Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக தத்துக்கொடுக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு! பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தத்துக்கொடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ! ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1700 குழந்தைகள் த தத்துக்கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) திருமதி லக்ஷிகா கணேபொல தெரிவித்துள்ளார். கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் குழந்தைகளை வேறு நபர்களிடம் கொடுக்கும் போது, அது குறித்த தகவலை பதிவாளர் துறைக்கு தெரிவிக்க வேண்டும். பொருளாதாரச் சிக்கல்கள், திருமணத்துக்குப் புறம்பான உறவுகள் போன்ற சமூகப் பிரச்சனைகளே குழந்தைகளை பிறரிடம் தத்து கொடுப்பது அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் நாட்டில் கருக்கலைப்புச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/300915
  2. போகம்பர சிறைச்சாலை ஹோட்டலாக மாறுகிறது ! ShanaMay 5, 2024 போகம்பர சிறைச்சாலையை ஹோட்டல் வளாகமாக மாற்ற தனியார் முதலீட்டாளர் முன்வந்திருக்கிறார். இதன் பழமையைப் பாதுகாத்து அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். போகம்பர சிறைச்சாலை 2014ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. மேலும், அந்த அதிகார சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது மீள் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சிறைச்சாலையின் பிரதான கட்டடம் காலனித்துவ கட்டடக்கலையை பாதுகாத்து அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதோடு, பொது மக்களுக்கு திறந்த மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் வளாகத்தின் பொருளாதார மதிப்பை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் மத்திய மாகாண பணிப்பாளர் இ.எம்.எஸ்.பி. ஏகநாயக்க தெரிவித்தார். தற்போதும் சிறைச்சுவர் மற்றும் பிரதான கட்டடம் தவிர மற்ற பகுதிகளின் அபிவிருத்திக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை வைத்தியசாலை கட்டடத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. 2018ஆம் ஆண்டு வரை நகர அபிவிருத்தி அதிகார சபையானது சிறைச்சாலையின் முன்பகுதியை நன்கு பாதுகாக்கப்பட்ட பழைய கட்டடத்துடன் கூடிய பூங்காவாக உருவாக்கியுள்ளது. சிறைச்சாலையின் பிரதான வர்த்தகத் தொகுதி, உணவுக்கூடம், அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா ஹோட்டல் உள்ளிட்ட வர்த்தகக் கட்டடமாக அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. போகம்பர சிறைச்சாலை வளாகத்தின் கட்டடக்கலை மற்றும் வரலாற்று விழுமியங்களைப் பாதுகாத்து, அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார். இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையும் இலங்கை முதலீட்டு சபையும் இணைந்து தனியார் முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்துள்ளன. இது தவிர முதலீட்டாளர் தெரிவு செய்யப்பட்டு மதிப்பீடுகள் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். போகம்பர சிறைச்சாலை 138 வருடங்களாக செயற்பட்டு வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி மூடப்பட்டு அதன் செயற்பாடுகள் பல்லேகலையில் உள்ள புதிய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டது. போகம்பர சிறைச்சாலை தற்போது பொதுமக்களின் பார்வைக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. போகம்பர சிறைச்சாலை கட்டப்படுவதற்கு முன்னர், இலங்கை பிரித்தானியர்களின் காலனியாக மாறிய பின்னர், தற்போதைய கண்டி மத்திய சந்தைக்கு முன்னால் அமைந்துள்ள ஹெங்மேன்ஸ் ஹில் (Hangmans Hill) என்ற மலைப்பாதையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 1876ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் போகம்பறை ஏரியை நிரப்பி சட்டத்தை அமுல்படுத்தும் நோக்கத்தில் இந்த சிறைச்சாலை கட்டப்பட்டது. அரசாங்க திணைக்களத்தின் மூலம் அப்போது சிறைச்சாலை மற்றும் காவல் துறையின் பிரதான ஆணையாளராக இருந்த என்.ஆர். சோண்டர்ஸின் மேற்பார்வையில் இருந்தது. இந்த சிறைச்சாலை 92 கைதிகளின் உழைப்பில் 4 இலட்சம் ரூபாய் நிதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு சிறைச்சாலைகளில் போகம்பறர சிறைச்சாலையும் ஒன்று. பரப்பளவு மற்றும் பாதுகாப்பில் இலங்கையின் இரண்டாவது இடத்தில் இருக்கும் போகம்பர சிறைச்சாலையில் ஒரே நேரத்தில் மூவர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம். 13 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இங்கிலாந்து எடிம்பரோ ராணி விக்டோரியாவின் கிரீடத்தின் வடிவில், பிரான்சின் பரிஸ் பஸ்டில் கோட்டையைப் போன்றே கட்டப்பட்டது. இது 556 அடி நீளமும், 144 அடி அகலமும், 102 அடி உயரமும் கொண்டது. இது 408 கைதிகளுக்குப் போதுமான 1080 கன அடி (10×12×9) கொண்ட 328 அறைகளைக் கொண்டுள்ளது. போகம்பர சிறைச்சாலை ஒரு கட்டடக்கலை அடையாளமாகும். இது ஆசியாவிலேயே மிக நீளமான கட்டடமாகும். இங்கு 1876 முதல் 1975 வரை 524 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் நாட்டையே உலுக்கிய முப்பதாவது கொலைக் குற்றவாளிகளான டபிள்யூ.ஜி.ரிச்சர்ட் மற்றும் டி.எம்.ஜயவர்தன ஆகிய இரு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட பின்னர், போகம்பர சிறைச்சாலையில் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. எஹலேபொல குமாரிஹாமி நீரில் மூழ்கி சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடமும் இந்த சிறை வளாகத்திலேயே உள்ளது. மேலும், உத்துவன்கன்தே சரதியல், மரு சிரா, கொல்வின் ஆர் டி சில்வா, பிலிப் குணவர்தன, வில்லியம் டி சில்வா போன்ற பிரபலங்களும் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர். இதே போன்று உதுவன்கன்தே சரதியல், மரு சிறா போன்றவர்களும் கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்தன, வில்லியம் டி. சில்வா போன்ற பிரபல்யமான மனிதர்களும் இங்கு சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். சிறைச்சாலையாக செயற்படுகின்ற காலத்தில் அலங்காரப் பொருட்கள் உற்பத்தி, புளொக் கல் உற்பத்தி, பூ வளர்த்தல், சவர்க்காரம் செய்தல் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி போன்ற தொழில்களும் அங்கு சிறைச்சாலையின் நலன்புரிப் பிரிவால் இங்கு செயற்படுத்தப்பட்டிருந்தன. https://www.battinews.com/2024/05/blog-post_32.html
  3. பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை - டக்ளஸ் ! ShanaMay 5, 2024 பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (04) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், சில தமிழ் கட்சிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பொது வேட்பாளர் என்ற கருத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர். இதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. அது சரியானதும் நியாயமானதுமாக நான் கருதவில்லை. கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக தீராத பிரச்சினைகளாகவே கடைப்பிடித்து வந்தனர். அவர்கள் தமிழ் சமூகத்துக்கு ஏற்ற நடைமுறைக்கு சாத்தியமான யதார்த்த முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் உள்நோக்கம் கொண்ட சுயஇலாபம் கொண்டதாகும். அது ஜனாதிபதி முக்கிய மூன்று வேட்பாளர்களுடன் எமது மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி, அதன் பின்பு ஓர் உத்தரவாதத்தினை ஏற்படுத்திக்கொள்ள நாம் அவர்களை இணங்க வைக்க வேண்டும். பொது வேட்பாளர் என்பது ஒரு பொய்த்தனம். பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார். https://www.battinews.com/2024/05/blog-post_76.html
  4. மார்க்சின் கம்யூனிசம், கற்பனை அல்ல! - என்.குணசேகரன் மே 5: கார்ல் மார்க்ஸ் பிறந்ததினம் மனித சமூக வளர்ச்சி பற்றிய காரல் மார்க்சின் பார்வை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. சமத்துவம் நிலைப்பெற்று, மனிதம் மாபெரும் வளர்ச்சி கண்டு சிகரம் தொடும் நிலையை காரல் மார்க்ஸ் சிந்தித்தார். மற்ற ஞானிகள் மேலான சமூகம் பற்றி மாபெரும் கனவுகள் கண்டனர். ஆனால், மார்க்ஸ் அறிவியல் நடைமுறையுடன் இணைத்து தனது சிந்தனைகளை பதிவு செய்தார். ஒரு தனிநபரின் சுதந்திரமான வளர்ச்சி மட்டுமல்ல; சமூக மாந்தர்கள் அனைவரின் சுதந்திரமான வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்று “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் மார்க்ஸ் எழுதினார்.சோசலிச சமூகத்தின் கோட்பாடாக மார்க்ஸ் இதனை கருதினார். மார்க்ஸின் சமூக சித்திரம் “கோதா திட்ட விமர்சனம்” நூலில் கம்யூனிஸ்ட் சமுதாயம் எனும் உயர்ந்த கட்டத்தைப் பற்றி கீழ்க்கண்ட வகையில் வரையறுத்தார் மார்க்ஸ்.  தனிநபரை அடிமையாக்கும் வேலைப் பிரிவினை ஒழிய வேண்டும்.  மூளை உழைப்புக்கும், உடலுழைப்புக்குமான முரண்கள் அனைத்தும் ஒழிய வேண்டும். எந்த உழைப்பாக இருந்தாலும் அதன் உண்மையான மதிப்பின் பலன் உழைப்பவர்களுக்கு கிட்ட ேண்டும். உழைப்பு என்பது தனது வாழ்க்கைத் தேவைக்காக கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய, சலிப்பான ஒன்று எனும் நிலை மாறி, உழைப்பது, மனிதர்களின் முதன்மை விருப்பமாக மாற வேண்டும். தனி மனிதரின் பன்முக வளர்ச்சியால் உற்பத்தி சக்திகள் மாபெரும் வளர்ச்சி கண்டு, பொதுவான செல்வம் வெள்ளமாக பெருகி வரும் நிலை ஏற்படும். இந்த நிலையில்தான் முதலாளித்துவ சமூக உரிமைகள் அமைத்து வைத்திருந்த குறுகிய எல்லைகளை முற்றாக கடந்து, சமூகம் மகத்தான ஒரு பதாகையைத் தாங்கி நடைபோடும். ‘ஒவ்வொருவர் சக்திக்கேற்ற வேலை; ஒவ்வொருவரின் தேவைகளுக்கு ஏற்ப அனைத்தும் அனைவருக்கும் கிட்டும்’ என்ற பதாகை உயரும். மேற்கண்ட மார்க்சின் மகத்தான சமூகச் சித்திரம், மார்க்சின் கற்பனையில் உதித்தது அல்ல. இன்றைய முதலாளித்துவத்தில் உள்ளடங்கிய முரண்பாடுகளின் இயக்கம், அவை எங்கு சென்று முடிவடையும் என்பதைக் கண்டறிந்து, மார்க்ஸ் வந்தடைந்த அறிவியல் முடிவு தான் கம்யூனிசம். முதலாளித்துவம் கருணை காட்டுமா? முதலாளித்துவத்தை அகற்றுவது பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமை என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். முதலாளித்துவத்தின் சில குறைகளை சரி செய்தால் போதும்; அது மனிதாபிமான முதலாளித்துவமாக மாறிடும் என்று பலர் திசை திருப்ப முயற்சித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சர்வதேச நிதி நிறுவனம் உலக அளவில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வை புள்ளி விவரங்களோடு விளக்கியது. ஏழை நாடுகள் முன்னேறிய நாடுகளை விட மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளன என்பதை ஐ.எம்.எப் எடுத்துக்காட்டியது. இதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவ வேண்டும் என்று ஐ.எம்.எப் நிறுவனமும் உலக வங்கியும் “அறிவுரை”வழங்கின. இது சாத்தியமானதா? ஏழை நாடுகளின் பொருளாதாரத்தை ஒட்டச் சுரண்டி வரும் அமெரிக்காவும்,மற்ற ஏகாதிபத்திய நாடுகளும் கருணையுடன் நடந்து கொள்வார்களா? இது ஒரு புறமிருக்க, சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் வழங்கல் கொள்கை எப்படிப்பட்டது? நாடுகள் தங்களது நலத்திட்டங்களை குறைத்து வெட்ட வேண்டும்; பணக்காரர்களுக்கு வரியை குறைக்க வேண்டும்; சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கடும் நிபந்தனைகள் விதித்து வளரும் நாடுகளை பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்தது இந்த நிறுவனங்கள் தான். முதலாளித்துவம் இரக்க குணத்தோடு நடந்து கொள்ளும் சமூக அமைப்பாக எக்காலத்திலும் இருக்க முடியாது. இதையும் அன்றே மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதியுள்ளனர். ஏங்கல்ஸ் தனது 24 வயதில் எழுதிய “இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்க நிலை” என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்: “……….. ஒரு மையமான உண்மை மேலும் மேலும் தெளிவாகி வருகின்றது. தொழிலாளி வர்க்கத்தின் மோசமான நிலைமைக்கான காரணங்களை சிறிய குறைபாடுகளில் தேடுவது சரியல்ல; முதலாளித்துவ முறைதான் அடிப்படையான காரணம்”. மார்க்சின் கண்டுபிடிப்பு அன்றைய இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் வாழ்நிலையை ஆராய்ந்து மேற்கண்ட முடிவுக்கு ஏங்கல்ஸ் வருகிறார். ஏங்கல்ஸ் தொடர்கிறார்: “… ஒரு தொழிலாளி தனது உழைப்புச் சக்தியை குறிப்பிட்ட தினக்கூலித் தொகைக்கு முதலாளியிடம் விற்கின்றார். ஒரு சில மணி நேர உழைப்பில் அந்த ஊதியத்தின் மதிப்பை அவர் உற்பத்தி செய்து விடுகிறார். ஆனால் அவர் முதலாளியோடு செய்து கொண்ட ஒப்பந்தம் என்பது, மேலும் குறிப்பிட்ட மணி நேரம் வேலை செய்து தனது வேலை நாளை அவர் முடிக்க வேண்டும்.” “இவ்வாறு தொழிலாளி உழைக்கும் கூடுதல் மணி நேர உழைப்பு, உண்மையில் தொழிலாளியின் உபரி உழைப்பு. இதற்கான மதிப்பிற்கு,- அதாவது உபரி மதிப்பிற்கு,-முதலாளி எதுவும் செலவு செய்வதில்லை; எனினும் இந்த உபரி மதிப்பு அவருடைய பாக்கெ ட்டிற்கு செல்கி றது…” இதுவே முதலாளி த்துவ சுரண்டலின் அடிப்படை என்று மார்க்ஸ் கண்டுபிடித்தார். இதுதான் உற்பத்தி சாதனங்களை உடைமையாகக் கொண்ட முதலாளிகள் ஒருபுறம்; தனது உழைப்புச் சக்தியை விற்றுப் பிழைக்கும் நிலையில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான உழைப்பாளிகள் மறுபுறம் என சமூகம் பிளவுபடக் காரணம். இந்த உபரி மதிப்புக் கோட்பாடு, மார்க்சின் மகத்தான கண்டுபிடிப்பு. ஒரு சமூகத்தில் பல்வேறு மக்கள் பிரிவுகள் இருக்கலாம். பொருளுற்பத்தி மீதான கட்டுப்பாடு எந்த வர்க்கங்களிடம் உள்ளது என்பதே முக்கிய பிரச்சனை. உழைப்பாளிகளின் உழைப்பைச் சுரண்டும் உடைமை வர்க்கங்களுக்கும், சுரண்டப்படும் வர்க்கங்களுக்கான முரண்பாடே சமூகத்தின் பிரதான முரண்பாடு. இதனால் எழுவதுதான் வர்க்கப் போராட்டம். மார்க்ஸ் தனது “தத்துவத்தின் வறுமை’ நூலில் தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தை ஆராய்கிறார். இந்த மாற்றத்தோடு இணைந்ததாக தொழிலாளர்களின் சிந்தனையில் ஏற்படும் மாற்றங்களை விவாதிக்கிறார். ஒரே வேலைத்தளங்களில் கூடி, உழைப்பைச் செலுத்துவதால், தொழிலாளர்கள் ஒரே மாதிரியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் முதலாளிகளிடம் ஒரே மாதிரியான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக, தொழிலாளர் ஒற்றுமை பலம் பெறுவதும், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்கள் உருவாவதும் நிகழ்கின்றன. இந்த போராட்டங்களும் கூட்டான நடவடிக்கைகளும் தொழிலாளர்களின் உணர்வு மட்டத்தை உயர்த்துகின்றன.இந்தக் கட்டத்தில்தான் தொழிலாளர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய அரசியல் பாத்திரத்தை உணர்கின்றனர். பாட்டாளி மக்கள் வர்க்க உணர்வு பெறுவது ஏக காலத்தில் இரண்டு நிகழ்வுகளைக் கொண்டது. ஒன்று, தாங்கள் உழைப்பை செலுத்தினாலும், உற்பத்தியில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்கிற உண்மை அவர்களிடம் “அந்நியமயமாதல்” உணர்வினை ஏற்படுத்துகிறது. அதனோடு இணைந்தாக, அந்நியமயமாதலை முறியடிப்பதற்கு, முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிப்பதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற சிந்தனைக்கு தொழிலாளர்கள் வந்து சேருகின்றனர். இதுவே வர்க்க உணர்வு (Class consciousness). இந்த வர்க்க உணர்வு வலுப்பெறுவது சமூகப் புரட்சிக்கு அடிப்படை. இதுவே மார்க்சின் வரலாற்று தத்துவப் பார்வை; சமூக மாற்றத்திற்கான மார்க்சின் தத்துவம். அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிர்ப்பு மார்க்சின் சமூக மாற்றப் பார்வையின் மையமான கருத்தாக்கம் வர்க்கப் போராட்டம். சமூக உற்பத்தியில் வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் காரணமாக வேறுபட்ட நலன்கள் கொண்ட வர்க்கங்களுக்குள் மோதல் உருவாகிறது. இந்த வர்க்கப் பகைமையும் முரண்பாடுகளும்தான் ஒரு சமூகத்தில் சமூக பொருளாதார மாற்றங்களுக்கு இட்டுச் செல்கிறது. மனிதர்களிடையே வர்க்க வேறுபாடுகள் மட்டுமல்லாது வேறு பல வேறுபாடுகள் இருக்கலாம். இவற்றில் மோதல்களும் எழலாம். குறிப்பிட்ட மதம், சாதி, இனம், மொழி சார்ந்த பிரிவினர் இதர பிரிவினர் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அதற்கு எதிராகப் போராட்டம் எழலாம். மேலாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களும் அவசியமானவை. ஆனால் இத்தகைய போராட்டங்கள் முதலாளித்துவ முறையை ஒழிக்கும் போராட்டத்துடன் இணையவில்லை என்றால் மேலாதிக்கமும் ஒடுக்குமுறையும் நிரந்தரமான முடிவுக்கு வராது. அத்துடன், வர்க்க அடிப்படையிலான ஒற்றுமையும் ஏற்படாது; சமூக மாற்றமும் நிகழ்ந்திடாது. அனைத்து ஒடுக்குமுறைகளும் ஒழிய வேண்டுமெனப் போராடுவது மார்க்சியம்.ஆனால், ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான செயல்பாடுகள் முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கான நடைமுறையுடன் இணைந்ததாக முன்னெடுத்துச் செல்வதுதான் மார்க்சியத்தின் சிறப்பு. எனவேதான், சுரண்டப்படும் வர்க்கங்களை பொருளாதாரம்,அரசியல், சித்தாந்தம், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் திரட்டும் பணியை கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிய மூலவர்கள் வலியுறுத்துகின்றனர். இதுவே வர்க்க உணர்வை வலுப்படுத்தி புரட்சிகர மாற்றத்திற்கு வழிவகுக்கும். “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் “வர்க்கப் போராட்டம்சாரம்சத்தில் ஒரு அரசியல் போராட்டமே” என மார்க்சும், ஏங்கெல்சும் குறிப்பிடுகின்றனர். ‘சமூக இயக்கத்தில் வர்க்கத்தின் பங்கு உள்ளது என்பது சரிதான்.. அதே நேரத்தில் மற்ற காரணிகளும் சமமாக பங்கு வகிக்கின்றன’ என்ற பாணியில் பலர் வாதிடுவதுண்டு. வர்க்கத்தின் பாத்திரத்தை அங்கீகரிப்பது அவரவர் விருப்பம் சார்ந்ததல்ல. சமூக மாற்றங்களின் அச்சாணியாக வர்க்க உறவுகளும் வர்க்கப் போராட்டங்களும் இருந்து வந்துள்ளன என்பது எதார்த்தமான வரலாற்று உண்மை. அதேபோன்று சோசலிச மாற்றம் என்ற இலட்சியத்தை நோக்கி பயணப்பட வேண்டுமெனில் வர்க்க கருத்தியல் மிக முக்கியமானதும், அடிப்படையானதும் ஆகும். சமூக மாற்றத்தில் தொழிலாளி வர்க்கத்தின் முக்கியமான பங்கினை மார்க்ஸ் வலியுறுத்துவதற்கு காரணம் என்ன? அந்த வர்க்கம் அதிக அளவில் ஒடுக்கப்பட்டும் சுரண்டலுக்கு ஆளாகியும் வருவதால் மட்டுமல்ல; தொழிலாளி வர்க்கம் மூலதனக் குவியலை வலுப்படுத்துவதில் முக்கியமான பங்கினை வகிக்கிறது. உபரி மதிப்பை ஏற்படுத்தி முதலாளிகளுக்கு மூலதனக் குவியலுக்கு வழிவகுப்பது தொழிலாளர்களின் உபரி உழைப்பு. இதனை அந்த வர்க்கம் உணர்ந்து வர்க்க உணர்வு பெறுகிறபோது அது புரட்சிகர ஆற்றல் கொண்ட வர்க்கமாக மாறுகிறது. ஆனால், தொழிலாளி வர்க்கம் மட்டுமே புரட்சியை முன்னெடுப்பது இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியமில்லை; இதர சுரண்டப்படும் வர்க்கங்களையும் அணி திரட்ட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம், இந்திய சமூகத்தின் வர்க்கக் கட்டமைப்பை துல்லியமாக ஆய்வு செய்கிறது. மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் வழிகாட்டிய ஆய்வுத் தடத்தில் நின்று, இந்திய வர்க்கங்களை கட்சித் திட்டம் ஆராய்ந்து நிர்ணயிப்புக்களை வரையறுத்துள்ளது. தொழிலாளி -விவசாயி வர்க்கக் கூட்டணியை மையமாகக் கொண்டு, இதர சுரண்டப்படும் வர்க்கங்களையும் திரட்டி, மக்கள் ஜனநாயக முன்னணியை கட்டியமைக்க கட்சித் திட்டம் வழிகாட்டுகிறது. வர்க்கங்களைத் திரட்டுவதே அன்றாடப் பணியாக இருக்க வேண்டும் என்பது மார்க்சின் போதனை. அதற்கு அவரது வாழ்க்கையே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. அவரின் பிறந்த தினத்தில் “வர்க்கங்களை அணி திரட்டுவோம்” என்று மீண்டும் உறுதி மேற்கொள்வதே பொருத்தமானது! https://theekkathir.in/News/tamilnadu/மதுரை/marx's-communism-is-not-fiction
  5. தாய் சடலமாக மீட்பு – வீட்டில் இருந்த 16 வயது சிறுவனை காணவில்லை adminMay 5, 2024 யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதேவேளை சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதுடன் , வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்படுகின்றன. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அருகில் உள்ள வீட்டில் தூங்க சென்ற சமயம் வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர். அயல் வீட்டில் தூங்க சென்ற பெண்ணின் மகள் மறுநாள் வீட்டிற்கு சென்ற வேளை தாய் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அதேவேளை தனது சகோதரன் வீட்டில் இல்லாததையும் அறிந்துள்ளார். அது தொடர்பில் அயல் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து , அயல் வீட்டார் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். அத்துடன் காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2024/202449/
  6. முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு adminMay 5, 2024 யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இறுதி யுத்தத்தின்போது மக்களின் உணவாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. அதன் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழஙகும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இனிமேல் இவ்வாறு ஒரு அவலம் ஏற்படாது இருப்பதை உறுதிப்படுத்தவும் இந்நிகழ்வு நடைபெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். https://globaltamilnews.net/2024/202451/
  7. 52 ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. யாழ்கள போட்டியாளர்களின் கணிப்புக்கள் எப்படி உள்ளன?😁
  8. சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! May 04, 2024 10:35AM IST ஷேர் செய்ய : தேனியில் இன்று (மே 4) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், சமீபத்தில் காவல் துறை அதிகாரிகள், குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை இன்று அதிகாலை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு வேனில் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த நிலையில் கோவை மாநகரக் காவல்துறை சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் (294(b)) பெண்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் (509), அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (353), பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (67) உட்பட ஜாமீனில் வெளிவர முடியாதபடி 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். https://minnambalam.com/political-news/fir-has-been-registered-against-savukku-shankar/
  9. தமிழர் பொதுவேட்பாளர் ஒரு பம்மாத்து May 3, 2024 — கருணாகரன் — ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்பிலிருந்து தமிழ்ப்பொதுவேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கான ஒரு தரப்பினரின் “தவறான முயற்சி” தடுமாற்றத்துக்குள்ளாகியுள்ளது. மேதினத்துக்கு முதல்நாள் (30.04.2024) வவுனியாவில் பொதுவேட்பாளரைப் பற்றி இந்தத் தரப்பு ஒரு கலந்துரையாடலை வலு உற்சாகமாகச் செய்திருந்தது. “தமிழ்ச்சிவில் சமூகத்தினர்(?)” என்ற பேரிலும் அரசியல் ஆய்வாளர்கள், ஊடகத்துறையினர் என்று தம்மைக் கருதிக் கொள்வோரும் இதில் இணைந்துள்ளனர். மேலும் சில மதகுருக்களும் இணைக்கப்பட்டிருந்தனர். இதற்குப் பின்புலமாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனமொன்று செயற்பட்டு வருகிறது. அதுவே “மக்கள் மன்றம்” என்ற பெயருடைய ஒரு திடீர் அமைப்பை கடந்த மாதம் இதற்காகத் தோற்றியது. “தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் காலத்தின்தேவை” என்றே இதற்கு நியாயம் சொல்லப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. 1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது. 2. ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது. 3.அதற்கு அமைய ஒரு தமிழ் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது. 4.அதற்காக சிவில் சமூகமும் தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது. 5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது. இதைப்படிக்கும் வாசகர்கள் சிரிக்க வேண்டாம். இதில் என்ன உண்டு? எந்தப் புதிய உள்ளடக்களும் இல்லையே. இதைத்தான் இந்தத் தரப்புகள் காலாகாலமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கின்றனவே என்று கோபித்துக் கொள்ளவும் வேண்டாம். ஏனென்றால் இவர்களால் இப்படித்தான் சிந்திக்க முடியும். இதற்கு மேல் புதிதாகச் சிந்திக்கக் கூடிய – யதார்த்தத்தை உணரக் கூடிய, காலமாற்றம், சூழல் மாற்றம், சமூக மாற்றம் பற்றிய அறிதிறன் ஆற்றல் இவர்களிடம் இல்லை. என்பதால் பழகிய தடத்திலேயே சுழன்று கொண்டிருப்பார்கள். ஆகவே இவர்களைக் கோபித்து எதுவும் ஆகப்போவதில்லை. ஆனால், இவர்களுடைய இவ்வாறான தவறான சிந்தனை மிக ஆபத்தான விளைவுகளை மக்களுக்கு உண்டாக்கக் கூடியது. கடந்த காலத்திலும் இதுவே நிகழ்ந்தது. வரலாறு அதை நிரூபித்திருக்கிறது. அதைப் பின்னர் பார்ப்போம். இந்தப் பொதுவேட்பாளர் பற்றிய (முசுப்பாத்திக்) கலந்துரையாடல் நடந்து மறுநாள், கிளிநொச்சியில் நடந்த “தமிழ்த்தேசிய மேதினக் கூட்டத்தில்” கலந்து கொண்ட மனோ கணேசன், தாம் இந்தத் தீர்மானத்துக்கு வெளியே நிற்பதாகப் பகிரங்கமாகவே அறிவித்தார். மட்டுமல்ல, “வடக்குக் கிழக்கிற்கு வெளியே உள்ள தமிழர்களை இந்தப் பொதுவேட்பாளர் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டாம். அந்தச் சூழலே வேறு” என்றும் சொன்னார். ஆக மனோகணேசனும் இந்தப் பொதுவேட்பாளர் என்ற “பகிடி” விவகாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலே இன்னொரு வேடிக்கையும் உண்டு. தமிழ்ப்பொது வேட்பாளருக்கு மனோ கணேசனின் பெயரைக் கடந்த வாரம் சிலர் பரிந்துரைத்திருந்தனர். ஆனால் மனோ கணேசனோ, பொதுவேட்பாளர் விடயத்தில் தாம் சம்மந்தப்படவே போவதில்லை என்று முகத்திலடித்துச் சொல்லி, அதிலிருந்து வெளியேறி விட்டார். மனோ கணேசனுக்கு இதில் பங்கெடுப்பது சிக்கலானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அவர் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் பிரதான வேட்பாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் கட்சியில் பங்கெடுக்கிறார். அப்படியிருக்கும்போது சஜித்துக்கு மாறாக அவரால் சிந்திக்க முடியாது. மட்டுமல்ல, 13 ஆவது திருத்தத்துக்கு சஜித் ஆதரவளிக்கிறார் என்ற சேதியையும் கிளிநொச்சியில் வைத்துச் சொல்லியிருக்கிறார் மனோ. ஆகவே மறைமுகமாக பொதுவேட்பாளர் விடயம் பயனற்றது என்பதையும் தமிழர்கள் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கலாம் என்பதையும் ஒரே மேடையில் வைத்துச் சொல்லாமற் சொல்லியுள்ளார் மனோ கணேசன். மனோவின் சிறப்பும் கவனிக்கத் தக்க அம்சமும் இதுதான். அவர் எப்போதும் துணிச்சலோடு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு தலைவர். “மனோ கணேசன் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் பிரச்சினையைப் பற்றித் தீர்மானிக்கும் ஆளல்ல. அவருடைய கருத்துப் பொருட்படுத்தத் தேவையற்றது” எனச் சில சிங்கங்கள் கர்ஜிக்கலாம். இன்று இலங்கைத்தீவில் பரவலாக அறியப்பட்ட தீர்மானச் சக்தியுடைய தமிழ்த்தலைவர்களில் மனோ கணேசன் முக்கியமானவர். அவரைப் பல சந்தர்ப்பங்களிலும் வடக்குக் கிழக்கு அரசியலில் தமிழ்த் தலைவர்களும் சேர்த்தே பயணித்திருக்கின்றனர். வடக்கில் தேர்தல் மேடைகள் தொடக்கம் முக்கியமான அரசியற் கலந்துரையாடல்கள், கட்டமைப்பு உருவாக்கங்கள், தீர்மானங்கள் எல்லாவற்றிலும் இணைத்தே வந்திருக்கின்றனர். அப்படித்தான் கிளிநொச்சி மேதினக் கூட்டத்திலும் மனோவின் பங்கேற்பு நடந்தது. என்பதால் மனோவை விட்டு யோசிக்க முடியாது. அவரைச் சுண்டித் தள்ளி விடமுடியாது. இதில் கவனிக்க வேண்டிய கேள்வி ஒன்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் மனோ கணேசனைக் கலந்து கொள்ள வைத்து, அவர் மூலமாகச் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறாரா? என்பதுவே அது. இதை விட, இந்தத் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயம், மிகப் பலவீனமாக உள்ளது என்பதற்கு சில காரணங்களைப்பார்க்கலாம். 1. பொதுவேட்பாளர் என்பது தனியே வடக்குக் கிழக்குத் தமிழ்மக்களை மட்டும் மையப்படுத்திச் சிந்திப்பதாகும். குறைந்த பட்சம் இலங்கைத் தீவில் இன ஒடுக்குமுறையைச் சந்திக்கும் மலையக மக்களையும் முஸ்லிம்களையும் கூட இதில் உள்ளடக்க முடியாதிருப்பது, தமிழர்கள் மேலும் தனிமைப்பட்டுச் சுருங்கிச் செல்வதையே காட்டுகிறது. குறுகிய சிந்தனைக்கு இதுவே சரியெனப்படும். ஆனால், அரசியல் ராசதந்திர முதிர்வுக்கு இது பொருத்தமானதல்ல. குறிப்பாக வெளியுலகம் இதைக்குறித்துச் சிந்திக்கும்போது அல்லது கவனிக்கும்போது “தமிழ்பேசும் மக்களாகக் கூடச் சேர்ந்து ஓரணியில் நிற்க முடியாத அளவுக்குத்தான் இலங்கையில் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் சமூகங்கள் உள்ளனவா?” என்ற கேள்வியை நிச்சயமாக எழுப்பும். 2. மட்டுமல்ல, ஜனாதிபதித்தேர்தலை கஜேந்திரகுமார் அணி நிராகரிக்கிறது. தமிழ் மக்கள் இதில் பங்கேற்கத் தேவையில்லை என்கிறார் கஜேந்திரகுமார். ஆகவே அவர்களுடைய கணிசமான வாக்காளர்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அத்துடன், ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மற்றும் அங்கயன் ராமநாதன், வியாழேந்திரன் போன்ற தரப்புகள் பொது வேட்பாளரை ஏற்கப்போவதில்லை. மட்டுமல்ல, வடக்குக் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்களும் உண்டு. (மஸ்தான் போன்றவர்களுக்குப் பெரும்பாலான தமிழ் வாக்குகளே கிடைக்கின்றன). அவர்களுடைய வாக்குகளும் பொ. வே க்குக் கிடையாது. இதை விடச் சமத்துவக் கட்சி, மாக்ஸிஸ, லெனினிஸ ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவற்றின் நிலைப்பாடு என்ன என்று இன்னும் தெளிவாகவில்லை. கிழக்குத் தமிழர் ஒன்றியம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அந்தக் கட்சியைப் பிரதிநிதிப்படுத்துவோரின் கட்டுரைகளும் உரைகளும் சொல்கின்றன. தமிழரசுக் கட்சிக்குள்ளும் ஆதரவு – எதிர்ப்பு என்ற இரட்டை நிலைப்பாடே உண்டு. இதை விட ஏற்கனவே சிறிலங்கா, சுதந்திரக் கட்சி, ஐ.தே.க, ஜே.வி.பி போன்றவற்றுக்கான வாக்குகளும் உண்டு. அவையும் இந்தப் பொ.வே விளையாட்டில் பங்கேற்காது. ஆகவே பொ.வே. பெறுகின்ற வாக்குகள் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை எந்தளவில் பிரதிபலிக்கும்? 3. பொதுவேட்பாளரை நிறுத்தித்தான் “தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும்” என்றால் இதை விட வேறு பலவீனமான நிலை இல்லை எனலாம். வேறு வழிகள், வேறு முறைகள் ஏதுமில்லாத கையறு நிலையிலா தமிழ் மக்கள் உள்ளனர். சரி பிழைகளுக்கு அப்பால் 1977 லிருந்து தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவே தமது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி வந்துள்ளனர். அதற்கு முன் என்றும் சொல்லலாம். இன்னும் தமிழரசுக் கட்சியும் தமிழ்த்தேசியக் கட்சிகளும் முன்னிலைப் பாத்திரத்தை வகிக்கின்றன என்றால் அதனுடைய அர்த்தம் என்ன? அல்லது, புலம்பெயர் தேசங்களில் இன்னும் பெருவாரியான தமிழ் மக்கள் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர்? தமக்கு விடுதலை வேண்டும் என்றுதானே! அதற்குச் சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை எனத்தானே! அப்படியிருக்கும்போது பொது வேட்பாளரை நிறுத்தித்தான் தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை வெளியுலகத்துக்குப் புதிதாகக் காண்பிப்பது என்றால், இதை விட வேடிக்கை என்ன? தேசமாகத் திரள்வது, சமூகமாகச் சிந்திப்பது என்பதெல்லாம் குறித்த மக்களோடு இணைந்து நின்று களப்பணிகளைச் சிந்திப்பதன் மூலமே சாத்தியமாகும் என்று சிந்திக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டமும் கட்சிகளுக்கிடையில் உள்ள இணக்கப்பாடுகளும் முதலில் உருவாக்கப்படுவது அவசியம். அதைச் செய்வதற்கு இந்தச் சிவில் அமைப்புகளால் முடியவில்லை. ஏன் மதகுருக்களினாலும் முடியவில்லை. பதிலாக ஒவ்வொருவரும் எடுப்பார் கைப்பிள்ளைகளாகி விட்டனர். யாரோ, எங்கோ, எப்படியோ எடுக்கின்ற தீர்மானங்களுக்கு இங்கே காவடி ஆடுவோராக மாறியுள்ளனர். 4. தம்மால் வேறு விதமாகச் சிந்திக்க இயலவில்லை என்பதை மறைப்பதற்காகவே “ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக (பொது வேட்பாளர் விடயத்தை) கையாள்வதும் பொருத்தமான எதிர்கால கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவதும்” இதனுடைய நோக்கமென்று சொல்கிறார்கள். இது எவ்வளவு பம்மாத்து? மாறாக தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாக இருந்தால், அதனுடைய (வெற்றியளிக்கக் கூடிய) எதிர்கால அரசியல் என்ன? அதை ஆய்வு ரீதியாக – விஞ்ஞானபூர்வமாக – முன்னெடுப்பதற்கான கட்டமைப்பு எப்படியாக இருக்க வேண்டும்? அதற்கான ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்? முன்னெடுப்பு எப்படி என ஆய்வுக்குட்படுத்தி உருவாக்க வேண்டும். முக்கியமாக விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான அரசியலை முன்னெடுக்க வேண்டும். தமிழரசுக் கட்சியின் எதிர்ப்பு அரசியலின் உச்சமே விடுதலைப் புலிகளின் அரசியலாகும். அது பெரும் சேதங்களுடன் முடிவுக்கு வந்து விட்டது. இனியும் அதைத் தொடர முடியாது. இவையெல்லாம் தந்த படிப்பினைகளிலிருந்து நாம் புதிய அரசியலை – சமாதானத்துக்கான – தீர்வுக்கான அரசியலைத் தொடர வேண்டும். அது நீண்டது. கடினமானது. உச்சமான பொறுமையைக் கோருவது. போரைப்போல விறுவிறுப்பற்றது. ஆனால், அதைத்தான் நாம் தொடர வேண்டும். கால நிர்ப்பந்தம், வரலாற்று நிர்ப்பந்தம் அதுவே. அதைச் செய்ய முடியாமலிருக்கும் தமது தவறையும் பலவீனத்தையுமே இந்த பொ.வே என்ற அவசர நடவடிக்கை காட்டுகிறது. அதாவது இவர்கள் யாரும் நடைமுறையில் களப்பணி செய்யத் தயாரில்லாதவர்கள். உண்மையையும் யதார்த்தத்தையும் எதிர்கொள்வதற்கான துணிவற்றவர்கள் என்பதால் “தமிழ் மக்கள் பேரவை”யைப்போல இப்பொழுது பொ.வே என்ற பலூனை ஊதிப்பெருப்பிக்கப் பார்க்கிறார்கள். ஒரு ஆறு மாதம் இவர்களால் தாக்குப் பிடிப்பது கடினம். பிறகு இதெல்லாம் காற்றுப்போகக் கைவிடப்படும் ஒன்றாகி விடும். ஆனால், இதையிட்டெல்லாம் இவர்கள் ஒரு போதும் பொறுப்புக் கூறுவதும் இல்லை, திருத்தம் செய்வதும் இல்லை. இப்படிப் பல விடயங்கள் உண்டு. உண்மையில் செய்ய வேண்டியது இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு நீண்டகால அடிப்படையில் வகுக்கப்பட வேண்டிய அரசியலும் வேலைத்திட்டமுமே. கடந்த காலப் படிப்பினைகளின் அடிப்படையில், புதிய சூழலுக்குரிய (போருக்குப் பிந்திய) அரசியலைப் பகுத்து அதை முன்னெடுக்க வேண்டும். அதையே சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகிறது. சமாதானத்துக்கான – தீர்வுக்கான வழிமுறைகளைக் கண்டறியுங்கள், அதில் ஈடுபடுங்கள் என. அதாவது மிக நிதானமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தீர்வுக்கான அரசியலை. நிச்சயமாக பகை வளர்ப்பு அரசியலை அல்ல. ஆனால், இங்கே நடந்து கொண்டிருப்பது, போருக்கு முந்திய, போர்க்காலத்தைய பகை வளர்ப்பு என்ற தோற்றுப்போன, தோல்வியைத் தரக்கூடிய அரசியலையே. இது மிக ஆபத்தான எதிர்விளைவுகளையே தரக் கூடியது. எப்போதும் விளைவுகளை அறுவடை செய்கின்றவர்கள், தலையில் சுமக்கின்றவர்கள் மக்களே தவிர, இந்தப் பிரமுகர்கள் அல்ல. ஆயர்கள், அரசியற் கட்சிகளின் தலைவர்கள், ஆய்வாளர்கள் என்று தம்மைக் கருதுவோர், ஊடக முதலாளிகள் எவருக்கும் எந்த முட்டாள் தீர்மானங்களாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த காலத்தில் கூட இவர்களுக்கு எந்தச் சேதாரங்களும் ஏற்பட்டதில்லை. 30 ஆண்டுகாலப்போரை ஆதரித்த இவர்களின் உடலில் ஒரு சிறு கீறல் விழுந்ததில்லை. என்பதால்தான் இன்றும் போர்வீரர்களாக வெறிகொண்டு நிற்க இவர்களால் முடிகிறது. எனவேதான் தமிழ் அரசியல் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் என்றும் சொல்லப்படும் ஈழத்தமிழர்களுடைய அரசியலானது, பெரும்பாலும் சிறுவர்களுடைய மணல் விளையாட்டைப்போன்றே உள்ளது எனக் கூறவேண்டியுள்ளது. கற்பனை அதிகம். முயற்சிகளும் அதிகம். நல்விளைவுகள் எதுவுமில்லாதவை. சிறுபிள்ளை மணல் விளையாட்டில் பிள்ளைகளுடைய மகிழ்ச்சியாவது இருக்கும். வெளியே பாதிப்பிருக்காது. இங்கே முன்னெடுக்கப்படும் தமிழ் அரசியலில் எதிர்விளைவுகளே அதிகம். குருதியும் கண்ணீருமே அதனுடைய விளைவு மொழி. இதைப்பொருட்படுத்தாமல் சாதாரண மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் ஒரு தரப்பினர். இது வன்மையான கண்டத்துக்குரியது என்று சொல்ல வேண்டியுள்ளது. https://arangamnews.com/?p=10695
  10. வீசா நடைமுறையில் தலையிடுமாறு ரணிலிடம் கோரியுள்ள சுற்றுலாத்துறையினர் சுற்றுலா விசா நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தில் தலையிடுமாறு இலங்கையின் முக்கிய சுற்றுலாப் பங்குதாரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) வலியுறுத்தியுள்ளனர். 2024 ஏப்ரல் 17 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய ஒழுங்குமுறையின்படி, அனைத்து சுற்றுலா விசா விண்ணப்பங்களையும் ஒரு தனியார் நிறுவன இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இது முன்னர் பயன்படுத்தப்பட்ட அரசாங்கத்தால் இயக்கப்பட்ட மின்னணு பயண அங்கீகார (ETA) அமைப்பை மாற்றுகிறது. இந்நிலையில், புதிய செயன்முறையில் சுற்றுலாப் பங்குதாரர்கள் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன்படி, மின்னணு பயண அங்கீகார அமைப்பு மூலம் முன்பு கிடைத்த ஒற்றை நுழைவு 30 நாள் விசா இனி வழங்கப்படாது. தற்போது, ஆறு மாத பல நுழைவு விசா மட்டுமே 100.77 டொலர் கட்டணத்தில் கிடைக்கிறது. இந்த விசா கட்டணம், ஆசியாவிலேயே மிக அதிகமான கட்டணமாகும். இது, இலவச அல்லது மலிவான விசாக்களை வழங்கும் பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தடுக்கிறது. அத்துடன், புதிய இணையத்தளத்தின் விண்ணப்பச் செயல்முறை சிக்கலானது என்று தொழில்துறை பங்குதார்கள் விமர்சித்துள்ளனர். இதன் காரணமாக. 2024ஆம் ஆண்டில் தொழில்துறையின் 2.3 முதல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற எதிர்ப்பார்க்கப்பட்ட இலக்கு பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர் https://akkinikkunchu.com/?p=275698
  11. தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் புதிய எண்ணெய் குழாய் இணைப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அறிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் பயணம் மற்றும் தரைவழிப்பயணம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன்படி, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான படகுச் சேவை இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நில இணைப்பு வழித்தடத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதோடு, உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், அதனை நிறைவேற்றி முடிக்க பல ஆண்டுகள் தேவைப்படும் என்று சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார். நில வழித்தட திட்டத்திற்கு மேலதிகமாக தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது உட்பட எரிசக்தி துறையின் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் எண்ணெய் குழாய் இணைப்பதே இந்தியாவின் நோக்கமாகும் எனவும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=275707
  12. கனடாவில் கைதான தமிழர்கள் தொடர்பில் வெளியான தகவல் கனடாவின் டர்ஹாம்(Durham) பிராந்தியத்தில் முதியவர்களை குறி வைத்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக தெரிவித்து இரு தமிழர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதிலும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு தமிழர்கள் கைது இந்த மோசடி தொடர்பில் Ajax நகரை சேர்ந்த லக்சாந்த் செல்வராஜா (வயது 27) மற்றும் 25 வயதான அக்சயா தர்மகுலேந்திரன் (வயது 25)ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் இருவருக்கும் எதிராக 40 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேநபர்களினால் பாதிக்கப்பட்டவர்களில் 90 வயதுடைய தம்பதியரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் எனினும், இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, சந்தேகநபர்களினால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். https://akkinikkunchu.com/?p=275733
  13. உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக பதவி ஏற்றுக்கொண்ட 2 தமிழர்கள் Vhg மே 03, 2024 இலங்கை உச்ச நீதிமன்றில் சட்டத்தரணிகளாக இரண்டு தமிழ்த்தேசிய பற்றாளர்கள் இன்றையதினம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். யாழ்.மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் இரவிராஜ் அவர்களின் புதல்வி திருமதி பிரவீனா கலையமுதன் உயர்நீதிமன்றில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். அதேபோல யாழ்ப்பாண தமிழ்த் தேசிய உணர்வாளன் உமாகரன் ராசையா அவரும் உச்ச நீதிமன்றில் சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். https://www.battinatham.com/2024/05/2.html
  14. 13-வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின் தமிழ் தேசிய பிரதிநிதிகளிடம் கூற வேண்டும் - கோ. கருணாகரம் எம்பி Vhg மே 04, 2024 எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச 13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு தயாராக இருக்கின்றார் என்றார் அதனை மனோகணேசன் ஊடாக சொல்லக்கூடாது,தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் அவர்களின் 38வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். நாங்கள் ஒன்று பட வேண்டும் எதனை செய்கின்றோமோ யாராவது ஒரு உண்மையாக வாக்குறுதிகளை பெற்று பகிரங்கமாக வேண்டும் என்றால் ஒரு சர்வதேச நாட்டில் சாட்சியுடன் வாக்குறுதிகளை பெற்று வாக்களிப்பதா அல்லது பொது வேட்பாளரை நிறுத்துவதா? என்பதனை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.battinatham.com/2024/05/13.html
  15. ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் போராட்டம்! இனியபாரதி. சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கோசங்களை எழுப்பினர். அத்துடன், ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரினர். அரசஅதிகாரிகள், அரச பலங்களை பிரயோகித்து ஊடகவியலாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி, அச்சுறுத்துவது உள்ளிட்ட செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். (ச) https://newuthayan.com/article/ஊடக_சுதந்திர_தினத்தை_முன்னிட்டு_யாழில்_போராட்டம்!
  16. யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் – மட்டு நகரான் May 3, 2024 தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் போராட்டமே அதற்கான வழி என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையில் அங்கு தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ் தேசிய அரசியலில் தமிழர்கள் கொண்டுள்ள பற்று அவர்களை போராட்ட நிலைக்கு கொண்டுசென்று தமது இருப்பினை பாதுகாப்பதற்கு உந்துதல் அளித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்த வரையில் இன்று பல பகுதிகள் போராட்டக்களமாகவே மாறிவருகின்றது. அதுவும் விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழர்களின் வீரம் செறிந்த ஆற்றல்களைக் கொண்டிருந்தவர்கள் ஆண்ட பகுதிகள் எல்லாம் இன்று தமது இருப்புக்காக போராடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுவருகின்றனர். இன்று மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைக்காணிக்காக 225நாட்களையும் தாண்டி பண்ணையாளர்கள் போராடிவரும் நிலையில் வாகரை பிரதேசத்தினை பாதுகாப்பதற்கு வாகரை மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கும் நிலையினையும் காணமுடிகின்றது. மட்டக்களப்பு வாகரை பிரதேசம் என்பது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய தளமாகயிருந்த பிரதேசமாகும். வடகிழக்கிற்கு இணைப்பு பாலமாகயிருந்து இக்கட்டான யுத்த காலத்தில் வடக்கிற்கு போராளிகளை அனுப்பிவைப்பதற்கான முக்கிய தள பகுதியாகயிருந்ததுடன் கிழக்கின் ஒரு கட்டளை மையமாகவும் இருந்துவந்தது. இன்று வாகரையில் நடக்கும் சம்பவங்களும் செயற்பாடுகளும் அங்கு தமிழர்களை அழிக்கும் நடவடிக்கையா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. வாகரை பிரதேச செயலகப்பிரிவானது 589 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதுடன் 16 கிராம சேவையாளர் பிரிவினைக்கொண்டது. வாகரைப் பிரதேச செயலகம் எனப்படும் கோறளைப்பற்று வடக்கு பிரிவானது மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பகுதியை உள்ளடக்கியது. இப்பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் அதன் எல்லைகளாக வடக்கில் வெருகல் ஆற்றையும் திருகோணமலை மாவட்டத்தையும், கிழக்கில் வங்காள விரிகுடா கடலையும், தெற்கில் கோறளைப்பற்று மத்தி பிரிவையும், மேற்கில் பொலன்னறுவை மாவட்டத்தையும் கொண்டுள்ளது. அனைத்து வளங்களையும் இந்த பகுதி கொண்டிருக்கின்றபோதிலும் இங்குள்ள வளங்களை பயன்படுத்தி அப்பகுதி மக்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு பதிலாக அப்பகுதி வளங்களை தென்னிலங்கையில் உள்ள பெரும்பான்மையினத்தவர்களுக்கு தாரைவார்த்துக்கொடுக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. யுத்தம் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தெற்கினை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினருக்கு வளமிக்க சுமார் 1500 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் அண்மைக்காலமாக இல்மனைட் அகழுதல், இரால் பண்ணை அமைத்தல் போன்ற திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கபளீகரம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இல்மனைட் அகழ்வு செய்யப்படுமானால் வாகரை பிரதேசத்தின் பல பகுதிகள் அழியும் நிலைமைமையும் ஏற்படும் என வாகரை பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பல தடவை வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்திய மக்கள் மட்டக்களப்பு நகருக்கும் வருகைதந்து போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகத்தினை தாண்டியதாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். குறிப்பாக இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமூகத்தினை அடக்கி ஒடுக்குவதற்கு பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றனர்.ஒரு பகுதியில் தங்களது ஆதிக்கத்தினை நிலைநிறுத்தவேண்டுமானால் அங்கு பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றனர். தங்களுக்கு ஆதரவானவர்களுக்கு தேவையானவற்றினை மேற்கொள்ளல், ஆசைகாட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுத்தல், கொள்ளையர்களை அரசியலுக்குள் கொண்டுவந்து தமது தேவைகளையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் போன்ற பல்வேறு வழிகளை கையாண்டுவருகின்றது. வாகரையில் இல்மனைட் அகழ்வு என்பது வாகரையின் கரையோரப்பகுதியை முற்றாக அழிக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன. வாகரை பகுதியின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையினை அண்டியுள்ளதால் அதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன. யுத்த காலத்தில் தமிழிழீ விடுதலைப் புலிகளின் பொருண்மிய துறையின் பெரும்பங்களை வாகரை கடற்பகுதியே பூர்த்திசெய்துவந்தது.இதன்மூலம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் விருத்தியடைந்ததுடன் பொருண்மியமும் வளர்ச்சிபெற்றது.யுத்ததிற்கு பின்னர் குறித்த செயற்பாட்டினை பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான ஜெயம் என்பவர் பொறுப்பேற்று அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுசெயற்பட்டதன் காரணமாக வாகரை மக்கள் தமது வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லமுடியாத நிலையிருந்தது. எனினும் பின்னரான காலப்பகுதியில் தமிழ் தேசிய அரசியல் செயற்பாடுகள் காரணமாக அந்த நிலைமை தளர்ந்து வாகரை மக்கள் கடற்பகுதியில் தமது வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லும் நிலையேற்பட்டது. எனினும் தொடர்ச்சியாக வாகரை பகுதியில் தமது வாழ்வாதாரத்தினை கடலை நம்பியே வாகரையில் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையினை முன்னெடுத்துவரும் நிலையில் இன்று வெருகல் தொடக்கம் வாகரையின் காயன்குடா வரையான பெருமளவான கடற்பகுதியில் இல்மனைட் அகழ்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இதற்காக தெற்கில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு கடற்பகுதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் வாகரை பகுதிகளின் மக்கள் வாழ்வாதாரத்தில் மட்டுமல்ல அப்பகுதியையே அழிக்கும் நிலையுறுவாகும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் அரசாங்கம் அந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கையினை எடுத்துவருகின்றது. இந்த திட்டத்திற்கு பின்புலமாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் செயற்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கதிரவெளி தொடக்கம் காயன்குடா வரையிலான மக்கள் இந்த இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிராக போராடிவரும் நிலையில் வறிய மக்களின் நிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு பொருட்களையும் பணத்தையும் வழங்கி எதிர்ப்பு நிலையினை மாற்றுவதற்கான முயற்சிகள் பிள்ளையான் போன்றவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு எதிராகவும் வாகரை பிரதேச மக்கள் போராடவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இதேபோன்று வாகரையில் இரால் பண்ணை என்ற திட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த இரால் பண்ணை ஆரம்பிக்கப்படுமானால் வாகரையில் நன்னீர் மீன்பிடியை நம்பியுள்ள சுமார் 15ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வாகரை பிரதேசத்தின் சமூக செயற்பாட்டாளரான தபேந்திரன் தெரிவிக்கின்றார். “கடந்த காலத்தில் 2500 நிலப்பரப்பினை ஆற்றினை அண்டிய வகையில் இந்த இரால் வளர்ப்புக்கு ஒதுக்க நடவடிக்கையெடுக்கத்தபோது நாங்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடாத்தி அதனை தடுத்து நிறுத்தினோம். ஆனால் இன்று அந்த திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த ஆற்றினை நம்பியே அந்த 15ஆயிரம் குடும்பங்களும் உள்ளன.அங்கு இரால் வளர்ப்பு நடைபெற காணிகள் வழங்கப்படுமானால் முதலாளிகள் இலாபம் ஈட்டுவார்கள் ஆனால் ஆற்றினை நம்பியுள்ள மீனவர்கள் வாழ்வாதாரத்தினை இழப்பார்கள். அத்துடன் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள சுமார் 45ஆயிரம் கால்நடைகள் உள்ள மேய்ச்சல் தரை பாதிக்கப்படுவதுடன் வாகரையினை தாங்கிய நிலையில் உள்ள கண்டல் தாவரங்களும் அழிக்கப்படும் நிலையேற்படும். இதேபோன்று ஆற்றினை சூழவுள்ள காடுகளும் அழிக்கப்பட்டுத்தான் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். கடல்நீரை ஆற்றுக்குள் பாய்ச்சிதான் இரால் பண்ணை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். இவை அனைத்தும் எதிர்காலத்தில் வாகரை பிரதேசத்தினை அழிக்கும் செயற்பாடுகளாகவே நாங்கள் பார்க்கின்றோம். யுத்த காலத்தில் நாங்கள் போராடி பாதுகாத்த பகுதியை இன்று இலகுவில் அழிக்கும் நிலையினை பார்த்துக்கொண்டு நாங்கள் பொறுமையாக இருக்கமுடியாது.எமது நிலத்தினை பாதுகாப்பதற்கு நாங்கள் உயிரைகொடுத்து போராடவும் தயாராகயிருக்கின்றோம்” என்று தபேந்திரன் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் வாகரை பிரதேசத்தின் இந்த அழிவின் பின்னணியில் பிள்ளையான் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் செயற்படுவதாக வாகரை பிரதேச மக்களும் அரச உயர் அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில் வாகரை பிரதேச மக்களின் இந்த போராட்டத்தினை வடகிழக்கு தழுவிய போராட்டமாக முன்னெடுத்து வாகரை பிரதேச மக்களின் இருப்பினை தக்கவைப்பதற்கு தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் அனைவரும் முன்வரவேண்டும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்போல் யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும். கிழக்கில் தமது இருப்பினை தக்கவைப்பதற்கு வடகிழக்கு இணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஓரளவாவது நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளாக அமையும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். https://www.ilakku.org/யாழ்-தொடக்கம்-வாகரை-வரைய/
  17. காசா போர் நிறுத்தத் திட்டம் குறித்து ஹமாஸ் பாதக நிலைப்பாடு: தொடர்ந்து பேச்சுவார்த்தை maheshMay 3, 2024 காசாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி பலஸ்தீன போராளிகளுடன் கடும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில், போர் முன்மொழிவு தொடர்பில் தமது நிலைப்பாடு பாதகமாக இருப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் போர் நிறுத்த முன்மொழிவு தொடர்பான (ஹமாஸ்) அமைப்பின் நிலைப்பாடு பாதகமாகவே இருப்பதாகவும் ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் ஒசாமா ஹம்தான் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு நேற்று (02) குறிப்பிட்டிருந்தார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தமது அமைப்பின் நோக்கமாக இருந்து வருகிறது என்று ஹமாஸ் மூத்த அதிகாரி சுஹைல் அல் ஹின்தி ஏ.எப்.பி. இடம் குறிப்பிட்டுள்ளார். இது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிலைப்பாட்டுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். காசாவின் தெற்கு விளிம்பில் உள்ள ரபாவில் 1.5 மில்லியன் பொதுமக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் அந்தப் பகுதியிக்கு தரைப்படையை அனுப்புவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக குறிப்பிட்டிருந்தார். ‘உடன்பாடு எட்டப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நாம் ரபாவுக்குள் நுழைந்து ஹமாஸ் படைப்பிரிவுகளை ஒழிப்போம்’ என்று நெதன்யாகு இந்த வாரத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இரகசிய இடம் ஒன்றில் இருந்து தொலைபேசியில் பேசிய ஹமாஸ் அதிகாரி ஹின்தி, ‘எல்லாவற்றையும் அழித்து வரும் பலஸ்தீன மக்கள் மீதான இந்தப் பயங்கரப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் மற்றும் அனைத்து பலஸ்தீன போராட்டக் குழுக்களும் பெரும் ஆர்வத்துடன் உள்ளன. ஆனால் அது எந்த விலை கொடுத்ததாகவும் இருக்காது’ என்று குறிப்பிட்டார். ‘எந்த சூழ்நிலையிலும் வெள்ளைக் கொடியை உயர்த்தவோ அல்லது இஸ்ரேலிய எதிரியின் நிபந்தனைகளுக்கு சரணடையவோ முடியாது’ என்று அவர் வலியுறுத்தினார். காசா போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்கும்படி அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கல் ஹமாஸ் அமைப்பை வலியுறுத்தி வருகிறார். 40 நாள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பல பலஸ்தீனர்களுக்காக பணயக்கைதிகளை விடுவிக்கும் திட்டத்தை மத்தியஸ்தர்கள் ஹமாஸிடம் முன்வைத்துள்ளனர். இந்த முன்மொழிவுக்கு விரைவில் பதிலளிப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. ‘ஹமாஸ் ஆம் என்று குறிப்பிட்டு இதனைச் செய்ய வேண்டும்’ என்று ஒக்டோபர் 7 ஆம் திகதி காசா போர் வெடித்த பின்னர் ஏழாவது முறையாக பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிளிங்கன் இஸ்ரேல் சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் தெரிவித்தார். பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், ‘பலஸ்தீன மக்கள் மீது அக்கறை செலுத்தி அவர்கள் படும் வேதனையை உடன் நீக்கும் உண்மையான நோக்கத்தை ஹமாஸ் கொண்டிருந்தால் இந்த உடன்படிக்கையை அவர்கள் ஏற்பார்கள்’ என்றார். காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கெய்ரோவில் இடம்பெற்று வருகிறது. உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு தேவையான நெகிழ்வுப் போக்கை அனைத்து தரப்புகளும் காண்பிக்க வேண்டும் என்று எகிப்து வெளியுறவு அமைச்சர் ஹசாமிஹ் ஷுக்ரி அழைப்பு விடுத்துள்ளார். போர் நிறுத்த முயற்சியாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஸ்டபனே செஜோர் கெய்ரோ பயணித்த நிலையில் அவரை சந்தித்தபோதே சுக்ரி இதனைத் தெரிவித்தார். எனினும் மற்றொரு தற்காலி போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் உடன்படும் என்பதில் சந்தேகம் நீடிப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இஸ்ரேல் தமது படை நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதில் ஹமாஸிடம் இருந்து இன்னும் ஓர் இரு நாட்களில் போர் நிறுத்தம் குறித்து பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கட்டார் மத்தியஸ்தர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் முன்மொழிவில் ‘உண்மையான சலுகைகள்’ இருந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஆரம்ப போர் நிறுத்தத்தை தொடர்ந்து ‘நிலையான அமைதி’ மற்றும் பணயக்கைதிகள் பரிமாற்றம் ஆகியவை உள்ளடங்குகிறது. எனினும் காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவது சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் அங்கிருந்து இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெற ஹமாஸ் நிபந்தனை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் 28 பேர் பலி இந்நிலையில் மத்திய காசாவின் பிராதான சந்தியில் நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலிய துருப்புகள் மீது பலஸ்தீன போராட்டக் குழுக்கள் நேற்று கடும் தாக்குதல்களை நடத்தியதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த புதன் இரவு தொடக்கம் காசாவில் இஸ்ரேலின் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் தீவிரமாக இருந்ததாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதோடு அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றையும் இஸ்ரேலிய படைகள் தாக்கியுள்ளன. மத்திய காசாவின் அல் சஹ்ரா பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலின் குண்டு வீச்சில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. அங்கு குடியிருப்பாளர்கள் மற்றும் மீட்பாளர்கள் இடிபாடுகளில் இருந்து மூன்று சிதைந்த உடல்களையும் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு நகரான கான் யூனிஸில் கா அல் குரைன் பகுதில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் ஒருவர் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்தாக வபா குறிப்பிட்டது. அதேபோன்று காசா நகரின் தெற்கில் உள்ள அல் செய்தூன் பகுதியின் இஷ்தைவி குடும்பத்திற்கு சொந்தமான குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய குண்டு மழையில் இருவர் கொல்லப்பட்டதோடு காணாமல்போன பலரும் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் 28 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 51 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 35,596 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 77,816 பேர் காயமடைந்துள்ளனர். https://www.thinakaran.lk/2024/05/03/world/58082/காசா-போர்-நிறுத்தத்-திட்/
  18. கணவன் படுகொலை: மனைவி தவறான முடிவு வவுனியா, நெடுங்கேணி் - கிரிசுட்டான் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த நபரின் மனைவியான 37 வயதுடைய லோகநாதன் பரமேஸ்வரி என்பவர் அயலில் உள்ள வீட்டில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்திருக்கலாம் எனவும், அண்மைக்காலமாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்திருந்தனர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/கணவன்-படுகொலை-மனைவி-தவறான-முடிவு/175-336686
  19. காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை adminMay 2, 2024 காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார். எனினும், இந்த சேவையைத் தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது படகுசேவை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீளவும் தொடரவுள்ளது. நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது. 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200ரூபாவை (8400இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட விடயமாக உள்ளது. இதேவேளை, கப்பலின் மேற்தளத்தில் கடற்பரப்பினை பார்த்து இரசித்துச் செல்லும் வகையில் பிரேமியர் ஆசன ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது விசேட அதிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தியதாகும். அதற்காக விசேட கட்டணமும் அறவிடப்படவுள்ளதோடு பயணி ஒருவரின் எடையிலும் மாற்றங்கள் காணப்படும். மேலும், இந்தப் படகுசேவையானது காலம் தாழ்த்தப்பட்டமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் நாகப்பட்டினத் துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தொகையை பயணிகளிடத்திலிருந்து அறவிடுவதற்கு தமிழக அரசாங்கம் முன்மொழிந்திருந்தது. எனினும் அத்தொகையை பயணிகளின் பயணத்தொகையுடன் இணைக்கின்றபோது அது மேலும் அதிகரிப்பதற்கான நிலைமைகளே காணப்பட்டன. இதனால் குறித்த விடயம் இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அவதானிப்புக்களுக்கு அமைவாக நாகைப்பட்டின துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணத்தை மத்திய அரசாங்கம் மானியமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மாதந்தோறும் 72இலட்சம் ரூபா துறைமுகப் பயன்பாட்டுக்கட்டணமாக மத்திய அரசாங்கம் 12மாதங்களுக்கு தமிழக அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது. அந்த வகையில் மத்திய அரசாங்கத்தின் மேற்படி செயற்பாட்டின் காரணத்தினாலேயே தற்போது கப்பல்சேவை சாத்தியமாகியுள்ளது. அதற்கு மத்திய அரசாங்கத்துக்கு விசேடமாக எமது நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார். https://globaltamilnews.net/2024/202323/
  20. தமிழரசுக்கட்சி – DTNA – வித்தியாசம் என்ன? April 30, 2024 — கருணாகரன் — இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றே சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எவ்) சித்தார்த்தன் (புளொட்) செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை (DTNA) உருவாக்கினார்கள். இவர்களோடு தமிழ்த்தேசியக் கட்சி (விக்னேஸ்வரன்), ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய தரப்பினரும் இணைந்து நின்றனர். கூட்டமைப்புக்குள் முடிவற்று நீண்டுகொண்டிருந்த இழுபறிகள், உள்முரண்பாடுகள், ஜனநாயக விரோதப் போக்கு போன்றவற்றுக்கு மாற்றாக, இதொரு நல்ல தீர்மானம் எனப் பலரும் கருதினர். கூட்டமைப்பின் மந்தமான, குழப்பகரமான அரசியல் நிலைப்பாட்டுக்கும் இதொரு நல்ல முடிவாக அமையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு (இனப்பிரச்சினை, சமூக, பொருளாதாரப் பிரச்சினை உட்பட அனைத்துக்கும்) தீர்வை எட்டுவதற்கு ஒரு சரியான கட்டமைப்பும் மாற்று அரசியலும் வேண்டும் எனவும். “கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஒரு பொதுச் சின்னம் உருவாக்கப்பட வேண்டும். நிரந்தரத் தலைமைக்குப் பதிலாக அதில் அங்கத்துவம் பெற்றுள்ள கட்சிகளுக்குச் சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். தனித்த முடிவுகள் எடுக்கப்படாமல், முடிவுகள் திணிக்கப்படாமல், கூட்டாகவே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். மக்களுக்கான அரசியலானது செயற்பாட்டரசியலாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பல நியாயமான கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியல்லாத ஏனைய தரப்புகளால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டது. அத்துடன் “அரச ஆதரவு நிலைப்பாடு என்றால் அது எந்த அடிப்படையிலானது? அதனுடைய முன்னேற்றமென்ன? அரச எதிர்ப்பு என்றால் அதன் தாற்பரியமென்ன? அது தருகின்ற அரசியல் வெற்றிகள் என்ன? இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ன? அது எந்த அடிப்படையில் அமைய வேண்டும்? அதனை அடைவதற்கான வழிமுறைகள் என்ன?” என்ற கேள்விகளையும் இவை எழுப்பியிருந்தன. இதையெல்லாம் தமிழரசுக் கட்சி பொருட்படுத்திக் கொள்ளவேயில்லை. அதனுடைய மூத்த தலைவர்களான இரா. சம்மந்தன், மாவை சேனாதிராஜா தொடக்கம் சுமந்திரன், சிறிதரன் போன்ற இரண்டாம், மூன்றாம் நிலையாளர்கள் வரையில் அனைவரும் பொதுக் கூட்டமைப்பு ஒன்றுக்கான அடிப்படைகளைப் புரிந்து கொள்ள மறுத்தனர். இவர்கள் எவரும் கூட்டமைப்புக்கான அரசியற் பண்புடனும் அதற்குரிய மனப்பாங்குடனும் செயற்படவில்லை. பதிலாக தமிழரசுக் கட்சியை மையப்படுத்தியும் முதன்மைப்படுத்தியுமே வந்தனர். தமிழரசுக் கட்சியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற வகையிற் செயற்பட்டும் வந்தனர். இதனால் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டு வந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உடைந்து நொறுங்கியது. 2010 இல் ஒரே அணியாக இருந்த கூட்டமைப்பு, உடைந்து இப்பொழுது ஏழு துண்டாக நிற்கிறது. கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், ஐங்கரநேசன், அனந்தி, சிவாஜிலிங்கம் – ஸ்ரீகாந்தா என ஒவ்வொரு தரப்பாக வெளியேறி, இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவையும் தனித்து நிற்கும் சூழல் உருவாகியிருக்கிறது. மட்டுமல்ல, கூட்டமைப்பில் உச்சச் செல்வாக்கைச் செலுத்தி வந்த தமிழரசுக்கட்சி அரசியல் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. சம்மந்தன், சுமந்திரன் போன்றோர் அரசுடன் மென்னிலை எதிர்ப்பையும் உள்வளையும் ஆதரவையும் கொண்டிருப்போர். ஐக்கிய இலங்கைக்குள் ஏனைய சமூகத்தினருடன் இணைந்து ஒரு தீர்வைக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட முயற்சிப்பவர்கள். மறுதலையாக மாவை சேனாதிராஜா, சிறிதரன், அரியநேந்திரன், ஸ்ரீநேசன் போன்றோர் தீவிர அரச எதிர்ப்பு, விடுதலைப் புலிகள் ஆதரவு என்ற நிலைப்பாட்டையுடையவர்கள். கற்பனாவாதத் தன்மையுடையவர்கள். தமிழரசுக் கட்சியின் இந்த இரட்டைநிலை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலும் பிரதிபலித்தது. இப்போதும் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட சிறிதரன் அணியும் மென்போக்கைக் கொண்ட சுமந்திரன் அணியும் தலைமைத்துவப் போட்டியில் சிக்கித் திணறிக் கொண்டிருப்பதை நாம் கவனிக்கலாம். இதனால் உரிய – பொருத்தமான முடிவுகளை எடுப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முடியாதிருந்தது. இதற்கு நல்ல உதாரணம், ‘நல்லாட்சிக் காலம்’ என வர்ணிக்கப்பட்ட 2015 – 2020 வரையான மைத்திரி – ரணில் ஆட்சியின்போது சுமந்திரனும் சம்மந்தனும் வெளிப்படையாகவே அரச ஆதரவு நிலைப்பாட்டிலிருந்தனர். ஏனையோர் அதை ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த ஒற்றையாட்சிக் கோட்பாடு பற்றிச் சுமந்திரன் தமிழ்மக்களுக்கு வியாக்கியானம் செய்து வந்தார். இதனை கூட்டமைப்பிலிருந்த சுரேஸ், செல்வம், சிறிதரன் போன்றோர் விமர்சித்து வந்தனர். இவ்வாறான நெருக்கடிகள் நிறைந்த பின்னணியில்தான் DTNA இன் உருவாக்கம் 2023 இல் நிகழ்ந்தது. அது தடுமாற்றங்களிலிருந்து விடுபட்டு, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் புதியதொரு வழிமுறையைக் காண்பதாக இருக்கும் என நம்பப்பட்டது. இதற்குக் காரணம், DTNA இல் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகியன ஆயுதப்போராட்ட அரசியலிலும் ஜனநாயக வழிமுறை அரசியலிலும் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டவை. அவற்றின் தலைவர்களுக்கு இவை இரண்டிலும் தொடர்ச்சியான அரசியல் அனுபவமுண்டு. ஆகவே இரண்டு அனுபவங்களின் வழியாகவும் புதிய அரசியலை – குறிப்பாகச் செயற்பாட்டு அரசியலை – DTNA யினால் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக தமிழ்ப்பரப்பில் செயற்பாட்டு அரசியலை தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கவலையும் மக்களிடம் இருந்தது. போராட்ட அரசியலுக்கு முன்னரும் பின்னரும் செயற்பாட்டு அரசியல் இல்லை. இரண்டு காலகட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழரசுக் கட்சியிடத்திலும் தமிழ்க் காங்கிரஸிடமும் செயற்பாட்டு அரசியற் பாரம்பரியமோ அனுபவமோ இல்லை. ஆனால், விடுதலைப் போராட்ட இயக்க அனுபவங்களுக்கூடாகப் பயணித்த ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் போன்றவற்றுக்கு செயற்பாட்டு அரசியற் பாரம்பரியம் இருந்தது. ஆகவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கும். அது கற்பனாவாத (மிதவாத) அரசியலில் இருந்து விடுபட்டு, நடைமுறை அரசியலை, மக்களுக்கான அரசியலை நோக்கிப் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA) இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது? அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு) மாற்றாக – புதியதாக அது உள்ளதா? அதற்கான அடிப்படிகளை DTNA உருவாக்கியுள்ளதா? என்றால் இல்லை என்பதே கசப்பான பதிலாகும். TNA யிலிருந்து வெளியேற்றத்துக்குப் பின்னர், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு DTNA இன்னும் தன்னைத் தனித்த அடையாளமாகக் காட்டவில்லை. அதாவது, கொள்கை ரீதியாகவும் கட்டமைப்பு, செயற்பாட்டுமுறை, அணுகுமுறை போன்றவற்றிலும் தமிழரசுக் கட்சியை (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை) விட வேறுபட்டதாக உணர முடியவில்லை. இந்தப் பின்தங்கிய நிலை தொடருவதற்கான காரணம் என்ன? தமிழரசுக் கட்சியை (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை) விட்டு வெளியேறிய பின் DTNA இன் புதிய செயற்பாட்டுப் பரப்பு, புதிய செல்வாக்குப் பரப்பின் விரிவாக்கம் எதுவாக உள்ளது? DTNA இன் புதிய பெறுமானங்கள், அது பெற்றுக் கொண்ட – உருவாக்கிய நல்லடையாளங்கள் என்ன? இந்தக் கேள்விகளை DTNA விடம் ஏன் எழுப்ப வேண்டியிருக்கிறது என்றால் – 1. ஏறக்குறைய 20 ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த ஒரு (TNA) கட்டமைப்பிலிருந்து வெளியேறி, புதிய அணியாக DTNA செயற்படுவதாக இருந்தால் நிச்சயமாக முன்னதற்கும் பின்னதற்குமான வேறுபாட்டை அது காண்பிக்க வேண்டும். அரசியல் ரீதியாகவும் அதை முன்னெடுத்துச் செல்லும் அணுகுமுறைகள் எப்படியானவை எனவும் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் இரண்டுக்குமிடையிலான அரசியல் வேறுபாட்டை மக்களுக்கு உணர்த்துவதோடு, பிரிந்து சென்று புதிதாக இயங்குவதற்கான நியாயத்தையும் சொல்வதாக இருக்கும். ஆனால், அப்படி எதையும் இதுவரையில் உணரமுடியவில்லை. 2. குறிப்பிட்ட அளவுக்கு அவ்வப்போது தமிழரசுக் கட்சியை விமர்சிக்கிறது DTNA. அதேவேளை அது மீண்டும் தமிழரசுக் கட்சியோடு (தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு) இடைநிலைச் சமரசத்துக்கும் முயற்சிக்கிறது. இந்தத் தத்தளிப்பு நிலை அல்லது தடுமாற்றம் ஏன்? ஏனென்றால், DTNA உம், தமிழரசுக் கட்சியைப் போலச் செயற்பாட்டு அரசியலை விட்டு, பிரமுகர் அரசியலிலும் முற்று முழுதான கற்பனாவாத அரசியலிலும் மூழ்கிப்போயுள்ளது. அதனால்தான் அதனால், கொள்கை, கட்டமைப்பு, செயற்பாட்டுமுறை, அணுகுமுறை போன்றவற்றால் தனித்துவப்படுத்திக் காண்பிக்க முடியவில்லை. 3. இதனை மறைத்துக் கொள்வதற்காக அது தீவிர அரசியலைப் பேச முற்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுவேட்பாளர் என்ற கதையாடலே தமிழ்த்தேசிய அரசியலின் அடுத்த கட்டம் என்ன என்று தெரியாத தடுமாற்றத்தின் விளைவுதான். அதொன்றும் புதிய கண்டுபிடிப்பும் அல்ல, தமிழ் மக்களுடைய அல்லது தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் மீட்சிக்கான வழிமுறையும் அல்ல. மட்டுமல்ல, தீவிர அரசியலை முன்னெடுப்பதன் மூலமாக தமிழ் மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டே, அதனுடைய தலைவர்கள் அதிதீவிர அரசியலை முன்னெடுக்கின்றனர். இந்த அதிதீவிர அரசியல் தமக்குரிய அதிகாரத்தையும் எதிர்காலத்தையும் தமிழ்ச்சமூகத்திடமிருந்து பெற்றுத் தரும் என்றும் நம்புகிறார்கள். ஆனால், அதைப் பேசுவதற்கும் அந்த வழியில் செயற்படுவதற்கும் கஜேந்திரகுமாரின் அணியும் சிறிதரன், அரியநேத்திரன் போன்றோரின் அணியும் இருக்கிறதே. பிறகேன் இவர்கள் (DTNA)? தேவையேற்பட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படத் தயார் என DTNA இன் தரப்பிலிருந்து சித்தார்த்தன், செல்வம் போன்றோர் சொல்லியிருக்கின்றனர். அதாவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு ஒற்றுமையாக – ஐக்கியப்பட்டுச் செயற்பட வேண்டிய அவசியமுள்ளது. அதற்காகவே இப்படிச் சிந்திக்கிறோம் என்கிறார்கள். அப்படியென்றால், பிரிந்து செல்வதற்கு காரணமாக இருந்த நிலவரங்களை தமிழரசுக் கட்சி சீராக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது எதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மீளிணைவைப் பற்றி DTNA சிந்திக்கலாம்? அப்படியாயின் தனித்து இயங்குவதில் DTNA க்கு உள்ள தயக்கம் – அச்சம்தான் காரணமாக இருக்க வேணும். நிச்சயமாக. இன்னும் மக்கள் DTNA ஐ பிறிதொரு சக்தியாக அடையாளம் காணவில்லை. ஒரு தேர்தல் வருவதற்கு முன்பு, மக்களிடம் கணிப்பீடு வரமுன்னர் எப்படி இப்படிச் சொல்லமுடியும்? என்று DTNA தரப்பில் கேள்வி எழுப்பப்படலாம். தமது கூட்டணிக்குப் பெயர் சூட்டப்பட்ட விதத்திலிருந்து, முன்னெடுக்கப்படும் அரசியல், அவ்வப்போது கூட்டமைப்பு – தமிழரசுக் கட்சியினருடனான பொது நிகழ்வுப் பங்கேற்புகள் வரையில் DTNA தனித்துத் தன்னை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக தான், இன்னும் கூட்டமைப்பின் நிழலாக இருக்கிறேன் என்றே காட்ட முற்படுகிறது. தனித்து DTNA என நின்றால், பின்னடைவைத் தந்து விடுமோ என்ற அச்சம் அதற்குண்டு. இந்த அச்சத்துக்குக் காரணம், DTNAதான். ஏனென்றால், தமிழ் அரசியல் அரங்கில் விடுதலைப்புலிகள் இல்லாது போன 2009 க்குப் பிறகான 15 ஆண்டுகளிலும் DTNA இன் கட்சிகளால் (இயக்கத்தினரால்) ஒரு புதிய அரசியலை, தங்களுடைய தனித்துவ அடையாளத்துடன் முன்னெடுக்க முடியவில்லை. அப்படிச் செய்வதற்கு முன்பு புலிகள் தடையாக இருந்தனர். அனுமதிக்கவில்லை என்று சொல்லலாம். 2009 க்குப் பிறகு அப்படிச் சொல்ல முடியாது. மட்டுமல்ல, தமிழரசுக் கட்சியைக் கூட DTNA உள்ளிட்ட பிற சக்திகள் எதனாலும் கட்டுப்படுத்த முடியவில்லையே. அதை மேவிச் செல்லவும் முடியவில்லையே. 4. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது வெறும்கோது மட்டுமே. அதிலிருந்து அனைத்துத் தரப்பினரும் வெளியேறி விட்டனர். தமிழரசுக் கட்சி மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற லேபிளில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் பிளவுண்டு சிதையக் கூடிய நிலையில். உள்முரண்பாடுகள் முற்றி நீதிமன்றம் வரையில் சென்றுள்ளது. இந்த வாய்ப்பான சூழலில் DTNA தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியும். தனக்கு வெளியே உள்ள சக்திகளையும் இணைத்துக் கொள்ளலாம். தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் சமரசம் செய்வதற்கு முயற்சிப்பதை விட அதற்கு வெளியே உள்ள சக்திகளை இணைத்துத் தன்னை விரிவாக்கம் செய்வதே பயனுடையது. ஆனால், அது அப்படிச் செய்யவில்லை. அதில் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரியவில்லை. இது ஏன்? 5. தமிழரசுக் கட்சியை DTNA இன்னும் விமர்சிப்பதற்குக் காரணம், அதில் முன்னணிப்பாத்திரம் வகிக்கின்ற – எதிர்காலத்தில் முன்னணியில் திகழப்போகின்ற – சுமந்திரன், சிறிதரன் போன்றோருடன் DTNA வினரால் உடன்பட்டுப் பயணிப்பதில் உள்ள நெருக்கடியே! இந்த விமர்சனத்தைக் கூட சுரேஸ் பிரேமச்சந்திரனும் ரெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி போன்றோரும்தான் செய்கின்றனர். அபூர்வமான சந்தர்ப்பங்களில் செல்வம் அடைக்கலநாதன் ஏதாவது சொல்வார். சித்தார்த்தன் எதுவுமே பேசுவதில்லை. ஆனால் DTNA என்ற வகையில் தமிழரசுக் கட்சி மீதான விமர்சனங்களுக்கு அனைவரும் உடன்பாடு கொண்டேயுள்ளனர். அந்தளவுக்குக் கசப்பான அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. முக்கியமாகச் சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோரை விடச் சிறிதரனும் சுமந்திரனும் அரசியல் வரலாற்றில் ஜூனியர்கள். ஜூனியர்களாக இருந்தாலும் ஏனையவர்களை விட இருவரும் செல்வாக்கோடும் அரசியல் அதிகாரத்தோடும் தற்போதுள்ளனர். கூட்டமைப்பில் எல்லோரும் இணைந்திருந்த காலத்திற் கூட சுமந்திரனும் சிறிதரனும் ஏனையவர்களை மிஞ்சும் வகையிலேயே, அவமதிக்கும் வகையிலேயே நடந்து கொண்டனர். சிறிதரன் பல சந்தர்ப்பங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார், சாடியிருக்கிறார். கிளிநொச்சியில் ஏனைய கட்சிகளின் செயற்பாட்டை அவர் முற்றாகவே மட்டுப்படுத்தும் விதமாக நடந்து கொண்டுமிருந்தார். அத்துடன், தன்னை விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகவும் தொடர்ச்சியாகவும் காட்ட முற்படும் சிறிதரனுக்கு ஏனையவர்களை, விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள், அரசாங்கத்தின் கைப்பொம்மைகளாக இருந்தவர்கள் என்ற கடந்த கால வரலாற்றைத் தோண்டியெடுத்து முன்னிறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. சுமந்திரனுக்கு இது வேறு வகையில் இருந்தது. அவர் சம்மந்தனின் தொடர்ச்சியாக ஐக்கிய இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தினருடனும் இணைந்து பெறக் கூடிய தீர்வொன்றைப் பற்றியே சிந்தித்தும் பேசியும் வந்தார். இது தமது கடந்த கால வரலாற்றின் நிழலை மறைத்து புதிய (அரச எதிர்ப்பு – தமிழ்த்தேசிய) அரசியலைத் தீவிர நிலையில் முன்னெடுக்கும் சுரேஸ், செல்வம் போன்றோருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. மட்டுமல்ல, கூட்டமைப்பில் இணைந்திருக்கும் நான்கு கட்சிகளுக்கும் சமநிலையான அடையாளத்தையும் உரிமையையும் வழங்குவதற்குச் சுமந்திரன் ஏற்புடையவராகவும் இருக்கவில்லை. அத்துடன் ஏனையவர்கள் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு – அனுசரித்து – நடக்க வேண்டும் என்று சிறிதரன், சுமந்திரன் உள்ளிட்ட சம்மந்தன், மாவை சேனாதிராஜா வரையில் அனைவரும் நடந்து கொண்டனர். அதாவது தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு, அதை அனுசரித்து ஏனையவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றவிதமாகச் செயற்பட்டமை. இதையெல்லாம் முறியடிக்கக் கூடிய ஒரு செயற்திட்டத்தைக் கூட DTNA உருவாக்கவில்லை. பதிலாக அது கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சிறிதரன் போன்றோரின் அதிதீவிர அரசியலின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படிப் பின்னோடி எந்தப் புதிய சாதனைகளையும் DTNA வினால் நிகழ்த்த முடியாது. தன்னை இழப்பதில்தான் அது போய் முடியும். குறைந்த பட்சம் தம்முடைய முன்னோடித் தலைவர்கள் பத்மநாபா, உமா மகேஸ்வரன், சிறிசபாரத்தினம் போன்றோரின் அரசியற் தொடர்ச்சியையாவது பேண முற்படலாம். அதாவது விஞ்ஞானபூர்வமான, சமகாலத்தன்மையுடைய அரசியலொன்றைப் பகுத்தாய்ந்து முன்னெடுக்கும் விதமாக. காலம் எதிர்பார்த்து நிற்பது அதையே. அதையே DTNA செய்ய வேண்டும். அல்லது, அதுவும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்தான் தள்ளப்படும். 00 https://arangamnews.com/?p=10689
  21. பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் – நிலாந்தன் May 2, 2024 ஜனாதிபதித் தோ்தலுக்கான பரபரப்பில் கொழும்பு அரசியல் உள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விவகாரம் தமிழா் தரப்பின் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்த நிலையில் இது தொடா்பாக அரசியல் ஆய்வாளா் நிலாந்தன் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொது வேட்பாளா் என்ற எண்ணக் கரு இம்முறை அதிகளவுக்கு முக்கியத்துவம் பெறுவதற்கு என்ன காரணம்? பதில் – பொது வேட்பாளா் என்ற எண்ணக் கரு இரு நிலைகளில் தமிழா் தரப்பில் முன்னிலைக்கு வந்தது. ஒன்று – கடந்த காலங்களில் குமாா் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் தமிழ் வேட்பாளா்களாக ஜனாதிபதித் தோ்தல்களில் போட்டியிட்டிருந்தாா்கள். அவா்கள் பொது வேட்பாளா்கள் அல்ல. தமிழ் வேட்பாளா்கள். பொது வேட்பாளா் என்பவா் தமிழ்ப் பொதுக் கருத்தைப் பிரதிபலிப்பவராகவும், தமிழ் மக்களின் கூட்டு உளவியலைப் பிரதிபலிக்கும் ஒருவராகவும்தான் கருதப்படுகின்றாா். அந்த வகையில் பாா்க்கும் போது “தமிழ்ப் பொதுவேட்பாளா்” என்பவா் தமிழ்த் தேசிய ஐக்கியத்தை குறியீடாகக் காட்டும் ஒருவராக இருக்க வேண்டும். அவா் தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஒன்றிணைப்பாா். தமிழ் பொது வேட்பாளா் என்ற கருத்துருவம் தமிழ் ஐக்கியம்தான். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தோ்தலின் போது மு.திருநாக்கரசு இந்தக் கருத்தை முன்வைத்தவா். அப்போது அவா் அதில் ஒரு பேரம்பேசலுக்கான வாய்ப்பு குறித்தும் பேசியிருந்தாா். 2015 ஆம் ஆண்டுத் தோ்தலிலும் அவா் அதனை எழுதியிருந்தாா். 2019 இல் தமிழ் மக்கள் பேரவை சாா்பில் அமைக்கப்பட்ட சுயாதீனக்குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என முடிவெடுத்தது. ஆனால், அந்த முயற்சியில் எல்லாத் தலைவா்களையும் நாம் சந்தித்தோம். பொதுவேட்பாளருக்கான சில பெயா்களும் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், பிரதான ஒரு கட்சியாக இருந்த தமிழரசுக் கட்சி அதில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மறைமுகமாக அதற்கு எதிராகக் காணப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்போதும் பகிஷ்கரிப்பு என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தது. கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளிடமும் ஒரு துலக்கமான முடிவு இருக்கவில்லை. விக்னேஸ்வரன் ஆதரித்தாா். இந்தப் பின்னணியில் ஒரு கட்டத்துக்கு அதனை செயலுருப்படுத்தக்கூடிய ஒரு சக்தி தமிழ் மக்கள் பேரவைக்கு இருக்கவில்லை. அதனால், அந்த விடயம் அப்படியே விடுபட்டுவிட்டது. பின்னா் இந்த முறை இது தொடா்பில் பேசத் தொடங்கியவா் சுரேஷ் பிரேமச்சந்திரன்தான். அவருக்குப் பின்னா் இப்போது வெவ்வேறு தரப்புக்கள் முன்னெடுக்கின்றன. மக்கள் மனு என்ற சிவில் அமைப்பு இதனை முன்னெடுக்கின்றது. இது குறித்து இரண்டு கருந்தரங்குகளை வடக்கிலும் கிழக்கிலும் நடத்தியிருக்கின்றது. இப்போது சிவில் அமைப்புக்கள் இவ்வாறு ஒரு தமிழ் பொதுவேட்பாளரை தோ்தல் களத்தில் இறக்குவதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவது தொடா்பாக ஆராய்ந்துவருகின்றன. கேள்வி – தமிழ்க் கட்சிகள் பலவும் பொது வேட்பாளா் என்ற விடயத்தில் இணங்கிச் செயற்பட்டுவருகின்றாா்கள். ஆனால், இந்தக் கட்சிகள் அனைத்தும் இந்த இலக்கில் பற்றுறுதியுடன் இறுதிவரையில் செயற்படுவாா்கள் என நினைக்கின்றீா்களா? பதில் – ஒரு அரசியல் இலக்கை நோக்கி எல்லோரும் ஒரேவிதமான பற்றுறுதியுடனும், விசுவாசத்துடனும் இயங்குவாா்கள் என எதிா்பாா்க்கத் தேவையில்லை. சிலா் முழு விசுவாசமாக இருப்பாா்கள். சிலா் அரை விசுவாசமாக இருப்பாா்கள். சிலா் அதனை ஒரு டீலாகக்கூட முன்னெடுக்க முடியும். அரசியலில் இவ்வாறு பல்வகையான போக்குகள் இருக்கும். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சுரேஷ் பிரேமச்சந்திரனைப் பொறுத்தவரையில் இதனை ஒரு பேர வாய்ப்பாகப் பயன்படுத்தலாம் என்ற கருத்து இருந்தது. மக்கள் மனு அவ்வாறான பேர வாய்ப்பு குறித்து உரையாடவில்லை. அதனை அவா்கள் தமிழா் ஐக்கியத்தைப் பிரதிபலிக்கும் என்ற வகையில் கோட்பாட்டு ரீதியாகத்தான் உரையாடிவருகின்றாா்கள். சிவில் சமூகங்கள் இதனை இப்போது அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றன. அவா்கள் இதில் தெளிவாக இருக்கின்றாா்கள். தமிழ்ப் பொது வேட்பாளா் எனப்படுபவா் முதலாவது தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக இருப்பாா். தமிழ் மக்களை பல்வேறு வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு தேசமாக ஒன்றிணைப்பாா். தமிழ்க் கூட்டு உளவியலை அவா் பிரதிபலிப்பாா். இதுவரை காலமும் தமிழ் மக்களுடைய வாக்குகள் வெற்றுக் காசோலைகள் போல யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்குத்தான் போயிருக்கின்றது. அதிலும் குறிப்பாக கடந்த 3 ஜனாதிபதித் தோ்தல்களிலும் தமிழ் மக்கள் ஒரு விடயத்தில் ஒன்றாக நின்றிருக்கின்றாா்கள். அதாவது ராஜபக்ஷக்களுக்கு எதிராக வாக்களிப்பது என்ற விடயத்தில் அவா்கள் ஒன்றாக நின்றுள்ளாா்கள். ராஜபக்ஷக்களுக்கு எதிராக என்று சொல்லிக்கொண்டு தமிழ் வாக்குகள் யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு வெற்றுக்காசோலைகளாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த வெற்றுக்காசோலையை அா்த்தமுள்ளதாக மாற்றலாம். எவ்வாறென்றால் – தமிழ்க் கூட்டுணா்வைப் பிரதிபலிக்கும் வாக்காக நாம் அதனை மாற்றலாம். அதாவது, தமிழ் மக்களின் கோரிக்கை என்ன என்பதற்கான ஒரு பொதுஜன வாக்கெடுப்பாக இதனை மாற்றலாம். பேர வாய்ப்பு என்பது அடுத்த கட்டம். தற்போது ஜனாதிபதித் தோ்தலில் மூவா் போட்டியிடுவாா்கள் என்பது உறுதியாகியிருக்கின்றது. ரணில், சஜித், அநுரகுமார ஆகியோருக்கு இடையிலான போட்டியில் எவரும் 50 வீதமான வாக்குகளைப் பெற முடியாத நிலை ஏற்படலாம். ஏனெனில் சிங்கள வாக்குகள் சிதறலாம். அந்த இடத்தில் தமிழ் வாக்குகள் ஒரு நிா்யகரமான பாத்திரத்தை வகிக்க முடியும். இதனை ஒரு பேரவாய்ப்பாகப் பயன்படுத்த முற்படுபவா்கள் சுட்டிக்காட்டுகின்றாா்கள். ஆனால், தமிழ் மக்கள் இதனை தமக்கான ஒரு பொதுஜன வாக்கெடுப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன். அந்த வகையில் தமிழ்ப் பொது வேட்பாளா் தமிழ்க் கூட்டுணா்வைப் பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். அவா் ஒரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்க முடியாது. அதாவது, கட்சியைக் கடந்து, தனிநபா் என்பதைக் கடந்து ஒரு கொள்கையைப் பிரதிபலிப்பவராக அவா் இருக்க வேண்டும். சில கட்சிகள் இப்போதும் கேட்கின்றன, ஏன் அவசரப்படவேண்டும் என்று. அவ்வாறு கேட்பவா்கள் யாா் என்றால், பொது வேட்பாளா் குறித்து சந்தேகம் உள்ளவா்கள்தான். பொது வேட்பாளா் குறித்து முடிவெடுப்பதாக இருந்தால் இப்போதே முடிவெடுக்க வேண்டும். தமிழ் மக்களை ஒருங்கிணைப்பதற்கு இது ஒரு அருமையான சந்தா்ப்பம். இதனை பிறகு பாா்க்கலாம் எனச் சொல்பவா்கள் யாா் என்று பாா்த்தால், அவா்கள் டீலுக்குப் போவதற்கான வாய்ப்பை எதிா்பாா்த்துள்ளவா்கள். எந்தவொரு பிரதான சிங்கள வேட்பாளரும் தமிழ் வேட்பாளா்களுடன் டீலுக்கு வரத் தயங்குவாா்கள். அவ்வாறு வந்தால்கூட, அது ஒரு பகிரங்கமான டீலாக இருக்காது. அது அவருக்கான சிங்கள வாக்குகளைப் பாதிக்கும். அதனால், அவா்கள் தனிப்பட்ட முறையிலான பேரங்களுக்கு முன்வரலாம். https://www.ilakku.org/பொறுத்திருக்கக்-கேட்பவா/
  22. தமிழரசுக் கட்சியையும் அதன் தலைமையும் மக்கள் மன்றத்தில் கையளிக்கிறேன் – சிறீதரன் உணா்வுச்சிக உரை May 2, 2024 “இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அதன் எதிர்காலத் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றத்தின் முன் கையளித்து, தமிழ்த் தேசிய மே நாளன்று புரட்சிகர அரசியல் பயணமாக எனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றேன்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 38 தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப் போடும், ஆயிரக்கணக்கான பொது மக்களின் பங்கேற்போடும் கிளிநொச்சியில் நேற்று பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து, அந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மே நாள் உரையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது:- “கட்சியின் இயக்கத்தை முடக்கி, உட்கட்சி ஜனநாயகத்தைச் சவாலுக்கு உட்படுத்தி, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால் அது தொடர்பில் கருத்துரைக்க முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தலைமைப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டதால் என்னை இன்று நீதிமன்றில் நிறுத்தியிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் கடந்தும் கட்சியைத் தளம்பலற்றுக் கொண்டுசெல்வதற்காக நான் மேற்கொண்ட விட்டுக்கொடுப்புகள், எதிர்கொண்ட சமரசப் பேச்சுகள், அது சார்ந்து நான் முன்னெடுத்த முயற்சிகள் என எல்லாவற்றையும் மக்களுக்கு ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த விரும்புகின்றேன். அதே நிலைப்பாட்டின் அடிப்படையில், இந்த மாபெரும் மக்கள் மன்றத்தின் முன்னிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எதிர்காலத்தையும் கட்சித் தலைமையின் எதிர்காலத்தையும் முன்னிறுத்தி எனது புரட்சிகர அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றேன்” என்றார். https://www.ilakku.org/தமிழரசுக்-கட்சியையும்-அத/
  23. புங்குடுதீவில் ஆரம்பமான மனித எலும்புக்கூடு அகழ்வு பணி! இனியபாரதி. யாழ்ப்பாணம் - புங்குடுதீவு அரசினர் மருத்துவமனையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட இடங்களில் இன்று வியாழக்கிழமை(02) அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி நீதிவான் நளினி சுபாகரன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் அரசினர் மருத்துவமனையை அண்மித்த தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர். அதனடிப்படையில் இன்று நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/புங்குடுதீவில்_ஆரம்பமான_மனித_எலும்புக்கூடு_அகழ்வு_பணி!
  24. சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச அறிவிப்பு! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன இதன் போது கூறியுள்ளார். மேலும் விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியின் பெரும்பாலானோரின் விருப்பத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “விஜயதாச ராஜபக்சவுக்கு பெரும்பாலான கட்சிகளின் ஆதரவு இருக்கின்றது. நாங்கள் அவருக்கு முழு ஆதரவையும் அளிப்போம். அவர் இப்போது எம்மவர். அவருக்கு அமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை” என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/சுதந்திரக்-கட்சியின்-ஜனா/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.