாபர் அஸாம் 4302 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரோஹித் ஷர்மா 159 போட்டிகளில் பெற்ற 4231 மொத்த ஓட்டங்கள் என்ற சாதனையை இதன் மூலம் பாபர் அஸாம் முறியடித்தார். இந்தியாவின் மற்றொரு முன்னாள் தலைவர் விராத் கோஹ்லி 125 போட்டிகளில் 4231 ஓட்டங்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். ரோஹித் ஷர்மா, விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 2023 ரி20 உலகக் கிண்ணத்தில் இந்தியா சம்பியனான சூட்டோடு சர்வதேச ரி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றனர். இது இவ்வாறிருக்க, இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரீஸா ஹெண்ட்றிக்ஸ் 34 ஓட்டங்களையும் கோபின் பொஷ் 30 ஓட்டங்களையும் அணித் தலைவர் டொனவன் ஃபெரெய்ரா 29 ஓட்டங்களையும் டிவோல்ட் ப்ரவிஸ் 21 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உஸ்மான் தாரிக் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஹீம் அஷ்ரப் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் பாபர் அஸாம் 68 ஓட்டங்களையும் அணித் தலைவர் சல்மான் அகா 33 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுபடுத்தினர். பந்துவீச்சில் கோபின் பொஷ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லிஸாட் வில்லியம்ஸ் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பாபர் அஸாம், தொடர்நாயகன்: பாஹீம் அஷ்ரப். இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் தென் ஆபிரிக்கா 55 ஓட்டங்களாலும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட்களாலும் வெற்றிபெற்றிருந்தன. https://www.virakesari.lk/article/229319
-
இந்தியா செலுத்திய 'பாகுபலி' ராக்கெட்டின் முக்கியத்துவம் என்ன? 4 முக்கிய அம்சங்கள்
பட மூலாதாரம், X/@isro படக்குறிப்பு, இந்தியாவிலிருந்து அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 3 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய மண்ணிலிருந்து, இது வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை சாத்தியமாக்கியது LVM3-M5 ராக்கெட். இது'பாகுபலி' ராக்கெட் என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த ராக்கெட் ஞாயிறன்று 4410 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இதுவரை வேறு நாடுகளை சார்ந்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், இனி அந்த நிலைமை இல்லை. இது இந்திய விண்வெளி துறைக்கு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன், "செயற்கைகோள் ஏவுதல் கடினமாகவும் சவாலானதாகவும் இருந்தது. வானிலை ஒத்துழைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் வெற்றியடைந்துள்ளோம்" என்று தெரிவித்தார். இந்திய கப்பற்படையின் பயன்பாட்டுக்காக ஏவப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் குறைந்தது 15 ஆண்டுகள் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். "இந்தியாவின் அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் CMS-03 ஐ விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பாராட்டுக்கள்" என்று பிரதமர் மோதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாகுபலி திரைப்பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில், " இந்தியாவுக்கு இது பெருமையான தருணம். இந்த ராக்கெட் தனது வலிமை மற்றும் பளுவின் காரணமாக பாகுபலி என்றழைக்கப்படுவதால் பாகுபலி (திரைப்பட) குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார். LVM3 ராக்கெட் சந்திரயான் -3 திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதாகும். இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவேதான் ககன்யான் திட்டத்திலும் பயன்படுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவிக்கிறது. இதற்கு முன்பு செலுத்தப்பட்ட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் எவை? இந்தியா இதற்கு முன்பு, CMS-03 செயற்கைக்கோளை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. 2018-ம் ஆண்டு ஏவப்பட்ட GSAT 11 செயற்கைக்கோள் 5,854 கிலோ எடை கொண்டது. இது தென் அமெரிக்காவில் பிரான்ஸ் நாட்டின் நேரடி அதிகாரத்தின் கீழ் இருக்கும் ஃப்ரெஞ்ச் கியானா என்ற பகுதியில் கோரோவ் என்ற இடத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து Ariane-5 VA-246 எனும் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் முக்கிய ஏவுதளங்களில் ஒன்றாகும். Geostationary orbit -ல்(புவிநிலை வட்டப்பாதை) இதை விட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்கள் வெவ்வேறு நாடுகளால் ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில : பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையத்தால் 2013-ம் ஆண்டு ஏவப்பட்ட Inmarsat-4A F4 எனும் செயற்கைக்கோள் 6469 கிலோ எடை கொண்டிருந்தது. 2012-ம் ஆண்டு ஏவப்பட்ட EchoStar XVII எனும் அமெரிக்க செயற்கைக்கோள் 6100 கிலோ எடை கொண்டிருந்தது. இருந்தபோதிலும் CMS-03 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது நான்கு காரணங்களால் இந்தியாவுக்கு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. 1. தற்சார்பு இந்தியா இந்த ராக்கெட்டை கொண்டிருப்பதன் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பிற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் குறையும். இதனால் ஏவுதல் செலவு குறையும் என்பதை தாண்டி தற்சார்பு நிலைக்கு இந்தியா செல்லும். 2013-ம் ஆண்டு GSAT 7 எனும் தகவல் தொடர்பு செயற்கைகோளை ஃப்ரெஞ்ச் கியானாவிலிருந்து இஸ்ரோ ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோளின் காலம் முடிவடைவதால் அதை அகற்றிவிட்டு, அதற்கு மாற்றாக GSAT-R எனப்படும் CMS-03 செயற்கைக்கோளை ஞாயிறன்று விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்திய கப்பற்படைக்கு பயன்படக்கூடிய தகவல்களை வழங்குவதே இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். "பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களுக்காக செலுத்தப்படும் செயற்கைக்கோளை வேறு நாட்டிலிருந்து ஏவுவதை விட இந்திய மண்ணிலிருந்தே ஏவுவது இந்தியாவின் தகவல்கள் பாதுகாக்கப்பட உதவும். எனவே, குறைவான செலவு, தற்சார்பு, பாதுகாப்பு என பல்வேறு விதங்களில் இது உதவும்" என்று பிபிசி தமிழிடம் பேசிய, மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார். அதிகபட்ச எடையை விட கூடுதல் எடையை ஏந்தி சென்றது எப்படி? LVM3 ராக்கெட் அதிகபட்சமாக 4.2 டன் (4200 கிலோ) எடையை Geosynchronous Transfer Orbit (GTO) வரையிலும், 8000 கிலோ எடையை குறைந்த புவி வட்டப் பாதை வரையிலும் ஏந்தி செல்ல முடியும். ஆனால் ஞாயிற்றுகிழமை GTO-வில் ஏவப்பட்ட CMS-03 செயற்கைக்கோள் 4410 கிலோ எடை கொண்டது. ராக்கெட்டின் அதிகபட்ச எடை திறனை விட 200 கிலோ அதிகமாக இருந்தாலும், இது எப்படி சாத்தியமானது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன்விளக்கினார். "செயற்கைக்கோளின் கூடுதல் எடையை ஏந்தி செல்லும் வகையில் ராக்கெட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதீத வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்கும் வகையில் ராக்கெட்டில் வெப்ப பாதுகாப்பு அமைப்பு இருக்கும். பொதுவாக LVM3 ராக்கெட்டில் இது 245 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இந்த முறை விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் வெப்ப பாதுகாப்பு அமைப்பின் எடை 165 கிலோ மட்டுமே. எடை குறைந்தாலும், பாதுகாப்பு குறையாதவாறு அமைய தேவையான ஆய்வுகள் செய்த பிறகே இந்த எடை முடிவு செய்யப்பட்டது. செயற்கைக்கோளை சற்று குறைந்த உயரத்தில் வட்டப் பாதையில் நிலை நிறுத்தினோம். இப்படி வேறு சில மாற்றங்களும் செய்து, இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம்" என்றார். LVM3 ராக்கெட்டின் மற்றொரு வடிவமும் தயாராகி வருகிறது என்கிறார் த வி வெங்கடேஸ்வரன். அதில் 6டன் முதல் 8 டன் வரையிலான எடையை ஏற்றிச் செல்ல முடியும். "இப்போது 4 டன் எடை திறன் கொண்ட ராக்கெட்டை 4.4 டன் வரை ஏந்தி செல்ல செய்துள்ளனர். வருங்காலத்தில் 6டன் முதல் 8 டன் வரையிலான எடையை ஏற்றிச் செல்வதற்கான ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது வந்துவிட்டால், இந்தியா எந்த நாட்டையும் நம்பியிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்ற நிலையை எட்டும்" என்கிறார் அவர். ஏனென்றால் விண்ணில் செலுத்தப்படக்கூடியவை பொதுவாக அந்த எடைக்குள்ளேயே இருக்கும் என்கிறார் முனைவர் த வி வெங்கடேஸ்வரன். " இனி வரும் காலங்களில் ஸ்மார்ட் மெட்டீரியல்களே பயன்படுத்தப்படும். அதாவது குறைந்த எடையில் அதிக திறன் கொண்ட பொருட்கள். எனவே விண்ணில் செலுத்த வேண்டியவற்றின் எடை பெரும்பாலும் அந்த வரம்புக்குள் இருக்கும்" என்றார். பட மூலாதாரம், முனைவர் த வி வெங்கடேஸ்வரன் படக்குறிப்பு, முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் 2. க்ரையோஜெனிக் என்ஜின் மறு- இயக்கம் (Cryogenic restart) க்ரையோஜெனிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ராக்கெட்டின் என்ஜினை மீண்டும் செயல்பட துவக்குவது (Cryogenic restart) முக்கியமான செயலாகும். க்ரையோஜெனிக் என்ஜின் என்பது மிக குளிர்ந்த நிலையில் திரவ ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற எரிபொருளை பயன்படுத்துவதாகும். இந்த என்ஜினை பயன்படுத்தும் ராக்கெட் ஒரு இடத்தை சென்றடைந்த பிறகு, அங்கிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல அதை மீண்டும் இயக்கத் தொடங்குவது cryogenic restart எனப்படும். இந்த தொழில்நுட்பம் விண்வெளி துறையில் இருக்கும் பிற நாடுகளால் இந்தியாவுக்கு மறுக்கப்பட்டதாகும், இதை இந்தியாவே செய்து காட்டியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் ஊடகங்களிடம் பேசினார். "செயற்கைக்கோளை நிலை நிறுத்திவிட்டு 100 விநாடிகள் கழித்து, மீண்டும் ராக்கெட்டை இயக்கினோம். இதனை நிலத்தில் பல தடவை வெற்றிகரமாக செய்து பார்த்துள்ளோம். ஆனால் முதல் முறையாக இதனை விண்வெளியில் செய்து பார்த்துள்ளோம். அது வெற்றி அடைந்துள்ளது" என்று நாராயணன் கூறினார். க்ரையோஜெனிக் மறு துவக்கம் என்பது ஒரு வாகனத்தை நிறுத்திவிட்டு, அதை மீண்டும் ஸ்டார்ட் செய்வது போல என விளக்குகிறார் த வி வெங்கடேஸ்வரன். "அப்படி மீண்டும் இயக்கும் போது சிக்கல் இல்லாமல் அதை எளிதாக இயக்க முடிகிறதா என்பதுதான் கேள்வி, அதை தான் சோதித்துப் பார்த்துள்ளனர்." என்கிறார். பட மூலாதாரம், X/@isro படக்குறிப்பு, க்ரையோஜெனிக் மறு துவக்க தொழில்நுட்பம் பல செயற்கைக்கோள்களை பல வட்டப்பாதைகளில் நிலை நிறுத்த உதவும். 3. ஒரே நேரத்தில் பல செயற்கைக்கோள்கள் இதன் மூலம் பல வட்டப் பாதைகளில், பல செயற்கைக்கோள்களை ஒரே ஏவுதலில் நிலை நிறுத்த முடியும். அதாவது எளிமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பல்வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனம் அந்த வெவ்வேறு இடங்களில் நின்று சரக்குகளை இறக்கி வைப்பது போன்றது. குறைந்த புவி வட்டப்பாதையில் (Low Earth Orbit) செயற்கைக்கோள்களை ஏந்தி செல்ல பிஎஸ்எல்வி (PSLV) ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டை கொண்டு ஏற்கெனவே பல செயற்கைக்கோள்களை ஒரே ஏவுதலில் இந்தியா செலுத்தியுள்ளது. 2017-ம் ஆண்டு PSLV-C37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை செலுத்தி, 2014-ம் ஆண்டு 37 செயற்கைக்கோள்களை செலுத்திய ரஷ்யாவின் சாதனையை முறியடித்தது இந்தியா. Geostationary orbit (புவி நிலை வட்டப்பாதை) என்பது குறைந்த புவி வட்டப் பாதையை (Low Earth Orbit) விட உயரத்தில் இருக்கும் வட்டப்பாதையகும். Geosynchronous Transfer Orbit என்பது இந்த புவி நிலை வட்டப்பாதைக்கு செல்லும் வழியில் அதற்கு முன்பு இருக்கக் கூடியதாகும். இந்தப் பாதைகளில் செயற்கைக்கோளை நிலை நிறுத்த ஜிஎஸ்எல்வி ( GSLV) ராக்கெட் தேவைப்படும். இதிலும் பல செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவுவதை சாத்தியமாக்க, க்ரையோஜெனிக் மறு துவக்கம் பயன்படும். "நான்கு டன் ஏந்தி செல்லக்கூடிய ராக்கெட்டில் 1.5 டன் எடைக்கான செயற்கைக்கோள் மட்டுமே பொருத்தப்படுகிறது என்றால், மீதமுள்ள இடத்தை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு இந்த தொழில்நுட்பம் பயன்படும்." என்று முனைவர் த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார். 4. ககன்யான் திட்டம் டிசம்பர் மாதத்தில் LVM3 ராக்கெட்டின் மற்றொரு ஏவுதல் திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்திலும் LVM3 ராக்கெட் பயன்படுத்தப்படும் என்று CMS-03 செயற்கைக்கோள் ஏவுதலின் திட்ட இயக்குநர் டி.விக்டர் ஜோசப் தெரிவிக்கிறார். மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று ஆளில்லா திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தின் கீழ் அதிக எடை கொண்டவை விண்ணில் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கும் என்பதால், தற்போதைய வெற்றி அதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது. "ககன்யான் திட்டத்தின் குறிப்பாக பிற்பகுதிகளில் இது மிகவும் உதவியாக இருக்கும்" என்று த வி வெங்கடேஸ்வரன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd67xlqxepno
-
இலங்கை கடற்படைக்கு செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு அமைப்பு பெற அமைச்சரவை அங்கீகாரம்
04 Nov, 2025 | 03:58 PM இலங்கை கடற்படைக்கு செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு கட்டமைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துடனான இறுதிப் பயனர் மற்றும் ஒப்படைத்தல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 25.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 4 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசின் நிதி மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஜப்பான் கடலோரப் பாதுகாப்புப் படையின் விசேட நிபுணத்துவ ஒத்துழைப்பின் கீழ் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் “இந்து – பசுபிக் வலயத்தின் சமுத்திரப் பாதுகாப்பு மற்றும் சமுத்திர சட்டம் ஒழுங்குகளைப் பலப்படுத்தல்” எனும் கருத்திட்டம் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படைக்கு ‘Congnyte S12’ செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு கட்டமைப்பை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு மோசமான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்தல், இல்லாதொழித்தல் மற்றும் அவ்வாறான செயல்களுக்கு குறுக்கறுத்தல் மூலம் இலங்கை கடற்படையின் சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், அதன்மூலம் பிராந்திய ரீதியாகவும் மற்றும் சர்வதேச சமுத்திரப் பாதுகாப்புத் தொடக்க முயற்சிகளுக்காக இலங்கையின் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்த முடியும். குறித்த கட்டமைப்பை எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்வதற்காக போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான இறுதிப் பயனர் மற்றும் ஒப்படைத்தல் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/229472
-
யாழில் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு!
நாட்டில் நாளை சுனாமி ஒத்திகை Nov 4, 2025 - 01:01 PM உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் நாளை (5) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் இந்த ஒத்திகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின் கீழ் நடத்தப்படும் இந்தப் ஒத்திகையானது யாழ்ப்பாணம், காலி, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் நடத்தப்படவுள்ளது. இந்தப் ஒத்திகையை உண்மையான சுனாமி அச்சுறுத்தல் எனக் கருதி அச்சமடையவோ அல்லது தவறாகப் புரிந்து கொள்ளவோ வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhk92eat01dyo29nkxclqrmb
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப் படம்.
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
சச்சின், கோலி வாழ்த்து: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசு எவ்வளவு? பட மூலாதாரம், Pankaj Nangia/Getty படக்குறிப்பு, ஷெஃபாலி 3 நவம்பர் 2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை சச்சின் டெண்டுல்கர் உட்பட பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் நேரில் கண்டுகளித்தனர். இறுதிப் போட்டியில் 'ஆட்ட நாயகி' ஆன ஷெஃபாலி, சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர் ஆவார். பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது, "சச்சின் டெண்டுல்கரைப் பார்த்து நீங்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினீர்கள். இன்று அவர் பால்கனியில் நின்று உங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது உங்களுக்கு எப்படி இருந்தது?" என்று ஷெஃபாலியிடம் கேட்கப்பட்டது. "இது எனக்கு மிகவும் மறக்க முடியாத தருணம். சச்சின் சாரை நான் பார்த்தபோது, எனக்குள் ஒரு வித்தியாசமான உற்சாகத்தை உணர்ந்தேன். நான் அவருடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறேன். அவர் எப்போதும் எனக்கு நம்பிக்கையை நிரப்புகிறார். அவர் ஒரு ஜாம்பவான், கிரிக்கெட்டின் மாஸ்டர். அவருடன் பேசுவது எனக்கு நிறைய உத்வேகத்தைத் தருகிறது. அவரைப் பார்ப்பது எனக்கு நிறைய உத்வேகத்தை அளிக்கிறது." என்று ஷெஃபாலி கூறினார். இறுதிப் போட்டியில் ஷெஃபாலி 87 ரன்கள் எடுத்ததுடன், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி முதன் முறையாக உலகக்கோப்பையை கைப்பற்ற உதவினார். இந்த உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டங்களில் ஷெஃபாலி வர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக, தொடருக்கு நடுவேதான் அவர் இந்திய அணியில் இணைந்தார். "கடவுள் என்னை இங்கு நல்லதைச் செய்ய அனுப்பினார் என்று நான் ஆரம்பத்தில் சொன்னேன், இன்று அது உண்மையாகிவிட்டது. இறுதியாக உலகக் கோப்பையை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது."என்றார் ஷெஃபாலி. உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து நேரடியாக உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளுக்கு மாறுவதில் என்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று அவரிடம் கேட்கப்பட்டது. "அது கடினமாக இருந்தது, ஆனால் நான் அமைதியாக இருந்தால், என்னால் எதையும் செய்ய முடியும் என்று எனக்குள் நம்பிக்கை இருந்தது. என் பெற்றோர், நண்பர்கள், சகோதரர் ஆகியோரிடமிருந்து எனக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. இன்று என் சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது, என் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் நான் அதைச் செய்தேன். அந்தத் திட்டங்கள் வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார் அவர். சச்சின், கோலி பாராட்டு பட மூலாதாரம், ANI மகளிர் கிரிக்கெட்டில் உலக சாம்பியனாக உருவெடுத்துள்ள இந்திய அணியை புகழ்பெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி பாராட்டியுள்ளனர். 1983 உலகக் கோப்பையில் இந்திய ஆடவர் அணி பெற்ற வெற்றி ஒரு முழு தலைமுறையையும் பெரிய கனவுகளைக் காணவும் அந்தக் கனவுகளைத் துரத்தவும் தூண்டியது என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார். "இன்று நமது மகளிர் கிரிக்கெட் அணி உண்மையிலேயே சிறப்பான ஒன்றைச் சாதித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் பெண்கள் மட்டை மற்றும் பந்தை கையில் எடுக்கவும், களத்தில் இறங்கவும், அவர்களும் ஒரு நாள் கோப்பையை உயர்த்த முடியும் என்று நம்பவும் நமது மகளிர் கிரிக்கெட் அணியினர் ஊக்கமளித்துள்ளனர்." இந்திய மகளிர் கிரிக்கெட்டின் பயணத்தில் இது ஒரு தீர்க்கமான தருணம். சபாஷ், டீம் இந்தியா. நீங்கள் முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்று சச்சின் கூறினார். இந்த வெற்றி வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் தரும் என்று விராட் கோலி கூறினார். "உங்கள் அச்சமற்ற கிரிக்கெட் மற்றும் நம்பிக்கையால் நீங்கள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள். இந்த தருணத்தை முழுமையாக அனுபவியுங்கள். ஹர்மன் மற்றும் அணிக்கு வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்." என்று கோலி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து பட மூலாதாரம், ANI குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட தலைவர்களும் பிரபலங்களும் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். "2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றதற்காக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் முறையாக இந்தப் பட்டத்தை வென்று அவர்கள் வரலாறு படைத்துள்ளனர்" என்று முர்மு கூறியுள்ளார். "அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது, இன்று அவர்களின் திறமை மற்றும் செயல்திறனுக்கு ஏற்றவாறு இந்த முடிவு கிடைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் பெண்கள் கிரிக்கெட்டை அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்லும். பெண்கள் இந்தியாவைப் பெருமைப்படுத்தியதற்கு நான் பாராட்டுகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். "2025 ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு அற்புதமான வெற்றி கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் வீராங்கனைகளின் செயல்திறன் சிறந்த திறமை மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருந்தது. நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி எதிர்கால சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்" என்று பிரதமர் மோதி கூறினார். இந்திய அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றதற்காக உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல்வாதிகள் தவிர, சத்யா நாதெல்லா மற்றும் சுந்தர் பிச்சை போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ.51 கோடி பரிசு பட மூலாதாரம், Pankaj Nangia/Getty உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரூ. 51 கோடி பரிசளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அதன் செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்தார். உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐசிசி 300 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளதாக அவர் கூறினார். தேவஜித் சைகியா பேசுகையில், "உலகக் கோப்பைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு, பரிசுத் தொகையை 3.88 மில்லியன் டாலரிலிருந்து 14 மில்லியன் டாலராக (சுமார் ரூ.124 கோடி) உயர்த்தியதற்காக ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுக்கு நன்றி சொல்ல வேண்டும், இது அசல் பரிசுத் தொகையில் இருந்து 300 சதவிகிதத்திற்கும் அதிகமாகும்" என்றார். "வீராங்கனைகளின் சிறந்த செயல்திறனைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ ரூ.51 கோடியை வெகுமதியாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்தப் பணம் அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப்படும்" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74j119n499o
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
சர்ச்சைகள், அழுத்தத்தை தாண்டி இந்தியாவின் வெற்றியில் ஜெமிமா முக்கிய பங்காற்றியது எப்படி? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஜான்வி மூலே பிபிசி செய்தியாளர் 31 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025 "கிரிக்கெட்டா அல்லது ஹாக்கியா?" 11 வயது சிறுமி ஜெமிமா ரோட்ரிக்ஸிடம் அவரது தந்தை இந்தக் கேள்வியைக் கேட்டபோது, இரண்டையும் நேசித்த அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இறுதியில் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்த ஜெமிமா, பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவை மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஜெமிமாவின் சதம் இந்தியாவை ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றது. நிச்சயமாக, இந்தப் பயணம் எளிதானதாக இருக்கவில்லை. மும்பையின் நெரிசலான உள்ளூர் ரயில்களில் முட்டி மோதி பயணித்தது முதல், அணியில் இருந்து நீக்கப்பட்ட மன வேதனையைச் சமாளித்தது வரை ஜெமிமாவின் வெற்றிப் பாதையில் எண்ணற்ற முட்கள் தடைகளாக இருந்தன. 2022-இல் இந்தியாவின் ஒருநாள் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படாத அதே ஜெமிமா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளார். இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த கடுமையான மனப் போராட்டத்தை அவர் போட்டிக்குப் பிறகு வெளிப்படுத்தினார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எஸ்.ஐ.ஆர் பற்றிய முழு விவரம் இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல் ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு நபர் இப்போது எப்படி இருக்கிறார்? வெளிநாட்டில் தனக்கிருந்த ஒரே ஒரு ராணுவ தளத்தையும் இந்தியா காலி செய்தது ஏன்? End of அதிகம் படிக்கப்பட்டது "நான் தினமும் அழுதேன், பதற்றமடைந்தேன், போராடினேன், அது மிகப்பெரிய சவாலாக இருந்தது," என்று அவர் மனம் திறந்து பேசினார். ஜெமிமாவுக்கு போராட்டம் ஒன்றும் புதிதல்ல. தனது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் மற்றும் திறமையால் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளார். பட மூலாதாரம், ANI பார்பி பொம்மையா கிரிக்கெட் மட்டையா? 'ஜெமி' என்று அன்பாக அழைக்கப்படும் ஜெமிமாவுக்கு மூன்று வயது இருக்கும்போது, அவருடைய தாத்தா பிளாஸ்டிக் கிரிக்கெட் மட்டை ஒன்றை பரிசளித்தார். "எனக்கு பார்பி பொம்மைகள் பிடிக்காது என்பது என் தாத்தாவுக்குத் தெரியும். எனவே அவர் பொம்மைக்கு பதிலாக கிரிக்கெட் பேட் வாங்கிக் கொடுத்தார். நாங்கள் சாலையில் கிரிக்கெட் விளையாடினோம். மட்டையைப் பிடிக்கும்போது உண்மையான மகிழ்ச்சி ஏற்படுவதை உணர்ந்தேன்" என்று நேர்காணலில் அவர் நினைவு கூர்ந்திருந்தார். தனது சகோதரர்களான ஏனோக் மற்றும் எலியுடன் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடினார். ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிக்ஸ்தான் அவருடைய முதல் பயிற்சியாளராக இருந்தார். பின்னர், பாந்த்ராவில் உள்ள MIG அகாடமியில் பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டியிடம் ஜெமிமாவின் சகோதரர் எலி கிரிக்கெட் பயிற்சியில் சேர்ந்தார். ஜெமிமாவின் தந்தை இவான் மற்றும் ஜெமிமாவின் தாய் லவிதா, தங்கள் மகள் விளையாடுவதைப் பார்க்குமாறு பிரசாந்த் ஷெட்டியிடம் கேட்டுக்கொண்டார். அப்போது ஜெமிமாவுக்கு வெறும் 9 வயதுதான், கிரிக்கெட் விளையாட ஆசை இருந்தாலும், அந்த நேரத்தில் அது மிகவும் அசாதாரணமான காட்சியாகவே இருந்தது. "2007-08 ஆம் ஆண்டில், மிகக் குறைவான பெண்களே கிரிக்கெட் விளையாடினார்கள். MIG கிளப்பில் எந்தவொரு பெண்ணும் கிரிக்கெட் விளையாடி பார்த்ததில்லை," என்று அந்த நாளை ஷெட்டி நினைவு கூர்ந்தார். ஆனாலும், பிரசாந்த் ஷெட்டி ஒப்புக்கொண்டார். அடுத்த நாளில், ஜெமிமா பயிற்சிக்காக மைதானத்துக்கு சென்றார். ஜெமிமாவின் முதல் ஷாட், ஒரு கவர் டிரைவ். இந்தப் பெண்ணிடம் ஏதோ இருப்பதை பிரசாந்த் ஷெட்டி உணர்ந்தார். பட மூலாதாரம், Getty Images MIG இல் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்ட முதல் பெண் என்பதால், அவர் சிறுவர்களுடன் விளையாட வேண்டியிருந்தது. பெண்ணை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கக்கூடாது என்று சில உறவினர்கள் கூறினாலும், இவானும் லவிதாவும் ஜெமிமா கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக நின்றனர். ரோட்ரிக்ஸ் குடும்பம் அப்போது மும்பை நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பாண்டப்பில் வசித்து வந்தது. பாந்த்ரா மேற்குப் பகுதியில் உள்ளது. பயிற்சிக்காக பாந்த்ராவுக்கு உள்ளூர் ரயிலில் செல்லும் மூன்று குழந்தைகளுக்கும் உணவு தயார் செய்வதற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவார் ஜெமிமாவின் தாய் லவிதா. மும்பையின் நெரிசல் மிகுந்த ரயில்களில் கனமான கிரிக்கெட் கிட்-ஐ எடுத்துச் செல்வது எவ்வளவு சிரமமானது என்பதை அனைவராலும் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் அதுவே மும்பை கிரிக்கெட் வீரர்களிடையே மன உறுதியை உருவாக்கியது. ஜெமிமாவும் விதிவிலக்கல்ல. இறுதியில், குடும்பம் பாந்த்ராவுக்கு அருகில் செல்ல முடிவு செய்தது. பட மூலாதாரம், Getty Images ஹாக்கி, கூடைப்பந்து, கால்பந்து - அல்லது கிரிக்கெட்? பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஹாக்கி மற்றும் கிரிக்கெட் மட்டுமல்ல ஜெமிமா கால்பந்து மற்றும் கூடைப்பந்தாட்டத்திலும் தனது பள்ளியின் சார்பில் கலந்துக் கொள்வார். 12 வயதில், மகாராஷ்டிராவுக்காக தேசிய அளவில் ஹாக்கி மற்றும் மண்டல அளவிலான போட்டியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அவரது விளையாட்டுத் திறமையைக் கண்ட இந்திய ஹாக்கி ஜாம்பவான் ஜோவாகிம் கார்வால்ஹோ, "உங்கள் மகள் ஒலிம்பிக்கிலும் கூட இந்தியாவுக்காக விளையாடலாம்" என்று ஜெமிமாவின் தந்தையிடம் கூறியிருந்தார். ஹாக்கி விளையாடி ஒலிம்பிக்கிற்கு செல்வதா அல்லது கிரிக்கெட்டில் தொடர்வதா என்ற முடிவு எடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், பதினொரு வயது ஜெமிமா கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுத்தார். 2012-13 சீசனில், தனது 13 வயதில் மும்பையின் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார். பட மூலாதாரம், Getty Images 'குழந்தை' வளர்ந்தபோது... சிறுமியாக இருந்தபோதே ஜெமிமா மும்பை கிரிக்கெட் உலகில் பிரபலமானார். விரைவில், நாடு முழுவதும் ஜெமிமாவை கவனித்தது. 2017-ஆம் ஆண்டு, செளராஷ்டிராவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒரு நாள் போட்டியில் ஜெமிம்மா ஆட்டமிழக்காமல் 202 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனாவுக்குப் பிறகு இதுபோன்ற சாதனையைப் படைத்த இரண்டாவது வீராங்கனை இவர்தான். அந்த இன்னிங்ஸ் ஜெமிமாவை பிரபலமாக்கியது. பின்னர், சேலஞ்சர் டிராபியில் அவர் பெற்ற வெற்றி மற்றும் இந்தியா ஏ அணிக்காக அவர் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தின் பலனாக, 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு ஜெமிமாவுக்குக் கிடைத்தது. அதே ஆண்டு, டி20 உலகக் கோப்பையில் அறிமுகமான அவர், தனது அறிமுகத்தை அரை சதத்துடன் தொடங்கினார். மற்றவர்களைவிட வயதில் இளையவர் என்பதால் ஆரம்ப நாட்களில் அவரது அணி வீரர்கள் ஜெமிமாவை குழந்தையைப் போலவே நடத்தினார்கள். சில சமயங்களில், வயது வித்தியாசம் அவரை தனிமைப்படுத்தியது. சில நேரங்களில் ஜெமிமா தனிமையாக உணர்ந்தார். அப்போதுதான் ஸ்மிருதி மந்தனாவுடன் நட்பு கொண்டார். ஆரம்ப நாட்களில், இருவரும் அறை தோழிகளாக இருந்தனர், இப்போது அவர்கள் சகோதரிகளைப் போல இருக்கிறார்கள். பட மூலாதாரம், ANI இன்று, ஜெமிமா ஒரு நட்சத்திர வீராங்கனை மட்டுமல்ல, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர், கிட்டார் திறமை மற்றும் துடிப்பான ஆளுமைக்காகவும் அறியப்படுகிறார். உலக டி-20 போட்டிகளில் பெற்ற வெற்றி அவரை இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் பிரபலமானவராக்கியது. இன்று, ஜெமிமா இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டின் முன்னணி பிராண்ட் தூதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இருப்பினும், இந்திய அணியில் ஜெமிமாவின் வாழ்க்கை தொடர்ந்து ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருந்தது. 2022 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜெமிமா இடம் பெறவில்லை. ஆனால் விரைவில், அவர் ஒரு வலுவான மறுபிரவேசத்தை ஏற்படுத்தினார். 2022 ஆகஸ்ட் மாதத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும், 2023-இல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அணியிலும் ஜெமிமா இருந்தார். 2023-ஆம் ஆண்டு மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். 2023 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த நான்கு மாதங்கள் தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாக ஜெமிமா கூறினார். அணியில் மறுபிரவேசம் இந்த 2025 உலக கோப்பையின் தொடக்கம் அவருக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது. இலங்கைக்கு எதிரான முதல் போட்டியிலும், பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அவர் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். ஆனால் 'மீண்டும் ராணி' போல, அவர் ஒரு பிரமாண்டமான மறுபிரவேசத்தை மேற்கொண்டார். முதலில், நியூசிலாந்திற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர், 2025 அக்டோபர் 30 அன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்து, வரலாற்று வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டியில் இடம் பிடித்தார். "இந்த இன்னிங்ஸ் பெண்கள் கிரிக்கெட்டுக்கு மட்டும் சிறப்பு வாய்ந்தது அல்ல. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இதிலிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று உள்ளது. உண்மையில் துன்பங்களை எதிர்கொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் அவர் ஒரு உண்மையான உத்வேகம்" என்று பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டி பாராட்டுகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரண்டாவது அரையிறுதியில் ஜெமிமாவும் ஹர்மன்ப்ரீத்தும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி சாதனை படைத்தனர். உலகக் கோப்பை சாதனை இன்னிங்ஸ் தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியில் விளையாடிய ஜெமிமா, 134 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்தார், 14 பவுண்டரிகள் அடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவரது மூன்றாவது சதம் ஆகும். அவரது இன்னிங்ஸ், 339 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை அடைய இந்தியாவுக்கு உதவியது. பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிகரமான சேஸிங்கில் எந்தவொரு அணியும் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஜெமிமா பொதுவாக மிடில் ஆர்டரில் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்கிறார், இந்த போட்டியில் அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார். விளையாடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது என்கிறார் அவர். திடீர் மாற்றம் இருந்தபோதிலும், அவரும் கேப்டன் ஹர்மன்ப்ரீத்தும் 167 ரன்கள் கூட்டணி அமைத்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர். பெரும்பாலான வீரர்கள் சதம் அடிக்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பேட்டை வானை நோக்கி உயர்த்தி கொண்டாடுவார்கள். உலகக் கோப்பையில் சதம் அடிப்பது என்பது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த போதிலும், ஜெமிமா அந்த தருணத்தைக் கொண்டாடவில்லை. வெற்றிக்காகக் காத்திருந்த அவர், வெற்றி நிச்சயம் என்று தெரிந்தபோதுதான் உணர்ச்சிகளுக்கு அடிபணிந்தார். மன அழுத்தத்தை சமாளித்தல் 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மும்பையின் கார் ஜிம்கானாவில் அவரது தந்தை இவான் ரோட்ரிக்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்று விவாதத்தைத் தூண்டிய பிறகு, அவர் சர்ச்சைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இருந்தபோதிலும் ஜெமிமா தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். உலகக் கோப்பையின் சில போட்டிகளில் ரன்கள் எடுக்காதபோதும், தனது பீல்டிங் மூலம் கவனத்தை ஈர்த்தார். "இந்த தொடரின்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அழுதேன். மனதளவில் அழுத்தமாக இருந்தது, பதற்றமாக இருந்தது. என்ன நடந்தாலும் சரி, என் வேலையை தொடர்ந்து செய்வேன், மற்றதை கடவுள் பார்த்துக்கொள்வார் என நினைத்தேன்" என்று ஜெமிமா கூறினார். உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும், ஜெமிமா அமைதியாக இருக்க முயன்றார், ஏனென்றால் தன்னால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். அவரால் இன்னும் நிறைய செய்ய முடியும் என ரசிகர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் நிபுணர்களும் நம்புகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3vnzqk7z40o
-
வட்ஸ்அப் வழியாக பணம் கோரும் மோசடி முறைபாடுகள் அதிகரிப்பு – குற்றப் புலனாய்வுத் திணைக்கள எச்சரிக்கை
04 Nov, 2025 | 09:36 AM வட்ஸ்அப் வழியாக பணம் கோருவது தொடர்பான முறைபாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதுபோன்ற முறைபாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் டபிள்யூ. ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார். வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/229431
-
ரஷ்யாவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் : அச்சத்தில் மக்கள்!
04 Nov, 2025 | 10:28 AM ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திங்கட்கிழமை (03) மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 159.93 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதனையடுத்து, நேற்று மதியம் 2.14 மணியளவில் அப்பக்குதியில் ரிக்டர் 6.1 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளில் இருந்து வெளியில் ஓடினர். https://www.virakesari.lk/article/229439
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதவர் கோச்சாக வரலாறு படைத்த கதை - யார் அவர்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் அமோல் மஜும்தார் கட்டுரை தகவல் சாரதா மியாபுரம் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கரும் வினோத் காம்ப்ளியும் மும்பையின் சாரதாஷ்ரம் வித்யா மந்திர் பள்ளி அணிக்காக விளையாடி 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து உலக சாதனை படைத்தபோது, ஒரு பேட்ஸ்மேன் நாள் முழுவதும் கால்களில் பேட்களைக் கட்டிக்கொண்டு தன் முறைக்காகக் காத்திருந்தார். பள்ளியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளியுடன் படித்த அந்த மாணவரின் பெயர் அமோல் மஜும்தார். அந்தப் போட்டியில் அவருக்கு ஒரு பந்து கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு புதிய வழியில் வரையறுத்தது, அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படத் தொடங்கினார். அமோல் மஜும்தார் முதல் தர கிரிக்கெட்டில் 30 சதங்களுடன் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். ஒரு காலத்தில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்பட்டார், ஆனால் அவருக்கு ஒருபோதும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சச்சின் மற்றும் காம்ப்ளி போல, அமோல் மஜும்தாரும் சாரதாஷ்ரம் பள்ளியின் மாணவர்தான் (கோப்புப் படம்) தனது 21 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், அமோல் மஜும்தார் ஒருபோதும் இந்தியாவின் தேசிய அணிக்காக விளையாடவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் இப்போது ஒரு பயிற்சியாளராக அவர் மகளிர் அணியை உலக சாம்பியனாக்கி உள்ளார். இந்திய அணி பெண்கள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பயிற்சியாளர் அமோல் மஜும்தாரை நோக்கி ஓடி, அவருடைய கால்களில் விழுந்தார், பின்னர் கட்டிப்பிடித்து விம்மி அழுதுவிட்டார். அவரும் இந்த வெற்றியைக் கண்டு மனம் திறந்து சிரித்தார், ஹர்மன்பிரீத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். போட்டிக்குப் பிறகு, அவர் உற்சாகமான வார்த்தைகளில் மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றதில் மிகுந்த பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார். இந்திய அணி கோப்பையை வென்றது அவருக்கு ஒருவேளை 'சக் தே இந்தியா' திரைப்படத்தின் 'கபீர் கான்' தருணம் போல இருந்திருக்கலாம். மும்பையில் ஒரு அற்புதமான ஆரம்பம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு அமோல் மஜும்தார் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர். அமோல் மஜும்தார் மும்பைக்காக விளையாடி தனது முதல் தர கிரிக்கெட்டைத் தொடங்கினார். ஃபரிதாபாத்தில் ஹரியாணாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டி அவருடைய முதல் ரஞ்சி போட்டியாகும். இந்தப் போட்டியில், அவர் ஒரு இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்து, தனது அறிமுகப் போட்டியிலேயே அனைவரையும் கவர்ந்தார். இந்தச் செயல்திறன் காரணமாக, அவர் 'பம்பாய் பேட்டிங் பள்ளியில்' இருந்து வெளிவந்த மற்றொரு 'பெரிய சாதனை' என்று பாராட்டப்பட்டார். எனினும், 'ஸ்போர்ட்ஸ்ஸ்டார்' விளையாட்டுப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சச்சின் டெண்டுல்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சலில் அன்கோலா மற்றும் வினோத் காம்ப்ளி போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட நியூசிலாந்து சென்றபோதுதான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று அமோல் மஜும்தார் கூறியிருந்தார். ரஞ்சி கோப்பையில் விளையாட இந்த வாய்ப்பை மும்பை கேப்டன் ரவி சாஸ்திரி தனக்கு வழங்கினார் என்று மஜும்தார் கூறினார். மஜும்தார் 1994 இல் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். அவர் சௌரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் உடன் இந்தியா-ஏ அணிக்காகவும் விளையாடினார். உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்கள் எடுத்த போதிலும், அவருக்குத் தேசிய அணியில் ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான பயணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டில், மும்பையின் ரஞ்சி அணியின் தலைவராக அமோல் மஜும்தார். அமோல் மஜும்தார் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்துள்ளார். உண்மையில், அவர் இத்தகைய கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். மஜும்தார் தனது வாழ்க்கையில் 171 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 48.13 என்ற சராசரியுடன் 11,167 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 30 சதங்கள் மற்றும் 60 அரைசதங்கள் அடங்கும். அவர் இருந்த காலத்தில் மும்பை எட்டு முறை ரஞ்சி டிராபியை வென்றது. 2006-07 ரஞ்சி டிராபி சீசனில் மும்பை அணி தொடக்கத்தில் மிக மோசமாக விளையாடிய போது அவர் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த விளையாட்டைப் பார்த்து அணி வெற்றி பெறும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனால் கேப்டனாக அவர் அணியை முன்னின்று வழிநடத்தினார், மேலும் ரஞ்சி டிராபி பட்டத்தையும் பெற்றுக் கொடுத்தார். மும்பை அணியுடன் 17 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பிறகு, அவர் 2009-இல் அசாம் அணிக்காக விளையாடினார். பின்னர் ஆந்திரப் பிரதேச அணியுடன் இணைந்தார். அவர் 2014 இல் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பயிற்சியாளராக ஒரு புதிய அவதாரம் உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் பயிற்சியாளராக தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அணிகளுக்குப் பயிற்சி அளித்தார், மேலும் மும்பை அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி குழுவிலும் இருந்துள்ளார். அக்டோபர் 2023 இல், அமோல் மஜும்தார் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரானார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2024 ஆம் ஆண்டில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது அமோல் மஜும்தார் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர். இந்த உலகக் கோப்பையில் நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து மூன்று போட்டியில் தோல்வியடைந்தது, இதனால் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு குறைவாக இருந்தது. இந்தூரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் தோல்விக்குப் பிறகு, இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ஒரு சம்பவம் நடந்தது. இந்தியா ஆஸ்திரேலியாவை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்தபோது, ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் இந்தத் தகவல் கிடைத்தது. அதில், இந்திய அணி தொடர்ந்து மூன்று தோல்விகளுக்குப் பிறகு எப்படி மீண்டு வர முடிந்தது என்று கேப்டன் ஹர்மன்பிரீத்திடம் கேட்கப்பட்டது? ஹர்மன்பிரீத் தனது அருகில் நின்று கொண்டிருந்த பயிற்சியாளர் அமோலைக் கை காட்டி, "இங்கிலாந்திடம் தோற்ற பிறகு நான் டிரஸ்ஸிங் ரூமில் எதுவும் சொல்லவில்லை. அவர்தான் எல்லாவற்றையும் பேசினார். 'நீங்கள் இந்தப் போட்டியில் வென்றிருக்க வேண்டும்' என்று அவர் கத்தினார்" என்று கூறினார். அவர் அருகில் நின்று கொண்டிருந்த அமோல், "ஆமாம், நான் டிரஸ்ஸிங் ரூமில் சில விஷயங்களைப் பேசினேன். ஆனால் நான் இவை அனைத்தையும் அணியின் நலனுக்காக மட்டுமே கூறினேன்" என்று உடனடியாகக் கூறினார். பின்னர் ஹர்மன்பிரீத் புன்னகையுடன், "அன்று சார் (அமோல் மஜும்தார்) கொஞ்சம் கோபமாகப் பேசினார். ஆனால் அனைவரும் அந்த வார்த்தைகளை நேர்மறையாக எடுத்துக் கொண்டார்கள். ஏனென்றால் அவர் அணியின் நலனைப் பற்றி மட்டுமே பேசுகிறார். எங்களுக்கு அவர் மீது முழு நம்பிக்கை உள்ளது. அவர் நேர்மையாகப் பேசுவார்" என்று கூறினார். "எங்களிடம் இருந்து சார் என்ன எதிர்பார்க்கிறார் என்று எங்களுக்குத் தெரியும். இந்த நாட்டிற்கு எங்கள் செயல்திறன் இப்படி இருக்கக் கூடாது. எல்லா வீரர்களும் அந்தக் கருத்தை நேர்மறையாக எடுத்துக் கொண்டார்கள். எங்கள் செயல்திறனிலிருந்து நீங்கள் அதைப் புரிந்து கொள்ளலாம்." கேப்டன் ஹர்மன்பிரீத் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டிக்குப் பிறகு ஊடகங்களிடம், "சார் பயிற்சியாளரான பிறகு விஷயங்கள் முற்றிலும் மாறிவிட்டன. இதற்கு முன்பு பயிற்சியாளர்கள் வந்து சென்றார்கள். ஒரு நிலையான பயிற்சியாளர் வந்தது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது" என்று கூறினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இந்திய அணியின் ஜெர்சியை அணியாத அமோல் மஜும்தார், இப்போது ஒரு பயிற்சியாளராகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அவருடைய அணி உலக சாம்பியன் ஆகிவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04gv21d304o
-
வெளியுலக தொடர்பே இல்லாத இந்த அமேசான் பழங்குடிகள் நெருப்பு பற்ற வைப்பது எப்படி? அவர்களே அளித்த பதில்
பட மூலாதாரம், Fenamad கட்டுரை தகவல் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி உலக மக்கள் தொகை செய்தியாளர் 3 நவம்பர் 2025, 03:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025, 05:26 GMT பெருவின் அமேசான் பகுதியில் உள்ள ஒரு சிறிய திறந்த வெளியில் தாமஸ் அனெஸ் டோஸ் சான்டோஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டில் காலடிச் சத்தம் நெருங்குவதைக் கேட்டார். அவர் தான் சூழப்பட்டுவிட்டதை அறிந்து உறைந்து போனார். "ஒருவர் நின்று, அம்புடன் குறிவைத்துக் கொண்டிருந்தார்," என்று அவர் கூறுகிறார். "எப்படியோ நான் இங்கு இருப்பதை அவர் கவனித்துவிட்டார், நான் ஓடத் தொடங்கினேன்." அவர் மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடியினரை நேருக்கு நேர் எதிகொண்டார். பல தசாப்தங்களாக, நுவேவா ஓசியானியா (Nueva Oceania) என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் தாமஸ், வெளியாட்களுடன் தொடர்பைத் தவிர்க்கும் இந்த நாடோடி மக்களுக்கு அண்டை வீட்டாராகவே இருந்தார். இருப்பினும், மிகச் சமீப காலம் வரை, அவர் அவர்களை அரிதாகவே பார்த்திருந்தார். மாஷ்கோ பைரோ மக்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகத்துடனான தொடர்பைத் துண்டித்துள்ளனர். அவர்கள் நீண்ட வில் மற்றும் அம்புகளைக் கொண்டு வேட்டையாடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றுக்கும் அமேசான் மழைக்காடுகளை நம்பியுள்ளனர். "அவர்கள் மிருகங்களைப் போலவும், பல வகையான பறவைகளைப் போலவும் சத்தம் எழுப்பியும், விசில் அடித்தும் என்னைச் சுற்றி வளைக்கத் தொடங்கினர்," என்று தாமஸ் நினைவு கூர்கிறார். "நான் தொடர்ந்து 'நோமோல்' (Nomole) (சகோதரர்) என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். பின்னர் அவர்கள் கூடினர், அவர்கள் நெருக்கமாக இருந்ததாக உணர்ந்தோம். எனவே நாங்கள் ஆற்றை நோக்கி ஓடினோம்." படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்களைப் பாதுகாக்க தாமஸ் விரும்புகிறார்: "அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே வாழ விடுங்கள்." மனித உரிமைகள் அமைப்பான சர்வைவல் இன்டர்நேஷனல் (Survival International) சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கை, உலகில் இன்னும் குறைந்தது 196 'தொடர்பற்ற குழுக்கள்' இருப்பதாகக் கூறுகிறது. மாஷ்கோ பைரோ பழங்குடியினர் அவற்றில் மிகப் பெரிய குழுவினர் என்று நம்பப்படுகிறது. அவர்களைப் பாதுகாக்க அரசுகள் அதிக நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தக் குழுக்களில் பாதி பேர் அடுத்த தசாப்தத்தில் அழிக்கப்படலாம் என்று அறிக்கை கூறுகிறது. மரங்களை வெட்டுதல், சுரங்கத் தொழில் அல்லது எண்ணெய் எடுப்பது போன்றவற்றால் அவர்களுக்கு மிகப் பெரிய அபாயங்கள் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. தொடர்பற்ற குழுக்கள் சாதாரண நோய்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள். எனவே, சுவிசேஷ மிஷனரிகள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுடனான தொடர்பு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. சமீபத்தில், மாஷ்கோ பைரோ மக்கள் நுவேவா ஓசியானியாவுக்கு அதிகமாக வரத் தொடங்கியுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்தக் கிராமம் ஏழு அல்லது எட்டு குடும்பங்களைக் கொண்ட ஒரு மீன்பிடி சமூகம். இது அருகிலுள்ள குடியிருப்புக்கு படகில் செல்ல 10 மணி நேரம் ஆகும் தூரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி தொடர்பற்ற குழுக்களுக்கான பாதுகாக்கப்பட்ட காப்பகமாக அங்கீகரிக்கப்படவில்லை. இங்கு மரங்களை வெட்டும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. மரங்களை வெட்டும் இயந்திரங்களின் சத்தம் சில சமயங்களில் இரவும் பகலும் கேட்கிறது. மாஷ்கோ பைரோ மக்கள் தங்கள் காடு அழிக்கப்படுவதைக் காண்கிறார்கள் என்று தாமஸ் கூறுகிறார். நுவேவா ஓசியானியாவில், மக்கள் முரண்பட்ட உணர்வுகளுடன் இருப்பதாகக் கூறுகின்றனர். மாஷ்கோ பைரோவின் அம்புகளைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள், ஆனால் காட்டில் வாழும் தங்கள் "சகோதரர்கள்" மீது அவர்களுக்கு ஆழ்ந்த மரியாதை உள்ளது, மேலும் அவர்களைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். "அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே வாழ விடுங்கள், நாம் அவர்களின் கலாசாரத்தை மாற்ற முடியாது. அதனால்தான் நாங்கள் இடைவெளியைக் கடைப்பிடிக்கிறோம்," என்று தாமஸ் கூறுகிறார். பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, பெருவின் மாட்ரே டி டியோஸ் மாகாணத்தில் ஜூன் 2024 அன்று எடுக்கப்பட்ட மாஷ்கோ பைரோ மக்களின் புகைப்படம் மாஷ்கோ பைரோவின் வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பு, வன்முறை அச்சுறுத்தல் மற்றும் மரங்களை வெட்டுபவர்களால் மாஷ்கோ பைரோ மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு இருப்பதாக நுவேவா ஓசியானியா மக்கள் கவலைப்படுகிறார்கள். நாங்கள் கிராமத்தில் இருந்தபோது, மாஷ்கோ பைரோ மக்கள் மீண்டும் தங்கள் இருப்பை உணர வைத்தனர். இரண்டு வயது மகள் கொண்ட இளம் தாய் லெடிசியா ரோட்ரிக்ஸ் லோபஸ் காட்டில் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் சத்தத்தைக் கேட்டார். "பலரின் கூக்குரல் சத்தங்களை கேட்டோம். ஒரு பெரிய குழு கத்துவது போல இருந்தது," என்று அவர் எங்களிடம் கூறினார். மாஷ்கோ பைரோ மக்களை அவர் சந்தித்தது அதுவே முதல் முறை, அதனால் அவர் ஓடினார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகும், பயத்தால் அவரது தலை துடித்துக் கொண்டிருந்தது. "மரம் வெட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் காடுகளை வெட்டுவதால் அவர்கள் பயத்தில் ஓடி வந்து எங்களுக்கு அருகில் வந்து விடுகிறார்கள்," என்று அவர் கூறினார். "அவர்கள் எங்களிடம் எப்படி நடந்துகொள்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது." 2022 இல், இரண்டு மரம் வெட்டுபவர்களை மாஷ்கோ பைரோவினர் தாக்கினர். ஒருவர் வயிற்றில் அம்பு பாய்ந்தது. அவர் உயிர் பிழைத்தார், ஆனால் மற்றொருவர் உடல் சில நாட்களுக்குப் பிறகு ஒன்பது அம்பு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. பெரு அரசு தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அவர்களுடன் தொடர்பை ஆரம்பிப்பது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மக்களுடனான ஆரம்ப தொடர்பால், நோய், வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை ஏற்பட்டு முழு குழுக்களும் அழிக்கப்படுவதைக் கண்ட பழங்குடி உரிமைக் குழுக்களின் பல தசாப்தகால போராட்டத்திற்கு பிறகு இந்த கொள்கை முதல் முறையாக பிரேசிலில் உருவானது. 1980களில், பெருவில் உள்ள நஹாவ் (Nahau) மக்கள் வெளி உலகத்துடன் ஆரம்பத் தொடர்பு கொண்டபோது, அவர்களின் மக்கள் தொகையில் 50% பேர் சில ஆண்டுகளில் இறந்தனர். 1990களில், முருகானுவா (Muruhanua) மக்கள் அதே விதியை எதிர்கொண்டனர். "தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்கள் தொற்றுநோயியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள். எந்தவொரு தொடர்பும் அவர்களுக்கு நோய்களைப் பரப்பக்கூடும். எளிமையான நோய்கள் கூட அவர்களை அழித்துவிடக்கூடும்," என்று பெருவியன் பழங்குடி உரிமைக் குழுவான ஃபெமனாட்டைச் சேர்ந்த இஸ்ஸ்ரைல் அக்விஸ்ஸே கூறுகிறார். "கலாசார ரீதியாகவும் எந்தவொரு தொடர்பும் அல்லது தலையீடும் ஒரு சமூகமாக அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்களின் ஆரோக்கியத்துக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்." தொடர்பற்ற பழங்குடியினரின் அண்டை பகுதியை சேர்ந்தவர்களுக்கு, இந்த கொள்கையின் யதார்த்தம் சிக்கலானதாக இருக்கலாம். மாஷ்கோ பைரோவை அவர் சந்தித்த காட்டுத் திறந்தவெளியில் தாமஸ் எங்களைச் சுற்றிக் காட்டும்போது, அவர் நின்று, கைகளை குவித்து விசில் அடித்து, பின்னர் அமைதியாகக் காத்திருக்கிறார். "அவர்கள் பதிலளித்தால், நாம் திரும்பிச் செல்ல வேண்டும்," என்று அவர் கூறுகிறார். பூச்சிகள் மற்றும் பறவைகளின் சலசலப்பு மட்டுமே கேட்கிறது. "அவர்கள் இங்கு இல்லை." ஒரு பதற்றமான சூழ்நிலையைத் தனியாகச் சமாளிக்க நுவேவா ஓசியானியாவின் குடியிருப்பாளர்களை அரசு விட்டுவிட்டதாகத் தாமஸ் கருதுகிறார். மாஷ்கோ பைரோ குழுவினர் எடுத்துச் செல்ல தனது தோட்டத்தில் அவர் காய், கனிகளைத் தரும் செடிகளை நடுகிறார். இது அவரும் மற்ற கிராம மக்களும் தங்கள் அண்டை வீட்டாருக்கு உதவவும், தங்களைப் பாதுகாக்கவும் கண்டுபிடித்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும். 'இந்த வாழைப் பழங்களை வைத்துக்கொள்ளுங்கள், இது ஒரு பரிசு', நீங்கள் அவற்றைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். என்மீது அம்பு எய்யாதீர்கள் என அவர்களிடம் சொல்வதற்கான வார்த்தைகள் எனக்கு தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும்." கட்டுப்பாட்டு நிலையத்தில்... அடர்ந்த காட்டின் மறுபுறத்தில், சுமார் 200 கிமீ தென்கிழக்கில், நிலைமை மிகவும் வேறுபட்டது. அங்கு, மனு ஆற்றுக்கு அருகில், ஒரு வனக் காப்பகமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியில் மாஷ்கோ பைரோ வாழ்கின்றனர். பெருவின் கலாசார அமைச்சகம் மற்றும் ஃபெனமாட் இங்கு 'நோமோல்' கட்டுப்பாட்டு நிலையத்தை நடத்தி வருகின்றன. இதில் எட்டு முகவர்கள் பணியாற்றுகின்றனர். மாஷ்கோ பைரோவுக்கும் உள்ளூர் கிராமங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல கொலைகளில் முடிந்தபின்னர், 2013 இல் இது அமைக்கப்பட்டது. கட்டுப்பாட்டு நிலையத்தின் தலைவராக உள்ள அன்டோனியோ ட்ரிகோசோ யடால்கோவின் வேலை அது மீண்டும் நிகழாமல் தடுப்பதுதான். மாஷ்கோ பைரோ மக்கள் அடிக்கடி, சில சமயங்களில் வாரத்திற்குப் பல முறை வருகிறார்கள். அவர்கள் நுவேவா ஓசியானியாவுக்கு அருகிலுள்ளவர்களை விட வேறுபட்டவர்கள். அவர்களுக்கு ஒருவருக்கொருவர் தெரியாது என்று முகவர்கள் நம்புகிறார்கள். பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தை அணுகுகின்றனர் "அவர்கள் எப்போதும் ஒரே இடத்தில் வெளியே வருகிறார்கள். அங்கிருந்துதான் அவர்கள் குரல் கொடுக்கிறார்கள்," என்று அன்டோனியோ அகலமான மனு ஆற்றின் குறுக்கே எதிரே உள்ள ஒரு சிறிய கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையைச் சுட்டிக் காட்டுகிறார். அவர்கள் வாழை, மரவள்ளிக்கிழங்கு அல்லது கரும்புகளைக் கேட்கிறார்கள். "நாங்கள் பதிலளிக்கவில்லை என்றால், அவர்கள் நாள் முழுவதும் அங்கேயே உட்கார்ந்து காத்திருக்கிறார்கள்," என்று அன்டோனியோ கூறுகிறார். சுற்றுலாப் பயணிகள் அல்லது உள்ளூர் படகுகள் கடந்து சென்றால், முகவர்கள் அதைத் தவிர்க்க முயல்கிறார்கள். பொதுவாகக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார்கள். கட்டுப்பாட்டு நிலையத்தில் உணவுப் பயிர்களை வளர்க்க ஒரு சிறிய தோட்டம் உள்ளது. உணவு தீர்ந்து போகும்போது, அவர்கள் உள்ளூர் கிராமத்தில் இருந்து பொருட்களைக் கேட்கிறார்கள். இவை கிடைக்கவில்லை என்றால், இன்னும் சில நாட்களில் திரும்பி வருமாறு முகவர்கள் மாஷ்கோ பைரோவினரிடம் சொல்கின்றனர். இதுவரை அது வேலை செய்து சமீபத்தில் சிறிய மோதல்கள் மட்டுமே நடந்துள்ளன. வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 40 பேரை அன்டோனியோ வழக்கமாகப் பார்க்கிறார். அவர்கள் தங்களுக்கு விலங்குகளின் பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள். தலைவருக்கு கமோடோலோ (தேனீ) என்று பெயர். அவர் ஒரு கண்டிப்பான மனிதர் என்றும் ஒருபோதும் சிரிப்பதில்லை என்றும் முகவர்கள் கூறுகின்றனர். மற்றொரு தலைவர், ட்கோட்கோ (கழுகு) ஒரு நகைச்சுவை உணர்வு கொண்டவர், அவர் நிறையச் சிரிக்கிறார் மற்றும் முகவர்களை கேலி செய்கிறார். யோமாக்கோ (டிராகன்) என்ற ஒரு இளம் பெண் இருக்கிறார், அவருக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பதாக முகவர்கள் கூறுகிறார்கள். மாஷ்கோ பைரோ வெளி உலகத்தில் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் சந்திக்கும் முகவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பற்றியும், அவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்றும் கேட்கிறார்கள். படக்குறிப்பு, நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ள முகவர்களில் ஒருவருக்கு, மாஷ்கோ பைரோ மக்களால் பரிசாக வழங்கப்பட்ட குரங்குப் பல் அட்டிகை ஒரு முகவர் கர்ப்பமாகி மகப்பேறு விடுப்பில் சென்றபோது, குழந்தை விளையாடுவதற்கு ஒரு ஹவுலர் குரங்கின் தொண்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட கிலுகிலுப்பையை (rattle) அவர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் முகவர்களின் உடைகள், குறிப்பாக சிவப்பு அல்லது பச்சை நிற விளையாட்டு உடைகள் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள். "நாங்கள் நெருங்கும் போது, பழைய, கிழிந்த, பொத்தான்கள் இல்லாத ஆடைகளை அணிந்து கொள்கிறோம் - அதனால் அவர்கள் அவற்றைப் பறித்துக் கொள்ள மாட்டார்கள்," என்று அன்டோனியோ கூறுகிறார். "முன்பு, பூச்சி நார்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அழகான பாரம்பரிய பாவாடைகளை அணிந்தார்கள், ஆனால் இப்போது அவர்களில் சிலர், சுற்றுலாப் படகுகள் கடந்து செல்லும்போது, ஆடைகள் அல்லது பூட்ஸ்களைப் பெறுகிறார்கள்," என்று கட்டுப்பாட்டு நிலையத்தில் ஒரு முகவரான எட்வர்டோ பாஞ்சோ பிஸார்லோ கூறுகிறார். பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் யார் என்பது பற்றி இன்னும் குறைவாகவே அறியப்படுகிறது. ஆனால் காட்டில் உள்ள வாழ்க்கை பற்றி குழுவினர் கேட்கும்போதெல்லாம், மாஷ்கோ பைரோ உரையாடலைத் துண்டிக்கிறார்கள். "ஒருமுறை, அவர்கள் எப்படித் தீ மூட்டுகிறார்கள் என்று நான் கேட்டேன்," என்று அன்டோனியோ கூறுகிறார். "அவர்கள் என்னிடம், 'உங்களிடம் மரம் இருக்கிறது, உங்களுக்குத் தெரியும்' என்று சொன்னார்கள். நான் வலியுறுத்திக் கேட்டபோது, அவர்கள், 'உங்களிடம் ஏற்கெனவே இந்த விஷயங்கள் அனைத்தும் உள்ளன - நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்?' என்று கேட்டனர்." யாராவது சிறிது காலம் வராமல் இருந்தால், அவர்கள் எங்கே என்று முகவர்கள் கேட்பார்கள். மாஷ்கோ பைரோ, "கேட்காதே" என்று சொன்னால், அந்த நபர் இறந்துவிட்டார் என்று அர்த்தம் என்று அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பல வருட தொடர்பு இருந்தபோதிலும், மாஷ்கோ பைரோ எப்படி வாழ்கிறார்கள் அல்லது ஏன் காட்டில் இருக்கிறார்கள் என்பது பற்றி முகவர்களுக்கு இன்னும் குறைவாகவே தெரியும். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், "ரப்பர் பிரபுக்கள்" என்று அழைக்கப்படுபவர்களால் பரவலான சுரண்டல் மற்றும் படுகொலைகளில் இருந்து தப்பி, ஆழமான காட்டுக்குத் தப்பிச் சென்ற பழங்குடி மக்களின் வாரிசுகள் என்று நம்பப்படுகிறது. மாஷ்கோ பைரோ, தென்மேற்குப் பெருவின் ஒரு பழங்குடி மக்களான யினியுடன் (Yine) நெருங்கிய உறவுடையவர்கள் என்று வல்லுநர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் ஒரே மொழியின் பழமையான வட்டார மொழியைப் பேசுகிறார்கள். அதை முகவர்களும் (அவர்களும் யினி பழங்குடியினரே) கற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், யினி மக்கள் நீண்ட காலமாக ஆற்றுப் பயணிகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களாக இருந்தனர். அதேசமயம், மாஷ்கோ பைரோ இந்த விஷயங்களை எப்படிச் செய்வது என்பதை மறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க நாடோடிகளாகவும் வேட்டையாடுபவர்களாகவும் மாறியிருக்கலாம். "அவர்கள் ஒரு பகுதியில் சிறிது காலம் தங்கி, ஒரு முகாமை அமைத்து, முழு குடும்பமும் கூடுகிறார்கள் என நான் புரிந்துகொள்கிறேன்," என்று அன்டோனியோ கூறுகிறார். "அந்த இடத்தை சுற்றியுள்ள அனைத்தையும் வேட்டையாடியவுடன், அவர்கள் வேறொரு இடத்துக்குச் செல்கிறார்கள்." பட மூலாதாரம், Fenamad படக்குறிப்பு, மாஷ்கோ பைரோ மக்கள் அமேசான் மழைக்காடுகளில் ஈட்டிகள் மற்றும் அம்புகளைப் பயன்படுத்தி வேட்டையாடுகிறார்கள். ஃபெனமாட்டின் இஸ்ஸ்ரைல் அக்விஸ்ஸே, 100-க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நேரங்களில் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு வந்துள்ளனர் என்று கூறுகிறார். "அவர்கள் தங்கள் உணவை பல்வகைப்படுத்த வாழைப்பழங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கைக் கேட்கிறார்கள், ஆனால் சில குடும்பங்கள் அதன்பிறகு மாதங்கள் அல்லது வருடங்களாக மறைந்துவிடுகின்றன," என்று அவர் கூறுகிறார். "அவர்கள், 'நான் சில காலம் சென்றுவிட்டு, பின்னர் திரும்பி வருவேன்' என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறார்கள்." இந்தப் பகுதியில் உள்ள மாஷ்கோ பைரோ மக்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஆனால் சட்டவிரோதச் சுரங்கத் தொழில் பரவலாக இருக்கும் ஒரு பகுதியுடன் இணைக்கும் ஒரு சாலையை அரசு கட்டமைக்கிறது. ஆனால், மாஷ்கோ பைரோ வெளி உலகத்துடன் இணைய விரும்பவில்லை என்பது முகவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. "இந்த நிலையத்தில் எனது அனுபவத்திலிருந்து, அவர்கள் வெளியுலகுடன் நெருங்கிய தொடர்பை விரும்பவில்லை என்பது தெரிகிறது," என்று அன்டோனியோ கூறுகிறார். படக்குறிப்பு, நோமோல் கட்டுப்பாட்டு நிலையத்தில் வழக்கமாக சுமார் 40 பேரைப் பார்ப்பதாக கூறுகிறார் அன்டோனியோ "ஒருவேளை குழந்தைகள் விரும்பலாம், அவர்கள் வளரும்போது, நாங்கள் ஆடை அணிந்திருப்பதைக் காணும்போது ஒருவேளை 10 அல்லது 20 ஆண்டுகளில் மாறலாம். ஆனால் பெரியவர்கள் மாற மாட்டார்கள். நாங்கள் இங்கு இருப்பதை கூட அவர்கள் விரும்பவில்லை," என்று அவர் கூறுகிறார். 2016 இல், மாஷ்கோ பைரோவின் காப்பகத்தை நுவேவா ஓசியானியா உள்ளிட்ட பகுதிகளுக்கு நீட்டிக்க ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அது ஒருபோதும் சட்டமாக இயற்றப்படவில்லை. "அவர்கள் எங்களைப் போலச் சுதந்திரமாக இருக்க வேண்டும்," என்று தாமஸ் கூறுகிறார். "அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் அமைதியாக வாழ்ந்தார்கள், இப்போது அவர்களின் காடுகள் அழிக்கப்படுகின்றன - அழிக்கப்பட்டு வருகின்றன என்பதை நாங்கள் அறிவோம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj6ny718p8yo
-
செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்
இதற்காக தான் இழுத்தடிப்பு என்பது எப்பவோ தெரிந்ததே!