Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 02:41 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலோனியைப் பார்த்து பேசிய வார்த்தைகள், எகிப்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் சலசலப்பையும், இணையத்தில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதையொட்டி, எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய ட்ரம்ப், "நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண்," என்று தெரிவித்தார். மேலும், இதைத் தொடர்ந்து டிரம்ப் கிண்டலாக, "இதே வார்த்தையை நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும்" என்றும் கூறினார். ட்ரம்பின் இந்தப் பேச்சு, அரசியல் அரங்கில் ஒரு தலைவரை அவரது பணியின் அடிப்படையில் அல்லாமல், தோற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடுவதாகக் கூறி, சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த மாநாட்டில் எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227706
  2. பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே கட்டுரை தகவல் பென்னி லு பிபிசி சைனீஸ் விபெக் வெனிமா பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் 37 வயதான மருத்துவர் லீ சுவாங்யேவின் துயரங்களை வென்றெடுத்த கதை மற்றும் மலை ஏறுதல் மீதான அவரது காதல் ஆகியவை சீனாவில் வைரலானது. போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிறுவயதில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 16 வயதில்தான் இவர் வாசிக்கக் கற்றுக்கொண்டார். 1988 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லீ சுவாங்யேவுக்கு ஏழு மாத குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியது. இது அவரை குதி கால்களில் குந்தி அமர்ந்தால் அன்றி, நடக்க முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றது. சிறுவயதில், மற்ற குழந்தைகளைப் போலப் பள்ளிச் சீருடையுடன் செல்வதே லீயின் கனவாக இருந்தது. ஆனால், அவர் நிறைய ஏளனத்தைச் சந்தித்தார். சில குழந்தைகள் அவரை "வீணானவர்" என்றும், அவரால் "சாப்பிட மட்டுமே முடியும், வேறு எந்தப் பயனும் இல்லை" என்றும் கூறினர். "இது என்னை மிகவும் காயப்படுத்தியது," என்று லீ கூறுகிறார். லீக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, கால்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால் அவரால் நடக்க முடியும் என்று அவரது பெற்றோர் கேள்விப்பட்டனர். எனவே, அவர்கள் மேலும் கடன் வாங்கி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். அந்த அறுவை சிகிச்சை மீது லீ மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். "நான் வார்டில் குணமடைந்து வந்தபோது, மற்ற குழந்தைகள் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் நான் சிரித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் என்னால் விரைவில் ஒரு சாதாரண மனிதரைப் போல நடக்க முடியும் என்று நினைத்தேன்," என்று அவர் கூறுகிறார். ஆனால், அறுவை சிகிச்சை தோல்வியடைந்தது. லீயின் நடக்கும் நம்பிக்கை சிதைந்ததுடன், அவர் ஆழமான மன அழுத்தத்திற்கு ஆளானார். தன் வாழ்க்கை அர்த்தமற்றது என்பதைப் போல உணர்ந்த அவர், தன் தாயிடம் தான் இறந்துவிட விரும்புவதாகக் கூறினார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருதுவர் லீ சீனாவின் ஐந்து புனித மலைகள் மற்றும் ஹுவாங்ஷன் மலை, அத்துடன் சீனப் பெருஞ்சுவர் அனைத்திலும் ஏறியுள்ளார். ஆனால், அவருடைய தாயார் அவரிடம் நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறினார். "நாங்கள் வயதான காலத்தில் பேசுவதற்கு ஒருவர் இருக்க வேண்டும் என்பதற்காக உன்னை வளர்க்கிறோம். ஒரு பூனையோ நாயோ பேச முடியாது, ஆனால் உன்னால் பேச முடியும்," என்று அவர் கூறினார். அவரது வார்த்தைகள் ஆழமாகப் பதிந்தன. "எனக்காக என் பெற்றோரும் குடும்பத்தினரும் எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்று நான் நினைத்தேன். கண்ணீர் விட்டு அழுதேன். நான் எனக்காக மட்டுமல்ல, அவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்று உணர்ந்தேன்," என்கிறார் லீ. அதன்பிறகு சிறிது காலத்திலேயே, வெளியூர் நபர் ஒருவர் கிராமத்திற்கு வந்து, கோவில்களில் ஊதுபத்தி விற்க மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தேடினார். அந்த நபர், லீ அந்த நேரத்தில் அவரது தந்தையின் மாதச் சம்பளத்திற்குச் சமமான தொகையை வீட்டிற்கு அனுப்புவார் என்று உறுதியளித்தார். "என் பெற்றோர் அதை உறுதியாக எதிர்த்தனர். ஆனால், பணம் சம்பாதிக்கவும், என் குடும்பத்தின் சுமையைக் குறைக்கவும் எனக்கு இது ஒரு வாய்ப்பாகத் தெரிந்தது," என்று லீ கூறுகிறார். அவர் அந்த நபருடன் செல்ல ஒப்புக்கொண்டார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே தெருவில் பிச்சை எடுக்க நேரிட்ட துயரம் ஆனால், வேலை குறித்த வாக்குறுதி ஒரு ஏமாற்றுவேலை என்று லீ விரைவில் அறிந்தார். அந்த வெளியூர் நபர் ஒரு பிச்சை எடுக்கும் கும்பலை நடத்தி வந்ததாக மருத்துவர் லீ கூறுகிறார். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, அவர் மற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் தெருக்களில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனது புதிய "முதலாளியுடன்" கழித்த முதல் நாள் இரவில், மற்ற குழந்தைகளில் ஒருவர், கடினமாக உழைக்கவில்லை என்றால் அடிக்கப்படுவீர்கள் என்று லீயை எச்சரித்தார். இது உண்மையாகவும் ஆனது. அடுத்த நாள் காலையில், லீ சட்டை இல்லாமல், நாணயங்களுக்கான ஒரு கிண்ணத்துடன், அதிக அனுதாபத்தைத் தூண்டும் வகையில் அவரது கால்கள் முதுகுப்புறமாக முறுக்கப்பட்ட நிலையில் நடைபாதையில் விடப்பட்டார். மக்கள் தன் கிண்ணத்தில் பணம் போடுவது ஏன் என்று லீக்கு முதலில் புரியவில்லை. அப்போது, பாதசாரிகள் அவரிடம், பள்ளியில் இருக்க வேண்டிய நேரத்தில் ஏன் பிச்சை எடுக்கிறாய் என்று கேட்டபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. "என் சொந்த ஊரில், பிச்சை எடுப்பது அவமானகரமானது. நான் அதையே செய்து கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்திருக்கவில்லை. உண்மை தெரிந்தபோது நொறுங்கிப் போனேன்," என்று லீ கூறுகிறார். லீ ஒரு நாளைக்குச் சில நூறு யுவான்களைச் சம்பாதிக்க முடிந்தது – இது 1990களில் ஒரு பெரிய தொகையாகும் – ஆனால் அது அனைத்தும் அவரது முதலாளியிடம் சென்றது. "நான் மற்ற குழந்தைகளை விடக் குறைவாகச் சம்பாதித்தால், அவர் நான் சோம்பேறித்தனமாக இருப்பதாகக் குற்றம்சாட்டி, சில சமயங்களில் என்னைத் தாக்குவார். அதனால் அந்த ஆண்டுகள் மிகவும் வேதனையாக இருந்தன." என்று அவர் கூறுகிறார். அடுத்து வந்த ஆண்டுகளில் மற்ற குழந்தைகள் ஓடிவிட்டனர் அல்லது காவல்துறையால் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், தன் குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்ற உறுதியுடன் லீ அங்கேயே தங்கினார். காவல்துறை உதவி வழங்கிய போது, அவர் மறுத்துவிட்டார். ஏழு ஆண்டுகளாக கோடை மற்றும் குளிர்காலத்தில், லீ நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்தார். "அது நரகத்தில் வாழ்வது போல் இருந்தது. நான் வெட்கப்பட்டேன், கண் தொடர்பைத் தவிர்த்தேன். பரிதாபத்தைத் தூண்டுவதற்காக என் காலை வலி நிறைந்த நிலையில் பின்புறமாக முறுக்கிக் கொள்வேன். பிச்சை எடுப்பதைத் தவிர்க்க மழை அல்லது இருளுக்காக நான் பிரார்த்தனை செய்தேன்," என்று அவர் பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் கூறினார். ஒவ்வொரு புத்தாண்டுக்கு முந்தைய தினம் அவர் வீட்டிற்கு அழைத்து, எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் தன் பெற்றோரை ஆசுவாசப்படுத்துவார். "ஆனால், அழைப்புக்குப் பிறகு, நான் என் அறையில் அழுது கொண்டிருப்பேன். நான் தெருவில் பிச்சை எடுக்கிறேன் என்பதை அவர்களிடம் சொல்ல முடியவில்லை." என்று அவர் கூறுகிறார். இப்போதும், 20 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த வேதனை நீங்கவில்லை எனக் கூறும் அவர், "பிச்சை எடுத்தது ஆழமான உளவியல் காயங்களை விட்டுச் சென்றது - நான் இன்னும் அதைப் பற்றி கொடிய கனவு காண்கிறேன். அது ஒரு கனவு மட்டுமே என்று அறிந்து நிம்மதியுடன் எழுந்திருக்கிறேன்." என்கிறார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மலையேறுவது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக மருத்துவர் லீ கூறுகிறார். கல்வி மூலம் ஒரு புதிய பாதை லீ தெருவில் ஒரு செய்தித்தாளைக் கண்டெடுத்து, அதில் தனது பெயரில் உள்ள எழுத்துகளை மட்டுமே வாசிக்க முடிந்ததை உணர்ந்தபோது எல்லாம் மாறியது. அப்போது 16 வயதான அவர், வீட்டிற்குத் திரும்பி இறுதியாகப் பள்ளிக்குச் செல்ல முடிவு செய்தார். "என்னால் படிக்கவோ எழுதவோ முடியாது, கல்வி மூலம் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும்," என்று அவர் நினைத்தார். அந்த நேரத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது குற்றமாக ஆக்கும் புதிய கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. தனது குடும்பத்தின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் லீ கேள்விப்பட்டார். அவர் தனது முதலாளியிடம் தான் தனது குடும்பத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார். தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்த போது, அவர் உண்மையில் எப்படி வாழ்ந்து வந்தார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். அவரைச் சுரண்டியவர் உறுதியளித்ததை விட மிகக் குறைவான பணத்தை அவர்களுக்கு அனுப்பியிருந்ததைக் கண்டு லீ கோபமடைந்தார். தனது பெற்றோரின் ஆதரவுடன், லீ ஆரம்பப் பள்ளியின் இரண்டாம் வகுப்பில் சேர்ந்தார். அங்குப் படிக்கும் மாணவர்கள் அவரை விட 10 வயது இளையவர்கள். அவர் முதல் நாள் பள்ளிக்குச் சென்றபோது, குழந்தைகள் அவரது மேசையைச் சுற்றி மொய்த்தனர் – ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. "நான் வருத்தப்படவில்லை - அதற்கு முன்பு நான் நிறைய ஏளனங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருந்தேன். இப்போது, ஒரு மாணவனாக, நான் கற்றலில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார். லீ மிகவும் அர்ப்பணிப்புள்ள மாணவராக ஆனார், இருப்பினும் அவரது உடல்நிலை கழிப்பறைக்குச் செல்வது போன்ற வேலைகளைக் கூடச் சிரமமாக்கியது. "கழிப்பறைக்குச் செல்ல நிறைய முயற்சி தேவைப்படும். அதனால் நான் பெரும்பாலும் பள்ளியில் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்வேன்," என்று அவர் கூறுகிறார். தளர்வில்லாத உறுதியுடன், லீ ஒன்பது ஆண்டுகளில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை முடித்தார். அவர் கிராமத்தில் உள்ள குழந்தைகளை விளையாட அழைத்து, பின்னர் வீட்டுப் பாடத்தில் உதவி கேட்பார். கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அவரது உடல்நிலை அவருக்கு இருந்த வாய்ப்புகளை குறைத்தது. ஆனால், அவர் மருத்துவத் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். "தான் ஒரு மருத்துவரானால், என் சொந்த நிலையைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம், என் குடும்பத்திற்கு உதவலாம், உயிர்களைக் காப்பாற்றலாம் மற்றும் சமூகத்திற்குப் பங்களிக்கலாம்," என்று அவர் நினைத்தார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, கல்லூரிக்குச் செல்ல, லீ தனது மொபிலிட்டி ஸ்கூட்டரில் பல மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது. 25 வயதில் லீ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்குள்ள வசதிகள் அவருக்கு மிகவும் அணுகக்கூடியதாக இருந்தன. ஆனால், செய்முறை வகுப்புகள் மிகவும் கடினமானதாக இருந்ததை அவர் கண்டார். "சக மாணவர்கள் ஆசிரியரைப் பின்தொடர்ந்து நோயாளிகளைப் பார்க்கச் செல்ல அல்லது இன்டர்ன்ஷிப்பின் போது வார்டுகளுக்கு இடையில் ஓட முடிந்தாலும், எனது நடமாடும் பிரச்னைகள் அதைக் கடினமாக்கின. மற்றவர்கள் ஒரு நாளில் கற்றுக்கொண்டதை நான் கற்றுக்கொள்ள அதிக நேரம் ஆகும்." என் றார். லீ தான் பலமடைய வேண்டும் என்று உணர்ந்தார். மலை ஏறுதலைத் தொடங்க முடிவு செய்தார். தனது முதல் மலையேற்றத்தில், தைய் மலையின் உச்சியை அடைய அவருக்கு ஐந்து பகலும் இரவும் ஆனது. அவரது கைகளும் கால்களும் வெடித்து ரத்தக் கசிவு ஏற்பட்டபோதும், அவர் கைவிடவில்லை. ஒவ்வொரு கல் படியையும் தனது பிட்டத்தைப் பயன்படுத்தி நகர்ந்து ஏறினார். மருத்துவர் லீ தனது மலை ஏறும் காணொளிகளைப் பகிர்ந்தபோது, அது இந்த கோடையில் வைரலாக மாறியது. மலை ஏறுவது அவருக்கு இப்போதும் ஒரு விருப்பமான விஷயமாக உள்ளது. இப்போது மருத்துவர் லீ, ஜின்ஜியாங்கில் ஒரு சிறிய கிராமப்புற கிளினிக்கை நடத்தி வருகிறார். அவர் இரவு பகலாகப் பணி செய்ய தயாராக உள்ளார். அவரது நோயாளிகள் அவரைத் தங்களின் "அற்புத மருத்துவர்" என்று அழைக்கிறார்கள். "என் சொந்தக் கைகளால் நோயாளிகளைக் கவனிப்பது, என் அண்டை வீட்டாரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது – இது எனக்கு எல்லாவற்றையும் விட அதிக திருப்தியை அளிக்கிறது," என்று அவர் கூறுகிறார். உலகம் முழுவதும் சீன சமூகத்திடம் முழுவதும் அவரது கதை சென்றடைந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர், இது மக்களின் மனப்பான்மையை மாற்ற உதவும் என்று நம்புகிறார். "சிலர் மாற்றுத்திறனாளிகளைப் பயனற்றவர்களாகப் பார்க்கிறார்கள். உணவகங்களில் நான் அமர்ந்திருக்கும்போது பிச்சைக்காரன் என்று தவறாகப் புரிந்துகொண்டு, உணவு இல்லை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். நான் சிரித்துவிட்டு வெளியேறுவேன் - பெரும்பாலான மக்கள் கனிவானவர்கள்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, ஒரு கிராமப்புற கிளினிக்கை நடத்துவதை மருத்துவர் லீ விரும்புகிறார். நம்பிக்கை மற்றும் நோக்கமுள்ள வாழ்க்கை லீயைச் சுரண்டியவர் குறித்து ஏன் புகார் அளிக்கவில்லை என்று பலர் அவரிடம் கேட்டுள்ளனர். "நான் கடந்த காலத்தைக் கடந்த காலத்திலேயே விட்டுவிட முடிவு செய்தேன்," என்று அவர் கூறுகிறார். "அந்த ஏழு ஆண்டுகள் ஒரு வேதனையான அனுபவம், ஆனால் அவை என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன." லீயின் பயணம் அவரது கண்ணோட்டத்தை மாற்றியமைத்தது. "பள்ளிக்குச் செல்ல முடிந்த பிறகு, மற்றவர்களின் கருத்துகள் அல்லது மதிப்பீடுகள் பற்றி நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். அந்த விஷயங்கள் அர்த்தமற்றவை என்று நான் உணர்ந்தேன். எனது நேரத்தையும் ஆற்றலையும் படிப்பதிலும், என் வாழ்க்கையின் நோக்கத்தை அடைவதிலும் செலுத்த விரும்பினேன்," என்று அவர் கூறுகிறார். பல மாற்றுத்திறனாளிகள் மற்றவர்கள் தங்களை மதிப்பிடுவார்கள் அல்லது கேலி செய்வார்கள் என்று பயப்படுவதால் "முன்னோக்கிச் செல்ல அஞ்சுகிறார்கள்" என்று அவர் கூறுகிறார். "ஆனால், என்னைப் பொறுத்தவரை, அது முக்கியமில்லை. நான் வளாகத்திலும் நகரங்களிலும் வகுப்புகளுக்காகவோ, பட்டறைகளுக்காகவோ, அல்லது எனது வேலை மூலம் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு உதவுவதற்காகவோ குந்திக் கொண்டும், தவழ்ந்தும் செல்கிறேன். அதைச் செய்யும்போது நான் நம்பிக்கையுடன் இருப்பதாக நினைக்கிறேன். நான் மற்றவர்களின் பார்வையைப் பற்றி இப்போது கவலைப்படுவதில்லை." என்கிறார். பொதுமக்களுக்கு அவர் இந்த அறிவுரையையும் கூறுகிறார்: "நம் வாழ்க்கை மலைகளைப் போன்றது - நாம் ஒன்றில் ஏறுகிறோம், அதற்கு முன்னால் இன்னொன்று உள்ளது. நாம் தொடர்ந்து பாடுபட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம்." "ஒருவர் எப்போதும் நேர்மறையாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். மேலும், தங்கள் கனவுகளை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்." மருத்துவர் லீ சுவாங்யே பிபிசி உலக சேவை அவுட்லுக் நிகழ்ச்சியில் பேசினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crexdg0lnx0o
  3. கொழும்பு பங்குச் சந்தை 8 டிரில்லியன் ரூபாய் சாதனையைத் தாண்டியது Published By: Vishnu 14 Oct, 2025 | 09:54 PM கொழும்பு: இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை (14) கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த மூலதன மதிப்பு 8 டிரில்லியன் ரூபாயைத் தாண்டியது. அந்த நாளின் வர்த்தக முடிவில், அனைத்து பங்குகளின் மொத்த விலைச்சுட்டெண் (ASPI) 22,372.57 புள்ளிகளில் நிறைவடைந்து, முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 51.49 புள்ளிகள் உயர்ந்தது. S&P SL20 குறியீட்டும் இன்று 22.07 புள்ளிகள் அதிகரித்து, இந்த ஆண்டின் மிக உயர்ந்த அளவான 6,229.44 புள்ளிகளை எட்டியது. செவ்வாய்க்கிழமை 5.74 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள மொத்த புரவல் (Turnover) பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227743
  4. அததெரண கருத்துப் படம்
  5. மடகஸ்காரில் அரசியல் குழப்பம் : ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோட்டம்! Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 01:04 PM கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடான மடகஸ்காரில், ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போராட்டம், ஜனாதிபதி ரஜோலினா தலைமையிலான அரசுக்கு எதிராகத் திரும்பியது. பொதுமக்கள் ஊழல், வறுமை, மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, அந்நாட்டு இராணுவத்தின் முக்கியமான படைப்பிரிவான கெப்செட் (CAPSAT), ஜனாதிபதியின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராகத் திரும்பியது. இது அந்நாட்டு ஜனாதிபதிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி ரஜோலினா பிரான்ஸ் நாட்டின் இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி, தப்பியோடியதைத் தொடர்ந்து, இராணுவத்தின் கெப்செட் படைப்பிரிவு நாட்டின் பல்வேறு முக்கியப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகஸ்கார் முன்னர் பிரான்ஸின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற பின்னரும், பிரான்ஸ் தனது படைவீரர்களை அங்கு நிலைநிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227697
  6. Published By: Vishnu 14 Oct, 2025 | 09:24 PM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அம்மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் நாளாந்தம் கண்காணிப்பதுடன் அரச மருத்துவ அதிகாரி வாரம் ஒருமுறை களவிஜயம் மேற்கொள்வார் எனவும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்கள் மூலம் சித்துபாத்தி இந்து மயான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர் எனவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் சட்ட வைத்திய அதிகாரி, சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் திங்கட்கிழமை (13) குறித்த பகுதிக்குக் களவிஜயம் மேற்கொண்டனர். இதன்போது செம்மணி மனிதப்புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்ற பகுதிகள் உரியவாறு மூடப்பட்டு, பாதுகாக்கப்படாததால் தற்போது பெய்துவரும் மழையினால் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி இருந்தமை அவதானிக்கப்பட்டது. செம்மணி சதுத்து நிலத்தையும், களிமண் தரையையும் கொண்ட பகுதியாக இருப்பதனால் தொடர்ச்சியாக மழை பெய்தல், அப்பகுதி முழுவதும் வெள்ளநீரில் மூழ்கிவிடும். ஆகையினால் இன்னும் ஒருசில மாதங்களுக்கு அப்பகுதியில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பது சாத்தியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் நாளாந்தம் கண்காணிப்பதுடன் அரச மருத்துவ அதிகாரி வாரம் ஒருமுறை களவிஜயம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்கள் மூலம் சித்துபாத்தி இந்து மயான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்வர் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோன்று அடுத்தகட்ட அகழ்வுப்பணிகளுக்காக 19,106,000 ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு நீதியமைச்சு ஒப்புதல் அளித்திருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தற்போதைய காலநிலை மற்றும் ஏனைய மனிதப்புதைகுழி வழக்குகள் உள்ளிட்ட தொடர் பணிகள் போன்றவற்றின் காரணமாக விசாரணை அதிகாரிகள் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைக் கட்டம் கட்டமாகப் பிரித்திருப்பதாக விளக்கமளித்துள்ளது. https://www.virakesari.lk/article/227739
  7. Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 04:28 PM இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் 'புளூடூத்திங்' (Bluetoothing) அல்லது'ஹொட்ஸ்போட்டிங்' (Hotspotting) என்ற புதிய பழக்கத்தால், தென் பசிபிக் நாடான பிஜியில் (Fiji) எச்ஐவி (HIV) தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரித்துள்ளது. இது ஒரு தேசிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 'புளூடூத்திங்' என்றால் என்ன? இது கையடக்கத்தொலைபேசிகளிலோ அல்லது இலத்திரனியல் கருவிகளில் காணப்படும் தொழில்நுட்பம் அல்ல. மாறாக இது போதைப்பொருள் பாவனையாளர்கள், ஊசியைப் பயன்படுத்தி போதை மருந்து கலந்த இரத்தத்தை ஒருவர் மற்றவருடன் பரிமாறிக்கொள்ளும் ஆபத்தான நடைமுறையாகும். போதைப் பொருள் விலை மற்றும் ஊசி தட்டுப்பாடு போன்ற காரணங்களால், ஒருவர் போதைப்பொருளை உடலில் ஏற்றிக்கொண்டு, பின்னர் அவரது இரத்தத்தை எடுத்து மற்றவர் தமது உடலில் ஏற்றுவதையே 'புளூடூத்திங்' எனக் குறிப்பிடுகின்றனர். இந்த அபாயகரமான பழக்கம் பிஜியில் வெகுவாக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் 500க்கும் குறைவாக இருந்த எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10 மடங்கு உயர்ந்து தற்போது 5,900 ஆக அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 1,093 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 223 பேர் நரம்புவழி போதை மருந்து பயன்பாட்டால் நோய் தொற்றுக்கு உள்ளானதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. புதிய தொற்றாளர்களில், 10 வயது சிறுவன் உட்பட, 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பலர் இந்த 'புளூடூத்திங்' முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 3,000 பேருக்கு எச்ஐவி ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிஜியின் சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். தென்னாப்பிரிக்கா, தன்சானியா, லெசோதோ மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் பழக்கம் இருப்பதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதனைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/227723
  8. யாழில் இரண்டாவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் போராட்டம் 14 Oct, 2025 | 04:59 PM ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் திங்கட்கிழமை (13) முதல் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (14) இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆசிரியர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டனர். ஆசிரியர்களால் முன் வைக்கப்பட்ட பிரச்சனைகள் குறித்து தாம் வடமாகாண ஆளுநருடன் பேசி தீர்வுகளை பெற்று தருவதாக ஆசிரியர்களுக்கு உறுதி அளித்தனர். https://www.virakesari.lk/article/227722
  9. சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய Published By: Digital Desk 3 14 Oct, 2025 | 05:05 PM (இணையத்தள செய்திப் பிரிவு ) பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று செவ்வாய்க்கிழமை (14) பீஜிங்கில் அமைந்திருக்கும் மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) அவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். இலங்கையின் சீனாவுடனான ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துதல், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்துதல் ஆகியன குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. பெண்கள் பற்றிய உலகத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்கள் விடுத்த அழைப்பின் பேரிலேயே பிரதமர் சீன விஜயத்தினை மேற்கொண்டு இருக்கின்றார். பீஜிங்கில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்கள், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்ட அரச விஜயத்தின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டன. இக் கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவைப் பற்றி நினைவு கூர்ந்த பிரதமர், ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சீனாவின் நவீனமயமாக்கல் குறித்த தொலைநோக்குப் பார்வை, சீனாவிற்கு மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் பரந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஏனைய நாடுகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தார். இலங்கையின் முக்கியமான அபிவிருத்திப் பங்காளி நாடுகளில் ஒன்றாகச் சீனா இருப்பதால், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய திட்டங்களில் அடைந்துள்ள உறுதியான முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர், உயர் தரமான ‘பட்டி மற்றும் பாதை முன்முயற்சியின்’ (Belt and Road Initiative) கீழ் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான உதவியை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி அமரசூரிய எடுத்துரைத்தார். சமீபத்திய பொருளாதார மீட்சியில் இலங்கை அடைந்த வெற்றிகளுக்காக ஜனாதிபதி அவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் சீன ஜனாதிபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அத்துடன், வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகியத் துறைகளில் இலங்கைக்குத் தொடர்ச்சியான ஆதரவை அளிப்பதாகவும் சீன ஜனாதிபதி அவர்கள் உறுதி அளித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் வேகத்தைத் தொடர்ந்தும் பேணுவதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். சமகால உலகளாவிய நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் உலகளாவிய நிர்வாக முன்முயற்சிக்கு இலங்கையின் ஆதரவை தொடர்ந்தும் பெற்றுத் தருவதாகப் பிரதமர் மீண்டும் உறுதி அளித்தார். https://www.virakesari.lk/article/227700
  10. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியா வெற்றி, ஆனால் தவறவிட்ட முக்கிய வாய்ப்புகள் என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி. டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று, ஷுப்மன் கில் தலைமையில் முதல் தொடர் வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது இந்த இளம் அணி. ஆனால், இந்த இரு போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் எடுத்த பல முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு நன்றாக அமைந்த விஷயமெனில் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக சாய் சுதர்ஷனின் செயல்பாடு. இங்கிலாந்தில் தடுமாறிய அவர், இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 87, 39 என்று ஸ்கோர் எடுத்தார். ஸ்கோரைத் தாண்டி களத்தில் இருந்த 281 நிமிடங்களும் உறுதியுடனும் நிலைத்தன்மையுடனும் விளையாடினார். இந்தியாவின் நம்பர் 3 இடத்தை அவரால் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கையை இந்த இன்னிங்ஸ் மூலம் கொடுத்திருக்கிறார். அதேபோல் ரிஷப் பந்த் இடத்தில் ஆடிய துருவ் ஜுரெல் பேட்டிங், கீப்பிங் இரண்டிலுமே அசத்தினார். பந்த் வந்த பிறகு இவரை பேட்டராக மட்டுமே கூடப் பயன்படுத்தலாம் என்று வல்லுநர்கள் சொல்லும் அளவுக்கு இருந்தது அவர் செயல்பாடு. ஆனால், பல்வேறு விஷயங்களை அடைவதற்கான வாய்ப்புகள் இருந்தும் இந்தியா தவற விட்டிருக்கிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்த இரண்டு போட்டிகளில் இந்தியாவுக்கு நடந்திருக்கும் சாதகமான விஷயமெனில் சாய் சுதர்ஷனின் செயல்பாடு நித்திஷ் எதற்காக ஆடினார்? பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பர் 6 இடத்தில் நித்திஷுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரை ஒரு முக்கிய டெஸ்ட் பிளேயராக உருவாக்க இந்தத் தொடர் ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்பட்டது. 2 முழுநேர வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பிளேயிங் லெவனில் இருப்பதால், அவரது வேகப்பந்துவீச்சை நன்கு பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து இந்தியா மொத்தம் 290 ஓவர்கள் பந்துவீசியது. அதில் நித்திஷ் வீசியது வெறும் நான்கே ஓவர்கள். வெறும் 1.4 சதவிகித ஓவர்களுக்கே அவர் பயன்படுத்தப்பட்டார். அதுவும் அந்த 4 ஓவர்களையும் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலேயே வீசியிருந்தார். அடுத்த 3 இன்னிங்ஸிலும் ஒரு பந்துகூட வீசவில்லை. அதுவும் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 200.4 ஓவர்கள் பந்துவீசியபோது கூட நித்திஷ் குமார் ரெட்டியின் கையில் பந்தைக் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் "வெளிநாட்டு போட்டிகளில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவை என்பதால் நித்திஷ் குமார் ரெட்டியை ஆடவைத்தோம்" என்று தொடர் முடிந்த பிறகு கில்லே கூறியிருந்தார். பந்துவீச்சில் தான் இப்படியே என்றால், பேட்டிங்கிலும் அதே நிலை தான். இந்தத் தொடரில் அவர் ஒரேயொரு இன்னிங்ஸ் தான் பேட்டிங் செய்தார். அஹமதாபாத் டெஸ்ட்டில் ஜடேஜா, வாஷிங்டன் இருவரையும் அவருக்கு முன் களமிறக்கினார்கள். மேலும், இரண்டாவது நாள் ஸ்கோருடனேயே (448/5) இன்னிங்ஸை டிக்ளேரும் செய்தார்கள். நித்திஷ் போன்ற வீரர் அதிக நேரம் களத்தில் இருக்க வழிவகை செய்திருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நித்திஷ் போன்ற வீரர் அதிக நேரம் களத்தில் இருக்க வழிவகை செய்திருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை. பரிசோதனை முயற்சிகள் எங்கே? இந்தத் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே கேள்விகளும் குழப்பங்களும் எழுந்துகொண்டேதான் இருந்தன. பல வீரர்களுக்கு வாய்ப்பாக அமைந்திருக்க வேண்டிய இந்தத் தொடரை, கம்பீரின் குழு அணுகிய விதம் ஆரம்பத்தில் இருந்தே கேள்விக்குறியாகத்தான் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் - ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 8வது இடத்தில் இருக்கும் அணி. சர்வதேச அரங்கில் ஒட்டுமொத்தமாகவே வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் ரொம்பவே தடுமாறுகிறார்கள். அப்படியிருக்கும் ஒரு அணிக்கெதிராக சொந்த மண்ணில் விளையாடும்போது எந்த அணியுமே சில பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ளும். அதுவும் இந்தியா போல் சொந்த மண்ணில் பேராதிக்கம் செலுத்தும் ஒரு அணி, நிச்சயம் இதுபோன்ற ஒரு தொடரை புதிய விஷயங்களைப் பரிசோதித்துப் பார்க்க நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். பட மூலாதாரம், Getty Images முன்பெல்லாம் இந்திய அணியே இதைப் பலமுறை செய்திருக்கிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 2023ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகத்தான் அறிமுக வாய்ப்பு கொடுத்தார்கள். அதே தொடரில் தான் ஷுப்மன் கில்லை நம்பர் 3 இடத்தில் இறக்கி பரிசோதித்துப் பார்த்தார்கள். ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வும் கொடுத்தார்கள். இத்தனைக்கும் இந்தத் தொடர் நடந்தது இந்தியாவில் கூட இல்லை. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் என்பதால் எந்த யோசனையும் இல்லாமல், அனைத்து முயற்சிகளையும் துணிந்து எடுத்தது இந்தியா. இதற்கு முன் 2018ல் கூட வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் பிரித்வி ஷாவையும் அறிமுகப்படுத்தினார்கள். இது மட்டுமல்ல, மொஹம்மது ஷமி, முகேஷ் குமார் போன்றவர்கள் அறிமுகம் ஆனதும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகத்தான். ஜெய்ஸ்வால் அறிமுகமான போட்டியை வென்றதும், அடுத்த போட்டியில் முகேஷுக்கும் அறிமுக வாய்ப்புகள் கொடுத்தார்கள். குல்தீப் யாதவை ஒருநாள் அரங்கில் பரிசோதித்துப் பார்த்ததும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவே. இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்களின் சோதனைகளுக்கான ஒரு களமாகவே இந்திய அணி பயன்படுத்தி வந்திருக்கிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகத்தான் அறிமுக வாய்ப்பு கொடுத்தார்கள். ராகுல், பும்ராவுக்கு ஓய்வு? அப்படியொரு அணி பல முன்னணி வீரர்கள் இல்லாமல் இன்னும் பலவீனமாக வரும்போது எவ்வித யோசனையும் இல்லாமல் சிலபல வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம். முதல்தர கிரிக்கெட்டில் சுமார் 8,000 ரன்கள் விளாசி தேசிய அணிக்காக ஆடும் வாய்ப்புக்காக காத்திருக்கும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு இந்தத் தொடரில் ஒரு அறிமுகம் கொடுத்திருக்கலாம். எப்படியும் கே.எல்.ராகுல் 19ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கப்போகிறார். அப்படியிருக்கும்போது இரண்டாவது டெஸ்ட்டில் அவருக்கு ஓய்வு கொடுத்து அவருக்குப் பதில் ஈஸ்வரனைக் களமிறக்கியிருக்கலாம். வேலைப்பளுவைக் காரணம் காட்டி பும்ராவுக்கு ஆஸ்திரேலிய தொடருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளையும் ஆடவைத்ததும் தவறாக அமைந்தது. அப்படி ஆடியிருந்தாலும் ராகுலுக்குச் சொன்னதுபோல் ஒரு போட்டியில் ஆடவைத்து இரண்டாவது போட்டியில் ஓய்வு கொடுத்திருக்கலாம். பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை விட இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருடைய தேவை அதிகமாக இருந்துவிடப் போகிறதா? இதை பும்ராவின் பக்கமிருந்து மட்டும் பார்க்க வேண்டியதில்லை. பும்ராவுக்கு இந்த டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தால், பிரசித் கிருஷ்ணாவுக்கு கூடுதல் வாய்ப்பு கொடுத்து பரிசோதித்துப் பார்த்திருக்கலாம். இதுவரை அவர் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியதே இல்லை. இந்திய ஆடுகளங்களில் அவரால் அதே பௌன்ஸை உருவாகக் முடியுமா என்று பார்த்திருக்கலாம். இதைவிட முக்கியமாக அர்ஷ்தீப்பை களமிறக்கி, ஒரு இடது கை பௌலருக்கான தேடலில் ஒரு பரிசோதனை முயற்சி செய்திருக்கலாம். ஆனால், தேர்வுக்குழு அர்ஷ்தீப்பை ஸ்குவாடில் கூட சேர்க்கவில்லை. பும்ராவுக்கு இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தால் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கௌதம் கம்பீர் புரியாத புதிர்! ஒரு அணி பரிசோதனை முயற்சிகள் செய்துபார்க்க வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால், கம்பீர் பயிற்சியாளராக இருக்கும் இந்த அணிக்கு எதிராக இவ்வளவு கேள்விகள் எழுப்பப்படுவதற்குக் காரணம், ஒருநாள், டி20 போட்டிகளில் எக்கச்சக்க பரிசோதனை முயற்சிகளை கம்பீரின் அணி செய்வதுதான். ஒருநாள் சூர்ய குமார் 11வது வீரராகக் களமிறங்குகிறார், இன்னொரு நாள் ஷிவம் தூபே முதல் ஓவர் பந்துவீசுகிறார். இப்போது தைரியாமாக கில்லை ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஆக்கியிருக்கிறார். இப்படி வெள்ளைப் பந்து போட்டிகளில் பல விஷயங்களை முயற்சி செய்பவர், டெஸ்ட் போட்டிகளில் அதற்குத் தயங்குவது தெரிகிறது. முன்பு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா வைட்வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது. அதற்காகத்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முழு பலம் பொருந்திய இந்திய அணியைக் களமிறக்கியிருக்கிறார்கள் என சில விமர்சகர்கள் கூறுகிறார்கள் ஆனால், கம்பீர் அணியின் அடையாளமே தைரியமான கிரிக்கெட் என்று கூறப்படுவதுண்டு. பட மூலாதாரம், Getty Images கம்பீரின் அணி இப்படி பின்வாங்குவதற்கு இன்னொரு உதாரணம், இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ். 121 என்ற இலக்கை சேஸ் செய்ய நான்காவது நாள் முடிவில் குறைவான ஓவர்களே இருந்தது. அன்றே போட்டியை முடிக்கும் நோக்கில் முதல் பந்தில் இருந்தே பேட்டை சுழற்றினார் ஜெய்ஸ்வால். ஆனால், அவர் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆனதும், இந்திய அணி முழுக்க டிஃபன்ஸிவ் அணுகுமுறைக்கு மாறியது. ஐந்தாவது நாளே ஆட்டத்தை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அரை மணி நேர நீட்டிப்பைக் கூட வேண்டாம் என்றார்கள். இதுபற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட்டர் ஶ்ரீதரன் ஶ்ரீராம், "ஒரு விக்கெட் போனவுடனேயே ஏன் இந்தியா அணுகுமுறையை மாற்ற வேண்டும்? ஒரு அணுகுமுறையைக் கையில் எடுத்ததும் குறைந்தது 15 ஓவர்களாவது அதற்கு அவகாசம் தர வேண்டும். இதன்மூலம் அணியில் இருக்கும் வீரர்களுக்கு என்ன செய்தியை உணர்த்துகிறீர்கள்? இல்லை பொறுமை காப்பதுதான் அணுகுமுறையெனில் அது ஏன் ஜெய்ஸ்வாலிடம் அறிவுறுத்தப்படாமல் போனது?" என்று கேள்விகள் எழுப்பினார். இவ்வளவு விமர்சனங்கள் வைக்கும், கேள்விகள் கேட்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், ஆர்வலர்களும் இந்தியாவின் இந்த சிறப்பான வெற்றியை பாராட்டாமலும் இல்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9dz94dej5o
  11. இலங்கை - நியூஸிலாந்து உலகக் கிண்ணப் போட்டி மழையினால் இடையில் கைவிடப்பட்டது; நியூஸிலாந்தின் அரை இறுதி வாய்ப்பு சந்தேகம்? Published By: Vishnu 14 Oct, 2025 | 10:12 PM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடும் மழையினால் இடையில் கைவிடப்பட்டது. அப் போட்டியில் 259 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து தயாராகிக்கொண்டிருந்தபோது கடும் மழை பெய்ததால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 9.30 மணிக்கு ஐசிசி போட்டி தீர்ப்பாளர் அறிவித்தார். இதற்கு அமைய இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் காரணமாக இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு பெரும்பாலும் அற்றுப் போயுள்ள நிலையில் நியூஸிலாந்தின் வாய்ப்பும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 258 ஓட்டங்களைக் குவித்தது. இந்த வருட மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். உலகக் கிண்ணத்தின் முதல் இரண்டு போட்டிகளில் 4ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன முதல் தடவையாக இன்று ஆரம்ப வீராங்கனையாக களம் இறங்கி அணித் தலைவி சமரி அத்தப்பத்துவுடன் 139 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார். சமரி அத்தபத்து 53 ஓட்டங்களையும் எனினும் மத்திய வரிசையில் நிலக்ஷிகா சில்வா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை சார்பாக உலகக் கிண்ணத்தில் குவித்த அதிவேக அரைச் சதமே அவரது அணியை சிறந்த நிலையில் இட்டது. அவர் 26 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் மொத்தமாக 28 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் பெற்ற 55 ஓட்டங்களே இலங்கையை நல்ல நிலையில் இட்டது. முன்னதாக சமரி அத்தபத்து 53 ஓட்டங்களையும் விஷ்மி குணரட்ன 42 ஓட்டங்களையும் ஹசினி பெரேரா 44 ஓட்டங்களையும் ஹர்ஷித்தா சமரவிக்ரம 26 ஓட்டங்களையும் பெற்றனர். இப் போட்டியில் நியூஸிலாந்தின் களத்தடுப்பு அவ்வளவு சிறப்பாக அமையாதது இலங்கைக்கு கைகொடுப்பதாக அமைந்தது. பந்துவீச்சில் சொஃபி டிவைன் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றீ இல்லிங் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/227744
  12. 14 Oct, 2025 | 02:06 PM அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை (Data Center) நிறுவவிருப்பதாகவும், அதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளது. 15 பில்லியன் டொலர் முதலீட்டில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் இந்த தரவு மையத்தை நிறுவவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் அமைக்கவிருக்கும் மிகப் பெரிய, ஒரு ஜிகாவோட் (Gigawatt) திறன்கொண்ட முதல் தரவு மையம் இதுவாகும். இந்தியாவில் பெருகிவரும் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், செயற்கை அறிவு (AI) உள்கட்டமைப்பு அதாவது ஏஐ பயன்பாடுகளை ஆதரிப்பதற்கான அதிநவீன கட்டமைப்புகள் மற்றும் பெரியளவிலான எரிசக்தி ஆதாரங்கள் அதாவது தரவு மையத்தை இயக்குவதற்குத் தேவையான பிரம்மாண்டமான எரிசக்தி ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்தத் தரவு மையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகளவில் அனைத்துத் துறைகளிலும் செயற்கை அறிவுப் பயன்பாடு (Artificial Intelligence - AI) அதிகரித்து வரும் சூழலில், கூகுள் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் இந்த பாரிய முதலீடு, தொழில்நுட்ப ஆராய்ச்சியில் தனது கவனத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த முதலீடு இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227703
  13. Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 05:05 PM இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, அந்நியச் செலாவணி முகாமைத்துவம் (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகள், 2018-ல் முக்கியமான திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அந்நியச் செலாவணி முகாமைத்துவச் சட்டம், 1999 இன் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) "அந்நியச் செலாவணி முகாமைத்துவ (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) (திருத்தம்) விதிமுறைகள், 2025" என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் (அத்துடன் அவற்றின் வெளிநாட்டுக் கிளைகளும்) இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் வங்கிகள் அல்லது தனிநபர்களுக்கு இந்திய ரூபாயில் (INR) கடன் வழங்கலாம். இந்தக் கடன் வழங்குதல் எல்லை தாண்டிய வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்காக (cross-border trade transactions) அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இலங்கையில் உள்ள வணிகங்களுக்குக் கடன் பெறுதலை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடன்கள் இந்திய ரூபாயில் வழங்கப்படுவதால், இலங்கை வணிகங்கள் அந்நியச் செலாவணி மாற்று விகித இடர்களைக் குறைத்துக்கொள்ள முடியும். இது இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் நிதித் தொடர்புகளை வலுப்படுத்தவும் உதவும். https://www.virakesari.lk/article/227631
  14. Live 14th Match (D/N), Visakhapatnam, October 13, 2025, ICC Women's World Cup Bangladesh Women 232/6 South Africa Women (43.6/50 ov, T:233) 196/6 SA Women need 37 runs in 36 balls. Current RR: 4.45 • Required RR: 6.16 • Last 5 ov (RR): 46/1 (9.20)
  15. போர்க்களமாகும் விண்வெளி? satellite war-ஆல் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது? | Ulagin Kathai செயற்கைக்கோள் போர் முறையால் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது என்பதை விளக்குகிறது இந்த காணொளி.
  16. சி.பி.ஐ. விசாரணையில் கரூர் சம்பவம்: திமுகவுக்கு பின்னடைவா? படக்குறிப்பு, கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 27 நிமிடங்களுக்கு முன்னர் கரூர் நெரிசல் சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஆளும் தி.மு.க. அரசுக்கு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், இந்த விவகாரத்தை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையிலான மூன்று பேர் குழு கண்காணிக்குமென்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இது தவிர, இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்துவந்தது. இந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடந்தபோது, மிகப் பெரிய நெரிசல் ஏற்பட்டு 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயர நிகழ்வு விரைவிலேயே ஒரு அரசியல் புயலாக உருவெடுத்தது. இந்த மக்கள் சந்திப்பில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த தகவல் வெளியாகிவந்த நிலையிலும் த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் இருந்து திருச்சிக்குச் சென்று அங்கிருந்து தனி விமானத்தின் மூலம் சென்னைக்குச் சென்றதும் பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்ததும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால், இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டவுடன் தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷும் உடனடியாக அங்கே வந்தது எப்படி என த.வெ.கவைச் சேர்ந்தவர்கள் கேள்வியெழுப்பினர். அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் வெவ்வேறு பரிமாணங்களை எடுத்தது. இந்த நெரிசல் சம்பவமே ஒரு சதி என்று த.வெ.கவினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையில் இது தொடர்பாக தமிழக காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைதுசெய்யப்பட்டார். வருவாய்த் துறை செயலர் பி. அமுதா தலைமையில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விவகாரம் நடந்த விதம் குறித்து விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இதற்கிடையில் அரசியல் கட்சிகள் சாலைகளில் ரோட் ஷோக்களை நடத்துவதால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்பதால், இதுபோன்ற கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டுமென தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவேண்டுமென உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், அவர்கள் தலைமறைவாக இருந்தனர். அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனாவும் டெல்லி சென்றுவிட்டார். இதன் காரணமாக, இந்த சம்பவத்தை ஒட்டி விஜய் வெளியிட்ட வீடியோ ஒன்றைத் தவிர, த.வெ.க. தரப்பின் சார்பில் இந்த விவகாரம் தொடர்பான கருத்துகளை வலுவாக முன்வைக்க ஆட்களே இல்லாத நிலை உருவானது. இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க. தரப்பின் கோரிக்கையையும் உள்ளடக்கி வெளியாகியிருக்கும் தீர்ப்பு, அக்கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், CONSTANDINE RAVINDRAN படக்குறிப்பு,"அரசியல் ரீதியாக அணுக வேண்டுமென தி.மு.க. நினைத்திருந்தால் விஜய்யை மட்டும் விட்டுவிட்டு, முக்கியப் பொறுப்பிலிருக்கும் நான்கு பேரை அன்றைக்கே கைதுசெய்திருப்போம்" - கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன் ஆனால், இந்த தீர்ப்பினால் எந்தவிதத்திலும் தமிழ்நாடு அரசுக்கோ, தி.மு.கவிற்கோ பின்னடைவு இல்லை என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன் ரவீந்திரன். "இந்தத் தீர்ப்பை ஒரு அரசியல் பின்னடைவாக பார்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் துவக்கத்திலிருந்தே இந்த விவகாரத்தை நாங்கள் அரசியல்ரீதியாக அணுகவேயில்லை. அப்படி அரசியல் ரீதியாக அணுக வேண்டுமென தி.மு.க. நினைத்திருந்தால் விஜய்யை மட்டும் விட்டுவிட்டு, முக்கியப் பொறுப்பிலிருக்கும் நான்கு பேரை அன்றைக்கே கைதுசெய்திருப்போம். கட்சியே முடங்கிப்போயிருக்கும். மாறாக நாங்கள் இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்தே அணுகினோம். 41 பேர் இறந்து போயிருக்கிறார்கள். இதற்கு அந்த அரசியல் கட்சியின் பொறுப்பின்மை காரணமாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும் என்று முடிவுசெய்தோம். ஒரு விசாரணை அமைப்பிடமிருந்து இன்னொரு விசாரணை அமைப்பிற்கு வழக்கை மாற்ற வேண்டுமென்றால் அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். காலதாமதம், வழக்கு தடம்புரள்வது, அரசியல் ஆதாயத்திற்காக துணை போவதாக வழக்கு கொண்டுசெல்லப்படுவது போன்ற காரணங்கள் இருந்தால்தான் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்படும். ஆனால், இந்த வழக்கில் அப்படிக் காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. மேலும், கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் இருக்கக்கூடாது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியானால், எல்லா தமிழ் அதிகாரிகளும் அறம் இல்லாதவர்களா? இதில் எந்த வகையிலும் தி.மு.கவுக்கு பின்னடைவு இல்லை" என்கிறார் கான்ஸ்டைன்டீன். ஆனால், அரசியல் கருத்துருவாக்கத்தில் இந்தத் தீர்ப்பு தி.மு.கவுக்கு ஒரு பின்னடைவாக அமையாதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நிச்சயமாக இல்லை. இந்த விவகாரத்தின் எந்தத் தருணத்திலும் முதலமைச்சர் துவங்கி, யாருமே இந்த வழக்கை அரசியல்ரீதியாக அணுகவேயில்லை. ஒரு தருணத்திலும் தனிப்பட்ட முறையில் விஜய்யையோ, அந்தக் கட்சியையோ விமர்சித்துப் பேசியதில்லை. எங்களைப் பொறுத்தவரை நீதிமன்றங்கள் நீதி வழங்கும் மன்றங்களாக இருக்க வேண்டும். நீதிபதிகளின் மன்றங்களாக இருக்கக்கூடாது என்பதைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையே துவங்காத நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது ஒரு அவசரமான செயல்பாடு என்கிறார் விஜயன். மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவசரப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு என்கிறார். "இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்றோ, விஜய் தரப்பு தவறு செய்துவிட்டது என்றோ சொல்லவரவில்லை. ஆனால், ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணையே துவங்காத நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது ஒரு அவசரமான செயல்பாடு. விசாரணையில் பாரபட்சமிருந்தால், வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். காரணம், சட்டம் - ஒழுங்கு என்பது மாநிலங்களின் வசம் உள்ள ஒரு விவகாரம். ஆகவே, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது என்பது மிக அரிதாகத்தான் நடக்கும். தவிர, சி.பி.ஐயைப் பொறுத்தவரை நிதி மோசடி போன்ற விவகாரங்களில்தான் சிறப்பாகச் செயல்படுவார்கள். இதுபோன்ற விவகாரங்களில் அவர்களுக்கு போதிய ஆள் பலமும் கிடையாது, பெரிய வெற்றிகளையும் பெற்றது கிடையாது. நான் தாக்கப்பட்ட வழக்கிலேயே சி.பி.ஐயால் வழக்கை நிரூபிக்க முடியவில்லை. ஒரு விசாரணை அமைப்பு விசாரணையைத் துவங்குவதற்கு முன்பே இப்படி வழக்கை மாற்றுவது அவசரமான செயல்பாடு" என்கிறார் கே.எம். விஜயன். பட மூலாதாரம், Vijayan படக்குறிப்பு, மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆனால், இந்த விவகாரம் தி.மு.கவுக்கு பின்னடைவாக இல்லாவிட்டாலும் சங்கடங்களை ஏற்படுத்தலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன். "இந்த வழக்கில் பல கேள்விகள் இருக்கின்றன. யாரும் கேட்காமலேயே அருணா ஜெகதீசன் ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது நீதிமன்றம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் சி.பி.ஐ. ஒரு பக்கம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோதே, அருணா ஜெகதீசன் ஆணையம் மற்றொரு பக்கம் விசாரணைகளை நடத்தியது. காரணம், சி.பி.ஐயின் நோக்கமும் ஆணையத்தின் நோக்கமும் வெவ்வேறு. அப்படியிருக்கையில் ஏதற்காக இந்த உத்தரவு எனத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த விவகாரத்தில் தி.மு.கவுக்கு சிக்கல் ஏற்படலாம். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென செந்தில் பாலாஜியை அழைக்கலாம். தவிர, சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் சதியால்தான் நெரிசல் நடந்தது என ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் அது எதிர்க்கட்சிகளுக்கு உதவும்" என்கிறார் ப்ரியன். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, எந்த அரசியல் ஆதாயமும் தேட விரும்பவில்லை என்கிறார் தவெக கொள்கைபரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை இதில் அரசியல் ரீதியாக இதில் எதையும் சொல்லவிரும்பவில்லை. வழக்கின் தீர்ப்பு குறித்து பிபிசியிடம் பேசிய அக்கட்சியின் கொள்கைபரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இதில் எந்த அரசியல் ஆதாயமும் தேட விரும்பவில்லை என்கிறார். "கரூர் சம்பவத்தில் நிறைய மனித உயிர்கள் பறிபோயிருக்கின்றன. ஆகவே, அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஒரு நீதி விசாரணை வேண்டுமெனக் கேட்டோம். வேறு சிலர் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டுமெனக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் இரு கோரிக்கைகளையும் இணைத்து ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த விவகாரத்தால் எங்களுக்கு அரசியல் ரீதியாக சாதகம் ஏற்பட்டிருக்கிறதா என்பதெல்லாம் நாங்கள் பேச விரும்பவில்லை. இதை வைத்து எந்த அரசியல் ஆதாயமும் நாங்கள் தேட விரும்பவில்லை" என்கிறார் அவர். ஆனால், தமிழ்நாடு அரசும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவைத்தானே அமைத்தது, அதனை எதிர்த்தது என்? என்ற கேள்விக்கு பதிலளித்த அருண் ராஜ், "அரசியல் கூட்டங்களை நடத்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென ஒரு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. ஆனால், இந்த நெரிசல் விவகாரம் தொடர்பாக வருவாய்த் துறைச் செயலர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளித்த பிறகு, பணியில் உள்ள ஒரு அதிகாரி அதனைத் தாண்டிச் செல்ல முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. அதனால்தான் அந்த விசாரணைக் குழுவை ஏற்க முடியவில்லை" என்கிறார் அருண்ராஜ். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக வரவேற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பா.ஜ.கவும் பாட்டாளி மக்கள் கட்சியும் வரவேற்றுள்ளன. ஆனால், நாம் தமிழர் கட்சி இந்தத் தீர்ப்பை விமர்சித்துள்ளது. "சிபிஐ விசாரணை என்பது ஏற்புடையதல்ல. அது மாநில உரிமைகளுக்கு எதிரானது. தமிழ்நாடு காவல் துறை விசாரணையில் என்ன குறை இருக்கிறது?" என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2emdj8gx9vo
  17. 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்திற்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் Published By: Vishnu 13 Oct, 2025 | 07:45 PM (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மெய்வல்லநர் போட்டிக்களில் 4ஆம் நாளான திங்கட்கிழமை (13) நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண பாடசாலைகள் முழுமையான ஆதிக்கம் செலுத்தி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சவீகரித்தன. அப் போட்டியில் அருணோதயா கல்லூரி வீராங்கனை எஸ். நிருஷிகா 3.80 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவி பி. அபிஷாலினி (3.60 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் பாசையூர் புனித அந்தோனியார் மகளிர் வித்தியாலய மாணவி என். ஆன் மேரி, விக்டோரியா கல்லூரி மாணவி வை. நிதுஷா ஆகிய இருவர் (2.80 மீ.) சம உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். 14 வயதுக்குட்ட சிறுவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வள்ளிபுனம் மகா வித்தியாலய மாணவன் ஆர். சந்தோஸ் (14.70 மீ.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் மன்னார், முருங்கன் மகா வித்தியாலய மாணவி ஜே. யஸ்வினி (16.23 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். கிழக்கு மாகாண வீரர்களுக்கு வெள்ளிப் பதக்கங்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவர்கள் இருவர் இன்றைய தினம் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர். 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தலில் நேற்றைய தினம் தங்கப் பதக்கம் வென்ற ஒலுவில் அல் ஹம்ரா மகா வித்தியாலய மாணவன் யூ. அப்துல்லா, நான்காம் நாளான இன்றைய தினம் வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றெடுத்தார். 80 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய அப்துல்லா அப் போட்டியை 11.98 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தட்டெறிதல் போட்டியில் திருகோணமலை மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலய மாணவன் வினோதன் விஹாஸ் 46.64 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். https://www.virakesari.lk/article/227647
  18. 13 Oct, 2025 | 02:40 PM செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக் கண்டறிவதோ, போதிய நிதியை ஒதுக்குவதோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இயலாத ஒன்றல்ல நிதியை ஒரேயடியாக விடுவிப்பதும் இயலாத ஒன்றல்ல. ஆனால், அரசாங்கம் நிதியை கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கட்டம் கட்டமாகவே விடுவித்து வருகிறது. செம்மணிப் புதைகுழிகளில் இருந்து மிகப்பெரும் எண்ணிக்கையில் எலும்புக்கூடுகள் ஒரேயடியாக வெளிப்படுவதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை, அவ்வாறு வெளிப்படுவது, படைத்தரப்பை ஒருபோதும் தண்டிக்க விரும்பாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இதனாலேயே, நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் உரையரங்கு ஞாயிற்றுக்கிழமை (12) நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அங்கு, அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், செம்மணியில் கிரிசாந்தி கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட சம்பவம் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதால் தவிர்க்க முடியாமல் விசாரணைகளை முன்னெடுத்தது. இவ்வழக்கில் இராணுவச் சிப்பாய் சோமரட்ண ராஜபக்ச சாட்சியமளித்தபோது தங்களால் 400பேர் வரையில் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் புதைகுழிகளைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியபோதும் புதைகுழிகளைத் தொடர்ந்து அகழ்வதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. அதற்குவேண்டிய போதுமான அழுத்தங்களை எமது தலைமைகளும் அரசாங்கத்துக்குக் கொடுக்கவில்லை. இப்போது, சிந்துபாத்தி மயானத்தில் கட்டுமானப் பணிகளுக்காக அகழப்பட்ட இடத்தில் தற்செயலாக வெளிப்பட்ட எலும்புக்கூடே இதுவரையில் இருநூறுகளுக்கும் அதிகமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதற்கான கதவுகளை முள்ளிவாய்க்கால் பேரவலம் திறந்து விட்டிருந்தது. ஆனால், அவற்றைத் தமிழ்த் தலைமைகள் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசாங்கத்துக்குச் சர்வதேச அரங்கில் பிணையெடுத்துக் கொடுக்கும் வேலைகளிலேயே ஈடுபட்டன. இப்போது, இனவழிப்பின் சாட்சியங்களாக செம்மணிப் புதைகுழிகளில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் எழுந்து நிற்கின்றன. தமிழின அழிப்பு நிகழ்ந்தது என்பதற்கான சாட்சிகள் பலர் இன்னமும் உள்ளனர். அவர்களால் பயத்தின் காரணமாகத் தங்களை வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால், உயிருள்ள அந்த சாட்சியங்களைவிட உயிர் இல்லாத எலும்புக்கூடுகள் வலுவான சாட்சியங்களாக இன்று எழுந்து நிற்கின்றன. காலம் எங்களுக்குத் தந்திருக்கும் இந்த வாய்ப்பையாவது எமது தமிழ்த் தலைமைகள் இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/227614
  19. வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: வெற்றியை நெருங்கினாலும் விமர்சிக்கப்படும் கேப்டன் சுப்மன் கில் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய அணி நான்காவது நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது. கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 52 நிமிடங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்கிறது இந்திய அணி. 121 ரன்களை இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி நான்காவது நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது. 9 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில் இன்னும் 58 ரன்கள் எடுத்தால், சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி முதல் தொடர் வெற்றியைப் பதிவு செய்யும். டெல்லியில் நடந்துவரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து 175 ரன்கள் விளாசினார். மறுபக்கம் தன்னுடைய சிறந்த ஃபார்மைத் தொடர்ந்த கேப்டன் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் எடுத்தார். இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆன பிறகு 12 இன்னிங்ஸ்களில் அவர் அடிக்கும் ஐந்தாவது சதம் இது! சிறப்பாக விளையாடிய தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்ஷனும் தன் பங்குக்கு 87 ரன்கள் எடுத்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜடேஜாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார். 134 ஓவர்கள் ஃபீல்டிங் செய்த களைப்புடன் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் மீண்டும் ஏமாற்றமே கொடுத்தது. குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இருவரின் ஜாலத்திலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 248 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணியின் ஒரு பேட்டரால் கூட அரைசதம் கடக்க முடியவில்லை. அதிகபட்சமாக அலீக் அதனேஸ் 41 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். சிறப்பாகப் பந்துவீசிய ஜடேஜாவும் தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸின் சிறப்பம்சம் என்றால் அது ஜான் கேம்பெல் கேட்சை சாய் சுதர்ஷன் பிடித்ததுதான். ஜடேஜா பந்தை கேம்பெல் வேகமாக ஸ்வீப் செய்ய, ஷார்ட் லெக் திசையில் நின்றிருந்த சாய் சுதர்ஷன் கழுத்தை நோக்கிப் பாய்ந்தது பந்து. மிகவும் ஆபத்தான அந்தப் பந்து அவரது ஹெல்மெட் கிரில்லில் பட்டு இறங்க, அதை அப்படியே லாவகமாக மார்போடு அனைத்துப் பிடித்தார் சாய். அவரது வலது கை விரலில் பலமாகப் பட்டிருந்தாலும், அவர் அதை கெட்டியாகப் பிடித்திருந்தார். மிகவும் ஆபத்தான இடத்தில் நின்று அவர் பிடித்த அந்த அசாத்திய கேட்ச் அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்த சாய் சுதர்சன் காயமடைந்து வெளியேறுகிறார் இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வெஸ்ட் இண்டீஸுக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், அதிரடியாக முடிவெடுத்து வெஸ்ட் இண்டீஸை ஃபாலோ ஆன் செய்யச்சொல்லி நிர்பந்தித்தது இந்தியா. வெஸ்ட் இண்டீஸ் மறுபடியும் பேட்டிங் செய்ததால் முந்தைய போட்டியைப் போல் இந்தப் போட்டியும் சீக்கிரம் முடிந்துவிடும், இந்தியா இன்னொரு இன்னிங்ஸ் வெற்றி பெற்றுவிடும் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது வெஸ்ட் இண்டீஸ். குறிப்பாக மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ஜான் கேம்பல், ஷாய் ஹோப் இருவரும் தங்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். அதனால் மூன்றாவது நாள் முடிவில் 173/2 என நல்ல நிலையில் இருந்தது வெஸ்ட் இண்டீஸ். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பும்ராவை தொடக்கத்திலேயே கில்லால் பயன்படுத்த முடியவில்லை. அதே தீர்க்கமான ஆட்டத்தை அவர்கள் ஆட்டத்தின் நான்காவது நாளும் கொண்டுவந்தார்கள். கவனத்துடனும் நிதானத்துடனும் விளையாடியிருந்தாலும், இந்திய பௌலர்களின் கைகள் முழுமையாக ஓங்காமலும் பார்த்துக்கொண்டார்கள். நிறைய மெய்டன் ஓவர்கள் ஆடியிருந்தாலும், அடிப்பதற்கு ஏற்ற பந்துகள் கிடைத்தபோது ஒன்று, இரண்டு என எடுத்தார்கள். பௌலர்கள் தவறான பந்துகளை வீசும்போது அதை பௌண்டரிகளாக்கினார்கள். எந்தவொரு ரிஸ்க்கும் இல்லாமல் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அவர்களால் உருவாக்க முடிந்தது. ஜடேஜா தன்னுடைய விரைவான பந்துவீச்சால் நெருக்கடி கொடுப்பார் என்பதால், அவரைப் பெரும்பாலும் சீண்டாமலேயே ஆடினார்கள். இப்படி உறுதியான திட்டம் வகுத்து, அதை சிறப்பாகவும் அரங்கேற்றியதால் அவர்களால் பெரிய இன்னிங்ஸ் ஆட முடிந்தது. சிறப்பாக ஆடிய ஜான் கேம்பெல் 174 பந்துகளில் தன் முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இவர்தான். இவர்கள் இருவருமே சதமடித்து நங்கூரம் போல் நிலைத்து நிற்க, இந்திய பௌலர்கள் மீது நெருக்கடி திரும்பியது. குறிப்பாக கில்லின் முடிவுகள் விமர்சனம் செய்யப்பட்டன. ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டியை அணியில் வைத்திருந்தும், கில் அவரைப் பந்துவீசவே அழைக்கவில்லை. யஷஷ்வி ஜெய்ஸ்வாலுக்குக் கூட ஒரு ஓவர் கொடுத்தார். ஆனால், நித்திஷை அவர் பயன்படுத்தவில்லை. அதை அனைத்து வல்லுநர்களுமே கேள்விக்குள்ளாக்கினார்கள். போக, இந்திய பௌலர்கள் தொடர்ச்சியாகப் பந்துவீசிக்கொண்டே இருந்ததால், ஃபாலோ ஆன் கொடுத்த முடிவுமே தவறோ என்ற விவாதம் தொடங்கியது. ஏனெனில் தொடர்ந்து பந்துவீசிய காரணத்தால் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவை தொடக்கத்திலேயே கில்லால் பயன்படுத்த முடியவில்லை. பும்ராவின் வேலைப்பளுவை சரியாகப் பராமரிக்கவேண்டும் என்பதால் அவருக்கு ஆரம்பத்தில் ஓவர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா முதல் முறையாகப் பந்துவீசியதே 33வது ஓவரில் தான். அதற்குள்ளாகவே கேம்பெல் - ஹோப் இணை கிட்டத்தட்ட 17 ஓவர்கள் நிலைத்து ஆடியிருந்தது. இந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதால் ஃபாலோ ஆன் முடிவும், இப்படியொரு சூழ்நிலை இருந்தும், நித்திஷ் ரெட்டியை இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராகப் பயன்படுத்தாத முடிவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் இந்திய அணி 200.4 ஓவர்கள் பந்துவீசிய நிலையில், நித்திஷ் ஒரு பந்துகூட வீசவில்லை! பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஷாய் ஹோப்பை போல்டாக்கினார் சிராஜ். ஆனால் அதற்கெல்லாம் பதிலாக வந்தார் முதல் போட்டியின் ஆட்ட நாயகன் ரவீந்திர ஜடேஜா. ரிவர்ஸ் ஸ்வீப் ஆட ஆசைப்பட்டு, ஜடேஜாவின் சுழலில் சிக்கினார் கேம்பெல். 199 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார் அவர். இதன்மூலம் 49 ஓவர்கள் நிலைத்த அந்த பார்ட்னர்ஷிப் 177 ரன்களில் முடிவுக்கு வந்தது. கேம்பெல் சென்ற பின் கேப்டன் ராஸ்டன் சேஸ் ஹோப்புடன் இணைந்து இன்னொரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கு ஓரளவு நல்ல பலனும் கிடைத்தது. தொடர்ந்து சீரான ஆட்டத்தை ஆடிய ஹோப், தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். 8 ஆண்டுகள் கழித்து அவர் அடிக்கும் முதல் டெஸ்ட் சதம் இது. 59 இன்னிங்ஸ்களாக சதமடிக்காமல் இருந்த அவரது சுமையை இந்த இன்னிங்ஸ் குறைத்துவைத்தது. ஆனால், அவரால் அந்த சதத்தை இன்னும் பெரிதாக்க முடியவில்லை. தன் டிரேட் மார்க் 'வாபில் சீம்' பந்தை வீசி ஷாய் ஹோப்பை போல்டாக்கினார் மொஹம்மது சிராஜ். 214 பந்துகள் தாக்குப்பிடித்த ஹோப், 103 ரன்களுக்கு வெளியேறினார். அந்த விக்கெட்டோடு வெஸ்ட் இண்டீஸின் 'ஹோப்' முடிவுக்கு வந்தது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 311 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை குல்தீப், பும்ரா இருவரும் கட்டம் கட்டி வெளியேற்றினார்கள். ஜஸ்டின் கிரீவ்ஸ் ஒருபக்கம் போராடினாலும், மற்ற பேட்டர்களால் அவருக்கு உதவமுடியவில்லை. 311 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ். அவர்கள் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று நினைத்திருக்க, கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய ஜேடன் சீல்ஸ், கிரீவ்ஸுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தக் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப் இந்திய பௌலர்களை 22 ஓவர்கள் திக்குமுக்காடச் செய்து 79 ரன்களும் சேர்த்தது. ஒருவழியாக சீல்ஸை பும்ரா வெளியேற்ற 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ். கடைசி வரை போராடிய ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அந்த அணி 120 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப், பும்ரா இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 121 என்ற இலக்கை சேஸ் செய்த இந்திய அணி, இரண்டாவது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தது. நான்காவது நாளிலேயே போட்டியை முடிக்கவேண்டும் என்ற நோக்கில் அதீத அதிரடியை வெளிப்படுத்த நினைத்த ஜெய்ஸ்வால், வாரிகன் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் கேட்ச்சாகி 8 ரன்களுடன் வெளியேறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாளை வெல்லும்பட்சத்தில், ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கும் இந்திய அணி 2-0 என இத்தொடரைக் கைப்பற்றும். அடுத்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல், சாய் சுதர்ஷன் இருவரும் எவ்வித அவசரமும் காட்டாமல் பந்துக்கு ஏற்ப மட்டுமே விளையாடினார்கள். அதனால் நான்காவது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் 58 ரன்களே தேவை என்பதால் இந்திய அணி எப்படியும் இந்த இலக்கை ஐந்தாவது நாளின் முதல் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே எட்டிவிடும். நாளை வெல்லும்பட்சத்தில், ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்றிருக்கும் இந்திய அணி 2-0 என இத்தொடரைக் கைப்பற்றும். புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி பெறும் முதல் தொடர் வெற்றியாக இது அமையும். அக்டோபர் 14 பிறந்த நாள் கொண்டாடும் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கான பரிசாகவும் இந்த வெற்றி அமையும்! - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1j8ln36dg8o
  20. 22 பிஞ்சு குழந்தைகளை பலி கொண்ட ColdRif இருமல் மருந்து.. சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 22 பிஞ்சு குழந்தைகளை பலி கொண்ட ColdRif இருமல் மருந்து விவகாரத்தில் சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம், ColdRif இருமல் மருந்து தயாரித்து வந்தது. இந்த இருமல் மருந்தை குடித்த, 22 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீசன் பார்மாவின் Coldrif, Relife, Respifresh TR ஆகிய இருமல் மருந்துகளில் டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் அதிகளவில் கலந்து இருந்தது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநில போலீசாரால் ஶ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அத்துடன் ஶ்ரீசன் பார்மாவின் Coldrif இருமல் மருந்துக்கும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ரங்கநாதன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. https://minnambalam.com/coldrif-cough-syrup-linked-to-deaths-of-22-infants-enforcement-directorate-raids-7-locations-in-chennai/
  21. அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்! - இஸ்ரேல் இராணுவம் தகவல் 13 Oct, 2025 | 04:35 PM காசா போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் இன்று (13) கைச்சாத்திடப்படவுள்ளது. இந்நிலையில், போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, ஹமாஸினால் இரண்டு ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் இன்று விடுவிக்கப்பட்டுவிட்ட செய்தி, அவர்களது குடும்பத்தினரையும் இஸ்ரேல் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று முன்னதாக 7 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு சென்றார். அடுத்து, எகிப்து நாட்டுக்குச் சென்று அங்கு, போர்நிறுத்த இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நிகழ்வில் கலந்துகொள்வார். அத்துடன் எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதிக்கான உச்சி மாநாட்டிலும் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்ட அறிவிப்பு இஸ்ரேலிய மக்களை பெரும் ஆரவாரப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/227627
  22. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 04:14 PM 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக ஜோயல் மோகிருக்கும், படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக (The theory of sustained growth through creative destruction) அகியோன் மற்றும் ஹோவிட்டுக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/227624
  23. பெண்களின் உரிமைகள், சமத்துவத்திற்கான எமது கூட்டு உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம் - பிரதமர் Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 12:28 PM பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) இன்று திங்கட்கிழமை (13) நடைபெற்ற உலகத் தலைவர்களின் பெண்கள் பற்றிய மாநாடு 2025 இன் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தேசிய மாநாட்டு மையத்திற்கு வருகை தந்த பிரதமரை, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) மற்றும் ஜனாதிபதியின் பாரியார் திருமதி. பெங் லியுவான் (Peng Liyuan) ஆகியோர் வரவேற்றனர். ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் வரவேற்புரையை அடுத்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் உரை உட்பட, அரச மற்றும் அரசாங்கத் தலைவர்கள் தமது உரைகளை முன்வைத்தனர். மன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், 1995 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் பற்றிய உலக மாநாட்டினதும், பாலின சமத்துவத்திற்கான ஒரு விரிவான கட்டமைப்பாகிய பீஜிங் செயல்பாட்டுத் தளத்தினதும் மரபை நினைவுகூர்ந்ததோடு, கடந்த மூன்று தசாப்தங்களில் அடையப்பட்ட முன்னேற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டார். குறிப்பாக, பெண் எழுத்தறிவு அதிகரிப்பு, தாய்மாரின் இறப்பு வீதம் கிட்டத்தட்டப் பாதியாகக் குறைந்திருப்பது, மற்றும் ஆயுட்கால அதிகரிப்பு (1995 இல் 69 வயதாக இருந்த ஆயுட்காலம் 2023 இல் 76 வயது வரை அதிகரித்திருக்கின்றது) ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.அதே நேரத்தில், தொடர்ந்தும் காணப்படுகின்ற இடைவெளிகள் குறித்தும் அவர் கவனத்தைச் செலுத்தினார். ஆண்களுடன் ஒப்பிடுகையில் குறைவான தொழிலாளர் பங்கேற்பு (48.7% - 73%). அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் குறைந்த பிரதிநிதித்துவம் (பட்டதாரிகளில் சுமார் 35%). பெண்களை விகிதாசார ரீதியில் அதிகமாகப் பாதிக்கும் தொடர்ச்சியான உணவுப் பாதுகாப்பின்மை (ஆண்களை விட 47.8 மில்லியன் அதிகமான பெண்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்). மற்றும் அரசியல் சமத்துவத்தை நோக்கிய மெதுவான முன்னேற்றம் ஆகிய குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு, பெண்களின் ஒட்டுமொத்த அபிவிருத்தி என்பது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான செயல்முறையாகும், ஆகையினால் இதற்கு நமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது எனப் பிரதமர் தெரிவித்தார். தலைமைத்துவம் மற்றும் தீர்மானங்களை இயற்றுதலில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல், ஒவ்வொரு மட்டத்திலும் அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல், CEDAW (பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாடு) மற்றும் UNSCR 1325 (ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1325) இணங்க பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் குறித்த தேசியக் கொள்கை மற்றும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தேசியச் செயல் திட்டத்தை (2023–2027) செயல்படுத்துதல் உள்ளிட்ட இலங்கையின் தேசிய உறுதிப்பாடுகளைப் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், உழைக்கும் வர்க்கம் மற்றும் விளிம்புநிலைச் சமூகங்கள் உட்பட, பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் இலங்கையின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். ஆரம்ப விழாவை அடுத்து, ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) மற்றும் முதல் பெண்மணி பெங் லியுவான் (Peng Liyuan) ஆகியோர் தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) ஏற்பாடு செய்திருந்த உத்தியோகபூர்வ விருந்துபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/227598
  24. 13 Oct, 2025 | 11:57 AM இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதி மோசடிகள் குறித்து கிடைக்கபெறும் பெரும்பாலான முறைப்பாடுகள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அதிக இலாபம் கிடைக்கும் எனக் கூறி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்தார். இந்த நிதி மோசடிகள் மூலம் 10 இலட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாடுகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வகையான இணைய நிதி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேசிய அடையாள அட்டை விபரங்கள், வங்கி விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227594

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.