Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 'நாங்கள் ஓடவில்லை': ஆதவ் அர்ஜூனா பேச்சும் உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றிய திமுக எம்.பி. விளக்கமும் பட மூலாதாரம், X/aadhavarjuna & P.Wilson படக்குறிப்பு, ஆதவ் அர்ஜூனா மற்றும் வில்சன் (வலது) 13 அக்டோபர் 2025, 08:24 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான மூவர் குழு சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தவெகவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "வலி மிகுந்த நாட்களை கடந்து வருகிறோம், எங்களுக்கு நெருக்கடியான காலகட்டம் இது. எங்கள் உறவுகள், எங்கள் குடும்பம் துக்கத்தில் உள்ளது. தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் எழுச்சி இருந்தது. கரூரில் நடைபெற்றது முதல் கூட்டம் கிடையாது. திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர் என பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். எனவே கரூரில் அன்று என்ன நடந்தது என்ற உண்மையை பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் பிரசாரங்களுக்கு செல்லும் போது காவல்துறை பெரிதாக உதவி செய்வதில்லை. அரியலூரில் உதவி செய்தனர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சில தகவல்களை கொடுத்து உதவினார். அதனால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தோம். ஆனால் அன்றைய தினம் நாமக்கல்லில் கூட்டத்தை முடித்து விட்டு, கரூரில் உள்ளே நுழையும் போது கரூர் காவல்துறை எங்களை வரவேற்றார்கள், திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் நின்று பேசுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் நிறுத்திய இடத்தில் தான் பேசினோம்." என்றார். "விஜய் தாமதமாக வரவில்லை" மேலும் பேசிய ஆதவ் அர்ஜூனா, "எங்கள் தலைவர் (விஜய்) தாமதமாக வந்தார் என்று வதந்திகள் பரப்பப்பட்டன. கரூரில் காவல்துறை வழங்கிய நேரம் மதியம் 3 மணி முதல் இரவு -10மணி வரை. அந்த நேரத்துக்குள் அங்கு வந்துவிட்டோம். தவறுகள் இருந்தால் கரூர் காவல்துறை ஏன் மாவட்ட எல்லையில் வரவேற்றது? கூட்டத்தில் தண்ணீர் கேட்ட போது விஜய் தண்ணீர் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வழி விட வேண்டும் என்ற போது அதற்கும் வழிவிட்டார். இந்த இடத்தை எந்த அளவுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்தார்கள் என்ற ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்." என்று கூறினார். " நாங்கள் ஓடவில்லை" தமிழக அரசின் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்று கூறிய ஆதவ் அர்ஜூனா, " சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல. கரூர் எல்லையில், நான், நிர்மல் குமார், அருண் ராஜ், ஆனந்த் ஆகியோர் காத்திருந்தோம். எங்கள் மொபைல் நெட்வொர்க் – தரவுகளை சரி பார்த்து அதை தெரிந்துக் கொள்ளலாம். காவல்துறையினர் எங்களை வரவேண்டாம், வந்தால் கலவரம் ஏற்படும், பிரச்னை உருவாகும் என்று கூறினார்கள். அதையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம். திட்டமிட்டு, தவெக வரக்கூடாது என்று ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்கள் மீது தீவிரவாதிகள் போல தடியடி நடத்தினார்கள். இறப்பு ஏற்பட்ட மூன்று -நான்கு நாட்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் முதலில் மனிதர்கள். பிறகு தான் அரசியல்வாதிகள். எங்கள் வீட்டில் யாராவது இறந்து போனால் உடனே ஊடகங்களுக்கு வந்து பேட்டி அளிக்க முடியுமா? கடந்த மாதம் 27-ம் தேதி முதல் அடுத்த ஞாயிறு வரை விடுமுறை, எனவே நீதிமன்றம் செல்ல முடியவில்லை. சமூக ஊடகங்களில் உண்மை பேசிய நபர்களை கைது செய்தார்கள். நீதிமன்றம் செல்ல முடியாத ஒரு வாரத்தில் திமுக தவெக மீது எப்படி குற்றம் சுமத்தி, பொய் பரப்பினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்" என்றார். பட மூலாதாரம், Getty Images "அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை நடைபெறும் போதே அரசு விளக்கம் ஏன்? " ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, அரசு உயர் அதிகாரிகள், அரசு செயலர்கள் அரசு தவறு செய்யவில்லை என்று எப்படி சொல்வார்கள் என கேள்வி எழுப்பினார் ஆதவ் அர்ஜுனா. "ஒரு விசாரணை நடைபெறும் போது எப்படி அரசு இதை செய்ய முடியும்." என்றார். மேலும், "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூட்ட நெறிமுறைகள் குறித்து வழக்கு நடக்கும் போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிறப்பு விசாரணை குழுவை அமைக்கிறார். அந்த விசாரணை வெளிப்படையாக நடைபெறுமா என்று தெரியாது. ஏனென்றால் உயர்நீதிமன்ற நீதிபதி, கடுமையாக கருத்துகளை, தவெக தான் தவறு செய்தது மாதிரி கருத்துகளை பதிவு செய்தார். தவெகவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள், தலைவரின் தலைமை பண்பு, அரசியல் வருகை குறித்து எல்லாம் பேசப்பட்டது. என்ன கோபம் உங்களுக்கு?" என்று அவர் தெரிவித்தார். "சிபிஐ விசாரணைக்கு ஏன் கொண்டாடுகிறார்கள்? " - திமுக படக்குறிப்பு, திமுக வழக்கறிஞர் வில்சன். இந்த வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். "தவெக சிபிஐ விசாரணை கேட்கவேயில்லை, பிறகு ஏன் நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு கிடைத்த வெற்றியை போல் பேசுகிறார்கள்" என்று அவர் கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், " இது இடைக்காலத் தீர்ப்பு. இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தவெக என்ன செய்தது என்றால் ஒன்றும் இல்லை. வாய்க்கு வந்த படி பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா. அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை தொடரும். சிறப்பு புலனாய்வு குழு இதுவரை நடத்திய விசாரணை அறிக்கையை ஒப்படைக்க சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் இதுவரை நடந்தது சரியே. " என்றார். சிபிஐ விசாரணை கோரிய இரண்டு மனுதாரர்கள் தங்களுக்கு தெரியாமல் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தது குறித்து கேட்ட போது, " தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட இரண்டு பேர் வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் பேசினார்கள். அவர்களை மனு அளிக்க சொல்லியிருக்கிறது நீதிமன்றம். மோசடியாக ஒரு தீர்ப்பைப் பெற்றால், நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்யும். இன்று கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு தெரியட்டும், புரியட்டும் இதுபோன்ற பிரச்னை உள்ளது என்று. இது இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. " என்றார். வீடியோ கால் மூலம் வழக்கில் ஷர்மிளா, செல்வராஜ் ஆஜர் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தங்கள் பெயரில் தங்களுக்கு தெரியாமல் மனு கொடுக்கப்பட்டதாக ஷர்மிளா மற்றும் செல்வராஜ் ஆகியோர் இன்று கூறியிருந்தனர். அவர்கள் இந்த விவகாரம் குறித்து கரூர் சட்ட உதவி மையத்தை நாடியதாகவும், எனவே சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்து இன்று இந்த வழக்கில் வீடியோ கால் மூலம் உச்சநீதிமன்றத்தில் தங்கள் கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர் என்று சட்ட உதவி மையத்தைச் சேர்ந்த தமிழ்முரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyw59nxzro
  2. காசா போர் நிறுத்தம் : 7 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் - இஸ்ரேல் மக்கள் மகிழ்ச்சி! Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 12:29 PM காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டுவந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியிலும் சிக்கித் தவிக்கின்றனர். இந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அமைதிக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலுக்குப் புறப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பிடம் சுமார் 20 பிணைக் கைதிகள் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில், 7 பிணைக் கைதிகளை போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு திங்கட்கிழமை (13) விடுவித்துள்ளது. இந்தப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட தகவல் இஸ்ரேல் தொலைக்காட்சிகளில் வெளியானதும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர். இந்தக் பிணைக்கைதிகள் பரிமாற்ற நிகழ்வு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வை பொதுவெளியில் அமைக்கப்பட்ட திரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227597
  3. 'கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை' - உச்ச நீதிமன்ற உத்தரவு முழு விவரம் பட மூலாதாரம், Getty Images 13 அக்டோபர் 2025, 05:29 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது. "இந்தப் பிரச்னைகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றன. தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த சம்பவம் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானது. எனவே, இடைக்கால நடவடிக்கையாக விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம்." என்று நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது. 3 பேர் அடங்கிய குழு கண்காணிக்கும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி, மற்றும் காவல்துறையில் ஐ.ஜி. பதவிக்குக் குறையாத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த, ஆனால் தமிழ்நாட்டைச் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் அதற்கு சுதந்திரம் உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை இந்த மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள். பட மூலாதாரம், Getty Images சென்னை உயர் நீதிமன்ற செயல்பாட்டில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி அரசியல் பேரணிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை மட்டுமே கோரும் மனுவில், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளின் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. பேரணிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரும் ரிட் மனு, குற்றவியல் ரிட் மனுவாக எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் உச்ச நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது. வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரும் மேற்படி மனுவை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் அதிகார வரம்பிற்குள் வரும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதியின் எந்த குறிப்பிட்ட அங்கீகாரமும் இல்லாமல், சென்னை உயர் நீதிமன்றம் (சென்னை அமர்வு) ஏற்றுக்கொண்டிருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சென்னை அமர்வு அந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தமிழக அரசுக்கு 8 வாரம் அவகாசம் தவெக மற்றும் பிற தரப்பினர் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, சிபிஐ விசாரணை கோரும் இரண்டு மனுக்களிலும் மனுதாரர்கள் தங்களுக்குத் தெரியாமல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக அரசு சார்பில் வாதாடிய ஏ.எம். சிங்வி மற்றும் பி. வில்சன் ஆகியோர் அமர்விடம் தெரிவித்தனர். இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறினர். தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய எட்டு வார கால அவகாசத்தையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மனுக்கள் விவரம் கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளை மட்டுமே கொண்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை இந்த மனு எதிர்த்தது. தவெக மற்றும் விஜய் மீது உயர் நீதிமன்றம் தெரிவித்த பாதகமான கருத்துகளுக்கும் அந்த மனுவில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சி கோரியது. விசாரணையை சிபிஐக்கு மாற்ற மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அக்டோபர் 3 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு மற்ற மனுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. பட மூலாதாரம், TVK IT Wing Official/X உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் விசாரணையின் போது, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த விதம் குறித்து வாய்மொழியாக உச்சநீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது. அரசியல் பேரணிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரிய மனுவில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. கரூர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் அதிகார வரம்பிற்குள் வரும்போது சென்னையில் உள்ள முதன்மை அமர்வு எவ்வாறு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டது. அதே இடத்தில் பாதை மிகவும் குறுகலானது என்று கூறி மற்றொரு கட்சியான அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கியது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 30-40 உடல்களின் பிரேத பரிசோதனை நள்ளிரவில் எப்படி செய்யப்பட்டது? அதிகாலை 4 மணிக்கு உடல்கள் தகனம் செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கரூரில் நடந்தது என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் இரவு சுமார் 7 மணியளவில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வந்தது. ('லைவ் லா' இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg43yk4ve0xo
  4. உயரம் பாய்தலில் மன்னார் மாணவி வில்ஷியா, களுதாவளை மாணவன் பகிர்ஜன் புதிய போட்டி சாதனைகள் Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 03:22 PM (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவி ஒருவரும் மாணவன் ஒருவரும் உயரம் பாய்தலில் சாதனைகள் படைத்து தங்கப் பதக்கங்களை சுவீகரித்து அசத்தியுள்ளனர். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 1.56 மீற்றர் உயரத்தைத் தாவிய மன்னார் பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி டபிள்யூ. வில்ஷியா புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உயரம் பாய்தலில் 1.98 மீற்றர் உயரத்தைத் தாவிய மட்டக்களப்பு பண்டத்தரிப்பு களுதாவளை மகா வித்தியாலாய மாணவன் கே. பகிர்ஜன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். பகிர்ஜனின் ஆற்றல் வெளிப்பாடு பிரமிக்கத்தக்கதாக அமைந்துள்ளது என மெயல்வல்லுநர்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் கே. கிருஷான் 50.39 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண பாடசாலைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து ஏனைய பாடசாலைகளை பிரமிக்கவைத்தன. இப்போட்டியில் அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி பி. சண்முகப்பிரியா, விக்டோரியா கல்லூரி மாணவி கே. வைஷ்ணவி, ஸ்கந்தவரோதயா கல்லூரி மாணவி எஸ். சகானா ஆகியோர் 2.60 மீற்றர் உயரத்தை தாவி முயற்சிகளின் அடிப்படையில் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர். 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் முருங்கன் மகா வித்தியாலய மாணவன் ஏ.கெமில்டன் (6.91 மீற்றர்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஆயிலிலாய் (10.04 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா காமினி மகா வித்தியாலய மாணவன் ஈ. விகிர்தன் (3:59.20) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தலில் 4.50 மீற்றர் உயரத்தைத் தாவிய தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் சந்திரகுமார் துஷாந்தன் முதலாம் இடத்தையும் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் கஜானன் அதே உயரத்தைத் தாவி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். எனினும் இப் போட்டியில் முன்றாம் இடத்தைப் பெற்ற மேல் மாகாண பாடசாலை மாணவனின் அவயவத்தில் பச்சைக் குத்தப்பட்டிருந்ததாகவும் இது பாடசாலை மாணவர்களுக்கான ஒழுக்க விதிகளை மீறுவதாகவும் தெரிவித்து அவரை தகுதிநீக்கம் செய்யுமாறு தெல்லிப்பழை மகாஜனா, சாவகச்சேரி இந்து, ஸ்கந்தவரோதயா ஆகிய கல்லூரிகளின் அதிகாரிகள் எழுத்துமூல ஆட்சேபனை செய்ததால் அப் போட்டிக்கான முடிவு தீர்ப்பாளர்களால் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆட்சேபனை மனுவை பரீசீலித்த கல்வி அமைச்சு அதிகாரிகள், குறிப்பிட்ட மாணவனை சோதனையிட்ட போது அவரது கையில் பச்சைக் குத்தப்பட்டிருப்பது ஊர்ஜிதமானதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் லூத்தினன் கேனல் அனுர அபேவிக்ரமவிடம் வினவியபோது, இந்த ஆட்சேபனையை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாணவனின் தரப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேன்முறையீட்டு குழுவினர் வழங்கும் தீர்ப்பின் பின்னரே போட்டி முடிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் பதிலளித்தார். கிழக்கு மாகாண வெற்றியாளர்கள் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தலில் ஒலுவில் அல் ஹம்ரா மகா வித்தியாலய மாணவன் யூ. அப்துல்லா (5.99 மீ.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் மூதூர் அல் ஹம்ரா மாணவன் ஆர்.எம். அஹ்சான் (40.88 மீ.) 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கந்தளாய் அல் தாரிஹ் மகா வித்தியலாய மாணவன் எம்.பி.எம். அஸாம் (10.85 செக்.) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தனர். https://www.virakesari.lk/article/227619
  5. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹமாஸ் விடுவித்த 7 பணயக்கைதிகளுடன் இஸ்ரேலிய ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்ற காட்சி 13 அக்டோபர் 2025, 09:28 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸ் இரண்டு தொகுதிகளாக 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள், பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் தங்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருதரப்பிலும் நீண்ட நாட்களாக பிரிந்திருந்த உறவுகளை மீண்டும் சந்திக்கும் ஆவலில் குடும்பத்தினர் உணர்ச்சிமயமாக காட்சியளித்தனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இஸ்ரேலிய பணயக்கைதி எய்ட்டன் ஹார்னை வரவேற்கும் ஆவலில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, முதல் 7 பேரில் ஒருவராக இஸ்ரேலிய பணயக்கைதி ஆலன் ஒஹெல்லை ஹமாஸ் விடுவித்த செய்தி அறிந்ததும் மகிழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பாலத்தீன சிறைக்கைதிகள் விடுதலை ஒப்பந்தப்படி, ஹமாஸ் 48 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். அவர்களில் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் 20 பேர் 2 தொகுதிகளாக விடுவிக்கப்பட்டனர். அதற்கு ஈடாக, இஸ்ரேல் 250 பாலத்தீன கைதிகளையும், தடுப்புக்காவலில் உள்ள 1,700 பாலத்தீனியர்களையும் விடுவிக்கும். இஸ்ரேல் சிறையில் இருந்து வெளியே வந்த பல வேன்கள் பாலத்தீன கைதிகளை ஏற்றிச் சென்றதாக நம்பப்படுகிறது. அவர்களை வரவேற்க ரமல்லா நகரில் குடும்பத்தினரும், உறவினர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் இருந்து வந்த வேன்கள். விடுவிக்கப்பட்ட பாலத்தீன கைதிகள் அந்த வேன்களில் ஏற்றிச் செல்லப்படுவதாக நம்பப்படுகிறது. படக்குறிப்பு, இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பாலத்தீன கைதிகளை வரவேற்க காத்திருக்கும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள். ஹோஸ்டேஜ் சதுக்கத்தில் கூடிய மக்கள் முன்னதாக, இஸ்ரேலிய பணயக்கைதிகளின் வருகைக்காக அவர்களது உறவினர்கள் டெல் அவிவ் நகரில் உள்ள ஹோஸ்டேஜ் சதுக்கத்தில் அதிகாலை 5 மணியளவிலேயே திரளாக கூடிவிட்டனர். அங்குள்ள பெரிய திரைகளில் பணயக்கைதிகள் விடுதலை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த சதுக்கத்தில் காத்திருந்த மக்களின் புகைப்படத்தை ஒரு சமூக வலைதளப் பயனர் பகிர்ந்துள்ளார். 'சதுக்கம் பணயக்கைதிகளின் வருகைக்காக காத்திருக்கிறது' என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, பணயக்கைதிகளின் விடுதலைக்காக காத்திருக்கும் இஸ்ரேலியர்கள் போர் நிறுத்தம் தொடரும் - டிரம்ப் இஸ்ரேலுக்கு புறப்படும் முன்பாக, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தம் தொடரும் என்றும், காஸாவிற்கான அமைதி வாரியம் விரைவில் அமைக்கப்படும் என்றும் கூறினார். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, டிரம்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்கிறார் "யூதர்கள், இஸ்லாமியர்கள் அல்லது அரேபியர்கள் என அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதே எங்கள் குறிக்கோள். இஸ்ரேலுக்குப் பிறகு, நான் எகிப்துக்குச் செல்வேன். அங்குள்ள மிகவும் சக்திவாய்ந்த, பெரிய, பணக்கார நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்," என்று டிரம்ப் கூறினார். இஸ்ரேலுக்கு வந்த பிறகு, டிரம்ப் திங்கட்கிழமை எகிப்துக்குச் செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் காஸா பிரச்னை குறித்து ஆலோசிக்க உள்ளார். பிரிட்டன் பிரதமர் ஸ்டாமரும் எகிப்துக்கு வந்துள்ளார். இந்த கூட்டத்தில் அவரும் பங்கேற்க உள்ளார். எகிப்தில் முக்கிய பேச்சுவார்த்தைகள் பாலத்தீன விடுதலை அமைப்பின் (PLO) தலைவர் ஹுசைன் அல்-ஷேக் ஞாயிற்றுக்கிழமை காலை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரை சந்தித்து, காஸாவின் எதிர்காலம் குறித்து விவாதித்தார். பாலத்தீன விடுதலை அமைப்பு (PLO), காஸா பிரச்னையில் டொனால்ட் டிரம்ப் மற்றும் டோனி பிளேருடன் சேர்ந்து, மற்ற நாடுகளுடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், காஸா விவகாரங்களை மேற்பார்வையிடும் குழுவில் டோனி பிளேர் இருப்பாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று டிரம்ப் கூறினார். இஸ்ரேல் பயணத்துக்கு புறப்படும் முன் ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், 'போர்களுக்கு தீர்வு காணவும், அமைதியை நிலைநாட்டவும் தான் நான் பணியாற்றுகிறேன்' என்று கூறினார். 'இது நான் தீர்த்து வைத்த எட்டாவது போர். நான் இதை நோபல் அமைதி பரிசுக்காக அல்ல, மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக செய்கிறேன்' என்றும் அவர் கூறினார். டிரம்புக்கும் பிற தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடைபெற உள்ளன. இந்த மாநாடு 'காஸா அமைதி உச்சிமாநாடு' என்று அழைக்கப்படுகிறது. காஸா போருக்கு முடிவு காண்வதை நோக்கமாகக் கொண்ட இந்த உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மன் அதிபர் பிரிட்ரிக் மெர்ஸ், இத்தாலிய பிரதமர் மெலோனி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் பங்கேற்கிறார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காஸாவில் உணவு விநியோக லாரிகளுக்கு அருகில் மக்கள் கூடி, அவற்றை எடுத்துச் செல்லும் காட்சி. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டெரெஸ், தானும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தார். பாலத்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவிற்கு பிரிட்டன் ரூ.216 கோடி நிதி உதவி அறிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgvdn91lzdo
  6. காலி - பிலான பகுதியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழந்தார். வீட்டில் உள்ள கழிவறை குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முயன்ற போது நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். 50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmgonwccm00yjqplpn4ia8856 https://www.facebook.com/reel/1324971306092243
  7. மலையக தமிழ் மக்களுக்கள் வாக்குகளுக்காக மாத்திரமே பயன்படுத்தினர் அவர்களுக்கான அபிவிருத்திகளை குழப்புவதற்கு இனியும் முயற்சிக்காதீர் - பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் Published By: Vishnu 13 Oct, 2025 | 05:15 AM (எம்.மனோசித்ரா) மலையக தமிழ் மக்கள் காலம் காலமாக வாக்குகளுக்காக அரசியல்வாதிகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்களே தவிர அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்னதாகவே ஹட்டன் பிரடகனத்தின் ஊடாக அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே கடந்த காலங்களைப் போன்று இவற்றைக் குழப்புவதற்கு இனியும் முயற்சிக்க வேண்டாம் என எதிரணியினரிடம் கேட்டுக் கொள்வதாக பெருந்தோட்ட , சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். பண்டாரவளையில் 2056 பயனாளிகளுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் வீட்டுறுதிக்கான ஆவணத்தை வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மலையக மக்கள் இருநூறு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாக திகழ்கின்றனர். நாட்டில் பல வைத்தியர்களையும் தொழில் வல்லுனர்களையும் உருவாக்கிய அவர்களுக்கு இலவச கல்வி கூட மறுக்கப்பட்டது. வாக்குகளுக்காக அரசியல்வாதிகளால் அந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்களே தவிர அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலைமையில் கடந்த ஆண்டு உலகத்திலேயே அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான சம்பவமாக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் நாயகனாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தேர்தலுக்கு முன்னதாகவே ஹட்டன் பிரகடனத்தின் ஊடாக பல்வேறு வேலை திட்டங்களை முன்மொழிந்திருந்தது. அந்த வேலைத்திட்டங்களில் மிக முக்கியமாக மலையக மக்களின் காணி உரிமம் மற்றும் வீட்டு உரிமத்தை இந்த அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என உறுதியளித்திருந்தோம். மலையக மக்களின் வரலாற்றில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் சிறந்த தலைமைத்துவம் வழங்கப்படுகிறது. மலையக மக்களின் சேவையை இலங்கை மாத்திரம் இன்றி முழு உலகமும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. எமது வேலைத் திட்டங்களின் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வினை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு துன்பங்களை அனுபவித்து வரும் மக்களுக்காக 10 000 வருட திட்டத்தை அறிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மொத்த இந்திய அரசுக்கும் எமது மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இந்திய வீட்டுத்துடன் அந்த மக்களுக்கான காணி உரிமத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வழங்கும் என மீண்டும் உறுதியளிக்கின்றேன். அதேபோன்று பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வையும் நிச்சயம் பெற்றுக் கொடுப்போம். இன்று எம்மை விமர்சிக்கும் மலையக பிரதிநிதிகள் இதுவரையும் அந்த மக்களுக்கு இழைத்த துரோகம் போதும். எனவே அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் அந்த மக்கள் சமூகத்தை குழப்புவதற்கு இனியும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். மலையக மக்கள் மாத்திரமின்றி சகல இன மக்களுக்கும் சிறப்பான ஒரு நாட்டை நாம் உருவாக்குவோம். கடந்த ஆட்சியாளர்கள் மலையக மக்களை மறந்திருந்தாலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவ்வாறு செயல்படாமல் அவர்களை நினைவில் இருத்தி அவர்களுக்கான தேசிய வேலை திட்டத்தை ஆரம்பித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/227570
  8. 2030 ஆம் ஆண்டுக்குள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அனர்த்த முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆண்டுக்கு சுமார் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் என அந்த அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 13 ஆம் திகதி சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது. ஒற்றுமையின் மூலம் மட்டுமே உலகைப் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்பதே சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருளாகும். https://adaderanatamil.lk/news/cmgolgnpn00yiqplpw28r6sel
  9. காஸாவில் 27 பேர் பலி: இஸ்ரேல் படை வெளியேறிய பிறகு ஹமாசுடன் மோதும் ஆயுதக்குழு - என்ன நடக்கிறது? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, காஸாவில் ஹமாஸ் படைகளுக்கும் ஆயுதமேந்திய துக்முஷ் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்டுரை தகவல் ரஷ்தி அபுஅலௌஃப் காஸா செய்தியாளர் (இஸ்தான்புல்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா நகரில் ஹமாஸ் பாதுகாப்புப் படைகளுக்கும் துக்முஷ் குடும்பத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த கடுமையான மோதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை முடிவுற்ற பிறகு நடந்த மோசமான மோதல்களில் ஒன்றாகும் இது. "முகமூடி அணிந்த ஹமாஸ் படையினர் ஜோர்டானிய மருத்துவமனை அருகே துக்முஷ் போராளிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படைகள் அவர்களைச் சுற்றி வளைத்து தடுத்து வைக்க கடுமையான சண்டையில் ஈடுபட்டனர் என்றார். "போராளிகளின் ஆயுதமேந்திய தாக்குதலில்" எட்டு ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை சண்டை தொடங்கியதில் இருந்து 19 துக்முஷ் உறுப்பினர்கள் மற்றும் எட்டு ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, காஸா தெருக்களில் ஹமாஸ் படையினர் தெற்கு காஸா நகரில் உள்ள டெல் அல்-ஹவா சுற்றுப்புறத்தில் 300 க்கும் மேற்பட்டவர்களை கொண்ட ஹமாஸ் படை, துப்பாக்கி ஏந்திய துக்முஷ் உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் இருந்த குடியிருப்பு கட்டடத்தை தாக்க முன்னேறியதை அடுத்து மோதல்கள் வெடித்தன என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். "கடுமையான துப்பாக்கிச் சூட்டினால் பல டஜன் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அப்பகுதியில் மக்கள் பீதி அடைந்தனர்" என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். அவர்களில் பலர் போரின் போது பல முறை இடம்பெயர்ந்தவர்கள். "இந்த முறை மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடவில்லை, அவர்கள் தங்கள் சொந்த மக்களிடமிருந்து ஓடிக் கொண்டிருந்தனர்" என்று அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர் கூறினார். காஸாவின் மிக முக்கியமான குடும்பங்களில் ஒன்றான துக்முஷ் குடும்பம் நீண்ட காலமாக ஹமாஸுடன் பதற்றமான உறவைக் கொண்டுள்ளது. அதன் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் ஹமாஸ் குழுவுடன் மோதியுள்ளனர். ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா உள்துறை அமைச்சகம், அதன் படைகள் காஸாவில் சட்டம் - ஒழுங்கை மீட்டெடுக்க முயன்று வருவதாக கூறியுள்ளது. மோதலுக்கு என்ன காரணம்? மோதல்களுக்கு யார் காரணம் என்பது குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். துப்பாக்கி ஏந்திய துக்முஷ் உறுப்பினர்கள் தனது இரண்டு போராளிகளைக் கொன்றதாகவும், அதில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ், அதுவே மோதலை தூண்டியதாக கூறியுள்ளது. எனினும் சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதலில் அல்-சப்ரா சுற்றுப்புறத்தில் தங்களது வீடுகள் அழிக்கப்பட்ட பின்னர் துக்முஷ் குடும்பம் ஒரு கட்டடத்தில் தஞ்சம் புகுந்தது. அது ஒரு காலத்தில் ஜோர்டானிய மருத்துவமனையாக செயல்பட்டது. அந்த கட்டடத்துக்குள் ஹமாஸ் நுழைந்ததாக துக்முஷ் குடும்பத்தின் வட்டாரம் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தனது படைகளுக்கு ஒரு புதிய தளத்தை நிறுவுவதற்காக அந்த கட்டடத்திலிருந்து துக்முஷ் குடும்பத்தை வெளியேற்ற முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேலிய துருப்புகளால் சமீபத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த காஸாவின் பகுதிகளில் தனது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த ஹமாஸ் தனது பாதுகாப்புப் படைகளின் சுமார் 7,000 உறுப்பினர்களை திரும்ப அழைத்துள்ளது என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயுதமேந்திய ஹமாஸ் பிரிவுகள் ஏற்கனவே பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் காஸா காவல்துறையின் நீல நிற சீருடைகளில் உள்ளனர், சில சீருடைகள் அல்லாமல் பொதுமக்கள் போன்ற ஆடைகளை அணிந்துள்ளனர். ஹமாஸ் ஊடக அலுவலகம் "தெருக்களில் போராளிகளை" நிறுத்தியிருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz91weey8l0o
  10. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய உலகக் கிண்ண வெற்றி இலக்கை கடந்து அவுஸ்திரேலியா அபார வெற்றியீட்டியது Published By: Vishnu 13 Oct, 2025 | 04:42 AM (நெவில் அன்தனி) விசாகபட்டினம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற மிகவும் பரபரப்பான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகப் பெரிய வெற்றி இலக்கை அடைந்த அவுஸ்திரேலியா, வரவேற்பு நாடான இந்தியாவை 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் வெற்றிகொண்டது. அனாபெல் சதர்லண்ட் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல், அணித் தலைவி அலிசா ஹீலி குவித்த அபார சதம் என்பன அவுஸ்திரேலியாவுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தன. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 331 ஓட்டங்கள் என்ற மிகப் பெரிய மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 49 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 331 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது. இதன் மூலம் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை அவுஸ்திரேலியா சற்று அதிகரித்துக்கொண்டதுடன் இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பு ஊசலாட்டத் தொடங்கியுள்ளது. ஆரம்ப வீராங்கனை அலிசா ஹீலி மிக அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 107 பந்துகளில் 21 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 142 ஓட்டங்களைக் குவித்தார். இதனிடையே 40 ஓட்டங்களைப் பெற்ற ஃபோப் லிச்பீல்டுடன் முதலாவது விக்கெட்டில் 85 ஓட்டங்களை அலிசா ஹீலி பகிர்ந்தார். மொத்த எண்ணிக்கை 154 ஓட்டங்களாக இருந்தபோது எலிஸ் பெரி உபாதைக்குள்ளாகி 32 ஓட்டங்களுடன் தற்காலிய ஓய்வு பெற்றார். எனினும் 6ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மீண்டும் துடுப்பெடுத்தாட களம் புகுந்த எலிஸ் பெரி 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். மத்திவரிசையில் ஆஷ்லி கார்ட்னர் 45 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஸ்ரீ சரணி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தீப்தி ஷர்மா 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அமன்ஜோத் கோர் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. ஸ்மிரித்தி மந்தனா, ப்ராத்திக்கா ராவல் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்ததுடன் 155 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். மந்தனா 66 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைப் பெற்றார். இதனிடையே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை மந்தனா பூர்த்திசெய்தார். ப்ராத்திக்கா ராவல் 75 ஓட்டங்களைப் பெற்றார். அவர்களை விட ஹார்லீன் டியோல் 38 ஓட்டங்களையும் ஜெமிமா ரொட்றிகஸ் 33 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் 32 ஓட்டங்களையும் பெற்றனர். 43ஆவது ஓவரில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்தியா, அதன் கடைசி 6 விக்கெட்களை வெறும் 36 ஓட்டங்களுக்கு இழந்தது. இதுவும் அதன் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது. பந்துவீச்சில் அனாபெல் சதர்லண்ட் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சொஃபி எக்லஸ்டொன் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: அலிசா ஹீலி. https://www.virakesari.lk/article/227565
  11. அததெரண கருத்துப் படம்
  12. இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (12) பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இதேவேளை, 200 வருடகாலமாக வாழும் ஒரு சமூகத்தினருக்கு குறைந்த பட்சம் சிறிய அளவிலான காணி கூட இல்லாமல் இருக்கின்றனர். எனவே அவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இந்த வருடத்தில் அந்த தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறுமை, ஊட்டச் சத்து குறைபாடு, சுகாதார ரீதியான பாரிய பின்னடைவை மலையக மக்களே அதிகளவில் எதிர்நோக்கியுள்ளனர். எனவே அதில் கவனம் செலுத்தி சிறந்த சுகாதார சேவையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் நாட்டில் சுத்தமான குடிநீரை வழங்க புதிய திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும். வறுமைக்கும், கல்விக்கும் பாரிய தொடர்பு உள்ளது. எனவே மக்களை வறுமையில் இருந்து மீட்டு எடுப்பதற்கு சிறந்த கல்வி திட்டத்தை உறுதி செய்வோம். மலையக மக்களின் கௌரவம் அடிமட்டத்தில் உள்ளது என்பதை அறிவோம். எனவே அவர்களது கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து அவர்களது சமூகத்தை வளர்ச்சியடைவதற்கு அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmgnbia9400y3qplpzn52d1sl
  13. வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் – இந்திய உயர்ஸ்தானிகர் Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 04:23 PM வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பண்டாரவளையில் நடைபெற்ற இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் தொகுதி அங்குரார்ப்பண நிகழ்விலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், இன்றைய நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. இந்தியாவின் உதவியுடன் செயல்படும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று துவங்கப்படுகிறது. இது இந்தியா – இலங்கை உறவின் ஆழத்தையும் நட்பையும் பிரதிபலிக்கிறது. இரு நாடுகளும் இணைந்து மக்களின் வாழ்க்கை நலனையும் முன்னேற்றத்தையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகின்றன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மேற்கொண்ட இருதரப்பு முயற்சிகளால் இந்த உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது. “சப்கா சாஸ், சப்கா விகாஸ்” (அனைவருடனும் வளர்ச்சி) என்ற மந்திரத்தின் கீழ் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது; அதேபோல் இலங்கையும் “வேறு ஒரு நாடு, அழகான வாழ்க்கை” என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது. இது இரு நாடுகளின் வரலாற்று, கலாச்சார, சமூக பிணைப்புகளின் சின்னமாகும். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள், இரு நாடுகளுக்கிடையிலான உறவின் பாலமாக இருந்து வருகின்றனர். அவர்கள் இலங்கையின் பொருளாதாரம், கல்வி, சமூக மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றனர். இன்றைய திட்டம் — மொத்தம் 14,000 வீடுகள் — அந்த சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டத்தில் 4,000 வீடுகள் நிறைவு பெற்றுள்ளன. 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தபடி, நான்காம் கட்டத்தின் கீழ் மேலும் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இன்று அதில் இரண்டாம் கட்டம் துவங்கப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் ஆதரவில் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மொத்தம் 65,000 வீடுகள், ரூ. 64 பில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பில் கட்டப்படும். இது பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பான இருப்பிடத்தையும் மேம்பட்ட வாழ்க்கையையும் அளிக்கும். வீடுகள் கட்டுவது மட்டுமல்ல; எதிர்காலத்தை கட்டுவதே இந்தியாவின் நோக்கம். கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, சமூக உட்புகுத்தல் போன்ற துறைகளிலும் இந்தியா இலங்கையுடன் இணைந்து பணிபுரிகிறது. இதுவரை பல பள்ளிகளுக்கு சயின்ஸ் லேப், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து, இந்தியா 2.5 பில்லியன் ரூபாய் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் கீழ் பல சமூக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன — குறிப்பாக STEM ஆசிரியர் பயிற்சி திட்டம் மூலம் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அதேபோல், சுகாதார வசதிகள், கல்வி நிறுவன மேம்பாடு, சமூக இணைப்பு ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பிரதமர் மோடி அவர்கள் தனது அண்மைய விஜயத்தின் போது சீகதா அம்மன் ஆலய அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கான உதவிகளையும் அறிவித்திருந்தார். இதனால் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் வேகமாக நடைபெறும். இந்தியாவின் உதவி என்பது ஒரு நண்பனின் உதவியல்ல — ஒரு குடும்ப உறுப்பினரின் பொறுப்புணர்வு கொண்ட உதவியாகும். இன்றைய நிகழ்வில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்திய பூர்விகத் தமிழர் சமூகத்துக்கான ஆதரவு எப்போதும் தொடரும். திருவள்ளுவர் கூறியது போல — “விருப்பறாச் சுற்றம் இகயின் அருப்பறா ஆகும் பலவும் தரும்.” அதாவது, உண்மையான பாசமும் நம்பிக்கையும் கொண்ட உறவு பல நன்மைகளை அளிக்கும். அந்த உறவின் அடிப்படையில் தான் இந்தியா–இலங்கை நட்புறவு வேரூன்றி வளர்ந்து வருகிறது. இறுதியாக, நெருங்கிவரும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வீடமைப்புத் திட்டத்தின் மூலம் பல குடும்பங்கள் தங்கள் புதிய இல்லங்களில் ஒளியையும் நம்பிக்கையையும் காணட்டும் எனக் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/227554
  14. Live 13th Match (D/N), Visakhapatnam, October 12, 2025, ICC Women's World Cup India Women 330 Australia Women (45/50 ov, T:331) 303/6 AUS Women need 28 runs in 30 balls. Current RR: 6.73 • Required RR: 5.60 • Last 5 ov (RR): 29/2 (5.80)
  15. இல்லாததை இருப்பதாக கனவு காணமுடியாதே அண்ணை! இயற்கையானதை ஏற்றுக்கொள்ளத் தானே வேணும். முழு மனித உலகத்தோரும் ஆபிரிக்க வழித்தோன்றல்களே எனின் உயர்வு தாழ்வு ஏது?
  16. திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் 26 ஆவது நாளாக தொடர் போராட்டம் 12 Oct, 2025 | 04:45 PM திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் (12) 26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர். அகில இலங்கை விவசாய சம்மேளனம்,மக்கள் போராட்ட முண்ணனியின் செயற் குழு உறுப்பினர் வசந்த முதலிகேவும் விசேடமாக குறித்த விவசாயிகளுக்காக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்றும் அவர்கள் இவ் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் இணைந்துள்ளனர். பிரதமரினால் வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட தீர்வுக்காக இன்னும் 08 நாட்களே உள்ளனவு எனவும் குறித்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதே வேலை முத்து நகர் பகுதியில் சூரிய மின்சாரத்துக்கு அபகரிக்கப்பட்ட காணியை விடுத்து அண்மையில் உள்ள காணிக்குள் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 09 விவசாயிகளை சீனக்குடா பொலிஸார் நேற்று (11) மாலை கைது செய்துள்ளனர். இதனால் இம் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் தொடர்ந்தும் போராட்டங்களுடனேயை செல்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் தங்களது காணியை பெற்றுத்தரக்கோரிய போராட்டங்களை நடாத்திய போதிலும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸாரினால் இதற்கு முன்னர் ஐந்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் சுமார் 14 நாட்கள் அடைக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட செயலத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது முன்னுக்கு பின்னுக்கு முரணான கருச்தாக சூரிய மின் சக்திக்காக தனியார் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட காணிகளை விடுவிப்பதா இல்லையா தொடர்பான கருத்துக்களையே ஆளும் தரப்பு எம்.பிக்கள் கூறுவருவதாகவும் தெரிவிக்கின்றனர். சுமார் 800 ஏக்கரில் தற்போது வரைக்கும் 200 ஏக்கரளவில் சூரிய மின் சக்தி திட்டத்துக்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அப் பகுதியில் உள்ள இரு குளங்களை மூடி இதனை முன்னெடுப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி, விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227548
  17. 12 Oct, 2025 | 04:32 PM கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூவியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை இந்திய இராணுவம் கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227553
  18. பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்க்கும் திறன் தாலிபனுக்கு இருக்கிறதா? - மோதலுக்கு காரணம் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளில் ஆப்கானிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது. 58 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கர தாக்குதல் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த தாக்குதலுக்கு இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். எந்தவொரு தூண்டுதலும் இல்லாமல் ஆப்கன் தாலிபன் ராணுவம் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து சனிக்கிழமை இரவு பல பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. பாகிஸ்தான் படைகள் 21 ஆப்கன் எல்லைகளைக் கைப்பற்றியதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத பயிற்சி தளங்கள் என்று அவர்கள் குறிப்பிட்ட இடங்களை அழித்ததாகவும் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். பதில் தாக்குதலில் "200-க்கும் மேற்பட்ட தாலிபன் மற்றும் கூட்டாளி வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தாலிபன் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறி வியாழக்கிழமை காபூலுக்கு அருகே உள்ள சந்தைப் பகுதியில் பாகிஸ்தான் குண்டுவீசியதாக அவர் குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, வான்வழித் தாக்குதல்கள் குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் "பாகிஸ்தான் மக்களின் உயிரைப் பாதுகாக்க தேவையானவற்றை நாங்கள் செய்கிறோம். தொடர்ந்து செய்வோம்." எனக் கூறினார். பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்திற்காக அவர்களின் எல்லை பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என ஆப்கானிஸ்தானிடம் அவர் வலியுறுத்தினார். தாலிபன் ஆட்சிக்கு பிறகான பயங்கர மோதல் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) உறுப்பினர்களுக்கு தாலிபன் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. 2021ஆம் ஆண்டு தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நடக்கும் மிகக் கடுமையான மோதல்களில் ஒன்று இந்த சமீபத்திய மோதல் ஆகும். பாகிஸ்தானுக்குள் தீவிர தாக்குதல்களை நடத்திய தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) உறுப்பினர்களுக்கு, தாலிபன் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுவதால், இருநாட்டு உறவுகள் படிப்படியாக மோசமடைந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டை தாலிபன் மறுக்கிறது. பிபிசியிடம் பேசிய ஆய்வாளர் அமீர் ஜியா, இந்த மோதலை தேவையற்ற மோதல் எனவும் இரு தரப்பின் ராஜதந்திரத்தின் தோல்வி என்றும் குறிப்பிடுகிறார். பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை தாலிபன் அரசு கவனிக்கவில்லை என்றார். ஆனால் பாகிஸ்தான் நீண்ட காலமாக ஒற்றை புள்ளி கோரிக்கையுடனே இருந்ததாகவும் அவர் வாதிடுகிறார். "பல தசாப்தங்களாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபன்களுக்கான ஆதரவை தேசிய நலன் சார்ந்த விஷயமாகக் கருதி வந்தது" என்று அவர் கூறினார். "கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, நாம் எங்கே தவறு செய்தோம் என்று பார்க்க வேண்டும். அவர்களை நன்றியற்றவர்கள் என்று அழைப்பது போன்ற கடுமையான மொழியைப் பயன்படுத்துவது பிளவை ஆழப்படுத்தும்." என்றார். ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் டுராண்ட் கோடு எனப்படும் 2,600 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துள்ளன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகிரும் டுராண்ட் கோடு. பல மாதங்களாக இருந்த ராஜதந்திர நெருக்கடிக்குப் பிறகு, இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான அமைதியற்ற உறவு மீண்டும் வெளிப்படையான மோதலின் விளிம்பில் வந்து நிற்கிறது என்பதை இந்த சமீபத்திய மோதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆகஸ்ட் 2021-ல் தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள் அடிக்கடி வெடித்தன. தங்களின் மேற்கு எல்லையை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும், TTPயின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும் பாகிஸ்தான், தாலிபன்களின் வருகையை முதலில் வரவேற்றது. TTP என்பது ஆப்கானிஸ்தான் தாலிபனுடன் சித்தாந்த ரீதியாக இணைந்த ஆனால் பாகிஸ்தான் அரசை வீழ்த்துவதில் கவனம் செலுத்தும் குழு ஆகும். மாறி மாறி குற்றச்சாட்டு பட மூலாதாரம், Getty Images மாறாக வன்முறை அதிகரித்துள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்பட்ட TTP தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆப்கன் அதிகாரிகள், தங்களுடைய நிலப்பரப்பில் இருந்து வீரர்கள் செயல்பட அனுமதி அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இத்தகைய குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் சொல்லப்படுபவை என கூறுகின்றனர். சமீபத்திய ஆண்டுகளில், டுராண்ட் கோட்டின் வேலி அமைப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. சாமன், குர்ரம் மற்றும் பஜௌர் போன்ற பகுதிகளில் எல்லை தாண்டிய தூப்பாக்கிச் சூடுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் அவ்வப்போது முக்கிய வர்த்தகங்கள் மூடப்படுகின்றன. பரஸ்பர அவநம்பிக்கை, பொருளாதார நெருக்கடி மற்றும் உரிய பாதுகாப்பு நெறிமுறை இல்லாமை ஆகியவை ஒரு காலத்தில் செல்வாக்குக்கான ரகசியப் போராட்டமாக இருந்த ஒன்றை வெளிப்படையான விரோதமாக மாற்றியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆய்வாளர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தாலிபன்களை விட செல்வாக்கு மிக்க நாடுகளிடம் பாகிஸ்தான் உதவியை நாடலாம் என்கிறார் ஜியா இஸ்லாமாபாத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளரான இம்தியாஸ் குல், இந்த வன்முறை மாதக் கணக்கில் நடந்த பதற்றத்தின் தர்க்கரீதியான விளைவு என்கிறார். "பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்து வரும் TTP-க்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க ஆப்கானிஸ்தான் ஆட்சி மறுப்பது, பாகிஸ்தானுக்கு குறைந்த வாய்ப்புகளையே அளிக்கிறது" என்று அவர் கூறினார். "தாலிபன்களை விட செல்வாக்கு மிக்க சீனா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் ராஜதந்திர உதவியை நாட வேண்டும்" என்று ஜியா யோசனை கூறினார். பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் சமீபத்தில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில் இரு நாடுகளில் எந்த நாடு மீது தொடுக்கப்படும் தாக்குதலும், இருநாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "இந்த நெருக்கடி, பிரச்னைக்கு சரியான காரணத்தை உருவாக்கியுள்ளது" வாஷிங்டன் டிசியில் உள்ள தெற்காசிய ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார். மேலும் "பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாக எதிர்த்துப் போராடும் திறன் தாலிபன்களுக்கு இல்லை" என்றார். "இந்த பழிவாங்கும் நடவடிக்கைகள் பொதுமக்களின் கோபத்தைத் தணித்தவுடன் அவர்கள் பின்வாங்க வாய்ப்புள்ளது." என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9303v350qdo
  19. கொழும்புப் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் 'புற்றுநோய்க்கான மருந்து' (Cancer Cure) குறித்து, இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (SLCO) தமது ஆழ்ந்த கவலையைப் பதிவு செய்துள்ளது. இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது புற்றுநோய் நோயாளிகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் கல்லூரி பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மகேஷ் கருணாதிலக்கவுக்கு, இலங்கை புற்றுநோயியல் கல்லூரி தலைவர் வைத்தியர் சனத் வணிகசூரிய ஒரு கடிதம் எழுதியுள்ளார். கண்டனம் அக்கடிதத்தில், "இந்த உற்பத்தியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து நம்பகமான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படாதது குறித்து கல்லூரி மிகவும் கவலை கொள்கிறது" என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுவின் தயாரிப்பு 'ஊட்டச்சத்து உணவுப் பொருள்' என்று சந்தைப்படுத்தப்பட்டாலும், அதன் விளம்பர யுக்தி குறித்து வைத்தியர் சனத் வணிகசூரிய கண்டனம் தெரிவித்துள்ளார். நிதிச் சிக்கல் "இந்த விளம்பரம், புற்றுநோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உணர்ச்சிப்பூர்வ பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு, பொதுமக்களை மிகவும் தவறாக வழிநடத்துகிறது" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆதாரமற்ற சிகிச்சைகள், உண்மையான உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளைத் தாமதப்படுத்துவதுடன், நிதிச் சிக்கலை ஏற்படுத்தி, அறிவியல் மீதான நம்பிக்கையையும் சிதைக்கும் என்று கல்லூரி தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/university-of-colombo-cancer-medicine-1760241944#google_vignette
  20. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட சிறிய பாடசாலைகள் மூடப்படுவதைத் தடுக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதிபடத் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதமர் ஹரிணி, “ஒரு சில பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைய மாணவர் உட்சேர்க்கை நடவடிக்கையில் காணப்படும் குறைபாடுகளே காரணமாகும். எனவே அவற்றை சீரமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த பாடசாலை அதே போன்று குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பல பாடசாலைகள் மூடப்படுவதைத் தடுக்க முடியாது. அதற்காக அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என்பதில்லை. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட ஒரு சில பாடசாலைகள் தொடர்ந்தும் செயற்படக்கூடும். அவற்றை வேறொரு பாடசாலையுடன் ஒருங்கிணைந்த பாடசாலையாக செயற்படுத்தமுடியும். அதே நேரம் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு முன்னதாக அப்பிரதேசத்தின் இனத்துவப்பரம்பல், சனத்தொகை , சமூக மற்றும் பொருளாதார காரணிகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். https://tamilwin.com/article/small-schools-are-certain-to-close-pm-harini-1759943765
  21. அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பிரசுரம் Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 12:44 PM (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்திற்கமைய புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் சனிக்கிழமை (11) பிரசுரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கமைய மூன்று புதிய அமைச்சர்களும் 10 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர். அதற்கமைய போக்குவரத்து,நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக பணியாற்றிய பிமல் ரத்நாயக்க அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் நகர அபிவிருத்தி அமைச்சராக அன்றைய தினம் நியமிக்கப்பட்டார். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து நீக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, முன்னர் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பணியாற்றிய அனுர கருணாதிலகவிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், அனுர கருணாதிலக்கவிடம் இருந்து நீக்கப்பட்ட வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சானது பிரதி அமைச்சராகப் பணியாற்றி வந்த கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர முன்னர் எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்காத கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜெயவீர மற்றும் எம்.எம்.ஐ. அர்காம் ஆகியோரும் பிரதி அமைச்சர்களாக பதவியேற்றிருந்த நிலையில் அவர்களது பொறுப்புகள் தொடர்பிலும் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/227535
  22. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 12 அக்டோபர் 2025, 01:34 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியர்கள் தங்கள் தினசரி ஆற்றல் தேவைகளில் 62 சதவீதத்தை கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து பூர்த்தி செய்துகொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது. வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்த ஆய்வுக்குப் பின் ICMR இதனை தெரிவித்துள்ளது. இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றலுக்காக சோறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைச் சார்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. உலகில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் இந்தியாவில் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மற்ற நாடுகளை விட அதிகமாகும். இந்தியர்கள் தங்கள் அன்றாட ஆற்றல் தேவைகளுக்காக உட்கொள்ளும் உணவில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாகவும், புரதம் குறைவாகவும் இருப்பதாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22% அதிகம் கார்போஹைட்ரேட்-க்கும் நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு? குறைந்த கார்போஹைட்ரேட்டை உட்கொள்பவர்களை விட அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் நபர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22 சதவீதமும், தொப்பை போடுவதற்கான வாய்ப்பு 15 சதவீதமும் அதிகமாக உள்ளது. மறுபுறம் கோதுமை, அரிசி அல்லது சோளம் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்குப் பதிலாக பதிலாக முழு கோதுமை அல்லது சிறுதானிய மாவை பயன்படுத்தினாலும், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையாது என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கார்போஹைட்ரேட் பயன்பாடு அதிகமாக இருப்பதை ஆய்வின் சான்றுகள் எடுத்துரைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "நாடு முழுவதும் உள்ள மக்களின் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அவர்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் ஆற்றலில் 62.3 சதவீதம் பங்களிக்கின்றன. பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அரைக்கப்பட்ட முழு தானியங்களில் இருந்து கிடைப்பவை" என்று இந்த ஆய்வின் ஆராச்சியாளர் குறிப்பிடுகிறார். "சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் பங்கு 28.5 சதவீதமாகவும், முழு தானியங்களின் பங்கு 16.2 சதவீதமாகவும் உள்ளது. மொத்த கொழுப்பு 25.2 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அதே நேரம் புரதச் சத்து வெறும் 12 சதவீதம் மட்டுமே." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாட்டின் மக்கள் தொகையில் 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வதை தடுப்பது எப்படி? மக்களின் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளின் அளவைக் குறைப்பதும், பால் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வதை அதிகரிப்பதும் வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சுமார் 61 சதவீதம் பேர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை, அதாவது அவர்கள் எந்த வகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை என்று ஐசிஎம்ஆர் குழு கண்டறிந்துள்ளது. இதில் 43 சதவீதம் பேர் அதிக உடல் எடையும், 26 சதவீதம் பேர் உடல் பருமனும் கொண்டுள்ளனர். உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேம்படுத்துவதால், டைப் 2 வகை நீரிழிவு நோயை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கு அதிகமானவர்கள், அதாவது 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 83 சதவீதம் பேர் குறைந்தது ஒரு வளர்சிதை மாற்ற நோய்க்கான அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி, ஒட்டு மொத்த நாட்டையும் விட கிழக்கு இந்திய மக்கள் நல்ல நிலையில் உள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தினசரி ஆற்றல் தேவையில் 62% கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து கிடைக்கிறது. நிபுணர்கள் சொல்வது என்ன? இந்திய உணவுப் பழக்கத்தில் அதிகளவிலான கார்போஹைட்ரேட்களை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து நிபுணர்களிடம் கேட்டது பிபிசி. "சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் (சர்க்கரை) இரண்டும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உண்மை." என டெல்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் கூட்டு அறிவியல் நிறுவனத்தின் மூத்த உணவியல் நிபுணர் மருத்துவர் விபுதி ரஸ்தோகி கூறினார். "ஆனால் குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது விரைவான பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார். "இந்திய உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, அதனால்தான் இந்தியர்களிடையே நீரிழிவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் அதிகம் காணப்படுகின்றன." என்றார். "நீரிழிவு போன்ற பிரச்னைகளை தடுக்க, உணவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருக்க வேண்டும். உடல் அசைவுகளை அதிகரிப்பதும் முக்கியம்" என்று அறிவுரை கூறுகிறார். நீங்கள் சோறு எடுத்துக்கொண்டாலும் சரி, சப்பாத்தி எடுத்துக்கொண்டாலும் சரி, இரண்டிலும் கார்போஹைட்ரேட்கள் உள்ளன. பட மூலாதாரம், Getty Images சோற்றை விட சப்பாத்தி சிறந்ததா? சோற்றை விட சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதாகவும், அதனால் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று பொதுவாக நம்பப்படுகிறது. "நீங்கள் அதிக நார்ச்சத்துள்ள சப்பாத்தியை சாப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியை சாப்பிட்டால், அதுவும் அரிசியைப் போன்றதுதான். இதை சாப்பிட்ட பிறகும் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்," என 'டயட்டிக்ஸ் ஃபார் நியூட்ரிஃபை டுடே'வின் தலைவரும் மும்பையைச் சேர்ந்த உணவியல் நிபுணருமான நஸ்னீன் ஹுசைன் கூறினார். அதிகம் செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, ஆனால் செறிவூட்டப்படாத சிறிய அரிசி இந்த விஷயத்தில் சிறந்தது என்றும் அவர் கூறுகிறார். நார்ச்சத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவர்கள் அல்லது உணவியல் நிபுணர்கள் பெரும்பாலும் பழுப்பு நிற அரிசி அல்லது செறிவூட்டப்படாத அரிசியை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். சோற்றை இறைச்சி, முட்டை, பருப்பு, தயிர், காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது மற்றொரு முக்கிய அறிவுரை ஆகும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1mxmejj58vo
  23. Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 10:11 AM பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பல பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் பதிவாகியுள்ளன. எல்லையில் உள்ள பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் மீது தலிபான்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானின் எல்லையோர மாகாணங்களான குனர், ஹெல்மண்ட், பக்டியா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாகிஸ்தான் இராணுவ நிலைகள், சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். மேலும், எல்லையில் உள்ள பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/227520
  24. Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 12:27 PM உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) நாட்டை வந்தடைந்தார். டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கட்டார், டோஹாவிலிருந்து இன்றைய தினம் காலை 9:40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் ஓய்வறையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க அவரை வரவேற்றார். கொழும்பில் நடைபெறும் 78வது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார உச்சி மாநாட்டில் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பிரதம விருந்தினராக பங்கேற்க உள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சிமாநாடு 13 ஆம் திகதி முதல் 15 வரை கொழும்பில் நடைபெற உள்ளது. தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்களும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். https://www.virakesari.lk/article/227532
  25. Live 13th Match (D/N), Visakhapatnam, October 12, 2025, ICC Women's World Cup India Women 330 Australia Women (16/50 ov, T:331) 105/1 AUS Women need 226 runs from 34 overs. Current RR: 6.56 • Required RR: 6.64 • Last 5 ov (RR): 21/1 (4.20)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.